Saturday, September 7, 2013

இராமாயணம் - அவை அடக்கம்

 இராமாயணம் - அவை அடக்கம் 


12000 பாடல்களுக்கு மேல் இழைத்து இழைத்து பாடிய கம்பர் அவை அடக்கம் சொல்லுகிறார்.

எளியவர்களில் எளியவனான நான், சொற்களை கொண்டு நூல் நூற்பது மாதிரி இந்த நூலை நூற்கத் தொடங்கி இருக்கிறேன்.

இந்த கதையின் நாயகன் இராமன்.

அவன் எப்பேர் பட்டவன் தெரியுமா ?

ஒரு இலக்கை நோக்கி அம்பு எய்தால் அது கட்டாயம் அந்த குறியை சென்று அடையும்.

எப்படித் தெரியுமா ?

தவ வலிமை உள்ளவர்கள் ஒரு சாபம் கொடுத்தால் அது எப்படி தப்பாமல் சென்று அடையுமோ அது போல சென்று அடையும். நடுவில் எத்தனை தடை வந்தாலும் அவற்றை தாண்டி இலக்கை சென்று அடைய வைக்கும் திறம் படைத்தவன் இராமன்.

அவனுடைய கதையை கூட நான் முதன் முதலாகச் சொல்ல வில்லை. வால்மீகி முதலில் வட மொழியில்  சொல்லிவிட்டார்.அவர் பெரிய தவ சீலர். அவர் சொன்னதை நான் மீண்டும் சொல்கிறேன். அவ்வளவுதான். 

கம்பன் இந்தப் பாட்டில் விளையாடுகிறான்...

பாடல்

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை 
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே.

பொருள்


நொய்தின் நொய்ய = எளிமையிலும் எளிமையான, கீழிலும் கீழான

சொல் நூற்கலுற்றேன் = சொற்களை கொண்டு நூற்க தொடங்கி உள்ளேன்

எனை = என்ன ஒரு அதியசம்

வைத வைவின் = பெரியவர்கள் இட்ட சாபம் போல

மராமரம் = மராமரங்களை

ஏழ் துளை = ஏழு துளை செய்து

எய்த எய்தவற்கு = சென்று அடையும்படி எய்தவற்கு

எய்திய = அப்படிப்பட்ட திறமையை கொண்ட

மாக்கதை = பெரிய கதை

செய்த = செய்த 

செய் தவன் = தவம் செய்தவன். செய்த தவம், செய்கின்ற தவம், செய்யும் தவம். வினைத்தொகை. வால்மீகி.

சொல் நின்ற தேயத்தே. =  அவனுடைய சொல் நின்ற தேசத்தில்


கம்பனின் சொல் விளையாட்டை கொஞ்சம் பார்ப்போம் 

எய்த எய்தவற்கு எய்திய - மூன்று எய்த என்று வருகிறது.  

முதல் "எய்த" என்பதற்கு அம்பை  எய்த என்று பொருள். 

இரண்டாவது "எய்தவற்கு"  என்பதற்கு அம்பை செலுத்திய இராமன். எய்தவன். 

மூன்றாவது "எய்திய" என்பதற்கு அடைந்த என்று பொருள் .  

அதே போல் 

செய்தவன் என்ற சொல் விளையாட்டு 

செய்தவன் என்றால் உருவாகியவன் என்று பொருள்.

செய் தவன் என்றால் தவம் செய்தவன் என்று பொருள் 

திருக்குறள் - பரிமேலழகர் உரை

திருக்குறள் - பரிமேலழகர் உரை 


இவற்றுள் வழக்கும் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவதல்லது, ஒழுக்கம்போல மக்கள் உயிர்க்கு உறுதி பயத்தல் சிறப்பிலவாகலானும், அவைதாம் நூலானே அன்றி உணர்வு மிகுதியானும் தேய இயற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து, ஈண்டு தெய்வப்புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் என எடுத்துக் கொள்ளப்பட்டது.


     அதுதான் நால்வகை நிலைத்தாய், வருணந்தோறும் வேறுபாடு உடைமையின், சிறுபான்மை ஆகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலின் பெரும்பான்மை ஆகிய பொது இயல்பு பற்றி, 'இல்லறம்' 'துறவறம்' என இருவகை நிலையால் கூறப்பட்டது.

-------------------------------
அறம் என்பது  ஒழுக்கம்,வழக்கு , தண்டனை என்ற மூன்று கூறுகளை கொண்டது என்று பார்த்தோம்.

இதில் வழக்கும், தண்டமும் உலகியல் வாழ்க்கைக்கு மட்டும் உதவும். ஒழுக்கமோ, இம்மைக்கும் மறுமைக்கும் உதவி செய்யும். உயிருக்கு உறுதி தரும் என்கிறார் பரிமேலழகர்.  மேலும் இந்த வழக்கும் தண்டமும்  படித்து தெரிந்து கொள்வதை விட உணர்ச்சி வசப் படுதலாலும் , உடம்பின் இயற்கையாலும் கூட அறிய முடியும்.  எடுத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் , ஒழுக்கம் என்பது என்ன என்று சொன்னால் அன்றித் தெரியாது.

எனவே வள்ளுவர் ஒழுக்கம் என்பதை மட்டும் அறம் என்று எடுத்துக் கொள்கிறார்.

அந்த ஒழுக்கமும் 4 வகை நிலைகளில் (பிரமச்சாரியம், இல்லறம், வானப்ரஸ்தம், துறவறம் ) வர்ணத்திற்கு வர்ணம் (பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் ) மாறுபடும் இயல்புடையது.  அப்படி மாறும் ஒழுக்கங்களை விட்டு விட்டு, எல்லோருக்கும் பொதுவான இல்லறம், துறவறம்  என்ற இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு வள்ளுவர் திருக்குறளை  இயற்றினார்.

ஒரு வழக்கை எப்படி நடத்த வேண்டும், எந்த வழக்குக்கு எந்த மாதரி சாட்சியங்கள் வேண்டும், தடயங்கள் வேண்டும், அதற்கு எவ்வளவு தண்டனை தர வேண்டும் என்று   எழுதிக் கொண்டு போனால் அதற்கு ஒரு எல்லையே இருக்காது.

மேலும், இவை காலம் காலமாக மாறிக் கொண்டே வரும்.

எனவே அவற்றை வள்ளுவர் விட்டு விட்டார்.

 வழக்கையும்,தண்டத்தையும் அவர் விட்டதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

மனிதன் ஒழுக்கமாக இருந்து விட்டால் வழக்கும் தண்டனையும் தேவையே இருக்காது.

எனவே மனிதனை முதலில் ஒழுக்க நெறியில் செலுத்த வேண்டி அதை அறமாகக் கொண்டு  திருக்குறள் எழுதினர் என்று பரிமேல் அழகர்  கூறுகிறார்.


Friday, September 6, 2013

அரிச்சந்திர புராணம் - கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேம்

அரிச்சந்திர புராணம் - கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேம் 


அரிச்சந்திர புராணம்.

கல் மனதையும் கரைய வைக்கும் கதை. கண்ணில் நீர் தளும்பாமல் படிக்க முடியாது.

என்ன ஆனாலும் சரி, உண்மை பேசுவதை விடுவதில்லை என்று உறுதியோடு இருக்கிறான் அரிச்சந்திரன். அவன் மனைவியும் அவனுக்கு உறு துணையாக இருக்கிறாள்.

நாட்டை  இழந்தான். சொத்து சுகங்களை இழந்தான். மனைவியை ஒரு அந்தணனுக்கு விற்றான். மகன்  போனான். மனைவிமேல் கொலைப் பழி விழுந்தது. அவளை தெருவில் இழுத்துக் கொண்டு கொலை களத்திற்கு கொண்டு  போனார்கள். அவளை சிரச் சேதம்  பொறுப்பும் அரிச்சந்திரனிடம் கொடுக்கப்  பட்டது.

கௌசிக முனிவன் அப்போது வந்து சொல்கிறான் " அரிச்சந்திரா, ஒரே ஒரு பொய் சொல். நீ எனக்கு அரசை தரவில்லை என்று ஒரு பொய் சொல். நீ இழந்த அத்தனையும் உனக்குத் திருப்பித் தருகிறேன் " என்றான்.

அரிச்சந்திரன் ஒத்துக்  கொள்ளவில்லை. அவன் மனைவியும் அதற்கு ஒப்பவில்லை. இருவரும் கௌசிக முனிவனிடம் கூறினார்கள்.....

"எம் அரசை இழந்தோம்... எங்கள் பிள்ளையை இழந்தோம்...எங்கள் சொத்து சுகம் எல்லாம் இழந்தோம். இனி எங்களுக்கு என்று இருக்கிறது என்று நினைக்க ஒன்றே ஒன்று தான் இருக்கிறது ...அது நல்ல கதி அல்லது சொர்க்கம். அதையும் இழந்தாலும் பரவாயில்லை சொன்ன சொல்லை  இழக்க மாட்டோம் " என்று கூறினார்கள்.  அதை கேட்ட முனிவன் மதி இழந்து, சொல்ல சொல் இல்லாமல் மறைந்தான். 

பாடல்

பதிஇ ழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த 
நிதிஇ ழந்தனம் இனிநமக் குளதென நினைக்கும்
கதிஇ ழக்கினும் கட்டுரை இழக்கிலேம் என்றார்

மதிஇ ழந்துதன் வாயிழந்(து) அருந்தவன் மறைந்தான்.

பொருள்

பதிஇ ழந்தனம் = அரசை இழந்தோம்

பாலனை இழந்தனம் = பிள்ளையை இழந்தோம்

படைத்த நிதி இழந்தனம் = நாங்கள் கொண்ட நிதியை இழந்தோம்

இனி நமக்குளதென நினைக்கும் = இனி எங்களுக்கு உள்ளது என்று நினைக்கும்

கதி இழக்கினும் = நல்ல கதியை இழக்கினும்

 கட்டுரை இழக்கிலேம் என்றார் = சொன்ன சொல் தவற மாட்டோம் என்றார்


மதி இழந்துதன் வாயிழந்(து) அருந்தவன் மறைந்தான் = மதி இழந்து, சொல்ல     வார்த்தை  இல்லாமல் கௌசிகன் மறைந்தான்.

பாடல் சொல்லும் செய்தி என்ன ?

செய்யும் செயல் சரியானது என்று முடிவு பண்ணிவிட்டால் எத்தனை தடை  வந்தாலும், எவ்வளவு இன்னல் வந்தாலும் உறுதியாக இருக்க வேண்டும்.

உண்மை சொல்வது சரியானது என்று முடிவு செய்து  விட்டான். ஒரு இம்மி அளவும் பின்  வாங்க வில்லை. ஆனது ஆகட்டும் என்று தான் சரி என்று நினைத்த  வழியில் இறுதி வரை சென்றான்.

சின்ன சின்ன துன்பங்கள், தடைகள் வந்தாலும் துவண்டு போகிறோம். எதுத்த காரியத்தை  கை விட்டு  .விடுகிறோம்.

சிறு தோல்விகள் நம்மை சோர்வடையச் செய்து விடுகின்றன.

நம்மால் முடியாது என்று பின் வாங்கி விடுகிறோம்.

அது கூடாது.

பதினாலு வருடம் காட்டுக்குப் போ என்றால் சிரித்துக் கொண்டே போனான் இராமன்.

பதுமூன்று வருடம்  வனவாசம்,ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் - சரி என்று போனார்கள்   பாண்டவர்கள்.

செய்யும் செயலில் உறுதி வேண்டும். சவால்களை கண்டு துவளக் கூடாது என்று உரமூட்ட   வந்தவை இந்த கதைகள்

சொல்லித்தாருங்கள் உங்கள்  .பிள்ளைகளுக்கும் வருங்கால சந்ததியினருக்கும்.


இராமாயணம் - பாணி வில்லுமிழ்

இராமாயணம் - பாணி வில்லுமிழ் 


நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும் என்ன வித்தியாசம் ?

நல்லவர்கள், அவர்களுக்கு கோபம் வந்தால் அதை ஒரு கணத்தில் மறந்து விடுவார்கள்.

குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது

என்பார் வள்ளுவர். குணத்தில் நல்லவர்கள், கோபம் வந்தால், அது அவர்களிடம் ஒரு கணம் கூட நிற்காது.

ஆனால் கெட்டவர்களுக்கு கோபம் வரும் படி நாம் நடந்து கொண்டால், அதை அவர்கள் ஆயுள் உள்ள வரை மறக்க மாட்டார்கள்...எப்படியாவது நம்மை பழி தீர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பார்கள்.

அன்று எனக்கு செய்தானே, அன்று எனக்கு செய்தானே என்று கருவிக் கொண்டே இருப்பார்கள்.

சிறு வயதில் இராமன் கூனியின் மேல் மண் உருண்டை உள்ள அம்பை எய்தான். அதை அவள் மறக்க வில்லை. மனதில் வைத்து கருவிக் கொண்டே இருந்தாள் . எப்படியாவது இராமனுக்கு தீங்கு இழைக்க வேண்டும் என்று காத்து இருந்தாள் .

பாடல்

தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல்
மண்டினாள்-வெகுளியின் மடித்த வாயினாள்,
பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள். 

பொருள்

தொண்டைவாய்க் = சிவந்த இதழ்களை கொண்ட

கேகயன்  தோகை = கேகய மன்னனின் மகள் (கைகேயி)

கோயில்மேல் = மாளிகைக்கு

மண்டினாள் = அடைந்தாள்

வெகுளியின் மடித்த வாயினாள் = கோபத்தால் உதட்டைக் கடித்துக் கொண்டு

பண்டைநாள் = முன்பு ஒரு நாள்

இராகவன் = இராமனின்

பாணி = பாணி என்றால் கை. பாணிக் கிரகணம் என்றால் கையை பிடித்துக் கொள்ளுதல்.

வில்லுமிழ் = வில் உமிழ்ந்த

உண்டை = உருண்டை

உண்டதனைத் = அடி வாங்கியதை

தன் உள்ளத்து உள்ளுவாள் = தன் மனத்தில் நினைப்பாள்

தீயவர்கள் என்றும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். 

எப்போதோ சின்ன வயதில் செய்ததை, தெரியாமல் செய்ததை இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாள். 

எனவே தீயவர்களிடம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். 

அவர்களை திருத்துகிறேன் பேர்வழி என்று அவர்களோடு உறவாடக் கூடாது.  தெரியாமல், விளையாட்டாக நாம் ஏதோ ஒன்று சொன்னாலும், செய்தாலும் அதை மனதில் வைத்துக் கொண்டு   பின் நமக்கு பெரிய தீமையாக செய்து விடுவார்கள்.  

எனவேதான் அவ்வை, தீயாரை காண்பதும் தீது என்றாள் . அப்புறம் அல்லவா பழகி, பின் அவர்களை திருத்தி, நல்வழிப் படுத்துவது. அவர்களைப்  பற்றி    நினைப்பதும்  கூட தீது என்கிறார்  அவ்வையார்.

சரி அது  ஒரு புறம் இருக்கட்டும்....நீங்கள் எப்படி ?

மற்றவர்கள் உங்களுக்குச் செய்த தீமைகளை நினைத்துக் கொண்டே இருப்பீர்களா  அல்லது உடனே மறந்து விடுவீர்களா ?

எவ்வளவு நாள் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ, அவ்வளவு கெட்டவர்கள் நீங்கள் என்பது  பாடம். 

நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்பது வள்ளுவம். 

தீமைகளை அன்றே மறக்கப் படியுங்கள். 

Thursday, September 5, 2013

திருக்குறள் - வழக்கும் தண்டனையும்

திருக்குறள் - வழக்கும் தண்டனையும்




அறம் என்பது ஒழுக்கம், வழக்கு, தண்டனை என்ற மூன்று கூறுகளை உடையது என்று  பார்த்தோம்.

அதில்

வழக்காவது, ஒரு பொருளைத் தனித்தனியே 'எனது எனது' என்று இருப்பார், அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு, அப்பொருள் மேல் செல்வது. அது 'கடன் கோடல்' முதல் பதினெட்டுப் பதத்தது ஆம்.

அதாவது வழக்கு என்பது ஒரே பொருளை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் எனக்கு எனக்கு என்று தங்களுக்குள் சண்டை இட்டுக் கொள்வது. 

அதில் 

தண்டமாவது, அவ்வொழுக்க நெறியினும் வழக்கு நெறியினும் வழீஇயினாரை, அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்ப நாடி அதற்குத்தக ஒறுத்தல்.

தண்டனை என்பது ஒழுக்க நெறிக்கும் , வழக்கு நெறிக்கும் ஒத்துப் போகாதவர்களை  அந்த வழியில் நிறுத்தும் பொருட்டு செய்வது. 

இன்றைய தண்டனை பற்றிய சிந்தனை என்னவென்றால் , ஒருவனுக்கு கொடுக்கப்  படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பது.

பரிமேலழகர்   எழுதுகிறார்,தண்டனை என்பது வழி தவறியவர்களை சரியான  
வழியில் செலுத்த செய்யும் வழி முறைகள் என்று. 

அறம் என்பது பற்றி என்ன ஒரு தெளிவான சிந்தனை....!







இராமாயணம் - பாதம் அல்லது பற்றிலர்

இராமாயணம் - பாதம் அல்லது பற்றிலர் 



இராமாயணத்தில் இறை வணக்கம் மூன்று பாடல்களில் உள்ளது. இந்த மூன்று பாடலுக்கும் உரிய எழுதுவது என்றால் அதற்காக ஒரு தனிப் புத்தகமே  போடலாம்.

முதல் பாடல் - உலகம் யாவையும் என்று தொடங்கும் பாடல்.

மூன்றாவது பாடல்....

ஆதி. அந்தம். அரிஎன. யாவையும்
ஓதினார். அலகு இல்லன. உள்ளன.
வேதம் என்பன - மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர் - பற்று இலார்.

பல பொருள்களை உள்ளடக்கிய பாடல். கம்பன் வேண்டும் என்றே இப்படி எழுதினானா அல்லது அப்படி அமைந்து விட்டதா என்று  தெரியாது.

பொருள்


ஆதி. அந்தம். அரிஎன. யாவையும் ஓதினார்  =  தொடக்கம், முடிவு என்று அரியன யாவையும் ஓதியவர்கள்

அரியன என்றால் அரிதாக உள்ளவை என்று ஒரு பொருள்.

ஆதியும் அந்தமும் அரி (ஹரி) என யாவையும் ஓதினார் = ஆதியும், அந்தமும் ஹரி தான் என்று எல்லாவற்றையும் ஓதியவர்கள்

வேதம் முதலிய பாடங்களை படிக்கும் போது "அரி " என்று சொல்லி ஆரம்பித்து பின் அரி என்று சொல்லி முடிப்பது ஒரு  வழக்கம்.

அரி ஓம் என்று சொல்லும்போது அறிவோம் என்று நம்பிக்கை  பிறக்கிறது.

அலகு இல்லன. உள்ளன வேதம் என்பன  = அலகு என்றால்  அளவு.அளவு உள்ளது, இல்லாதது. அது என்ன உள்ளது, இல்லாதது ? வேதங்கள் இத்தனை என்று எண்ணிச் சொல்லி  விடலாம். ஆனால் அதில் உள்ள அர்த்தங்களை எண்ணிச் சொல்ல  முடியாது.


மெய்ந் நெறி = உண்மையான வழி

நன்மையன் பாதம் அல்லது பற்றிலர் - பற்று இலார் = நன்மை தரக் கூடியவனின் பாதம் அல்லது வேறு ஒன்றையும் பற்ற மாட்டார்கள்


தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே என்று முதல் பாடலில் சொன்னான்.

நாங்கள் சரண் அடைவது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. வேறு யாரெல்லாம்  அவன் பாதங்களை சரண் அடைகிறார்கள் என்று  கம்பன் சொல்லுகிறான்.

ஆதியும், அந்தமும், அரியன எல்லாம் ஓதி உணர்ந்த பெரியவர்கள் அவன்  பாதத்தை சரண் அடைகிறார்கள். 

அப்புறம், வேதங்கள் அவனை சரண்  அடைகின்றன.

மூன்றாவது, பற்றற்ற துறவிகள் அவன் பாதத்தையே பற்றுகிறார்கள்.

சரண் அடைவதில் நமக்கு ஏதேனும் தயக்கம் வந்து விடக் கூடாது என்று கம்பன்  இந்தப் பாடலை  தந்தான்.

Wednesday, September 4, 2013

திருக்குறள் - ஒழுக்கம் - பரிமேல் அழகர் உரை

திருக்குறள் - ஒழுக்கம் - பரிமேல் அழகர் உரை 


வாழ்வின் நோக்கம் இன்பம், வீடு பேறு , இறைவனை அடைவது என்றும், அவற்றை அடைய அறம் உறுதியான வழி என்றும் அந்த அறத்தின் வழி மனிதன் போவதற்கு இன்பமும், அதற்காக பொருளும் வேண்டும் என்றும் பார்த்தோம்.

அறம் என்றால் மனு முதலிய நூல்களில் சொன்னவற்றை செய்வதும், அவை செய்யக் கூடாது என்று சொல்பவற்றை செய்யாமல் இருப்பதும் என்றும் பார்த்தோம்.

அறத்திற்கு மூன்று கூறுகள் உண்டு - ஒழுக்கம், வழக்கு, தண்டம்.

ஒழுக்கம், வழக்கு தண்டனை என்றால் என்று பரிமேல் அழகர் கூறுகிறார்.

அவற்றுள் ஒழுக்கமாவது, அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று, அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.

ஒழுக்கம் என்றால் என்ன என்று இந்த ப்ளாகில் பார்ப்போம்.

மேலே சொன்ன வாக்கியத்திற்கு என்ன பொருள் ?

ஒரு graph ஷீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் X axis க்கு பதில் வருணம் என்று போட்டுக் கொள்ளுங்கள்.

அதில் Y axis க்கு பதில் ஆச்சிரமம் என்று போட்டுக் கொள்ளுங்கள்.

இப்போது வருணம் என்ற கோட்டை நான்காகப் பிரியுங்கள். அந்தணன், வைசியன், சத்ரியன் மற்றும் சூத்திரன் என்றும்.

ஆசிரமம் என்ற கோட்டை நான்காகப் பிரியுங்கள் - பிரமச்சாரியம், கிரகச்சாரம், வானப்ரஸ்தம் மற்றும் துறவறம்

ஒவ்வொரு மனிதனும் இந்த 4 x 4 கட்டத்திருக்குள் ஏதோ ஒரு கட்டத்தில் இருந்தே ஆக வேண்டும்.

ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு கடமை உண்டு.

மனிதனுக்கு இரண்டு கூறுகள் உண்டு - ஒன்று தனிமனிதன், இன்னொன்று சமுதாயத்தில் அவன் ஒரு அங்கம்.

தனி மனிதனாக அவனுக்கு சில கடமைகள் உண்டு.

ஒரு சமுதாயத்தின் அங்கமாக அவனுக்கு சில கடமைகள் உண்டு.

சமுதாயக் கடமை - சூத்திரனாகவோ, வைசியனாகவோ,  கஷத்ரியனாகவோ,அந்தனனாகவோ அவனுக்கு சில கடமைகள் உண்டு.

அது போல தனி மனிதனாக பிரமச்சாரியாக, இல்லறத்தில் , வான பிரச்த்தத்தில், துறவறத்தில் அவனுக்கு சில கடமைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த இரண்டு கூறுகளைத்தான் பரிமேல் அழகர் இங்கே கூறுகிறார்:


அந்தணர் முதலிய வருணத்தார், - இது சமுதாயக் கடமை 

தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று = இது தனி மனிதக் கடமை 

அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல். = அவரவர்க்கு ஓதிய அறங்கள் என்று கூறவில்லை. அவ்வவற்றிற்கு என்று கூறுகிறார். ஏன் ? மேலே கூறிய 4 x 4 கட்டத்திற்கு என்று வகுத்த அறங்கள். எனவே  அவ்வவற்றிற்கு என்று கூறினார். 

இது ஒழுக்கம்.

அடுத்து வருவது வழக்கும் தண்டமும்.

திருக்குறள் எப்படி எழுதப் பட்டிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் பரிமேல் அழகர்.

திருக்குறளுக்கு முன்னுரை.

எவ்வளவு ஆழம். ? எவ்வளவு நுணுக்கம். எவ்வளவு சிந்தனை இதற்குப் பின்னால்  இருந்து இருக்கிறது ?

பிரமிப்பாக இருக்கிறது.