Monday, March 11, 2013

இராமாயணம் - இராம நாமம் பிறந்த கதை

இராமாயணம் - இராம நாமம் பிறந்த கதை

மெய் சிலிர்க்கும் பாடல்

முதன் முதலில் "இராமன்" என்ற பெயர் பிறந்த கதை.

ஒரு நாட்டை ஆயிரம் ஆண்டுகளாக, எத்தனையோ தலைமுறைகளாக மந்திரம் போல் கட்டி போட்ட நாமம் பிறந்த கதை.

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை
தன்னையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை

அந்த இராம என்ற நாமம் பிறந்த கதை      இது.

இராமன் என்ற பெயரை முன்தான் முதலில் யார் சொன்னது தெரியுமா ?


இராமன், இலக்குவன் பரதன், சத்ருகன் என்ற நால்வரும் பிறந்திருக்கிறார்கள்.

வசிட்டனிடம் பெயர் வைக்கச் சொல்லி தசரதன் வேண்டினான்.

அதிலும் ஒரு பாடம் நமக்கு. யார் பெயர் வைப்பது என்று. ஆசாரியனை கொண்டு பெயர் வைக்கச் சொல்கிறான் தசரதன்.

வசிட்டன் நால்வருக்கும் பெயர் வைக்கிறான்.

முதல் பெயர் இராமனுக்கு. முதன் முதலாய் இராம நாமம் காப்பியத்தில் பிறந்த இடம்.


Sunday, March 10, 2013

திருக்குறள் - துன்பம் இல்லாமல் வாழ


திருக்குறள் - துன்பம் இல்லாமல் வாழ 


துன்பம் இல்லாத வாழ்வை தான் எல்லா உயிரும் விரும்பும்

எல்லோரும் இன்பத்தை வேண்டியே ஏதேதோ செய்கிறார்கள்.

இன்பம் வேண்டி  ஒன்று.

துன்பம் வரமால் இருக்க செய்ய வேண்டியது மற்றொன்று.

இன்பம் வேண்டி செய்யும் காரியங்களே துன்பத்தை கொண்டு வரும் என்றால் என்ன செய்வது ?

துன்பம் வரமால் இருக்க வள்ளுவர் ஒரு வழி சொல்கிறார்.



யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

முதலில் வழக்கம் போல் கோனார் தமிழ் உரை.

ஒருவன் எதிலிருந்து விலகி இருக்கின்றானோ, அவற்றினால் அவனுக்குத் துன்பம் வராது

மற்றவர்கள் உரையும் அப்படித்தான் இருக்கிறது

சொல்லில் மிகுந்த சிக்கனம் உள்ள வள்ளுவர் எதற்கு இரண்டு தடவை இரண்டு வார்த்தைகளை பயன் படுத்த வேண்டும் ?

யாதனின் நீங்கியான் நோதல் அதனின் இலன்

என்று சொல்லி இருக்கலாமே. அர்த்தம் சரியாக வருகிறதே

அடுக்குகள் பன்மை பற்றி வந்தன என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு போய் விட்டார் பரிமேலழகர்

என்ன அர்த்தம் ?

நம்மிடம் பல விதமான பொருட்கள், சொத்துக்கள், உறவுகள், நம்பிக்கைகள் என்று எண்ணில் அடங்கா பட்டியல் இருக்கிறது.

எல்லாவற்றையும் ஒரே நாளில் விட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விட முடியும்.

எவ்வளவுக்கு எவ்வளவு பற்றை விட முடியுமோ, அவ்வளவு துன்பம் (நோதல்) இல்லை.

எல்லாவற்றையும் ஒரு காலும் விட முடியாது. எனவே துன்பத்தில் இருந்து நமக்கு விடுதலை கிடையாது என்று முடிவு கட்டி ஒன்றையும் விடாமல்  இருந்து விடாதீர்கள்

எவ்வளவு நீங்கி இருக்கிறீர்களோ, அவ்வளவு துன்பம் குறைவு

உன்னிப்பாக கவனித்தால் தெரியும் ...வள்ளுவர் விடச் சொல்லவில்லை....நீங்கி இருக்கச் சொல்கிறார்.

நீங்கி இருப்பது என்றால்...தள்ளி நிற்பது. சம்பந்தம் இல்லாத மாதிரி விலகி நிற்பது.

கைகெட்டும் தூரத்தில் தான் இருக்கும். கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தான் இருக்கும். இருந்தும் விலகி நிற்பது சுகம்.

என்னோடது என்று வரிந்து கட்டி இழுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்.

மனைவியையும், கணவனையும், பிள்ளைகளையும், பெற்றோரையும் ,  சேர்த்த சொத்தையும் தூக்கி எறியச் சொல்லவில்லை. நீங்கி நிற்கச் சொல்கிறார்.

அதுவும் ஒவ்வொன்றாய். ....

முடியும்தானே ? முயன்றுதான் பார்ப்போமே ...







 



Saturday, March 9, 2013

திருக்குறள் - களவின் கண் கன்றிய காதல்


திருக்குறள் - களவின் கண் கன்றிய காதல்


அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் 
கன்றிய காத லவர்.

முதலில் கோனார் தமிழ் உரை - களவின் (திருட்டு) மேல் நாட்டம் உள்ளவர்கள் எதையும் ஒரு அளவோடு செய்ய மாட்டார்கள். 

இப்படித்தான் மற்றவர்களும் உரை எழுதி இருக்கிறார்கள்.


கொஞ்சம் ஆழமாக சிந்திப்போம் 

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் = அளவோடு நின்று வாழ மாட்டார்கள். 
என்ன அளவு ? எதை அளக்க வேண்டும் ?

எந்த அளவுக்கும் ஒரு அடிப்படை வேண்டும். ஒரு மீட்டர், ஒரு வினாடி, ஒரு கிலோ என்று அடிப்படை அலகு (UNit ) வேண்டும். அதை வைத்து மற்றவற்றை அளக்கலாம். எத்தனை கிலோ, எத்தனை மணி என்று அளக்க முடியும். 

வாழ்க்கைக்கும் ஒரு Unit இருக்கிறது . ஒரு நெறிமுறை , கோட்பாடு, சட்ட திட்டம் இருக்கிறது. 

அந்த நெறிப்படி வாழ மாட்டார்கள், மனம் போன படி வாழ்வார்கள் - யார் ?

களவின் மேல் கன்றிய காதலவர் - அது என்ன கன்றிய காதல் ? கன்றிய என்றால் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள். முதலில் தேவைக்காக செய்த களவு நாளடைவில் அதுவே வாழ்க்கை என்று ஆகி, அதை விட முடியாமல், அதன் மேல் மிகுந்த ஈடுப்பாடு உள்ளவர்கள் வாழ்க்கை நெறி முறைகளை கடை பிடிக்க மாட்டார்கள். 

அப்படி என்றால், அவர்கள் களவு மட்டும் அல்ல, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல், இலஞ்ச இல்லாவண்யம்  என்று எது எல்லாம் தவறு என்று நிர்ணைக்கப் பட்டு இருக்கிறதோ, அதை எல்லாம் செய்வார்கள்.

அதுவும் அளவு கடந்து செய்வார்கள். அவர்கள் செய்யும் கொடுமைக்கு அளவு இருக்காது.

ஆற்றார் என்றால் செய்ய முடியாது, வழியில் நிற்க முடியாது. அவர்களே நினைத்தாலும் அவர்களால் நல்ல வழியில் நிற்க முடியாது. 

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே என்பார் நாவுக்கரசர். என்னால் இதை பொறுக்க  முடியவில்லை என்று கண்ணீர் வடிக்கிறார்.  

 
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

இராமானுசர் நூற்றந்தாதி - கலைக் கவி பாடும் பெரியவர்

இராமானுசர் நூற்றந்தாதி - கலைக் கவி பாடும் பெரியவர்

இறைவனை அடைய , முக்தி பெற, உண்மை உணர, வீடு பேறு அடைய பொதுவாகச் சொல்லப்பட்ட வழி கானகம் சென்று, கல் மேலும் , முள் மேலும் நின்று தவம் இயற்றுவது

அது எல்லாம் எல்லாராலும் ஆகின்ற காரியம் அல்ல.

உடலை வருத்தாமல், அன்பால், பக்தியால், ஆசாரியனிடத்தில் சரணடைவதன் மூலம் அவற்றை அடையலாம்

பாடல்


கதிக்குப் பதறிவெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம்
கொதிக்கத் தவம்செய்யும் கொள்கையற் றேன்,கொல்லி காவலன் சொல்
பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமா னுசனென்னைச் சோர்விலனே.

பொருள்



Friday, March 8, 2013

இராமாயணம் - மரம் குடைந்த தும்பி போல்


இராமாயணம் - மரம் குடைந்த தும்பி போல்


சீதையின் எண்ணம், அவள் மேல் கொண்ட காதல் இராவணனின் மனதை துளைத்து கொண்டே இருக்கிறது. அவன் இதயம் எப்படி பட்ட இதயம் ?

எட்டு திக்கும் காவல் காக்கும் யானைகளோடு இராவணன் ஒரு முறை சண்டையிட்டான். அவற்றின் தந்தம் அவன் மார்பில் சொருகியது. அதை அப்படியே உடைத்தான். தந்தம் பாய்ந்த மார்புகள். அவ்வளவு பலம் வாய்ந்த மார்பு.

அப்படி பட்ட பலமான மார்பை, மன்மதனின் மலர் அம்புகள் துளைத்து விட்டன .

எப்படி தெரியுமா ? மரத்தை குடைந்து எடுக்கும் வண்டு போல. பெரிய தேக்கு மரம் தான். வண்டு என்னவோ சின்னது தான். இருந்தாலும் துளை இட்டு விடுவது இல்லையா ? அது போல் உரம் பாய்ந்த அவன் மார்பை சீதை மேல் கொண்ட காதல் துளைத்து சென்றது....

பாடல்


பரம் கிடந்த மாதிரம் பரித்த, பாழி யானையின்
கரம் கிடந்த கொம்பு ஒடிந்து அடங்க வென்ற காவலன் -
மரம் குடைந்த தும்பிபோல், அனங்கன் வாளி வந்து வந்து
உரம் குடைந்து, நொந்து நொந்து உளைந்து உளைந்து-ஒடுங்கினான்

பொருள்


பரம் = உலகம்.


மரத்தை மறைத்தது மாமத  யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே என்பது திருமந்திரம்



கிடந்த மாதிரம் = மாதிரம் என்றால் திசை , திக்கு. உலகின் எல்லா திசைகளிலும் கிடந்த

பரித்த = சூழ்ந்த

பாழி யானையின் = வலிமை மிக்க யானையின்

கரம் கிடந்த = கரம் என்றால் கை. தும்பிக்கை உள்ள யானையின்

கொம்பு ஒடிந்து = தந்தத்தை ஒடித்து

அடங்க வென்ற காவலன் = அவை அடங்கும் படி வென்ற காவலன்

மரம் குடைந்த தும்பிபோல்  = மரத்தை குடைந்த தும்பி போல்

அனங்கன் வாளி = மன்மதனின் அம்பு

வந்து வந்து = வந்து வந்து (மீண்டும் மீண்டும் வந்து )

உரம் குடைந்து = அவன் வலிமையை குடைந்து

நொந்து நொந்து = நொந்து நொந்து

 உளைந்து உளைந்து = உளைந்து உளைந்து

ஒடுங்கினான் = வலிமை குன்றினான்

இராமாயணம் - தாம் உள ஆக்கலும்


இராமாயணம் - தாம் உள ஆக்கலும்

இந்த பாடலுக்கு இது மூன்றாவது ப்ளாக்.

அவ்வளவு இருக்கிறது இந்த பாடலில்.


உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளையாட்டுடையார் அவர்
தலைவர்; அன்னவர்க் கேசரண் நாங்களே.

நாம் செய்யும் எதிலும் நம் திறமை , அறிவு வெளிப்படும். இந்த ப்ளாகில் நான் படித்த அல்லது கேட்ட  தமிழ் வெளிப்படலாம். என் எண்ணங்களை வெளிபடுத்தும் திறமை வெளிப்படலாம். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் உங்களின் திறமையும் அறிவும் வெளிப்படும்.

ஆனால், உங்கள் பிள்ளைகளிடம் நீங்களே வெளிப் படுவீர்கள். உங்கள் மகனோ அல்லது மகளோ ஏதோ ஒரு விதத்தில் உங்களை போலவே இருக்கும். நடை, உடை, பாவனை இதில் நீங்களே இருப்பீர்கள்.

இறைவன் இந்த உலகம் அனைத்தையும் படைத்தான்...அதில் அவன் இருந்தான் ..."தாம் உள ஆக்கலும் ". தான் உள்ளபடி, தான் இருக்கின்றபடி அதைப் படைத்தான்.

இறைவன் இல்லை என்று சொல்லுபவனுக்குள் இருந்து சொல்லுபவனும் அவனே

எல்லோரும் அடித்துக் கொண்டு சாவதை பார்த்து அலகிலா விளையாட்டு உள்ளவர்  அவர் என்றால் அவரை நாம் ஏன் வணங்க வேண்டும் என்று கேட்க்கும் புத்தியும் அவன் தான்.

அவன் எல்லாவற்றிலும் தானே இருந்து வெளிப்படுகிற மாதிரி அவன் ஆக்கினான்.

உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் வெளிப்படுகிற மாதிரி.

உங்கள் பிள்ளைகள் உங்களை மறுதலித்தாலும், உங்கள் மேல் கோபம் கொண்டாலும், உங்களை தன் பெற்றோர் இல்லை என்று சொன்னாலும் அதன் கண்ணும், மூக்கும், வாயும், ஜாடையும் உங்களைப் போலவே இருக்கும். அதை மாற்ற முடியாது.

நீங்கள் இறைவன் இல்லை என்று சொன்னாலும் நீங்கள் இறைவனின் அம்சம் தான்...அதை மாற்ற முடியாது...

தாம் உள ஆக்கலும் ....

யோசித்துப் பாருங்கள்...எவ்வளவு அர்த்தம் செறிந்த வார்த்தைகள்.....

இன்னும் இந்த பாடலைப் பற்றி சொல்லி முடியவில்லை....




அபிராமி அந்தாதி - சொல்லும் பொருளும்


அபிராமி அந்தாதி - சொல்லும் பொருளும் 


புல்லுதல் என்று ஒரு அருமையனா தமிழ் சொல் உண்டு. அணைத்தல், மருவுதல், தழுவுதல், புணர்தல் என்று தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள நெருக்கத்தை புலப்படுத்தும் ஒரு சொல். வள்ளுவர் இந்த சொல்லை பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார்

அபிராமி, அவளுடைய துணைவனை அணைத்து இருக்கிறாள். அவளுடைய துணைவன் மீது அவளுக்கு அவ்வளவு அன்பு. நெருக்கம் என்றால் மிக நெருக்கம். பிரிக்க முடியாத நெருக்கம். அதை எப்படி சொல்லி விளங்க வைப்பது ?

ஒரு சொல்லும், அதன் பொருளும் எப்படி பிரிக்க முடியாதோ அப்படி ஒரு நெருக்கம். பொருள் இல்லாவிட்டால் சொல் இல்லை. சொல் இல்லாமல் பொருள் இல்லை. இரண்டும் வேறுதான் என்றாலும் ஒன்றை விட்டு ஒன்று இல்லை.

கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவு, உள்ள ஒரு புரிதல் என்பது ஒரு அலுவகலத்தில் வேலை பார்க்கும் மற்றொரு நபருடன் உள்ள புரிதல் போல அல்ல.

ஒரே சொல் பல அர்த்தங்களை தரும்...

அறிவு பூர்வமாய் ஒரு அர்த்தம்

உணர்வு பூர்வமாய் ஒரு அர்த்தம்

சொல்லுபவரின் மன நிலையை கொண்டு ஒரு அர்த்தம்

சொல்லப் படும் இடத்தை கொண்டு ஒரு அர்த்தம்

என்று அர்த்தம் மாறுபடும். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அறிவு பூர்வமாய், உணர்வு பூர்வமாய், ஒருவரின் மனதை ஒருவர் அறிந்து கொண்டு...ஈருடல் ஒருயிராய் இருக்க வேண்டும்..அபிராமி அப்படி இருக்கிறாள்....

அவளுடைய பாதங்கள் ... மிக மிக மென்மையானவை...ஈரமானவை...மணம் வீசுபவை ....இப்படி சொல்லிக் கொண்டே போவதை விட ...அப்போது தான் மலர்ந்த மலர் போல் இருக்கும் அவளுடைய பாதங்கள்....

அந்த பாதங்களை எப்போதும் துதிப்பவர்களுக்கு அழியா அரசு கிடைக்கும். இந்த உலகில் உள்ள அரசுகள் எல்லாம் அழியும் அரசுகள். முடி சாய்த்த மன்னர் எல்லாம் பிடி சாம்பராய் போனார்கள்.....அபிராமி அழியாத அரசை தருவாள்.

அது மட்டும் அல்ல...சிவ லோகமும் கிடைக்கும். சிவ லோகத்தை எப்படி அடைவது...அங்கு போகும் வழியும் அவள் தருவாள் ...செல்லும் தவ நெறியும் ...அதையும் அவளே தருவாள்.....

பாடல்




சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன் 
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள் 
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும் 
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே. 



பொருள்