Wednesday, April 10, 2019

கம்ப இராமாயணம் - சூர்ப்பனகை வருகையை இராமன் நோக்குதல்

கம்ப இராமாயணம் - சூர்ப்பனகை வருகையை இராமன் நோக்குதல் 



இராமன் மேல் கொண்ட காதலால், சூர்ப்பனகை அவன் அழகை வியந்ததை இது வரி கண்டோம்.

இப்போது, அழகான தேவ மங்கை உருக் கொண்டு சூர்ப்பனகை வருகிறாள்.

இங்கே ஒரு கணம் நிறுத்தி, கொஞ்சம் யோசிப்போம்.

இராமன் என்ன செய்தான், என்ன செய்திருக்க வேண்டும் என்பதை எல்லாம் மறந்து விடுவோம்.

ஒரு பெண், ஒரு ஆணின் மேல் காதல் கொள்கிறாள். அவனிடம் நேரே வந்து, "நான் உன்னை விரும்புகிறேன்..என்னை ஏற்றுக் கொள் " என்கிறாள்.

அந்த ஆடவன் என்ன செய்ய வேண்டும் ?

ஒன்று, அவள் காதலை ஏற்றுக் கொண்டிருக்கலாம். அல்லது, அந்தக் காதலை மறுத்து இருக்கலாம்.

அவ்வளவுதானே? வேறு என்ன செய்ய முடியும்?

இல்லை என்றால், அவளை ஆசை காட்டி மோசம் செய்யலாம். அவள் காதலை கேலி செய்து, அவள் மனதை புண்ணாக்கலாம்.

அவளோடு பேச்சுக் கொடுத்து, அவள் மனதில் மேலும் ஆசையை வளர்த்து விட்டு, பின், "உனக்கு நான் சரியாக மாட்டேன், வேண்டுமானால் இன்னொரு ஆடவனை  தேடிக் கொள்" என்று அவள் பெண்மையை பரிகசிக்கலாம்.

இராமன் என்ன செய்திருப்பான் என்று நினைக்கிறீர்கள்?

"இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம் " தந்தவனாயிற்றே...சூர்பனகையை ஏறெடுத்தும் பார்த்து இருக்க மாட்டான் அல்லவா?

அவள் அழகை இரசித்து இருக்க மாட்டான் அல்லவா? குறிப்பாக, பெண்ணின் அங்க  அழகை உன்னிப்பாக கவனித்து இருக்கமாட்டான் அல்லவா? உன் குலம் என்ன, உன் கோத்திரம் என்ன என்று கேட்டு இருக்க மாட்டான் அல்லவா?

அப்படித்தான் இருக்க வேண்டும்.

ஒக்க மாட, ஒக்க பாண , ஒக்க பத்தினி விரதன் வேறு எப்படி இருந்திருக்க முடியும்?

சூர்ப்பனகை வருகிறாள்


பாடல்


“நூபுரமும், மேகலையும்,
    நூலும் அறல் ஓதிப்
பூ முரலும் வண்டும் இவை,
    பூசலிடும் ஓசை
தாம், உரை செய்கின்றது; ‘ஒரு
    தையல் வரும் “ என்னாக்
கோமகனும், அத்திசை
    குறித்து எதிர் விழித்தான்.



பொருள்

“நூபுரமும் = கொலுசும்

மேகலையும் = சிறிய மணிகள் கோர்த்த இடுப்புச் சங்கிலி

நூலும் = நூல் போன்ற மெல்லிய சங்கிலியும்

அறல் = நுண்ணிய கரு மணல். ஆறு ஓடிய பாதையில், நீர் வற்றிய பின் பார்த்தால் சிறு சிறு கரிய மணல்கள் தெரியும். அதற்கு அறல் என்று பெயர்.

ஓதிப் = பெண்களின் கூந்தலுக்கு ஓதி என்று பெயர். ஆண்களின் கூந்தலுக்கு குடுமி அல்லது குஞ்சி என்று பெயர். அப்படி கரிய கூந்தல் இருந்ததாம். ஆற்றோட்டத்தில் ஏற்பட்ட கரிய துகள்கள் படிந்த பாதை போல அவள் கூந்தல் அலை பாய்ந்து கிடந்தது. அதில்



பூ முரலும் வண்டும் = பூவில் ஒலி எழுப்பும் வண்டும்

இவை, = இவை யாவும் (கொலுசு, மேகலை, அலை பாயும் கூந்தலில் உள்ள வண்டுகள்)

பூசலிடும் ஓசை = சப்தமிடும் ஓசை

தாம் = அந்த ஓசை

உரை செய்கின்றது = சொல்கின்றது

‘ஒரு தையல் வரும் “ = ஒரு பெண் வருகிறாள்

 என்னாக் = என்று

கோமகனும் = இராமனும்

அத்திசை = அந்தத் திசை

குறித்து = நோக்கி

எதிர் விழித்தான். = விழித்துப் பார்த்தான்


சூர்ப்பனகை நடக்கிறாள். அவள் நடையில் ஒரு தளுக்கு இருக்கிறது. அதனால், அவள் சூட்டியுள்ள பூக்களில் உள்ள தேனும், மகரந்தமும் கலந்து போய் ஒரு கலவையாகிப் போய் விட்டது. வண்டுகளால் தேனை உண்ண முடியவில்லை. அவை கோபித்து சப்தம் எழுப்புகிறதாம். 

ஆண்களின் கூந்தலுக்கு குஞ்சி என்று பெயர் என்று சொன்னேன்.

இராமன் மிதிலை நகருக்குள் வருகிறான். சீதை மேல் மாடத்தில் இருந்து பார்க்கிறாள். 

அவளுக்கு அவன் தலைதான் தெரிகிறது. இராமன் காட்டில் இருந்து வருகிறான். அவன் தலை முடி கலைந்து கிடக்கும். அதை காண்கிறாள் சீதை

இந்திர நீலம் போன்ற இருண்ட முடியும், சந்திர வதனமும், நீண்ட கைகளும், மலை போன்ற உயர்ந்த தோள்களும், அவன் புன்முறுவலும் என்னை உண்டு விட்டது என்கிறாள் சீதை. 
இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே.


கைகேயி "உனக்கு மகுடம் கிடையாது, காட்டுக்குப் போ " என்று சொல்லிவிட்டாள். இது கோசாலைக்குத் தெரியாது. கோசலை இருக்கும் மாளிகை நோக்கி இராமன் வருகிறான் அந்த சேதியை சொல்ல. மாடத்தில் இருந்து கோசலை பார்க்கிறாள். தூரத்தில் இராமன் வருவது தெரிகிறது. 

அவன் முடியில் மஞ்சள் நீராட்டுக்கான அடையாளம் ஒன்றும் இல்லை 

‘புனைந்திலன் மௌலி! குஞ்சி மஞ்சனப்
    புனித நீரால்
நனைந்திலன்! என்கொல்? ‘என்னும் ஐயத்தாள்,
    நளின பாதம்,
வனைந்த பொன் கழல் கால் வீரன் வணங்கலும்,
    குழைந்து வாழ்த்தி,
‘நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி
    புனைதற்கு? ‘என்றாள்.


‘புனைந்திலன் மௌலி'

தலையில் மகுடம் இல்லை.

இன்னும் கொஞ்சம் கிட்ட வருகிறான் இராமன்.

"குஞ்சி மஞ்சனப்  புனித நீரால் நனைந்திலன்!"

தலை முடியில் மஞ்சன நீராட்டுக்கான அறிகுறி இல்லை

மேகலை என்று ஒரு ஆபரணம். பெண்கள் இடுப்பில் கட்டுவது. அதில் சிறு சிறு மணிகள் இருக்கும்.

இடுப்பில் இருந்து அது ஆடைக்கு உள்ளே செல்வது.

துரியோதனின் மனைவி பானுமதி. ஒரு நாள் அவளும் கர்ணனும் தாயம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது துரியோதனன் அங்கு வந்தான். வந்தவன் கர்ணனுக்கு பின் இருந்தான். கணவன் வரவை கண்ட பானுமதி எழுந்தாள். அவள் ஆட்டத்தில் தோற்பதை தவிர்க்கவே எழுந்திருக்கிறாள் என்று எண்ணி கர்ணன் அவள் இடுப்பை பிடித்து , "எங்கே போகிறாய் உட்கார் " என்று இழுத்தான். அப்போது அவள் இடுப்பில் கட்டியிருந்த மேகலையில் இருந்து சிறு மணிகள் அறுந்து சிதறி ஓடியது. துரியோதனன் கேட்டான் "இந்த முத்துக்களை எடுக்கவோ, கோர்க்கவோ" என்று.



மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ?
கோக்கவே?'" என்றான்;
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச்
சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,

"மேகலை மணி உகவே" .

இராமனுக்கு, சூர்ப்பனகையின் இடுப்பில் உள்ள மேகலையின் மணிச் சத்தம் கேட்கிறது.

யாரோ ஒரு பெண் வருகிறாள் என்று எண்ணி அந்த சத்தம் வரும் திசை நோக்குகிறான்.

அடுத்த என்ன நிகழ்ந்தது?

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_10.html


No comments:

Post a Comment