Thursday, February 7, 2013

திருக்கடை காப்பு - சிறு நுண் துளி சிதற


திருக்கடை காப்பு - சிறு நுண் துளி சிதற 


அது ஒரு சின்ன அழகிய கிராமம். ஊரைச் சுற்றி மலைகள். குளு  குளு  என்று எப்போதும் இருக்கும். மெல்லிய தென்றல் உயிர் உரசிப் போகும்.

ஊரைச் சுற்றி நிறைய மா மரங்கள். மா மரங்களில் குரங்குகள் ஜாலியாக குதித்து குதித்து விளையாடிக் கொண்டிருகின்றன. கிளைக்கு கிளை தாவம் போது அந்த கிளைகள் படாரென்று விடுபடுகின்றன அப்படி விடுபட்ட கிளைகள் மேகத்தில் சென்று மோதுகின்றன. அப்படி மோதும் போது, அந்த மேகத்தில் இருந்து நீர் துளிகள் சிதறுகின்றன. அப்படை சிதறிய நீர்த் துளிகளை மழை என்று நினைத்து அங்கிருந்த மான்கள் மரத்தடியில் சென்று ஒதுங்குகின்றன.

அப்படிப்பட்ட அழகிய ஊர் திருவண்ணாமலை.

திருவாரூரில் பிறக்க முக்தி
சிதம்பரத்தில் இருக்க முக்தி
காசியில் இறக்க முக்தி
திருவண்ணாமலையை   நினைக்க முக்தி

என்று சொல்லுவார்கள்.

அங்கே போகக் கூட வேண்டாம்....அதை நினைத்தாலே முக்தி தான்

அங்கு உறையும் அண்ணாமலையாரின் திருவடிகளை நினைத்தாலே பழைய வினைகள் எல்லாம் அற்றுப் போகும். நினைக்க முக்தி தரும் திருத்தலம்.

ஞான சம்மந்தரின் பாடல் 


தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.

பொருள்

Wednesday, February 6, 2013

திருவாசகம் - கணக்கில்லா திருக்கோலம்


திருவாசகம் - கணக்கில்லா திருக்கோலம் 



திருப்பெருந்துறையிலே குருவாய் வந்து மாணிக்க வாசகரை ஆண்டு கொண்டார் சிவ பெருமான்.

திரு கழுக்குன்றிலே கணக்கிலா வடிவங்கள் காட்டினான் என்று அவரே சொல்கிறார்


தமிழ் தாத்தா உ வே சாமிநாதையர் இறக்கும் தருவாயில் திருவாசகத்தில் இருந்து ஒரு பாடலை பாடும் படி சொல்லக் கேட்டாராம்..அந்தப் பாடலை கேட்ட பின் அவர் உயிர் பிரிந்தது என்று நான் சொல்லக் கேட்டு  இருக்கிறேன்.

அது இந்தப் பாடல்.....



பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
மான்உன் நாமங்கள் பேசுவார்க்
கிணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. 

சீர் பிரித்த பின்

பிணக்கிலாத பெருந்துறை பெருமான் 
உன் நாமங்கள் பேசுவார்க்கு 
இணக்கிலாத ஓர் இன்பமே வரும் 
துன்பமே துடைத்து எம்பிரான் 
உணக்கிலாததோர் வித்து மேல் விளையாமல் 
என் வினை ஒத்த பின் 
கணக்கிலா திருக்கோலம் நீ வந்து 
காட்டினாய் கழுக்குன்றிலே 






பொருள்




பிணக்கி லாத = பிணக்குதல் என்றால் கட்டுதல் என்று பொருள். எதனோடும் பிணைப்பு இல்லாத, உயர்ந்தவர், தாழ்ந்தவர் , பணக்காரன், ஏழை என்று யாரையும் பேதம் பார்க்காமல் எல்லோரையும் காக்கும்

பெருந் துறைப் பெருமான் = திருப்பெருந்துறை என்ற இடத்தில் எழுந்து அருளி இருக்கும் பெருமான்

உன் நாமங்கள் = உன்னுடைய திரு நாமங்களை


 பேசுவார்க்கு = பேசுபவர்களுக்கு

இணக்கு இல்லாததோர் = இணையே இல்லாத

இன்ப மேவரும் = இன்பமே வரும்

துன்பமே துடைத்து = துன்பத்தை துடைத்து


தெம்பிரான் = எம்பிரான்

உணக்கி லாததோர் = உலராத

வித்து = விதை

மேல்விளையாமல் = மேல் விளையாமல்

என்வினை = என்னுடைய பழைய வினைகள்

ஒத்தபின் = தீர்ந்த பின்

கணக்கி லாத் = கணக்கிலாத , எண்ணற்ற

திருக் கோலம் = திருக்கோலங்களை

 நீ வந்து காட்டி னாய் = நீயே வந்து காட்டினாய்

கழுக்குன்றிலே = திருகழுக்குன்றிலே


ஒரு விதை மீண்டும் முளைக்க வேண்டுமானால் அது முதலில் உலர வேண்டும். உலர்ந்த விதைதான் மீண்டும் முளைக்கும். 

என்னுடைய வினைகள் என்னை மீண்டும் பற்றாமல், நான் மீண்டும் வந்து பிறவாமல் என்னை ஆண்டு கொண்டாய் என்று அன்பால் உருகுகிறார் மாணிக்க வாசகர்.

திருவாசகத்தில் குரு தரிசனம் என்ற பகுதியில் உள்ள பத்து பாடல்களில் இது முதலாவது பாடல் 

அதில் உள்ள சில பாடல்கள் நெஞ்சை உருக்குபவை...பின்னொரு ப்ளாகில் அவற்றை பற்றியும் சிந்திப்போம் 

அவன் அருள் மாணிக்க வாசகரின் வினை மேல் சென்று முளைக்காமல் தடுத்து ஆட்கொண்டது...அந்த திருவருள் உங்களுக்கும் சித்திக்கட்டும் 





இராமாயணம் - இசையினும் இனிய சொல்லாள்


இராமாயணம் - இசையினும் இனிய சொல்லாள் 



இராமாயணம் வெறும் ஒரு கதை சொல்லும் காப்பியம் மட்டும் அல்ல.

அது வழி நெடுக வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல விஷயங்களை தருகிறது

வாழ்கை நெறி, உண்பது, உறங்குவது, (ஆம், எப்படி படுத்து உறங்க வேண்டும் என்று கூட சொல்கிறது ), அரசியல், உளவியல் (psychology ) என்று எத்தனையோ நல்ல விஷயங்களை தருகிறது.

என்ன கொஞ்சம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.


ஒரு பிரச்சனை என்று வந்து விட்டால் அதை எப்படி சரி செய்து விடை காணுவது ?


பிரச்சனையில் சம்பந்தப் பட்டவர்கள் பேசி, விவாதித்து ஒரு நல்ல தீர்வு காணலாம்.

அந்த பிரச்சனை கணவன் மனைவிக்கு இடையே இருக்கலாம், அலுவகலத்தில் அதிகாரிகளுடனோ, அல்லது அங்கு வேலை பார்ப்பவர்களுடனோ இருக்கலாம்.

எங்கு எப்படி பிரச்சனை இருந்தாலும் பேசித்தான் தீர்க்க வேண்டி இருக்கிறது

பொதுவாக பிரச்சனைகளை பேசும் போது  பேச்சு சூடு அடைந்து, இரு தரப்பும் கோபம் அடைந்து, வார்த்தைகள் தடித்து, பிரச்சனை முற்றிப் போய்  விடுகிறது.

 முதலில் இருந்த பிரச்சனை போக, இப்போது பேசிய பேச்சில் வந்து விழுந்த வார்த்தைகளும் சேர்ந்து பிரச்சனையையை இன்னும் பெரிதாக்கி விடுகிறது.


பேச்சில் இனிமை வேண்டும். இனிமையாகப் பேசினால் எந்த பிரச்சனையும் சுமுகமாக தீரும். எதிரில் இருப்பவரின் மனம் அறிந்து பேச வேண்டும். அவர்கள் மனம் புண் படாதபடி பேச வேண்டும்.


கார்காலம் முடிந்து விட்டது சீதையை தேட ஆள் அனுப்புவதாக சொன்ன சுக்ரீவன் பூவியல் நறவம் (தண்ணி அடித்துவிட்டு) ஜாலியாக இருக்கிறான். 

இராமன் கோவித்து இலக்குவனை அனுப்புகிறான். 

கோபத்தோடு இலக்குவன் வருகிறான் 

அவனை எப்படி சமாளிப்பது ? அனுமன் தாரையை அவன் முன் அனுப்புகிறான். 

தாரை பேசுகிறாள். எப்படி பேச வேண்டும் என்பதை அவளிடம் பார்த்து படிக்க வேண்டும். 

"ஐயா, நீ கோபத்தோடு வருவதை பார்த்து வானர சேனைகள் பயந்து இருக்கின்றன. உன் உள்ளத்தில் ஏதோ கோபம் இருக்கிறது ஆனால் என்ன என்று தெரியவில்லை...அது என்ன என்று தயவு செய்து சொல்லு....ஆமா , நீ இராமனை விட்டு எப்போதும் பிரியவே மாட்டியே , எப்படி அவனை விட்டு இங்கு வந்தாய் " என்று கேட்டாள் - இசையினும் இனிய சொல்லாள்.

அவள் பேசியது இசையை விட இனிமையாக இருந்ததாம். அப்படி இனிமையாக பேசினால் யாருக்கு தான் கோவம் தணியாது ?

முதலில் அவனை உயர்த்தி பேசுகிறாள் - உன் கோபத்தை பார்த்து சேனை வீரர்கள் பயந்து போய்  இருக்கிறார்கள் நீ பெரிய ஆள் என்ற அர்த்தம் 

நீ சொல்லாமலேயே கோபப் படுகிறாய் - உன் கோபத்திற்கு காரணம் தெரியவில்லை. 

அப்புறம், நீ இராமனை விட்டு பிரியவே மாட்டியே எப்படி வந்த என்று கேட்பதின் மூலம், அவன் மனதின்  மென்மையான பாகத்தை தொடுகிறாள் இராமனின் பேரை சொன்னவுடன் இலக்குவன் மனம் உருகுகிறது. அது மட்டும் அல்ல, நீ சீக்கிரம் அங்க போ என்ற அர்த்தம் தொனிக்கிறது. 

பாடல் 
  
'வெய்தின் நீ வருதல் நோக்கி, வெருவுறும் சேனை, வீர!

செய்திதான் உணர்கிலாது; திருவுளம் தெரித்தி' என்றாள்;
'ஐய! நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய்;
எய்தியது என்னை?' என்றாள், இசையினும் இனிய சொல்லாள். 


பொருள் 



Tuesday, February 5, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - நான் யார் உன்னைப் புகழ


இராமானுஜர் நூற்றந்தாதி - நான் யார் உன்னைப் புகழ 

உணர்ச்சி வெள்ளம் பொங்கி வரும்போது வார்த்தைகள் பயனற்று போய்  விடும். 

எவ்வளவோ பேச வேண்டும் என்று நாள் கணக்காக திட்டமிட்டு போவான்...காதலியை பார்த்தவுடன் வார்த்தை ஒன்றும் வெளியே வராது ... ஏன் ? உணர்ச்சி மிகுதியால் வார்த்தை தடுமாறும், நாக்கு குழறும்...

கண்ணோடு கண்ணினை நோக்கின் வாய் சொற்கள் என்ன பயனும் இல என்பார் வள்ளுவர். சொற்களால் ஒரு பயனும் இல்லை. 

இராமானுஜரை புகழ்ந்து பாட வேண்டும் என்று நினைக்கிறார். என்ன பாடினாலும் திருப்தி இல்லை. 

மனதில் உள்ள அத்தனை பக்தியும், அன்பும் பாடலில் வர வில்லை. மத்தவங்க எல்லாம் எவ்வளவு அழகாகப் பாடி இருக்கிறார்கள் . .... என்    பாட்டும் இருக்கிறதே ...கத்து குட்டி எழுதின பாட்டு மாதிரி என்று தன்  பாடல்களைப் பற்றி தானே நொந்து கொள்கிறார்...

வார்த்தைகளுக்கு எட்டாத அன்பு, மரியாதை பக்தி ....

பாடல் 


இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால்
மயல்கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்
முயல்கின் றனன் அவன் றன்பெருங் கீர்த்தி மொழிந்திடவே


பொருள் 

Monday, February 4, 2013

இராமாயணம் - இராம நாமம்


இராமாயணம் - இராம நாமம் 

அனுமன் இலங்கயையை நோக்கி செல்கிறான். நடுவில் பல இடையூறுகள் வருகின்றன. ஒவ்வொன்றாய் வென்று மேலே செல்கிறான். 

இப்படியே பல இடையூறுகள் வந்த கொண்டே இருந்தால் என்று போய்  இலங்கையை அடைவது என்றுஒரு வினாடி கவலைப் பட்டான். 

மறு நிமிடமே கவலை தீர்ந்தது....விடை கிடைத்து விட்டது. நம்மிடம் தான் இராம நாமம் இருக்கிறதே என்று நினைத்தான், அத்தனை கவலையும் போய்  விட்டது. 

பாடல் 


ஊறு, கடிது ஊறுவன; ஊறு இல் அறம் உன்னா,
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர,
ஏறும் வகை எங்கு உள்ளது? "இராம!" என எல்லாம்
மாறும்; அதின் மாறு பிறிது இல்' என வலித்தான்.


பொருள் 

ஆத்திச் சூடி - மீதூண் விரும்பேல்

ஆத்திச் சூடி - மீதூண் விரும்பேல் 

உணவு. 

உயிர் வாழ மிக இன்றியமையாதது உணவு.

அதுவே அளவுக்கு மீறிப் போனால் உடலுக்குத் தீங்கை விளைவிக்கும். அனைத்து விதமான உடல் உபாதைகளுக்கும் அதுவே காரணம் ஆகி விடும் 

மருந்தைப் பற்றி எழுத வந்த வள்ளுவர் பத்து குறளிலும்  உணவைப் பற்றியே சொல்கிறார் 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்.

அருந்தியது (உண்டது) அற்றது (நன்றாக செரிமானம்) போற்றி (அறிந்து) உண்டால் மருந்தே வேண்டாம் என்கிறார் வள்ளுவர். 

ஔவையார்  இப்படி ஏழு வார்த்தைகள் எல்லாம் உபயோகப் படுத்த மாட்டார். இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று வார்த்தைகள்தான் உபயோகப் படுத்துவார் 

மீதூண் விரும்பேல் 

அதிகமான உணவை விரும்பாதே. 

சில பேருக்கு உணவை கண்ட மாத்திரத்திலேயே எச்சில் ஊறும். அளவுக்கு அதிகமாக உண்டு விட்டு " மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டேன்...மூச்சு வாங்குது " என்று இடுப்பு பட்டையை (belt ) கொஞ்சம் தளர்த்தி விட்டுக் கொள்வார்கள். 

சாப்பிடும் போது எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வராது. 

சாம்பார், ரசம் இரசம் , காரக் குழம்பு, மோர் குழம்பு, தயிர், பழம், பீடா, ஐஸ் கிரீம், என்று ஒவ்வொன்றாக உள்ளே போய்  கொண்டே இருக்கும்.

எப்படி அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை நிறுத்துவது ? 

மீதூண் விரும்பேல்.

முதலில் அதிகமாக சாபிடுவதற்கு விரும்புவதை நிறுத்த வேண்டும்.

அந்த உணவு விடுதியில் (hotel ) அது நல்லா இருக்கும், இந்த உணவு விடுதியில் இது நல்லா இருக்கும், என்று பட்டியல் போட்டுக் கொண்டு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலைய கூடாது. 

அளவு இல்லாத (unlimited ) உணவை சாப்பிடக் கூடாது. அளவு சாப்பாடு நலம் பயக்கும் 

நொறுக்குத் தீனி, கண்ட நேரத்தில் உண்பது போன்றவற்றை தவிர்ப்பது நலம். 

உணவின் மேல் விருப்பம் குறைய வேண்டும். நாம் எதை விரும்புகிறோமோ அதை அடிக்கடி செய்வோம், அதே நினைவாக இருப்போம், அதை செய்வதில் சந்தோஷம் அடைவோம் 

விருப்பம் குறைந்தால் , அளவு குறையும்.

அளவு குறைந்தால் ஆரோக்கியம் நிறையும் 

மீதூண் விரும்பேல்...

இராமாயணம் - எல்லாம் விளையாட்டு


இராமாயணம் - எல்லாம் விளையாட்டு 


நாம் எதற்காக வேலைக்குப் போகிறோம் ?

பணம் சம்பாதிக்க, புகழுக்காக, மன திருப்திக்காக, சேவை செய்ய என்று பல காரணங்கள் இருக்கலாம்.

கடவுள் ஏன் இந்த உலகையும், நம்மையும் படைத்தார் ?

அவர் இந்த வேலையயை செய்ய வேண்டிய காரணம் என்ன ? சும்மா இருக்க வேண்டியது தானே ? இதை செய்து அவருக்கு ஆக வேண்டியது என்ன ? பணமா ? புகழா ? நல்ல பெயரா ? ஒண்ணும்  இல்லை.

பின்ன எதுக்கு படைத்து, காத்து, அழித்து ... இவர் இதை எல்லாம் செய்யவில்லை என்றால் யாரவது கேட்கப் போகிறார்களா ? இல்லையே ? 

எதுக்காக வீணா இந்த வேலைய இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யணும் ?

கம்பன் சொல்கிறான் - அது அவனுக்கு விளையாட்டு . வட  மொழியில் லீலை என்று சொல்வார்கள். 

இந்த உலகமே ஒரு விளையாட்டு தான். இறைவனின் விளையாட்டு. குழந்தை எப்படி பொம்மைகளுடன் விளையாடுமோ அப்படி அவன் விளையாடுகிறான் 

குழந்தை ஏன் விளையாடுகிறது என்று யாராவது கேட்பார்களா ? அது பாட்டுக்கு விளையாடும். விளையாடுவது விளையாட்டுக்கவே. வேறு ஒரு குறிக்கோளும் கிடையாது 

விளையாட்டை யாராவது ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வார்களா ? விளையாட்டு என்பதே ஒரு மகிழ்ச்சிக்காக. 

விளையாட்டுக்ச் சொன்னேன் அதை போய்  இப்படி சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளலாமா என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா. ? 

இந்த உலகமே ஒரு விளையாட்டு. நீங்களும் நானும், நம்மை சுற்றி நடப்பது எல்லாமும் இறைவனின் விளையாட்டு. 

இதை போய்  ஏன் இவ்வளவு சீரியஸ் ஆக எடுத்துக் கொள்கிறீர்கள். 

இந்த விளையாட்டில் சில சமயம் நீங்கள் விளையாடுகிறீர்கள், சில சமயம் நடுவராக இருக்கிறீர்கள் சில சமயம் பந்து பொருக்கி போடுகிறீர்கள் சில சமயம் பார்வையாளராக இருக்கிறீர்கள்....எல்லாம் விளையாட்டு தான்....

எப்போதும்  சிரித்துக் கொண்டே இருங்கள், சந்தோஷமாக இருங்கள்...

இந்த வாழ்கையே விளையாட்டு தான்.....

பாடல் 


உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.


பொருள் 

உலகம் யாவையும் = இந்த உலகங்கள் அனைத்தையும். உங்களையும் என்னையும் சேர்த்துதான் 

தாம் = அவரே 

உளவாக்கலும் = உண்டாகியும் 
.
நிலைபெறுத்தலும் = அவற்றை நிலை பெறுமாறு செய்தும் 

நீக்கலும் = பின் அவற்றை நீக்கியும் 


 நீங்கலா = எப்போதும் இவற்றை விட்டு நீங்காமல் 

அலகு இலா = அலகு  என்றால் அளவு, ஒரு யூனிட். அப்படி எதுவும் ஒரு அளவு கிடையாது. அவர் பாட்டுக்கு விளையாடுவார் 

விளையாட்டு உடையார் =  விளையாட்டு உடையவர். காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி என்பார் மணிவாசகர். முழுப் பாடலும் கீழே. 

 அவர் = அவர் 

தலைவர் = தலைவர் 

அன்னவர்க்கே சரண் நாங்களே = அவரிடம் நாங்கள் சரண் அடைகிறோம். 


((ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.))

Sunday, February 3, 2013

ஆத்திச் சூடி - உடையது விளம்பேல்


ஆத்திச் சூடி - உடையது விளம்பேல் 


வாழ்க்கை மாறிக்கொண்டே இருப்பது 

இன்று நண்பர்களாய் இருப்பவர்கள் நாளை வேறு மாதிரி மாறலாம்

இன்றைய உறவு   நாளைய   பகையாக மாறலாம்.

யார் யாரோடு எப்போது சேருவார்கள் என்று தெரியாது. 

நபர்கள் என்று நாம் எதையாவது சொல்லப் போக, நாளை அவர்கள் வேறு மாதிரி மாறிவிட்டால் கஷ்டம் தான். 

நம் நண்பர்கள் நம் எதிரிகளோடு கை கோர்த்து கொள்ளலாம். 

சில பேர் வீடு வேலைக்காரியிடம், வண்டி ஓட்டும் டிரைவரிடம், கடை காரரிடம் என்று எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லி வம்பில் மாட்டிக் கொள்வார்கள் 

பெண்ணுக்கோ பையனுக்கோ வரன் பார்த்தால் நிச்சயம் ஆகும் வரை வெளியே சொல்ல மாட்டார்கள். நடுவில் யாரவது புகுந்து எதையாவது சொல்லி சம்பந்தத்தை கலைத்து விடலாம் எதுக்கு வம்பு. 



பொதுவாக யாரிடமும் அளவுக்கு அதிகமாக உள்ளதை சொல்வதை தவிர்ப்பது நலம் பயக்கும் 

உடையது விளம்பேல் என்றாள்  ஔவை  பாட்டி 

உன்னிடம் உள்ளதை பிறரிடம் சொல்லாதே....

அது சொத்து பற்றிய விவரமாய் இருக்கலாம், நட்பு, பகை, காதல் பற்றிய உறவை இருக்கலாம், நோய் பற்றிய சொந்த விஷயமாக இருக்காலாம். 

தோழனோடாயினும்  ஏழ்மை பேசேல் 

சொல்லாத சொல்லுக்கு நாம் அதிகாரி 
சொல்லிய சொல் நமக்கு அதிகாரி 

யோசித்துப் பேசுங்கள். குறைவாகப் பேசுங்கள். யாரிடம் எதை சொல்கிறோம் என்று அறிந்து பேசுங்கள்.


இராமாயணம் - ஜடாயு மேல் எறிந்த வேல் - 2

இராமாயணம் - ஜடாயு மேல் எறிந்த வேல் 


இராவணனுக்கும் ஜடாயுவுக்கும் பெரிய போர் நடந்தது. ஜடாயுவுக்குத் தெரியும் தான் தோற்று விடுவோம் என்று.

இராவாணன் யார் ?

முக்கோடி வாழ் நாள், முயன்றுடைய பெருந்தவம், எக்கொடி யாராலும் வெல்லப்  படாய்  என்று ஈசன்  கொடுத்த வரம், திக்கு அனைத்தும் அடக்கிய புய வலி, நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் படைத்த நாக்கு....

கூற்றையும் ஆடல் கொண்டவன் ...

இருந்தும் ஜடாயு போரிட்டான் ? ஏன் ?

அநீதியை எதிர்த்து போரிட வேண்டும் என்று  உணர்த்த.

அந்தப் போரினை கம்பர் காட்டும் அழேகே அழகு.

ஆங்கில இலக்கியத்தில் பெரிய ஆளாக பேசப் படும் ஷேக்ஸ்பியர் கூட போரை வர்ணிப்பதில் அவ்வளவு திறமையானவர் அல்ல என்று சொல்வார்கள். அவருடைய நாடகத்தில் போர் வர்ணனை அவ்வளவு சிறப்பானதாக இருக்காது

இராவண ஜடாயு யுத்தம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்....

அதில் இருந்து ஒரு அருமையான பாடல்...கம்பனின் உவமை காட்டும் அழகுக்கு ஒரு சின்ன உதாரணம் ...

ஜடாயுவின் மேல் இராவணன் வேலை எறிந்தான்
பொருள் இல்லாமல்
அந்த வேல் ஜடாயு கிட்ட போனது, நின்றது, திரும்பி விட்டது...

அதற்க்கு கம்பன் மூன்று உதாரணம் சொல்கிறான் ...

முதல் உதாரணம்

பொருள் இல்லாமல் ஒரு விலை மாதின் வீட்டிற்கு சென்றவன் போல் நின்று திரும்பியது அந்த வேல்....

என்ன உதாரணம்.....

உள்ளே போக ஆசை தான்...ஆனால் கையில் காசு இல்லை...உள்ளே விட மாட்டாள்...அப்படியே வாசலில் நிற்கிறான்... அவள் வெளியே வந்தால் பார்த்து விட்டு செல்லலாம் என்று. அவளோ, அவன் போக விட்டு வரலாம் என்று இருக்கிறாள். சோர்ந்து ,  அவன் திரும்பி போகிறான்

அது போல் அந்த வேல் திரும்பி போனது...ஜடாயுவின் உடலின் உள்ளே போக முடியாமல் சோர்ந்து திரும்பியது....



பொன் நோக்கியர்தம் புலன் 
     நோக்கிய புன்கணோரும், 
இன் நோக்கியர் இல் வழி 
     எய்திய நல் விருந்தும், 
தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் 
     தம்மைச் சார்ந்த 
மென் நோக்கியர் நோக்கமும், ஆம் 
     என மீண்டது, அவ்வேல்.



பொன்னை (பொருளை ) நோக்கிய விலை மாதரின் அங்கங்களை நோக்க வந்த கவலை தோய்ந்த கண்களை உடையவர் திரும்பி போவது போல ......


இன் நோக்கியர் இல் வழி 
     எய்திய நல் விருந்தும், 


ஒரு வீட்டிற்கு விருந்துக்குப் போனவன் அந்த வீட்டில் நல்ல உபசரிப்பு இல்லை என்றால் எப்படி சட்டென்று திரும்பி விடுவானோ அப்படி அந்த வேல் சட்டென்று திரும்பியது.

விருந்தினர்களை உபசரிப்பது என்பது தமிழ் கலாசாரம் என்ற பொருள் உள்ளே உள்ளது.

முகம் மாறி நோக்க வாடும் விருந்து என்பது வள்ளுவர் வாக்கு.

மோப்பக் குழையும்  அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்பார் வள்ளுவர்.

அப்படி உபசரிப்பு இல்லாத இடத்திற்கு வந்த விருந்தினன் எப்படி முகம் வாடி , மனம் வாடி திரும்பிப் போவானோ அப்படி அந்த வேல் திரும்பிப் போனது.

இன் நோக்கியர் = இனிமையான முகத்தை நோக்கி வந்த
இல் வழி = இல்லாத இடத்தில்
எய்திய நல்   விருந்தும் = சென்ற நல்ல விருந்தினனை போல

இப்படி பட்ட உயர்ந்த ஜடாயுவை நாம் கொல்ல  வந்தோமே என்று வெட்கி, வருந்தி திரும்பியது.





தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் 
     தம்மைச் சார்ந்த 
மென் நோக்கியர் நோக்கமும்



அடுத்த உதாரணம் மற்றவற்றினும் சிறந்தது.



தன் நோக்கிய = தன்னை நோக்கி அறிந்த 
நெஞ்சுடை யோகியர்  = மனம் உள்ள யோகியர் 
தம்மைச் சார்ந்த = அவர்களை சென்று பார்த்த  
மென் நோக்கியர் நோக்கமும் = மென்மையான பெண்களின் பார்வை போல 

துறவிகளின் மேல் சென்ற குலப் பெண்களின் கண்கள் எப்படி சட்டென்று திரும்புமோ அப்படி அந்த வேல் திரும்பியது. 

என்ன உள்  பொருள் ? பெண்ணின் கண்கள் ஆணை எளிதில் சபலப் பட வைக்கும். முனிவர்களையும் அது மயக்கி விடும் எனவே பெண்கள் மற்ற ஆண்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்க மாட்டார்கள்.  அதிலும் குறிப்பாக துறவிகளை, அவர்கள் பார்த்தாலும் ஒரு கணத்தில் அந்த பார்வையை வேறு  இடத்திற்கு மாற்றி விடுவார்கள். அந்த மாதிரி அந்த வேல்  சட்டென்று திரும்பிற்று. 

உவமைக்கு கம்பனை மிஞ்ச ஆள் இல்லை. 





Saturday, February 2, 2013

இராமாயணம் - ஜடாயு மேல் எறிந்த வேல்


இராமாயணம் - ஜடாயு மேல் எறிந்த வேல் 


இராவணனுக்கும் ஜடாயுவுக்கும் பெரிய போர் நடந்தது. ஜடாயுவுக்குத் தெரியும் தான் தோற்று விடுவோம் என்று.

இராவாணன் யார் ?

முக்கோடி வாழ் நாள், முயன்றுடைய பெருந்தவம், எக்கொடி யாராலும் வெல்லப்  படாய்  என்று ஈசன்  கொடுத்த வரம், திக்கு அனைத்தும் அடக்கிய புய வலி, நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் படைத்த நாக்கு....

கூற்றையும் ஆடல் கொண்டவன் ...

இருந்தும் ஜடாயு போரிட்டான் ? ஏன் ?

அநீதியை எதிர்த்து போரிட வேண்டும் என்று  உணர்த்த.

அந்தப் போரினை கம்பர் காட்டும் அழேகே அழகு.

ஆங்கில இலக்கியத்தில் பெரிய ஆளாக பேசப் படும் ஷேக்ஸ்பியர் கூட போரை வர்ணிப்பதில் அவ்வளவு திறமையானவர் அல்ல என்று சொல்வார்கள். அவருடைய நாடகத்தில் போர் வர்ணனை அவ்வளவு சிறப்பானதாக இருக்காது

இராவண ஜடாயு யுத்தம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்....

அதில் இருந்து ஒரு அருமையான பாடல்...கம்பனின் உவமை காட்டும் அழகுக்கு ஒரு சின்ன உதாரணம் ...

ஜடாயுவின் மேல் இராவணன் வேலை எறிந்தான்
பொருள் இல்லாமல்
அந்த வேல் ஜடாயு கிட்ட போனது, நின்றது, திரும்பி விட்டது...

அதற்க்கு கம்பன் மூன்று உதாரணம் சொல்கிறான் ...

முதல் உதாரணம்

பொருள் இல்லாமல் ஒரு விலை மாதின் வீட்டிற்கு சென்றவன் போல் நின்று திரும்பியது அந்த வேல்....

என்ன உதாரணம்.....

உள்ளே போக ஆசை தான்...ஆனால் கையில் காசு இல்லை...உள்ளே விட மாட்டாள்...அப்படியே வாசலில் நிற்கிறான்... அவள் வெளியே வந்தால் பார்த்து விட்டு செல்லலாம் என்று. அவளோ, அவன் போக விட்டு வரலாம் என்று இருக்கிறாள். சோர்ந்து ,  அவன் திரும்பி போகிறான்

அது போல் அந்த வேல் திரும்பி போனது...ஜடாயுவின் உடலின் உள்ளே போக முடியாமல் சோர்ந்து திரும்பியது....


பொன் நோக்கியர்தம் புலன் நோக்கிய புன்கணோரும்


பொன்னை (பொருளை ) நோக்கிய விலை மாதரின் அங்கங்களை நோக்க வந்த கவலை தோய்ந்த கண்களை உடையவர் திரும்பி போவது போல ......

இது ஒரு உதாரணம்...

இன்னும் இரண்டு உதாரணம் தருகிறான் கம்பன்...இதை தூக்கி சாப்பிடும் விதத்தில்...

அது என்ன என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம் ....










Friday, February 1, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - இறைவன் இருக்கும் இடம்


இராமானுஜர் நூற்றந்தாதி -  இறைவன் இருக்கும் இடம் 


இறைவன் எங்கே இருப்பான் ? இதற்கு மட்டும் விடை கிடைத்துவிட்டால் எவ்வளவு நல்லா இருக்கும் ?

விடை கிடைத்து விட்டது என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி யோசிப்போம்.

இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் . அவன் எங்கோ ஒரு இடத்தில் இருக்க வேண்டும்.

 வைகுண்டாமோ, கைலாசமோ, ஏதோ ஒரு இடத்தில் இருக்க வேண்டும் அல்லவா ?

சரி, அங்க தனியா உட்கார்ந்து கொண்டு அவன் என்ன செய்வான் ? போர் அடிக்காதா அவனுக்கு ?

இங்க அவனுடைய பக்தர்கள் அவனுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இங்கு வந்தால் அவனுக்கும் சந்தோஷம் , அவன் பக்தர்களுக்கும் மகிழ்ச்சி.

இது நமக்குத் தெரிகிறது . அவனுக்கும் தெரியும் தானே ? அப்படினா அவன் எங்கு இருப்பான் ?

அடியார்கள் மத்தியில் அவன் இருப்பான் அல்லவா ?

நேரே அங்க போனால் அவனைப் பார்த்து விடலாமே ?

அவன் அங்க இருப்பானான்னு உங்களுக்கு சந்தேகம் இருக்கா ? நான் சொன்னா நம்ப மாட்டீங்க...

அபிராமி பட்டர் சொன்னா நம்புவீங்களா ?


பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்  என்பார் அபிராமி பட்டர்.

அடியார்கள் பின்னாடியே போனேன் என்கிறார் பட்டர்.



போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ... என்பார் நாவுக்கரசர்.

மலரோடு நீர் சுமந்து போவார்கள், அவர்கள் பின் நான் செல்லும் சுவடே தெரியாமல் நானும் செல்வேன் என்கிறார் நாவுக்கரசர்.

ஔவையார் சொன்னா ?


பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே


மாணிக்க வாசகர் சொன்னா ?

உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவு ளிருக்கும்அரு
ளைப் புரியாய் பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே. 



சுந்தர மூர்த்தி நாயனார், திருத்தொண்டர் தொகையில்,  சொல்கிறார்

தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று


வள்ளுவர் சொன்னால் கேட்பீங்களா ?

பற்றுக பற்றற்றான் பற்றினை என்று பற்றினை துறந்த துறவிகளின் , அடியார்களின் பற்றை பற்றச் சொல்கிறார் வள்ளுவர் ....


திருவரங்கத்து அமுதனார் இராமானுஜர் என்ற அடியாரை பற்றிக் கொண்டார்


அமுதனார் கூறுகிறார், இராமானுஜர் எனக்கு கிடைத்த செல்வம்.

எனக்குத் தெரியும், ஆண்டவனை விட்டு விட்டு இப்படி இந்த இராமானுஜர் பின்னாலேயே நான் சென்று அவரே கதி என்று கிடப்பதால், அவரைப் பற்றிய  இந்த அந்தாதியை கூட இந்த உலகத்தவர்கள் குறை சொல்லக் கூடும்.

அந்த குறை கூட எனக்கு புகழ் தான், சந்தோஷம் தான்...

ஏன் என்றால், குறை எல்லாம் ஆண்டவனை விடுத்து இராமானுஜரை புகழ்வதை பற்றித்தான் ...இது ஒரு குறையா ? இதை விட எனக்கு வேறு என்ன பாராட்டு இருக்க முடியும் ....உண்மையான பக்தர்களுக்கு என் பாடல் புரியும்..அவர்கள் இதில் குற்றம் காண மாட்டார்கள்....

பாடல்

எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.

பொருள்

எனக்குற்ற செல்வம் = எனக்கு உற்ற செல்வம் = எனக்கு கிடைத்த செல்வம்

இராமா னுசனென்று = இராமானுசன் என்று

இசையகில்லா = என்னோடு இசையாத, ஒத்துப் போகாத

மனக்குற்ற மாந்தர் = மனதில் குற்றம் உள்ள மாந்தர்கள்

பழிக்கில் = பழி சொன்னால்

புகழ் = அதுவும் எனக்கு புகழ் தான்

அவன் = இராமானுசன்

மன்னியசீர் = நிலைத்த பெருமை

தனக்குற்ற அன்பர் = அவனுடைய அன்பர்கள்

அவந்திரு நாமங்கள் = அவனுடைய (இராமானுசனின்) நாமங்கள்

சாற்றுமென் = சாற்றும் என்  = சொல்லும் என்னுடைய

பா இனக்குற்றம் = பாவின் (பாடலின் ) குற்றம்

 காணகில் லார் = காண மாட்டார்கள்
 பத்தி ஏய்ந்த = பக்தி நிறைந்த, ஏறிய

இயல்விதென்றே = இயல்பு இது என்றே.

Thursday, January 31, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - நான் பெற்ற செல்வம்



இராமானுஜர் நூற்றந்தாதி -  நான் பெற்ற செல்வம் 


இறைவன் பெரியவனா அடியார்கள் பெரியவர்களா என்றால் எல்லா மதமும் அடியவர்கள் தான் என்று கூறும் 


பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்  என்பார் அபிராமி பட்டர்.

போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ... என்பார் நாவுக்கரசர். மலரோடு நீர் சுமந்து போவார்கள், அவர்கள் பின் நான் செல்லும் சுவடே தெரியாமல் நானும் செல்வேன் என்கிறார் நாவுக்கரசர். 

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே

மற்ற மதங்களை காட்டிலும் வைணவம் ஒரு படி மேலே. அடியவர்களையும் ஆசாரியர்களையும் அது மிகவும் கொண்டாடுகிறது. 

அமுதனார் கூறுகிறார், இராமானுஜர் எனக்கு கிடைத்த செல்வம். எனக்குத் தெரியும், ஆண்டவனை விட்டு விட்டு இப்படி இந்த இராமானுஜர் பின்னாலேயே நான் சென்று அவரே கதி என்று கிடப்பதால், அவரைப் பற்றிய  இந்த அந்தாதியை கூட இந்த உலகத்தவர்கள் குறை சொல்லக் கூடும். அந்த குறை கூட எனக்கு புகழ் தான், சந்தோஷம் தான்...ஏன் என்றால் குறை எல்லாம் ஆண்டவனை விடுத்து இராமானுஜரை புகழ்வதை பற்றித்தான் ...இது ஒரு குறையா ? இதை விட எனக்கு வேறு என்ன பாராட்டு இருக்க முடியும் ....உண்மையான பக்தர்களுக்கு என் பாடல் புரியும்..அவர்கள் இதில் குற்றம் காண மாட்டார்கள்....
பாடல் 

எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.

பொருள் 

Wednesday, January 30, 2013

இராமாயணம் - இராமாயாணத்தில் பிழை செய்தவர்கள்


இராமாயணம் - இராமாயாணத்தில் பிழை செய்தவர்கள்


நண்பர்களின் பிள்ளைகளிடம் நாம் எவ்வளவு தூரம் உரிமை எதுத்துக் கொள்ள முடியும் ?

அதிகமாக இருமை எடுத்துக் கொண்டால் முதலில் நண்பர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா ? அடுத்து அவர்களின் பிள்ளைகள் ஏற்றுக் கொள்வார்களா ?

நண்பர்களின் பிள்ளைகளை நம் பிள்ளைகள் போல் நினைத்து அவர்களை திருத்தவோ, பாராட்டவோ செய்வது என்றால் நண்பர்களுக்கு இடையே முதலில் அன்யோன்யம் வேண்டும். 

தசரதனின் நண்பன் ஜடாயு. 

சீதைக்காக, தசரதனின் மருமகளுக்காக சண்டையிட்டு உயிர் விடும் தருணத்தில் இருக்கிறான். 

இராமனும் லக்ஷ்மணனும் ஜடாயுவைப் பார்க்கிறார்கள். ஜடாயுவை தாக்கிய இராவணன் மீது இராமனுக்கு கோவம் வருகிறது. 

அப்போது ஜடாயு சொல்லுவான்....

"...ஏண்டா இராமா, ஒரு பெண்ணை தனியாக காட்டில் வைத்து விட்டு மானைப் பிடிக்கிறேன் என்று இரண்டு  பேரும் கிளம்பி விட்டீர்கள்...அப்படி ஒரு பெண்ணை தனியாக விட்டு விட்டுச் செல்வது எவ்வளவு பெரிய பிழை ? தப்பு எல்லாம் உங்க பேர்ல ... நீங்க என்னடாவென்றால் மற்றவர்கள் மேல் பிழை காண்கிறீர்கள் .."

என்று அவர்கள் மேல் உரிமையுடன் கோவித்துக் கொள்கிறான்.

இராமன் பிழை செய்தான் என்று சொல்லவும் ஒரு உரிமை வேண்டுமே ?

பாடல் 


வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக,
கொம்பு இழை மானின் பின் போய், குலப் பழி கூட்டிக் கொண்டீர்;
அம்பு இழை வரி வில் செங் கை ஐயன்மீர்! ஆயும் காலை,
உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ?

பொருள் 

திருவாசகம் - சாமாறே விரைகின்றேன்


திருவாசகம் - சாமாறே விரைகின்றேன்  


நாம் பிறந்தது முதல் இறப்பது வரை நடப்பதை எல்லாம் ஒரு மூவி கேமராவில் பதிவு செய்து அதை fast forward இல் ஒரு பதினைந்து நிமிடத்திற்கு வரும் படி எடிட் பண்ணி போட்டு பார்த்தால் எப்படி இருக்கும்? 

ஏதோ பிறந்த குழந்தை கிடு கிடு என்று வளர்ந்து, அங்க இங்க ஓடி கடைசியில் சுடுகாட்டில் குழிக்குள் செல்வது போல இருக்கும். 

இன்னும் கொஞ்சம் fast forward பண்ணினால் பிறந்தவுடன் நேரே ஓடிப் போய் இடு காட்டு குழிக்குள் இறங்குவது போல இருக்கும்.

மாணிக்க வாசகர் இந்த உலக வாழ்க்கையை சற்று தள்ளி நின்று பார்க்கிறார். 

எதுக்கு எந்த ஓட்டம் ? 

இடு காட்டுக்கு போக ஏன் இத்தனை பரபரப்பு ?

கருவறை தொடங்கி கல்லறை வரை ஒரே ஓட்டம் தான். "சாமாறே விரைகின்றேன்" என்றார். சாவதற்காக இவ்வளவு விரைவாக சென்று கொண்டு இருக்கின்றேன் என்று தன்னை சொல்லிக் கொள்கிறார்.
 
 
இந்த இடைப்பட்ட நேரத்தில் இறைவனை பற்றி சிந்திக்காமல் வாழ்க்கையை வீணாக்கி கொண்டு இருக்கிறோமே என்று வருத்தப் படுகிறார்...
 
ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன்
பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர்
கோமான்நின் திருக்கோயில் தூகேன்மெழுகேன் கூத்தாடேன்
சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே.

 
பொருள் 

புறப் பொருள் வெண்பா மாலை - பெண்ணின் காதல் படிகள்


புறப் பொருள் வெண்பா மாலை - பெண்ணின் காதல் படிகள் 


காதல் பெண்ணையும் விடுவது இல்லை.

பெண்ணின் காதல் எப்படி எல்லாம் உருப்பெறுகிறது என்று பார்ப்போம்.

பாடல்

காண்டல் , நயத்தல் , உட்கோள் , மெலிதல்,
மெலிவொடு வைகல் , காண்டல் வலித்தல்,
பகல் முனிவு உரைத்தல் , இரவு நீடு பருவரல்,
கனவின் அரற்றல் , நெஞ்சொடு மெலிதல்,
பெண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும்.

பொருள்


Tuesday, January 29, 2013

புறப்பொருள் வெண்பா மாலை - ஆணின் காதல் படிகள்


புறப்பொருள் வெண்பா மாலை - ஆணின் காதல் படிகள் 

அந்த காலத்தில் (இப்ப மட்டும் என்ன வாழுகிறதாம்) ஒரு காதலன் அவனுடைய காதலியின் மேல் கொண்ட காதல் எப்படி படிப் படியாக வளருகிறது என்று காட்டுகிறது புறப் பொருள் வெண்பா மாலை. 

முதலில் பாடல்...பின்னால் பொருளை பார்ப்போம் 

காட்சி , ஐயம் , துணிவே, உட்கோள்,
பயந்தோர்ப் பழிச்சல் , நலம் பாராட்டல்,
நயப்பு உற்று இரங்கல் , புணரா இரக்கம் ,
வெளிப்பட இரத்தல் ,என இவ் ஒன்பதும்
ஆண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும்.

பொருள் 

நளவெண்பா - மை புகுந்த கண்ணீர்


நளவெண்பா - மை புகுந்த கண்ணீர் 


நளனும் தமயந்தியும் காட்டு வழி செல்கின்றார்கள். நாடிழந்து, செல்வம் எல்லாம் இழந்து செல்கின்றார்கள். 

இரவு வந்து விட்டது. இருவரும் ஒரு பாழடைந்த மண்டபத்தில் தூங்குகிறார்கள். 

தூக்கம் வரவில்லை. முதலில் நளன் எழுந்திரிக்கிறான். தமயந்தி உறங்குவது போல் பாவனை செய்கிறாள். நளன் அவளைப் பார்த்து வருத்தம் அடைகிறான். பின் அவன் படுத்துக் கொள்கிறான். தமயந்தி எழுதிரிக்கிறாள். நளன் உறங்குவததைப் பார்க்கிறாள். 

எவ்வளவு பெரிய சக்ரவர்த்தி. எப்படி அம்ச துளிகா மஞ்சத்தில் படுத்து உறங்க வேண்டியவர்...இப்படி வெறும் தரையில் படுத்து உறங்குகிறாரே என்று வருந்துகிறாள். ...அவர் தலைக்கு வைத்து படுக்க என் முந்தானை கூட இல்லை என்று கவலை பட்டு தன் கையையை அவனின் தலைக்கு  கீழே வைக்கிறாள்...கொஞ்ச நேரத்தில் அதுவும் அவனுக்கு சுகமாய் இல்லை என்று உணர்ந்து அவன் தலையயை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொள்கிறாள்...அவனின் துன்பத்தைப் பார்த்து அவள் கண்ணில் நீர் வழிகிறது....

தன் துன்பத்தைக் கூட பார்க்காமல், அவனின் துன்பத்தை கண்டு அவள் கவலைப் படுகிறாள்....

மனதை உருக்கும் புகழேந்தியின் பாடல் ....

முன்றில்தனில் மேற்படுக்க முன்தா னையுமின்றி
இன்று துயில இறைவனுக்கே - என்றனது
கைபுகுந்த தென்னுடைய கால்புகுந்த தென்றழுதாள்
மைபுகுந்த கண்ணீர் வர.

பொருள் 

திருமந்திரம் - உடம்பைத் தழுவி



திருமந்திரம் - உடம்பைத் தழுவி 

சைவ மற்றும் வைணவ மதங்களுக்கு மடங்கள் உண்டு. 

ஸ்ரீ மடம், காஞ்சி மடம், திருவாவடுதுறை மடம், திருப்பனந்தாள் மடம் என்று நிறைய மடங்கள் உண்டு. 

இந்த மடங்களில் பொதுவாக சமயம் கோவில் நிர்வாகம், வரவு செலவு, சமய சொற்பொழிவுகள் முதலியவை நடக்கும். 

இங்கு மிகப் பெரிய நூலகங்கள் உண்டு. சமய சம்பந்தப் அறிய நூல்கள் இருக்கும். 

இந்த மடத்திற்குள் ஒரு நாய் புகுந்தால்  என்ன செய்யும்? 

நேரே நூலகத்திற்குப் போகும். படிக்கவா செய்யும்....அங்கும் இங்கும் சுத்தும்...முடிந்தால் இரண்டு குரை குரைக்கும்.

பின் அங்கிருந்து கணக்கு எழுதும் இடத்திற்கு போகும்...அங்கும் ஒரு குரை ..

இப்படி அங்கும் இங்கும் அலைந்த பின் வெளியே போகவும் வழி தெரியாமல்  அலைந்து கொண்டு இருக்கும்.

சிரிப்பாய் இருக்கிறது அல்லவா ? 

நீங்கள் மட்டும் என்ன ஒழுங்கு என்கிறார் திருமூலர், திரு மந்திரத்தில்

பிறக்கிறீர்கள், ஏதோ பள்ளிக் கூடம், கல்லூரி, வேலை, திருமணம், பிள்ளைகள், அது இது என்று திக்கு தெரியாமல் ஓடி கொண்டே இருக்கிறீர்கள்....

சாமாறே விரைகின்றேன் என்பார் மணிவாசகர் 

சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து,
ஏமாறிக் கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை?,
ஆமாறொன் றறியேன்நான் அரவணையாய். அம்மானே,
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.

என்பது பிரபந்தம். 

வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன ? எதற்கு வந்தோம் ? என்ன செய்கிறோம் ? என்று ஒன்றும் தெரியாமல் மடம் புகுந்த நாய் போல் அங்கும் இங்கும் சுத்திக் கொண்டிருக்கிறோம். 

பாடல்:

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய் போல் மயங்குகிறாரே

பொருள் 


உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி = உடம்பும் உடம்பும் ஒன்றை ஒன்று தழுவி 

உடம்பிடை நின்ற உயிரை அறியார் = அந்த உடம்புகளுக்குள் இருக்கும் உயிரை யாரும் அறிய மாட்டார்கள்

உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார் = உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை அறியாதவர்கள்

மடம்புகு நாய் போல் மயங்குகிறாரே = மடத்திற்குள் புகுந்த நாய் போல அங்கும் இங்கும் நோக்கம் போல மயங்கி உழலுவார்கள் 

திருமந்திரம் - உடம்பைத் தழுவி


திருமந்திரம் - உடம்பைத் தழுவி 

சைவ மற்றும் வைணவ மதங்களுக்கு மடங்கள் உண்டு. 

ஸ்ரீ மடம், காஞ்சி மடம், திருவாவடுதுறை மடம், திருப்பனந்தாள் மடம் என்று நிறைய மடங்கள் உண்டு. 

இந்த மடங்களில் பொதுவாக சமயம் கோவில் நிர்வாகம், வரவு செலவு, சமய சொற்பொழிவுகள் முதலியவை நடக்கும். 

இங்கு மிகப் பெரிய நூலகங்கள் உண்டு. சமய சம்பந்தப் அறிய நூல்கள் இருக்கும். 

இந்த மடத்திற்குள் ஒரு நாய் புகுந்தால்  என்ன செய்யும்? 

நேரே நூலகத்திற்குப் போகும். படிக்கவா செய்யும்....அங்கும் இங்கும் சுத்தும்...முடிந்தால் இரண்டு குரை குரைக்கும்.

பின் அங்கிருந்து கணக்கு எழுதும் இடத்திற்கு போகும்...அங்கும் ஒரு குரை ..

இப்படி அங்கும் இங்கும் அலைந்த பின் வெளியே போகவும் வழி தெரியாமல்  அலைந்து கொண்டு இருக்கும்.

சிரிப்பாய் இருக்கிறது அல்லவா ? 

நீங்கள் மட்டும் என்ன ஒழுங்கு என்கிறார் திருமூலர், திரு மந்திரத்தில்

பிறக்கிறீர்கள், ஏதோ பள்ளிக் கூடம், கல்லூரி, வேலை, திருமணம், பிள்ளைகள், அது இது என்று திக்கு தெரியாமல் ஓடி கொண்டே இருக்கிறீர்கள்....

சாமாறே விரைகின்றேன் என்பார் மணிவாசகர் 

சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து,
ஏமாறிக் கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை?,
ஆமாறொன் றறியேன்நான் அரவணையாய். அம்மானே,
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.

என்பது பிரபந்தம். 

வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன ? எதற்கு வந்தோம் ? என்ன செய்கிறோம் ? என்று ஒன்றும் தெரியாமல் மடம் புகுந்த நாய் போல் அங்கும் இங்கும் சுத்திக் கொண்டிருக்கிறோம். 

பாடல்:

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய் போல் மயங்குகிறாரே

பொருள் 

Saturday, January 26, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - எனக்கேதும் சிதைவில்லையே


இராமானுஜர் நூற்றந்தாதி - எனக்கேதும் சிதைவில்லையே 

என்னைப் புவியில் ஒருபொருளாக்கி, மருள்சுரந்த
முன்னைப்பழவினை வேரறுத்து, ஊழிமுதல்வனையே
பன்னப்பணித்த இராமானுசன் பரன்பாதமுமென்
சென்னித் தரிக்கவைத்தான், எனக்கேதும் சிதைவில்லையே,

என்னைப் புவியில் ஒருபொருளாக்கி - பொருளாக்கி என்றால் என்ன ? 

என்ன இந்த பாட்டு ரொம்ப கடினமா இருக்கே. இதற்கு பொருள் என்ன ? என்று நாம் கேட்பது உண்டு அல்லவா ? 

பொருள் தெரிந்தால் பாடல் இனிக்கும். 

இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்ற கேள்விக்கு விடை கண்டால், வாழ்வு இனிக்கும். அர்த்தம் இல்லாமல் எப்படி வாழ்வது ?
 
போற்றி என் வாழ் முதலாகிய பொருளே என்பார் மணிவாசகர். நம் வாழ்வின் முதல் பொருள் இறைவன். அவன் தான் உண்மை, அவன் தான் வாழ்வின் அர்த்தம். 

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

என்பார் அபிராமி பட்டர். 

நம்மையும் ஒரு பொருளாக்கி, நாய் சிவிகை (பல்லக்கு) ஏற்றி வைத்து என்பது திருவாசகம் 

அர்த்தம் இல்லாத என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவர் இராமானுஜர்


அருள் சுரந்த - சுரத்தல் என்றால் தானாகவே வருவது. சுவையான உணவைப் பார்த்தால் உமிழ் நீர் சுரக்கும். குழந்தை அழுவதைப் பார்த்தால், தாய்க்கு பால் சுரக்கும். நம் துன்பத்தைப் பார்த்தால் பெரியவர்களுக்கு நம் மேல் அருள் சுரக்கும். 

அவள் நமக்கு முன்சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய், மழை ஏல் ஓர் எம்பாவாய்!
 
என்பது மணிவாசகம்.நமக்கு அருள்வதில் இறைவனுக்கும் இறைவிக்கும் போட்டி. அவளுக்கு முன்னாடி ஓடி வந்து அவன் அருள்வானாம்.

எனக்கு அருள் சுரந்த இராமானுஜனே.


முன்னைப்பழவினை வேரறுத்து - நம்முடைய பழைய வினைகளின் வேரை அறுத்து. வேரை அறுத்துவிட்டால் மீண்டும் முளைக்காது. 

சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை  முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் என்பார் மாணிக்க வாசகர்.

வினை ஓட விடும் வடி வேல் என்பது அருணகிரி வாக்கு 

எந்தன் முன் வினைகளின் வேரை அறுத்தவன் இராமானுஜன்....

 
ஊழிமுதல்வனையே பன்னப்பணித்த இராமானுசன் = பன்னுதல் என்றால் புகழுதல், ஆராய்ந்து சொல்லுதல். அப்படி ஊழி முதல்வனாகிய திருமாலை பாடப் பணித்த இராமானுசன் 

பாதமுமென் சென்னித் தரிக்கவைத்தான் = அவனுடைய பாதங்களை என் தலையின் மேல் சூடிக் கொள்ள வைத்தான்

பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.

என்பது அபிராமி பட்டர் வாக்கு. 

நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்வேன் என்பார் பட்டர் அபிராமி அந்தாதியில் 

திருவடிகளைப் பற்றி பேசாத பக்தி இலக்கியம் ஒன்று இல்லை. 


எனக்கேதும் சிதைவில்லையே - இராமானுஜன் பாதங்களை என் தலை மேல் சூடிக்கொண்ட பின் எனக்கு ஒரு சிதைவு இல்லை. சிதைவு என்றால் உடைத்தல், பிரிதல். ஒரு பக்கம் பொருள் ஆசை, பொன்னாசை, மண்ணாசை மறு பக்கம் இறைவன், ஆன்மீகம், பக்தி, முக்தி என்று எல்லோரும் பிரிந்து கிடக்கிறோம். இதுவும் வேணும், அதுவும் வேணும். சில சமயம் இதன் பின்னால் போகிறோம், சில சமயம் அதன் பின்னால். ஒன்றில்லும் முழுமை கிடையாது. பிரிந்து, சிதைந்து கிடக்கிறோம். இராமானுஜன் பாதம் பட்டவுடன் சிதைவு ஒன்று இல்லாமல் மனம் ஒருமுகப் பட்டது.




Friday, January 25, 2013

சிலப்பதிகாரம் - பார்த்தால் பசி தீரும்


சிலப்பதிகாரம் - பார்த்தால் பசி தீரும் 


உலகத்தில் உள்ள பொருள்களிலேயே அருமையான பொருள் நீ என்று அமரர்கள் உன்னை தங்கள் கண்களால் கண்டு பசி ஆறுகிறார்கள்.
நீயோ, பசியே இல்லாமல், இந்த உலகம் அனைத்தையும் உண்டாய். 
அப்படியும் பசி தீர வில்லை என்று வெண்ணையை  வேறு களவாடி உண்கிறாய்.
சரி அதுதான் போனால் போகிறது என்று பார்த்தால், உண்ட வெண்ணையும் துளசியாய் மாறித் தோன்றுகிறது...தல சுத்துதுபா உன்னோட....

பாடல் 

அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

பொருள்