Tuesday, April 16, 2013

திருக்குறள் - கண்டவுடன் காதலா ?

திருக்குறள் - கண்டவுடன் காதலா ?


இன்பத்துப் பால்....வள்ளுவர் 25 அதிகாரம், 250 பாடல் எழுதி இருக்கிறார்.

அத்தனையும், காதல் சொட்டும் பாடல்கள். 8 வார்த்தையில் காதலை இவ்வளவு அழுத்தமாய் சொல்ல முடியுமா என்று உதட்டோரம் புன்னகையை வரவழைக்கும் பாடல்கள்.

அதிகாரங்களை வரிசைப் படுத்துவதில் ஆகட்டும், அதிகாரத்திற்குள் பாடல்களை வரிசைப் படுத்துவது ஆகட்டும் ...அதிலும் ஒரு அழகு சேர்த்திருக்கிறார் வள்ளுவர்.

முதல் பாடல்....தலைவன் முதன் முதலாக தலைவியை சந்திக்கப் போகிறான். அவள் தான் அவன் தேடிய காதலி என்று அவனுக்குத் தெரியாது. அவளுக்கும் தெரியாது இன்று அவள் அவளின் காதலனை காணப் போகிறாள் என்று.

அவள் பாட்டுக்கு சோலையில் உலவிக் கொண்டு இருக்கிறாள்.

அவன், அந்த சோலைக்கு வருகிறான். அவள் இருப்பாள் என்று இவனுக்குத் தெரியாது. அவன் வருவான் என்று இவளுக்கும் தெரியாது. இருவரும் ஒருவரை ஒருவர் இதுவரி பார்த்துக் கொண்டது கூட தெரியாது.


வள்ளுவர் காமிரா கோணம் வைக்கிறார் ...கதாநாயகன் பார்வையில் இருந்து.

ஒரு லாங் ஷாட். தூரத்தில் அவள் இருக்கிறாள்.

நடக்கிறாளா , மிதக்கிறாளா என்று தெரியவில்லை.  காற்றோடு கை கோர்க்கும் `கூந்தல், அலைபாயும் மேலாடை...தேவதை மாதிரி இருக்கிறாள்....ஒரு வேளை உண்மையாவே தேவதையோ என்று சந்தேகம் கொள்கிறான்...

அணங்கு கொல் ?

இன்னும் கொஞ்சம் கிட்ட போகிறான். கொஞ்சம் க்ளோஸ் அப் ...இல்லை...தேவதை இல்லை...அவள் அசைந்து வருவது தெரிகிறது...அழகான மயில் போல் இருக்கிறாள்...

ஆய் மயில் கொல் ?

இன்னும் கொஞ்சம் கிட்ட போகிறான்...இன்னும் கொஞ்சம் க்ளோஸ் அப் ....

இல்லை, மயில் இல்லை...காதில் கம்மல் போட்டு இருக்கிறாள்...மயில் கம்மல் போட்டு இருக்குமா ? இவள் மானுடப்  பெண் தான்

மாதர் கொல்  ?

பாடல்

அணங்கொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொன் மாலுமென் னெஞ்சு.


கொஞ்சம் பொருள் பிரிக்கலாம்

அணங்கு கொல் ஆய் மயில் கொல்லோ கனங் குழை
மாதர் கொல்  மாலும் என் நெஞ்சு


பொருள்


திருக்குறள் - ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்


திருக்குறள் - ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்

ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப்படும். 


உலகிலேயே மிக உயர்ந்த பொருள் எது என்று கேட்டால் யாரும் தயங்காமல் சொல்லும் பதில் அவர்களுடைய உயிர் தான். அதை விட சிறந்த பொருள் ஒன்று இருக்கிறது என்கிறார் வள்ளுவர். 

அது தான் ஒழுக்கம்.

ஒழுக்கம் உயர்ந்தது. சிறந்தது. அது எவ்வளவு சிறந்தது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அது உயிரை போன்றது. ஏன் என்றால் போனால் வராது. 

சரி, ஒழுக்கம் உயிரை போன்றது என்று சொல்லி இருக்கலாமே , அது ஏன் உயிரினும் என்று உம்மை சேர்த்து சொல்லி இருக்கிறார் வள்ளுவர் ? 

காரணம் இருக்கிறது. 

உயிர் போன பின் நமக்கு வலி இல்லை. ஒரு வேளை போகும் போது வலிக்கலாம். ஆனால் ஒழுக்கம் போன பின்பும் நாம் வாழ வேண்டி இருக்கும். அது மிகுந்த வேதனையை தரும். எனவே, ஒழுக்கம் உயிரினும் மேலானாதாகக் கருதப்படும். 

அது என்ன விழுப்பம் ? 

விழுப்பம் என்றால் சிறந்தது, உயர்ந்தது என்று பொருள். 
 
வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் என்பார் மணிவாசகர். வேதத்தின் சிறந்த பொருள் அவன் என்ற அர்த்தத்தில். (முழுப் பாடலும் கீழே) 

ஒழுக்கம் சிறப்பை தரும். உயிர் சிறப்பை தராது. எத்தனையோ பேர் உயிரோடு இருக்கிறார்கள். யாருக்குத் தெரியும் ? 

உயிர் இருக்கும் வரை தான் நமக்கு பேர், வணக்கம், மரியாதை எல்லாம். உயிர் போய் விட்டால் "பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு " என்று பட்டினத்தார் கூறியது போல நாம் பிணம். ஆனால் ஒழுக்கத்தோடு இருந்தால், உயிர் போன பின்னும், நம் பேர் நிலைத்து நிற்கும். வாழும் காலம் மட்டும் அல்ல, அதற்க்கு பின்னும் நமக்கு சிறப்பை தருவதால், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் 

வீடு தீபிடித்துக் கொண்டால், போட்டது போட்டபடி உயிரை காத்துக் கொள்ள வெளியே ஓடுவோம். உயிரை விட எதுவும் பெரியது அல்ல. எனவே, மற்றவை போனாலும் பரவாயில்லை, உயிரை காத்துக் கொள்ள ஓடுகிறோம்.

உயிரா ஒழுக்கமா என்ற கேள்வி வந்தால் ? வள்ளுவர் விடை தருகிறார் ...ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 

ஓம்புதல் என்றால் பாதுகாத்தல். உயிரை பாதுகாக்க வேண்டும். உயிரினும் ஓம்பப்படும் என்று கூறியதால், அதைவிட கவனமாக, உயிரை விட கவனமாக ஒழுக்கத்தை காக்க வேண்டும்.. 




திருவெம்பாவை பாடல் 


ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

(திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார் )


Monday, April 15, 2013

இராமாயணம் - எனக்கு நீ செய்யத்தக்க கடன் எல்லாம்

இராமாயணம் - எனக்கு நீ செய்யத்தக்க கடன் எல்லாம்


ஒரு முறை ஒரு பெரிய பணக்காரன் ஒரு ஜென் துறவியிடம் ஆசீர்வாதம்   வாங்கச் சென்றான்.

அந்த ஜென் துறவி "முதலில் நீ சாவாய் , அப்புறம் உன் மகன் சாவான், அப்புறம் உன் பேரன் சாவான்" என்று ஆசீர்வாதம் பண்ணினார்.

பணக்காரனுக்கு ரொம்ப கோவம்." என்ன குருவே இப்படி சொல்றீங்க ... ஆசீர்வாதம் வாங்க வந்தால் எல்லோரும் சாக வேண்டும் என்று சொல்கிறீர்களே " என்றான்.

அதற்கு அந்த ஜென் துறவி சொன்னார்..."யோசித்துப் பார், முதலில் உன் பேரன் இறந்து , அப்புறம் உன் மகன் இறந்து, அதற்குப் பின் நீ இறந்தால் எப்படி இருக்கும் என்று "

உலகிலேயே மிக மிக துக்ககரமான நிகழ்வு பிள்ளைகள் பெற்றோருக்கு முன் இறப்பது.

இந்திரஜித்து இறந்து விட்டான். இராவணன் களம் வந்து மகனின் சடலத்தை தேடுகிறான் . தேடி கண்டு பிடித்து அழுகிறான், புலம்புகிறான்...

அவன் பத்து தலையும் எப்படி அழுதது என்று கம்பன் பத்து பாட்டு எழுதி இருக்கிறான். இரசிகமணி டி கே சி சொல்லுவார், அடடா இராவணனுக்கு நூறு தலை  இல்லையே, இருந்திருந்தால் இன்னுமொரு தொண்ணூறு பாடல் கிடைத்திருக்குமே என்று.

இராவணன் புலம்பல், நெஞ்சை உருக்கும் பாடல்கள். தரசதன் புலம்பினான், தரசதன் இறந்ததை கேட்ட இராமன் புலம்பினான், வாலி இறந்த பின் தாரை புலம்பினாள், மண்டோதரி புலம்பினாள் இராவணன் இறந்த பின்....எல்லாவற்றையும் விட சோகம் ததும்பும் பாடல்கள் இராவணன் புலம்பல்...எப்பேர்பட்ட  வீரன்... அவன் புலம்புகிறான் ....மகன் இறப்பதற்கு தானே காரணம் என்ற எண்ணம் அவனை மேலும் வாட்டுகிறது....

பாடல்



சினத்தொடும் கொற்றம் முற்ற, இந்திரன் செல்வம் மேவ,
நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி நீரால்,
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி,
உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் உலகத்து உள்ளார்?' 




பொருள்



Sunday, April 14, 2013

அபிராமி அந்தாதி - அறிவில் நிறைந்த அமுதம்


அபிராமி அந்தாதி - அறிவில் நிறைந்த அமுதம்




ஆகாய விமானத்தில் போய் இருக்கிறீர்களா ? போகும் போது வெளியே பார்த்து இருக்கிறீர்களா ? பஞ்சு பஞ்சாய் மேகம் மிதக்கும். அதன் மேல் சூரிய ஒளி பட்டு வர்ண கலவையாக மாறிக் கொண்டே இருக்கும்....ஒரு புறம் மிதந்து செல்லும் மேகம், மறு புறம் இடம் மாறிக் கொண்டே இருக்கும் சூரியன்...கண் முன்னே இனிய காட்சி மாறிக் கொண்டே இருக்கும்.விமானத்தில் இருந்து ஒரு எட்டு வெளியே போய் அந்த மேகங்களின் மேல் நடக்க ஆசையாய் இருக்கும், அதை தொட்டு பார்க்க ஆசையாய் இருக்கும்....

பறவைகள் சிறகடித்து பறக்கும் வானம், மழை மேகம் வட்டமிடும் வானம், மின்னல் கோலம் போடும் வானம்...

சூரியன், நிலவு, கோள்கள், நட்சத்திரங்கள், பரந்து விரிந்த இந்த பால் வெளி (milky way) ....விரிந்து கொண்டே போகும் இந்த வானம் ஒரு அற்புத காட்சி...

அபிராமியின் அழகுக்கு பறந்து விரிந்து அந்த வானம் கூட ஒரு எல்லை இல்லை. எல்லை இல்லாத இந்த பரந்த வெளி கூட அவளின் அழகுக்கு இணை இல்லை.

"வான் அந்த மான வடிவு உடையாள் " (அந்தம் முடிவு, எல்லை. வேதாந்தம் - வேதத்தின் முடிவு )

புலன்களுக்கு இன்பம் சேர்பவை அறிவுக்கு இன்பம் சேர்பவையாய் இருக்காது.  அறிவுக்கு இன்பம் சேர்ப்பவை புலன்களுக்கு இன்பம் சேர்பவையாய் இருக்காது. இரண்டும் சேர்ந்து கிடைப்பது அபூர்வம்.

அபிராமி "ஆனந்தமாய் அறிவாய் " இருக்கிறாள். மனதுக்கும் அறிவுக்கும் சுகம், இனிமை சேர்ப்பவள்.

அமுதம் உடலையும் உயிரையும் இணைப்பது. அதனால் தான் நாம் உண்ணும் உணவுக்கு அமுது என்று பெயர்.

அபிராமி "அமுதமாய்" இருக்கிறாள்.


எந்த புத்தகத்தை படித்தாலும், இறுதியில் அது என்ன சொல்ல வருகிறது என்று அறிய வேண்டும். ஏதோ நோக்கத்திற்காகத் தான் புத்தகங்கள் எழுதப் படுகின்றன.

நான்கு வேதங்களும் இறுதியில் சொல்லும் அர்த்தம் அபிராமி. "மறை நான்கினுக்கும் தான் அந்தமான வடிவு உடையாள்".  நான்கு வேதங்களுக்கும் அவளே முடிவு.

அப்படி பட்ட அபிராமியின் பாதம், சரணார விந்தம், இருக்கும் இடம் எது தெரியுமா ?

சுடுகாடு சாம்பல் பூத்து இருக்கும். அதற்கு தவள நிறம் என்று பெயர். அந்த காட்டை நடன அரங்கமாய் கொண்டு  நடனம் இடுபவன் சிவன். அந்த சிவனின் தலையில் அவளின் பாதம் இருக்கிறது.

அன்பின் உச்சம்...மனைவி தாயாகத், தெய்வமாகத் தெரியும் அன்பின் உச்சம்.

அன்பின் உச்சம்...கணவன் குழந்தையாகத் தெரியும் பரிவு.

அன்பின் உச்சம் ... நெற்றியில் மட்டும் அல்ல, பாதத்திலும் முத்தமிட தோன்றும்....


பாகு கனி மொழி மாது குற மகள் பாதம் வருடிய மணவாளா என்பார் அருணகிரி நாதர். எனக்காக இந்த காடு மேடு எல்லாம் அலைந்தாயா என்று அவளின் குற வள்ளியின் பாதங்களை வருடி விட்டாராம் முருகன் 


நாள் எல்லாம் ஓடி ஆடி களைத்து போன மனைவியின் பாதம் பிடித்துப் பாருங்கள்...அன்பின் இன்னொரு பரிணாமம் தெரியும்....


பாடல் 



ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.


பொருள்



Saturday, April 13, 2013

திருக்குறள் - தீயதும் இல்லாததும்


திருக்குறள் -  தீயதும் இல்லாததும் 


தீமை செய்பவர்கள் எல்லோரும் ஏதேனும் ஒரு காரணம் வைத்து இருப்பார்கள். பெரும்பாலானோர் கூறுவது வறுமை, மற்றும் ஏழ்மை. என்னிடம் ஒன்றும் இல்லை எனவே திருடினேன், கொள்ளை அடித்தேன், பணம் தருகிறேன் என்று சொன்னதால் கொலை செய்தேன், பொய் சாட்சி சொன்னேன், ஆள் கடத்தினேன் என்று சொல்லுவார்கள்.

பசி வர பத்தும் பறந்து போகும் என்று சொல்லுவார்கள்.

வள்ளுவர் சொல்கிறார், நீ இல்லை என்று தீமை செய்யாதே. உன்னிடம் பொருள் இல்லாமல் இருக்கலாம், உன்னிடம் ஒழுக்கம் இருக்கிறது, இதுவரை பிறர் பொருளை விரும்பாத நல்ல குணம் இருக்கிறது, ஞாயம் அநியாயம் அறியும் அறத்தின் பாற்பட்ட அறிவு இருக்கிறது.

இல்லை என்று தீயவை செய்தால், இந்த பொருள் மட்டும் அல்ல இந்த நல்ல குணங்களும் இல்லாமல் போகும்.

நல்ல பெயர் போய் விட்டால் அதை சம்பாதிப்பது மிக மிக கடினம். எனவே வறுமை காரணமாக தீமை செய்து இன்னும் வறுமையை சம்பாதித்துக் கொள்ளாதே.


பாடல்

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.


பொருள்



இராமாயணம் - போனானை காத்து போனான்


இராமாயணம் - போனானை காத்து போனான் 


இராமன் பதினாலு ஆண்டு கழித்து வருவேன் என்று சொல்லிவிட்டு போனான். சொன்ன பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது. இராமன் வரவில்லை. ஏதோ தாமதம். இராமன் வரும் வரை நாம் இன்னும் கொஞ்ச நாள் ஆளலாமே என்று பரதன் நினைக்க வில்லை. இராமன் கானகம் போகும் போதே பரதன் சொல்லி இருந்தான்..."நீ பதினாலு ஆண்டில் வரவில்லை என்றால் தீக் குளிப்பேன்" என்று.

சத்ருக்கனா, நீ இந்த ஆட்ச்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள். நான் உயிரை விடப் போகிறேன் என்று பரதன் கூறினான்.

சத்ருக்கனன் துடித்துப் போனான்....

இந்த அரசை விட்டு, காட்டை ஆள போனவனை காத்து அவன் பின்னால் போனவனும் ஒரு தம்பி. அண்ணன் வர தாமதம் ஆகி விட்டது என்று உயிரை விடத் துணிந்தவனும் ஒரு தம்பி. 
இவர்களுக்கு இடையில், இந்த அரசை ஏற்று நடத்த நான் ஒரு தம்பி...நல்லா இருக்கு இந்த கதை....


பாடல் 

'கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் 
போனானைக் காத்து, பின்பு 
போனானும் ஒரு தம்பி; ''போனவன் 
தான் வரும் அவதி போயிற்று'' என்னா, 
ஆனாத உயிர் விட என்று அமைவானும் 
ஒரு தம்பி; அயலே நாணாது, 
யானாம் இவ் அரசு ஆள்வென்? என்னே, 
இவ் அரசாட்சி! இனிதே அம்மா!

பொருள் 
 

Wednesday, April 10, 2013

இராமாயணம் - பிழை காண்பது


இராமாயணம் - பிழை காண்பது 


வெளியே போக வேண்டும் என்று மனைவி சொல்லி இருப்பாள். கணவன் வேண்டாம் என்று சொல்லி இருப்பான். பின் கொஞ்சம் பேச்சு வார்த்தைக்கு பின், சரி வா என்று கணவன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்றிருப்பான்.

போன இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும்..பணப் பை (purse ) தொலைந்து இருக்கலாம், கல் தடுக்கி கீழே விழுந்து அடி பட்டிருக்கலாம்...

உடனே கணவன் மனைவியை பார்த்து " எல்லாம் உன்னால் தான்...நான் அப்பவே சொன்னேன்...பேசாமல் வீட்டில் இருக்கலாம் என்று...கேட்டாத் தானே" மனைவி செய்யாத தவறுக்கு அவளை கணவன் திட்டுவதை பார்த்து இருக்கிறோம்.

இந்த மாதிரி சம்பவங்கள் வீட்டில் மட்டும் அல்ல, அலுவலகத்தில் கூட நடக்கலாம். ஏதோ ஒரு முடிவு எடுத்து, அது தவறாகப் போனால் யாரையாவது  பிடித்து பலி கடாவாக ஆக்கி விடுவார்கள்.

நடந்த தவறுக்கு யாருமே காரணமாய் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் வரும் கோபத்தில் யாரையாவது குறை கூறுவது என்பது மனித இயல்பு.

இராமனின் மணி முடியை பறித்து அவனை காட்டுக்கு போகச் சொல்லி விட்டார்கள் .

இலக்குவனுக்கு அடங்காத கோபம். விதிக்கு விதி காணும் என் வில் தொழில் காண்டி என்று புறப்பட்டான்.

அவனை தடுத்து, இராமன் சமாதனம் கூறுகிறான்.

தவறு நடந்தது என்றே கொண்டாலும் அதற்க்கு யாரும் காரணம் இல்லை

நதியில் நீர் இல்லை என்றால் அது நதியின் குற்றம் அன்று.. மழை பொழியாத இயற்கையின் குற்றம்.

நான் கானகம் போவதற்கு காரணம் தசரதன் காரணம் இல்லை, கைகேயி காரணம் இல்லை, பரதன் காரணம் இல்லை...விதியின் பிழை என்று கூறுகிறான்.

நாமாக இருந்தால் தசரதனை குறை கூறி இருப்போம், அல்லது கைகேயியை அல்லது பரதனை குறை கூறி இருப்போம்.. அவர்கள் மேல் கோபம் கொண்டு இருப்போம்.. கோபம் வெறுப்பை தந்திருக்கும்

இராமன் அவர்கள் யாருமே தவறு செய்யவில்லை. எல்லாம் விதிப் பயன் என்று நினைத்தான். எனவே அவர்கள் மேல் அவனுக்கு கோபம் வரவில்லை.


பாடல்

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான்.

பொருள்