Wednesday, August 2, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - அருங்கேடன் என்பது அறிக

 திருக்குறள் - தீவினையச்சம் -  அருங்கேடன் என்பது அறிக


ஒருவனுக்கு துன்பம் வருமா இல்லையா என்று துல்ல்லியமாக கூற முடியும். யாருக்குத் துன்பம் வரும், யாருக்கு துன்பம் வராது என்று கணிக்க முடியும். உங்களுக்கு எதிர்காலத்தில் துன்பம் வருமா என்று அறிய வேண்டுமா? மேலும், அந்தத் துன்பங்கள் வராமல் தடுக்க வேண்டுமா?


வள்ளுவர் வழி சொல்கிறார். 


"தீய வழிகளில் சென்று மற்றவர்களுக்கு ஒருவன் துன்பம் செய்யாமல் இருப்பான் என்றால் அவனுக்கு ஒருபோதும் துன்பம் வராது"


பாடல் 


அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_2.html


(please click the above link to continue reading)



அருங்கேடன் = அருமை + கேட்டினை உடையவன் 


என்பது = என்று 


அறிக = அறிந்து கொள்க 


 மருங்கோடித் = தவறான வழியில் சென்று 


தீவினை = தீய வினைகளை 


செய்யான் = செய்யாதவன் 


எனின் = என்றால் 


அருங்கேடன்  என்றால் என்ன?  ஒரு பொருள் அருமையானது என்றாது கிடைப்பதற்கு அரிதானது என்று பொருள். ஒருவன் அருங்கேடன் என்றால் அவனுக்கு கெடுதல் அரிதாக வரும். அதாவது வராது என்று பொருள். 


எப்போது வராது என்றால் 


மருங்கோடி தீயன செய்யான் எனில். 


மருங்கு என்றால் பக்கம். ஒரு பக்கமாகச் சென்று. அதாவது, அற வழி என்ற நேர் வழியை விட்டு, வேறு பக்கம் சென்று, மற்றவர்களுக்கு தீமை செய்யாமல் இருப்பான் என்றால், அவனுக்கு ஒருக் காலும் தீமை வராது என்கிறார். 


இந்த மருங்கு என்ற சொல் பல இடங்களில் பல விட அர்த்தங்களில் சொல்லப் பட்டு இருக்கிறது. 


பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார் மாநிலத்து இல்


என்ற திருக்குறளில் மருங்கு என்பது சுற்றத்தார் என்ற பொருளில் வந்துள்ளது. 


செல்வர்யாம் என்று செல்வுழி எண்ணாத

புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்

கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி

மருங்கறக் கெட்டு விடும்


என்ற நாலடியாரில், மருங்கு என்ற சொல் அடையாளம் என்ற பொருளில் வந்துள்ளது. மின்னல் போல் செல்வம் அடையாளம் இல்லாமல் சென்று விடும் என்ற அர்த்தத்தில். 


சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யப்படும்.

பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த

கன்னங்கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில் வைத்துத்

தன்னந்தனியிருப்பாக்கு இதுபோலும் தவம் இல்லையே


என்ற அபிராமி அந்தாதியில் மருங்கு என்பது வயிறு, அல்லது இடை என்ற பொருளில் வந்துள்ளது. 


அது ஒரு சுவாரசியமான வார்த்தை. 


எப்படி ஒரு சொல் சம்பந்தமே இல்லாத வெவேறு பொருள் கொள்கிறது?


சிந்தித்துப் பார்த்தால் அடிநாதமாக உள்ள பொருள் விளங்கும்.


மருங்கு என்றால் பக்கம் என்று பார்த்தோம். 


உடம்பின் இரண்டு பக்கமும் இருப்பது இடுப்பு. எனவே மருங்கு, இடுப்பு என்ற பொருள் கொண்டது. 


அக்கம் பக்கம் இருப்பவர் சுற்றத்தார். எப்போதும் நமக்கு பக்கத்தில் இருப்பவர்கள் சுற்றத்தார். நம்மை விட்டுப் போய் விட மாட்டார்கள். எனவே, மருங்குடையார் என்று அவர்கள் அழைக்கபடுகிரார்கள். 


செல்வம் எப்போதும் நம் பக்கம் இருக்காது. இன்று நம் பக்கம் இருக்கும், நாளை வேறொருவர் பக்கம் போய் விடும். எப்ப எந்தப் பக்கம் இருக்கும் என்று தெரியாததால் அதை மருங்கற கெட்டு விடும் என்கிறது நாலடியார். 





2 comments:

  1. இத்தனை அர்த்தங்களா👏

    ReplyDelete
  2. 😘🙏👌😁👍😁❤⚘

    ReplyDelete