Saturday, April 6, 2019

கம்ப இராமாயணம் - உலகம் மேல் உரைக்க ஒண்ணுமோ?

கம்ப இராமாயணம் - உலகம் மேல்  உரைக்க ஒண்ணுமோ? 


தமிழிலே உவமை என்று ஒன்று உண்டு. ஒன்றைக் காட்டி மற்றொன்றை விளங்கப் படுத்துவது.

தெரிந்த ஒன்றைக் காட்டி, தெரியாத ஒன்றை விளங்க வைக்கலாம் அல்லது ஒன்றின் சிறப்பைக் கூற அதை விட உயர்ந்த ஒன்றுக்கு அதை ஒப்பிடலாம்.

உதாரணமாக

புலி எப்படி இருக்கும் என்று தெரியாது என்று வைத்துக் கொள்வோம். பூனை தெரியும். எனவே, புலி என்பது பூனை மாதிரி இருக்கும். கொஞ்சம் பெரிய பூனை என்று சொல்லி விளங்க வைக்கலாம்.

அவளுடைய முகம் நிலவு போல இருக்கும், பல் முத்துப் போல இருக்கும் என்றெல்லலாம் உவமை கூறி இரசிக்கலாம்.

இராமனைப் பார்க்கிறாள் சூர்ப்பனகை. அவன் இதழ்களை பார்க்கிறாள். அந்த இதழுக்கு எதை உதாரணம் சொல்லலாம் என்று யோசிக்கிறாள். எதைச் சொன்னாலும் அது சரியாக இருக்காது. அப்படி உதாரணம் சொல்லுவதே இராமனின் இதழுக்கு செய்யும் தீங்கு. அப்படி உதாரணம் சொல்பவர்கள் கல் மனம் படைத்தவர்களாகத்தான் இருக்க முடியும் என்று சூர்ப்பனகை நினைக்கிறாள்.


பாடல்


குப்புறற்கு அரிய மாக் 
     குன்றை வென்று உயர் 
இப்பெருந் தோளவன் 
     இதழுக்கு ஏற்பது ஓர் 
ஒப்பு என, உலகம் மேல் 
     உரைக்க ஒண்ணுமோ? 
துப்பினில் துப்புடை 
     யாதைச் சொல்லுகேன்?

பொருள்

குப்புறற்கு = கடப்பதற்கு

அரிய = கடினமான

மாக் குன்றை  = பெரிய மலையை

வென்று = வென்று என்றால் அதை விட உயரமாக உள்ள

உயர் = உயர்ந்த

இப்பெருந் தோளவன் =இந்த பெரிய தோள்களை கொண்ட இவனின்

இதழுக்கு = உதட்டிற்கு

ஏற்பது = ஏற்ற

ஓர் = ஒரு

ஒப்பு என = சரி சமமான

உலகம் மேல் = உலகத்தில்

உரைக்க ஒண்ணுமோ?  = எதையாவது சொல்ல முடியுமா ?

துப்பினில் = துப்பு என்ற சொல்லுக்கு பவளம் என்று ஒரு பொருள் உண்டு.

துப்புடை = (பவளத்தை விட) உயர்ந்த

யாதைச் சொல்லுகேன்? = எதைச் சொல்லுவேன் ? (எதையும் சொல்ல முடியாது)


இதழுக்கு பவளத்தை உவமை சொல்லுவது வழக்கம்.

பச்சை மா மலை போல் மேனி, பவள வாய் கமலச் செங்கண்

என்பது பிரபந்தம்.

சிவ பெருமான் சிவந்த மேனி கொண்டவன்.

"பொன்னார் மேனியனே , புலித்தோலை அரைக்கு அசைத்து "

என்பது தேவாரம்.

பொன் போல ஜொலிக்கும் அந்த சிவந்த மேனியை சொல்லும் போது , நாவுக்கரசர் சொல்லுவார்

"பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்" என்று.

அந்த பவளத்தை இராமனின் சிவந்த இதழுக்கு உதாரணம் சொல்லலாம் என்றால் முடியாது. ஆனால், பவளத்தை விட சிறந்த ஒன்று இல்லையே என்று வருந்துகிறாள் சூர்ப்பனகை.

உன் பவள வாய் காண்பேனே என்பார் குலசேகர ஆழ்வார்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

என்பது பிரபந்தம்.

சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி 
கோதை  குழலாள் அசோதைக்கு  போத்தந்த
பேதை  குழவி பிடித்து சுவைத்து உண்ணும் 
பாதக் கமலங்கள் காணீேர
பவள வாயீர் வந்து  காணீேர 

கண்ணன் தொட்டிலில் படுத்து இருக்கிறான். கால் கட்டை விரலை பிடித்து வாயில் வைத்து சுவைக்கிறான். "ஐயோ, இது எவ்வளவு அழகாக இருக்கிறது, இவனை வந்து பாருங்களேன், பவளம் போல் வாயைக் கொண்ட பெண்களே வந்து பாருங்கள் " என்று  அழைக்கிறார் பெரியாழ்வார் , பிரபந்தத்தில்.


பெண்ணின் இதழை வர்ணித்து நாம் கண்டிருக்கிறோம்.

ஆணின் இதழை வர்ணித்து எங்காவது கண்டிருக்கிறோமா? இராமனை அணு அணுவாக இரசிக்கிறான் கம்பன். இராமன், தசரதனின் பிள்ளை அல்ல. கம்பனின் பிள்ளை. அப்படித்தான் கம்பன் நினைக்கிறான். கிடைக்கும் இடத்தில் எல்லாம் அவன் அழகை கண்டு உருகுகிறான் கம்பன்.

புறத்தைப் பற்றிக் கொண்டுதான் அகத்துக்குப் போக வேண்டும்.

சில பேர் வெளியிலேயே நின்று விடுகிறார்கள். சூர்பனகையைப் போல.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_6.html

2 comments:

  1. சூர்ப்பனகை ராமனின் இதழ்களின் அழகை எதற்கும் ஒப்பிட முடியாமல் திணறுவதை கம்பன் வாயிலாக சொல்லும்போது வரும் பவழம் என்கிற ஒரு வார்த்தைக்கு நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட உதாரணங்களை பாசுரங்கள்,தேவாரம் மூலம் மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள்.

    ReplyDelete
  2. ஒரு பாடலுக்கு விளக்கமாக இத்தனை துணைப் பாடல்களா?! அருமை. நன்றி.

    ReplyDelete