Friday, April 12, 2019

கம்ப இராமாயணம் - சூர்ப்பனகைக்கு நல்வரவு - பாகம் 1

கம்ப இராமாயணம் - சூர்ப்பனகைக்கு நல்வரவு - பாகம் 1


தெய்வப் பெண் போல வடிவு கொண்டு இராமன் முன் நாணி கோணி நிற்கிறாள் சூர்ப்பனகை.

"உன் வரவு தீமை இல்லாதாக இருக்கட்டும். தூரத்தில் இருப்பவளே, நீ இங்கு வந்தது பெரிய புண்ணியம் . உன் ஊர் என்ன. உன் பெயர் என்ன " என்று வேத முதல்வனான இராமன் கேட்டான்

பாடல்

'தீது இல் வரவு ஆக, திரு! நின் 
     வரவு; சேயோய்! 
போத உளது, எம்முழை ஓர் 
     புண்ணியம்அது அன்றோ? 
ஏது பதி? ஏது பெயர்? யாவர் 
     உறவு?' என்றான். 
வேத முதல்; பேதை அவள் தன் 
     நிலை விரிப்பாள்;

பொருள்

'தீது இல் = தீமை இல்லாத

வரவு ஆக, = வரவு ஆகட்டும்

திரு! = திருமகள் போன்றவளே

நின் வரவு; = உன் வரவு

சேயோய்! = தூரம் இருப்பவளே, அல்லது அந்நியமானவளே

போத உளது, = நீ இங்கு வந்தது

எம்முழை = எம் இருப்பிடத்துக்கு

ஓர்  = ஒரு

புண்ணியம்அது அன்றோ?  = அது அல்லவா புண்ணியம்

ஏது பதி? = உன் சொந்த ஊர் எது

ஏது பெயர்? = உன் பெயர் என்ன

யாவர் உறவு?' என்றான்.  = உன் உறவினர்கள் யார் யார் ? என்று கேட்டான்

வேத முதல்; = வேத முதல்வனான (இராமன்)

பேதை அவள் தன்      நிலை விரிப்பாள்; = பேதை அவள் தன் நிலை கூறத் தொண்டங்கினாள்

சூர்பனகையிடம் தேவை இல்லாததை பேச ஆரம்பிக்கிறான் இராமன்.

பாக்க இலட்சுமி மாதிரி இருக்கிறாயே

நீ வந்தது பெரிய புண்ணிய பலன் என்கிறான்.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். ஒரு ஆடவன், முன் பின் தெரியாத ஒட்டு பெண்ணைப் பார்த்து, இப்படி பேசுவது சரியானதா ?

சூர்ப்பனகை வந்தது தேவர்கள் செய்த புண்ணியத்தின் பலன் என்று வேண்டுமானால் வியாக்கியானம் செய்யலாம். "உன்னைப் பார்த்தால் இலட்சுமி போல  இருக்கிறது" என்று சொன்னது ?

அது பற்றி மேலும் சிந்திக்க இருக்க இருக்கிறோம்.

உங்களுக்கு சகுனத்தில் நம்பிக்கை உண்டா? நம் தமிழ் இலக்கியம் சகுனத்தை நம்பியது. பின்னால் வரப்போகும் நன்மை தீமைகளை சில நிகழ்ச்சிகள் நமக்கு அறிவிக்கின்றன என்று நம் இலக்கியம் பேசுகிறது.

அதற்கான சான்றுகள் பல இருக்கின்றன.

இந்தப் பாடலில் அப்படி என்ன சகுனம் இருக்கிறது?

நாளை சிந்திப்போமா ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/04/1.html

2 comments:

  1. ஒரு suspenseல் வைத்திருக்கிறீர்கள்.நாளை பார்க்கலாம்

    ReplyDelete
  2. "தீது இல் வரவு ஆக" என்று தொடங்கியதே, ஒரு பாதுகாப்புக்கு கவசம் போல இருக்கிறதே!

    உன் பெயர் என்ன, ஊர் எது, உறவினர் யார் என்று கேட்பது எனக்கு ஒன்றும் தவறாகத் தெரியவில்லை.

    ReplyDelete