Showing posts with label Thiru Kural. Show all posts
Showing posts with label Thiru Kural. Show all posts

Friday, May 3, 2013

திருக்குறள் - காதல் நோக்கு


திருக்குறள் - காதல் நோக்கு (கண்ணடிக்கிறா?)


காதலியின் பார்வை, என்ன செய்யும் என்று அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.

மனதுக்குள் மலரள்ளித் தெளிக்கும்,

உடலெங்கும் உற்சாக நதி கரை புரண்டு ஓடும்,

அட்ரினலில் இரத்தம் கலக்கும், அடிவயிற்றில் கலவரம், காது நுனி சிவக்கும், உள்ளங்கை ஊற்றெடுக்கும், உடல் தூக்கத்தையும் பசியையும் நாடு கடத்தி இருக்கும்....ஓடுகின்ற இதயம் உசைன் போல்ட்டுக்கு சவால் விடும், தரை படாத கால்கள் நியுட்டனின் விதிகளை எள்ளி நகையாடும்....

அவள் நேராக பார்க்க மாட்டாள். ஓரக்கண்ணால ஒரு பார்வை. ஓரப் பார்வைக்கு இத்தனை உற்சாகம்...முழுப் பார்வையும் பார்த்தால்...யார் தாங்குவது ?

அப்படின்னு வள்ளுவர் சொல்லுறார்....

பாடல்

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

பொருள்


Thursday, May 2, 2013

திருக்குறள் - காதல் பயிருக்கு நீர்


திருக்குறள் - காதல் பயிருக்கு நீர் 


வீடுகளில் செடிக்கு நீர் விடுவதை பார்த்து இருக்கிறீர்களா ? பூச் செடி, துளசி செடி என்று செடி இருக்கும்.

ஒரு சின்ன  சொம்பிலோ , குவளையிலோ மொண்டு செடிக்கு தண்ணி ஊத்துவார்கள்.

சட்டென்று குவளையை கவிழ்த்து விடமுடியாது. அப்படி மொத்தமா கொட்டினால் செடி தாங்காது. கொஞ்ச கொஞ்சமாய் ஊற்ற வேண்டும்

குவளையை சரித்து கொஞ்சம் ஊற்றனும். அப்புறம் குவளைய நிமித்தனும். அப்புறம் கொஞ்சம் சரிக்கணும்...இப்படி கொஞ்ச கொஞ்சமாய் தண்ணி ஊற்றுவார்கள்

அப்படி கொஞ்ச கொஞ்சமா ஊற்றினால்தான் செடி நன்றாக வளரும்.



அவ சில சமயம் நேருக்கு நேர் பார்ப்பாள். அட, நம்ம  ஆளு இப்படி லுக்கு விடுதேனு நானும் அவ கண்ணை பார்த்தால் உடனே பார்வையை தாழ்த்தி விடுவா.  அப்படி பார்வையை தாழ்த்தும் போது ஒரு நாணப் புன்னகை சிந்துவாள்.

அப்புறம், நான் கவனிக்காதபோது லேசா தலைய தூக்கி பார்ப்பா...அப்புறம் நாணம், தலை கவிழ்ப்பு.....

செடிக்கு தண்ணி ஊத்தும் குவளை ஞாபகம் வருகிறதா ?


பாடல்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்


பொருள்


Saturday, April 27, 2013

திருக்குறள் - கண்டாலும் மகிழ்வு தரும் காதல்


திருக்குறள் - கண்டாலும் மகிழ்வு தரும் காதல் 



உண்டார்கண் அல்ல தடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

சரக்கு அடிச்சாதான் கிக்கு வரும். காதல் பார்த்தாலே கிக்குதான்.

அதுதான் மேலோட்டமான அர்த்தம்.

வள்ளுவராவது ஏழு வார்த்தைகள் உபயோகப் படுத்தி இத்தனை கொஞ்சம் அர்த்தம் தருவதாவது.


கொஞ்சம் உள்ள போய்  பாப்போம்.


உண்டார் கண் அல்லது அடு நறா காமம் போல் 
கண்டார் மகிழ் செய்தல் இன்று 

நறா என்றால் - பழங்கள், இனிப்புகள், கொஞ்சம் மருந்துப் பொருள்கள் எல்லாம் சேர்த்து காய்ச்சி வடிக்கும் ஒரு பானம். உடலுக்கு நல்லது. நாவுக்கு இனிமை தருவது. கொஞ்சம் மயக்கமும் தருவது. நல்ல மணம் இருக்கும். மூக்குக்கும் இனிமை.

அந்த நறா உண்டால் தான் சுகம் தரும். இந்த லவ்சு இருக்கே, அனுபவிக்கனுனு இல்ல, பார்த்தாலே சுகம் தரும்.

அது ஒரு அர்த்தம்.

ஒரு ஆணும் பெண்ணும் முதல் முதலில் பார்க்கிறார்கள். மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு. அது காதால் தானா என்று கூட அவர்களுக்குத் தெரியாது.

கண்ணால் கண்டார்கள். அவ்வளவு தான். அதுவே அவ்வளவு சுகம்.

அவள் தானா....நான் தேடிய செவந்திப் பூ இவள்தானா என்று முதல் பார்வையே மனதை  கொள்ளை கொண்டு சென்று விடும்.

தொட வேண்டும் என்றல்ல....பட வேண்டும் என்றல்ல...தூரத்தில் அவள் நடந்து வருவதைப் பார்த்தால் கூட போதும்...  அவன் மனதில் நந்தவனம் பூ பூப்பூக்கும்...சில பல மேகங்கள் சாரல் தூவி விட்டு செல்லும் ..தென்றல் கவரி வீசும்....தெருவோரப் புற்களும் பாதம் வருடும்....


காதல் அப்புறம் வரும்....அதற்க்கு முன்பே என்ப வெள்ளம் அள்ளிக் கொண்டு போகும்  ....

கண்டார் மகிழ் செய்யும் காதல்....

இதை படிக்கும்போது, உதட்டோரம் புன்னகை கசிந்தால், நீங்கள் காதல் தேவதையால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்....



Thursday, April 25, 2013

திருக்குறள் - துகில்


திருக்குறள் - துகில் 


இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும் - உடலால் மட்டும் அல்ல உள்ளத்தாலும்.

தேவதையோ, மயிலோ, மனிதப் பெண்ணோ என்று சந்தேகம் தெளிந்து, அருகில் செல்கிறார் ஹீரோ.

அவளின் கண்ணைப் பார்க்கிறார். முடியல. உயிர் உண்ணும் கண்கள்.

அதை விடுத்து கொஞ்சம் மேலே புருவத்தை பார்க்கிறார்...அதுவும் முடியல...உயிரை நடுங்க வைக்கும் கண்களுக்கு அந்த புருவங்கள் துணை போகின்றன.

கொஞ்சம் பார்வையை கீழே இறக்குகிறார்....

அது அப்படியே நிற்கட்டும்.....

போருக்குச் செல்லும் யானைகளின்  முகத்தில் ஒரு பெரிய கவசத்தை போர்த்தி இருப்பார்கள்.

அந்த கவசத்திற்கு பல உபயோகங்கள் உண்டு.

முதலாவது, எதிரிகள் வீசும் ஈட்டி, அம்பு இவற்றில் இருந்து அது அந்த யானையை காக்கும்

இரண்டாவது, அந்த கவசத்தில் சில கூர்மையான பாகங்கள் இருக்கும். பலமான கோட்டை கதவுகளை முட்டி திறப்பதற்கு உதவும்

மூன்றாவது, அந்த யானை சுற்றி நடக்கும் போரின் குழப்பங்களை கண்டு மிரண்டு போய்  விடாமல் பாகன் நடத்தும் வழி செல்ல உதவும்.

தன்னை காக்க வேண்டும், எதிரிகளை தாக்க வேண்டும்.

இதை பார்த்த வள்ளுவருக்கு....வள்ளுவருக்கு ... ஒன்று தோன்றுகிறது.

பெண்கள் தங்கள் மார்பை மறைக்க உடுத்தும் துகில் நினைவுக்கு வருகிறது.

பெண்களின் மானத்தை, கற்பை அந்த துகில் காக்கிறது.

ஆண்களின் மனத்தை தாக்குகிறது.

பாடல்  

கடாஅக் களிற்றின்மேல் கண்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.


பொருள்


Wednesday, April 24, 2013

திருக்குறள் - புருவம்


திருக்குறள் - புருவம் 


துன்பங்கள் பலவகை.

உடல் உபாதை, பணக் கஷ்டம், மனக் கஷ்டம் என்று பல துன்பங்கள். இவற்றை கண்டு நாம் நடுங்குவது இல்லை. ஆனால், அவளோட கண்கள் இருக்கே, அதைப் பார்த்தால் நடுக்கம் வருகிறது. உடல் உதறுகிறது.

கூற்றுவனை நேரில் பார்த்தால் நடுக்கம் வருமா, வராதா ?

அவளோட கண்ணை நேருக்கு நேர் பார்க்க முடியாது. உயிரை உண்டு விடும் கண்கள் அவை.

அவளின் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் பார்வையை சற்று விலக்கி   மேலே பார்க்கிறேன்.

அந்த புருவம். ஐயோ. அது அந்த கண்ணை விட கொடியதாய் இருக்கிறதே.

நல்லது செய்யணும் என்ற எண்ணமே கிடையாது அந்த புருவங்களுக்கு.

 நல்லது செய்ய வேண்டும் என்றால் எப்படி இருக்க வேண்டும் ? நேராக இருக்க வேண்டும், வளையாமல் இருக்க வேண்டும். அந்த புருவம் இருக்கிறதே என்னமா வளைந்து இருக்கிறது. பாத்தாலே தெரியுது, இது ஒண்ணும் சரி இல்லை என்று.

இந்த புருவம் மட்டும் வளையாமல் நேரா இருந்திருந்தா, இவளோட கண்கள் இப்படி நான் நடுங்கும் துன்பத்தை தந்து இருக்காது.

அவளுடைய புருவத்தில் நிறைய முடி இருக்கிறது. ஆனால் எல்லாம் குட்டி குட்டியா இருக்கு. இன்னும் கொஞ்சம் நீளமாக வளர்ந்து, அவளுடைய கண்ணை கொஞ்சம் மறைத்தால், எனக்கு இந்த நடுக்கம் குறையும்ல....

மொத்தத்தில் அவளுடைய கண்ணும் புருவமும் சேர்ந்து என்னை ஒரு வழி பண்ணுகின்றன என்கிறார் வள்ளுவர்


பாடல்

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.


பொருள்


Wednesday, April 17, 2013

திருக்குறள் - பெண் எனும் கூற்று


திருக்குறள் - பெண் எனும் கூற்று 


கூற்றுவன் என்றால் எமன். கூறு போடுபவன் கூற்றுவன். உயிரையும் உடலையும் கூறு போடுபவன் என்பதால் அவன் கூற்றுவன். இருப்பவர்களிடம் இருந்து (உயிர்) இல்லாதவர்களை பிரிப்பதால் அவன் கூற்றுவன். 

கூற்றுவன் தன்னோடு நம் உயிரை கொண்டு சென்று விடுவான். யாராவது எமனை பார்த்து இருக்கிறார்களா ? 

இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணை காதலித்தவர்கள் எல்லோரும் எமனை பார்த்து இருக்கிறார்கள். 

அவள் போகும் போது அவன் உயிரை கையோடு கொண்டு சென்று விடுகிறாள். உயிரை கொண்டு செல்பவந்தானே கூற்றுவன். அப்படி என்றால் அவளும் எமன் தானே. 

பெண்ணுக்கு ஆயிரம் குணங்கள்  உண்டு. காலம் காலமாக நாம் பெண்களுக்கு வஞ்சனை செய்து வருகிறோம் ...அவர்களுக்கு அச்சம், மேடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கே குணங்கள்தான் உண்டென்று சொல்லி.

அவளின் அன்பு, காதல், கோபம், செல்ல சிணுங்கல், தன்னவன் மற்றவளை பார்கிறானோ என்ற சந்தேகம், பரிவு, தயை, கருணை, தியாகம் என்று ஆயிரம் குணங்கள் அவளுக்கு 

குணங்களின் குன்று அவள்...

அழியாத குணக் குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே. என்று உருகுவார் அபிராமி பட்டர். 


பாடல் 

பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன் 
பெண்டகையாற் பேரமர்க் கட்டு.

சீர் பிரித்த பின் 

பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன் 
பெண் தகையால் பேரமர் கட்டு 

பொருள் 

பண்டு = முன்பு. அவளைப் பார்பதற்கு முன்பு 

அறியேன் = அறியவில்லை 

கூற்று என்பதனை = கூற்று என்ற எமனை. கூற்றுவன் என்று சொல்லிவிட்டால் அது ஆண் பாலாகிவிடும். இவளோ பெண். எனவே "கூற்று" என்று சொல்லி நிறுத்தி விட்டார்.

இனி அறிந்தேன் = இப்போ தெரியுது அது யாருன்னு 
 
பெண் தகையால் = பெண் தன்மையால். தகை என்றால் அழகு செய்தல், அன்புடன் இருத்தல். 

பேரமர் கட்டு  = பெரிய அழகிய கண்களை கொண்டது என்று. அமர் என்றால் போர் களம். அவள் மட்டும் அல்ல தன் படைகளான கண், போன்ற மற்ற அவயங்கள், அவளின் வெட்கம் போன்ற குணங்கள் என்னும் படை பலத்தோடு போர் களத்திற்கு வந்திருக்கிறாள் 

வெல்வது மட்டும் அல்ல, இந்த போர் களத்தில் இருந்து உயிரையும் எடுத்துக் கொண்டு சென்று விடுவாள்.... 

திருக்குறள் - லுக்கு


திருக்குறள் - லுக்கு 


பெண்ணின் கண்ணை நேருக்கு நேர் பார்த்து இருக்கிறீர்களா ? ரொம்ப கஷ்டம்.

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்பன் கம்பன். 

கண்ணோடு கண் கலத்தல் உடலோடு உடல் சேர்வதை விட அதிக இன்பம் தருவது.

அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.

 தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா 
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா 
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே-- 
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே,

என்று அபிராமியின் கடை கண்களை பார்த்து உருகுவார் அபிராமி பட்டர்.

தெய்வப் பெண்ணோ, மயிலோ, என்று மயங்கிய ஹீரோ கடைசியில் அவள் கம்மல் அணிந்த மானிடப் பெண்தான் என்று அறிந்து கொண்டதை முந்தைய பாடலில் பார்த்தோம்.

தலைவர் இன்னும் கொஞ்சம் கிட்ட போறார்.  

அவளை பார்க்கிறார். அவளும், போகிற போக்கில் அவன் மீது ஒரு பார்வையை வீசிப் போகிறாள். 

இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை மறந்தது...

தலைவருக்கு பயம்..ஒரு வேளை நம்மை தப்பா எடுத்துக் கொண்டிருப்பாளோ என்று. ...அவள் பார்வை இவன் மனதில் கலவரத்தை உண்டு பண்ணுகிறது....என்ன செய்வது என்ற குழப்பம். திருப்பியும் பார்க்கலாமா ? அவள் பார்வையை தாங்க முடியுமா என்ற பயம் வேற....

அவளின் வெகுளியான (innocent ) முகம், பயந்த சுபாவம், வெட்கம் கலந்த பார்வை எல்லாம் என்னமோ செய்கிறது. 

தானே போராடி வெல்லக் கூடிய ஒருவன் , பெரிய படையையும் துணைக்கு கூட்டிக் கொண்டு வந்தால் எப்படி இருக்கும்.

அவள் தனி ஆளே என்னை வென்று விடுவாள்..இதோடு அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்ற படையையும் கூட்டிக்  கொண்டு வந்து இருக்கிறாள்...நான் எப்படி அவளை வெல்ல முடியும்....

 

பாடல் 

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

சீர் பிரித்த பின் 

நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு 
தானை கொண்டு அன்ன உடைத்து 


பொருள் 

நோக்கினாள் = என்னை பார்த்தாள் 

நோக்கு எதிர் நோக்குதல் = என் பார்வைக்கு அவளின் எதிர் பார்வை 

தாக்கு அணங்கு = தானே தாக்கி வெல்லும் ஒரு தெய்வப் பெண் 
 
தானை = படை 

கொண்டு அன்ன உடைத்து = கொண்டு வந்ததைப் போல இருக்கிறது ..

 

Tuesday, April 16, 2013

திருக்குறள் - கண்டவுடன் காதலா ?

திருக்குறள் - கண்டவுடன் காதலா ?


இன்பத்துப் பால்....வள்ளுவர் 25 அதிகாரம், 250 பாடல் எழுதி இருக்கிறார்.

அத்தனையும், காதல் சொட்டும் பாடல்கள். 8 வார்த்தையில் காதலை இவ்வளவு அழுத்தமாய் சொல்ல முடியுமா என்று உதட்டோரம் புன்னகையை வரவழைக்கும் பாடல்கள்.

அதிகாரங்களை வரிசைப் படுத்துவதில் ஆகட்டும், அதிகாரத்திற்குள் பாடல்களை வரிசைப் படுத்துவது ஆகட்டும் ...அதிலும் ஒரு அழகு சேர்த்திருக்கிறார் வள்ளுவர்.

முதல் பாடல்....தலைவன் முதன் முதலாக தலைவியை சந்திக்கப் போகிறான். அவள் தான் அவன் தேடிய காதலி என்று அவனுக்குத் தெரியாது. அவளுக்கும் தெரியாது இன்று அவள் அவளின் காதலனை காணப் போகிறாள் என்று.

அவள் பாட்டுக்கு சோலையில் உலவிக் கொண்டு இருக்கிறாள்.

அவன், அந்த சோலைக்கு வருகிறான். அவள் இருப்பாள் என்று இவனுக்குத் தெரியாது. அவன் வருவான் என்று இவளுக்கும் தெரியாது. இருவரும் ஒருவரை ஒருவர் இதுவரி பார்த்துக் கொண்டது கூட தெரியாது.


வள்ளுவர் காமிரா கோணம் வைக்கிறார் ...கதாநாயகன் பார்வையில் இருந்து.

ஒரு லாங் ஷாட். தூரத்தில் அவள் இருக்கிறாள்.

நடக்கிறாளா , மிதக்கிறாளா என்று தெரியவில்லை.  காற்றோடு கை கோர்க்கும் `கூந்தல், அலைபாயும் மேலாடை...தேவதை மாதிரி இருக்கிறாள்....ஒரு வேளை உண்மையாவே தேவதையோ என்று சந்தேகம் கொள்கிறான்...

அணங்கு கொல் ?

இன்னும் கொஞ்சம் கிட்ட போகிறான். கொஞ்சம் க்ளோஸ் அப் ...இல்லை...தேவதை இல்லை...அவள் அசைந்து வருவது தெரிகிறது...அழகான மயில் போல் இருக்கிறாள்...

ஆய் மயில் கொல் ?

இன்னும் கொஞ்சம் கிட்ட போகிறான்...இன்னும் கொஞ்சம் க்ளோஸ் அப் ....

இல்லை, மயில் இல்லை...காதில் கம்மல் போட்டு இருக்கிறாள்...மயில் கம்மல் போட்டு இருக்குமா ? இவள் மானுடப்  பெண் தான்

மாதர் கொல்  ?

பாடல்

அணங்கொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொன் மாலுமென் னெஞ்சு.


கொஞ்சம் பொருள் பிரிக்கலாம்

அணங்கு கொல் ஆய் மயில் கொல்லோ கனங் குழை
மாதர் கொல்  மாலும் என் நெஞ்சு


பொருள்


திருக்குறள் - ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்


திருக்குறள் - ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்

ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப்படும். 


உலகிலேயே மிக உயர்ந்த பொருள் எது என்று கேட்டால் யாரும் தயங்காமல் சொல்லும் பதில் அவர்களுடைய உயிர் தான். அதை விட சிறந்த பொருள் ஒன்று இருக்கிறது என்கிறார் வள்ளுவர். 

அது தான் ஒழுக்கம்.

ஒழுக்கம் உயர்ந்தது. சிறந்தது. அது எவ்வளவு சிறந்தது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அது உயிரை போன்றது. ஏன் என்றால் போனால் வராது. 

சரி, ஒழுக்கம் உயிரை போன்றது என்று சொல்லி இருக்கலாமே , அது ஏன் உயிரினும் என்று உம்மை சேர்த்து சொல்லி இருக்கிறார் வள்ளுவர் ? 

காரணம் இருக்கிறது. 

உயிர் போன பின் நமக்கு வலி இல்லை. ஒரு வேளை போகும் போது வலிக்கலாம். ஆனால் ஒழுக்கம் போன பின்பும் நாம் வாழ வேண்டி இருக்கும். அது மிகுந்த வேதனையை தரும். எனவே, ஒழுக்கம் உயிரினும் மேலானாதாகக் கருதப்படும். 

அது என்ன விழுப்பம் ? 

விழுப்பம் என்றால் சிறந்தது, உயர்ந்தது என்று பொருள். 
 
வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் என்பார் மணிவாசகர். வேதத்தின் சிறந்த பொருள் அவன் என்ற அர்த்தத்தில். (முழுப் பாடலும் கீழே) 

ஒழுக்கம் சிறப்பை தரும். உயிர் சிறப்பை தராது. எத்தனையோ பேர் உயிரோடு இருக்கிறார்கள். யாருக்குத் தெரியும் ? 

உயிர் இருக்கும் வரை தான் நமக்கு பேர், வணக்கம், மரியாதை எல்லாம். உயிர் போய் விட்டால் "பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு " என்று பட்டினத்தார் கூறியது போல நாம் பிணம். ஆனால் ஒழுக்கத்தோடு இருந்தால், உயிர் போன பின்னும், நம் பேர் நிலைத்து நிற்கும். வாழும் காலம் மட்டும் அல்ல, அதற்க்கு பின்னும் நமக்கு சிறப்பை தருவதால், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் 

வீடு தீபிடித்துக் கொண்டால், போட்டது போட்டபடி உயிரை காத்துக் கொள்ள வெளியே ஓடுவோம். உயிரை விட எதுவும் பெரியது அல்ல. எனவே, மற்றவை போனாலும் பரவாயில்லை, உயிரை காத்துக் கொள்ள ஓடுகிறோம்.

உயிரா ஒழுக்கமா என்ற கேள்வி வந்தால் ? வள்ளுவர் விடை தருகிறார் ...ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 

ஓம்புதல் என்றால் பாதுகாத்தல். உயிரை பாதுகாக்க வேண்டும். உயிரினும் ஓம்பப்படும் என்று கூறியதால், அதைவிட கவனமாக, உயிரை விட கவனமாக ஒழுக்கத்தை காக்க வேண்டும்.. 




திருவெம்பாவை பாடல் 


ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

(திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார் )


Friday, March 29, 2013

திருக்குறள் - தீயும் தீயவையும்

திருக்குறள் - தீயும் தீயவையும் 


தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப்  படும் 



Tuesday, March 26, 2013

திருக்குறள் - தீவினை என்னும் செருக்கு


திருக்குறள் - தீவினை என்னும் செருக்கு 




தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

தீய செயல்களை செய்ய கெட்டவர்கள் அஞ்ச மாட்டார்கள், நல்லவர்கள் அஞ்சுவார்கள்.

இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா ? நமக்கே தெரியும் இல்லையா ?

சற்று உன்னிப்பாக கவனிப்போம்.

தீவினையார் அஞ்சார், விழுமியவர் அஞ்சுவர் - ஏன் ?

ஒரு தீய செயலை செய்ய முதன் முதலில் முற்படும் போது  நிறையவே பயம் இருக்கும். ஒரு வேளை மாட்டிக் கொள்வோமோ என்று ? அதுவே நாள் ஆக ஆக பழகி விடும். பயம் விட்டுப் போகும்.

பயம் இல்லாமல் ஒருவன் ஒரு தீய செயலை செய்கிறான் என்றால் அவன் அதை நிறைய நாட்களாகச் செய்கிறான் என்று அர்த்தம்.

மேலும்,  அப்படி செய்து செய்து அதில் பெரிய வல்லுனராகி விடுவான். அந்த தீச் செயல்  செய்வதில் அவனுக்கு ஒரு பெருமையும் கூட இருக்கும். "தீவினை என்னும் செருக்கு " என்றார் வள்ளுவர்.

மறை பொருள் என்ன வென்றால்,

தீய செயல்கள் செய்ய ஆராம்பிக்காமல் இருப்பதே நல்லது. முதலில் பயம் வரும். அப்பவே விட்டு விட வேண்டும். என்ன தான் ஆகும் பார்க்கலாம் என்று ஆரம்பித்தால் , பின் பயம் போய் விடும்...அது மட்டும் அல்ல அந்த தீவினை செய்வதே பெரிய பெருமை போல்  ஆகி விடும்.....பயம் போய் செருக்கு வந்து விடும்.  செருக்கு கண்ணை மறைக்கும். கருத்தை மறைக்கும். அழிவு நிச்சயம்.

ஒரே ஒரு தடவை என்று ஆரம்பிப்பது பின்னால் பெரிய சிக்கலில் கொண்டு போய் விடும்.

நாம் நிறைய பேரை பார்க்கலாம் ... தண்ணி அடிப்பது, புகை பிடிப்பது, லஞ்சம் கொடுத்து காரியம்  சாதிப்பது இதை எல்லாம் பெரிய பெருமை போல் சொல்லிக் கொள்வார்கள்..

அது எல்லாம் தவறு என்பதே மறந்து போகும். ...

குழந்தைகளுக்கும் சொல்லி வையுங்கள்....பின்னாளில் உதவும் அவர்களுக்கு.


Friday, March 22, 2013

திருக்குறள் - அகர முதல - 2

திருக்குறள் - அகர முதல - 2


அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

அது என்ன பகவன் ? இதற்கு முன்னால் பகவன் என்று கேட்டு இருக்கிறீர்களா ?

பகவன் என்பது பகு என்ற வேர்ச்சொல்லில் வந்தது.

பகுப்பவன் - உயிர்களின் நல் வினை, தீவினை அவற்றை அறிந்து அவற்றிற்கு பலன்களை பகுத்து கொடுப்பவன் என்பதால் பகவன். இது ஒரு பொருள்.

இன்னொரு பொருள்

இன்றைய அறிவியல் உயிர்கள் எப்படி தோன்றின என்றால் பரணாம வளர்ச்சியின் மூலம் தோன்றின  (Evolution ). ஒன்று பலவாக பிரிந்து, உரு மாறி, உரு மாறி இத்தனை உயிர்களும் தோன்றின என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. ஆதி அணுவில் இருந்து வெடித்துச் சிதறி, இன்று இந்த நிலைக்கு வந்து இருக்கிறது. இப்படி பகுக்கப் பட்டு வந்ததால் பகவன். அவனில் இருந்து வந்ததுதான் எல்லாம். (பகுத்து உண்டு பல்லோர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்பதும் வள்ளுவம் )

அப்படி என்றால், உடனே நம்ம ஆளு "எல்லாம் ஒன்றில் இருந்து வந்தது என்றால், அந்த பகவன் எங்கிருந்து வந்தான் " என்று கேட்ப்பான். கேட்பான் என்று வள்ளுவருக்கும் தெரியும்.

எனவே வெறும் பகவன் என்று சொல்லவில்லை, "ஆதி பகவன்" என்று கூறினார். அவன் ஆதி. அவன் மூலம்.

ஆதல் , ஆகுதல் என்ற தொழிற்பெயரில் இருந்து வந்த சொல் தான் "ஆதி". அவனில் இருந்து எல்லாம்  ஆகி வந்ததால் அவன் ஆதி பகவன்.


இன்று நாம் பல தெய்வங்களை கூறுகிறோம்...அல்லா, ஏசு, புத்தர், பெருமாள் சிவன், பிள்ளையார், காளி, என்று பல்லாயிரக்கணக்கான தெய்வங்கள் இருக்கின்றன. வடிவங்கள் எத்தனை இருந்தாலும், எல்லாம் ஒரே ஒரு தெய்வத்தைத்தான்  குறிக்கும்...அது தான் "ஆதி பகவன்". அந்த ஆதியில் இருந்து வந்ததுதான்  இத்தனை தெய்வங்களும், மனிதர்களும், விலங்குகளும், பொருள்களும்.. எனவே, ஆதி பகவன்.

அருவில் இருந்து உருவாகவும், உருவில் இருந்து பல்வேறு வடிவாகவும் ஆனவன் . உருவாய், அருவாய், உளதாய், இலதாய் என்பார் அருணகிரி.


ஒரு குறளில் இவ்வளவு அர்த்தம். 1330 குறள் இருக்கிறது.

மேலும் அறிவோம்.

Thursday, March 21, 2013

திருக்குறள் - அகர முதல


திருக்குறள் - அகர முதல 


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

"அ " எழுத்துக்கு எல்லாம் முதல். அது போல் இறைவன் உலகத்திற்கு எல்லாம் முதல். 

வள்ளுவர் எந்த அளவிற்கு யோசித்து எழுதி இருக்கிறாரோ, அந்த அளவிற்கு அதை உணர்ந்து உரை எழுதி இருக்கிறார் பரிமேல் அழகர்.

இந்த குறளில் அப்படி என்ன சிறப்பு என்று பார்ப்போம்.

மாணவன்: ஐயா, இறைவன் இருக்கிறானா ? 

வள்ளுவர்: இறைவன் இருக்கிறான்.. 

மா: இருக்கிறான் என்றால் எங்கே இருக்கிறான் ?

வ: நீக்கமற எல்லா இடத்திலும் இருக்கிறான்.

மா: அப்படிஎன்றால் அவன் எல்லா உயிர்களிலும், பொருள்களிலும் இருக்கிறான்...அப்படிதானே ?

வ: அப்படித்தான். 

மா: அப்படி என்றால், அவன் தனித்து இருக்க மாட்டானா ? ஏதோ ஒன்றை சார்ந்துதான் இருப்பானா ?

வ: நான் அப்படி சொல்லவில்லையே ...அவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறான், அவன் தனித்தும் இருக்கிறான். 

மா: குழப்பமாக இருக்கிறதே...அது எப்படி ஒரு ஆள் எல்லாவற்றிலும் இருப்பான், தனித்தும் இருப்பான் ? ஒரு பொருள் ஒன்றில் இருக்கிறது என்றால் அது மற்றவற்றில் இல்லை என்று தானே பொருள்....நீங்கள் சொல்லுவது மாதிரி எல்லாவற்றிலும் இருக்கும், தனித்தும் இருக்கும் என்பது மாதிரி ஒன்றை உதாரணமாக காட்ட முடியுமா ? அப்படி ஒன்று இருக்க முடியுமா ? நீங்கள் அப்படி ஒன்றை காட்டினால், எனக்கு இறைவனை நீங்கள் சொல்வது மாதிரி புரிந்து கொள்ள முடியும்....

வ: ஓ, காட்டலாமே....நீ இந்த "அ " என்ற எழுத்தைப் பார்த்து இருக்கிறாயா ? 

மா: ஆம். தெரியும். பார்த்திருக்கிறேன். 

வ: அதில் இருந்துதான் எல்லா எழுத்தும் வருகிறது என்று தெரியுமா ? 

மா: இல்லை ஐயா. தெரியாதே. அது எப்படி..

வ: தொல்காப்பியம் என்ற நூலைப் படித்துப் பார். எழுத்துக்கள் எப்படி பிறக்கின்றன என்று தொல்காபியர் சொல்லி இருக்கிறார். 

மா: ஐயா, நீங்களே சொல்லுங்களேன்....

வ: சுருக்கமாகச் சொல்லுகிறேன்...மேலே வேண்டுமானால் நீ தொல்காப்பியம் படித்து தெரிந்து கொள்....அ, ஆ  இந்த இரண்டு எழுத்தும் விகாராம் இல்லாமல் பிறக்கும். அதாவது உராய்வு இல்லாமல் பிறக்கும். அதாவது, மூச்சை எழுத்து வாய் வழியே விட்டால் அ, ஆ என்ற இரண்டு சொல்லும் பிறக்கும். "ஹ" என்ற சப்த்தம் பிறக்கிறது அல்லவா ? அந்த அ என்ற எழுத்துதான் உயிர் நாடி. 

மா: சரி ஐயா, மத்த எழுத்துகள் எப்படி வருகின்றன ?

 வ: இந்த அ என்ற எழுத்தில் இருந்து வரும் ஒலியை நாக்கு, பல், அன்னம், உதடு இவற்றின் மூலம் நெருக்கியும், நீட்டியும், சுருக்கியும் மத்த எழுத்துகள் உருவாகின்றன. தொல்காப்பியர் சொல்கிறார் ....

இ, ஈ, எ, ஏ, ஐ, என இசைக்கும்
அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன;
அவைதாம்
அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய.  உரை
   
உ, ஊ, ஒ, ஓ, ஓள, என இசைக்கும்
அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்.
இப்படி, எல்லா எழுத்துகளும் அ என்ற எழுத்தில் இருந்து பிறக்கின்றன. மெய் எழுத்திற்கும் அடி நாதம் அ என்ற ஒலி தான். 

மா: சரி ஐயா...அ  என்ற ஒலி எல்லாவற்றிற்கும் மூல ஒலி என்று வைத்துக் கொள்வோம்...அதற்க்கும் இறைவனுக்கும் என்ன சம்பந்தம் ?

வ: அ என்ற எழத்து தனித்தும் நிற்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் வரும். இது புரிகிறதா ?

மா: புரிகிறது. 

வ: அ என்ற எழுத்திற்கு வேறு எந்த எழுத்தும் மூல எழுத்து கிடையாது. ஆனால், எல்லா எழுத்திற்கும் அ என்ற அந்த எழுத்துதான் மூல எழுத்து. புரிகிறதா ?

மா: ம்ம்...புரிகிறது

வ: அது தான் நீ கேட்ட உதாரணம். எல்லாவற்றிற்கும் மூலம், அதுக்கு முன்னால் எதுவும் கிடையாது, தானாக தனித்து இயங்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் இயங்கும்...இறைவனுக்கு உதாரணம் அ  என்ற அந்த எழுத்து. 

மா: புரிகிறது ஐயா...ஆனால் , அ  என்ற அந்த எழுத்து தமிழுக்கு மட்டும்தானே முதலில் வருகிறது ...அப்படி என்றால் இறைவனும் தமிழனுக்கு மட்டும்தானா ?

வ: இல்லையப்பா...அ  என்ற அந்த ஒலி எல்லா மொழிகளிலும் அதுதான் முதல் எழுத்து ...அதனால் தான்...அகர முதல எழுத்து எல்லாம் என்று கூறினேன்...எல்லாம் என்றால் எல்லா மொழிகளுக்கும் என்று அர்த்தம். 

அனைத்து உலகங்களும் அவனில் இருந்து பிறக்கின்றன, அவன் எதில் இருந்தும் பிறப்பது இல்லை, அவன் தனித்தும் இருக்கிறான், உயிர்களோடு கலந்தும் இருக்கிறான் ...

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு 


வ: புரிகிறதா  ?

மா: மிக நன்றாக புரிகிறது ஐயா...நன்றி ....


Tuesday, March 19, 2013

திருக்குறள் - இனியவை கூறல்


திருக்குறள் - இனியவை கூறல் 


அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி 
இனிய சொலின் 

(இனியவை கூறல் - 96ஆவது குறள் )

நல்லதை வேண்டி, இனிய சொற்களை கூறினால், துன்பம் தேய்ந்து இன்பம் பெருகும். 

அவ்வளவுதாங்க இந்த குறள். ஒரு கடினனமான வார்த்தையும் கிடையாது. 

இது ஒரு மேலோட்டமான கருத்து. ஆழமாக சிந்திக்க சிந்திக்க அர்த்தங்கள் பொங்கி வரும் ஊற்று திருக்குறள்.

இதில் என்ன ஆழமான அர்த்தம் ?

எல்லோருக்கும் இன்பம் வேண்டும். யாருக்கும் துன்பம் வேண்டாம். இதுதானே உலகில்  உள்ள   அத்தனை உயிர்களும் வேண்டுவது ? 

வள்ளுவர் அதற்க்கு வழி  சொல்லுகிறார் - ஏழே ஏழு வார்த்தைகளில் ....

முதலில் மற்றவர்களுக்கு நல்லதை நினை - "நல்லதை நாடி ". நாடி என்றால் விரும்பி என்று அர்த்தம். நோக்கம் நல்லதாய் இருக்க வேண்டும். யாருக்கு நல்லதை நாடி ? நமக்கு  நாம் நல்லததைத்  தான் விரும்புவோம். அதை சொல்லவே வேண்டாம்.  எனவே நம்மை   தவிர்த்து எல்லா உயிர்களுக்கும் நல்லதை நாடி. 

"இனிய சொலின்" சில பேர் நல்லதை கூட கடுமையாக சொல்லுவார்கள். சில வீட்டில் பிள்ளைகளை படிக்கச் சொல்லி பெற்றோர்கள் கண்டிப்பதை பார்க்கலாம்..."படிக்காட்டி, நீ உருப்படமாட்ட, மாடு மேய்க்கத்தான் போற, பிச்சை எடுக்கத்தான் போற " என்று எல்லாம் திட்டுவார்கள். நோக்கம் நல்லத்தான். நல்லதைத் தான் நாடுகிறார்கள். ஆனால் அதை இனிமையாகச் சொல்லுவது இல்லை. 

இப்படி நல்லதை நாடி, இனிமையாகச் சொன்னால் என்ன விளையும் ?

அறம் பெருகும்....இன்பம் பெருகும், செல்வம் பெருகும் என்று சொல்லி இருக்கலாம். அது என்ன அறம் பெருகும். அறம் என்ற சொல் அறு என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. நல்லன இல்லாதவற்றை அறுத்து எரிந்து விட்டு, நல்லதை பெருக்கும். 

அல்லவை தேய - தீயவை தேய என்று கூட சொல்லவில்லை. தீது என்று சொல்லுவதே ஒரு இனிய சொல் அல்ல. எனவே, அல்லவை தேய என்கிறார். அதாவது நமக்கு தேவையில்லாதவைகள்  (துன்பம், தீமை ) தேய என்கிறார். 

இந்தக் குறளில்   சில மறைமுகப் பொருளும் உண்டு.

அதாவது, சில பேர் உதட்டளவில் இனிமையாகப் பேசுவார்கள். நெஞ்சு எல்லாம் நஞ்சாக இருக்கும். பேச்சு இனிமையாக இருந்தாலும், நோக்கமும் நல்லதாக இருக்க வேண்டும். கேட்டதை நாடி  இனிய சொல்லக் கூடாது என்பது ஒரு சொல்லாமல் சொன்ன பொருள். 

இரண்டாவது, நல்லதை நினைத்து கூட இனிமை இல்லாத சொல்லை சொல்லக் கூடாது. அப்படி சொன்னால் கேட்பவன் அந்த நல்லதை செய்யாமல் போனாலும் போகலாம். அது யாருக்கு நல்லது. நல்லதே ஆனாலும், அதை இனிமையாகச் சொல்ல வேண்டும். கடுமையாகச் சொல்லக் கூடாது. 


மூன்றாவது, நல்லவை நாடி இனிய சொன்னால், அல்லவை தேய்ந்து அறம்  பெருகும். கெட்டதை நாடி இனிய சொன்னாலோ, அல்லது நல்லவை நாடி இனிமை இல்லாதவற்றைச் சொன்னாலோ என்ன ஆகும் ? அப்படிச் செய்தால் அல்லவை வளர்ந்து, அறம் குறுகும் (வளராது ). 

கணிதம் படித்தவர்களுக்கு சற்று எளிமையாக இருக்கும்...இப்படி யோசித்துப் பாருங்கள் ...


அல்லவை - தேயும் , வளரும் 
அறம் - தேயும் , வளரும் 
நல்லவை நாடி, தீயவை நாடி 
இனிய சொலின், இனிமை இல்லாதவற்றை சொலின் 


மீண்டும் ஒரு முறை குறளை படித்துப் பார்ப்போம் ...

   
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி 
இனிய சொலின் 

Saturday, March 9, 2013

திருக்குறள் - களவின் கண் கன்றிய காதல்


திருக்குறள் - களவின் கண் கன்றிய காதல்


அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் 
கன்றிய காத லவர்.

முதலில் கோனார் தமிழ் உரை - களவின் (திருட்டு) மேல் நாட்டம் உள்ளவர்கள் எதையும் ஒரு அளவோடு செய்ய மாட்டார்கள். 

இப்படித்தான் மற்றவர்களும் உரை எழுதி இருக்கிறார்கள்.


கொஞ்சம் ஆழமாக சிந்திப்போம் 

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் = அளவோடு நின்று வாழ மாட்டார்கள். 
என்ன அளவு ? எதை அளக்க வேண்டும் ?

எந்த அளவுக்கும் ஒரு அடிப்படை வேண்டும். ஒரு மீட்டர், ஒரு வினாடி, ஒரு கிலோ என்று அடிப்படை அலகு (UNit ) வேண்டும். அதை வைத்து மற்றவற்றை அளக்கலாம். எத்தனை கிலோ, எத்தனை மணி என்று அளக்க முடியும். 

வாழ்க்கைக்கும் ஒரு Unit இருக்கிறது . ஒரு நெறிமுறை , கோட்பாடு, சட்ட திட்டம் இருக்கிறது. 

அந்த நெறிப்படி வாழ மாட்டார்கள், மனம் போன படி வாழ்வார்கள் - யார் ?

களவின் மேல் கன்றிய காதலவர் - அது என்ன கன்றிய காதல் ? கன்றிய என்றால் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள். முதலில் தேவைக்காக செய்த களவு நாளடைவில் அதுவே வாழ்க்கை என்று ஆகி, அதை விட முடியாமல், அதன் மேல் மிகுந்த ஈடுப்பாடு உள்ளவர்கள் வாழ்க்கை நெறி முறைகளை கடை பிடிக்க மாட்டார்கள். 

அப்படி என்றால், அவர்கள் களவு மட்டும் அல்ல, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல், இலஞ்ச இல்லாவண்யம்  என்று எது எல்லாம் தவறு என்று நிர்ணைக்கப் பட்டு இருக்கிறதோ, அதை எல்லாம் செய்வார்கள்.

அதுவும் அளவு கடந்து செய்வார்கள். அவர்கள் செய்யும் கொடுமைக்கு அளவு இருக்காது.

ஆற்றார் என்றால் செய்ய முடியாது, வழியில் நிற்க முடியாது. அவர்களே நினைத்தாலும் அவர்களால் நல்ல வழியில் நிற்க முடியாது. 

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே என்பார் நாவுக்கரசர். என்னால் இதை பொறுக்க  முடியவில்லை என்று கண்ணீர் வடிக்கிறார்.  

 
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

Sunday, March 3, 2013

திருக்குறள் - அத்தனையும் ஒன்றாகப் பெற

திருக்குறள் - அத்தனையும் ஒன்றாகப் பெற 



நம்முடைய ஆசைகள் தான் எத்தனை எத்தனை. அதற்க்கு ஒரு அளவே இல்லை.

நாம் ஆசை பட்டது அத்தனையும் ஒரு வேளை நமக்கு கிடைக்கலாம். ஆனால் அது எல்லாம் ஒன்றாகக் கிடைக்குமா ? இன்னைக்கு கொஞ்சம் நாளைக்கு கொஞ்சம்..அடுத்த வருடம், ஒரு அஞ்சு பத்து வருடம் கழித்து என்று கொஞ்ச கொஞ்சமாக கிடைக்கலாம்.

எல்லாம் ஒன்றாக கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ? அப்படி கிடைக்க என்ன செய்ய வேண்டும் ?

ஒண்ணும் செய்ய வேண்டாம். ஒண்ணே  ஒண்ணு இல்லாமல் இருந்தால் போதும். அந்த ஒண்ணே  ஒண்ணுதான் சோம்பல்.

சோம்பல் இல்லா விட்டால், உலகளந்த பெருமாள் அளந்த அத்தனையும் நீங்கள்  பெறுவீர்கள்.

சரி, எல்லாம் பெறுவோம் என்றே வைத்துக் கொள்ளுங்கள்....வயதான காலத்தில், ஒன்றையும் அனுபவிக்க முடியாத காலத்தில் கிடைத்தால் என்ன பயன் ? சீக்கிரம் கிடைத்தால் தேவலை என்று நீங்கள் கேட்கலாம்.


உலகை அளக்க திருமாலுக்கு எவ்வளவு நேரம் ஆகி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்  ? அவர் ஒவ்வொரு அடியாய் அளக்க வில்லை. ஒரு அடி பூலோகத்தில், அடுத்து ஒரே தாவு மேல் உலகம் எல்லாம் அளந்து விட்டார்.

அது போல் சோம்பல் இல்லாமல் இருந்தால், அவர் பெற்ற உலகம் எல்லாம் அதே மாதிரி உங்களுக்கும் கிடைக்கும்.



மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
றாஅய தெல்லா மொருங்கு

சீர் பிரித்த பின்



மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.

பொருள் 


மடி இலா =சோம்பல் இல்லாத

மன்னவன் = மன்னவன்,அதாவது நீங்கள்

எய்தும் = அடையும்

அடி அளந்தான் = திருவடியால் அளந்தான்

தாஅயது = தாவியது. நடந்ததோ ஓடியதோ இல்லை. ஒரே தாவு. 

எல்லாம் = அனைத்தையும். இந்த உலக சுகம் மட்டும் அல்ல, சொர்க்கம் , வைகுண்டம் என்று மறு உலகில் உள்ளதும் கூட ....எல்லாம் அடைவீர்கள் 

ஒருங்கு = ஒன்றாக. தவணை முறையில் அல்ல. ஒன்றாக. 

இது எல்லாம் கொஞ்சம் ஓவரா படல ? வள்ளுவர் பாட்டுக்கு சொல்லிட்டுப் போயிருவாரு. இது எல்லாம் நடக்குமா ? சும்மா உசுபேத்தி விட்டுட்டு போறாரா 

என்னால எவ்வளவு செய்ய முடியும் ? என்னால ஒரு ஆகாய விமானம் வாங்க முடியுமா ? ஒரு கப்பல் வாங்க முடியுமா ? 

என்று நீங்கள் மலைக்கலாம். அதற்கும் வள்ளுவர் விடை தருகிறார் 

If I get at least 5 g+ click, I will write about that also...:)

 

Saturday, March 2, 2013

திருக்குறள் - ஒளியை மறைக்கும் இருள்

திருக்குறள் - ஒளியை மறைக்கும் இருள் 


எவ்வளவு இருள் இருந்தாலும், எத்தனை காலம் அந்த இருள் கவிந்து இருந்தாலும், ஒரு விளக்கை எடுத்துச் சென்றால் அந்த இருள் விலகி விடும் அல்லவா ?

ஒளியை மழுக்க அடிக்கும் ஒரு இருள், ஒரு மாசு இருக்கிறது என்கிறார் வள்ளுவர்

அது என்ன மாசு ?



குடியென்னுங் குன்றா விளக்க மடியென்னு 
மாசூர மாய்ந்து விடும்

குடிமை என்ற குன்றில் இட்ட விளக்கு மடி என்ற மாசு ஊர மாய்ந்து விடும்

குடிமை என்றால் சுற்றத்தாரோடு ஒன்றாக சிறப்பாக வாழ்வது. சுற்றமும் நட்பும் சூழ வாழ்வது குடிமை.

நல்ல குடி பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் 
இல்லை என மாட்டார் இசைந்து என்பது நல்வழி கூறும் குடிமை.

நல்ல குடி என்பது குன்றில் மேல் இட்ட விளக்கு போன்றது. சட்டென்று தெரியும். ரொம்ப தூரத்திற்கு தெரியும். வழி காட்டும்.

அப்படிப்பட்ட விளக்குகூட மடி என்ற மாசு ஊர  மாய்ந்து விடும்.

மடி என்றால் சோம்பல். வேலை செய்யாமல் இருப்பது. வேலைகளை தள்ளிப் போடுவது. காலம் தாழ்த்தி செய்வது.

அப்படி பட்ட சோம்பல் என்ற மாசு, குற்றம் வந்து விட்டால், அது அவனை மாட்டோம் அல்ல அவன் குடும்பத்தையே, குடியையே அழித்து விடும். மாய்த்து விடும்.


குன்றா விளக்கம் என்பதை குன்றில் மேல் இட்ட விளக்கு என்றும் கூறலாம்...குறையாத விளக்கு என்றும் கூறலாம். ஒளி குறையாத விளக்கு இந்த மடி என்ற மாசு ஏற ஏற மறைந்தே போகும்.

சோம்பலை துரத்துவோம். சுறு சுறுப்பாய் இருப்போம். குன்றா விளக்கு மேலும் மேலும் ஒளி வீசி ஜொலிக்கட்டும்....

Wednesday, February 20, 2013

திருக்குறள் - உறக்கமும் விழிப்பும்


திருக்குறள் - உறக்கமும் விழிப்பும் 


உலகிலேயே மிகவும் எளிமையான வேலை எது என்று கேட்டால் தூங்குவது என்று சட்டென்று சொல்லி விடுவீர்கள் 

தூங்குவது போலவே இன்னொரு காரியமும் இருக்கிறது.

அது தான் இறப்பது. 

தூங்குவது போலும் சாக்காடு.

இறப்பது என்பது தூங்குவதைப் போல என்கிறார் வள்ளுவர் 

அது எப்படி ? தூங்குனா காலைல முழிச்சுகுவோம்ல...செத்து போய்டா எப்படி முழிப்போம் ? என்று நீங்க கேட்பது வள்ளுவருக்கு கேட்டிருக்கிறது.

தூங்கி விழிப்பது போலும் பிறப்பு 

அப்படினுட்டார்....

நீங்க பிறந்தது தூங்கி   முழிச்ச மாதிரி. 

தூங்கினது வேற ஆளு, முழிச்சது வேற ஆளுன்னு நீங்க சொல்றீங்க.

வள்ளுவர் அப்படி நினைக்கலியே. தூங்கியதும், விழித்ததும் ஒரே ஆள் தான், வேற வேற உடல். ஆள் ஒண்ணு தான் என்கிறார். 

தூங்குவதும் விழிப்பதும் உடலுக்கு எப்படி தினம் நடக்கும் சர்வ சாதாரணமான ஒரு நிகழ்ச்சியோ அது போல இறப்பதும் பிறப்பதும் உயிருக்கு சாதாரணமான நிகழ்ச்சி. 

இறப்பதும், பிறப்பதும் மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும் ஒரு சுழற்சியான நிகழ்ச்சி. 

இதுக்கு போய்  அலட்டிக்கலாமா ?

உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (339)

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு 



 

Friday, February 15, 2013

திருக்குறள் - சான்றோன் எனக்கேட்ட தாய்


திருக்குறள் - சான்றோன் எனக்கேட்ட தாய் 



ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

கேள்விப் பட்ட குறள்  தான். 

தன்னுடைய மகனை சான்றோன் என்று மற்றவர் கூறக் கேட்ட தாய், அவனை பெற்ற பொழுதை விட அதிகமாக சந்தோஷப் படுவாள்.

அவ்வளவுதானா ?  
 
கொஞ்சம் சிந்திப்போம். 

மகன் பெரிய ஆள் என்று கேட்டால் தந்தைக்கு உவகை வரதா ?

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தந்தை 

என்று ஏன் சொல்லவில்லை ?

மகன் எவ்வளவு தான் பெரிய ஆள் ஆனாலும் தாய்க்கு அவன் எப்போதும் சின்ன பிள்ளை தான்.  ஊர்ல நூறு பேரு நூறு விதமா சொல்லலாம், தாய்க்கு அவளுடைய பிள்ளைஎப்போதுமே  அவள் மடியில் தவழும் சின்ன பிள்ளை தான். தந்தைக்குத் தெரியும்...பையன் வளர்வது, படிப்பது, பட்டம் வாங்குவது, வாழ்வில் முன்னேறுவது எல்லாம்....தாய்க்கு அவள் பிள்ளை எப்போதுமே பால் மணம்  மாறாத பாலகன் தான். 

பாத்து போப்பா, ரோடு எல்லாம் பாத்து கிராஸ் பண்ணு, வேளா  வேளைக்கு  சாப்பிடு, ரொம்ப நேரம் கண்ணு முழிக்காதே என்று சொல்லிக் கொண்டு இருப்பாள் ...அவன் பெரிய நிறுவனத்தில் பெரிய  வேலையில்  இருப்பான் ...அவனுக்கு கீழே ஆயிரம் பேர் இருப்பார்கள்...என்ன இருந்து என்ன, அவன் அம்மாவுக்கு அவன் சின்னப் பையன் தான்....

அவனை சான்றோன் என்று சொன்னால்...அவளுக்கு இரண்டு விதமாமான மகிழ்ச்சி....ஒன்று நம்ம பிள்ளை பெரிய ஆள் ஆகிவிட்டானே என்று..இன்னொன்று...யாரு, இந்த வாண்டா பெரிய ஆளு என்று இன்னொரு மகழ்ச்சி...

எனவே ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும்...

இன்னொரு காரணம்.....

ஒரு தாய்க்கு மிக பெரிய மகிழ்ச்சி எப்போது வரும்....பத்துமாதம் சுமக்கிறாள்...படாத பாடு படுகிறாள்...வலியின் உச்சத்தில் பிள்ளையை பெறுகிறாள்...அப்போது மருத்துவர் "பிள்ளை ஆரோகியமா  நல்லபடியா பிறந்திருக்கு " அப்படின்னு சொன்னவுடன்  ஒரு பெரிய நிம்மதியும் சந்தோஷமும் பிறக்கும் அந்த தாய்க்கு. அது போல் அவன் வளர்ந்து பெரிய ஆள் ஆன பின், அதைவிட மகிழ்ச்சி பிறக்கும். 

முதலில் கை கால் ஆரோக்கியத்துடன் குழந்தையாய் பிறப்பிப்பது. 
இரண்டாவது சான்றோனாய் பிறப்பிப்பது. 

இரண்டு மகிழ்ச்சியான நேரங்கள். பின்னது முன்னதை விட சிறப்பாக இருக்கும் என்கிறார் வள்ளுவர். 

மூன்றாவது, ஈன்ற பொழுது என்பது தாய்க்கு உண்டு. தந்தைக்கு கிடையாது. தாய் பத்து மாதத்தில்  இறக்கி வைத்து விடுவாள். தந்தை அந்த சுமையை கடைசி வரை தூக்கித் திரிவான். சான்றோனாக்குவது தந்தைக்கு கடன் என்பார் வள்ளுவர். அவன் மகனை இறக்கி வைப்பதே இல்லை. எனவே, ஈன்ற பொழுது என்பது தந்தைக்கு கிடையாது. மேலும் மேலும் மகனை முன்னேற்றுவதிலேயே குறியாய் இருப்பான் தந்தை. 

பரிட்ச்சைக்கு படிக்கிறான் என்றால், அம்மா சொல்லுவாள் "ரொம்ப நேரம் முழிச்சு இருந்து உடம்ப கெடுத்துகாத " என்று. தந்தைக்கு அந்த பாசம் இருக்கும். இருந்தாலும் அதை வெளியே காட்டாமல்  , "எல்லாம் படிச்சிட்டியா...அதுக்குள்ள என்ன தூக்கம் " என்று அவனை மேலும்  உயர்ந்தவனாக்க பாடு படுவார் 

தாய்க்கு, பிள்ளை சந்தோஷமா இருக்கணும்..

 தந்தைக்கு, பிள்ளை பெரிய ஆளா வரணும்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

எவ்வளவு நுட்பம் 

எவ்வளவு அர்த்த செறிவு 

நவில் தொறும் நூல் நயம் போலும்.....

 


  



Friday, December 28, 2012

திருக்குறள் - பயன் இல்லாத சொல்


திருக்குறள் - பயன் இல்லாத சொல்


யாரவது அவர்களின் கணவனுக்கோ, மனைவிக்கோ, பிள்ளைகளுக்கோ, உடன் பிறப்புகளுக்கோ, பெற்றோருக்கோ , நெருங்கிய நண்பர்களுக்கோ தீமை செய்ய நினைப்பார்களா ?  அப்படி செய்தால் அது எவ்வளவு மோசமான ஒன்று ? அதை விட மோசமானது பலபேர் முன்னால் பயன் இல்லாத சொற்களை கூறுவது. பயன் இல்லாத சொற்களை கூறுவதை வள்ளுவர் மிக மிக வெறுக்கிறார். 

பாடல்