Saturday, October 19, 2019

வில்லி பாரதம் - இரு திறத்தேமும் சென்று மாள்வோம்

வில்லி பாரதம் -  இரு திறத்தேமும் சென்று மாள்வோம்


உறவுகளுக்குள் சண்டை வருவது இயல்பு. கணவன் மனைவி, மாமியார் மருமகள், அண்ணன் தம்பி, பங்காளிகள் என்று உறவில் விரிசல் வருவது இயற்கை.

சண்டை வந்தால் என்ன செய்ய வேண்டும் ?

நீயா நானா என்று ஒரு கை பார்த்து விட வேண்டும். யார் சரி என்று நிரூபித்தே ஆக வேண்டும். வெற்றி பெற்றே ஆக வேண்டும். அது எப்படி நான் தவறு என்று சொல்லலாம் என்று மூர்க்கமாக வாதிட வேண்டும். என்ன ஆனாலும் சரி, அடுத்தவர் தவறு என்று நிலை நிறுத்தாமல் விடுவது இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு கோதாவில் இறங்க வேண்டும்....

என்று தான் பலரும் நினைக்கிறார்கள். செய்கிறார்கள்.

சூதில் பாண்டவர்கள் தோற்றார்கள். நாடு நகரம் எல்லாம் வைத்து இழந்தார்கள். இறுதியில் மனைவியையும் வைத்து இழந்தான் தர்மன். பாஞ்சாலி சபை நடுவில் நெருக்கடிக்கு உள்ளானாள் . கதை உங்களுக்குத் தெரியும்.

வனவாசம், அஞ்ஞாத வாசம் முடிந்து திரும்பி வந்து விட்டார்கள்.

இப்போது என்ன செய்ய வேண்டும்?

ஒரு புறம் அர்ஜுனன், வீமன் , பாஞ்சாலி சபதம் நிற்கிறது.

கண்ணன் கேட்கிறான். என்ன செய்ய வேண்டும் என்று.

தருமன் சொல்கிறான். தர்மன் வாயிலாக வில்லி புத்தூராழ்வார் சொல்கிறார்.

"காட்டிலே மூங்கில் மரங்கள் வளர்ந்து இருக்கும். ஒன்றோடு ஒன்று உரசினால் தீப்பற்றிக் கொள்ளும். அப்படி தீப்பற்றிக் கொண்டால், உரசிய  இரண்டு மூங்கில்கள் மட்டும் அல்ல , காடே எரிந்து சாம்பல் ஆகும்.  அது போல  உறவினர்கள் ஒருவரோடு ஒருவர் உரசிக் கொண்டால் அவர்கள் அழிவது மட்டும் அல்ல, அவர்களுடைய சுற்றம் எல்லாம் அழியும். எனவே, நாங்கள்  ஒன்றாக வாழ வழி சொல்வாய்"

என்று கேட்கிறான்.

எவ்வளவு பெரிய மனம். கோபம் வந்தாலும்,  மற்றவர்கள் நகைப்பார்களே என்ற எண்ணம் இருந்தாலும்,  எவ்வளவு தீர்க்கமாக சிந்தித்து பேசுகிறான் தர்மன்.

பாடல்

வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின்,
                  உயர் வரைக்காடு என்ன,
செயிர் அமரில் வெகுளி பொர, சேர இரு திறத்தேமும்
                  சென்று மாள்வோம்;
கயிரவமும் தாமரையும் கமழ்பழனக் குருநாட்டில்
                  கலந்து, வாழ,
உயிர் அனையாய்! சந்துபட உரைத்தருள்!' என்றான்,
                  அறத்தின் உருவம் போல்வான்.

பொருள்

வயிரம் எனும் = வயிரம் போன்ற உறுதியான

கடு நெருப்பை = கடுமையான கோபத்தை

மிக மூட்டி = அதிகமாக மூட்டி

வளர்க்கின் = வளர்த்து விட்டால்

உயர் வரைக் = உயர்ந்து வளரும் மூங்கில்

காடு என்ன = காடு போல

செயிர் அமரில் = கடுமையான போரில்

வெகுளி பொர = கோபம் தீர

சேர இரு திறத்தேமும் = இருபக்கமும் சேர்ந்து போராடினால்

சென்று மாள்வோம்; = சண்டையில் சென்று இறந்து போவோம்

கயிரவமும் = ஆம்பல் மலரும்

தாமரையும் = தாமரை மலரும்

கமழ் = மணம் வீசும்

பழனக் = பழமையான

குருநாட்டில் = குரு நாட்டில்

கலந்து, வாழ, = ஒருவரோடு ஒருவர் கலந்து வாழ

உயிர் அனையாய் = எங்கள் உயிர் போன்றவனே (கண்ணனே )

சந்துபட = சமாதானம் அடைய

உரைத்தருள்!'  என்றான், = உரைத்து அருள் செய்வாய் என்றான்

அறத்தின் உருவம் போல்வான். = அறத்தின் உருவம் போன்ற தர்மன்


கௌரவர்கள் , பாண்டவர்களுக்கு செய்ததை விடவா உங்கள் கணவனோ/மனைவியோ உங்களுக்கு துன்பம் செய்து விடப் போகிறார்கள்.

கௌரவர்களோடு கலந்து வாழ வழி சொல்வாய் என்று கேட்கிறான்.

மனைவியின் சேலையை பிடித்து இழுத்தவனுடன் கலந்து வாழ அருள் செய்வாய்  என்று கேட்கிறான்.

நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா, அவ்வளவு பொறுமை.

சண்டை போட்டால் எவ்வளவு பேர் இறந்து போவார்கள் என்ற அளவற்ற அருள் உள்ளத்தில் தோன்றியதால் , அதை தவிர்க்க நினைக்கிறான் தர்மன்.

கோபத்தில் நிதானம் இழக்காமல், பேசுகிறான் தர்மன்.

நம்மால் அந்த அளவு கட்டாயம் செய்ய முடியாது.

பரவாயில்லை.

இப்படியும் இருக்க முடியும். இருந்திருக்கிறார்கள் என்று நினையுங்கள்.

அது உங்களை ஒரு படி மேலே உயர்த்தும்.

மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு.


https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_19.html

Friday, October 18, 2019

திருமந்திரம் - குறியாத தொன்றைக் குறியாதார்

திருமந்திரம் - குறியாத தொன்றைக் குறியாதார்


சிறு பிள்ளைகள், மணலில் விளையாடும். அதில் அவர்கள் சோறு, கறி எல்லாம் செய்வார்கள். செய்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பார்கள். சாப்பிடுவது போல பாவனை செய்து, ஏப்பமும் விடுவார்கள்.

அது சிறு பிள்ளை விளையாட்டு. அது சோறும் இல்லை. அது பசியையும் தீர்க்காது.

அது போல, நாம் இந்த உலகியல் அனுபவங்களில் திளைத்து இருந்து கொண்டு, அதுவே சுகம், அதுவே வீடு பேறு , முக்தி இவற்றை தரும் என்று நினைத்துக் கொள்கிறார்கள் என்கிறார் திருமூலர்.

பாடல்

சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தார் அவராவர் அன்றே .

பொருள்

சிறியார் = சிறுவர்கள்

மணற்சோற்றில் = மணலால் செய்த சோற்றில்

தேக்கிடு மாபோல் = உண்டு ஏப்பம் விடுவது போல (தேக்கு = ஏப்பம்)

செறிவால் = கூடி இருப்பதால் (கணவன், மனைவி, பிள்ளைகள் ,உற்றார், உறவு)

அனுபோகஞ் சித்திக்கும் என்னில் = உயர்ந்த போகம் கிடைக்கும் என்று எண்ணுவது

குறியாத தொன்றைக்  = குறிப்பாக சொல்ல முடியாத ஒன்றை

குறியாதார் = குறித்துக் கொள்ளாதவர்கள்

தம்மை = தங்களை

அறியா திருந்தார் = அறிய மாட்டார்கள்

அவராவர் = அவர் என்ற தலைவரை

அன்றே = அப்போதே

உலக இன்பங்களில் திளைத்து இருப்பவர்கள் தங்களையும் அறிய மாட்டார்கள், "அவரையும்" அறிய மாட்டார்கள்.

வீடு, வாசல், பணம், நகை,நட்டு, உறவு என்று  அலைந்து கொண்டு இருப்பவர்கள், பிள்ளைகள் மணல் சோறு செய்வது போல சிறு பிள்ளைகளாக அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

மணல் சோறு பசியை எப்படி போக்காதோ, அப்படியே இவையும் என்று அறிக.

interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_37.html



கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும்

கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும் 


ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். அவனுக்கு ஏகப்பட்ட செல்வம். எல்லாவற்றையும் பல இரும்பு பெட்டிகளில் போட்டு அவனுக்கு சொந்தமான பல இடங்களில் மறைவாக புதைத்து வைத்து இருந்தான். அந்த பெட்டிகளின் சாவியை அவனுடைய மகனிடம் கொடுத்து "மகனே நான் இதுவரை சேர்த்த செல்வங்களை எல்லாம் பெட்டிகளில் போட்டு பல இடங்களில் புதைத்து வைத்து இருக்கிறேன். அந்தப் பெட்டிகளின் சாவிகள் இவை. பத்திரமாக வைத்துக் கொள் . எனக்குப் பின்னால் அவை அனைத்தும் உனக்குத்தான்" என்று கூறினான்.

மகனும் சாவியை வாங்கிக் கொண்டான். பெட்டிகள் எங்கே இருக்கிறது அந்தத் தந்தை மகனிடம் சொன்னான். அவன் சரியாக மனதில் வாங்கிக் கொள்ளவில்லை. சரி, அப்பறம் இன்னொரு நாள் கேட்டு சரியாக எழுதி வைத்துக் கொள்வோம் என்று இருந்து விட்டான்.  விதியின் விளையாட்டு. தந்தை ஒரு விபத்தில் இறந்து போனார்.

மகனிடம் சாவிகள் இருக்கின்றன. ஆனால், அந்த சாவிகள் எந்த பூட்டைத் திறக்கும் என்று அவனுக்குத் தெரியாது. பூட்டு தெரியாது. ஆனால், சாவி இருக்கிறது.

அவன் , அவனுடைய  மகனிடம் "மகனே, உன் தாத்தா பெரிய ஆள். நிறைய சம்பாதித்தார். அவற்றை எல்லாம் பல பெட்டிகளில் போட்டு பல இடங்களில் புதைத்து வைத்தார். அந்த பெட்டிகளின் சாவிகள் இவை.  நீ தான் அவற்றின் வாரிசு. சில பெட்டிகளின் இடம் எனக்குத் தெரியும். மற்றவை மறந்து  போய் விட்டது. நீ கண்டு பிடித்துக் கொள். ஆனால், அவற்றில் பல விலை மதிக்க முடியாத செல்வங்கள் இருக்கின்றன" என்று கூறி தன் மகனிடம் அந்த சாவிகளைக் கொடுத்தான்.

இப்படி தலை முறை தலை முறையாக அந்த சாவிக் கொத்து கை மாறிக் கொண்டே வந்தது.

பல தலைமுறைகளுக்குப் பின், தற்போதைய வாரிசுகள் "எங்க முன்னோர்கள்  பெரிய செல்வந்தர்கள். கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்தார்கள். அந்த பெட்டிகளின் சாவிகள் இவை " என்று அந்த சாவிக் கொத்தை  கையில் ஸ்டைலாக சுத்திக் கொண்டு திரிகிறார்கள். பெட்டிகள் எங்கே இருக்கிறது என்று தெரியாது.

அது போலத்தான்  பலர் இன்று இருக்கிறார்கள்.

கோவில், பூஜை, நாள், கிழமை, உடம்பில் பல விதமாக கோடுகள் போட்டுக் கொள்வது, பல விதமாக உடை  அணிந்து கொள்வது, சாப்பிடுவது, சாப்பிடாமல் இருப்பது  என்று பல வித காரியங்களை செய்கிறார்கள்.

ஏன் என்று கேட்டால் தெரியாது. முன்னோர்கள் செய்தார்கள். அவர்கள் மடையர்களா என்று  கேட்கிறார்கள். முன்னோர்கள் செய்ததற்கு காரணம் இருக்கலாம். நீ ஏன் செய்கிறாய் என்றால் தெரியாது.

இந்த சடங்களுகளின் பின்னால் காரணம் இருக்கலாம். ஆனால் அது என்ன என்று தெரியாது.

சாவி இருக்கிறது. பூட்டு எங்கே என்று தெரியாது.

குறியீடுகள் முக்கியமாக போய் விட்டது. சாவியே செல்வம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விரதம் என்றால் அது எதை சாதிக்க முற்படுகிறது என்று தெரிய வேண்டும்.

விளக்கு ஏற்றுகிறோம் என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிய வேண்டும். .

ஏன் செவ்வாய், வெள்ளி பூஜைக்கு உகந்த நாள்? ஏன் மார்கழி உயர்ந்த மாதம்,  ஏன் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்,  ஏன் கோவிலுக்குப் போக வேண்டும் ?

கையில் சாவியை சுழற்றிக் கொண்டு திரிகிறார்கள். என்ன சொல்வது.

அருணகிரிநாதர் சொல்கிறார்.

குறிகளை, குறியீடுகளை தாண்டிச் செல்ல வேண்டும். அதுவே இறுதி அல்ல.  அது எதைக் குறிக்கிறதோ  அதை நோக்கிச் செல்ல வேண்டும்.

சாவியை எடுத்துக் கொண்டு போய் , பெட்டியை திறந்து செல்வங்களை எடுத்து அனுபவிக்க வேண்டும்.

பாடல்

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.


பொருள்

குறியைக் குறியாது = குறிப்புகளை மனதால் குறித்துக் கொள்ளாமல்

குறித்து அறியும் = அந்தக் குறிகள் எவற்றை குறிக்கின்றனவோ அவற்றை அறியும்

நெறியைத் = வழியை

தனிவேலை நிகழ்த்திடலும் = தனித்துவம் வாய்ந்த வேலை உடைய முருகன் நிகழ்த்திடவும்

செறிவு அற்று, உலகோடு =உலகோடு நெருங்கிய பந்தம் விட்டு

உரை = பேச்சு

சிந்தையும் = சிந்தனை

அற்று = விட்டு

அறிவு அற்று = அறிவு அற்று

அறியாமையும் அற்றதுவே = அறியாமையும் விட்டது


அறிவு இல்லாமல் போகலாம். அறியாமை எப்படி இல்லாமல் போகும்?

செய்கின்ற செயல்களின் அர்த்தங்களை கண்டு பிடியுங்கள். சாவி முக்கியம் அல்ல.  செல்வம் முக்கியம்.

தேடுங்கள். காரணம் இல்லாமல் காரியம் செய்யக் கூடாது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_18.html

Wednesday, October 16, 2019

இராமானுசர் நூற்றந்தாதி - செந்தமிழில் பெய்யும் மறைத்தமிழ் மாலை

இராமானுசர் நூற்றந்தாதி - செந்தமிழில் பெய்யும் மறைத்தமிழ் மாலை


நமது புலன்கள் எப்போதும் வெளியே செல்லும் இயல்பு உடையன. வெளியில் உள்ளதை பார்க்கும், நுகரும், கேட்கும்...இப்படி எங்கே எது இருக்கிறது என்று அலையும்.

நல்ல சாப்பாடு எங்கே கிடைக்கும், நல்ல படம் எங்கே ஓடும் என்று ஆசை கொண்டு நம்மை விரட்டும்.

இப்படி நாளும் ஓடும் புலன்களை பிடித்து நிறுத்த முடியுமா என்றால், அதுவும் கடினம். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு மனதை அடக்க முயற்சி செய்கிறோமோ, அவ்வளக்கவ்வளவு அது திமிறிக் கொண்டு ஓடும்.

பின் என்ன தான் செய்வது ? எப்படி புலன்களை வெற்றி கொள்வது?

நம் முன்னவர்கள் அதற்கு ஒரு வழி கண்டு பிடித்து சொன்னார்கள்.

ஓடுவது புலன்களுக்கு இயல்பு. ஓடட்டும். ஆனால், அது எங்கே ஓட வேண்டும் என்று நாம் முடிவு செய்து கொண்டு அதை அங்கே அனுப்ப வேண்டும் என்று கூறினார்கள். அது நிற்காது. ஆனால், அதை நாம் விரும்பிய திசையில் செலுத்த முடியும்.

வழிபாடு என்ற ஒன்றை கண்டு பிடித்தார்கள். உங்களுக்கு இறை நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ,  வழிபாடு என்பது மனதை நல் வழி படுத்த வந்த ஒரு முறை என்று எடுத்துக் கொள்ளுங்கள். இறைவனைத் தான் வழிபட வேண்டும் என்று இல்லை. இயற்கையை வழிபடுங்கள், உங்கள் பெற்றோரை வழி படுங்கள், ஆசிரியரை வழி படுங்கள்...வழிபாடு மனதை நல்வழி திருப்பப் பயன்படும்.

வழிபடும் போது, மனம், வாக்கு, உடல் (காயம்) இந்த மூன்றும் ஒன்று பட வேண்டும்.  வாய் பாட்டுக்கு பாசுரத்தை சொல்லிக் கொண்டிருக்கும், மனம்  வேறு எதையோ  நினைத்துக் கொண்டிருக்கும், கை இன்னொன்றை செய்து கொண்டிருக்கும். அது அல்ல வழிபாடு.

திரிகரண சுத்தி என்று சொல்லுவார்கள். மனம், வாக்கு , காயம் என்ற உடல் மூன்றும்  ஒரு புள்ளியில் இலயிக்க வேண்டும்.

இறைவனை வழிப்படு என்றால் சிக்கல். ஆளாளாளுக்கு ஒரு கடவுள் வைத்து இருக்கிறார்கள்.  எந்தக் கடவுளை வழிபடுவது. எல்லாக் கடவுளும் ஒன்றா. நம்ம கடவுள்  மற்ற கடவுள்களை விட உயர்ந்தவர் இல்லையா? என்றெல்லாம் தோன்றும்.

எனவேதான், குருவை, ஆச்சாரியனை வழிபடுதல் என்று வைத்தார்கள். அவர் நமக்கு  இறைவனை காட்டித் தருவார் என்று  நம்பினார்கள்.

திருவரங்கத்து அமுதனார் சொல்கிறார்,

"துளசியுடன் கூடிய பூ மாலையும், தமிழ் பா மாலையும் பாடிய தொண்டரடி பொடி ஆழ்வாரின் திருவடிகளை மனதில் கொண்ட இராமானுஜரின் திருவடிகளே எனக்குத் துணை" என்று.

பாடல்

செய்யும் பசுந்துள பத்தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்
தையன் கழற்கணி யம்பரன் தாளன்றி ஆதரியா
மெய்யன் இராமா னுசன்சர ணேகதி வேறெனக்கே.

பொருள்

செய்யும் = செய்கின்ற

பசுந் = பசுமையான

துளபத் = துழாய்

தொழில் = எழிலான , அழகான

மாலையும் = மாலையும்

செந்தமிழில் = செம்மையான தமிழில்

பெய்யும் = பொழியும்

மறைத்தமிழ் மாலையும்  = வேதங்களின் சாரமான பா மாலையும்

பேராத  = நீங்காத

சீரரங்கத் தையன்= ஸ்ரீரங்கத்து ஐயன்

கழற் = திருவடிகள்

கணியம் = அணியும், மனதில் தரித்துக் கொள்ளும்

பரன் = தொண்டரடிப் பொடி ஆழ்வார்

தாளன்றி  = திருவடிகள் தவிர

ஆதரியா = மற்றவற்றை ஆதரிக்காத, வணங்காத

மெய்யன் = உண்மையானவன்

இராமா னுசன் = இராமானுசன்

சர ணே = பாதங்களே

கதி = வழி

வேறெனக்கே. = வேறு எதுவும் இல்லை

பூ மாலை, கையால் , உடலால் செய்யும் பூஜை

பா மாலை , மனதால், வாக்கால் செய்யும் பூஜை

அப்படி மூன்றும் ஒன்றுபட்ட தொண்டரடிப் பொடியின் பாதங்களை பற்றிக் கொண்ட இராமானுஜரின் பாதங்களே எனக்குத் துணை என்கிறார்.

கொஞ்சும் தமிழ். தேனாய் தித்திக்கும் தமிழ்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_16.html

Tuesday, October 15, 2019

அபிராமி அந்தாதி - ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி

அபிராமி அந்தாதி - ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி


நேற்று சாப்பிட்டது ஞாபகம் இருக்கிறது. அதற்கு முந்தின நாள்? போன வாரம், போன மாதம், போன வருடம் இதே நாள் என்ன சாப்பிட்டோம் என்று நினைவு இருக்கிறதா? இல்லை அல்லவா.

ஒரு மாடு, நெல் விளைந்த ஒரு வயல் காட்டில் சென்று வளர்ந்து இருக்கின்ற நெல் பயிரை மேய்ந்து விடுகிறது. வயலுக்கு சொந்தக்காரன் வந்து தடியால் இரண்டு அடி போட்டு மாட்டை விரட்டுகிறான்.  மறு நாளும் அந்த மாடு அதே வயக்காட்டில் இறங்கி பயிரை மேயும். "அடடா, நேற்றுதானே இந்த பயிரை மேய்ந்ததற்கு தடியால் அடித்தார்கள்" என்ற நினைவு இருக்காது. செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்யும். மறந்து போய் விடுகிறது.

நாமாக இருந்தால் அப்படி செய்வோமா? நம்மை சரியாக மதிக்காதவர் வீட்டுப் பக்கம் கூட நாம் போக மாட்டோம் அல்லவா? காரணம், அவர் செய்த மரியாதை குறைவான செயல் நம் மனதில் நிற்கிறது. அது மனதில் நிற்காவிட்டால்? மீண்டும் அவர் வீட்டுக்குப் போவோம் அல்லவா?

நேற்று சாப்பிட்டதே மறந்து போய் விடுகிறது. போன பிறப்பும் அதற்கு முந்தைய பிறப்பும் நினைவு இருக்குமா?

மாட்டுக்கு நினைவு இல்லாதது, நமக்கு நினைவில் இருக்கிறது.

நமக்கு நினைவில் இல்லாதது, பெரியவர்களுக்கு, சான்றோர்களுக்கு நினைவில் நிற்கிறது.

எத்தனை முறை மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து இப்படி துன்பப் படுவது என்று  அவர்கள் தளர்ந்து போகிறார்கள்.

பட்டர் சொல்கிறார்,

"தயிர் கடையும் மத்தின் இடையில் அகப்பட்ட தயிர் போல என் ஆவி ஆனது சுழல்கிறது. பிறக்கிறது, பிறக்கிறது, இறக்கிறது...நான் தளர்ந்து போய் விட்டேன். தளர்வு அடையாமல் நான் ஒரு நல்ல கதி அடைய எனக்கு அருள் செய்வாய். பிரமனும், திருமாலும், சிவனும், துதிக்கும் சிவந்த திருவடிகளை கொண்டவளே " என்று

பாடல்


ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.


பொருள்

ததி = தயிர்

உறு = அடைகின்ற

மத்தின் = மத்தின். மத்தில் அகப்பட்ட தயிரைப் போல

சுழலும் என் ஆவி = சுழலும் என் ஆவி

தளர்வு இலது ஓர் = தளர்வு இல்லாத ஒரு

கதியுறுவண்ணம் = கதியினை அடைய

கருது கண்டாய் = அருள் புரிவாய்

கமலாலயனும், = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

மதியுறு = நிலவை உள்ள

வேணி = சடை முடியுள்ள

மகிழ்நனும் = உன்னோடு சேர்ந்து மகிழும் சிவனும்

மாலும் = திருமாலும்

வணங்கி = வணங்கி

என்றும் = எப்போதும்

துதியுறு = துதி செய்யும்

சேவடியாய் = சிவந்த அடிகளைக் கொண்டவளே

சிந்துரானன சுந்தரியே. = சிவந்த குங்குமம் அணிந்த அழகியே

மறு பிறப்பு உண்டா ? இது பற்றி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா?

மணிவாசகர் சொல்வார்

"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்று திருவாசகத்தில்


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.


புல் , பூண்டு, புழு, மரம், பலவிதமான மிருகங்கள், பறவை, பாம்பு, கல், மனிதர், பேய், கணங்கள் , அசுரர், தேவர், முனிவர் என்று எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார்.

எப்படி எல்லாம் பிறந்திருக்கோம் என்பதல்ல முக்கியம், எப்படி எல்லாம் இனி பிறக்க  இருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால் சற்று சங்கடமாகத்தான் இருக்கிறது.

நமக்கு ஞாபகம் இல்லை. மறந்து போய் விட்டது.

அவருக்கு ஞாபகம் இருக்கிறது.

மீண்டும் மீண்டும் பிறந்து எல்லோருக்கும் சலிப்புத்தான் வருகிறது.

என்னை மீண்டும் மீண்டும் பெற்று என் தாயர்கள் உடல் சலித்து விட்டார்கள், நான் நடந்து நடந்து கால் சலித்து விட்டேன், என் தலை எழுத்தை எழுதி எழுதி பிரமனும் கை சலித்துப் போய் விட்டான். இருப்பையூயூர் வாழ் சிவனே, இன்னம் ஒரு கருப்பையூர் வாராமல் காப்பாற்றுவாய் என்று கதறுகிறார் பட்டினத்தார்.

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை

கருப்பையூர் வாராமற் கா


அறிவு இருந்தால், மீண்டும் இங்கு வந்து பிறக்காமல் இருக்கும் வழியைக் கண்டு கொள்ளலாம் என்கிறார் வள்ளுவர்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி

மற்று ஈண்டு வாரா நெறி.  மறுபடியும் இங்கு வராத வழி.

பட்டர் அதையெல்லாம் நினைத்து அலட்டிக் கொள்ளுவது இல்லை.

அபிராமி, நான் மீண்டும் இங்கு வந்து பிறக்காமல் இருக்கும் வழியைப் பார் என்று அவள்  மேல் பாரத்தை போட்டு விடுகிறார்.

அம்மாவின் இடுப்பில் இருக்கும் குழந்தை, தாய் தன்னை கீழே போட்டு விட மாட்டாள் என்று  எவ்வளவு உறுதியாக இருக்குமோ அப்படி உறுதியாக இருக்கிறார்.

பாடலை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். சிந்துரானன சுந்தரியே என்று கொஞ்சுகிறார்.

இப்படி வந்து கேட்டால், எந்த தாய் தான் மறுப்பாள் ?

கேட்டுப் பாருங்கள்.

interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_15.html

Sunday, October 13, 2019

சகலகலாவல்லி மாலை - ஒரு காலமும் சிதையாமை நல்கும்

சகலகலாவல்லி மாலை - ஒரு காலமும் சிதையாமை நல்கும்


ஒரு காலத்தில் பெரும் செல்வந்தராய் இருந்த ஒருவர், பின்னொரு காலத்தில் அனைத்தையும் இழந்து வறுமையில் வாடலாம்.

அரசர்கள், ஆண்டியான கதைகள் ஏராளம்.

ஆனால், ஒரு காலத்தில் பெரிய அறிவாளியாக இருந்த ஒருவன் பின்னொரு காலத்தில் முட்டாளாக முடியாது.

"பாவம் ஒரு காலத்தில் Phd பட்டம் பெற்றவர்..இப்ப வெறும் sslc ஆகி விட்டார்" என்று இதுவரை நாம் யாரும் சொல்லக் கேட்டது இல்லை.

அறிவு, ஒருமுறை பெற்று விட்டால், அது நம்மை விட்டு போவது இல்லை. ஒரு காலத்திலும் அது சிதையாது.

செல்வம் சிதைந்து விடலாம். தொழில் தொடங்கினால், நட்டம் வந்து சேரலாம். அதனால் போட்ட முதலையும் இழந்து நடுத் தெருவில் நிற்க வேண்டி வரலாம். எவ்வளவோ பெரிய தொழில் அதிபர்கள், கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளார்கள்.

பங்கு சந்தையில் முதலீடு செய்தால், பங்கு சந்தை சரிந்து போட்ட பணம் எல்லாம் போய் விடலாம்.

இன்றைய நிலையில் வங்கிகளில் போட்ட பணம் கூட பத்திரமாக இருக்குமா என்று தெரியவில்லை.

யாராவது தாங்கள் பெற்ற கல்வி காணாமல் போய் விடுமோ என்று அஞ்சி இருக்கிறார்களா?

குமா குருபரர் கூறுகிறார்

"சொல் திறமையும், பொறுமையுடன் கவனித்து பெறும் அறிவும் தந்து , கவி இயற்றும் நல் வித்தையும் தந்து அடிமை கொள்வாய். இலக்குமியின் அருள் கூட (பொருள்) ஒரு காலத்தில் சிதைந்து போகலாம், ஆனால் நீ தரும் அறிவு என்ற செல்வம் ஒரு காலமும் சிதையாது, சகலகலாவல்லியே" என்று சரஸ்வதியை போற்றி பாடுகிறார்.


பாடல்

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.

சீர் பிரித்த பின்

சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல
நல் வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே

பொருள்

சொல் விற்பனமும் = சொற்களை கையாள்வதில் திறமையும்

அவதானமும் = கவனமும்

கவி சொல்ல வல்ல = கவிதை சொல்ல வல்ல

நல் வித்தையும் = நல்ல வித்தையும்

தந்து = தந்து

அடிமை கொள்வாய் = என்னை உன் அடிமையாக ஏற்றுக் கொள்வாய்

நளின = அழகிய

ஆசனம் சேர் = ஆசனத்தில் இருக்கும் (செந்தாமரையில் இருக்கும்)

செல்விக்கு = செல்வத்துக்கு அதிபதியான இலக்குமிக்கு

அரிது = அரியதானது

என்று = என்று

ஒரு காலமும் சிதையாமை நல்கும் = ஒரு காலத்திலும் சிதையாமை நல்கும்

கல்விப்= கல்வி என்ற

பெரும் = பெரிய

செல்வப் பேறே  = செல்வதை பெரும் பேற்றை தருபவளே

சகலகலாவல்லியே = சகலகலாவல்லியே

சிதையாத செல்வத்தை தருவது இலக்குமிக்கு கடினம். செல்வம் சிதைந்தே தீரும்.

கல்வி அப்படி அல்ல.

எனவே தான், நம் கலாச்சாரத்தில் கல்விக்கு முதலிடம் தந்தார்கள்.

பணக்காரனை விட ஒரு கல்வியாளனுக்கு இந்த சமுதாயம் அதிக முக்கியத்துவம்  தந்தது, தருகிறது.


வெண் தாமரையில் இருக்கும் அவளை நாடுங்கள். சிதையாத கல்விச் செல்வம்  பெற்றிடுங்கள்.

வாழ்த்துக்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_13.html

Saturday, October 12, 2019

திருக்குறள் - மருந்து

திருக்குறள் - மருந்து


மருந்து என்று ஒரு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர். பத்து குறள். பிரமிக்க வைக்கும் ஆராய்ச்சி. ஒரு புத்தகமே எழுதலாம். அந்த அளவுக்கு மிக மிக ஆழமாக சிந்தித்து எழுதி இருக்கிறார். குறள் அவ்வளவு ஆழம் என்றால், அதற்கு பரிமேலழகர் எழுதிய உரை அதை விடச் சிறப்பு.

அந்த அதிகாரத்தில் ஒரு குறள். மருந்து என்றால் என்ன என்பதற்கு வள்ளுவர் சொல்லும் விளக்கம்.

நம்மிடம் கேட்டால் என்ன சொல்வோம் ? மருந்து என்றால் மாத்திரை, ஊசி, என்று மருந்தின் வகைகளைப் பற்றிச் சொல்வோம்.

வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

பாடல்


உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.

பொருள்

உற்றவன் = நோய் உற்றவன்  (நோயாளி)

தீர்ப்பான் = நோய் தீர்ப்பவன் (மருத்துவர்)

மருந்து = மருந்து

உழைச் செல்வான் = உடன் செல்வான்

என்று = என்று

அப்பால் = அவைகளே

நாற் கூற்றே  = நாலுமே

மருந்து. = மருந்து எனப்படுவது

இதற்கு பரிமேலழகர் எழுதிய உரையை சற்று விரித்துப் பார்ப்போம்.


நோயாளி, மருத்துவன், மருந்து, உடன் செல்வான் என்ற நான்கு கூறுகளை கொண்டது  மருந்து.

இதில் முதல் மூன்று நமக்குத் தெரிகிறது.

அது என்ன உடன் செல்வான்?

நோயாளியை கவனித்துக் கொள்பவன். அதாவது செவிலியர் (nurse ), உடன் இருப்பவர் (attendant ), சுத்தம் செய்பவர் (ward boy ), போன்றோர். இவர்கள் இல்லாமல்  மருந்து இ ல்லை. மருத்துவர் மருந்தை எழுதி தந்து விட்டுப் போவார். அதை வேளா வேலைக்கு கொடுக்க ஒரு nurse அல்லது உடன் இருப்பவர் முக்கியம் என்கிறார் வள்ளுவர்.

இதில் "அப்பால்" என்பதற்கு இந்த நான்கிற்கும் ஒவ்வொரு தன்மை, சிறப்பு இருக்கிறது.

நோயாளி என்பவன் யார்? அவனுடைய தகுதிகள் என்ன?

முதலில் பொருளடைமை - நோயாளிக்கு முதலில் பொருள் இருக்க வேண்டும். இல்லை என்றால் நோயை குணப்படுத்திக் கொள்ள முடியாது. சொந்த காசு இருக்க வேண்டும், அல்லது காப்பீட்டு தொகை (insurance ) இருக்க வேண்டும்.

இரண்டாவது, மருத்துவர் சொன்ன படி கேட்டு அதன் படி செய்வது. இன்னின்ன மாத்திரையை இன்னின்னன் நேரத்தில் சாப்பிட வேண்டும், இந்த விதமான டெஸ்ட் எடுக்க வேண்டும் என்றால், அதன் படி ஒழுங்காக செய்ய வேண்டும்.

மூன்றாவது, மருத்துவத்தின் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல். மருத்துவம் எல்லா காலத்தும் சுகமாக இருக்காது. ஊசி குத்துவது, அறுவை சிகிச்சை செய்வது, கட்டு போட்டு இருப்பது போன்ற வலிகளை பொறுத்துக் கொள்ள வேண்டும்.

நான்காவது, நோயின் நிலையை உணர்ந்து கொள்ளும் அறிவு இருக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும், தன் உடம்பு, தன் வலி, என்று தன்னுடைய நோயின் தன்மையை நோயாளி அறிந்து கொள்ளும் அறிவு வேண்டும்.

சரி, இது நோயாளியின் நான்கு அம்சங்கள்.

"நோய் தீர்ப்பான்" என்று சொன்னாரே, அந்த மருத்துவரின் குணம் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்றால், ஆம். அதற்கு நாலு சொல்லி இருக்கிறார்.


முதலாவது, நோய் கண்டு அச்சப் படாமல் இருத்தல். ஒரு மருத்துவன், நோயை கண்டு அஞ்சக் கூடாது. அது எவ்வளவு பெரிய கொடூரமான நோயாக இருந்தாலும், அதை எதிர்த்து போராடும் துணிவு இருக்க வேண்டும்.

இரண்டாவது, தன்னுடைய ஆசிரியர்களை வழிபட்டு (குருவருள்) அடைந்த கல்வியையும், அதனால் பெற்ற அறிவையும் பயன் படுத்தும் ஆற்றல்.

மூன்றாவது, அனுபவம். மருத்துவனுக்கு அனுபவ அறிவு முக்கியம். எவ்வளவுதான் படித்து இருந்தாலும், அனுபவ அறிவும் ரொம்ப முக்கியம்.

நான்காவது, மன , மொழி, மெய் சுத்தமாக இருக்க வேண்டும். அதாவது, நோயாளியின் இயலாமையை பயன் படுத்தி தவறான வழியில் பொருள் சேர்க்கக் கூடாது. இன்று வேண்டாத டெஸ்ட் கள் செய்ய வைக்கிறார்கள், வேண்டாத அறுவை சிகிச்சை செய்ய வைக்கிறார்கள். பணம் வேண்டும் என்று.  தெரியாத நோயாளி என்றால் உடல் உறுப்புகளை கூட திருடி விற்று விடுகிறார்கள்.

மருந்து பற்றி நான்கு சிறப்பு அம்சங்களை கூறுகிறார்:

முதலாவது, பல பிணிகளுக்கு ஏற்றவாறு இருத்தல். ஒரே மாத்திரை , சளி , காய்ச்சல், தலை வலி , மூக்கடைப்பு என்று எல்லாம் போய் விட வேண்டும். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மாத்திரை சாப்பிட முடியாது. கூடாது.

இரண்டாவது, சக்தி வாய்ந்த மருந்தாக இருக்க வேண்டும். சீக்கிரம் நோயயை குணப்படுத்த வேண்டும்.

மூன்றாவது, எளிதாக கிடைக்க வேண்டும். ஏதோ புலிப்பாலில் கரைத்து கொடுக்க வேண்டும் என்பது மாதிரி, கடினமான மருந்தாக இருக்கக் கூடாது.

நான்காவது, ஒரு உறுப்பில் வந்த துன்பம் தீர்க்க மருந்து கொண்டால், அது இன்னொரு உறுப்பை பாதிக்கக் கூடாது.


அடுத்தது, நோயாளியுடன் இருப்பவர் பற்றி கூறுகிறார்.

முதலாவது, அவனுக்கு நோயாளியிடம் அன்பு இருக்க வேண்டும். மால ஜலம் சுத்தம் செய்ய வேண்டும், எச்சி வடியும், வாய் நாறும், இவற்றை எல்லா பொறுத்துக் கொள்ள மனதில் அன்பு வேண்டும்.

இரண்டாவது, மன , மொழி , மெய் தூய்மையாக இருத்தல். நோயாளி இறந்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்று சிந்தித்துக் கொண்டே இருக்கக் கூடாது.

மூன்றாவது, மருத்துவர் என்ன சொன்னாரோ அதை அப்படியே செயல் படுத்தும் மன வலிமையையும், திறமையும். "இராத்திரி மருந்து கொடுக்கச் சொன்னார், தூங்கிட்டேன்" என்று சொல்லக் கூடாது.

நான்காவது, அறிவுடைமை. அதாவது, சூழ் நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்ளுதல்.


யோசித்துப் பாருங்கள். ஒரு குறளுக்குள் எவ்வளவு விஷயம் என்று. நினைத்துப் பார்க்க முடியுமா?

இன்றைக்கும் சரியாக இருக்கிறது அல்லவா?

நாம் நோயாளியாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்.


நாம், நோயாளிக்கு துணையாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்

நாம், மருத்துவராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்

என்று தெளிவாகக் கூறுகிறார்.

இது ஒரு குறள். இப்படி இன்னும் 9 குறள்கள் இருக்கின்றன.

எப்படியாவது தேடி பிடித்து படித்து விடுங்கள்.

நோயற்ற வாழ்வு வாழலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_12.html