Monday, March 10, 2014

இராமாயணம் - கலங்குவது எவரைக் கண்டால் ?

இராமாயணம் - கலங்குவது எவரைக் கண்டால் ?


மாலை முடிந்து இரவு ஏறிக் கொண்டிருக்கிறது. தன்னந் தனி சாலை. தெரு விளக்கு மங்கலாக இருக்கிறது. சாலை ஓரம் நெளிந்து வளைந்து ஏதோ ஒன்று கிடக்கிறது.

உங்கள் இதயத் துடிப்பு லேசாக ஏறுகிறது. ஒரு வேளை பாம்பாக இருக்குமோ ?
எச்சரிக்கையோடு , சற்று மெல்லமாக அடி எடுத்து வைக்கிறீர்கள். அது அசைவது போல ஒரு பிரமை.

இன்னும் கொஞ்சம் நெருங்கிய பின் தெரிகிறது, அது பாம்பு அல்ல மாலை என்று.

அறிவு தெளியாத போது தோன்றிய பாம்பு மறைந்து விட்டது. அறிவு தோன்றிய பின் உண்மை எது என்று தெரிகிறது.

நாம் காணும் இந்த உலகம் பாம்பா , மாலையா? மாலை என்று தெரியும் வரை பாம்பு உண்மை என்று நினைத்தோம்.

அது போல இந்த நாம் காணும் உலகம் பாம்பாக இருந்தால் ? மாலை எது ? அதை யார் அறிவார் ?

அறியாமை நீங்கி அறிவு வரும்போது உண்மை தெரியும். எப்போது அறியாமை நீங்கும் ? இராமனைக் கண்டால் அறியாமை நீங்கும் என்கிறார் கம்பர்.

பாடல்

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை 
     அரவு என, பூதம் ஐந்தும் 
விலங்கிய விகாரப்பாட்டின் 
     வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால் ?
     அவர், என்பர்- கைவில் ஏந்தி,
இலங்கையில் பொருதார்; அன்றே,

     மறைகளுக்கு இறுதி யாவார்!

பொருள்

அலங்கலில் = மாலையில். அலங்கல் என்றால் மாலை.

தோன்றும் பொய்ம்மை = தோன்றுகின்ற பொய்த் தோற்றம்

அரவு என = பாம்பு என

பூதம் ஐந்தும் = ஐந்து பூதங்களும்

விலங்கிய விகாரப்பாட்டின் = ஒன்றோடு ஒன்று கலந்தும் விலகியும் நின்ற

வேறுபாடு உற்ற வீக்கம் = வேறு வேறாகத் தெரிந்த வீக்கம். வீக்கம் வளர்ச்சி அல்ல. வளர்ந்தது போன்ற ஒரு தோற்றம். வீக்கம் வடிந்து விடும்.

கலங்குவது எவரைக் கண்டால் ? = யாரைப் பார்த்து அந்த பொய்மை பயப்படும் ?


அவர், என்பர் = அவர் என்று சொல்வார்கள்

கைவில் ஏந்தி = கையில் வில்லை ஏந்தி

இலங்கையில் பொருதார் = இலங்கையில் சண்டை போட்டாரே

அன்றே = அன்னிக்கு


மறைகளுக்கு இறுதி யாவார் = அவரே வேதங்களுக்கு இறுதியானவர்


நீங்கள் நிஜம் என்று நினைப்பது எல்லாம் நிஜமாக இருக்குமா ?

பொய்யானவை எல்லாம் போய் அகல வந்தருளி என்பார் மணிவாசகர் சிவபுராணத்தில்

பொய்களை நிஜம் என்று எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.



Sunday, March 9, 2014

தேவாரம் - முத்து வயல் கரை குவிக்கும்

தேவாரம் - முத்து வயல் கரை குவிக்கும் 


ஞான சம்பந்தர் இள வயதிலேயே ஞானம் பெற்றவர். அவரின் பாடல்களில் இயற்கையை கண்டு வியக்கும் அழகை காணலாம். ஒரு சிறு பிள்ளையைப் போல ஒவ்வொன்றையும் பார்த்து அவர் இரசிப்பதைக் நாம் கண்டு வியக்கலாம்.

அவர் திருவையாருக்கு போகிறார். அங்கே உழவர்கள் உழுவதற்கு என்று வயலுக்குப் போகிறார்கள். ஆனால், அங்குள்ள வயல்கள் உழும் படி இல்லை. அங்கு பாயும் காவிரி ஆறு, கடலில் உள்ள முத்துக்களைக் கொண்டு வந்து வயல் எங்கும் தெளித்து விட்டு சென்றிக்கிறது. எங்கு பார்த்தாலும் முத்தும் பவளமும் சிதறிக் கிடக்கிறது. அப்படிப் பட்ட திருவையாறில் இருக்கும் சிவனே என்று பாடுகிறார்.

பாடல்

அடல் வந்த வானவரை அழித்து உலகு
   தெழித்து உழலும் அரக்கர் கேமான்
மிடல் வந்த இருபதுதோள் நெரியவிரல்
    பணிகொண்டோன் மேவும் கோவில்
நடவந்த உழவர் இது நடவு ஒணா வகை
    பரலாய்த் தென்று துன்று
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல்

   கரை குவிக்கும் கழுமலமே

பொருள் 

அடல் வந்த = போருக்கு வந்த

வானவரை = தேவர்களை

அழித்து = அழித்து

உலகு தெழித்து = உலகை அச்சுறுத்தி 

உழலும் = வாழும்

அரக்கர் கேமான் = அரக்கர்களின் தலைவன்

மிடல் = வலிமை மிக்க

வந்த  இருபதுதோள் = வந்த இருபது தோள்களும் 

நெரிய = நசுங்கும்படி

விரல்     பணிகொண்டோன் = கால் கட்டை விரலால் அழுத்தி அவனை பணிய வைத்த சிவன்

மேவும் கோவில் = வாழும் கோவில்

நடவந்த உழவர் = நடவு செய்ய வந்த உழவர்கள்


 இது நடவு ஒணா வகை = இங்கே நடவு செய்ய முடியாத வகையில்

பரலாய்த் = சிறு சிறு கற்களாய்

தென்று துன்று = இருக்கிறது என்று

கடல் வந்த = கடலில் இருந்து வந்த 

சங்கு ஈன்ற முத்து  = சங்கு ஈன்ற முத்து

வயல் கரை குவிக்கும் = வயல்களின் வரப்புகளில் அவற்றை குவித்து வைக்கும் 

 கழுமலமே = மலத்தை (பாவங்களை) கழுவும் இடமே


இராமாயணம் - உருகு காதலின்

இராமாயணம் - உருகு காதலின் 


இராமனும் சீதையும் சித்ர கூடம் வழியாக செல்கிறார்கள். அந்த இடம் எங்கும் இயற்கை எழில்  .கொஞ்சுகிறது.

சீதைக்கு ஒவ்வொன்றாக காட்டி , இதைப் பார், அதைப் பார் என்று காண்பித்துக் கொண்டே வருகிறான்.

அங்கே ஆன் யானையும் பெண் யானையும் செல்கின்றன. பெண் யானை கரு உற்றிருக்கிறது. அதனால் அவ்வளவு வேகமாக நடக்க முடியவில்லை. சோர்ந்து போகிறது. அப்போது ஆண் யானை, மலைக் குகையில்  தேனீக்கள் தேன் கூடு கட்டி இருக்கின்றன. அந்த தேனீக்களை விரட்டி விட்டு, அதில் இருந்து தேனை எடுத்து, பெண் யானையின் வாயில் உருகுகின்ற காதலோடு ஊட்டி விடுகிறது.

அதனைப் பாராய். என்று சீதைக்கு இராமன் காட்டுகிறான்.

பாடல்


உருகு காதலின் தழைகொண்டு
     மழலை வண்டு ஓச்சி,
முருகு நாறு செந் தேனினை
     முழைநின்றும் வாங்கி,
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு
     பிறை மருப்பு யானை,
பருக, வாயினில், கையின்நின்று
     அளிப்பது - பாராய்!

பொருள்

உருகு காதலின் = உருகிய, உருகுகின்ற, உருகும் காதலின்

 தழைகொண்டு = இலைகளைக் கொண்டு

மழலை வண்டு ஓச்சி = குழந்தைகளைப் போல சத்தம் போடும் வண்டுகளை ஓட்டி

முருகு நாறு = மணம் வீசுகின்ற

செந் தேனினை = இனிய தேனினை

முழை = குகையில் இருந்து

நின்றும் வாங்கி = இருந்து வாங்கி

பெருகு  = நாளும் பெரிதாகிக் கொண்டே வரும்

சூல்= கருவைக் கொண்ட

இளம் பிடிக்கு = இளமையான பெண் யானைக்கு

ஒரு பிறை = ஒரு பிறைச் சந்திரனைப் போல

மருப்பு = தந்தத்தை கொண்ட

யானை = யானை

பருக =  பருக

வாயினில் = அதன் வாயினில்

கையின்நின்று = தும்பிக்கையில் இருந்து

அளிப்பது - பாராய்!  = அளிப்பதைப் பார்

அவள் மட்டும் என்ன, நாமும் பார்ப்போமே !


நீத்தல் விண்ணப்பம் - மத்தில் அகப்பட்ட தயிர்

நீத்தல் விண்ணப்பம் - மத்தில் அகப்பட்ட தயிர் 


தயிர் கடையும் போது தயிர் மத்தின் இடையில் அகப்பட்டு அங்கும் இங்கும் அலையும். அதுக்கு நிம்மதி கிடையாது. ஒரு மத்து என்றால் அப்படி. அதுவே 5 மத்தாக இருந்தால் எப்படி இருக்கும் ? அந்தத் தயிர் என்ன பாடு படும் ?

அது போல ஐந்து குற்றங்கள் / குறைகள் / மலங்கள் என்பவற்றால் நாம் அலைக் கழிக்கப் படுகிறோம்.

இப்படி துன்பப்படும் என்னை என் குற்றங்களை களைந்து என்னை காப்பாற்று என்று வேண்டுகிறார் மணிவாசகர்.

பாடல்

குலம் களைந்தாய்; களைந்தாய் என்னைக் குற்றம்; கொற்றச் சிலை ஆம்
விலங்கல் எந்தாய், விட்டிடுதி கண்டாய்? பொன்னின் மின்னு கொன்றை
அலங்கல் அம் தாமரை மேனி அப்பா, ஒப்பு இலாதவனே,
மலங்கள் ஐந்தால் சுழல்வன், தயிரில் பொரு மத்து உறவே.

பொருள் 

குலம் களைந்தாய்; = சுற்றத்தாருடன் எனக்கு இருந்த தொடர்பை களைந்தாய்.

களைந்தாய் என்னைக் குற்றம் = என் குற்றங்களை களைந்தாய்

கொற்றச் சிலை ஆம் விலங்கல் = மேரு மலையை வெற்றி பெரும் வில்லைக்

 எந்தாய், = என் தந்தை போன்றவனே

விட்டிடுதி கண்டாய்? = கை விட்டு விடாதே

பொன்னின் = பொன்னைப் போல்

மின்னு  = மின்னும்

கொன்றை = கொன்றை மலரை

அலங்கல் = மாலையாகக் கொண்டவனே

அம் தாமரை மேனி அப்பா = அழகிய தாமரை போன்ற உடலை கொண்டவனே

ஒப்பு இலாதவனே = ஒப்பு இல்லாதவனே

மலங்கள் ஐந்தால் = குற்றங்கள் ஐந்தால்

சுழல்வன் = சுழல்கின்றேன்

தயிரில் பொரு மத்து உறவே = தயிரில் பொருந்திய மத்தைப் போல



Friday, March 7, 2014

நாலடியார் - துணையிலாற்கு இம் மாலை என் செய்யும்

நாலடியார் - துணையிலாற்கு இம் மாலை என் செய்யும் 


மாலை வரும். அவன் வரும் வேளை வரும் என்று கன்னி அவள் காத்திருந்தாள்.

வருவான் காதலன், வந்தபின் தருவான் காதல் இன்பம் நூறு என்று வரும் வழி பார்த்த விழி பூத்திருந்தாள்.

பூவை எடுத்து அந்த பூவை மாலை தொடுத்தாள்.

மாலை வரும் அவனுக்கு என்று மாலை தொடுத்து வைத்தாள்.

மயக்கும் மாலையும் மெல்ல மெல்ல வந்தது.

வந்தார் மற்றோர் எல்லாம்.

அவன் வரவில்லை. வருவான். கொஞ்சம் நேரம் ஆகலாம். அவளுக்கு பொறுக்கவில்லை.

கவலை மாலை மாலையாக நீராக வடிந்தது.

கை மாலை கை நழுவி விழுந்தது.

அவன் வருவானா ? அவள் தனிமை தீர்பானா ?

பாடல்

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.

பொருள்

கம்மஞ்செய் மக்கள் = கம்மம் செய்யும் மக்கள்

கருவி ஒடுக்கிய = தங்கள் கருவிகளை எடுத்து வைத்து விட்டார்கள். வேலை முடிந்தது.

மம்மர்கொள் = மயக்கம் தரும்

மாலை = மாலை

மலராய்ந்து = மலர் + ஆய்ந்து. மலர்களை ஆராய்ந்து எடுத்து

பூத்தொடுப்பாள் = பூக்களை மாலையாக தொடுப்பாள்

கைம்மாலை = கையில் உள்ள மாலையை

இட்டுக்  = தரையில் போட்டு

கலுழ்ந்தாள் = கவலைப் பட்டாள்

துணையில்லார்க்கு = துணை இல்லாதவர்களுக்கு

இம்மாலை = இந்த மலர் மாலையை 

என்செய்வ தென்று  = வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று.


அவள் சோகம், அவள் தனிமை உங்கள் இதயம் தொடுகிறதா ? எத்தனையோ ஆண்டுகளைத் தாண்டி   அவளின் தனிமை சோகம் நம் நெஞ்சை ஏதோ செய்கிறது அல்லவா ?

அதுதான் இலக்கியம். 

Wednesday, March 5, 2014

நீத்தல் விண்ணப்பம் - புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து


நீத்தல் விண்ணப்பம் - புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து


புலன்கள் புதுப் புது இன்பங்களை கண்டு திகைக்கிறது. அட, இப்படி கூட இருக்குமா என்று திகைக்கிறது. பின்  அதை அனுபவித்தால் எப்படி இருக்கும் என்று ஆசைப் படுகிறது. அதை அனுபவித்த பின், ஆஹா என்று திகைக்கிறது.

பின் சிறிது காலத்தில் இதுவா இன்பம், இந்த இன்பத்திற்கா இவ்வளவு அலைந்தேன் என்று திகைப்படைக்கிறோம்.

எல்லா இன்பங்களும் ஒரு நிலைக்கு அப்பால் சலிப்பைத் தரும். அவை நிரந்தரமானவை அல்ல. முதலில் இன்பம் போல் தோன்றினாலும் துன்பத்தில் போய் முடியும்.

அவை நம்மை தவறான வழியில் இட்டுச் செல்லும்.    அந்த பொய்யான பாதையில் செல்லும் என்னை கை விட்டு விடாதே.

நஞ்சை அமுதாக்கினவன் நீ. எனவே என் தவறுகளை நீ பொறுத்து என்னை நீ நல் வழியில் செலுத்துவது ஒன்றும் உனக்கு பெரிய காரியம் இல்லை.

பாடல்


புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து, இங்கு ஒர் பொய்ந் நெறிக்கே
விலங்குகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணும், மண்ணும், எல்லாம்
கலங்க, முந்நீர் நஞ்சு அமுது செய்தாய்; கருணாகரனே!
துலங்குகின்றேன் அடியேன்; உடையாய், என் தொழுகுலமே.


பொருள் 

புலன்கள் திகைப்பிக்க = புலன்கள் என்னை திகைக்க வைக்க

யானும் திகைத்து = நானும் திகைத்து

 இங்கு ஒர் பொய்ந் நெறிக்கே = இந்த வாழ்க்கையில் பொய்யான வழிகளில்

விலங்குகின்றேனை = செல்லுகின்ற என்னை

விடுதி கண்டாய்?  = விட்டு விடுவாயா ?

விண்ணும், மண்ணும், எல்லாம் = விண்ணும் மண்ணும் எல்லாம்

கலங்க = கலங்கும்படி

முந்நீர் = ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் என்ற மூன்று நீரால் நிறைந்த கடல், அதில் தோன்றிய 

நஞ்சு அமுது செய்தாய் = நஞ்சை அமுதாகச் செய்தவனே

கருணாகரனே! = கருணைக் கடலே

துலங்குகின்றேன் அடியேன் = பயந்து இருக்கும் அடியவனாகிய என்னை

 உடையாய் = என்னை ஆட்க் கொண்டவனே

என் தொழுகுலமே. = என் தொழுகைக்கு உரியவனே


கந்தர் அலங்காரம் - வேல் மறவேன்

கந்தர் அலங்காரம் - வேல் மறவேன் 


நம் உணர்சிகளிலேயே மிகவும்  ஆழமானது, அழுத்தமானது, சக்தி வாய்ந்தது காம உணர்ச்சி.

கள் கூட உண்டால் தான் மயக்கம்  தரும்.காமம் நினைத்த மாத்திரத்திலேயே மயக்கத்தை தரும் இயல்பு உடையது.

காமம் தலைக்கு ஏறி விட்டால், எது சரி, எது தவறு என்றெல்லாம் ஒன்றும் தெரியாது.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்.

காமம் - சாம்ராஜ்யங்களை புரட்டிப் போட்டிருக்கிறது.

சக்ரவர்திகளை காலில் விழ வைத்திருக்கிறது.

ஆயிரக் கணக்கான உயிர்களை கொன்று  குவித்திருக்கிறது.

அருணகிரி நாதர் காம வயப் பட்டு விலை மகள்கள் பின்னால்  போனவர்தான். எவ்வளவுதான் தவறான வழியில் போனாலும், அவர் மனம் என்னமோ, ஒரு மூலையில், முருகனின் வேலையே நினைத்துக் கொண்டிருந்திருக்கிறது.

காம மயக்கத்தில் கூட முருகனை மறக்கவில்லை என்கிறார்.

சுந்தரர் சொன்ன மாதிரி "சொல்லும் நா நமச்சிவாயவே" என்று மனமும் உடலும் என்ன செய்து கொண்டிருந்தாலும், நாக்கு மட்டும் நமச்சிவாய என்று சொல்லிக்  .கொண்டே இருக்கிறது.

பெற்ற தாய்தனை மகமறந் தாலும் 
          பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் 
     உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் 
          உயிரை மேவிய உடல்மறந் தாலும் 
     கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும் 
          கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் 
     நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் 

          நமச்சி வாயத்தை நான்மற வேனே. 

என்று உருகினார் வள்ளலார்.

பாடல்

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண் டயர்கினும் வேல்  மறவேன் முதுகூளித்திரள்
குண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.


பொருள்

கண்டுண்ட = கண்டு + உண்ட. கண்டு என்றால் கற்கண்டு. கற்கண்டை உண்ட என்றால் அவ்வளவு இனிமையான 

சொல்லியர் = குரலை உடையவர்கள். இனிமையான சொல்லுக்கு மயங்காதவர் யார்

சீதை , இராமனிடம் மான் கேட்கிறாள். எப்படி ?

ஆயிடை, அன்னம் அன்னாள், 
     அமுது உகுத்தனைய செய்ய
வாயிடை, மழலை இன்சொல் 
     கிளியினின் குழறி, மாழ்கி, 
'நாயக! நீயே பற்றி 
     நல்கலைபோலும்' என்னா, 
சேயரிக் குவளை முத்தம் சிந்துபு 
     சீறிப் போனாள்.

மழலை + இன் சொல் + கிளியின் + குழறி (தட்டுத் தடுமாறி) + மாழ்கி (வருந்தி) .

இப்படி கேட்டால் எந்த கணவன் தான் மறுக்க முடியும் ? நம் பெண்களுக்கு எங்கே தெரிகிறது. எனக்கு இல்லாத உரிமையா என்று அதிகாரம் செய்ய வேண்டியது. அப்புறம் ஒன்றும் கிடைக்காமல் கண்ணை கசக்க வேண்டியது. இராமாயணம் படிக்க  வேண்டும். கணவன் மனைவி உறவு  பலப் படும்.


மெல்லியர் = மென்மையானவர்கள்

காமக் = காமம் என்ற

கலவிக் கள்ளை = கலவியில் விளைந்த கள்ளை .

மொண்டுண் டயர்கினும் = மொண்டு + உண்டு +  அயர்கினும். கொஞ்சம் குடித்தால் பரவாயில்லை. மொண்டு மொண்டு  குடித்தாராம்.குடித்த பின் அயர்ச்சி வந்து  விட்டது.வராதா பின்ன?


வேல்  மறவேன் = அந்த அயர்ச்சியிலும் வேலை மறக்கவில்லை.

முது = முதுமையான

கூளித் = பேய்

திரள் = திரண்டு வந்து.

நமக்கு வயது ஆகும். பின் இறந்து போவோம். ஆனால், பேய்களுக்கு ஏது சாவு ? அவைகளுக்கு வயது ஆகிக் கொண்டே  போகும்.முதுமையான பேய்கள், கூட்டம் கூட்டமாக வந்து

குண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக் = ஒரே குஷி. ஆட்டம் போடுகின்றன ? ஏன் ?

கொட்டி யாட = வெறும் ஆட்டம் அல்ல. மேள தாளம் முழங்க , கொட்டி ஆடின.

வெஞ் சூர்க் = வெம்மையான சூரனையும் அவன் அரக்க கூட்டத்தையும் 

கொன்ற = போரில் கொன்ற 

ராவுத்தனே = இராவுத்தனே

முருகன், அரக்கர்களை அக்ரோணி கணக்கில் கொன்று குவித்தார். அந்த பிணங்களை தின்ன பேய்கள் கூட்டம் கூட்டமாக வந்தன. நல்ல விருந்து கிடைத்ததால் அவைகளுக்கு ஒரே  குஷி.

கலவியிலும் கடவுளை மறவா மனம் !