Thursday, March 7, 2013

திருக்குறள் - எய்தாப் பழி

திருக்குறள் - எய்தாப் பழி 


ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் 
எய்துவர் எய்தாப் பழி 

ஒழுக்கம் உடையவர்கள் மேன்மை அடைவார்கள். இழுக்கம் உடையவர்கள் பழி அடைவார்கள்.

இது கோனார் தமிழ் உரை.

அவ்வளவுதானா ? இதை சொல்ல வள்ளுவர் வேண்டுமா ?

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை - அப்படினா என்ன ? மேன்மை அடைய ஒழுக்கம் வேண்டும். ஒழுக்கம் இல்லாமல் மேன்மை அடைய முடியாது. கல்வி கூட அந்த படியலில் இல்லை. பணம், செல்வாக்கு, அதிகாரம் கல்வித் தகுதி இது எல்லாம் இருந்தாலும் மேன்மை அடைய முடியாது. ஒழுக்கம் இருந்தால் தான் மேன்மை அடைய முடியும்.

இராவணனிடம் எல்லா நற் பண்புகளும் இருந்தது....கல்வி, கேள்வி ஞானம், தைரியம், வீரம், செல்வம், செல்வாக்கு, ஆரோக்கியம் எல்லாம் இருந்தது. அவன் மேன்மை அடைந்தானா ? இல்லையே . ஏன் ..அவனிடம் ஒழுக்கம் இல்லை.


என்ன இருந்தாலும், ஒழுக்கம் இல்லாவிட்டால் மேன்மை அடையவே முடியாது.

 இழுக்கத்தின்  எய்துவர் எய்தாப் பழி - அது என்ன எய்தாப் பழி ?  ஒருவன் ஒழுக்கம் இல்லாமல் இருந்தால், அவன் செய்யாத பழியை கூட ஏற்க வேண்டி வரும். ஒரு முறை ஒருவன் போலீஸ் ஸ்டேஷன் ரெகார்டில் ஏறி விட்டால்...பின் அந்த ஏரியாவில் என்ன குற்றம் நடந்தாலும் போலீஸ் அவன் மேல சந்தேகப் படும். இவன் செய்திருப்பான், முன்னாடி செய்தவன் தானே என்று அவன் செய்யாத குற்றத்திற்கும் பழி ஏற்க்க வேண்டி வரும். அது எய்தாப் பழி.

இன்னொரு அர்த்தம். தீய ஒழுக்கம் உள்ள ஒருவன் எவ்வளவு தான் நல்லது செய்தாலும் உலகம் அவனை மதிக்காது. படிக்கறது இராமாயணம் , இடிக்கிறது பெருமாள் கோவில் என்று அவனை தூற்றும். எந்த பாவத்தை போக்க இந்த தர்ம காரியங்களை செய்கிறானோ என்று அவன் நல்லது செய்தாலும் உலகம் அவனை பழிக்கும். அது எய்தாப் பழி.


செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெறுவது போல எய்தாப் பழி என்று வள்ளுவர் கூறினார்

திருக்குறளை படிக்க முடிந்ததற்காக நாம் பெருமை பட்டுக் கொள்ளலாம்.

என்ன வருத்தம் என்றால் வருங்கால சந்ததி இதை எல்லாம் அறியாமலே போய் விடும் என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தம் வரத்தான் செய்கிறது.








நந்திக் கலம்பகம் - குடமும் இடையும்


நந்திக் கலம்பகம் - குடமும் இடையும் 


இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும்.

உங்கள் வயது பதினெட்டுக் கீழே இருந்தால், உடனடியாக இந்த ப்ளாகை படிப்பதை நிறுத்தவும்.

அவள் இடை முறிந்து விழுந்து விட்டாள்.

முரியாதா பின்னே ... கையில் இரண்டு குடம், தலையில் ஒரு குடம், பத்தாதற்கு இந்த குடம் வேறு...இத்தனையும் கொண்டு சென்றால் ஈரக் காற்றுக்குத் தாங்காத இடை எப்படி தாங்கும்...முறிஞ்சு போச்சு....

பாடல்


கைக்குடம் இரண்டும், கனக கும்பக் குடமும்
இக்குடமும் கொண்டாள் முறியாதே? - மிக்க புகழ்
வெய்க் காற்றினால் விளங்கும் வீருநந்தி மா கிரியில்
ஈக்காற்றுக்கு ஆற்றா இடை?”


பொருள்



Wednesday, March 6, 2013

திருக்குறள் - ஆக்கமும் கேடும் நினைக்கப்படும்


திருக்குறள் - ஆக்கமும் கேடும் நினைக்கப்படும் 




அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் 
நினைக்கப் படும் 

வள்ளுவர்: கெட்டவனின் ஆக்கம் பெரிதா ? நல்லவனின் கேடு பெரிதா ? என்று நினைக்க வேண்டும்.

நாம்: இது என்னங்க பெரிய விஷயம்....அவன் ரொம்ப நல்லா இருக்கான், இவன் ரொம்ப மோசமா இருக்கான்..இதுல நினைக்க என்ன இருக்கு ?

வள்ளுவர்: கெட்டவன் எவ்வளவு தான் செல்வம் கிடைத்தாலும் திருப்த்தி அடைய மாட்டான். இன்னும் வேணும் இன்னும் வேணும் என்று நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டே இருப்பான். அவனுக்கு கிடைத்த ஆக்கத்தை கட்டி காக்க படாத பாடு படுவான். அந்த ஆக்கம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

நாம்: சரி, அது சரினே வச்சுக்குவோம் ... நல்லவனுக்கு வரும் கேடு எப்படி நல்லதா இருக்க முடியும்....

வள்ளுவர்: நாடிழந்து காட்டுக்குப் போவது நல்லதா கெட்டதா ?

நாம்: கெட்டது தான்....

வள்ளுவர்: இராமன் நாடிழந்து காட்டுக்குப் போனான்....அது நன்மையில் முடிந்ததா கேட்டில் முடிந்ததா ? நல்லவனுக்கு வரும் கேடு கூட நன்மை பயக்கும். கெட்டவனுக்கு வரும் ஆக்கம் கூட கேட்டினை விளைக்கும்.


நாம்: நீங்க சொல்றது சரிதான்....வேற என்னங்க இருக்கு ?


வள்ளுவர்: நல்லவனுக்கு கொஞ்சம் கேடு வந்தால், ஏதோ விதி வசம் என்று பொறுமையாக இருப்பான். அதே வறுமை கெட்டவனுக்கு வந்தால் என்ன செய்வான் ? என்ன வேண்டுமானாலும் செய்வான்....கொலை செய்வான், ஆட்களை கடத்துவான்...அந்த விதத்தில் அவன் பெற்ற ஆக்கமும், இவன் பெற்ற கேடும் நாட்டுக்கு நல்லது தானே ? நினைத்துப் பார்.

நாம்: அது சரிதான்...இருந்தாலும்....

வள்ளுவர்: இன்னும் முடியவில்லை...கெட்டவனுக்கு வந்த செல்வம் எப்படி வந்திருக்கும் ? நல்ல வழியிலா வந்திருக்கும் ? சிந்தித்துப் பார். அப்படி கெட்ட வழியில் வரும் செல்வம் சிறந்ததா ? எண்ணிப் பார்.

நாம்: சிந்திக்க வேண்டிய விஷயம் தான்...

வள்ளுவர்: கேட்டவன் பெற்ற ஆக்கம்...அதை அவன் எந்த வழியில் செலவழிப்பான்..நல்ல வழியிலா செலவழிப்பான்...ஒருக்காலும் மாட்டான்...இன்னும் தீமை தான் செய்வான்...அது நல்லதா ? எண்ணிப் பார்.


நாம்: நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்....

வள்ளுவர்: இப்படி கெட்ட வழியில் பணம் சேர்த்து, கெட்ட வழியில் செலவழிப்பவனுக்கு எப்படிப் பட்ட நண்பர்களும் உறவினர்களும் கிடைப்பார்கள் ? யோசித்துப் பார்.


நாம்: எல்லாமே அயோக்கிய பயல்கலாகத்தான் இருப்பாங்க ஐயா


வள்ளுவர்: இப்படி எந்நேரமும் தீயவர்கள் சூழ இருப்பது நல்லதா ? எண்ணிப் பார்.

இப்படி பலப் பல விஷயங்களை யோசித்துப் பார்க்க வேண்டும்...அப்போதுதான் உண்மை புலப்படும்...






இராமாயணம் - வன்மையை மாற்றும் காமம்


இராமாயணம் - வன்மையை மாற்றும் காமம் 



நிறைய பேர் தங்கள் குறைகளை மற்றவர்கள் மேல் ஏற்றிச் சொல்வார்கள். அவனோட சேர்ந்து குடிச்சு கெட்டுப் போனேன், கெட்ட சகவாசத்தால் குடி கூத்து என்று அலைந்து சொத்தை அழித்து விட்டேன், நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றி படிக்காமல் இருந்ததால் நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை என்று தங்கள் குறைகளை மறைத்து மற்றவர்கள் மேல் பழி போடுவதை பார்க்கிறோம்

சீதையை பற்றி சூர்பனகை சொன்ன பிறகு இராவணனின்  மனம் மாறியது. கற்ற கல்வி, அவன் கொண்ட பக்தி, வீரம், மானம் எல்லாம் போயிற்று. அது சீதை அவன் மனம் புகுந்ததாலா அல்லது இயற்கையாகவே அவனுக்கு அந்த சபல புத்தி இருந்ததா ?

எத்தனை ஆயிரம் வாளுக்கும், ஈட்டிக்கும், அம்புக்கும் ஈடு கொடுத்த அவன் நெஞ்சம் மன்மதனின் மலர் அம்பின் வேகம் தாங்காமல் துவண்டு விட்டது.

பாடல்


பொன் மயம் ஆன நங்கை மனம் புக, புன்மை பூண்ட
தன்மையோ-அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ-
மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான்?
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே


பொருள்



திருக்குறள் - நினைக்கப் படும்

திருக்குறள் - நினைக்கப் படும் 


நாம் வாழ்க்கையில் கெட்டவர்கள் சுகமாகவும், செல்வத்துடனும் நல்லவர்கள் வறுமையில் துன்பப்படுவதையும் பார்க்கிறோம்.

நேர்மையாக நடப்பதால் ஒரு நன்மையையும் இல்லை என்று தோன்றும்.

இதை பார்க்க பார்க்க நம் பிள்ளைகளுக்கு நீதியையும், நேர்மையையும், வாய்மையையும் எப்படி சொல்லித் தர முடியும் ?

வள்ளுவரிடமே கேட்போம் :

நாம்: ஐயா, ஊருக்குள்ள பார்த்தால் கெட்டவன் எல்லாம் கோடிக் கணக்கில் பணம் சேர்த்து சுகமாக இருக்கிறான். நல்லவன் பிள்ளைகளை படிக்கக் வைக்கக்  கூட காசு இல்லாமல் துன்பப் படுகிறான். இதை எல்லாம் பார்த்தால் நீதி, நேர்மை இது எல்லாம் செத்துப் போய் விட்டது என்றே தோன்றுகிறது. பேசாமல் நாங்களும் ஏதாவது பொய் பித்தலாட்டாம் பண்ணி வாழ்க்கையில் முன்னேறுவது தான் சரி என்று படுகிறது.  நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? இதற்க்கு ஒரு விடை சொல்லுங்கள்.

வள்ளுவர்: சிரித்துக் கொண்டே ....

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் 
நினைக்கப் படும் 


நாம்: அப்படினா என்ன ஐயா ?

வள்ளுவர்:  அவ்விய நெஞ்சம், செவ்விய நெஞ்சம் அப்படின்னு இரண்டு இருக்கு. செவ்விய நெஞ்சம்னா தெரியும்ல ? செம்மையான நெஞ்சம், மனம். அதாவது நீதி, நேர்மை, வாய்மை, ஒழுக்கம் இதன் படி வாழும் நெஞ்சம். அதற்க்கு எதிர்மறை அவ்விய நெஞ்சம். புரியுதா ?

 நாம்: புரியுதுங்க ஐயா. மேல சொல்லுங்க.

வ: கெட்ட மனம் கொண்டவனின் சிறப்பும், நல்ல மனம் கொண்டவனின் துன்பமும் நினைக்கப் படும்.

நாம்: என்னங்க இப்படி சொல்றீங்க. நினைக்கப் படும் அப்படினா, என்னங்க ? உங்கள்ளுக்குத் தெரியாதா ? யாருங்க நினைக்கணும். புரியலையே...கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க...

வ: நினைக்கப் படும் என்றால் நினைக்கப் + படும். நினைத்தால் புரியும் என்று அர்த்தம்

நாம்: புரியலீங்க. ரொம்ப நினைச்சு பார்த்துட்டேன்க....ஒண்ணும் விளங்கலீங்க...நீங்களே சொல்லிருங்க


வ: ஆக்கமும் எல்லாம் ஆக்கமும் அல்ல. கேடு எல்லாம் கேடும்  அல்ல.

நாம்: அது என்னங்க புது கோட்பாடு ?

வ: இப்ப நீ ஒரு கெட்டவன் செல்வச் சிறப்போடு இருப்பதை பார்க்கிறாய் அல்லவா ? அவன் சந்தோஷாமாக இருப்பானா என்று நினைத்துப் பார். எப்போதும் பயம். கைது பண்ணப் படலாம், யாரவது அவனை கவிழ்த்து விடலாம், கூட இருப்பவனே அவனை போட்டு தள்ளி விடலாம்...யாரையும் அவன் நம்ப முடியாது...நிம்மதியா தூங்க முடியாது ... இது ஒரு ஆக்கமா ? சிந்தித்துப் பார்.

நாம்: நீங்க சொல்றது சரிதான்...இருந்தாலும்....

வ: நல்லவன் துன்பப் படுகிறான்...அந்த துன்பத்தில் இருந்து விடுபட அவன் நேர்மையான வழியில் முயற்சி செய்வான்....முயற்சி திருவினை ஆக்கும் என்று நான் சொல்லி இருக்கிறேன். அந்த முயற்ச்சியால் அவன் பெருமை அடைவான்...அவனுக்கு புகழும் பணமும் கிடைக்கும்...எனவே செவ்விய நெஞ்சத்தான் கேடு ஒரு கேடே அல்ல.... அது அவனை உயர்த்த கிடைத்த வாய்ப்பு.

நாம்: ஹ்ம்ம்...அதாவது கெட்டவனுக்கு கிடைத்த ஆக்கமே அவனை மேலும் மேலும் கெடுதலை செய்யத் தூண்டி அவனை துன்பத்தில் ஆழ்த்தும் அதே சமயம் நல்லவனுக்கு ஏற்பட்ட துன்பம் அவனை மேலும் மேலும் முயற்சி செய்யத் தூண்டி அவனை உயர்ந்தவனாக்கும்....புரியற மாதிரி இருக்கு....

வள்ளுவர்: இன்னும் இருக்கு தம்பி...இதை பற்றி மேலும் சொல்கிறேன் ...அது வரை நீயும் இதை பற்றி நினைத்துக் கொண்டிரு ....








Tuesday, March 5, 2013

திருக்குறள் - என்னால் அதைச் செய்ய முடியுமா ?


திருக்குறள் - என்னால் அதைச் செய்ய முடியுமா ?


ஒரு பெரிய காரியத்தை செய்ய முனையும் போது , இதை நம்மால் செய்ய முடியுமா என்ற சந்தேகம், ஒரு தளர்ச்சி  வருவது இயற்க்கை.

நம்மால் இந்த மாநிலத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற முடியுமா ? மெடல் வாங்க முடியுமா ? நம் தொழிலை இந்தியாவிலேயே முதல் நிறுவனமாக மாற்ற முடியுமா என்று சந்தேகம் வரும்.

இந்த தளர்ச்சி முதலில் இருக்கக் கூடாது. அதை முதலில் தூக்கிப் போட்டு விட வேண்டும். இந்த தயக்கம் இருந்தால் எதுவும் சாதிக்க முடியாது.

நீங்கள் சாதிக்க நினைத்தை தொடங்கி விடுங்கள். விடாமல் முயற்ச்சியை தொடருங்கள். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ அவ்வளவு பெருமை அந்த முயற்சி தரும்.

மாநிலத்திலேயே முதல் மாணவனாக வருவேன் என்று முயற்ச்சியை தொடங்குங்கள். ஒரு வேளை உங்கள் முயற்சி போதுமானதாக இல்லாவிட்டால் பள்ளிக்காவது முதல் மாணவனாகவோ மாணவியாகவோ வருவீர்கள். அதுவும் பெருமை தானே.

அதை விடுத்து, நம்மால் எப்படி மாநிலத்திலேயே முதலாவதாக வர முடியும் என்று சந்தேகப் பட்டு, அது எல்லாம் நடக்கிற காரியம் இல்லை, நம்மால் முடியாது என்று தளர்ந்து இருந்து விட்டால் ஒரு பெருமையும் கிடைக்காது.



பாடல்


அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

சீர் பிரித்தபின்

அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் 
பெருமை முயற்சி தரும். 

பொருள்


அருமை உடைத்து என்று = கடினமானது, சாதிக்க முடியாதது என்று

அசாவாமை வேண்டும் = அசாவாமை என்றால் தளர்ச்சி உறுதல், சந்தேகம் கொள்ளுதல்

பெருமை முயற்சி தரும் = முயற்சி பெருமையை தரும்

சரி, பல முறை பெரிதாக முயற்சி செய்தும் நல்ல பலன் கிடைக்காமல் போகிறதே. அதிர்ஷ்டம் ஒன்று வேண்டி இருக்கிறதே. அதை விதி என்றாலும் சரி, இறை அருள் என்றாலும் சரி, அதிர்ஷ்டம் என்றாலும் சரி...வெறும் முயற்சி மட்டும் பலன் தருமா ? தராவிட்டால் என்ன செய்வது ?

அதற்க்கும் வள்ளுவர் விடை தருகிறார்....

அதை அடுத்த ப்ளாகில் பார்ப்போம்

பெரிய புராணம் - இடையறாப் பேரன்பு



பெரிய புராணம் - இடையறாப் பேரன்பு 


நம்மிடம் அன்பு உள்ளவர்களிடம், நாம் அன்பு செய்பவர்களிடம் கூட நாம் சில சமயம் கோவம் கொள்ள நேரிடலாம். அன்பு செலுத்துவது தடை படலாம்.

அன்பு என்பது பலன் எதிர் பாராமல் கொடுப்பது. மழை போல். நாம் என்ன பதிலுக்கு செய்வோம் என்று மழை பெய்கிறது ?

கோவில். அற்புதமான இடம். கூட்டம் இல்லை என்றால், அதன் புராதனம், அதன் காலம் காலமாய் கட்டி காத்து வந்த இருளும், அமானுஷ்யமான நெடியும்...

எப்பவாவது கோவிலுக்குப் போகும் போது ... சற்று நேரம் யோசித்துப் பாருங்கள்...அந்த கோவிலில் மாணிக்க வாசகரும் அப்பரும், எத்தனையோ ஆழ்வார்களும் , ஆச்சாரியர்களும் வந்து நடந்த இடம் என்று. அவர்கள் நடந்த அதே இடத்தில் நீங்களும் நடக்கிறீர்கள். அவர்கள் நின்ற அதே இடத்தில் நீங்களும் நிற்கிறீர்கள்.

யார் அறிவார், நீங்களே கூட முன் ஜன்மத்தில்அதே இடத்தில் நின்றிருக்கலாம்..நடந்து இருக்கலாம்...யாரோ உங்கள் முன்னோர் அந்த கோவிலின் பிரகாரங்களில்தன் சந்ததி, அதாவது நன்றாக வாழ, மகிழ்ச்சிய்காக வாழ கண்ணீர் மல்கி பிரார்த்தித்து இருக்கலாம்.

எனவே கோவில்களை பராமரிப்பது நம் கடமை..இறை உணர்வு இல்லாவிட்டாலும். வேளுக்குடி போன்ற பெரியவர்கள் கோவில் பராமரிப்பை பற்றி மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லி கொண்டிருக்கிறார்கள்

அழகு. இளமை அழகு. அதிலும் பெண்கள் இளைமையில் மிக அழகாக இருப்பார்கள். இயற்கை கொடுத்த நன்கொடை.

முதுமையிலும் அழகாக இருக்க முடியுமா ? வெகு சிலரே முதுமையில் அழகாக இருக்கிறார்கள்.

என்ன ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமால் ஏதேதோ சொல்லிக்கொண்டே போகிறேனா ?

திருநாவுக்கரசரை பற்றி சேக்கிழார் சொல்லும் பாடல்


இடையறாப் பேரன்பும் மழைவாரும்
            இணைவிழியும் உழவாரத்தின்
        படையறாத் திருக்கரமும் சிவபெருமான்
            திருவடிக்கே பதித்த நெஞ்சும்
        நடையறாப் பெருந்துறவும் வாகீசப்
            பெருந்தகைதன் ஞானப்பாடல்
        தொடையறாச் செவ்வாயும் சிவவேடப்
            பொலிவழகும் துதித்து வாழ்வாம்


பொருள்



இடையறாப் பேரன்பும் = இடை விடாத பேரன்பு. ஒரு நிமிடம் கூட அன்பு மாறாத மனம்.

மழைவாரும்  இணைவிழியும் = மழை போல் கருணை பொழியும் இரண்டு விழிகளும்


உழவாரத்தின் படையறாத் திருக்கரமும் = உழவாரம் என்பது சின்ன மண் வெட்டி போன்ற சாதனம். கோவிலில் பிரகாரத்தில் உள்ள கல்லையும், முள்ளையும் எடுத்து ஓரமாகப் போட உதவும் சாதனம். எப்போதும் அவர் கையில் அந்த சாதனம் இருக்கும். கோவில் பராமரிப்பில் எப்போதும் ஈடுபட்டு இருப்பார் என்பது பொருள்.


சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும் = சிவா பெருமானின் திருவடிகளில் பதிந்த நெஞ்சம்

நடையறாப் பெருந்துறவும் = நடை நிற்காத பெரும் துறவு. அது என்ன நடை விடாத துறவு. துறவிகள் ஒரு நாளுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கி இருக்கக் கூடாது என்பது விதி. ரொம்ப நாள் இருந்தால், அந்த ஊரின் மேல், அங்குள்ள மக்கள் மேல் ஒரு பற்று வந்து விடும்.

பேய் போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத் 
தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி 
சேய் போல் இருப்பர் கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!

என்பார் பட்டினத்தார். பேய்க்கு ஒரு இடம் உண்டா. அது பாட்டுக்கு அலைந்து கொண்டிருக்கும்.

மடம் கட்டி, சொத்து குவித்து, அதை வரவு செலவு பார்த்து,...இது எல்லாம் துறவிக்கு அடையாளம் அல்ல


வாகீசப் பெருந்தகை = வாகீசர் என்பது திருநாவுக்கரசரின் இயற் பெயர்

தன் ஞானப்பாடல் = ஞானம் செறிந்த பாடல்கள்

தொடையறாச் செவ்வாயும் = யாப்பு இலக்கணம் மாறாத பாடல்கள் பொழியும் அவரின் செவ்வாயும்

சிவவேடப் பொலிவழகும் = சிவச் சின்னங்கள் தரித்த அவரின் பொலிகின்ற அழகையும்


துதித்து வாழ்வாம் = துதித்து வாழ்வோம்

தெய்வப் புலவர் சேக்கிழார் எழுதியப் பாடல்.

சொல்லச் சொல்ல தித்திக்கும்.