Friday, April 19, 2019

108 திவ்ய தேசம் - சிதம்பரம்

108 திவ்ய தேசம் - சிதம்பரம் 


நம்மில் பெரும்பாலானோருக்கு ஒரு நல்ல குணம் உண்டு. நல்லவற்றை படிக்க வேண்டும். பெரியவர்கள் சொன்னதை கேட்க வேண்டும். உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், முனைப்பு உண்டு. படித்து, கேட்டு, அறிந்த பின் அதன் படி நடக்க மாட்டேன், என் மனம் போனபடி தான் செய்வேன் என்ற நல்ல குணமும் உண்டு.

எவ்வளவு நல்ல நூல்கள், எவ்வளவு அறிவுரைகள், எத்தனை முறை படித்தும் கேட்டும் இருப்போம். அதில் ஒன்றையாவது கடைபிடித்தால் எவ்வளவோ முன்னேறி இருக்கலாம்.

மாட்டோமே.

ஏதோ பொழுது போக்கு நாவல் படிப்பது மாதிரி படிக்க வேண்டியது. "நல்லாத்தான் சொல்லி இருக்காரு..." என்று சொல்லிவிட்டு, அதை தூக்கி அப்படியே குப்பையில் போட்டுவிட்டு மனம் போன போக்கில் செல்லும் உயரிய குணம் நமக்கு உண்டு.

"அவர் தான் எங்கள் குரு. ஆசாரியன். முழு முதல் கடவுள். கடவுளுக்கும் மேலே ஒரு படி...அவர் எழுதியதைப் படித்தால் அப்படியே கண்ணில் நீர் வரும்...மனம் இளகி விடும்" என்று கொண்டாடுவார்கள்.

சரி, அவர் சொல்கிறபடி செய்கிறீர்களா என்று கேட்டால் "...அது வந்து...அந்த மாதிரி காரியம் எல்லாம் நம்மால் செய்ய முடியாது. நமக்கு குடும்பம், குட்டிகள் என்று நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறேதே " என்று ஏதாவது சால்ஜாப்பு சொல்லிவிட்டு  நகர்ந்து விடுவோம்.

எதுக்கு அனாவசியமா படித்து நேரத்தை வீணாக்குவானேன்? அந்த நேரத்தில் நாலு டிவி சீரியல் பார்க்கலாம், கொஞ்சம் whatsapp இல் அரட்டை அடிக்கலாம். ஜோக், மீம்ஸ் forward பண்ணலாம். எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கு.

போகாத ஊருக்கு வழி கேட்பதைப் போல, செய்ய விரும்பாத காரியத்தை படிப்பானேன்?

சரி. .அது புறம் இருக்கட்டும்.

திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்

"இந்த வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக் கிழமை போன்ற விரதங்கள் எல்லாம் வேண்டாம். குளித்து, முழுகி, அக்கினி ஹோத்ரம் செய்வது போன்ற பூஜைகள் வேண்டாம்"

என்று சொல்கிறார்.

கேட்போமா நாம். அடடா என்ன அழகான பாசுரம். என்னமா அனுபவித்து எழுதி இருக்கிறார் என்று சொல்லிவிட்டு, வழக்கப்படி நம் வேலைகளை தொடருவோம்.

பாடல்

 காயோடு நீடு கனியுண்டு வீசு
          கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம், ஐந்து
     தீயோடு நின்று தவஞ் செய்ய வேண்டா
          திருமார்பனைச் சிந்தையுள் வைத்து மென்பீர்
     வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர்
          மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
     தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத்
          திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே - (1159)
                              பெரிய திருமொழி 3-2-2

பொருள்

 காயோடு = பச்சை காய் கறிகளையும்

நீடு கனியுண்டு = நீண்ட நாள் உலர்ந்த பழங்களையும்

வீசு = வீசுகின்ற

கடுங்கால் = கடுமையான காற்று. வெப்பக் காற்று (தீக்கு நடுவில் நின்று தவம் செய்வது). கால் என்றால் காற்று. காற்று வரும் வழி என்பதால் ஜன்னலுக்கு காலதர் என்று பெயர்.

நுகர்ந்து = சுவாசித்து

நெடுங்காலம் = நெடுங்காலம்

ஐந்து தீயோடு = பஞ்சாக்கினி என்று சொல்லுவார்கள். அதனுடன்

நின்று தவஞ் செய்ய வேண்டா = நின்று தவம் செய்ய வேண்டாம்

 திருமார்பனைச் = திரு என்று சொல்லப்படும் இலக்குமியை தன் மார்பில் கொண்ட

சிந்தையுள் வைத்து = மனதில் வைத்து

மென்பீர் = அன்பீர்

வாயோது வேதம் = வாயாலே சொல்லுகின்ற வேதம்

மல்கின்ற = மலிந்து இருக்கின்ற. நிறைந்து இருக்கின்ற

தொல்சீர் = பழமையான, சீர்மையான

மறையாளர் = வேத விற்பன்னர்கள்

நாளும் = ஒவ்வொரு நாளும்

முறையால் = முறையாக

வளர்த்த = வளர்த்த

தீயோங்க வோங்கப் = தீயவர்கள் ஓங்கியதால், தான் ஓங்கிய

புகழோங்கு  = புகழ் ஓங்கிய

தில்லைத் = சிதம்பரம்

திருச்சித்ர கூடம் = சித்ர கூடம்

சென்றுசேர் மின்களே = சென்று அடையுங்கள்

இந்த பூஜை புனஸ்காரம் எல்லாம் விட்டு விடுங்கள். பேசாமல் சிதம்பரம் வந்து சேருங்கள் என்கிறார்.

பூஜையை விடுவதாவது, சிதம்பரம் போவதாவது, வேற வேலை இல்லை?  என்று சொல்லக் கூடியவர்கள் நாம்.

இந்த சிதம்பரம் எங்கே இருக்கிறது?

சீர்காழியில் இருந்து 30 நிமிடம்.

மயிலாடுதுறை என்ற மாயவரத்தில் இருந்து 1 மணி நேரம்.

நெய்வேலியில் இருந்து ஒரு மணி நேரம்.

சென்னையில் இருந்து செல்வதாக இருந்தால் 5 மணி நேரம்.

சென்னை - மாமல்லபுரம் - பாண்டிச்சேரி - கடலூர் - சிதம்பரம் என்று கடற்கரை ஒட்டியே சென்று விடலாம்.

பெங்களூரில் இருந்து செல்வதாக இருந்தால் ஏழு மணி நேரம் ஆகும்.

பெங்களூர் - ஓசூர் - கிருஷ்ணகிரி - தருமபுரி - சேலம் - சின்ன சேலம் - நெய்வேலி - சிதம்பரம்

சரி, அப்படி என்னதான் இந்த சிதம்பரத்துக்கு சிறப்பு ?

நாளை சிந்திப்போமா ?

அதற்கு முன்னால் ஒரு முடிவு எடுங்கள்.

தேவையானதை மட்டுமே படிப்பது. படிப்பதில் உள்ளது போல நடப்பது. நடக்க மனம் இல்லை என்றால் அனாவசியமாக படித்து நேரத்தை வீணாக்குவது இல்லை என்று.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/108_19.html

2 comments:

  1. இப்பொழுது பெரியவர்கள் கூறும்படி திருந்த மனமில்லை..படித்து கொண்டே இருந்தால்.ஒரு வேளை என்றாவது மனம் மாற வாய்ப்பு உண்டு அல்லவா? படிக்கவே வேண்டாமென்றால் எப்படி?

    ReplyDelete
  2. 1. ஆழ்வார் எதற்கு சிதம்பரத்தூக்கு அழைக்கிறார்? சிதம்பரம் சிவ தலம் அல்லவோ?

    2. ஆழ்வார் சொன்னார் என்று நம்பி எப்படிப் போவது? "எப்பொருள் யார் யார் வாய்க்க கேட்பினும்..." அல்லவா?

    ReplyDelete