Saturday, March 30, 2013

ஓராண்டு நிறைவு !


ஓராண்டு நிறைவு !


இந்த ப்ளாக் ஆரம்பித்து இன்றோடு ஓராண்டு ஆகிறது. 31-மார்ச் - 12 அன்று தொடங்கியது இந்த ப்ளாக். 

இதுவரை ....

603 ப்ளாகுகள் 
32,000 பக்க வாசிப்புகள் (page views)
5,687 வாசிப்பாளர்கள் (visitors )
326 நகரங்கள் (cities )

........

எல்லோருக்கும் நன்றி. எல்லாவற்றிற்கும் நன்றி. 


இன்னும் எழுதுவேன் 

இராமாயணம் - தோல்வியை எப்படி எதிர் கொள்வது


இராமாயணம் - தோல்வியை எப்படி எதிர் கொள்வது


அலுவகலத்தில் நீங்கள் பதவி உயர்வை எதிர்ப்பார்த்து காத்து இருகிறீர்கள். உங்கள் மேலதிகாரி சொல்லிவிட்டார் இந்த வருடம் உங்களுக்கு பதவி
உயர்வு கட்டாயம் உண்டு என்று.

உங்கள் மனைவியடம் சொல்லிவிட்டு போகிறீர்கள் ...இன்னைக்கு சாயங்காலம் வரும் போது பதவி உயர்வு (promotion ) கடிதத்தோடு வருவேன்...சினிமாவுக்கு போயிட்டு அப்படியே ஹோட்டலுக்கு போயிட்டு வரலாம் என்று சொல்லிவிட்டு சந்தோஷமா அலுவகலம் போகிறீர்கள்...பதவி உயர்வு கடிதத்திற்கு பதில் உங்களை வேலையை விட்டு தூக்கி விட்டோம் என்று சொல்லி ஒரு கடிதம் கொடுத்தால் எப்படி இருக்கும் ?

இராமனுக்கு அப்படி தான் இருந்தது....

சக்கரவர்த்தி ஆக போகிறோம் என்று நினைத்து போனவனிடம், சகரவர்த்தி எல்லாம் ஒண்ணும் கிடையாது நீ ஊருக்குள்ளேயே இருக்கக் கூடாது, காட்டுக்குப் போ , அதுவும் பதினாலு வருஷம் என்று சொன்னால் எப்படி இருக்கும் ....

சரி இப்ப கதைக்கு வருவோம்...பதினாலு வருடம் கானகம் போ அன்று சொன்ன அந்தத் தருணத்தில் யார் யார் இருந்தார்கள் அந்த இடத்தில் ?

இராமனும், கைகேயியும் மட்டும் இருந்தார்கள். வேறு யாரும் இல்லை. வேண்டுமானால் கடவுள் இருந்தார், அவருக்குத் தெரியும் என்று சொல்லலாம்.

இராமன் முகம் எப்படி மாறியது என்று யாருக்குத் தெரியும் ?

கம்பன் கூறுகிறான் .... அவன் முகம் எப்படி மாறியது என்று எம்மை போன்ற கவிஞர்களால் சொல்லுவது எளிது அல்ல. யாராலும் சொல்ல முடியாத அருமையான குணங்கள் கொண்ட இராமனின் முகம் அந்த வாசகத்தை கேட்பதற்கு முன்னால், கேட்க்கும் அந்த தருணம், அந்த நொடி, கேட்ட பின் இந்த மூன்று சமயத்திலும் அப்பொழுது மலர்ந்த செந்தாமரை போல இருந்தது என்றார்

ஒரு கணம் கூட முகம் வாடவில்லை. ஏன் இப்படி என்ற சந்தேகம் குறி கூட இல்லை முகத்தில்.

இடுக்கண் வருங்கால் நகுக என்றான் வள்ளுவன். செய்து காண்பித்தான் இராமன்.

எவ்வளவு பெரிய அதிர்ச்சி...எவ்வளவு பெரிய ஏமாற்றம்..சிரித்த முகத்தோடு ஒரு சின்ன  மாற்றம் கூட இல்லாமல் ஏற்றுக் கொண்டான்...

அதை விடவா நமக்கு பெரிய இழப்பும், நட்டமும் வந்து விடும்.....

வாழ்வில் எதையும் sportive ஆக எடுத்துக் கொள்ள பழக வேண்டும்...


பாடல்


இப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட
அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா!

பொருள்


Friday, March 29, 2013

திருக்குறள் - தீயும் தீயவையும்

திருக்குறள் - தீயும் தீயவையும் 


தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப்  படும் 



சிலப்பதிகாரம் - குதர்க்கவாதிகள்


சிலப்பதிகாரம் - குதர்க்கவாதிகள் 


குதர்க்கம் பேசுபவர்கள் இன்று மட்டும் அல்ல அன்றும் இருந்திருக்கிறார்கள்.

கோவலனும், கண்ணகியும் புகார் நகரை விட்டு மதுரை நோக்கி செல்லும் வழியில் கவுந்தி அடிகளை சந்திக்கிறார்கள். அவர்கள் மூவரும் ஒரு சோலையில் ஓய்வு எடுக்கிறார்கள். அப்போது ஒரு குதர்க்கவாதி வருகிறான். அவனை வறு மொழியாளன் என்கிறார் இளங்கோ. வறுமையான மொழி...மொழியில் சிறப்பு இல்லாமல் வறண்ட மொழிகள்.

அவன் கவுந்தி அடிகளை பார்த்து கேட்க்கிறான் காமனும் அவன் மனைவி ரதியும் போல் இருக்கும் இவர்கள் யார் என்று.

கவுந்தி அடிகள், இவர்கள் என் பிள்ளைகள் என்று கூறினார்

குதர்க்கவாதி - உங்கள் பிள்ளைகள் என்றால் எப்படி அவர்கள் கணவன் மனைவியாக இருக்க முடியும் ?

அதை கேட்ட கண்ணகி நடுங்கிப் போனாள். கையால் காது இரண்டையும் பொத்திக் கொண்டாள். அப்படியே போய் கோவலன் பின்னால் மறைந்து கொண்டாள்.

தீய சொல்லை கேட்டாலே நடுங்கும் குணம். எவ்வளவு சிறந்த குடிப் பிறப்பு. தீச்சொல் சொல்லுவதை விடுங்கள். பிறர் சொல்வதை கேட்டாலே நடுங்கும் குணம்.

பாடல்:


வம்பப் பரத்தை வறுமொழியாளனொடு
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர்,
‘காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர்
ஆர்? எனக் கேட்டு, ஈங்கு அறிகுவம்’ என்றே-
‘நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர்! உடன்
ஆற்று வழிப்பட்டோர் ஆர்?’ என வினவ-


"கவுந்தியின் மறுமொழி"

மக்கள் காணீர்; மானிட யாக்கையர்;
பக்கம் நீங்குமின்; பரி புலம்பினர்’ என-

"தூர்த்தர்கள் பழிப்புரை"

‘உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ? கற்றறிந்தீர்!’ என-

"கவுந்திஅடிகள் சாபம்"

தீ மொழி கேட்டு, செவிஅகம் புதைத்து,
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க-
‘எள்ளுநர் போலும் இவர், என் பூங்கோதையை;
முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக’ என-


பொருள்


Thursday, March 28, 2013

இராமாயணம் - தோல்வி கண்டு துவளாதீர்கள்

இராமாயணம் - தோல்வி கண்டு துவளாதீர்கள் 


 உங்களுக்கு  ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி எது என்ன என்று யோசித்துப் பாருங்கள்.

தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, வியாபாரத்தில் தோல்வி, பங்கு சந்தையில் தோல்வி என்று பல தோல்விகள் இருக்கலாம். அப்படி எல்லாம் பெரிய தோல்வி ஒன்றும் இல்லை என்று நீங்கள் கூறினால், நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.

தோல்வியில் மனிதன் துவண்டு போகிறான்...சில சமயம் வாழ்க்கையே முடித்துக் கொள்ள கூட செய்கிறான்.

தோல்வியை எப்படி எதிர்கொள்வது . ?

இராமன் எப்படி எதிர் கொண்டான் என்று பார்ப்போம்.

இராமனுக்கு முடி சூட்ட தசரதன் முடிவு செய்து விட்டான். மந்திரிகள் அதை அமோதித்தார்கள். ஊரே விழாக் கோலம் பூண்டு விட்டது.

இராமன் சக்ரவர்த்தியாகப் போகிறான். ஒரு தடையும் இல்லை.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். மிகப் பெரிய பதவி, அதிகாரம், செல்வம் எல்லாம் வரப் போகிறது. நீங்களாய் இருந்தால் எப்படி இருப்பீர்கள்.

இராமன் தசரதன் மாளிகைக்கு வருகிறான்.

கைகேயியை வணங்குகிறான்.

தாயென நினைவான் முன்னே கூற்றெனத் தமியள் வந்தாள் 

தாய் என்று நினைத்துப் போனான், அவளோ கூற்றுவானாக வந்து நின்றாள் .

உன் தந்தை உனக்கு ஒன்றை சொல்ல சொன்னார் என்றாள். என்ன சொன்னாள்  என்று உங்களுக்குத் தெரியும்.

நீ 14 வருடம் காடு போ. பரதன் நாடு ஆள வேண்டும் என்று கூறுகிறாள்.


நாட்டை ஆள இருந்தவனை, நாடு இல்லை என்பதுடன் நிற்காமல், காட்டுக் போ என்றாள்.

எப்படி இருக்கும் ? மலை உச்சியில் இருந்து பாதாளத்தில் தள்ளி விட்ட மாதிரி.

நீங்களா இருந்த என்ன செய்து இருப்பீர்கள்? கோபம் வந்திருக்கும். வருத்தம் வந்திருக்கும். ஒண்ணும் முடியவில்லை என்றால் துக்கத்தில் மனம் ஒடிந்து வாழ்க்கையையே முடித்து கொள்ளலாம் என்று கூட நினைத்து இருப்பீர்கள்.

அரசு கிடைக்காதது ஒரு புறம். எப்படி மற்றவர்களிடம் முகம் காட்டுவது. எல்லோரும் சிரிப்பார்களே. மற்றவர்களை விடுங்கள், சீதை என்ன நினைப்பாள். தன் கணவன் சக்ரவர்த்தியாகப் போகிறான் என்று நினைத்து கொண்டு இருந்தவளிடம் போய் , காட்டுக்குப் போக வேண்டும் என்றால் அவள் என்ன நினைப்பாள் ?

இராமன் முகம் வாடி இருக்க வேண்டும் அல்லவா ? துவண்டு இருப்பான் அல்லவா ? ஒரு கணமாவது வருந்தி இருப்பானா ?

அந்த ஏமாற்றத்தை , தோல்வியை அவன் எப்படி எதிர் கொண்டான் என்பது நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடம். இராமனுக்கு வந்த அளவிற்கு நமக்கு ஏமாற்றமோ, இழப்போ வர வழியில்லை

அவன் அதை எப்படி ஏற்றுக் கொண்டான் என்பதை அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.




Wednesday, March 27, 2013

இராமாயணம் - உயர்வு தாழ்வு


இராமாயணம் - உயர்வு தாழ்வு 


மனிதர்களில் உயர்வு தாழ்வு உண்டா ? 

இல்லை என்று நீங்கள் சொல்லலாம். எல்லோரும் சமம் என்று சொல்லுவது எளிது. 

உங்கள் தெருவை சுத்தம் செய்யும் ஆளை நீங்கள் உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து, ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவீர்களா ? முடியுமா ?

மற்ற ஒரு ஜாதிக்காரனை உங்கள் வீட்டில் ஒருவனாக , உங்கள் சகோதரனாக உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா ? 

நீங்கள் சுத்த சைவம் என்று வைத்துக் கொள்ளுங்கள்...உங்களுக்கு முன்ன பின்ன அறிமுகள் இல்லாத ஒருவர் உங்களைப் பார்க்க கொஞ்சம் மாமிசம் எடுத்துக் கொண்டுவந்தால்  உங்களுக்கு எப்படி இருக்கும் ? உங்களால் அதை சகிக்க முடியுமா ?

இராமனால் முடிந்திருக்கிறது.

உங்களையும் என்னையும் விட மிக உயர்ந்த இடத்தில் இருந்த, சக்ரவர்த்தி திருமகனான   இராமன்,  தன்னை விட எல்லாவிதத்திலும் தாழ்ந்த குகனை, "வா என்னோடு பக்கத்தில் அமர் "என்றான் , நீ என்னுனடைய தம்பி என்றான். தன் மனைவியான சீதையை அவனின் உறவினன் என்றான்....நம்மால் நினைத்துகூட பார்க்க முடியாது. 


குகன் என்ற அந்த கதா பாத்திரம் கதைக்கு தேவையே இல்லை. கதையை முன் எடுத்துச் செல்லவோ , அதில் ஒரு திருப்பம் கொண்டுவரவோ அந்த கதா பாத்திரம் எந்த விதத்திலும் உதவி செய்ய வில்லை.

பின் எதற்கு அந்த கதா பாத்திரம் ?

குகன் மூலம் கம்பன் ஒரு உயரிய செய்தியை சொல்ல வருகிறான். 

குகன் எப்படி பட்டவன் ?


காயும் வில்லினன், கல் திரள் தோளினான்

தயங்குறச் சூழ விட்ட தொடு புலி வாலினான்.

எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான்.

மீன் நுகர் நாற்றம் மேய நகை இல் முகத்தினான்

கருத்த மேனி, இருளுக்கு எண்ணெய் தடவிய மாதிரி ஒரு உருவம், சிரிப்பு என்பதே கிடையாது, கோபம் வராமலே கூட  தீ விழ நோக்கும் விழியை உடையவன், எமனும் அஞ்சும் குரல் வளம், மீன் வாடை அடிக்கும் உடல் ....

அப்படி பட்ட குகனை, இராமன் வேற்றுமை பாராட்டாமல், உடன் பிறப்பாய் நினைத்தான். 

இந்த உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணத்தினால் எத்தனை போர்கள், எத்தனை உயிர் இழப்புகள், எத்தனை துவேஷம், எவ்வளவு சண்டை சச்சரவுகள் ...

அத்தனை வேற்றுமையும் மறைந்து எல்லோரும் ஒற்றுமையாக சகோதரர்களாய் வாழ வழி காட்டுகிறான் இராமன். 

அந்த குகனைப் பார்த்து "தாயினும் நல்லான் ", "தீராக் காதலன்" என்று அன்பு பாராட்டுகிறான்  இராமன்.

யாதினும் இனிய நண்ப!  என்று நட்பு பாராட்டுகிறான் 

நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா ? 

இன்று உலகில் எத்தனை சண்டைகள் - கறுப்பர் - வெளுப்பர், பாலஸ்தினியர் - இஸ்ரேலர் , தமிழர் - சிங்களவர் , இந்தியா - பாக்கிஸ்தான் என்று ஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு இனமும் ஒன்றை ஒன்று  அழிக்க நினைத்து சண்டை இட்டுக் கொண்டிருகின்றன....

அன்பும் சகோதரத்துவமும் அழிந்து போய் விட்டன ...

இதை படிக்கும் நீங்கள், இதுவரை தூரத்தில் வைத்த சில நபர்கள் நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கூட  இராமன் காட்டிய வழியில் நீங்கள் முதல் அடி எடுத்து வைத்து இருக்கீர்கள்  என்று பொருள்.

யோசித்துப் பாருங்கள் எவ்வளவு  இராமனிடம் எவ்வளவு அன்பும், கருணையும் இருந்திருக்க வேண்டும்... 

நெகிழ வைக்கும் அன்பு. 

இராமாயணம் படிப்பது கம்பனின், வால்மீகியின்  கவித்திறமையை இரசிக்க மட்டும் அல்ல.அவர்கள் சொல்ல வந்ததை உணர்ந்து அதில் ஒரு சிலவற்றையாவது நாம் உள் வாங்கி அதன் படி நடக்க வேண்டும்...அது நாம் அவர்களுக்குச் செய்யும் கைம்மாறு.....

நம்மை விட தாழ்தவர்களை, மதித்து அவர்களிடம் அன்பு பாராட்டி வாழ முயற்சிப்போம்.

அவர்களோடு, இராமன் செய்தது மாதிரி  ஒன்றாக இருக்க வேண்டாம், அவர்களை நமது உடன் பிறப்பாய் நினைக்க வேண்டாம், அவர்களை பாராட்ட வேண்டாம்...அவர்களை அங்கிகரிக்கவாவது செய்வோம்...

கம்பன் சந்தோஷப் படுவான் - பட்ட பாடு வீணாகவில்லை என்று....   

 

இராமாயணம் - இராமன் என்னும் வாழ்க்கை நெறி


இராமாயணம் - இராமன் என்னும் வாழ்க்கை நெறி  


அவதாரம் என்ற சொல்லுக்கு எது கீழே இறங்கி வர வேண்டிய அவசியமே இல்லாவிட்டாலும், கீழே இருப்பவர்களை மேலே ஏற்றிவிட வந்ததோ அது என்று பொருள் படும். 

திருமாலுக்கு இந்த பூமிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் இங்குள்ள மக்களை மேலே உயர்த்தி விட அந்த சக்தி கீழே இறங்கி வந்தது. எனவே அது அவதாரம். 

இரு கை வேழத்து இராகவன்தன் கதை

வேழம் (யானை ) என்ன செய்யும்...தன் காலை பிடித்தவர்களை தன் தலைக்கு மேலே தூக்கி விடும். அது போல நம்மை கடைந்தேற்ற வந்த ஒரு சக்தி இராமன். 

நீங்கள் இறைவனை நம்புங்கள், நம்பாமல் இருங்கள். 

நீங்கள் இராமன் என்று ஒருவன் இருந்தான் என்பதை நம்புங்கள், அல்லது நம்பாமல் போங்கள்.

இராமாயணம் ஒரு கதை என்றே இருக்கட்டும். 

நான் எதற்கு இராமாயணம் படிக்க வேண்டும் ? வேற வேலை இல்லையா ? அதைவிட ஆயிரம் முக்கியமான வேலை இருக்கு...இது எல்லாம் தாத்தா பாட்டி  வயசுல படிக்க  வேண்டியது ..இப்ப என்ன அவசரம் என்று நினைக்கும் இளைய தலை முறைக்கு அவர்கள் வாழ்வை எதிர் கொள்ள உதவும் ஒரு அற்புதமான நூல்  கம்ப இராமாயணம். 

இளைய தலைமுறை தான் இதை முதலில் படிக்க வேண்டும். 

அந்த கதையில் வாழ்ந்த ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்று காட்டி இருக்கிறான். 

நம் வாழ்வின் வரும் ஒவ்வொரு சிக்கலும் அவன் வாழ்விலும் வந்தது. இன்னும் சொல்லப் போனால் நம்மைவிட பல மடங்கு துயரம் அவனுக்கு வந்தது. அவன் அவற்றை எப்படி எதிர் கொண்டான், எப்படி வாழ்ந்தான் என்ற செய்தி நமக்கு கிடைக்கிறது 

தொழிலில் சின்ன நஷ்டம், வாங்கிய பங்கு (share ) விலை குறைந்து விட்டால், வீடு ஒரு மாதம் வாடகைக்கு  போகாமல் பூட்டி இருந்து விட்டால் ஏதோ உலகமே இருண்டு போன மாதிரி  கவலைப் படுகிறோம்....

நாம் மலை போல் நம்பிய ஒருவர் நம்மை கை விட்டால் நாம் எப்படி உடைந்து போவோம்..

உறவினர்களை, நண்பர்களை எப்படி அரவணைத்துப் போவது, பெரியோரிடம் மரியாதை, ஆசிரியரிடம் பக்தி, மனைவியிடம் அன்பு, அண்டியவர்களை காக்கும் உயர் குணம், மற்றவர்களின் உயர் குணங்களை பாராட்டும் நற்பண்பு, பொறுமை, வீரம், இதமாக பேசுவது, இனிமையாகப் பேசுவது, மக்களை எடை போடுவது, அன்பு பாராட்டுவது, மற்றவர்களின் நலனில் அக்கறை கொள்வது , பாசம், இறை உணர்வு, என்று வாழ்வின் அத்தனை  பரிணாமங்களையும் தொட்டுச் செல்கிறது இராமன் என்ற அந்த கதா பாத்திரம். 

வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று காட்டிச் செல்கிறது. 

வாழ்வில் சிக்கல் வரும்போது, துன்பம் வரும் போது , கவலை வரும்போது, இழப்புகளும், நட்டங்களும்  வரும்பொழுது என்ன செய்யலாம், எப்படி செய்யாலாம் , யாரக் கேட்கலாம் என்று நாம் தவிக்கும் போது, நமக்கு வழி காட்டியாய் இருப்பது இராமனின் வாழ்க்கை. 


கம்ப இராமாயணம் காட்டும் இராமனின் வாழ்க்கை நமக்கு எப்படி உதவும், வழி காட்டும், துன்பங்களை தாங்கிக் கொள்ள, சிக்கல்களை விடுவிக்க, எப்படி அது உதவும் என்ற  அடுத்து வரும் சில ப்ளாகுகளில் சிந்திப்போம்.