Wednesday, August 23, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - பெறல் அரிதே

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - பெறல் அரிதே 


கொல்லாமை, பொய் சொல்லாமை என்று பல அறங்கள் இருக்கின்றன. இதில் எது சிறந்தது? இந்த ஒப்புரவு என்பது கொஞ்சம் கடினமான விடயம் போல இருக்கிறதே. கஷ்டப்பட்டு சம்பாதித்ததை எல்லாம் மற்றவர்களுக்கு கொடு என்றால் எளிதான காரியமாகத் தெரியவில்லை. 


பெற்ற பிள்ளைகளுக்கு, உடன் பிறந்தவர்களுக்கு கொடுப்பதே கடினமாக இருக்கிறது. இதில் எங்கிருந்து சமுதாயத்துக்கு கொடுப்பது? 


நன்றாக உடற் பயிற்சி செய்பவர்களை கேளுங்கள். ஒரு நாள் உடற் பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் அவர்களுக்கு ஏதோ ஒரு குறை போல இருக்கும். உடற் பயிற்சி என்பது கடினம்தான். இருந்தும், அதை செய்யாவிட்டால் ஏதோ இழந்த மாதிரி இருக்கும் அவர்களுக்கு. 


நன்றாக உணவு கட்டுப்பாடு உள்ளவர்களை பாருங்கள். ஒரு நாள் ஏதோ ஒரு இனிப்பு அல்லது ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டால், மிகப் பெரிய தவறு போல சொல்லிக் கொண்டு இருப்பார்கள். 


அவர்களைப் பொறுத்தவரை அந்த பயிற்சியும், உணவு கட்டுப்பாடும் அவ்வளவு நல்லது. அது இல்லாமல் இருக்க முடியாது. 


காரணம், அவர்கள் அதன் நன்மையை உணர்ந்து இருக்கிறார்கள். மேலும், அதை செய்து செய்து பழகி இருக்கிறார்கள். முதலில் அவர்களும் சங்கடப்பட்டுத்தான் இருப்பார்கள். 


பழகிய பின் அதன் சுகம் தெரிய ஆரம்பித்து விடுகிறது. 


அது போல, ஒப்புரவும், முதலில் சங்கடமாக இருக்கும். பழகினால் அதன் சுகம் தெரிய ஆரம்பிக்கும். 


வள்ளுவர் சொல்கிறார், "ஒப்புரவுக்கு இணையான ஒன்றை தேவர் உலகிலும், இந்த பூமியிலும் காண முடியாது" என்று. அவ்வளவு உயர்ந்தது என்று கூறுகிறார். 


பாடல் 


புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே

ஒப்புரவின் நல்ல பிற


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_23.html


(Please click the above link to continue reading)



புத்தேள் = சொர்கம், தேவர் உலகம்  


உலகத்தும் = உலகிலும் 


ஈண்டும் = இங்கும், அதாவது இந்த பூமியிலும் 


பெறல்அரிதே = பெற முடியாதே 


ஒப்புரவின் = ஒப்புரவைப் போல 


நல்ல பிற = பிற நல்ல ஒன்றை 


தேவர் உலகில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்பதால் அங்கே போய் ஒப்புரவு செய்ய முடியாது. யாருக்கும் ஒன்றும் வேண்டாம். 


இந்த உலகில், மக்கள் ஒப்புரவின் நன்மைகளை புரிந்து கொள்வதில்லை. அதனால் செய்வது இல்லை. எனவே இங்கும் ஒப்புரவை செய்வது அரிது. 


அங்கே செய்வது அரிது. இங்கே காண்பது அரிது. 


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்பார் வள்ளுவ ஆசான். 


எலும்பைக் கூட கொடுத்து விடுவார்களாம். 


சமுதாயத்துக்கு கொடுப்பது என்றால் என்ன என்று சிந்தித்துப் பார்த்தேன். பொருள் சொன்ன பெரியவர்கள் எல்லோரும் பொருள் உதவி என்றுதான் உரை செய்து இருக்கிறார்கள். 


சற்று வித்தியாசமாக சிந்தித்தால் என்ன?


பொருள் உதவி மட்டும்தானா உதவி?


நம்மிடம் அறிவு இருக்கிறது. அதை சமுதாயத்துக்கு என்று செலவழித்தால் என்ன?  புத்தகம் எழுதலாம், ப்ளாக் எழுதலாம், நாலு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தரலாம் (பணம் வாங்காமல்)...


நம்மிடம் அன்பு இருக்கிறது, அந்த அன்பை சமுதாயத்துக்குத் தரலாம். எப்படி?  இலவச சேவை, பொது நல சேவை,  தொண்டு நிறுவனங்களுக்கு சென்று நம்மால் முடிந்த உதவி. மாதத்தில் ஒரு நாள் சென்று பலன் எதுவும் எதிர்பார்க்காமல் சேவை செய்து விட்டு வருவது, இரத்த தானம் செய்வது, அன்ன தானம் செய்வது...செய்யலாம் தானே. 


தெருவில் நடந்து போகிற போது, பாதையில் கல் கிடந்தால் அதை ஓரமாக தள்ளிவிட்டுப் போவது கூட ஒரு ஒப்புரவுதான். 


இன்றைய சூழ்நிலையில், முடிந்த வரை நடந்து போவது, காரில் போனால் புகை, சுற்றுச் சூழல் மாசுபடும். அது மாசுபடாமல் காப்பது கூட சமுதாயத்துக்கு நாம் செய்யும் உதவிதான். 


ஒரு மணி நேரம் குறைவாக Air Condition ஐ உபயோகம் செய்தால், அதுவும் ஒப்புரவுதான். 


வாரத்தில் ஒரு நாள் ஒரு பொழுது விரதம் இருந்தால் எவ்வளவு பெரிய நன்மை இந்த சமுதாயத்துக்கு. 




வீட்டில் ஒரு விசேடம் என்றால் அருகில் உள்ள அனாதை இல்லம், முதியோர் இல்லம் போன்ற இடங்களுக்கு ஒரு வேளை இலவச உணவு கொடுங்கள். 


எவ்வளவோ செய்யலாம். மனம்தான் வேண்டும். 


சிறிதாக ஒன்றில் ஆரம்பியுங்கள்.  பழக பழக பிடித்துப் போய் விடும். 

No comments:

Post a Comment