Sunday, April 21, 2019

கம்ப இராமாயணம் - மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல

கம்ப இராமாயணம் - மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல 


"உன்னிடம் ஒரு காரியம் ஆக வேண்டும்" என்று சூர்ப்பனகை சொன்னாள். அதை கேட்டவுடன் இராமன், "பெண்கள் மனதை யாராலும் அறிய முடியாது. பெரும்பாலும் அது நல்ல வழியில் செல்வது அல்ல. போகப் போக இவள் எண்ணம் என்ன என்று தெரியும்" என்று மனதில் நினைத்துக் கொண்டு "அழகிய வளையல்களை அணிந்த பெண்ணே, நீ மனதில் நினைத்து வந்த காரியத்தை கூறு. முடிந்தால் செய்து தருகிறேன்" என்றான்.

பாடல்


அன்னவள் உரைத்தலோடும், ஐயனும், 
     'அறிதற்கு ஒவ்வா 
நல் நுதல் மகளிர் சிந்தை நல் 
     நெறிப் பால அல்ல; 
பின் இது தெரியும்' என்னா, 'பெய் வளைத் 
     தோளி! என்பால் 
என்ன காரியத்தை? சொல்; அஃது இயையுமேல் 
     இழைப்பல்' என்றான்.

பொருள்

அன்னவள் = அந்த சூர்ப்பனகை

உரைத்தலோடும் = சொன்னவுடன்

ஐயனும்,  = இராமனும்

'அறிதற்கு  ஒவ்வா = அறிந்து கொள்ள முடியாத

நல் நுதல் = சிறந்த  நெற்றியை உடைய

மகளிர் = பெண்கள்

சிந்தை = சிந்தனை

நல் நெறிப் பால அல்ல;  = நல்ல நெறியில் செல்பவை அல்ல

பின் இது தெரியும்' = பின்னால் இது தெரியும்

என்னா, = என்று

'பெய் வளைத் தோளி!  = வளையல்களை அணிந்த கைகளை உடையவளே

என்பால்  = என்னிடம்

என்ன காரியத்தை? = என்ன காரியம் வேண்டி வந்தாய்

சொல்; = சொல்

அஃது = அதை

இயையுமேல் = முடிந்தால்

இழைப்பல்' = செய்து தருகிறேன்

என்றான். = என்றான்


"அறிதற்கு ஒவ்வா  நல் நுதல் மகளிர் சிந்தை"


பெண்கள் மனதை அறிந்து கொள்ள முடியாது.

பெரிய பெரிய ஞானிகள், மேதாவிகள் எல்லாம் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.


ஆாழி என்ன அளவு படா வஞ்ச நெஞ்சப்
பாழான மாதர் மையல் பற்று ஒழிவது எந்நாளோ

கடல் போன்ற ஆழம் உள்ள வஞ்ச நெஞ்ச பாழான மாதர் என்று குறிப்பிடுகிறார்  தாயுமானவர் என்ற மிகப் பெரிய ஞானி.

அத்தி மலரும்  அருங்காக்கை வெண்ணிறமும் 
கத்துபுனல் மீன் பதமும் கண்டாலும் -பித்தரே 
கானார் தெரியற் கடவுளரும் காண்பாரோ 
மானார் விழியார் மனம் 

என்பது நீதி வெண்பா

பெண்ணின் மனம், கடவுளுக்கும் தெரியாது என்கிறது.


பெண் என படுவோ கேண்மோ ....ஓராயிரம் மனத்தவாகும் என்கிறது சீவக சிந்தாமணி.

ஒரு மனம் அல்ல, ஆயிரம் மனம் என்கிறது.

இராமன் ஒரு படி மேலே போகிறான்.

பெண் மனம் என்பது அறிய முடியாதது மட்டும் அல்ல, அது நல்ல வழியில் செல்வதும் அல்ல  என்கிறான்.

"மகளிர் சிந்தை நல்நெறிப் பால அல்ல"

சீதை உள்ளே இருக்கிறாள். அது இராமனுக்கும் தெரியும்.

இருந்தும் இராமன் சொல்கிறான்.

"....நித்தநித்தம் பொய்யடா பேசும் புவியின் மட மாதரை விட்டு உய்யடா உய்யடா உய்"

என்பார் பட்டினத்தடிகள்.


கணவன் தூங்கிய பின், அவன் கையை மெல்ல, அசையாமல்  எடுத்து தள்ளி வைத்து விட்டு , வெளியில் சென்று விட்டு வந்து உறங்குபவளை எப்படி நான் நம்புவேன் இறைவா கச்சியேகம்பனே என்று பாடுகிறார் பட்டினத்து ஸ்வாமிகள்

 கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து
அப்புறங்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்
ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை
எப்படிநான் நம்புவேன்? இறைவா ! கச்சியேகம்பனே


கம்பன் பல பாடல்களை கவி கூற்றாக சொல்லி இருக்கிறான். அதாவது, இது என் கருத்து.  எந்த கதா பாத்திரத்தின் கருத்தும் அல்ல என்று கூறி இருக்கிறான்.  ஆனால், இந்தக் கருத்தை , இராமன் வாயிலாக சொல்ல வைக்கிறான் கம்பன்.

என்ன காரணமாக இருக்கும் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_21.html


Saturday, April 20, 2019

கம்ப இராமாயணம் - நின்னை காணிய வந்தேன்

கம்ப இராமாயணம் - நின்னை காணிய வந்தேன் 


நீ எப்படி தனியாக வந்தாய் என்று சூர்பனகையிடம் இராமன் கேட்டான்.

அதைக் கேட்டவுடன் சூர்ப்பனகை " ஐயோ...அதை ஏன் கேட்கிறீர்கள். அவங்க கூட எல்லாம் நான் சேர்வதில்லை. மாறாக, தேவர்களையும், முனிவர்களையும் நான் அடைய விரும்புகிறேன். மேலும், உன்னிடம் ஒரு காரியம் உள்ளது. எனவே உன்னைக் காண வந்தேன்" என்றாள்.


பாடல்


வீரன் அஃது உரைத்தலோடும், 
     மெய்இலாள், 'விமல! யான் அச் 
சீரியரல்லார் மாட்டுச் 
     சேர்கிலென்; தேவர்பாலும் 
ஆரிய முனிவர்பாலும் அடைந்தனென்; 
     இறைவ! ஈண்டு ஓர் 
காரியம் உண்மை, நின்னைக் காணிய 
     வந்தேன்' என்றாள்.

பொருள்


வீரன் = இராமன்

அஃது உரைத்தலோடும், = அவ்வாறு கேட்ட பின் (நீ எப்படி தனியாக வந்தாய் என்று கேட்ட பின் )

மெய்இலாள், = உண்மை இல்லாதவளான சூர்ப்பனகை

'விமல! = மலம் என்றால் குற்றம். தவறு. வி என்றால் இல்லை என்று பொருள். விமலன், குற்றம் இல்லாதவன். தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் வி-நாயகன்

யான்  = நான்

அச் சீரியரல்லார் = அந்த சீர்மை இல்லாதவர்கள்

மாட்டுச் = பால், பக்கம்

சேர்கிலென்; = சேர மாட்டேன்

தேவர்பாலும் = தேவர்கள் பக்கமும்

ஆரிய முனிவர்பாலும்  = தவ முனிவர்கள் பக்கமும்

அடைந்தனென் = அடைந்தேன்

இறைவ! = தலைவா

ஈண்டு ஓர் = இங்கு ஒரு

காரியம் உண்மை = காரியம் வேண்டி

நின்னைக் காணிய வந்தேன்' = உன்னை காண வந்தேன்

என்றாள். = என்றாள்


தீயவர்கள் எப்போதும் நமக்கு பிடித்த வார்த்தைகளையே பேசுவார்கள். கேட்க மிக இனிமையாக இருக்கும்.


நம் நலம் விரும்புவார்கள் நம்மை கண்டிப்பார்கள். நம்மை, நமது விருப்பத்துக்கு மாறாக செயல்களை செய்யச் சொல்லி திருந்துவார்கள்.


நமக்கு கோவம் வரும்.


படி படி என்று பெற்றோர் உயிரை வாங்கினால் எந்த பிள்ளைக்குத்தான் கோபம் வராது?


ஆசிரியரை கண்டால் பிடிக்காது.


"வாடா, வீடியோ கேம் விளையாடலாம், சினிமாவுக்கு போகலாம், ஊர் சுற்றலாம், அரட்டை அடிக்கலாம் " என்று நண்பர்கள் கூப்பிட்டால் அது மிக இனிமையாக இருக்கும்.


சிரித்துப் பேச அல்ல நட்பு என்பது. தவறு கண்ட இடத்தில், தவறு செய்யும் நண்பனை இடித்துப் பேசி திருத்துவதுதான் நட்பு என்பார் வள்ளுவர்.


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.



திருத்திச் சொல்ல ஆள் இல்லாத அரசன், எதிரி இன்றியும் கெட்டுப் போவான் என்பார் வள்ளுவர்.


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 

கெடுப்பார் இலானும் கெடும். 

நம்மிடம் எப்போதும் சிரிக்க சிரிக்க பேசுபவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


இராமனுக்கு எப்படியெல்லாம் சொன்னால் அவன் மனம் குளிரும் என்று அறிந்து கொண்டு  அப்படி எல்லாம் பேசுகிறாள்.



உருவம் - மிக அழகாக இருக்கிறது.


பேச்சு - அதை விட இனிமையாக இருக்கிறது


அது தானே சிக்கல். நாம் அதில் மயங்கி தவறானவர் பின் போய் விடுகிறோம்.


சூர்ப்பனகை நமக்கு ஒரு பாடம்.


படித்துக் கொள்வோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_20.html

Friday, April 19, 2019

கம்ப இராமாயணம் - தனியே வந்த காரணம் என்ன ?

கம்ப இராமாயணம் - தனியே வந்த காரணம் என்ன ?


தீயாரை காண்பதுவும் தீதே, தீயார் சொல் கேட்பதுவும் தீதே என்றெல்லாம் நமக்குச் சொல்லி இருக்கிறார்கள்.

அவர்களோடு பேசினால் என்ன வந்து விடப் போகிறது? அவர்கள் சொல்வதை நாம் கேட்டு நடந்தால் தானே தவறு. சும்மா பேசிக் கொண்டிருந்தால் என்ன ஆகிவிடப் போகிறது என்று கேட்கலாம்.

இராமன் , சும்மா பேசிக் கொண்டிருந்தான் சூர்பனகையிடம். வினை வந்து சேர்ந்ததா இல்லையா ?

இராமன் மேலும் கேட்கிறான் சூர்பனகையிடம்

"தேவர்களின் தலைவனான இந்திரனைக் கூட ஆட்டி வைக்கும் ஆற்றல் பெட்ற இராவணனின் தங்கை நீ என்றால், உன்னைப் பார்த்தால் செல்வச் சீமாட்டி மாதிரியும் தெரியவில்லை, உன் கூட யாரும் வரவில்லை, தனியாக ஏன் வந்தாய் " என்று கேட்கிறான்.

அவள் தனியாக வருகிறாள், கூட யாருடனோ வருகிறாள். இராமனுக்கு என்ன கவலை அதில்? அவளோடு "சும்மா" பேசிக் கொண்டிருக்கிறான்.  தீயவர்களோடு சும்மா பேசிக் கொண்டிருந்த இராமனுக்கே அந்த கதி என்றால், நம் நிலைமை எப்படி ஆகும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

தீயவர்கள் என்றால் ஏதோ கோரைப் பல்லுடன் , கறுப்பா, குண்டா, கழுத்தில் மண்டை ஓடு மாலை போட்டுக் கொண்டு வர மாட்டார்கள்.

சூர்ப்பனகை எப்படி வந்தாள் ? தேவ லோக பெண் போல வந்தாள்.

"பஞ்சு ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க"...முத்துகள் சிணுங்கியதாம்.

இலக்குமி போல் இருந்தாள் என்று கம்பன் சொல்கிறான்.

கெட்டவர்கள் பார்ப்பதற்கு மிக நல்லவர்கள் போல இருப்பார்கள். மிக மிக இனிமையாகப் பேசுவார்கள். இனம் கண்டு கொள்வது மிகக் கடினம்.

அவர்கள் எந்த வடிவிலும் வரலாம்...உறவினர் வடிவில், நண்பர்கள் வடிவில், அக்கம் பக்கம் உள்ளவர்கள் போல, அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர் வடிவில் இருக்கலாம்.

நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

யார் நல்லவர் , யார் கெட்டவர் என்று தெரியாது. எனவே, பேச்சைக் குறைப்பது நலம்.

சூர்ப்பணகை படலத்தில் கம்பன் நமக்குச் சொல்லும் பாடம் இது.

தோற்றம் கண்டு ஏமாறாதே

தீயவர்களோடு சகவாசம் வேண்டவே வேண்டாம்.

பாடல்

‘இமையவர் தலைவனேயும்
    எளிமையின் ஏவல் செய்யும்
அமைதியின், உலகம் மூன்றும்
    ஆள்பவன் தங்கை ஆயின்,
சுமை உறு செல்வத்தோடும்
    தோன்றலை; துணையும் இன்றித்
தமியை நீ வருதற்கு ஒத்த
    தன்மை என்? தையல்! ‘என்றான்.

பொருள்

‘இமையவர் = கண் இமைக்காத தேவர்கள்

தலைவனேயும் = தலைவனான இந்திரனையும்

எளிமையின் = சாதாரண வேலைக்காரனைப் போல

ஏவல் செய்யும் = வேலை வாங்கும்

அமைதியின் = ஆற்றல் கொண்ட

உலகம் மூன்றும் = மூன்று உலகத்தையும்

ஆள்பவன் = ஆளக் கூடிய இராவணனின்

தங்கை ஆயின், = தங்கை என்றால்

சுமை உறு செல்வத்தோடும் = சுமை உள்ள செல்வத்தோடும்

தோன்றலை;  = நீ வரவில்லை

துணையும் இன்றித் = ஒரு துணையும் இல்லை

தமியை = தனியாக வந்து இருக்கிறாய்

நீ வருதற்கு  = நீ இப்படி வந்ததற்கு

ஒத்த தன்மை என்?  = சரியான காரணம் என்ன

தையல்!  = பெண்ணே

‘என்றான். = என்று கேட்டான் இராமன்

சுமை உறு செல்வம் என்கிறான் இராமன். சுமந்து வரும் செல்வம், நகை நட்டு. பட்டாடை,   என்று போட்டுக் கொண்டு வரும் செல்வம்.

இன்னொன்று,

ஒரு அளவுக்கு மேல் போனால், செல்வம் ஒரு சுமை தான். நாம் தான் அதை சுமந்து கொண்டு போக வேண்டும். அதை பாதுகாக்க வேண்டும். எதில் கொண்டு போய் பணத்தைப் போடுவது, எங்கே போட்டால் நல்ல வட்டி வரும், முதலுக்கு மோசம் வந்து விடக் கூடாது என்று பயந்து கொண்டே இருக்க வேண்டும்.

சுமை உறு செல்வம்.

குகப் படலத்தில், அரச உரிமையை , அரசை "துன்பத்தின் இருக்கை" என்பான் குகன்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_19.html

108 திவ்ய தேசம் - சிதம்பரம்

108 திவ்ய தேசம் - சிதம்பரம் 


நம்மில் பெரும்பாலானோருக்கு ஒரு நல்ல குணம் உண்டு. நல்லவற்றை படிக்க வேண்டும். பெரியவர்கள் சொன்னதை கேட்க வேண்டும். உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், முனைப்பு உண்டு. படித்து, கேட்டு, அறிந்த பின் அதன் படி நடக்க மாட்டேன், என் மனம் போனபடி தான் செய்வேன் என்ற நல்ல குணமும் உண்டு.

எவ்வளவு நல்ல நூல்கள், எவ்வளவு அறிவுரைகள், எத்தனை முறை படித்தும் கேட்டும் இருப்போம். அதில் ஒன்றையாவது கடைபிடித்தால் எவ்வளவோ முன்னேறி இருக்கலாம்.

மாட்டோமே.

ஏதோ பொழுது போக்கு நாவல் படிப்பது மாதிரி படிக்க வேண்டியது. "நல்லாத்தான் சொல்லி இருக்காரு..." என்று சொல்லிவிட்டு, அதை தூக்கி அப்படியே குப்பையில் போட்டுவிட்டு மனம் போன போக்கில் செல்லும் உயரிய குணம் நமக்கு உண்டு.

"அவர் தான் எங்கள் குரு. ஆசாரியன். முழு முதல் கடவுள். கடவுளுக்கும் மேலே ஒரு படி...அவர் எழுதியதைப் படித்தால் அப்படியே கண்ணில் நீர் வரும்...மனம் இளகி விடும்" என்று கொண்டாடுவார்கள்.

சரி, அவர் சொல்கிறபடி செய்கிறீர்களா என்று கேட்டால் "...அது வந்து...அந்த மாதிரி காரியம் எல்லாம் நம்மால் செய்ய முடியாது. நமக்கு குடும்பம், குட்டிகள் என்று நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறேதே " என்று ஏதாவது சால்ஜாப்பு சொல்லிவிட்டு  நகர்ந்து விடுவோம்.

எதுக்கு அனாவசியமா படித்து நேரத்தை வீணாக்குவானேன்? அந்த நேரத்தில் நாலு டிவி சீரியல் பார்க்கலாம், கொஞ்சம் whatsapp இல் அரட்டை அடிக்கலாம். ஜோக், மீம்ஸ் forward பண்ணலாம். எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கு.

போகாத ஊருக்கு வழி கேட்பதைப் போல, செய்ய விரும்பாத காரியத்தை படிப்பானேன்?

சரி. .அது புறம் இருக்கட்டும்.

திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்

"இந்த வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக் கிழமை போன்ற விரதங்கள் எல்லாம் வேண்டாம். குளித்து, முழுகி, அக்கினி ஹோத்ரம் செய்வது போன்ற பூஜைகள் வேண்டாம்"

என்று சொல்கிறார்.

கேட்போமா நாம். அடடா என்ன அழகான பாசுரம். என்னமா அனுபவித்து எழுதி இருக்கிறார் என்று சொல்லிவிட்டு, வழக்கப்படி நம் வேலைகளை தொடருவோம்.

பாடல்

 காயோடு நீடு கனியுண்டு வீசு
          கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம், ஐந்து
     தீயோடு நின்று தவஞ் செய்ய வேண்டா
          திருமார்பனைச் சிந்தையுள் வைத்து மென்பீர்
     வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர்
          மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
     தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத்
          திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே - (1159)
                              பெரிய திருமொழி 3-2-2

பொருள்

 காயோடு = பச்சை காய் கறிகளையும்

நீடு கனியுண்டு = நீண்ட நாள் உலர்ந்த பழங்களையும்

வீசு = வீசுகின்ற

கடுங்கால் = கடுமையான காற்று. வெப்பக் காற்று (தீக்கு நடுவில் நின்று தவம் செய்வது). கால் என்றால் காற்று. காற்று வரும் வழி என்பதால் ஜன்னலுக்கு காலதர் என்று பெயர்.

நுகர்ந்து = சுவாசித்து

நெடுங்காலம் = நெடுங்காலம்

ஐந்து தீயோடு = பஞ்சாக்கினி என்று சொல்லுவார்கள். அதனுடன்

நின்று தவஞ் செய்ய வேண்டா = நின்று தவம் செய்ய வேண்டாம்

 திருமார்பனைச் = திரு என்று சொல்லப்படும் இலக்குமியை தன் மார்பில் கொண்ட

சிந்தையுள் வைத்து = மனதில் வைத்து

மென்பீர் = அன்பீர்

வாயோது வேதம் = வாயாலே சொல்லுகின்ற வேதம்

மல்கின்ற = மலிந்து இருக்கின்ற. நிறைந்து இருக்கின்ற

தொல்சீர் = பழமையான, சீர்மையான

மறையாளர் = வேத விற்பன்னர்கள்

நாளும் = ஒவ்வொரு நாளும்

முறையால் = முறையாக

வளர்த்த = வளர்த்த

தீயோங்க வோங்கப் = தீயவர்கள் ஓங்கியதால், தான் ஓங்கிய

புகழோங்கு  = புகழ் ஓங்கிய

தில்லைத் = சிதம்பரம்

திருச்சித்ர கூடம் = சித்ர கூடம்

சென்றுசேர் மின்களே = சென்று அடையுங்கள்

இந்த பூஜை புனஸ்காரம் எல்லாம் விட்டு விடுங்கள். பேசாமல் சிதம்பரம் வந்து சேருங்கள் என்கிறார்.

பூஜையை விடுவதாவது, சிதம்பரம் போவதாவது, வேற வேலை இல்லை?  என்று சொல்லக் கூடியவர்கள் நாம்.

இந்த சிதம்பரம் எங்கே இருக்கிறது?

சீர்காழியில் இருந்து 30 நிமிடம்.

மயிலாடுதுறை என்ற மாயவரத்தில் இருந்து 1 மணி நேரம்.

நெய்வேலியில் இருந்து ஒரு மணி நேரம்.

சென்னையில் இருந்து செல்வதாக இருந்தால் 5 மணி நேரம்.

சென்னை - மாமல்லபுரம் - பாண்டிச்சேரி - கடலூர் - சிதம்பரம் என்று கடற்கரை ஒட்டியே சென்று விடலாம்.

பெங்களூரில் இருந்து செல்வதாக இருந்தால் ஏழு மணி நேரம் ஆகும்.

பெங்களூர் - ஓசூர் - கிருஷ்ணகிரி - தருமபுரி - சேலம் - சின்ன சேலம் - நெய்வேலி - சிதம்பரம்

சரி, அப்படி என்னதான் இந்த சிதம்பரத்துக்கு சிறப்பு ?

நாளை சிந்திப்போமா ?

அதற்கு முன்னால் ஒரு முடிவு எடுங்கள்.

தேவையானதை மட்டுமே படிப்பது. படிப்பதில் உள்ளது போல நடப்பது. நடக்க மனம் இல்லை என்றால் அனாவசியமாக படித்து நேரத்தை வீணாக்குவது இல்லை என்று.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/108_19.html

Thursday, April 18, 2019

கம்ப இராமாயணம் - அறந்தலை நிற்ப தானேன்

கம்ப இராமாயணம் - அறந்தலை நிற்ப தானேன்


காதலர்கள் எப்போதும் ஒருவர் விரும்புவதையே மற்றவர் செய்வர். அவனுக்கு எது பிடிக்கும் என்று அறிந்து அவள் செய்வாள்.அவளுக்கு எது பிடிக்கும் என்று அறிந்து அவன் செய்வான்.

அவனுக்கு எந்த நிறம் பிடிக்கும் என்று அறிந்து அந்த நிறத்தால் உடை அணிவாள். அவளுக்கு எந்த உணவு பிடிக்கும் என்று அறிந்து அங்கே அவளை கூட்டிச் செல்வான். இப்படி ஒருவருக்கு பிடித்ததை மட்டுமே மற்றவர் செய்வர். அதனால் காதல் செய்யும் காலம் மிகவும் இனிமையாக இருக்கும்.

நடை முறை வாழ்க்கை என்பது அப்படி அல்ல. ஒரு நாளில் ஒரு சில மணி நேரம் வேண்டுமானால் அப்படி ஒருவருக்கு பிடித்த மாதிரி இன்னொருவர் இருக்கலாம். அதுவே நாள் பூராவும் செய்ய வேண்டும் என்றால் முடியாது. சிக்கல் வரும். மனக் கசப்பு வரும். சண்டை வரும். நான் காதலித்த பெண்ணா இவள் என்று அவன் மனம் சலிப்பான். அவள் நிலையம் அதுவே.

காதலித்து ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டு பின் திருமணம் செய்து கொள்வது நல்லது என்பது வாதத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். ஒருவரை மற்றவர் அறிந்து கொள்ள முடியுமா ?

சூர்பனகையிடம் இராமன் கேட்டான் "இராவணனின் தங்கை என்கிறாய்,பார்த்தால் அப்படி இல்லையே " என்று.

சூர்ப்பனகை இராமனை பார்க்கிறாள். பார்த்தால் தர்மவான் போல் தெரிகிறது. நல்ல குடும்பத்தில் பிறந்தவன் போலத் தெரிகிறது. அவனுக்கு என்ன சொன்னால் பிடிக்கும்   என்று யோசிக்கிறாள். சரி, அறம் , தர்மம், தவம் எல்லாம் அவனுக்கு பிடிக்கும் போலத் தெரிகிறது. எனவே, அவனுக்கு பிடித்த மாதிரியே பேசி விடுவோம் என்று "அந்த அரக்கர்கள் வாழ்வை நான் மதிக்கவில்லை. அற வழியில் நிற்க முடிவு செய்து, தவம் செய்து இந்த வடிவைப் பெற்றேன் " என்றாள்.

பாடல்

தூயவன் பணியா முன்னம் சொல்லுவாள் சோர்விலாள் அம் 
மாயவல் அரக்க ரோடு வாழ்வின மதிக்க லாதேன் 
ஆய்வுறு மனத்தேன் ஆகி  அறந்தலை நிற்ப தானேன் தீவினை 
தேய நோற்றுத் தேவரின் பெற்றது என்றாள் 


பொருள்

தூயவன் = தூய்மையான இராமன்

பணியா முன்னம்  = நீ எப்படி இப்படி இருக்கிறாய் சொல் என்று பணித்த பின்

சொல்லுவாள் = சொல்லுவாள்

சோர்விலாள் = சோர்வு இல்லாதவள்

அம் = அந்த

மாய = மாயைகளில்

வல் = வல்லவர்களான

அரக்க ரோடு = அரக்கர்களோடு

வாழ்வின = சேர்ந்து வாழும் வாழ்வை

மதிக்க லாதேன்  = மதிக்க மாட்டேன், விரும்பவில்லை

ஆய்வுறு மனத்தேன் ஆகி = ஆராயும் மனதை உடையவள் நான்

அறந்தலை நிற்ப தானேன் = அறத்தினை தலையாய கடமையாக கொண்டு அந்த நெறியில் நிற்பதானேன்

தீவினை தேய = நான் செய்த தீவினைகள் தேய

நோற்றுத் = தவம் செய்து

தேவரின் = தேவர்களிடம் இருந்து

பெற்றது என்றாள்  = பெற்றது இந்த தெய்வ வடிவு என்றாள்

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_18.html


Wednesday, April 17, 2019

108 திவ்ய தேசம் - திருமோகூர்

108 திவ்ய தேசம் - திருமோகூர் 


ஒரு முறை தேவர்கள் அனைவரும் திருமாலிடம் சென்று அமுதம் வேண்டும் என்று கேட்டார்கள். அதுக்கென்ன, கொடுத்துட்டா போகுது னு, திருப்பாற்கடலை கடைய ஆணையிட்டார். தேவர்கள் ஒருபுறம் கடைந்தார்கள். மறுபுறம் அசுரர்கள். முதலில் ஆலகால விஷம் வந்தது. சிவன் அதை எடுத்து உண்டார். ஏதேதோ வந்தது. கடைசியில் அமுதம் வந்தது.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை வந்தது.

திருமால் மோகினி வடிவம் கொண்டு, அசுரர்களை மயக்கி, அமுதம் அனைத்தையும் தேவர்களுக்கே கொடுத்து விட்டார்.

அப்படி கொடுத்த இடம் தான் திருமோகூர்.

மோகினி வடிவில் வந்ததால் திரு மோகினி ஊர், திரு மோகியூர், திருமோகூர் என்று ஆகிவிட்டது.

அந்த இடம், எங்கே இருக்கிறது தெரியுமா ?

மதுரைக்கு ரொம்ப பக்கத்தில..மேலூர் போற வழியில, ஒத்தக்கடைக்கு பக்கத்தில இருக்கு.

மதுரையில் இருந்து சைக்கிளை ஒரு மிதி மிதித்தால் போய் விடலாம்.

டவுன் பஸ் வசதியும் இருக்கும். திருவாதவூர் போகும் பஸ் அந்த வழியாத்தான் போகும்.

நம்மாழ்வார் பாடிய திவ்ய தேசம்.



பாடல்

நாம டைந்தநல் லரண்தமக் கென்றுநல் லமரர்
தீமை செய்யும்வல் லசுரரை யஞ்சிச்சென் றடைந்தால்
காம ரூபம்கொண் டெழுந்தளிப் பான்திரு மோகூர்
நாம மேநவின் றெண்ணுமின் ஏத்துமின் நமர்காள்.


பொருள்

நாம டைந்த  = நாம் அடைந்த, நாம் பெற்ற

நல் லரண் = நல்ல அரண், நல்ல பாதுகாப்பு

தமக் கென்று = நம்முடையதென்று

நல் லமரர் = நல்ல தேவர்கள்

தீமை செய்யும் = தீமைகள் செய்யும்


வல் லசுரரை = வன்மையான அசுரர்களை

யஞ்சிச் = அஞ்சி

சென் றடைந்தால் = சென்று அடைந்தால்

காம ரூபம் = மோகினி உருவம்

கொண் டெழு = கொண்டு எழுந்து

அளிப் பான் = அருள் செய்வான்

திரு மோகூர் = திருமோகூர்

நாம மே = அவன் நாமமே

நவின்று = சொல்லி

றெண்ணுமின் = மனதில் எண்ணுங்கள்

ஏத்துமின் = போற்றுங்கள்

நமர்காள்  = நம்மவர்களே

அவன் நாமத்தை , பெயரை மட்டும் பிடித்துக் கொள்ளுங்கள் போதும் என்கிறார்.

நவிலுதல் என்றால் கற்றல் என்று பொருள்.

நவில் தொறும் நூல் நயம் போலும் என்பார் வள்ளுவர்.

நவிறொறும் நூனயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு


உயர்ந்த புத்தகங்களை படிக்க படிக்க எப்படி இன்பம் உண்டாகிறதோ அது போல நல்ல பண்புடையவர்களின் தொடர்பும் இன்பம் தரும் என்கிறார்.

இறைவன் நாமத்தை நவில வேண்டும்.

சும்மா இராமா இராமா என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. அதில் என்ன இருக்கிறது என்று அறிய வேண்டும்.

"எண்ணுமின்" மனதுக்குள் எண்ண வேண்டும்.

"ஏத்துமின்" கையால் வணங்க வேண்டும் .


மனம் வாக்கு காயம் என்று சொல்லும் திரிகாரணத்தாலும் வணங்க வேண்டும்.

அடுத்த தடவை மதுரை பக்கம் போனால், மறக்காமல் திருமோகூர் போய்விட்டு வாருங்கள். அங்கே ப்ரம்ம தீர்த்தம் இருக்கிறது. இன்னும் பல சிறப்புகள் இருக்கின்றன.


https://interestingtamilpoems.blogspot.com/2019/04/108.html


கம்ப இராமாயணம் - ஐயுறு மனத்தான்

கம்ப இராமாயணம் - ஐயுறு மனத்தான்


சூர்ப்பனகையார் என்று இராமன் கேட்க, அவள் நான் ப்ரம்மாவின் பேத்தி, குபேரனின் தங்கை, இராவணனின் தங்கை என்று கூறுகிறாள்.

இராவணனின் தங்கை என்றால், இவள் ஒரு அரக்கியாகத்தானே இருக்க வேண்டும். எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று இராமனுக்கு சந்தேகம். அவளிடமே கேட்டு விடுகிறான்.

பாடல்

அவ் உரை கேட்ட வீரன், 
     ஐயுறு மனத்தான், 'செய்கை 
செவ்விது அன்று; அறிதல் ஆகும் சிறிதின்' 
     என்று உணர, ' "செங்கண் 
வெவ் உரு அமைந்தோன் தங்கை" என்றது 
     மெய்ம்மை ஆயின் 
இவ் உரு இயைந்த தன்மை இயம்புதி 
     இயல்பின்' என்றான்.

பொருள்

அவ் உரை கேட்ட வீரன்,  = சூர்ப்பனகை சொன்னதைக் கேட்ட இராமன்

ஐயுறு மனத்தான் = மனதில் சந்தேகம் வர

செய்கை செவ்விது அன்று = இவள் செய்கை சிறப்பாக இல்லை

அறிதல் ஆகும் சிறிதின் = கொஞ்சம் விசாரித்து அறிவோம்

என்று உணர = என்று உணர்ந்து கொள்ள

"செங்கண் = சிவந்த கண்கள். கோபத்தால் சிவந்த கண்கள்

வெவ் உரு = வெம்மையான உருவம்

அமைந்தோன் = அமைந்தோன், இராவணன்

தங்கை" என்றது = தங்கை நீ என்றால்

மெய்ம்மை ஆயின்  = அது உண்மை என்றால்

இவ் உரு = இந்த தெய்வ வடிவம்

இயைந்த = ஏற்பட்ட

தன்மை இயம்புதி  = தன்மை எப்படி என்று சொல்

இயல்பின்' என்றான். = எந்த வழியில் வந்தது என்றான்

இதெல்லாம் இராமனுக்குத் தேவையா என்பது என் கேள்வி. அவள் யாராக இருந்தால் என்ன. அவள் யாருடைய தங்கையாவும் இருந்து விட்டுப் போகட்டுமே.

இதை எல்லாம் தெரிந்து என்ன ஆகப் போகிறது இராமனுக்கு?

இந்த வெட்டிப் பேச்சு எவ்வளவு பெரிய சிக்கலில் கொண்டு மாட்டி விட்டது இராமனையும், இலக்குவனையும், சீதையையும்.

இராமன் இதோடு விடவில்லை. மேலும் அரட்டை அடிக்கிறான் அவளுடன்.

இராமனுக்கும் சூர்பனகைக்கும் நடந்த உரையாடல் கம்ப காதையில் மிகவும் சுவையான பகுதி.

மேலும் சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_17.html