Monday, January 20, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - 5 - கடதட யானை என

வில்லி பாரதம் - சிகண்டி - 5 - கடதட யானை என 


திருமணம் செய்து கொள்ள ஆவலோடு வந்திருந்த அனைத்து நாட்டின் அரசர்களில், தங்களுக்கு பிடித்த அரசரை தேர்ந்து எடுக்க ஆசையோடு வந்த காசி இராஜாவின் பெண்கள் மூவரும், அங்கே பீஷ்மரை கண்டு கொஞ்சம் ஆச்சரியப் பட்டார்கள். இந்தக் கிழவன் இங்கே என்ன செய்கிறான் என்று.

பீஷ்மர் அதை எல்லாம் பற்றி கவலைப் படவில்லை. அந்த மூன்று பெண்களையும் கவர்ந்து, தன் தேரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.

மதம் கொண்ட யானை போல சென்றார் என்கிறார் வில்லியார்.

பாடல்

ஏனைவேந்த ரெதிரிவரைப்பெருந்
தானைசூழ்மணிச் சந்தனத்தேற்றியே
சோனைமாமதஞ் சோருங்கடதட
யானையென்ன விளவலொடேகினான்.

பொருள்

ஏனை = மற்ற

வேந்தர் = அரசர்கள்

எதிர் = எதிரில்

இவரை = இந்த மூன்று பெண்களையும்

பெருந் = பெரிய

தானை = படை

சூழ் = சூழ்ந்த

மணிச்  = மணிகள் கட்டிய

சந்தனத்தேற்றியே = தேரில் ஏற்றி

சோனை =அடை மழை போல

மாமதஞ் சோருங் = மதன நீர் சொரியும்

கடதட = பெரிய தலையை உடைய (கடம் = மதம், தடம் = இடம், மதம் பிறக்கும் இடம்)

யானையென்ன = யானை போல

விளவலொடேகினான். = இளவரசனோடு சென்றான்



அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.

என்பது கந்தர் அலங்காரம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/5.html

Sunday, January 19, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - 4 - கையில் மாலை இவற்கு

வில்லி பாரதம் - சிகண்டி - 4 - கையில் மாலை இவற்கு 


ஏதோ அந்தக் காலம் முதல் இன்று வரை பெண்களை அடக்கியே வைத்து இருந்தார்கள் என்று இன்றைய பெண்களில் பெரும்பாலோனோர் நினைக்கிறார்கள். பெண்களுக்கு ஒரு சுதந்திரமும் இல்லை. பெண் விடுதலை வேண்டும். பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள்.

உண்மை அதுவா என்று வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்க வேண்டும்.

அந்தக் காலத்தில், பெண்களுக்கு சுயம்வரம் என்று வைத்திருந்தார்கள். இராஜா வீட்டில். பெரிய பெரிய நாட்டின் அரசர்கள் எல்லோரும் வந்திருப்பார்கள். பெண்ணின் கையில் மாலையைக் கொடுத்து, உனக்கு யாரைப் பிடித்து இருக்கிறதோ, அவரை தேர்ந்து எடுத்துக் கொள் என்ற உரிமையை தந்து இருந்தார்கள். பெண்ணின் தந்தை நினைத்து இருந்தால், அந்தப் பெண்ணை யாராவது ஒரு அரசனுக்கு மணமுடித்து இருக்கலாம். அப்படிச்  செய்யாமல், மணமகனை தேர்ந்து எடுக்கும் உரிமையை பெண்ணுக்கு கொடுத்து இருந்தார்கள்.

"ஹா...அதெல்லாம் இராஜா வீட்டு பெண்களுக்கு...சாதாரண பெண்களுக்கு அப்படியெல்லாம் உரிமை இருந்ததா ?" என்று கேட்பதற்கு முன், மீண்டும் ஒரு முறை நம் இலக்கியங்களை, வரலாற்றினை வாசியுங்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

காசி இராஜன் பெண்கள் மூவரும் சுயம்வர மண்டபத்துக்கு மாலையும் கையுமாக வருகிறார்கள்.

அங்கே பல மன்னர்கள் காத்து இருந்தார்கள். அவர்களோடு பீஷ்மரும் இருந்தார். அவரைப் பார்த்ததும், அந்தப் பெண்களுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்னடா இது, இந்த வயதான தாத்தா எதுக்கு இங்க வந்து   உட்காந்து இருக்காருன்னு ...


பாடல்


'கையில் மாலை இவற்கு' எனக் கன்னியர்
வெய்ய நெஞ்சொடு மின் என வந்தவர்,
வைய மன்னன் வய நிலை நோக்கியே,
ஐயம் உற்றனர், அன்புறு காதலார்.


பொருள்


'கையில் மாலை இவற்கு' எனக்  = கையில் உள்ள மாலை இவருக்கு என்று

கன்னியர் = அந்த கன்னிப் பெண்கள்

வெய்ய = ஆசை கொண்ட

நெஞ்சொடு = மனதோடு

மின் என வந்தவர், = மின்னலைப் போல் வந்தனர் (வாம்மா மின்னல்)

வைய = உலகுக்கே

மன்னன் = அரசனான  (பீஷ்மரின்)

வய நிலை = வயதின் நிலை

நோக்கியே, = நோக்கி

ஐயம் உற்றனர் = சந்தேகப் பட்டனர்

அன்புறு காதலார் = அன்பும் காதலும் கொண்ட அந்தப் பெண்கள்

ஒரு புறம் வெவ்வேறு நாட்டின் அரசர்கள்.

இன்னொரு புறம் பீஷ்மர்

மற்றொரு புறம் கையில் மாலையுடன் காசி இராஜாவின் மூன்று பெண்கள்.

அந்த சூழ்நிலையை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அடுத்து என்ன நடக்கும்?

அந்தப் பெண்கள் மற்ற அரசர்கள் கழுத்தில் மாலையை போடுவார்களா?

அல்லது பீஷ்மர் கழுத்தில் மாலையைப் போடுவார்களா?

அல்லது பீஷ்மர் அந்த மூன்று பெண்களையும் கவர்ந்து செல்வாரா? அப்படிப் போனால் மற்ற  அரசர்கள் சும்மா இருப்பார்களா?

கதை சூடு பிடிக்கிறதா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/4.html

Saturday, January 18, 2020

வில்லி பாரதம் - சிகண்டி 3 - விருத்தன் வந்தனன்

வில்லி பாரதம் - சிகண்டி 3 - விருத்தன் வந்தனன் 


தன் தம்பிக்கு மணம் முடிக்க என்று காசி இராஜனின் மகள்களின் சுயம்வரத்துக்கு பீஷ்மர் போகிறார்.

தம்பிக்காக போகிறார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர்கள் குழப்புகிறார்கள்.

"இந்தக் கிழவன் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்தவன் ஆயிற்றே, இப்போது , இந்த வயதான காலத்தில் எதற்கு இந்த சுயம்வரத்துக்கு வருகிறான்" என்று ஏனைய அரசர்கள் கலங்கினார்கள்.

கலக்கத்துக்குக் காரணம், சுயம்வரம், போட்டி என்று வந்து விட்டால், பீஷ்மரை தங்களால் வெல்ல முடியாது என்பதால்.

பாடல்

குருத்தலந்தனிற் கூறியவஞ்சினம்
ஒருத்தரன் றறிவாருலகோர்பலர்
விருத்தன்வந்தனன் மேலினியேதிவன்
கருத்தெனாமனங் காளையர்கன்றினார்.

பொருள்

குருத்தலந்தனிற் = குருகுலத்தில்

கூறிய வஞ்சினம் = முன்பு செய்த வஞ்சினம் (சத்தியம், விரதம்)

ஒருத்தரன் றறிவாருலகோர்பலர் = ஒருத்தர் அன்றி அறிவார் உலகோர் பலர்

விருத்தன் = வயதானவன்

வந்தனன் = வந்தனன்

மேலினியேதிவன் = மேல் இனி ஏது இவன்

கருத்தெனா = கருத்து என்று

மனங்  = மனத்தில்

காளையர் = அங்கு வந்திருந்த காளை போன்ற இளைய அரசர்கள்

கன்றினார். = வருந்தினர்

விருத்தன் என்றால் வயதானவன் என்று பொருள்.

விருந்தா நாரி பதி விரதா என்று வடமொழியில் ஒரு பழ மொழி உண்டு. வயதான பெண்  பதி விரதை என்பது பொருள்.


அசலம் என்றால் மலை என்று பொருள்.

விருத்தாச்சலம் என்றால் வயதான மலை என்று பொருள். விருதாச்சலத்துக்கு திருமுதுக்குன்றம்  என்பது தமிழ் பெயர்.

அங்குள்ள அம்பிகையின் பெயர் விருத்தாம்பிகை. தமிழில் பெரிய நாயகி.  வயதானவளாக காட்சி தருகிறாள்.

குகை நமச்சிவாயர் என்று ஒரு பக்தர் இருந்தார். அவர் பெரியநாயகி நோக்கி சில பாடல்களை பாடி இருக்கிறார். அவருக்கு பசிக்கும் போதெல்லாம் அன்னைக்கு கட்டளையிடுவார். "சோறு கொண்டு வா" என்று. தாயிடம் என்ன கெஞ்ச வேண்டி இருக்கிறது. "எனக்குப் பசிக்கிறது, சோறு கொண்டு வா" என்று  உரிமையுடன் கேட்பார்.

பெரிய நாயகியிடம் ஒரு நாள்

"நன்றி புனையும் பெரிய நாயகியே நுங்கிழத்தி
என்றும் சிவன்பாலிடக் கிழத்தி-நின்ற
நிலைக்கிழத்தி மேனி முழுநீலக் கிழத்தி
மலைக்கிழத்தி சோறு கொண்டு வா!"

என்று பாடினார். அம்பாளை கிழவி, கிழவி என்றே பாடினார்.

எந்த பெண்ணுக்குத்தான் தான் கிழவி என்று ஏற்றுக் கொள்ள மனம் வரும். இப்போதெல்லாம்  பாட்டி என்று சொல்லக் கூடாது என்கிறார்கள். ஆச்சியம்மா  என்று சொல் என்று பேரப்  பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறார்கள். பாட்டி என்று சொன்னால் வயதானவளாகத் தெரியுமாம்.

அம்பாள் நேரில் வந்து, "என்னப்பா என்னை இப்படி கிழவி கிழவி என்று சொல்லி விட்டாயே. நல்லாவா இருக்கு. இளமை உள்ளவளாகப் பாடு" என்று வேண்டினாள்.

குகை நமச்சிவாயரும்,

"முத்தாநதி சூழும் முதுகுன்றுறைவாளே 
பத்தர் பணியும் பதத்தாளே!
அத்தர் இடம் தாளே மூவா முலைமேல் எழிலார
வடத்தாளே சோறு கொண்டு வா!"

என்று பாடினார்.

அம்பாளும் மகிழ்ந்து சோறு கொண்டு வந்து தந்தாளாம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/3.html

Friday, January 17, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - பாகம் 2 - தரித்த வில்லோடு போனான்

வில்லி பாரதம் - சிகண்டி - பாகம் 2 - தரித்த வில்லோடு போனான் 


காசி மன்னனுக்கு மூன்று பெண் குழந்தைகள்.  அம்பை, அம்பிகை மற்றும் அம்பாலிகை என்பது அவர்கள் பெயர். அவர்களுக்கு திருமண வயது வந்ததும், காசி மன்னன், திருமணம் பற்றி அறிவித்தான்.

அழகில் சிறந்த அந்ப் பெண்களை மணந்து கொள்ள பல அரசர்கள் நான் நீ என்று ஆசைப்பட்டார்கள்.

பீஷ்மனும், தன்னுடைய தம்பியான விசித்திர வீரியனுக்கு அந்த பெண்களை மனமுடித்து வைக்க எண்ணினான். எனவே, சுயம்வரத்தில் கலந்து கொள்ள, பீஷ்மரும் வில்லை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்


பாடல்

வரித்தமன்னர் மறங்கெடவன்பினால்
திரித்துமெம்பியைச் சேர்த்துவல்யானெனாத்
தரித்தவில்லொடுந் தன்னிளவேந்தொடும்
வரித்தவெண்குடை வீடுமனேகினான்.

பொருள்

வரித்த மன்னர் = (தங்கள் மனதுக்குள் அந்தப் பெண்களை) வரித்துக் கொண்ட. அதாவது, அந்தப் பெண்கள்தான் என் மனைவி என்று எல்லா அரசர்களும் மனதுக்குள் நினைத்து இருந்தார்கள்.

 மறங்கெட = மறம் + கெட = அவர்களின் வீரம் கெட

வன்பினால் = வன்மையால்

திரித்து = அவர்களை திரும்பி ஓடச் செய்து

மெம்பியைச்  =என் தம்பியிடம்

சேர்த்துவல்யானெனாத் = சேர்த்து வைப்பேன் நான் என்று

தரித்த   வில்லொடுந் = வில்லை எப்போதும் ஆடை போல தரித்து இருக்கும்


தன்னிள வேந்தொடும் = தன்னுடைய இளைய வேந்தனோடும்

வரித்த வெண்குடை = சூடிய வெண் குடை உள்ள

வீடுமனேகினான். = வீடுமன் (பீஷ்மன்) சென்றான்

சுயம்வரத்தில் கலந்து, வீரத்தை நிலை நாட்டி, அந்தப் பெண்களை கொண்டு வந்து தன் தம்பிக்கு மணம் முடிக்க பீஷ்மர் புறப்பட்டார்.

அடுத்து என்ன ஆகப் போகிறதோ ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/2.html

Tuesday, January 14, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - ஒரு முன்னோட்டம்

வில்லி பாரதம் - சிகண்டி  - ஒரு முன்னோட்டம் 


பெண்ணின் மனதை ஆண்கள் புரிந்து கொள்வதே இல்லை.

ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ளாததால் வரும் சிக்கல்களை வைத்துத்தான் இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்கள் பின்னப் பட்டு இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன்.

ஒரு கூனியை, கைகேயியை, சூர்பனகையை புரிந்து கொள்ளாமல் அவர்களின் உணர்சிகளோடு ஆண்கள் தவறாக விளையாடியதால் என்ன நிகழ்ந்தது என்று இராமாயணம் காட்டுகிறது.

பாரதமும் அப்படித்தான்.

அதில் ஒரு மிக மிக சுவாரசியமான பாத்திரம் சிகண்டி.

எனக்குத் தெரிந்து, ஒரு அலியின் மன நிலை எப்படி இருக்கும் என்று எந்த தமிழ் இலக்கியத்திலும் இல்லை. ஆணின் மனம் புரிகிறது. பெண்ணின் மனம், சிக்கலாக இருந்தாலும், பின்னால் ஓரளவு புரிகிறது.

இரண்டுக்கும் நடுவில் இருக்கும் அலியின் மனம் எப்படி வேலை செய்யும்.

சிகண்டியை அலி என்று கூட சொல்ல முடியாது. பெண்ணாய் பிறந்து, ஆணாக மாறிய ஒரு பாத்திரம். இதுவரை வேறு எந்த இலக்கியத்திலும் கேள்விப் படாத ஒரு பாத்திர படைப்பு.

காதல் - தோல்வி - பச்சாதாபம் - ஏளனம் - கோபம் - ஆங்காரம் - வன்மம் - விடா முயற்சி - என்று அந்த உணர்சிக்களின் படைப்பு  சிகண்டி.

பாரதத்தின் மிகப் பெரிய பாத்திரமான பீஷ்மரை கொன்ற பாத்திரம்.

சிகண்டி இல்லாவிட்டால், பாண்டவர்கள் போரை வென்றிருக்க முடியாது.

பார்த்ததில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கிய பாத்திரம் சிகண்டி.

எல்லாம் முடிந்த பின்,  சிகண்டி மேல் நமக்கு ஒரு பரிதாபம்தான் வரும். ஒரு பச்சாதாபம்   .தான் வரும். அப்படி ஒரு பாத்திரம்.

தவறு யார் மேல் என்று நம்மால் உறுதி செய்ய முடியாத கதைப் போக்கு.

பீஷ்மர் செய்ததும் சரிதான். சிகண்டி செய்ததும் சரிதான். என்று நம்மை நியாய அநியாயங்களுக்கு நடுவில் நிறுத்தி ஒரு பக்கமும் சாய முடியாமல் செய்கிறது  பாரதக் கதை இந்த சிகண்டி பாத்திரத்தின் மூலம்.

மற்றவர்களின் உணர்ச்சிகளை நாம் எவ்வளவு எச்சரிக்கையாக கையாள வேண்டும்  என்று உணர்த்தும் பாத்திரம்.

யாராலும் வெல்ல முடியாத பீஷ்மரை அம்புப் படுக்கையில் படுக்க வைத்தது  அவரின் மெத்தனப் போக்கு.  அம்பையின் உணர்வுகளை மதிக்காமல் இருந்ததால் , உடல் எல்லாம் சல்லி சல்லியாக துளை பட்டு பீஷ்மர் கிடந்தார்.

மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காததால் பீஷ்மரே அந்த பாடு பட்டார் என்றால், நாமெல்லாம் எந்த மூலை?

வர இருக்கும் நாட்களில் சிகண்டி பற்றி காண இருக்கிறோம்.

interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_14.html




Saturday, January 11, 2020

நன்னூல் - நூலின் அழகு

நன்னூல் - நூலின் அழகு 


எப்படி அழகாக எழுதுவது?  ஒரு சிறந்த நூல் எப்படி இருக்க வேண்டும்? அலுவலகத்தில் கூட, நிறைய "presentation" தர வேண்டி இருக்கும். அவை எப்படி இருக்க வேண்டும். இன்று, "Steve Jobs" presentation உலகத் தரம் வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.  நம்மவர்கள், ஒரு சிறந்த நூலோ, அல்லது presentation ஓ எப்படி இருக்க வேண்டும் என்று வரையறை செய்து விட்டுப் போய் இருக்கிறார்கள். நாம் இதைப் படிப்பதை விட்டு விட்டு, "ஆ" என்று மேல்நாட்டாரை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

அழகான எழுத்து, புத்தகம், presentation எப்படி இருக்க வேண்டும்?

பாடல்

சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை யாழமுடைத் தாதல்
முறையின் வைப்பே யுலகமலை யாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த
தாகுத னூலிற் கழகெனும் பத்தே.

பொருள்


சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் = இது முதல் சூத்திரம். எதையும் சுருக்கமாகச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்.  வள வள என்று எழுதிக் கொண்டோ பேசிக் கொண்டோ இருக்கக் கூடாது. அதற்காக, ரொம்பவும் சுருக்கி என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் போகும் படியும் இருக்கக் கூடாது.


நவின்றோர்க் கினிமை = யாருக்கு சொல்கிறோமோ, அவர்களுக்கு அது இனிமையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கேட்க மாட்டார்கள்.


நன்மொழி புணர்த்தல் = நல்லவற்றை சொல்ல வேண்டும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போன்றவற்றை சொல்லக் கூடாது.

ஓசை யுடைமை = சந்த நயம் இருக்க வேண்டும். ஒலி அழகு இருக்க வேண்டும்.


யாழமுடைத் தாதல் = ஆழம் உடைத்தாதல். ஆழமான பொருள் இருக்க வேண்டும். சும்மா நுனிப் பபுல் மேயக் கூடாது

முறையின் வைப்பே = சொல்வதை முறைப்படுத்திச் சொல்ல வேண்டும். ஒரு ஒழுங்கு வேண்டும். முன்னுக்கு பின் அலைக்கழிக்கக் கூடாது.  உயர்ந்தவற்றை முதலில் சொல்லி, மற்றவற்றை பின்னால் சொல்ல வேண்டும். ஆசிரியரும் மாணவர்களும் வந்தார்கள் என்று சொல்ல வேண்டும். மாறாக, மாணவர்களும் ஆசிரியரும் வந்தார்கள் என்று சொல்லக் கூடாது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முறைமையில் மாதாவுக்கு முதல் இடம், தெய்வத்துக்கு நாலாவது இடம். முதல் அமைச்சர் அவருடைய செயலாளரோடு வந்தார் என்று சொல்ல வேண்டும். செயலாளர், முதலமைச்சரோடு வந்தார் என்று சொல்லக் கூடாது.



யுலகமலை யாமை  = உலகம் மலையாமை?  உலகமே மலைக்கும் படி சொல்லக் கூடாது. மலைத்தல் என்றால் , 'இது எப்படி இப்படி இருக்க முடியும் " என்று திகைக்க வைக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக விளக்கி ஒரு பெரிய பொருளை  விளங்கச் செய்ய வேண்டும்.

விழுமியது பயத்தல்  = சிறப்பானவற்றை சொல்ல வேண்டும். ஒரு நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை சொல்கிறோம் என்றால், இந்த வருடம் என்ன சாதித்தோம் என்று சொல்ல வேண்டும், என்ன புதிதாக செய்தோம் என்று சொலல் வேண்டும்.. ஒரு பொருளை விற்கிறோம் என்றால், அந்தப் பொருளின் சிறப்பு என்ன என்று சொல்ல வேண்டும்.

விளங்குதா ரணத்ததாகுதல்  = விளங்கு உதாரணத்து ஆகுதல். அதாவது, கடினமான ஒன்றை எளிய உதாரணம் மூலம் சொல்லி விளக்க வேண்டும்.

னூலிற் கழகெனும் பத்தே. = நூலினிக்கு அழகெனும் பத்தே. இந்த பத்தும் ஒரு நூலுக்கு அழகு சேர்ப்பவை.

நூல் என்றால் நூலோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. பேச்சு, presentation என்று  அதை நீட்டிக் கொள்ளலாம்.

அடுத்த முறை பேசுவதற்கு முன்போ, ஏதாவது ரிப்போர்ட் அனுப்பும் முன்போ, presentation தருவதற்கு முன்போ, இந்த 10 விதிகளும் கடை பிடிக்கப் பட்டு இருக்கிறதா என்று பாருங்கள்.

ஒவ்வொரு தடவையும் இவற்றைக் கொண்டு சரி  பார்த்துக் கொண்டே இருந்தால், நாளடைவில் அழகாக எழுதுவது என்பது தானே வந்து விடும்.


சொன்னால் மட்டும் போதாது. அழகாகவும் சொல்ல வேண்டும்.

இது நல்லா இருக்கா ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_73.html

பெரிய புராணம் - தாங்க ஒண்ணா துன்பம் வந்த போது

பெரிய புராணம் - தாங்க ஒண்ணா துன்பம் வந்த போது 


எப்படியோ துன்பம் வந்து விடுகிறது. நம் பிழை என்று இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு விதத்தில் துன்பம் வந்து நம்மை வேதனை செய்கிறது.

துன்பம் வந்து விட்டால், தளர்ந்து போகிறோம். என்ன செய்யப் போகிறோம், இதில் இருந்து எப்படி மீழ்வது என்று தவிக்கிறோம்.

துன்பமே இல்லாத வாழ்வு இருக்கக் கூடாதா என்று ஏங்குகிறோம்.

இன்பம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை , இந்த துன்பம் வரமால் இருந்தால் சரி என்று நினைக்கிறோம்.

நாமாவது இந்த உலக வாழ்க்கையில் ஈடுபட்டு, ஏதேதோ செய்கிறோம். தெரிந்தோ தெரியாமலோ தவறு நிகழ்ந்து விடலாம். தெரியாமல் யாரையாவது மனம் புண்பட பேசி இருப்போம். தெரிந்து அல்ல, தெரியாமல். தெரியாமல் குடித்தால் நஞ்சு நம்மைக் கொல்லாதா. செய்த வினைக்கு மறு வினை வரும் தானே?

அப்பர், சுந்தரர், மணிவாசகர் போன்ற பெரியவர்கள் படாத பாடு பட்டிருக்கிறார்கள்.

சிறு வயதில், சைவ சமயம் விட்டு, சமண சமயத்தில் சேர்ந்து விட்டார் அப்பர். அவருடைய தமக்கையார், பெயர் திலகவதியார். திலகவதியார் ஒரு நாள் சிவனிடம் முறையிட்டார் ..."என் தம்பி இப்படி போய் விட்டானே, அவனுக்கு நல்ல புத்தியை கொடுத்து நீ தான் அவனை நல் வழிப் படுத்த வேண்டும் " என்று  மனம் உருகி வேண்டினார்.

சிவன், அவருடைய கனவில் வந்து சொன்னார், "உன் தம்பி முன்பே என்னை நோக்கி தவம் செய்திருக்கிறான். அவனுக்கு சூலை நோயை கொடுத்து நல் வழிப் படுத்துவோம்" என்று.

சிவன் நினைத்தால், நாவுக்கரசரை மனம் மாறச் செய்ய முடியாதா? தாங்க முடியாத வயிற்று வலியை கொடுத்தார். நாவுக்கரசர் வலி தாளாமல் துடித்தார்.

அந்த வலி வந்ததால், அவர் தன்னுடைய தமக்கையை நோக்கி வந்தார்.  பின் சைவ சமயத்தை  வந்து அடைந்தார். தேவாரம் பாடினார்.

செய்தி அதுவல்ல.

துன்பம் வரும் போது , தோல்வி வரும் போது தவிக்கிறோம். துவள்கிறோம். அது எல்லாம் சரி.  அந்த துன்பம் கூட, தோல்வி கூட ஏதோ ஒரு பெரிய நன்மைக்கு  என்று நாம் நினைக்க வேண்டும்.

தோல்வியை கண்டு துவண்டு விடக் கூடாது. ஏதோ ஒரு மிகப் பெரிய வெற்றியைத் தரவே  இறைவன்/இயற்கை இந்த தோல்வியை/துன்பத்தை நமக்குத் தந்திருக்கிறது என்று நினைக்க வேண்டும்.

சுடு மணலில் , செருப்பு இல்லாமல் நிற்க வைத்தார்கள் மணி வாசகரை.

தாள முடியாத வயிற்று வலியால் துன்பப் பட வைத்தார் நாவுக்கரசரை.

அந்தத் துன்பங்களுக்கு பின்னால், அவர்கள் பக்தி உலகுக்குத் தெரிந்தது.

ஏதோ ஒன்றை வெளிக் கொணரவே துன்பங்களும், தோல்விகளும், அவமானங்களும்  வருகின்றன என்று நம்ப வேண்டும். அவற்றை வென்று  முன்பு இருந்ததை விட பெரிய  , உயரிய நிலைக்குப் போக வேண்டும்.



பாடல்

மன்னுதபோ தனியார்க்குக் கனவின்கண் மழவிடையார்
"உன்னுடைய மனக்கவலை பொழிநீ;யுன் னுடன்பிறந்தான்
 முன்னமே முனியாகி யெனையடையத் தவமுயன்றான்
 அன்னவனை யினிச்சூலை மடுத்தாள்வ"மெனவருளி,


பொருள்


மன்னு = நிலைத்த

தபோதனியார்க்குக் = தவம் புரிந்த அந்த பெண்மணிக்கு

கனவின்கண் = கனவில்

மழவிடையார் = மழு என்ற ஆயுதத்தைக் கொண்ட சிவனார்

"உன்னுடைய = உன்னுடைய

மனக்கவலை = மனக் கவலையை

பொழிநீ; = ஒழி நீ

யுன்னுடன்பிறந்தான் = உன் உடன் பிறந்தான் (நாவுக்கரசர்)

முன்னமே = முன்பு, முந்தைய பிறவியில்

முனியாகி  = முனிவனாகி

யெனையடையத் = என்னை அடையத்

தவமுயன்றான் = தவ முயற்சிகள் மேற் கொண்டான்

அன்னவனை = அவனை

யினிச் = இனி

சூலை = சூலை நோய் (கொடிய வயிற்று வலி)

மடுத்தாள்வ = மடுத்து ஆள்வோம்

"மெனவருளி, = என்று அருளினார்

பரீட்சை வைத்துதானே மார்க் போட முடியும். மார்க் வாங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஐயோ பரீட்சை வந்து விட்டதே என்று அலறினால் என்ன அர்த்தம்.

கொஞ்சம் படித்தவுடன் , ஒரு பரீட்சை வரும். அதில் தேறினால், மேலும் படிக்கலாம்,  அதில் இன்னொரு பரீட்சை வரும்.

பரீட்சை கொஞ்சம் கடினம் தான். இருந்து படிக்க வேண்டும், எழுத வேண்டும்.

வாழ்க்கையும் அப்படித்தான். அப்பப்ப சோதனைகள் வரும்.

சோதனை வரும் என்று எதிர் பார்த்து அதற்கு நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்.

ஒன்றும் படிக்காமல் பரீட்சை எழுதப் போனால், எப்படி. நடுக்கம் வரத்தான் செய்யும்.

அடுத்து என்ன சோதனை வரும் என்று எண்ணிப் பாருங்கள். அதை எப்படி சமாளிப்பது என்று  திட்டம் போடுங்கள்.

நம்மை தினமும் தயார் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி செய்தால், எளிதாக தேர்ச்சி பெற முடியும். இல்லை என்றால், கையில்  வினாத்தாளை வைத்துக் கொண்டு திரு திரு என்று முழிக்க வேண்டியதுதான்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_11.html