Sunday, February 2, 2014

இராமாயணம் - பரந்த மார்பும் , சிறிய கண்ணும்

இராமாயணம் - பரந்த மார்பும் , சிறிய கண்ணும் 


இராமனை காண்கிறாள் சூர்பனகை. அவன் அழகு அவளை மயக்குகிறது. அவனுடைய கண்கள் தாமரை மலரைப் போல மலர்ந்து சிவந்து அழகாக இருக்கிறது. கரிய பெரிய மலை போல பெரிய தோற்றம். அவன் தோள்கள் அத்தனை அழகு. அவனுடைய இரண்டு தோள்களையும் ஒரு சேர பார்க்க நினைக்கிறாள் சூர்பனகை. முடியவில்லை. பரந்த மார்புகள் அவனுக்கு. ஒரு சமயத்தில் ஒரு தோளைத்தான் பார்க்க முடிகிறது. ஒரு தோளில் இருந்து கண்ணை எடுத்தால்தான் இன்னொரு தோளை பார்க்க முடியும். ஒரு தோளுக்கும் இன்னொரு தோளுக்கும் அவ்வளவு தூரம்.

ஐயோ, என் கண்கள் பெரிதாக இருந்தால் இரண்டு தோள்களையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாமே என்று வருந்துகிறாள்.


பாடல்

தாள் உயர் தாமரைத் 
     தளங்கள் தம்மொடும் 
கேள் உயர் நாட்டத்துக் 
     கிரியின் தோற்றத்தான் 
தோளொடு தோள் செலத் 
     தொடர்ந்து நோக்குறின், 
நீளிய அல்ல கண்; 
     நெடியமார்பு!' என்பாள்.

பொருள்

தாள் உயர் தாமரைத் = நீண்ட தண்டினை உடைய தாமரை

தளங்கள் தம்மொடும் கேள் = மலரின் இதழ்களைப் போல அவன் கண்கள்

 உயர் நாட்டத்துக் கிரியின் தோற்றத்தான் = உயர்ந்த மலையைப் போல கம்பீரமான உருவம் கொண்டவன்

தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின் = ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றால்

நீளிய அல்ல கண் = என் கண்கள் அவ்வளவு நீண்டது அல்ல

நெடியமார்பு!' என்பாள் = அவனுடைய மார்புகளோ பரந்து விரிந்தவை என்று கூறுவாள்.


ஜொள்ளுகள் பல ரகம். அதில் இது ஒரு இரகம். 

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இராமனை கட்டிய சீதை

நாலாயிர  திவ்ய பிரபந்தம் - இராமனை கட்டிய சீதை


அனுமன் சீதையை அசோக வனத்தில் சந்திக்கிறான். அவன் இராமனின் தூதன் என்று எப்படி நிரூபிப்பது ? இராமனுக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த சில விஷயங்களை இராமன் அனுமனிடம் சொல்லி அனுப்பி இருக்கிறான். அவற்றுள் சிலவற்றை அனுமன் சீதையிடம் சொல்கிறான்.

கணவனும் மனைவியும் ஒருவரை மற்றவர் கட்டிப் போட்டு சீண்டி விளையாடுவது ஒரு இனிமையான விஷயம். அப்படி இராமனுக்கும் சீதைக்கும் இடையே நடந்த ஒன்றை அனுமன்  கூறுகிறான்.

"சீதை, ஒரு முறை நீயும் இராமனும் தனிமையில் இருந்தீர்கள். உங்களுக்குள் ஒரு சின்ன போட்டி விளையாட்டு நடந்தது. அதில் யார் வெல்கிறார்களோ அவர்கள் தோற்றவர்களை கட்டிப் போடுவது என்று. நீ வென்றாய். நீ இராமனை கட்டிப் போட வேண்டும். ஆனால் அவனை முரட்டு கயிற்றில் கட்டிப் போட உனக்கு மனம் இல்லை. மல்லிகை பூவால் ஆன ஒரு பூச் சரத்தை எடுத்து அதனால் அவனை கட்டினாய்....இது ஒரு அடையாளம்"


பாடல்


அல்லியம்பூ மலர்க்கோதாய்! அடிபணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க்கண் மடமானே!
எல்லியம்போது இனிதிருத்தல் இருந்தது ஓரிட வகையில்
மல்லிகை மாமாலைகொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்.

பொருள்

அல்லி = ஒரு வித பூ

அம் பூ = அந்த பூ போன்ற

மலர்க் கோதாய்! = மலர் போன்ற பெண்ணே 

அடிபணிந்தேன் விண்ணப்பம் = உன் அடி பணிந்து

சொல்லுகேன் = சொல்லுகிறேன்

கேட்டருளாய் =     கேட்டு அருள்வாய்

 துணை மலர்க் கண் மடமானே! = ஒன்றோடு ஒன்று துணையாக இருப்பதைப் போன்ற கண்களை கொண்ட  மருட்சி உள்ள மானைப் போன்றவளே

எல்லியம்போது = அம் + எல்லி + போது = அழகிய இரவு வேளையில் 

இனிதிருத்தல் = இனிது இருத்தல். இனிமையாக இருந்த போது 

இருந்தது = நடந்தது 

ஓரிட வகையில் = ஓரிடத்தில்

மல்லிகை மாமாலைகொண்டு = மல்லிகையால் ஆன மாலையை கொண்டு

 அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் = அங்கு கட்டியதும் ஒரு அடையாளம்.

கட்டியது யார், யாரை என்று சொல்லவில்லை. சீதையிடம் சொல்லியதால், சீதை கட்டியதாகக் கொள்ளலாம். அல்லது சீதையைக் கட்டியதாகக் கொள்ளலாம்.

அவர்களுக்குள் இருந்த அந்த இனிய அன்பை வெளிப் படுத்தும் பாடல்.




திருவாசகம் - பொய்யவனேனைப் பொத்திக்கொண்ட மெய்யவனே

திருவாசகம் - பொய்யவனேனைப்  பொத்திக்கொண்ட மெய்யவனே


அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள்.

ஆலகால விஷம் வந்தது.

என்ன  செய்வது என்று தவித்தார்கள்.

சிவன் அந்த விஷத்தை தான் அருந்தி அவர்களை காப்பாற்றினான்.

இது கதை.

கதை சொல்லும் கருத்து என்ன ?

நாம் செய்யும் தவறுகளை இறைவன் தனக்குள் எடுத்து மறைத்து வைத்து நம்மை காப்பாற்றுவான். விஷத்தை தனக்குள் மறைத்து வைத்து தேவர்களையும் அசுரர்களையும்  காத்தது போல.

இதை நினைவு படுத்துகிறார் மணிவாசகர்.

நான் பொய்யானவன் தான். ஆனால் விஷத்தை எடுத்து பொத்தி வைத்துக் கொண்டதைப் போல என் பொய்களையும் பொத்தி வைத்துக் கொண்டு என் பிறவி பிணியை போக்கி அருள்வாய் என்று  வேண்டுகிறார்.


பாடல்


பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு, ஒன்று பொத்திக்கொண்ட
மெய்யவனே, விட்டிடுதி கண்டாய்? விடம் உண் மிடற்று
மையவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
செய்யவனே, சிவனே, சிறியேன் பவம் தீர்ப்பவனே.


பொருள் 

பொய்யவனேனைப் = பொய்யே உருவான என்னை

பொருள் என ஆண்டு = ஒரு பொருளாக மதித்து

ஒன்று பொத்திக்கொண்ட = என் தவறுகளை மறைத்து (பொத்தி வைத்து)

மெய்யவனே =  மெய்யானவனே

விட்டிடுதி கண்டாய்? = என்னை விட்டு விட மாட்டாயே

விடம் உண் மிடற்று =  நஞ்சை உண்டு உன் கழுத்தில் அதை அடக்கி அதனால் உன் கழுத்து

மையவனே = கருத்தவனே 

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = நிலைத்து இருக்கும் உத்தரகோச மங்கைக்கு அரசனே

செய்யவனே = சிவந்த உருவம் கொண்டவனே

சிவனே = மங்கலமானவனே

சிறியேன் = சிறியவனான என்னை

பவம் = பிறவிப்  பிணி

தீர்ப்பவனே = தீர்பவனே 

Saturday, February 1, 2014

அபிராமி அந்தாதி - பொய்யும் மெய்யும்

அபிராமி அந்தாதி - பொய்யும் மெய்யும் 


பையனுக்கு அம்மா பெண் பார்த்து விட்டு வந்திருக்கிறாள். பையனுக்கு ஒரே ஆர்வம். தனக்கு பார்த்திருக்கும் பெண் எப்படி இருக்கிறாள் என்று அறிந்து கொள்ள.

பொண்ணு எப்படிமா இருக்கா ?

ம்ம்ம்...நல்லாத்தான் மூக்கும் முழியுமா அழகா இருக்கா....

என்ன நிறம்மா ?

ம்ம்ம்...நல்ல சிவப்புன்னு சொல்ல முடியாது...அதுக்குனு கருப்பும் இல்ல. ஒரு மாதிரி மாநிறமா இருக்கா...

உயரமா, குட்டையா ?

சராசரியா இருப்பா....

சரிம்மா...பாக்க யாரு மாதிரி இருப்பா ?

நம்ம வீட்டுல யாரு மாதிரியும் இல்லடா...அவ ஒரு புது மாதிரியா இருக்கா....

ஒரு சாதாரண பெண்ணை பற்றி சொல்ல்வது என்றாலே இவ்வளவு குழப்பம். ஒன்றும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

அபிராமியைப் பற்றி சொல்வதாக இருந்தால் ?

அவளைப் பற்றி எது சொன்னாலும் அது ஒரு முழுமையான வர்ணனையாக இருக்காது. பாதி உண்மை. மீதி பாதி உண்மை இல்லாதது. அவளை முழுமையாக சொல்லி முடியாது.

திணறுகிறார் பட்டர். என்ன சொல்லி விளக்கினாலும் அவளை முழுமையாக சொல்ல முடியவில்லையே என்று தவிக்கிறார்.

பாடல்

ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே


பொருள்

ஐயன் அளந்த படி =  ஐயன் ஆகிய சிவன் அளந்து தந்த படி 

இரு நாழி கொண்டு = இரண்டு நாழி உணவைக் கொண்டு

அண்டம் எல்லாம் = இந்த உலகம் எல்லாம்

உய்ய = வாழும்படி

அறம் செயும் = தர்மத்தைச் செய்யும்

உன்னையும் போற்றி = உன்னையும் போற்றி

ஒருவர் தம் பால் = மற்றவர்களிடம் சென்று

செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு = தமிழால் செய்த பாடல்களைக் கொண்டு

சென்று = அவர்களிடம் சென்று 

பொய்யும் = உண்மை அல்லாதவற்றையும்

மெய்யும் = உண்மையையும்

இயம்ப வைத்தாய் = சொல்ல வைத்தாய்

இதுவோ உந்தன் மெய்யருளே = இதுவா உந்தன் உண்மையான அருள் ?

எப்படி நான் உன்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல முடியும் ? என்ன சொன்னாலும் சரியாக வர மாட்டேன் என்கிறதே என்கிறார் பட்டர்.



தேவாரம் - நடுக்கத்தை கெடுப்பது

தேவாரம் - நடுக்கத்தை கெடுப்பது 


இராவணன் ஒரு முறை கைலாய மலையை கையால் தூக்கிச் செல்ல நினைத்தான். எதுக்கு தினம் தினம் இலங்கையில் இருந்து இமயமலை வர வேண்டும், பேசாமல் இந்த இமய மலையை பெயர்த்துக் கொண்டு போய் நம்ம ஊர் பக்கம் வைத்துக் கொண்டால் என்ன என்று நினைத்தான்.

தூக்க நினைத்தான். முடியவில்லை. மலையின் கீழ் அகப்பட்டுக் கொண்டான். பின் சிவனை நினைத்து பாடி, வரம் பெற்று விடுதலை பெற்றான் என்பது கதை.

இது என்ன சரியான கோமாளித்தனமாக இருக்கிறதே ? மலையைப் போய் யாராவது கையால் தூக்க நினைப்பார்களா ? நடக்கிற காரியமா அது ?

அது இராவணனின் கதை அல்ல.

என் கதை. உங்கள் கதை. நம் கதை.

உலகில் உள்ள எல்லா இன்பங்களும் வேண்டும் நமக்கு....வீடு வேண்டும், உலகம் சுற்ற வேண்டும், எதிர் காலத்திற்கு சேர்க்க வேண்டும், பிள்ளைகள் பெரிய படிப்பு படிக்க வேண்டும், கார் வேண்டும், பங்களா வேண்டும், நகை நட்டு வேண்டும், ....அது வேண்டும் இது வேண்டும் என்று ஆயிரம் ஆசைகள்.

மலை அத்தனை ஆசைகள். இராவணனோ ஒரு மலையத்தான் தூக்க நினைத்தான்...நாம் எத்தனை மலைகளை தூக்க நினைக்கிறோம்....

ஒவ்வொரு ஆசை மலையும் நம்மை போட்டு அழுத்துகின்றன.

ஐயோ முடியவில்லையே என்று அலறுகிறோம்.

முடிவில் , கடவுளே என்னைக் காப்பாற்று என்று அவனிடம் ஓடுகிறோம்.

மலையை தூக்கச் சொன்னது யார் ? ஆணவம், ஆசை, பேராசை...

மலையின் கீழ் கிடந்து அழுந்தும்போது பயம் வருகிறது, நடுக்கம் வருக்கிறது.

அந்த நடுக்கத்தை கெடுப்பது, அவன் அருள், அவன் நாமம்.

பாடல்

இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற

நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.


சீர் பிரித்த பின்

இடுக்கண் பட்டு இருக்கினும் இரந்து யாரையும் 
விடுக்கின் பிரான் என்று வினவுவோம் அல்லோம் 
அடுக்கிற் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற 
நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே 

பொருள்


இடுக்கண் பட்டு = துன்பப் பட்டு

இருக்கினும் = இருந்தாலும்

இரந்து = யாசகம் கேட்டு

யாரையும் = யாரிடமும்

விடுக்கின் = என்னை இந்த துன்பத்தில் இருந்து விடுவியுங்கள்

பிரான் என்று  = பிரானே  என்று

வினவுவோம் அல்லோம் = கேட்க மாட்டோம் . தோழனோடாயினும் ஏழைமை பேசேல் என்றாள் அவ்வை.

அடுக்கிற் கீழ் கிடக்கினும் = அடுக்கு என்றால் மலை. மலையின் கீழ் கிடந்து அழுந்தினாலும் 

அருளின் = அருளினால்

நாம் உற்ற = நாம் அடைந்த

நடுக்கத்தை கெடுப்பது = நடுக்கத்தை, பயத்தை கெடுப்பது

 நமச்சிவாயவே  = நமச்சிவாய என்ற நாமமே



திருவாசகம் - என்னை வளர்ப்பவனே

திருவாசகம் - என்னை வளர்ப்பவனே 


ஆற்றங்கரை.

சிலு சிலு என ஓடும் ஆற்றின் நீர்.

வரும் வழியில் இருந்து வண்டல் மண்ணை அள்ளிக் கொண்டு வரும் ஆறு.

இலை வருடும் காற்று. வேர் வருடும் நீர்.

சின்ன சின்ன மரங்கள் நன்கு செழித்து வளரும்.

நாள் ஆக நாள் ஆக மரம் பெரிதாய் கிளை பரப்பி வளரும். அதன் எடை கூடிக் கொண்டே வரும். விழுந்து விடாமல் இருக்க வேர்க் கரம் நீட்டி தரையை இறுகப் பற்றிக் கொள்ள போராடும்.

ஆரங்கரை மண் அவ்வளவு கெட்டியாக இருக்காது. சதா சர்வ காலமும் நீரில் நனைந்து நெகிழ்து இருக்கும்.

ஒரு நாள் தன் எடையாலேயே அந்த மரம் நீரில் விழுந்து அடித்துச் செல்லப் படும்.

எந்த ஆறு , மரம் வளர உதவியதோ, அதே அந்த மரத்தை அடித்துச் செல்லும்.

அது ஆற்றின் தவறு அல்ல...ஆறு தந்த வசதியால் பெருத்த மரத்தின் தவறு....

பெண்ணாசையும் அப்படித்தான்.

கண்ணசைவில் உயிர் அசையும்....

காதோர சுருள் முடியில் கற்பனைகள் ஊஞ்சல் ஆடும் ....

அவளின் நெருக்கம் இதயத்தை கட்டறுத்து ஓட வைக்கும் .....

அப்படித்தான் ஆரம்பிக்கும்....திருமணம், பிள்ளைகள், குடும்பம் என்று எடை கூடிக் கொண்டே போகும்....

ஆற்றங்கரை மரம்....

பாடல்

காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய்
வேருறு வேனை விடுதிகண் டாய்விளங் குந்திருவா
ரூருறை வாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே.

சீர் பிரித்த பின் 

காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரை மரமாய்
வேருறு வேனை விடுதி கண்டாய் விளங்கும் திருவாரூர் 
உறைவாய் மன்னும் உத்தர கோசமங்கைக்கு அரசே 
வார் உறு பூண் முலையாள் பங்க என்னை வளர்ப்பவனே.

பொருள்

காருறு = கார் + உறு. கருமையே உருவான

கண்ணியர் = கண்களைக் கொண்ட பெண்கள்

ஐம்புலன் = அவர்கள் பின்னால் போகும் எனது ஐந்து புலன்களும்

ஆற்றங்கரை மரமாய் = ஆற்றங்கரையில் இருக்கும் மரமாய்

வேர் உறுவேனை = வேர் கொள்வேனை 

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

விளங்கும் = பொலிவுடன் விளங்கும்

திருவாரூர் உறைவாய் = திருவாரூரில் உறைபவனே

மன்னும் = நிலைத்து நிற்கும்

 உத்தர கோசமங்கைக்கு அரசே =  உத்தர கோசமங்கை என்ற ஊருக்கு  அரசே

வார் உறு = கச்சு அணிந்த

பூண் முலையாள் = ஆபரணங்களை அணிந்த மார்பை உடைய  (உமா தேவியின் )

பங்க =  உடலில் பங்கைக் கொண்டவனே

என்னை வளர்ப்பவனே. = என்னை வளர்பவனே.

நம்மை யார் வளர்க்கிறார்கள் ? நாமே நம்மை வளர்த்துக் கொள்கிறோமா ? ஆயிரம் ஆயிரம் கைகள் நம்மை வளர்க்கின்றன....


தாயின், தந்தையின், ஆசிரியரின், கணவன், மனைவி, நண்பர்கள், வீட்டில் நமக்கு உதவி செய்யும் வேலை ஆட்கள், வண்டி ஓட்டுபவர், நமக்கு வேண்டிய உணவை உற்பத்தி செய்பவர், ஆடைகளை நெய்பவர்கள், இப்படி ஒவ்வொரு நாளும் ஆயிரம் ஆயிரம்  கைகள் நமக்கு உதவி செய்கின்றன.

நாம் பல் விளக்கும் brush , paste , soap , எண்ணெய் , துணிமணி, மின்சாரம் என்று எத்தனை ஆயிரம் பொருள்களை நாம் அனுபவிக்கிறோம். அவ்வளவுக்கும் பின்னால் எத்தனை கைகள் ?

நம்மை வளர்க்கும் கைகள் அவை.

பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய் வளை தன் பாதத் திறம்பாடி ஆடேலோர்  எம்பாவாய்

என்பார் மணிவாசகர்.

அத்தனையையும் இறைவனாகப் பார்க்கிறார் மணிவாசகர்.




நாலடியார் - தனிமை

நாலடியார் - தனிமை 


வயதாகும்.

பிள்ளைகள் எங்கெங்கோ போய் விடுவார்கள்.

நண்பர்களுக்கும் வயதாகி ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடியுமோ இல்லையோ.

உறவினர், தெரிந்தவர், உடன் வேலை பார்த்தவர் என்று யாரும் உடன் இல்லாத் தனிமை வந்து சேரும்.

வாழ்க்கையில் அதுவரை செய்தது என்ன, மனைவியும், பிள்ளைகளும் என்ன, உறவு நட்பு இது எல்லாம் என்ன என்று மனம் தனிமையில் இருந்து சிந்திக்கும்.

சிந்திப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ?

வாழ்வின் வெறுமையை, தனிமையை சோகம் ததும்பச் சொல்கிறது நாலடியார்


பாடல்

நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன ;- உட்காணாய் ;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி

பொருள் 

நட்பு நார் அற்றன = பூவை நார் கட்டி மாலை ஆக்குவது போல, நட்பு என்ற நார் நம்மை பிணித்து வைக்கும். அந்த நாரும் ஒரு நாள் அற்றுப் போய் விடும். நண்பர்கள் போய் விடுவார்கள்.

 நல்லாரும் அஃகினார் = நம் கூட பழகி , கூட இருந்த நல்லவர்களும் நம் வாழ்வில் இல்லாமல் போய் விடுவார்கள். கெட்டவர்கள் போனால் என்ன கவலை. நல்லவர்கள் போய் விடுவார்கள்.


அற்புத் தளையும் அவிழ்ந்தன = அன்பு என்பது இங்கு அற்பு என திரிந்து வந்தது. அன்புத்  தளையும் அவிழ்த்து என்று படிக்க வேண்டும். நம்மிடம் அன்பு கொண்டவர்களும் இல்லாமல் போவார்கள். அவர்களே இல்லாமல் போகலாம் அல்லது அவர்களின் அன்பு இல்லாமல் போகலாம். 


 உட்காணாய் = உள் காணாய். உள் நோக்கிப் பார். தன்னைத் தான் அறி

வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? = வாழ்க்கையின் பொருள் என்ன ? அர்த்தம் என்ன ?

வந்ததே = வந்ததே

ஆழ்கலத் தன்ன கலி = கடலில் செல்லும் கப்பல் போன்ற துன்பம். கப்பல் முதலில் தெரியாது, பின்னர் சின்ன புள்ளி போலத் தெரியும், கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக் கொண்டே வரும், கடைசியில் மிகப் பெரிதாக கிட்டே வந்து நிற்கும். இவ்வளவு பெரிய கப்பலா என்று பிரமிக்க வைக்கும். வாழ்வில் தனிமை என்ற  துன்பம் இப்போது தெரியாது. கிட்ட வரும்போது தெரியும்.