Saturday, March 31, 2012

சித்தர் பாடல்கள் - பட்டினத்தார் - ஊரும் சதம் அல்ல

பட்டினத்தாரின்
தமிழ் பாடல்கள் மிக மிக எளிமையானவை.

நிலையாமை, பெண்கள் மேல் கொள்ளும் அதீத ஆசை, ஏழைகளுக்கு
உதவுவது, போன்ற கருத்துகளை மிக எளிய தமிழில் பாடியிருக்கிறார்.


உறவுகள் எல்லாம் பொய் என்று சொல்ல வந்த பட்டினத்தார்,

-----------------------------------------------------------------
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற பேருஞ்
சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல,
தேசத்திலேயாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே. 13
------------------------------------------------------------------
சதம் என்றால் நிலையானது, நிரந்தரமானது
என்று பொருள் .

ஊரும் சதம் அல்ல - எனக்கு சொந்த ஊரு மதுரை அப்படின்பாங்க்ய ..என்னமோ அதை இவரு
காசு போட்டு வாங்கின மாதிரி. அங்க பொறந்து வளர்ந்து இருப்பாரு, மிஞ்சி மிஞ்சி போனா
ஒரு வீடு இருக்கும். கேட்டா அந்த ஊரே "சொந்த ஊரு" அப்படின்னு சொல்ல
வேண்டியது.


உற்றார் சதம் அல்ல - அவனவன் அவன் பொண்டாட்டி புள்ளை, வேலை வெட்டினு
அலைஞ்சுகிட்டு இருக்கான். நம்மள பார்க்க அவனுக்கு எங்க நேரம் இருக்கு ? அது எல்லாம்
நிரந்தரம் கிடையாது


உற்று பெற்ற பேரும் சதம் அல்ல - பேரும் புகழும் நிரந்தரம் இல்லை. பேரும்
புகழும் ஒரே நாளில் போய் விடலாம். "அவனா இப்படி செஞ்சான் ? நல்லவன்னு நினைச்சேனே"
என்று சொல்லும்படி ஆகிவிடலாம்.


பெண்டீர் சதம் அல்ல - கொட்டி முழக்கி அழுதிடுவார் மயானம் குறுகி எட்டி அடி
வைப்பாரோ கச்சியேகம்பனே என்பார் பட்டினத்தார்..


பிள்ளைகளும் சதம் அல்ல - படிச்சு முடிஞ்சு, கல்யாணம் ஆனவுடன் பிள்ளைகள்
அவர்கள் வாழ்க்கையை பார்க்க போய் விடுவார்கள்.


சீரும் சதம் அல்ல - சொத்து பத்து எல்லாம் நிரந்தரம் அல்ல.




செல்வம் சதம் அல்ல - செல்வம் என்றாலே "செல்வோம்" என்று தானே அர்த்தம். நேற்று
இருந்தது, நாளை போகும். அதுவும் நிரந்தரம் இல்லை.


தேசத்திலே யாரும் சதம் அல்ல - நண்பர்கள், உறவினர்கள், மனைவி, மக்கள், அண்டை
அயல் , யாரும் சதம் அல்ல


நின் தாள் (பாதங்கள்) சதம் - பின்ன எது
தான் நிரந்தரம் என்று கேட்டால், இறைவன் திருவடிகள் தான் நிரந்தரம். கச்சி ஏகம்பனே =
காஞ்சி புரத்தில் உள்ள ஏகாம் பரேஸ்வரனே


இரண்டு முறை பாடலை படித்துப் பாருங்கள்.
மனப்பாடம் ஆகிவிடும்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவரங்கம்

திருவரங்கம் என்ற ஸ்ரீரங்கம்.

இந்த திரு தலத்தை திருமழிசை பிரான் பதினான்கு பாடல்களால் மங்களாசாசனம் செய்து
இருக்கிறார்.
இப்போ அந்த ஊர் ரொம்ப congested ஆகி விட்டது. ஊருக்குள் வண்டி நுழைய முடியாத
அளவுக்கு நெருக்கடி. திருமழிசை இருந்த காலத்தில் இந்த இடம் மிக ஒரு அருமையான இடமாய்
இருந்து இருக்கும்.

--------------------------------------------------------------------------------------------------
வெண்திரை கருங்கடல் சிவந்து வேவ முன் ஒரு நாள்
திண் திறர் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர்
எண் திசை கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே
----------------------------------------------------------------------------------------------------

பொருள்:

வெண்திரை = வெண்மையான நுரை கொண்ட

கருங்கடல் = கரிய கடலானது

சிவந்து வேவ = அரக்கர்கள் மற்றும் வானரங்கள் சண்டை இட்டபோது அவர்களின் இரத்தம்
கடலில் கலந்ததால் அந்த கடல் சிவந்து போக
முன் ஒரு நாள் = முன்பு ஒரு நாள்

திண் = திண்மையான, வலுவான

திறர் = திறமையான (வலு மட்டும் இருந்தால் மட்டும் போதாது, திறமையும் வேண்டும்)

சிலைக்கை = வில் கையில் கொண்டு (சிலை = வில் )

வாளி = அம்பு

விட்ட வீரர் = அம்பு விட்ட வீர்கள் (இராமனும் லக்ஷ்மணனும்)

சேரும் ஊர் =அவர்கள் வந்து சேரும் ஊர்

எண் திசை கணங்களும் = எட்டு திசையில் உள்ள பூத கணங்களும்

இறைஞ்சி ஆடு தீர்த்த நீர் = வேண்டி தீர்த்தம் ஆடும் ஊர்

வண்டு இரைத்த சோலை = வண்டுகள் ரீங்காரமிடும் சோலை

வேலி மன்னு = வயல்கள் நிறைந்த

சீர் அரங்கமே = திரு அரங்கம்

கம்ப இராமாயணம் - கருப்பு நிலா

கவிதை என்பது கவிஞனின் மனத்தில் இருந்து வாசகனின் மனத்திற்கு எண்ணங்களையும்
உணர்சிகளையும் நேரடியாக கடத்தும் ஒரு முயற்சி.
கம்பனின் பாடல்களுக்கு விளக்கம் எழுதும் தகுதியும் திறமையும் எனக்கு கிடையாது.
எனக்கு தெரிந்த வரை எழுதுகிறேன். முடிந்தவரை கவிதையை நேரடியாக இரசிக்க முயற்சி
செய்யுங்கள்.


கம்பனின் கவிதைக்கு ஈடு இணை கிடையாது.

-----------------------------------------------------------------------------------------------

செந்ஞாயிறு தெரியும் ... கரு ஞாயிறு தெரியுமா ? கம்பன் காட்டுகிறான் அதை.

-----------------------------------------------------------------------------------------------------------
செஞ்செவே சேற்றில்
தோன்றும் தாமரை, தேரில்
தோன்றும்
வெஞ் சுடர்ச் செல்வன்
மேனி நோக்கின
விரிந்த; வேறு ஓர்
அஞ்சன நாயிறு
அன்ன ஐயனை
நோக்கி, செய்ய
வஞ்சி வாழ் வதனம்
என்னும் தாமரை மலர்ந்தது அன்றே.
----------------------------------------------------------------------------------------------------------------------

இராமனும், லக்ஷ்மணனும், சீதையும் கங்கை கரையில் இரவு தங்கி
இருக்கிறார்கள். மறு நாள் காலை விடிகிறது.
சிவந்த தாமரை சிவந்த சூரியனின் வரவை கண்டு மலர்ந்தது. அதே
சமயம், கருமையான ஞாயிறை போன்று இருந்த இராமனைப் பார்த்து சீதையின் முகம் மலரன்தது.

செஞ்செவே சேற்றில்
தோன்றும் தாமரை, = செக்க செவேல் என்று சேற்றில் தோன்றும்
தாமரை மலர்

தேரில் தோன்றும் = தேரில் வரும்

வெஞ் சுடர்ச் செல்வன் மேனி நோக்கின விரிந்த = வெம்மையான சுடர்
மிகுந்த சூரியனின் மேனி நோக்கி விரிந்தது

வேறு ஓர் = அதே சமயம் வேறு ஒரு

அஞ்சன நாயிறு = கருத்த ஞாயிறு (அஞ்சனம் = கருத்த)

அன்ன = போன்ற

ஐயனை நோக்கி = ஐயனான இராமனை நோக்கி

செய்ய = சிவந்த

வஞ்சி = பெண்

வாழ் வதனம் = உயிருள்ள முகம்

என்னும் தாமரை மலர்ந்தது அன்றே = என்னும் தாமரை
மலர்ந்தது

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஓடிப் போகலாமா ?

அவளுக்கு அவன் மேல் காதல். எப்படியாவது அவனை மணந்து
கொள்ள ஆசைப் படுகிறாள். அவளுடைய அப்பா, அம்மாவிடம் சொல்லுகிறாள் "இங்க பாருங்க,
நீங்களா கொண்டு போய் என்னை விட்டுவிட்டால் ஒரு பழியும் வராது. நான் வீட்டை விட்டு
ஓடிப் போய் கல்யாணம் பண்ணிகொண்டால் எல்லாருக்கும் கேட்ட பேருதான" என்று சொல்கிறாள்

சொன்னது - ஆண்டாள்

சொல்லியது - நாச்சியார் திரு மொழியில்

அந்த பாசுரம்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத் தனிவழி போயினாள் என்னும்சொல்லு
வந்தபின் னைப்பழி காப்பரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான்
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக் குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

சீர் பிரித்த பின்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி போயினாள் என்னும் சொல்லு
வந்த பின் பழி காப்பது அரிது, மாயவன் வந்து உரு காட்டுகின்றான்
கொத்தளமாக்கி பரக் கழித்து குறும்பு செயவானோர் மகனைப் பெற்ற
நந்த கோபாலன் கடைத்தலைக்கே நள் இருட்க்கன் என்னை உயித்திடுமின்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------


பொருள்

தந்தையும் = அப்பாவும்


தாயும் = தாயும்


உற்றாரும் = உறவினர்களும்


நிற்கத் = இருக்க


தனி வழி = அவர்களை எல்லாம் விட்டு விட்டு
தனியாகப்


போயினாள் = போனாள்


என்னும் சொல்லு = என்று ஊர் சொல்லும் சொல்


வந்த பின் = வந்து விட்டால்


பழி காப்பது அரிது, = அந்த பழியை காப்து கஷ்டம்


மாயவன் = திருமால்


வந்து உரு காட்டுகின்றான் = வந்து எனக்கு அவன் திரு
மேனியை காட்டுகிறான்


கொத்தளமாக்கி பரக் கழித்து = பெண்களின் மனத்
திண்மையை உடைத்து (கொத்தளமாக்கி), குடி கெடுத்து (பரக் கழித்து )


குறும்பு செயவானோர் மகனைப் பெற்ற = குறும்பு
செய்யும் பையனைப் பெற்ற

நந்த கோபாலன் = நந்த கோபாலன்

கடைத்தலைக்கே = வீட்டு வாசலுக்கே

நள் இருட்கண் = நடு நிசியில்

என்னை உய்த்திடுமின் = என்னை கொண்டு போய் விட்டு
விடுங்கள்


ஏன் நடு இராத்திரி போக வேண்டும் ? காலையில போகலாமே ?
நல்ல நாள் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாமே ?


ஹுஹும் ... இப்பவே போகணும் அவன் கிட்ட. அது
வரைக்கும் எல்லாம் பொறுக்க முடியாது

கோவ லர்சிறுமி யர்இளங் கொங்கை குதுக லிப்பஉட லுளவிழ்ந்து
எங்கும்
காவ லும்கடந் துகயிறு மாலை யாகி வந்து கவிழ்ந்துநின்
றனரே
என்று சொன்னார் போலே.


பொங்கி வரும் காதல். ஆணை இட்டாலும், அணை இட்டாலும் நில்லாது.

கம்ப இராமாயணம் - குகன் அறிமுகம்

குகன் பார்க்க எப்படி இருப்பான் ?

அந்த முரட்டு உருவத்தை கூட கம்பன் வர்ணிக்கும் அழகே தனி.

தமிழ் படிக்க முடிந்ததற்காக மகிழ்வடையும் தருணங்கள் , கம்பனை படிக்கும்
தருணங்கள்


-----------------------------------------------------------------------------
ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர்நாற்றம் மேய நகை
இல் முகத்தினான்,சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்,கூற்றம் அஞ்சக்
குமுறும் குரலினான்.
------------------------------------------------------------------------------------------------------

ஊற்றமே = மிகுந்த ஊக்கத்தோடு, வலிமையோடு

மிக ஊனொடு மீன் நுகர் = ரொம்ப கறி மீன் எல்லாம் உண்டு . கறி மீன் எல்லாம் ரொம்ப
ஆர்வமா சாப்பிடுவான்.
நாற்றம் மேய = உடம்பு எல்லாம் ஒரு நாற்றம்

நகை இல் முகத்தினான் = முகத்திலே ஒரு சிரிப்பே
கிடையாது. மருந்துக்குக் கூட சிரிக்க மாட்டான்
சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான் = கோபம் இல்லாமலே கூட கண்ணில் தீ
வரும் படி பார்ப்பான். அப்ப கோவம் வந்தால் எப்படி பார்ப்பானோ ?
கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான் = அந்த யமனும்
(கூற்றம் = யமன் ) அஞ்சும் படியான இடி இடிக்கும் படி உள்ள குரலை கொண்டவன்

ஐங்குறுநூறு - இது நம்ம ஆளு

அவன்: டேய், என் ஆளு வர்றாடா

நண்பன்: எங்கடா ?

அவன்: அதோ அங்க white and white பாவாடை தாவணியில்

நண்பன்: டேய், லூசாடா நீ ... எல்லாரும் தான் அந்த dressla இருக்காங்க... இது
ஒரு அடியாளமா ?

அவன்: கைல வளையல பாருடா

நண்பன்: டேய், உனக்கு நேரம் செரியில்ல...காலங்காத்தால வெறுப்பு ஏத்தாத
....

அவன்: சரி, சரி...அந்த கும்பல்ல அழகா சிரிசிகிட்டு வர்றா பாரு, அவ தான் என்
ஆளு

நண்பன்: சரிதான், முத்தி போச்சு காதல் கிறுக்கு, ஐயா சாமி என்னைய
விடு...இதுக்கு மேல இருந்தா, என் மண்டை காஞ்சிரும்


இப்படி, ஒரு பொத்தாம் பொதுவாய் அடையாளம் காட்டும் காதலனை ஐங்குறு நூறில்
காட்டுகிறார் அம்மூவனார்

---------------------------------------------------------------
அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர்வாய்,
அரம்போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே

-------------------------------------------------------------------




அலங்கு இதழ் = அசைகின்ற இதழ்


நெய்தல் = நெய்தல் மலர்கள் நிறைந்த


கொற்கை முன் துறை = கொற்கை கடற் கரையில்


இலங்கு முத்து = ஒளி பொருந்திய முத்துக்கள்


உறைக்கும் எயிறு = போன்றவை என் காதலின் பற்கள்


கெழு துவர்வாய், = சிவந்த இதழ்கள் (வாய்)


அரம்போழ் அவ்வளைக் = அரத்தால் தீட்டிய அழகான வளையல்கள் அணிந்த கைகள்


குறுமகள் = சின்னவள்


நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே = யாழின்
நரம்பை மீட்டியது மாதிரி இனிமையான குரலை கொண்டவள் .....


காதலனுக்கு, அவன் ஆளின் அழகு தான்
தெரியும்....

திரு வாசகம் - திரு தெள்ளேணம்

தெள்ளேணம் எனபது ஒரு இசைக் கருவி. தோற்க் கருவி. அதை தட்டி தட்டி
பாடுவார்கள். அப்படி "தெள்ளேணம் கொட்டாமோ" என்று மாணிக்க வாசகர் பத்து பாடல்கள்
பாடி உள்ளார். அதில் இருந்து சில.

----------------------------------------------------------------------------------------------------
உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டுபருகற் கினிய பரங்கருணைத்
தடங்கடலைமருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியோம்திருவைப் பரவிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.
-----------------------------------------------------------------------------------------------------


பதம் பிரித்த பின்


----------------------------------------------------------------------------------------------------------
உருகி பெருகி உள்ளம் குளிர முகந்து கொண்டு
பருகர்க் இனிய பரங் கருணை தடங் கடலை
மருவி திகழ் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம்
திருவை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
----------------------------------------------------------------------------------------------------------


உருகி = உள்ளம் உருகி

பெருகி = அன்பினாலும், பக்தியாலும் உடல் பூரித்து

உள்ளம் குளிர = உள்ளம் குளிர

முகந்து கொண்டு = தண்ணீரை முகந்து

பருகர்க் இனிய = குடிப்பதற்கு இனிமையான

பரங் கருணை = மேலான கருணை உடைய

தடங் கடலை = அலைகளை கொண்ட கடலை

மருவி = சேர்ந்து

திகழ் தென்னன் = பெருமை உடைய, சிறப்பு உடைய தென் நாட்டை சேர்ந்தவனான
சிவனின்

வார் கழலே = நீண்ட திருவடியை

நினைந்து அடியோம் = நினைத்து அடியவர்களாகிய நாம்

திருவை பரவி = அவனைப் புகழ்ந்து (திரு = உயர்வு, சிறப்பு, செல்வம்
)

நாம் தெள்ளேணம் கொட்டாமோ = நாம் தெள்ளேணம் கொட்டாமோ

-------------------------------------------------------------------------------------------------------------------------------------


நாம் எல்லாம் கடல் பார்த்து இருக்கிறோம். அதில் உள்ள தண்ணீர் எப்படி
இருக்கும் ? ஒரே உப்பாய் இருக்கும். வாயில் வைக்க முடியுமா ? ஆனால் அந்த கடலே
குடிக்க இனிமையான நீரால் நிறைந்து இருந்தால் எப்படி இருக்கும் ? இறைவனின் அருள்
அப்படி அளவற்றதாய் கடல் நிறைந்த நல்ல தண்ணீரைப் போல இருக்குமாம்.


இன்னொரு அர்த்தம்.


நமக்குத் தான் கடல் நீர் உப்பாக இருக்கிறது.
அதில் உள்ள மீனுக்கு அது ஒண்ணும் கஷ்டமாய் இல்லை. அந்த நீரை குடித்து, சுவாசித்து
உயிர் வாழ்கிறது. அது போல் இறைவனின் கருணையில் மூழ்கி திளைக்கும் பக்தர்களுக்கு
அந்த நீர் வாழ்வாதாரம். அந்த கடலில் மூழ்காமல் கரையில் நின்று கொண்டு தர்க்கம்
பண்ணி கொண்டு இருப்பவர்களுக்கு அது உப்பு நீர்.
சொலறத சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்.