Tuesday, November 13, 2018

நளவெண்பா - கல்லாதனவும் கரவு

நளவெண்பா - கல்லாதனவும் கரவு 


ஒரு செய்தியை சொல்வதென்றால் அதை சுவை பட கூற வேண்டும். அழகாக, எளிமையாக, இரசிக்கும் படி சொல்ல வேண்டும்.

ஆங்கிலத்தில் presentation skills என்று சொல்லுவார்கள்.

எவ்வளவுதான் படித்து, அனுபவம் இருந்தாலும் சரியாக பேச, சொல்ல வரவில்லை என்றால் வாழ்வில் முன்னுக்கு வருவது மிகக் கடினம்.

நன்றாக பேசத் தெரிய வேண்டும். தனக்குத் தெரிந்ததை அழகாக வெளிப் படுத்தத் தெரிய வேண்டும்.

அதற்கு இலக்கியம் மிகவும் துணை செய்யும்.

இலக்கியம் படிக்க படிக்க நம் சொல்லிலும் பேச்சிலும் ஒரு அழகு ஏறும். கற்பனை விரியும். வார்த்தைகள் வசப்படும்.

உதாரணமாக, ஒரு நாடு நல்ல நாடு என்று சொல்ல வேண்டும். எப்படி சொல்லுவது ?

அங்கே நல்ல விளைச்சல் இருக்கிறது, அங்கே குற்றங்கள் குறைவாக இருக்கிறது, நல்ல வருமானம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லலாம்.

அதில் ஒரு அழகு இருக்கிறதா ?

புகழேந்தி சொல்கிறார் பாருங்கள்.

"அந்த ஊரில் மக்களுக்குத் தெரிந்தது எல்லாம் நல்ல நூல்களே. அவர்களுக்கு தெரியாததும் உண்டு. அது என்ன தெரியுமா, பெண்களின் இடை. அது இருக்கிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. அந்த ஊரில் இல்லாதது அப்படினு சொன்னா அது பிச்சை எடுப்பதுதான். பிச்சைக்காரர்களே கிடையாது.  அந்த ஊர் மக்கள் பிடிக்காது என்று ஒன்று உண்டு என்றால் அது வஞ்சக செயல்களே"

பாடல்

தெரிவனநூல் என்றும் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே - ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே இகழ்ந்தெவரும்
கல்லா தனவும் கரவு.

பொருள்

தெரிவனநூல் = மக்கள் தெரிந்து கொள்வது நல்ல நூல்களை

என்றும் = எப்போதும்

தெரியா தனவும் = தெரியாமல் இருப்பது

வரிவளையார் = வளையல்களை அணிந்த பெண்கள்

தங்கள் மருங்கே = அவர்களின் இடையே

 ஒருபொழுதும் = ஒரு பொழுதும்

இல்லா தனவும் இரவே = இல்லாமல் இருப்பது பிச்சை எடுப்பதே

இகழ்ந்தெவரும் = சிறுமை என்று கருதி

கல்லா தனவும் கரவு = மக்கள் படிக்காமல் இருந்தது வஞ்சக செயல்களே

மக்கள் எல்லோரும் மிகப் படித்தவர்கள். பெண்கள் எல்லோரும் மிக அழகானவர்கள். எல்லோரிடமும் மிகுந்த செல்வம் இருக்கிறது. எனவே பிச்சி எடுப்பவர் என்று யாருமே இல்லை. மக்கள் எல்லோரும் நல்லவர்கள். வஞ்சக செயல் என்றால் என்ன என்றே அவர்கள் அறிந்து இருக்கவில்லை.

என்ன ஒரு நயம். என்ன ஒரு அழகு. சொல் நேர்த்தி.

இனிமையாக ,அழகாக பேசி, எழுதிப் பழகுவோம். அதற்கு பயிற்சி பெற நல்ல இலக்கியங்களை புரட்டுவோம்.

அது வாழ்க்கையை இனிமையாக்கும். நம்மை உயர்ந்த இடத்துக்கு கொண்டு போகும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_13.html





Monday, November 12, 2018

காரைக்கால் அம்மையார் பாடல் - அறவா

பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார்  - அறவா 


இறைவன் என்பது யார்? அவர் ஒரு ஆளா? ஆணா ? பெண்ணா ? அலியா ? உயரமா? குள்ளமா ? கறுப்பா ? சிவப்பா?


முதலில் இறைவன் என்பது ஒரு "ஆள்" என்ற எண்ணத்தை விட வேண்டும். இறைவன் என்றால் ஏதோ நம்மைப் போல இரண்டு கை , இரண்டு கால், கண், மூக்கு என்று இருப்பார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. மனிதர்கள் படைத்த இறைவன் மனிதர்கள் போல இருக்கிறான். சிங்கங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு இறைவனை கற்பனை செய்தால் அது மிகப் பெரிய வலிமையான சிங்க ரூபத்தில் இருக்கும். எனவே, இறைவன் மனித ரூபத்தில் இருப்பான் என்று எண்ணிக் கொள்வது நமது ஆணவம் அன்றி வேறில்லை.


சரி, இறைவன் மனித வடிவில் இல்லை என்றால் பின் எப்படி இருப்பான் ?


இறைவன் எந்த வடிவிலும் இல்லை. அவனுக்கு ஒரு வடிவம் கிடையாது.


பின் இறைவன் என்றால் என்ன ? வடிவம் இல்லாத ஒன்று எப்படி இருக்க முடியும்?


அறம் தான் இறைவன். இயற்கை தான் இறைவன்.


அறம் என்றால் என்ன? ஒரு ஒழுங்கு, ஒரு நியதி, ஒரு உண்மை...அது தான் அறம்.


அறம் தான் நம் வாழ்வை செலுத்துவது.


நம் வாழ்வின் அடிப்படை அறம் தான்.

எனவே தான் இல்லறம், துறவறம் என்று வாழ்வை இரண்டாகப் பிரித்தார்கள்.

உலகுக்கு நீதி சொல்ல வந்த வள்ளுவர் - அறம் , பொருள் , இன்பம் என்று திருக்குறளை மூன்றாகப் பிரித்து அறத்தை முதலில் வைத்தார்.

வில்லறம் , சொல்லறம் என்று அனைத்திலும் அறத்தை கண்ட வாழ்க்கை நெறி நமது.

அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை என்பார் வள்ளுவர்.

Einstein said "I believe in the god of Spinoza who exists in the orderly harmony of what exists"

ஒரு ஒழுங்கு. அது தான் இறைவன்.

காரைக்கால் அம்மையார் இறைவனை "அறவா " என்று அழைக்கிறார். அறமே வடிவானவன். அறம் தான் கடவுள்.

பாடல்

இறவாத இன்ப அன்பு 
   வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் 
   பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் 
   வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் 
   அடியின்கீழ் இருக்க என்றார் 

பொருள்

இறவாத இன்ப அன்பு வேண்டிப் = நமக்குத் தோன்றும் அன்பு கொஞ்ச நாளில் இறந்து போய் விடுகிறது. விழுந்து விழுந்து காதலித்தாலும், திருமணம் ஆன சில நாளில் அந்த அன்பு மறைந்து போய் விடுகிறது. இறவாத அன்பு வேண்டும் என்கிறார். இன்ப அன்பு. நினைத்துப் பாருங்கள் எத்தனை அன்பு இன்பமாக இருக்கிறது?



பின் வேண்டு கின்றார் = மேலும் வேண்டுகிறார்


பிறவாமை வேண்டும்  =  பிறவாமல் இருக்க வேண்டும்


மீண்டும்  பிறப்புண்டேல்  = ஒரு வேளை மறுபடியும் பிறந்து விட்டால்


உன்னை என்றும் மறவாமை வேண்டும் = உன்னை என்றும் மறக்காமல் இருக்க வேண்டும்


இன்னும் வேண்டும் = இன்னும் என்ன வேண்டும் என்றால்


நான் மகிழ்ந்து பாடி = நான் மகிழ்ந்து பாடி


அறவா = அறவா , அறமே வடிவானவனே


நீ ஆடும் போதுன் = நீ ஆடும் போது உன்


அடியின்கீழ் இருக்க என்றார் = உன் திருவடியின் கீழ் இருக்க வேண்டும் என்கிறார்.


இறைவன் அறமே உருவானவன் என்பது ஒரு செய்தி.

நம்மில் பல பேர் பக்தி என்றால் ஏதோ பெரிய இராணுவ பயிற்சி போல குளித்து முழுகி, முகத்தை ரொம்ப சீரியஸ் ஆக வைத்துக் கொண்டு, பய உணர்வு ஒரு பக்கம், பக்தி ஒரு பக்கம்,  என்று பக்தி செலுத்துவார்கள்.

கற்பூர ஆரத்தி காட்டுவதும், பூ அள்ளிப் போடுவதும் ஏதோ அறிவியல் செயல் கூடத்தில்  (laboratory) ஏதோ அறிவியல் கோட்பாட்டை சரி பார்க்கும் முயற்சி போல இருக்கும்.


வேண்டவே வேண்டாம்.


முதலில் சந்தோஷமாக இருக்கும் வேண்டும்.  இன்ப அன்பு வேண்டும்.


அடுத்து, மகிழ்ந்து பாடி என்கிறார். சந்தோஷமாக வாய் விட்டு பாடுங்கள்.


மூன்றாவதாக, இறைவனே ஆடிக் கொண்டு இருக்கிறான். இது ஒரு லீலை. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருங்கள். பக்தி என்றால் ஏதோ surgical strike  மாதிரி இருக்கக் கூடாது.


"விளையாட்டு உடையார் அவர் , தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே" என்பார்  கம்பர். எந்த கடவுள் விளையாட்டாக இருக்கிறாரோ, அவர் தான் எங்கள்  தலைவர் என்கிறார் கம்பர்.



வாழ்க்கையை ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாதீர்கள். விளையாட்டாக  எடுங்கள்.


ஆடுங்கள். பாடுங்கள். அன்பு செய்யுங்கள்.


அவ்வளவுதான் வாழ்க்கை. அவ்வளவுதான் இறைவன்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_12.html



Sunday, November 4, 2018

நளவெண்பா - இதெல்லாம் ஒரு பெரிய துன்பமா ?

நளவெண்பா - இதெல்லாம் ஒரு பெரிய துன்பமா ?


நாம் நினைக்கிறோம், நமக்கு வந்த துன்பங்கள்தான் உலகிலேயே பெரிய துன்பம் என்று. வேறு யாருக்கும் இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்தது இல்லை என்று நாம் நினைக்கிறோம்.

அப்படி அல்ல. நம்மை விட பலப் பல மடங்கு துன்பப் பட்டவர்கள், படுகிறவர்கள் இருக்கிறார்கள் இந்த உலகில். அதை எல்லாம் நினைத்துப் பார்த்தால் , நம் துன்பம் ஒன்றும் பெரிதல்ல என்று நமக்கு விளங்கும்.

அப்படி மற்றவர்கள் துன்பத்தை அறியும் போது, "வாழ்வில் துன்பம் என்பது ஒரு பகுதி. இது எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் வரத்தான் செய்கிறது" என்ற எண்ணமும் , அதனால் துன்பத்தை ஏற்றுக் கொள்ளும் ஒரு பக்குவமும் வந்து சேரும்.

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பெரிய துன்பம் என்று தருமன் , வேத வியாசரை கேட்டான்.

அதற்கு வியாசர் "நீ நினைக்கிறாய் ஏதோ உனக்குத்தான் பெரிய துன்பம் வந்து விட்டது என்று. உன்னை விட அதிகம் துன்பப் பட்டவர்கள் இருக்கிறார்கள். நள மன்னன் என்று ஒருவன் இருந்தான். அவன் கதையை சொல்கிறேன் கேள்" என்று நள மன்னனின் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.


பாடல்

சேமவேல் மன்னனுக்கச் செப்புவான் செந்தனிக்கோல்
நாமவேல் காளை நளனென்பான் - யாமத்
தொலியாழி வையம் ஒருங்கிழப்பப் பண்டு
கலியான் விளைந்த கதை.


பொருள்

சேம = சேமம், நல்லது , இதம்

வேல் = வேல். மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஏந்திய வேல்

மன்னனுக்கச் = மன்னனுக்கு (தருமனுக்கு)

செப்புவான் = சொல்லுவான்

செந்தனிக்கோல் = செம்மையான, தனிச் சிறப்பு வாய்ந்த

நாமவேல் = நாமத்தைக் கொண்ட

காளை = காளை போல பலம் கொண்ட

நளனென்பான் = நளன் என்ற ஒருவன்

யாமத் = நள்ளிரவிலும்

தொலி = ஒலி எழுப்பும்

யாழி = கடல் சூழ்ந்த

வையம் = உலகம்

ஒருங்கிழப்பப் = ஒன்றாக இழந்து

பண்டு = முன்பு

கலியான் = சனி பகவானால்

விளைந்த கதை = நிகழ்ந்த கதை

உலகம் அனைத்தையும், கடல் சூழ்ந்த இந்த உலகம் அனைத்தையும் , அதோடு கூடிய மற்றைய செல்வங்களையும் (அதிகாரம், புகழ் ) ஒரே சமயத்தில் இழந்தான் நளன்.

நளன் கதையை கேட்டால் நமக்கே கண்ணீர் வரும்.

நளனின் கதையை சொல்லத் தொடங்குகிறார் வியாசர்.

கேட்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_85.html

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பம் ?

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பம் ?


நமக்கு ஒரு சின்ன துன்பம் வந்து விட்டால் கூட, "ஐயோ எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது. நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன் ...அந்த கடவுளுக்கு கண் இல்லையா .." என்று புலம்புவோம்.


நமக்கு வந்தது அவ்வளவு பெரிய கவலையா ?


பல இலக்கியங்களைப் படிக்கும் போது, அந்தக் கதைகளில் வரும் மாந்தர்களை விட நமக்கு ஒன்றும் பெரிய கவலை இல்லை என்று தோன்றும். அந்த எண்ணமே கவலையை குறைக்கும்.


இலக்கியம் படிப்பதால் கிடைக்கும் இன்னொரு பலன் - மன ஆறுதல்.


நளவெண்பாவில், தருமன் சூதாடி நாடிழந்து , காட்டில் வந்து தனித்து இருக்கிறான். அர்ஜுனன் , தவம் செய்து பாசுபத அஸ்திரம் பெற்றுவர புறப்பட்டுப் போய்விட்டான். தனித்து இருந்த தருமன் கவலைப் படுகிறான்.


அப்போது அங்கு வந்த வியாசர், "தருமா ஏன் கவலையாக இருக்கிறாய் " என்று கேட்கிறார்.


அதற்கு தர்மன் சொல்கிறான் "கண் மூடித்தனமாக சூதாடி, நாட்டை இழந்து, காட்டை அடைந்து இப்படி துன்பப் படுகிறேன். இந்த உலகில் என்னைப் போல துன்பப் படுபவர்கள் யார் இருக்கிறார்கள் " என்று புலம்புகிறான்.


பாடல்


கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்.


பொருள்


கண்ணிழந்து = கண்மூடித் தனமாக


மாயக் கவறாடிக் = வஞ்சகமான சூதாட்டத்தில் விளையாடி


காவலர்தாம் = காவல் காக்க வேண்டிய


மண்ணிழந்து = நாட்டை இழந்து


போந்து =போய்


வனம்நண்ணி = காட்டை அடைந்து


விண்ணிழந்த = விண்ணை விட்டு மண் நோக்கி வரும்


மின்போலும் = மின்னலைப் போல உள்ள


நூல்மார்ப = நூலை அணிந்த மார்பை உடையவனே (வியாசனே)


மேதினியில் = இந்த உலகில்


வேறுண்டோ = வேறு எவரும் உண்டோ


என்போல் = என்னைப் போல



உழந்தார் இடர் = துன்பத்தில் வருந்துபவர்கள்


சரி தானே. தர்மனின் நிலையை நினைத்துப் பார்போம். ஒரே நாளில் பெரிய சாம்ராஜ்யத்தை இழந்து, காட்டில் வந்து தனித்து இருக்க வேண்டும் என்றால் எப்படி இருக்கும். நம்மால் முடியுமா ? ஒரு நாள் வீட்டை விட்டு காட்டில் போய் இரு என்றால் முடியுமா ? ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே விட்டு விட்டு ஒரு நாள் , இரண்டு நாள் அல்ல பன்னிரண்டு வருடம் காட்டில் இருக்க வேண்டும்.


நம் துன்பம் அதை விட பெரிய துன்பமா ?


இப்படி ஒரு பெரிய துன்பத்தில் இருக்கும் தருமனுக்கு வியாசர் என்ன தான் ஆறுதல் சொல்லி விட முடியும் ?


நாளை அது பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_4.html

Thursday, November 1, 2018

வில்லி பாரதம் - மும்மூர்த்திகள்

வில்லி பாரதம் - மும்மூர்த்திகள் 


படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களை செய்வது மூன்று மூர்த்திகள் என்று நாம் அறிவோம். பிரமன்,  திருமால்,அரன் என்று சொல்ல கேட்டிருக்கிறோம்.

இந்த மூன்று பேருக்கும் மேலே ஒரு கடவுள் இருக்கிறான் என்று நம் இலக்கியங்கள் பேசுகின்றன.

யார் அது ?

திருப்பள்ளி எழுச்சியில் மணிவாசகர் சொல்வார் ,

"மூவரும் அறிகிலர் யாவர் மாற்று அறிவார்"

அந்த பரம்பொருளை அந்த மும்மூர்த்திகளும் அறிய மாட்டார்கள் என்றால் பின் வேறு யார் தான் அறிவார்கள் என்கிறார்.

மும்மூர்த்திகளுக்கும் எட்டாத ஒருவன் அவன்.

முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.

வில்லி புத்தூர் ஆழ்வார் சொல்கிறார்


"பிரமன் படைக்கிறான், திருமால் காக்கிறான், அரன் அழிக்கிறான். அப்படி அழித்த பின், மீண்டும் அனைத்தையும் எவன் உண்டாக்குகிறானோ அவன் பொன்னடி போற்றி" என்கிறார்.

அதாவது, இந்த மூவர் அல்லாத இன்னொருவரும் இருக்கிறார் என்கிறார். அவன் தான் முதல்வன் என்கிறார்.

பாடல்


ஆக்கு மாறய னாமுத லாக்கிய வுலகம்
காக்கு மாறுசெங் கண்ணிறை கருணையங் கடலாம்
வீக்கு மாறர னாமவை வீந்தநாண் மீளப்
பூக்கு மாமுத லெவனவன் பொன்னடி போற்றி.

சீர் பிரித்த பின்

ஆக்குமாறு அயன் முதல் ஆக்கிய உலகம் 
காக்குமாறு செங் கண் நிறை கருணை அம் கடலாம் 
வீக்குமாறு அரன் அவை வீந்த நாள் மீளப் 
பூக்குமா(று ) முதல்வன் எவன் பொன்னடி போற்றி 



பொருள்


ஆக்குமாறு அயன் = படைத்தல் செய்பவன் பிரமன்

முதல் = முதலில்

ஆக்கிய உலகம்  = படைத்த உலகத்தை

காக்குமாறு = காக்கும் தொழிலை செய்பவன்

செங் கண் = சிவந்த கண்களை உடைய

நிறை கருணை = கருணை நிறைந்த

அம் கடலாம் = கடல் போன்ற  (கடல் போன்ற கருணை நிறைந்த)

வீக்குமாறு = வீழுமாறு

அரன் = அரன்

அவை வீந்த நாள் = அவை அவ்வாறு வீழ்ந்த இந்த

மீளப் = மீண்டும்

பூக்குமா(று ) = தோன்றும்படி

முதல்வன் = செய்யும் முதல்வன்

எவன் = யார் ?

பொன்னடி போற்றி  = அவன் பொன்னடி போற்றி

இவைகளை கடந்து செல்ல வேண்டும். உருவம், அந்த உருவங்கள் செய்யும் தொழில் , இதில் யார் பெரியவர் என்ற சண்டைகள் என்று இவற்றை எல்லாம் கடந்து செல்ல வேண்டும்.

சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post.html

Tuesday, October 30, 2018

தேவாரம் - பெறலாகா அருள் பெற்றேன்

தேவாரம் - பெறலாகா அருள் பெற்றேன் 


தெரு நாய் பார்த்து இருக்கிறீர்களா? யாரவது காரில் போனால், அந்த காரை துரத்தும். குலைக்கும். எங்கோ வேறு ஒரு தெருவில் ஒரு நாய் குரைத்தால், இந்த நாயும் குரைக்கும். காரணம் இல்லாமல் மற்ற நாய்களோடு சண்டை போடும். இங்கிருந்து அங்கு ஓடும். பின் அங்கிருந்து இங்கு ஓடி வரும். நாள் பூராவும் ஏதோ சுறு சுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கும்.

இரவில் களைத்துப் போய் விடும்.

சரி, உருப்படியாக என்ன செய்தாய் என்று கேட்டால் அதற்கு ஒன்றும் தெரியாது. ஓடினேன், வந்தேன், குறைத்தேன், கார்களை துரத்தினேன் என்று சொல்லும்.


அந்த நாய்க்கு அவ்வளவுதான் அறிவு.

நமக்கு ?

இத்தனை வயது வரை என்ன செய்தோம்?

25 வயது வரை ஏதேதோ படித்தோம். படித்ததில் ஏதாவது நினைவில் இருக்கிறதா ? அது வாழ்க்கைக்கு எங்காவது உதவுகிறதா ?

சரி, வேலைக்குப் போனோம். சாதித்தது என்ன?  யாருக்கோ பணம் போனது. யாருக்கோ நன்மை கிடைத்தது. நாம் சாதித்தது என்ன.

திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகள் பெற்றோம். அதனால் கிடைத்த பலன் என்ன?

 இப்படி ஒரு குறிக்கோள் இல்லாமல் அந்தத் தெரு நாய் போல அலைந்து கொண்டிருக்கிறோம்.

இந்த நாய் போலத்தான் பேயும். ஒரு குறிக்கோள் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும்.

சுந்தரர் சொல்கிறார் ...

"நாய் போன்ற நான் ஒரு குறிக்கோள் இன்றி பேய் போலத் திரிந்தேன். எப்படியோ பெற  முடியாத உன் அருளைப் பெற்றேன். இனி உனக்கு அடிமை ஆகிவிட்டேன். இனி, நான் என்று ஒன்று இல்லை "

பாடல்

நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் 
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெறலாகாவருள் பெற்றேன் 
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்  நல்லூரருட் டுறையுள் 
ஆயாஉனக் காளாய்இனி அல்லேன் என லாமே.

பொருள்

நாயேன் = நாய் போன்றவனான நான்

பல நாளும் = பல நாட்கள்

நினைப் பின்றி = என்ன செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என்ற நினவு இல்லாமல்

மனத் துன்னைப் = மனதில் உன்னை

பேயாய்த்திரிந் தெய்த்தேன் = பேய் போல திரிந்தும் உன்னை அடையவில்லை

பெறலாகாவருள் பெற்றேன் =  பெற முடியாத அருளைப் பெற்றேன்

வேயார் = மூங்கில் காடுகள் நிறைந்த

பெண்ணைத் = பெண்ணை ஆற்றின் கரையில்

தென்பால் = தெற்கு பக்கம் உள்ள

வெண்ணெய் = திருவெண்ணெய்

நல்லூரருட் டுறையுள் = நல்லூர் என்ற அருள் தலத்தில்

ஆயா = தலைவனே

உனக் காளாய் = உனக்கு எற்றவனானேன்

இனி அல்லேன் என லாமே. = இனி நான் என்று ஒன்றும் இல்லை என்று ஆகி விட்டேன்

வாழ்வின் குறிக்கோள் என்ன என்று அறிந்து பின் செல்லுங்கள். அங்காடி நாய் போல் அலைந்தனையே மனமே என்பார் பட்டினத்து அடிகள்.

இனிமையான பாடல்.

இன்னொரு முறை வாசித்துப் பாருங்கள். உண்மை புலப்படும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_30.html



Monday, October 29, 2018

108 திவ்ய தேசம் - திருவாலி - பாகம் 2

108 திவ்ய தேசம் - திருவாலி - பாகம் 2 



 ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களை கேட்டால் சொல்லுவார்கள், "நான் இறைவனை நம்புகிறேன். இறைவனிடம் போய் சேர முயல்கிறேன். இறைவன் சொர்க்கத்தில்  இருக்கிறான்  வைகுந்தத்தில் இருக்கிறான் அல்லது கைலாயத்தில் இருக்கிறான் .." என்றது சொல்லுவார்கள். 

இறைவனை தேடுவது என்றால் என்ன  அர்த்தம். எதையோ தொலைத்து விட்டு , பின் தேடினால் அர்த்தம்  இருக்கும். நாம் இறைவனை தொலைத்து விட்டோமா ? இதற்கு முன் அவர் நம்மிடம் இருந்தாரா ? இல்லையே. பின் எப்படி தேட முடியும் ?

 என் கார் சாவி என்னிடம் இருந்தது. எங்கேயோ வைத்து விட்டேன். அதைத் தேடி கண்டு பிடிக்கலாம். அந்த சாவி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். 

இறைவன் எப்படி இருப்பான் என்று நமக்குத் தெரியுமா ? தெரியாத ஒன்றை எப்படி தேடுவது ? 

ஒரு நாள் என் வீட்டில் , இரவில் மருந்து சாப்பிட மாத்திரையை எடுத்தேன். கை தவறி கீழே விழுந்து விட்டது. எடுக்கக் குனியும் நேரத்தில் மின்சாரம் போய் விட்டது. ஒரே இருட்டு. ஒன்றும் தெரியவில்லை. 

என்ன செய்வது. வெளியே பார்த்தேன். தெரு விளக்கில் வெளிச்சம் இருந்தது.  சரி, அங்கே போய் தேடலாம் என்று போனால் அது எவ்வளவு பைத்தியகாரத்தனம் ?

அந்த அளவு பைத்தியகாரத் தனம் இறைவனை தேடுவது. எங்கே தொலைத்தோமோ அங்கு தானே தேட முடியும்? தொலைத்த இடம் எது ? கோவிலில் தொலைத்தோமா ? தினமும் அங்கே போய் தேடுகிறார்கள். 

இறைவன் யார், எப்படி இருப்பான், எங்கே இருப்பான், அவன் கருப்பா சிவப்பா, உயரமா குள்ளம்மா, ஆணா பெண்ணா என்று எதுவும் நமக்குத் தெரியாது. தெரியாத ஒன்றை எப்படித் தேடுவது ?

இங்குதான் இந்த பாசுரம் வருகிறது. 

நமக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் யாராவது இருப்பார்கள் அல்லவா ? அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 

ஒரு புதிய ஊருக்குப் போகிறோம். விலாசம் தொலைந்து போய் விட்டது. போய் சேரும் இடம் பற்றி கொஞ்சம் தெரியும். ஆனால் எந்த இடம், எந்தத் தெரு என்பதெல்லாம் தெரியாது. 

என்ன செய்யலாம் ?

அந்த ஊரைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 

நம் சமயங்கள் , அதிலும் குறிப்பாக வைணவ சமயம், ஆசாரியர்களை கொண்டாடுகிறது. அவர்களை , இறைவனுக்கும் ஒரு படி மேலே வைத்து கொண்டாடுகிறார்கள். ஆசாரியன் தான் நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறார்கள். 

மாதா பிதா குரு தெய்வம். 

அம்மா தான் அப்பா யார் என்று அடையாளம் காட்டுகிறாள். 

அப்பா தான் குரு யார் என்று அடையாளம் காட்டுகிறார். 

குரு தான் இறைவனை நமக்கு அடையாளம் காட்ட முடியும். 

எனவேதான் அந்த வரிசை. மாதா, பிதா, குரு , தெய்வம். 

இங்கே வண்டு என்று அவர் கூறுவது, ஆசாரியனை. ஆசாரியனுக்கு ஒரு உவமானம். "நான் அவனை அடைய விரும்புகிறேன். ஆனால், எப்படி என்று தெரியவில்லை. நீ போய் சொல்லி அவனை வரச் சொல்" என்று வண்டை தூது விடுவதாக உள்ள இந்த பாசுரம் சொல்லுவது, "ஆசாரியனே, நீ என்னை அந்த  வரிவில் கொண்ட இலக்குமி கேள்வனோடு சேர்த்து விடு " என்று கூறுவதாக உள்ளது. 

சைவ சமயமும் குருவை பிரதானமாக ஏற்றுக் கொண்டுள்ளது. 

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" 

என்று இறைவனே குரு வடிவில் வருவதாக நம்பியது. 

இன்னொன்றையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். 

ஆழ்வார் "என்னை அங்கே கூட்டிப் போ " என்று வண்டிடம் (ஆசாரியனிடம்) கூறவில்லை. என் நிலைமையை அவனிடம் கூறு என்று தான் வேண்டுகிறார். 

அவன் இருக்கும் இடம் தெரிந்தாலும் நம்மால் அங்கே போக முடியாது. அவன் வந்து கூட்டிக் கொண்டு போனால் தான் உண்டு. 

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர். 

பாலைக் கொடுத்து ஆட்கொண்டான் திரு ஞான சம்பந்தரை 

ஓலை கொடுத்து ஆட்கொண்டான் சுந்தர மூர்த்தி நாயனாரை 

காலை காட்டி ஆண்டு கொண்டான் மணிவாசகரை 

அவன் வந்து ஆட் கொண்டால் தான் உண்டு. 

சிந்திப்போம் 



------------------------------------ பாகம் 1 --------------------------------------------------------------------


ஆணின் உலகம் கரடு முரடானது. போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு, நம்பிக்கை துரோகம் போன்றவற்றால் நிறைந்தது. ஆணின் உலகம் போராட்டம் நிறைந்தது.

ஏதோ ஒரு சிக்கலில் மாட்டி, சிக்கி சின்னா பின்னாமாகி வீட்டுக்கு வருவான். கோபம், ஏக்கம், வலி இவற்றோடு வருவான். வந்தவுடன் , அவன் முகத்தைப் பார்த்தவுடன் அவன் மனைவிக்குத் தெரியும். இன்னிக்கு என்னமோ நடந்திருக்கு என்று புரிந்து கொள்வாள்.

அவளால் முடிந்தவரை அவன் வலியை நீக்கி, அவனை சாந்தப் படுத்த முயல்வாள்.

"சரி விடுங்க...இது போனா இன்னொன்னு. இன்னிக்கு இல்லேனா நாளைக்கு கிடைத்து விட்டுப் போகிறது. எதுக்கு போட்டு மனச குழப்பிக்கிறீங்க " என்று ஆறுதல் சொல்லி அவனுக்கு அமைதி தர முயல்வாள்.

பெண்ணின் அருகாமை ஆணை அமைதிப் படுத்தும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்த அரக்கர்கள் இருக்கிறார்களே சரியான முட்டாள்கள். மரணம் என்பதை வெல்லவே முடியாது என்று தெரிந்தும், எத்தனையோ விதங்களில் மரணத்தை வெல்ல வரம் வாங்குவார்கள். பின், அந்த வரங்களை எல்லாம் மீறி அவர்கள் கொல்லப் படுவார்கள்.

இரணியன் என்று ஒரு அரக்கன் இருந்தான். அவன் மிக மிக கடினமான வரம் வாங்கினான். நமக்கெல்லாம் தெரிந்த கதைதான்.

பெருமாள், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை கொன்றார்.

கொன்ற பின்னும், நரசிம்மத்தின் கோபம் அடங்கவில்லை. அந்தக் கோபம் அடங்காவிட்டால் உலகமே அழிந்து விடும் என்று பயந்த தேவர்கள், நேராக இலக்குமியிடம் சென்று "தாயே, நீ தான் பெருமாளின் கோபத்தை தணித்து இந்த உலகை  காக்க வேண்டும் " என்று வேண்டினார்கள்.

பெண்ணின் அன்பில் உருகாத மனமும் உண்டோ ?

இலக்குமி ஒன்றுமே செய்யவில்லை. நேராக சென்று அந்த நரசிம்மத்தின் மடியில் அமர்ந்து விட்டாள்.. அவ்வளவுதான்.

அப்படி மடியில் அமர்ந்த இலக்குமியை , பெருமாள் ஆலிங்கனம் செய்து கொண்டார் (கட்டிப் பிடித்துக் கொண்டார்). அப்படி கட்டிப் பிடித்தவுடன் அவரின் கோபம் எல்லாம்  மறைந்தே போய் விட்டது. அமைதி ஆனார்.

அப்படி அவர் இலக்குமியை ஆலிங்கனம் செய்து கொண்ட தலம் திரு ஆலி அல்லது திருவாலி என்று அழைக்கப் படுகிறது.

சீர்காழிக்கு பக்கத்தில் இருக்கிறது. மூணு கிலோமீட்டர் தூரம்தான்.

மூலவர் இலட்சுமி நரசிம்மன். அமர்ந்த திருக்கோலம்.

திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திருத்தலம்.


"மலரின் மெல்லிய இதழ்களை பிரித்து அதில் உள்ள தேனை , உன் துணையோடு அருந்தும் வண்டே,  மறையவர்கள் ஓமம் வளர்த்து வேதங்களை ஓதும் புகழ் கொண்ட திருவாலி நகரில் உள்ள அந்த பெருமாளிடம் என் நிலைமையை சென்று சொல்லாயோ "

என்று வண்டை தூது விடுகிறார்.



பாடல்

தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே
 பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே
 தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாழி
 ஏவரி வெஞ்சிலையானுக் கென்னிலைமை யுரையாயே - (1198)
                     
பெரியதிருமொழி 3-6-1


பொருள்

தூவிரிய = சிறகுகள் விரிய

மலருழக்கித்  = மலரின் உள்ளே சென்று

துணையோடும் = உன் துணையோடு

பிரியாதே = எப்போதும் பிரியாமல்

பூவிரிய = மலர் விரிந்து

மதுநுகரும் = அதில் உள்ள தேனை அருந்தும்

பொறிவரிய = புள்ளிகளும், கோடுகளும் கொண்ட

சிறுவண்டே = சிறு வண்டே

தீவிரிய = தீ வளர்த்து

மறைவளர்க்கும் = வேதங்களை போற்றும்

புகழாளர் = புகழ் படைத்தவர்கள்

திருவாழி = திருவாலி என்ற திருத்தலத்தில்

ஏவரி = சிறந்த , கட்டுக் கோப்பான

வெஞ்சிலையானுக் = வலிமை வாய்ந்த வில்லை கையில் கொண்ட அவனிடம்

கென்னிலைமை யுரையாயே  = என் நிலைமையை சொல்ல மாட்டாயா

மேலோட்டமாக பார்த்தால் ஏதோ நாயகன் நாயகி பாவத்தில் , காதல் வயப்பட்ட தலைவி , வண்டை தலைவனிடம் தூது விடும் பாடல் மாதிரி தெரியும்.

உண்மை அது அல்ல. மிக ஆழமான அர்த்தம் கொண்ட பாசுரம்.

அது என்ன அர்த்தம் ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/108.html