Monday, April 15, 2019

கம்ப இராமாயணம் - சூர்ப்பனகைக்கு நல்வரவு - பாகம் 2

கம்ப இராமாயணம் - சூர்ப்பனகைக்கு நல்வரவு - பாகம் 2


'தீது இல் வரவு ஆக, திரு! நின் 
     வரவு; சேயோய்! 
போத உளது, எம்முழை ஓர் 
     புண்ணியம்அது அன்றோ? 
ஏது பதி? ஏது பெயர்? யாவர் 
     உறவு?' என்றான். 
வேத முதல்; பேதை அவள் தன் 
     நிலை விரிப்பாள்;

வெறும் சொல்லுக்கு வலிமை உண்டா ? மந்திரங்கள் என்று சொல்கிறார்களே அதற்கெல்லாம் ஒரு வலிமை உண்டா ?

உண்டு என்று நம்பியது நம் தமிழ் இலக்கியம்.

மந்திரம் என்றால் என்ன?

மன் + ஸ்திரம் = மனதில் நினைப்பதை உறுதியாகச் செய்வது.

சொல்லுக்கு வலிமை உண்டு. அர்த்தம் உண்டு. சொல், செயலாகும் என்று நம்பினார்கள்.

சாபம் கொடுப்பது என்று கேட்டு இருக்கிறோம் அல்லவா. தவ சீலர்களின் சொல், உடனே நடக்கும். அவர்கள் சொல் , செயலாகும், பொருளாகும்.

சூர்ப்பனகை வருகிறாள். இராமன் என்ன சொல்லி இருக்க வேண்டும் "தங்கள் வரவு நல்வரவாகுக" என்று தானே சொல்லி இருக்க வேண்டும்?

மாறாக, "தீது இல் வரவு ஆக" நின் வரவு என்கிறான். 

தீது நடக்கப் போகிறது. இராமன் வாயில் அந்த "தீது" என்ற சொல் வந்து விழுகிறது.

கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம். எல்லாம் நல்லபடி நடக்கிறது. அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும்.


காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்,
தீது அறுக!’ என ஏத்தி, சில் மலர் கொடு தூவி,
அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்-’


பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று வாழ்த்தி விட்டுப் போக வேண்டியதுதானே. 

"காதலர்கள் பிரியாமல், பற்றிய கை விட்டு விடாமல், தீமை எதுவும் இல்லாமல் " என்று மலர் தூவி வாழ்த்தினார்கள் என்கிறார் இளங்கோ அடிகள்.

அவர்கள் பின்னால் பிரிந்தார்கள், பற்றிய கை நெகிழ்ந்தது, தீமை வந்து சேர்ந்தது.

வார்த்தைகளுக்கு வலிமை இருக்கிறது. 

எனவே தான், திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளில் கொட்டு மேளம், கொட்டு மேளம் என்று பெரிய சத்தமாக வாசிப்பார்கள். ஏன் என்றால், யாராவது, ஏதாவது அமங்கலச் சொல்லை சொல்லி விடலாம். பெரிதாக வாத்ய சத்தம் எழுந்தால் , அதையும் மீறி கத்தி பேச முடியாது அல்லவா. எனவே, எந்தவிதமான அமங்கலச் சொல்லும் நிகழாது என்பதற்காகத்தான் அப்படி ஒரு  பெரிய சத்தத்தை எழுப்புகிறார்கள். 

எனவே,  நமக்கு பாடம் என்ன என்றால்  எப்போதும் நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும். அமங்கல சொற்களை பேசக் கூடாது. எண்ணம் சொல்லாகும், சொல் செயலாகும். பிள்ளைகள் படிக்கவில்லை என்றால் "நீ மண்டு, நீ  மாடு மேய்க்கத்தான் இலாயக்கு" என்று சொல்லக் கூடாது. அதற்காக "நீ தான் உலகிலேயே பெரிய புத்திசாலி " என்று சொல்லியும் கெடுக்கக் கூடாது. 

தீய வார்த்தைகள் எப்படி நம் வாயில் வரும் ? தீயவற்றை பார்ப்பதால், படிப்பதால், கேட்பதால் நமக்கும் அந்த தீய வார்த்தைகள் வந்து ஒட்டிக் கொள்ளும். 

எனவேதான் சொல்லி வைத்தார்கள் , "தீயாரை காண்பதுவும் தீது" என்று. 



தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

தீயார் சொல் கேட்பதுவும் தீது. 

டிவி சீரியல், whatsapp போன்றவற்றில் வெட்டி அரட்டை, அறிவற்ற மூடர்களோடு வெட்டிப் பேச்சு என்று இருந்தால் அது தான் நம்மிடம் ஒட்டிக் கொள்ளும். 

நாம் தீயவர்களை காண்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்த தீயவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் நம்மைத் தேடி வருவார்கள்.  அவர்கள் கண்ணில் படாமல் ஓடி விட வேண்டும் என்கிறது நம் இலக்கியம்.

கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி 
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி

என்பது நீதி வெண்பா. 

"தீங்கினர் தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி"

அவன் அந்தப் பக்கம் இருந்தால், நான் பாட்டுக்கு இந்தப் பக்கம் போகிறேன் என்று சொல்லக் கூடாதாம். அவன் கண்ணில் படாத படி சென்று விடவேண்டும் என்கிறது நீதி வெண்பா. 

நம் வீடு தேடி, டிவியில் வருகிறதா இல்லையா சீரியல் என்ற பெயரில் குப்பைகள். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , நாள் ஒன்றுக்கு நூற்றுக் கணக்கான மெசேஜ் கள் வருகிறதா இல்லையா. அவற்றை விட்டு விலக வேண்டும். 

இல்லை என்றால், தீமை வந்தே தீரும். 

பின்னால் வரப் போகும் தீமைகளுக்கும் இவை முன்னால் வரும் சகுனங்கள்.

புரிந்து நடப்பதும், வாதம் செய்வதும் அவரவர் விருப்பம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/2.html


------------------- பாகம் 1 கீழே உள்ளது ------------------------------------------------------------------


தெய்வப் பெண் போல வடிவு கொண்டு இராமன் முன் நாணி கோணி நிற்கிறாள் சூர்ப்பனகை.

"உன் வரவு தீமை இல்லாதாக இருக்கட்டும். தூரத்தில் இருப்பவளே, நீ இங்கு வந்தது பெரிய புண்ணியம் . உன் ஊர் என்ன. உன் பெயர் என்ன " என்று வேத முதல்வனான இராமன் கேட்டான்

பாடல்

'தீது இல் வரவு ஆக, திரு! நின் 
     வரவு; சேயோய்! 
போத உளது, எம்முழை ஓர் 
     புண்ணியம்அது அன்றோ? 
ஏது பதி? ஏது பெயர்? யாவர் 
     உறவு?' என்றான். 
வேத முதல்; பேதை அவள் தன் 
     நிலை விரிப்பாள்;

பொருள்

'தீது இல் = தீமை இல்லாத

வரவு ஆக, = வரவு ஆகட்டும்

திரு! = திருமகள் போன்றவளே

நின் வரவு; = உன் வரவு

சேயோய்! = தூரம் இருப்பவளே, அல்லது அந்நியமானவளே

போத உளது, = நீ இங்கு வந்தது

எம்முழை = எம் இருப்பிடத்துக்கு

ஓர்  = ஒரு

புண்ணியம்அது அன்றோ?  = அது அல்லவா புண்ணியம்

ஏது பதி? = உன் சொந்த ஊர் எது

ஏது பெயர்? = உன் பெயர் என்ன

யாவர் உறவு?' என்றான்.  = உன் உறவினர்கள் யார் யார் ? என்று கேட்டான்

வேத முதல்; = வேத முதல்வனான (இராமன்)

பேதை அவள் தன்      நிலை விரிப்பாள்; = பேதை அவள் தன் நிலை கூறத் தொண்டங்கினாள்

சூர்பனகையிடம் தேவை இல்லாததை பேச ஆரம்பிக்கிறான் இராமன்.

பாக்க இலட்சுமி மாதிரி இருக்கிறாயே

நீ வந்தது பெரிய புண்ணிய பலன் என்கிறான்.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். ஒரு ஆடவன், முன் பின் தெரியாத ஒட்டு பெண்ணைப் பார்த்து, இப்படி பேசுவது சரியானதா ?

சூர்ப்பனகை வந்தது தேவர்கள் செய்த புண்ணியத்தின் பலன் என்று வேண்டுமானால் வியாக்கியானம் செய்யலாம். "உன்னைப் பார்த்தால் இலட்சுமி போல  இருக்கிறது" என்று சொன்னது ?

அது பற்றி மேலும் சிந்திக்க இருக்க இருக்கிறோம்.

உங்களுக்கு சகுனத்தில் நம்பிக்கை உண்டா? நம் தமிழ் இலக்கியம் சகுனத்தை நம்பியது. பின்னால் வரப்போகும் நன்மை தீமைகளை சில நிகழ்ச்சிகள் நமக்கு அறிவிக்கின்றன என்று நம் இலக்கியம் பேசுகிறது.

அதற்கான சான்றுகள் பல இருக்கின்றன.

இந்தப் பாடலில் அப்படி என்ன சகுனம் இருக்கிறது?

நாளை சிந்திப்போமா ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/04/1.html

3 comments:

  1. சரியாக சொன்னீர்கள்.அந்த தீதான வம்பையோ,டிவியில் காண்பிக்கும் சில காட்சிகளையோ,வெட்டி பேச்சுகளையோ, துஷ்டர்களின் அருகாமையையோ தவிர்க்க வேண்டிய அவசியத்தை விளக்கினீர்கள்.நம்மால் இனிமையாக பேச முடியாவிட்டால் மௌனமாக இருக்கலாமே.
    அது நிற்க .ராமன்வாயிலாக வரப்போகும் தீதை கம்பர் கோடி காட்டுகிறார் போல..

    ReplyDelete
  2. "நல்லபடி வாழ்க" என்று வாழ்த்துவதற்கும், "கஷ்டம் இல்லாமல் வாழ்க" என்று வாழ்த்துவதற்கும் வேறுபாடு இருக்கிறது என்று நம்புவது ஒரு கலாச்சாரம், பண்பாடு.

    "உன் வரவு நல்வரவு ஆகுக" என்று சொல்லாமல், "உன் வரவு தீது இல்லாததாக ஆகுக" என்று இராமன் சொன்னதும் அதேபோல அமங்கலமே.

    சுவையான பொருள் ஆராய்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. The word mantra is derived from two Sanskrit roots; manas meaning ‘mind’ and tra meaning ‘tool’. As such, mantras are considered to be “tools of thought,” used as a means of harnessing and focusing the mind.

    ReplyDelete