Monday, October 23, 2023

கம்ப இராமாயணம் - அவனோடு உனக்கு என்ன உறவு ?

 கம்ப இராமாயணம் - அவனோடு உனக்கு என்ன உறவு ?


உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியாத தனிமை மிகக் கொடுமையானது. 


ஆணோ, பெண்ணோ, அவர்களின் உணர்வுகளை தங்களின் துணையிடம் தானே பகிர்ந்து கொள்ள முடியும். 


சோகம் என்ன என்றால், இராமனும் சீதையும் பிரிந்து இருக்கிறார்கள். இராமன் யாரிடம் சொல்லி தன் உணர்சிகளை பகிர்ந்து கொள்வான்?


இராமனின் சோகத்தை நம் மமீது ஏற்றுகிறான் கம்பன். 


தென் கடற்கரையில், தனியாக நிற்கும் இராமனை முதலில் தென்றல் வருத்தியது, பின் பவளம் வருத்தியது, இங்கு, இப்போது முத்து வருத்துகிறது. 


பவளம், சீதையின் உதடுகளை ஞாபகப் படுத்தி அவனை வருத்தியது. 


முத்து, சீதையின் பல் வரிசையை நினவு படுத்தி வருத்துகிறது. 


கம்பன், அந்த முத்தைப் பார்த்து கேட்கிறான் 


"ஏய் முத்தே, 


சீதை இருக்கும் தூரம் ரொம்பத் தொலைவு இல்லை.  எப்படியாவது இராவணனை வென்று சீதையை மீட்டு வந்து விடலாம் என்று அவன் வீரம் துணை நிற்க. ஒரு பக்கம் நம்பிக்கை, இன்னொரு பக்கம் வீரம் என்று இருந்தாலும், பிரிவும் அவனை வாட்டுகிறது. நாளும் மெலிந்து போகிறான்.

அப்படி இருக்க, எதற்காக சீதையின் பல் வரிசையை ஞாபகப் படுத்தி அவனை நீ வதைக்கிறாய். ஒரு வேளை இராமனை துன்பம் செய்வதால் உனக்கும் அந்த அரக்கர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறாதா" 


என்று. 


பாடல் 




தூரம் இல்லை, மயில் இருந்த சூழல்' என்று மனம் செல்ல,

வீர வில்லின் நெடு மானம் வெல்ல, நாளும் மெலிவானுக்கு,-

ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு? -ஏழை

மூரல் முறுவல் குறி காட்டி, முத்தே! உயிரை முடிப்பாயோ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_23.html


(pl click the above link to continue reading)


தூரம் இல்லை = ரொம்ப தூரம் இல்லை 


மயில் இருந்த சூழல் = மயில் போன்ற சீதை இருக்கும் இடம் 


என்று மனம் செல்ல = என்று இராமனின் மனம் சொல்ல 


வீர வில்லின் = வீரம் நிறைந்த வில்லின் 


நெடு மானம் வெல்ல = வென்று விடலாம் என்ற ஆண்மை கொப்பளிக்க 


நாளும் மெலிவானுக்கு = நாளும் மெலிகின்ற இராமனுக்கு 


ஈரம் இல்லா  = மனதில் ஈரம் (கருணை ) கொஞ்சம் கூட இல்லாத 


நிருதரோடு = பகைவர்களோடு 


என்ன உறவு உண்டு உனக்கு = உனக்கு என்ன உறவு ? 


ஏழை = சீதையின் 


மூரல் முறுவல் = பல் தெரியும் புன்சிரிப்பைக்


குறி காட்டி = குறித்து ஞாபகப் படுத்தி 


முத்தே = முத்தே 


உயிரை முடிப்பாயோ? = அவன் உயிரை முடிப்பது என்றே முடிவு செய்து விட்டாயோ ?


ஆண்கள் கவலைப் படுவதை பற்றி பல கதைகளில் படித்து இருக்கிறோம். 


ஆனால் அது பொதுவாக அரசு பறிபோனது, போரில் தோல்வி, வியாபாரத்தில் நட்டம், உடல் நிலை, என்று இருக்கும். 


மனைவியை பிரிந்த கணவனின் சோகத்தை அதிகமாக பார்க்க முடியாது. 


காதலனைப் பிரிந்த காதலியின் சோகம், கணவனை பிரிந்த மனைவியின் சோகம் எளிதாக காணக் கிடைக்கும். 


உடல் மெலிந்து, வளையல் கழண்டு, இடுப்பில் ஆடை நிற்காமல் நெகிழ என்று பிரிவு ஒரு பெண்ணை வாட்டுவதை விவரித்து காட்டும் இலக்கியம் பல. 


மனைவியப் பிரிந்த கணவன் உடல் மெலிந்தான் என்று எங்காவது இருக்கிறதா? 


இராமன் நாளும் மெலிந்தான் என்று கம்பன் மீண்டும்  மீண்டும் சொல்கிறான். 


அதுவும், யுத்த காண்டத்தின் முன்னுரையில்....




Saturday, October 21, 2023

திருக்குறள் - ஈகை - இரக்கப்படுவது தவறு

 திருக்குறள் - ஈகை - இரக்கப்படுவது தவறு 


என்னது, இரக்கப்படுவது தவறா? 


ஒருவன் வறுமையில் வாடுகிறான் என்றால் அவனைப் பார்த்து இரக்கபடுவது எப்படி தவறாகும். அப்படி இரக்கப்படாவிட்டால் அவனுக்கு எப்படி உதவி செய்யவேண்டும் என்று தோன்றும்?


ஆனால் வள்ளுவர் சொல்கிறார் இரக்கப்படுவது தவறு என்று. 


இது என்ன புதுக் கதையாக இருக்கிறது?


பாடல் 


இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகம் காணும் அளவு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_21.html


(pl click the above link to continue reading)


இன்னாது = இனியது என்பதன் எதிர்பதம் இன்னாது. அதாவது, நல்லது அல்ல, கெட்டது 


இரக்கப் படுதல் = ஒருவர் மேல் இரக்கம் கொள்வது 


இரந்தவர் = நம்மிடம் உதவி என்று கேட்டு வந்தவர் 


இன்முகம் காணும் அளவு = இனிய முகத்தை காணும் வரை 


யோசித்துப் பாருங்கள். 


வீட்டில் வேலை பார்க்கும் பெண், தன்னுடைய மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப் பட்டு இருக்கிறது, ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று நம்மிடம் கேட்கிறாள். வேலை செய்யும் பெண் நல்லவள். அவளுடைய மகளையும் நாம் பார்த்து இருக்கிறோம். நல்ல பெண். பாவமாக இருக்கிறது. பணம் இல்லை என்றால் திருமணம் நடக்காது. அந்தப் பெண்ணின் வலி நமக்குத் தெரிகிறது. 


சரி, இந்தா என்று ஒரு பத்து உரூபாய் கொடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். 


அந்தப் பெண்ணின் வலி தீர்ந்து விடுமா? பிரச்சனை தீர்ந்து விடுமா? வேண்டாம் என்று சொல்ல மாட்டாள். ஆனால், அவள் முகத்தில், அவள் வலியில், ஒரு மாற்றமும் இருக்காது. அவளைப் பார்க்கும் போது நமக்கு என்ன தோன்றும்? அப்பாட, ஒருவழியாக அந்த பெண்ணின் பிரச்சனையை தீர்த்து  விட்டோம் என்று ஒரு நிம்மதி வருமா?  


வராது. 


அவள் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு ஒரு சங்கடம் வரும். 


வள்ளுவர் சொல்கிறார், நம்மிடம் உதவி என்று ஒருவன் கேட்டு வந்தால், அவன் முகம் மாறி, சிரித்த முகமாக மாறும் வரை உதவி செய்ய வேண்டும். 


அது வரை, இரக்கப் படுகிறேன் என்று சொல்லுவது நமக்குத் துன்பம் தரும் ஒன்றுதான். 


மேலே சொன்ன உதாரணத்தில், அந்த வேலைக்கார பெண்ணிடம், "இந்தா இதை கல்யாண செலவுக்கு வைத்துக் கொள்" என்று ஒரு பத்தாயிரம் கொடுத்தால் , அவள் முகம் மலரும் தானே. "ரொம்ப நன்றிமா/நன்றி ஐயா" என்று கண்ணீர் மல்க சொல்லிவிட்டுப் போவாள். 


அப்படி அவள் முகம் மலர்ந்து, இனிமையானதாக மாறும்வரை, இரக்கப் படுவது நமக்கும் துன்பம் தருவதுதான் என்கிறார். 


இதெல்லாம் கேக்க நல்லா இருக்கு. இரசிக்கலாம். நடைமுறையில் சாத்தியமா என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்ல ஆசை. 


நல்ல விதை என்றாலும், போடுகின்ற இடத்தில் எல்லாம் விளைவது இல்லை. நல்ல நிலத்தில் விழுந்தால், அது முளைத்து பலன் தரும். 


திருக்குறள் ஒரு நல்ல விதை. அது எந்த மனத்தில், எந்த நிலத்தில் விழுகிறது என்பதைப் பொறுத்து அது எப்படி வளரும் என்பது. 


அது முடியாது, இது சாத்தியம் இல்லை, இது நடைமுறைக்கு ஒத்து வராது என்று படிப்பதை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால்,  ஒன்றும் விளையாத உவர் நிலமாகப் போய் விடும் மனம். 


மனதை பண் படுத்தி வைப்போம், விதை விழுந்தால் முளைக்கும். மனதை கட்டாந்தரையாக மாற்றி வைத்து இருந்தால் ஒரு விதையும் முளைக்காது. 




Friday, October 20, 2023

கம்ப இராமாயணம் - உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ ?

கம்ப இராமாயணம் - உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ ?


வானர படைகளோடு தென் இந்தியாவின் கடற்கரையில் இராமன் வில்லோடு தனித்து நிற்கிறான். 


தனியனாய் - மனைவியைப் பிரிந்து.


யாரிடம் சொல்ல முடியும்?  சில சோகங்களை வெளியே சொல்ல முடியாது. உள்ளுக்குள் வைத்துக் கொண்டு மறுக வேண்டியதுதான் .


"கடற்கரையில் பவளக் கொடி படர்ந்து இருக்கிறது. அதில் பவளம் இருக்கிறது. பவளம் சிவப்பாக இருக்கும். அந்தப் பவளம் இராமனை பார்க்கிறது. மலை போல உயர்ந்த தோள்கள். மெலிந்த உருவம். பவளத்தை, இராமன் பார்க்கிறான். சீதையின் உதடு போல சிவந்து இருக்கிறது.  அதைப் பார்க்கும் போது இராமனுக்கு சீதையின் நினைவு மேலும் எழுகிறது. சோகம் அவனை கொல்கிறது. ஆனால், அந்த பவளத்துக்கு, நாம் இராமனை இப்படி வதைக்கிரோமே என்ற கவலை ஒன்றும் இல்லை..."


பாடல் 


சிலை மேற்கொண்ட திரு நெடுந் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப,

நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன் தன்முன், படி ஏழும்

தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் என்ன, தனித் தோன்றி,

கொலை மேற்கொண்டு, ஆர் உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ-கொடிப் பவளம்?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_20.html


(please click the above link to continue reading)


சிலை மேற்கொண்ட = கையில் வில்லை ஏந்தி நிற்கும் 


திரு = சிறந்த 


நெடுந் தோட்கு = நெடிது உயர்ந்து தோள்களுக்கு 


உவமை = உவமையாக 


மலையும்  = மலையை 


சிறிது ஏய்ப்ப = சிறிது உவமையாக சொல்லும்படி 


நிலை மேற்கொண்டு = நிலைத்து நின்ற, அசையாமல் நின்ற 


மெலிகின்ற = உடல் மெலிந்து 


நெடியோன் = உயர்ந்து நிற்கும் இராமன் 


தன்முன் = முன் 


படி ஏழும் = உலகம் ஏழும் 


தலை மேல் கொண்ட = தலையின் மேல் வைத்துக் கொண்டாடும் 


கற்பினாள் = கற்பினை உடைய 


மணி வாய் என்ன = சீதையின் ஒளி வீசும் அதரங்களைப் போல 


தனித் தோன்றி = தனித்துத் தோன்றி 


கொலை மேற்கொண்டு = கொலைத் தொழிலை கொண்டு 


ஆர் உயிர் குடிக்கும் = உயிரை குடிக்கும் 


கூற்றம் கொல்லோ = கூற்றம் (எமன்) போன்றதோ 


கொடிப் பவளம் = இந்த கொடி பவளம் 


அரசை இழந்து,  மனைவியை இழந்து, தனித்து நிற்கும் இராமன். 


அப்பா, அம்மாவின் கட்டளை, அதை செய்து முடிக்க வேண்டிய கடமை ஒரு புறம். 


மனைவியை இழந்த சோகம் மறு புறம். 


அரசனாக, ஒரு வீரனாக, எதிரியை வீழ்த்தி மனைவியை மீட்க வேண்டிய கடமை மறுபுறம். 


இதை எல்லாம் பகிர்ந்து கொள்ளக் கூட முடியாத சோகம் மறுபுறம். 


இராமனை அந்தப் புள்ளியில் காலம் நிறுத்தி இருக்கிறது. 


அவன் என்ன செய்யப் போகிறான்? 




 


Thursday, October 19, 2023

நீதி நெறி விளக்கம் - ஆணியே புடுங்க வேண்டாம்

நீதி நெறி விளக்கம் - ஆணியே புடுங்க வேண்டாம் 


சில விடயங்கள் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல். 


அது என்ன விடயங்கள்?


நிறைய படித்து இருப்பான். ஒரு சபையில், நாலு பேர் முன்னால் படித்ததை சொல் என்றால் நடுங்குவான். அவையைக் கண்டால். அப்படிப் பட்டவன் படிப்பதை விட படிக்காமல் இருப்பதே மேல். 


சில பேர் மிக அழகாக பேசுவார்கள். அடுக்கு மொழி, எதுகை மோனை, குரலில் ஏற்ற இறக்கம், நகைச்சுவை எல்லாம் இருக்கும். ஆனால் அவர்கள் பேச்சில் ஒரு துளியும் பயன் இருக்காது. ஏதோ கேட்டோம், இரசித்தோம், சிரித்தோம் என்று வர வேண்டியதுதான். கல்வி அறிவு இல்லாதவன் பேசுவதை விட பேசாமல் இருப்பது நல்லது. 


சில பேர் எச்சில் கையால் காக்கை ஓட்ட மாட்டார்கள். ஒருத்தருக்கு ஒரு பைசா தந்து உதவி செய்ய மாட்டான். அவனிடம் செல்வம் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல். 


சில பேர் எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்வார்கள். ஆனால், கையில் அவ்வளவாக செல்வம் இருக்காது. அவனிடம் உள்ள வறுமை, அது இல்லமால் இருப்பதே நல்லது. 


பாடல்  


அவை அஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்

அவை அஞ்சா ஆகுலச் சொல்லும் - நவை அஞ்சி

ஈத்து உண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன் நலமும்

பூத்தலின் பூவாமை நன்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_42.html


(pl click the above link to continue reading)


அவை அஞ்சி = அவையை அஞ்சி அல்லது அவைக்கு அஞ்சி. (அவை = சபை, கூட்டம்) 


மெய்விதிர்ப்பார் = உடம்பு உதறும் 


கல்வியும் = கற்ற கல்வியும் 


கல்லார் = படிக்காதவன் 


அவை அஞ்சா = சபைக்கு கொஞ்சம் கூட பயம் இல்லாமல் 


ஆகுலச் சொல்லும் = ஆரவாரமாக பேசும் பேச்சும் 


நவை அஞ்சி = பாவத்துக்குப்   பயந்து, குற்றத்துக்குப் பயந்து 


ஈத்து உண்ணார் செல்வமும் = பிறருக்கு கொடுத்து, தான் உண்ணாதவன் செல்வமும் 


நல்கூர்ந்தார் = வறுமையில் வாடும் நல்லவர்களின்  


இன் நலமும் = இனிய குணமும் 


பூத்தலின் பூவாமை நன்று = இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல் 


ஏன் என்றால் அதனால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை. அது இருந்தாலும் ஒண்ணுதான் இல்லாவிட்டாலும் ஒண்ணுதான். 


படிக்காதவனுக்கு, நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லத் தெரியாது.எனவே சொல்ல மாட்டான். படித்தவனுக்கு சபையை கண்டால் பயம், எனவே அவனும் சொல்ல  மாட்டான். இரண்டுக்கும் என்ன வித்தியாசம். படிக்காமல் இருந்திருந்தால், அந்த நேரமாவது மிச்சமாயிருக்கும். 


எல்லாருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த குணம் இருக்கும். கையில் காலணா இருக்காது. அந்த நல்ல குணத்தால் யாருக்கு என்ன பயன்?  


உலோபியின் செல்வத்தால் என்ன பயன். அந்த செல்வம் அவனிடம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? 


எனவே, படித்தால் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும், செல்வம் சேர்த்தால், மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும் என்பது பெறப் பட்டது. 




திருக்குறள் - எவ்வம் உரையாமை

திருக்குறள் - எவ்வம் உரையாமை 


மற்றவர்களுக்கு உதவி செய்வது நல்லது. 


இது எல்லா நாட்டினரும், மதத்தினரும் ஏற்றுக் கொண்டுள்ள ஒரு நடைமுறை உண்மை. 


ஆனால், தமிழர்கள் அதை அறமாக கொண்டிருந்தார்கள். ஈகை செய்வது ஏதோ ஒரு வாய்ப்பு (option) அல்ல. செய்தே ஆக வேண்டும், அது இல்லறம் என்று வகுத்தார்கள். 


சரி, ஈகை செய் என்றால் எவ்வளவு செய்வது? 


சில மதங்களில் ஒரு குறிப்பிட்ட பங்கை கொடு என்று குறிப்பிடப்படுகிறது. 


வள்ளுவர் உச்சம் தொடுகிறார். இப்படி கூட ஒருவன் சிந்திக்க முடியுமா என்று வியக்கும் அளவுக்கு  அதைச் சொல்கிறார். 


பாடல்  


இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலன்உடையான் கண்ணே உள


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_19.html


(pl click the above link to continue reading)


இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலன்உடையான் கண்ணே உள


பொருள் 


இலன்என்னும்  = இல்லை என்று சொல்லும் 


எவ்வம் = துன்பம் 


உரையாமை = சொல்லாமல் இருத்தல் 


ஈதல் = கொடுத்தல் 


குலன்உடையான் = நல்ல குடியில் பிறந்தவன் 


கண்ணே உள = இடத்தில் மட்டும் தான் இருக்கும். 


நல்ல குடும்பத்தில் பிறந்தவன் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பான் என்கிறது குறள்.


இதில் என்ன பெரிய அர்த்தம் இருக்கிறது? இதுக்கு எதுக்கு அவ்வளவு build  up என்று நீங்கள் நினைக்கலாம். 


பரிமேலழகர் உரையைப் பார்ப்போம். 


"இலன் என்று" 


சில பேர், பிச்சைக்காரன் பிச்சை கேட்டால், சில்லறை "இல்லை", பொ போ போ என்று விரட்டி விடுவார்கள். பிச்சைக்காரன் தன்னிடம் இல்லை என்று கேட்டால், இவனும் தன்னிடம் இல்லை என்கிறான். இதில் யார் பெரிய பிச்சைகாரன்? 


இல்லை என்று ஒருவன் வந்தால், அவனிடம், என்னிடமும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்க வேண்டும். 


இரண்டாவது, 


ஒருவன் நம்மிடம் வந்து இல்லை என்று அவன் சொல்லுவதற்கு முன்னே கொடுக்க வேண்டும்.  தெருவில் பிச்சைக்காரன் நிற்கிறான். பார்த்தாலே தெரிகிறது அவன் சரியாக சாப்பிட்டு பல நாள் ஆகியிருக்கும் என்று. அவன் நம்மிடம் வந்து "எனக்கு சாப்பிட காசு "இல்லை" ஏதாவது பிச்சை போடுங்கள்" என்று சொல்லுவதற்கு முன் கொடுத்துவிட வேண்டுமாம். 


வீட்டில் வேலை பார்க்கும் பெண், அவளுடைய மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்த செய்தியை சொல்கிறாள். அவளுக்கு கட்டாயம் பணம் தேவைப்படும் என்று அறிந்து, அவள் கேட்கும் முன்னே கொடுக்க வேண்டும். உதவி செய்கிறேன் பேர்வழி என்று "சரி இந்தா பத்து உரூபாய், இதை வைத்து கல்யாணத்தை சிறப்பாக நடத்து" என்று சொல்வது சரியா? அதற்கும் பதில் சொல்கிறார் வள்ளுவர், மூன்றாவது அர்த்தம் என்ன என்று பாருங்கள். 


உதவி கேட்பது என்பது மிகவும் வருத்தமான செயல். அதை செய்ய விடக் கூடாது.  உலகளந்த பெருமாள் கூட மூன்றடி நிலம் யாசகம் கேட்க்க வந்த போது கூனி குறுகி, குள்ள வாமன அவதராமாக வந்தார். 


ஈகை என்ற தத்துவத்தை கொஞ்சம் நாம் விரிவுபடுத்தினால், நண்பர் வீட்டில் யாருக்கோ உடம்பு சரி இல்லை. மருத்துவ மனையில் அனுமதித்து இருக்கிறார்கள். அவர் கூப்பிட்டு கேட்க வேண்டும் என்று அல்ல, நாமே போய் நிற்க வேண்டும். நான் பார்த்துக் கொள்கிறேன், நீ போய் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள் என்று முன்னே போய் நிற்க வேண்டும். இது ஈகை இல்லைதான் என்றாலும், சற்று விரித்து சிந்தித்தால் தப்பு இல்லையே. 



மூன்றாவது, 


பசி என்று ஒருவன் வந்து யாசகம் கேட்கிறான். அவனுக்கு ஒரு ஒரு உரூபாய் தானம் கொடுப்பது. அதை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்ய முடியும்? ஒரு காப்பி கூட குடிக்க முடியாது.  அவன் மேலும் பத்து பேரிடம் சென்று "எனக்கு பசிக்கு காசு இல்லை, உதவி செய்யுங்கள் " என்று கேட்க வேண்டும். நம்மிடம் ஒருவன் உதவி என்று வந்து கேட்டால் அவன் மற்றொருவரிடம் சென்று "இல்லை" , மேலும் உதவி வேண்டும் என்று கேட்க்கக் கூடாது. அப்படி உதவி செய்ய வேண்டும் .


உதாரணமாக, பசி என்று ஒருவன் வந்தால், அவன் வயிறார உணவு இட வேண்டும். நன்றாக சாப்பிட்டுவிட்டால் பின் ஏன் இன்னொருவரிடம் சென்று உணவு இல்லை என்று சொல்லப் போகிறான். சில மணி நேரம் கழித்து மீண்டும் பசிக்கும், அப்போது சொல்வான். அது வேறு விடயம். முடிந்தால் அவன்  யாரிடமும் எப்போதும் இல்லை என்று சொல்லாத வண்ணம் உதவி செய்யலாம். 


மூன்று விடயங்கள் சொல்கிறார்: 


முதலாவது, ஒருவன் இல்லை என்று சொல்லும் முன் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் .


இரண்டாவது, இல்லை என்று வந்தவனிடம் என்னிடமும் இல்லை என்று சொல்லாமல் உதவி செய்ய வேண்டும். 


மூன்றாவது, நம்மிடம் இல்லை என்று வந்தவன், வேறு யாரிடமும் அந்தச் சொல்லை சொல்லா வண்ணம் உதவி செய்ய வேண்டும். 


இதை எல்லாம் சொல்லிவிட்டு, வள்ளுவர் ஒரு குறிப்பும் வைக்கிறார். 


இப்படி யார் செய்வார்கள் என்றால், நல்ல குடியில் பிறந்த ஒருவனால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும் என்கிறார். 


அப்படிச் செய்யாவிட்டால் நாம் எந்த குடியில் பிறந்தவர்கள் என்று நாமே முடிவு செய்து கொள்ளலாம். 


எல்லோருக்கும், தங்கள் குலம், குடி, குடும்பம் உயர்ந்தது என்று சொல்லிக் கொள்ளத் தானே ஆசை இருக்கும். அப்படியானால், இதைச் செய் இல்லை என்றால் நீ மட்டும் அல்ல உன் குலமே கீழான குலம். அப்புறம் உன் இஷ்டம் என்று விட்டு விடுகிறார் வள்ளுவர். 


இப்போது சொல்லுங்கள். வியப்பாக இல்லை? எவ்வளவு ஆழமாக , அழகாக, இத்தனை சுருக்கமாக சொல்லி இருக்கிறார் என்று....


    


Wednesday, October 18, 2023

நீதி நெறி விளக்கம் - கல்வி

 நீதி நெறி விளக்கம் - கல்வி 


ஒரு பொருளைச் சிறப்பித்து கூற வேண்டும் என்றால், அதை விட உயர்ந்த ஒன்றைச் சொல்லி, அது போல இது இருக்கிறது என்று கூறுவது மரபு. 


உதாரணமாக, ஒரு பெண்ணின் முகம் அழகாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்றால், அது நிலவு போல இருக்கிறது, தாமரை மலர் போல இருக்கிறது என்று சொல்வது மரபு. 



கல்வின்னா என்ன, அதை அடைவதால் என்ன பலன், என்ன சுகம், அது இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும் என்று எப்படி விளக்குவது? படித்து அறிவு பெற்றால் நல்லது என்று சொன்னால் என்ன புரியும்?  மலங்க மலங்க விழிக்க வேண்டியதுதான். 


அதைவிட சிறந்த ஒன்றை உதாரணமாகச் சொல்லி விளங்க வைக்கிறார்.


கல்வியை விட சிறந்தது எது ?


ஒருவனுக்கு வாழ்வில் மிகுந்த இன்பத்தைத் தரக்கூடியது எது என்று சிந்திக்கிறார். 


அன்புள்ள மனைவி, அருமையான பிள்ளைகள், தேவையான அளவு செல்வம்.. இதைத் தவிர வேறு என்ன என்ன வேண்டும். கல்வி இந்த மூன்றுக்கும் ஒப்பானது என்கிறார். 


பாடல் 



கல்வியே கற்பு உடைப் பெண்டிர் அப்பெண்டிர்க்குச்

செல்வப் புதல்வனே தீங்கவியாச் - சொல்வளம்

மல்லல் வெறுக்கையா மாண் அவை மண்ணுறுத்தும்

செல்வமும் உண்டு சிலர்க்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_18.html


(pl click the above link to continue reading)



கல்வியே = கல்விதான் ஒருவனுக்கு 


கற்பு உடைப் பெண்டிர்  = கற்பு உள்ள மனைவி 


அப்பெண்டிர்க்குச் = அந்த அன்பான மனைவியின் 


செல்வப் புதல்வனே = அருமையான பிள்ளையே 


தீங்கவியாச் = கல்வியால் பிறக்கும் அழகான கவிதை 


சொல்வளம் = அந்தக் கவிதையில் உள்ள சொல் வளம் (அர்த்தம், அழகு, நயம்) 


மல்லல் வெறுக்கை = மிகுந்த செல்வம் 


யா = அவை 


மாண் அவை மண்ணுறுத்தும் = மற்றவருக்குச் சொல்லுதல் 


செல்வமும் = அந்த செல்வமும் 


உண்டு சிலர்க்கு = உண்டு சிலருக்கு 


அன்பான மனைவி, அருமையான பிள்ளைகள், செல்வச் சிறப்பு இது ஒரு புறம். 


கல்வி, கல்வியால் விளையும் கவிதை, அந்தக் கவிதையை சபையில் மற்றவர்க்கு சொல்லும் ஆற்றல் இது மறு புறம். 


அன்பான மனைவி இருந்தாலும், பிள்ளை இல்லாவிட்டால் அந்த இல்லறம் சிறக்குமா?  கணவன் மனைவி அன்பாகத்தான் இருக்கிறார்கள். குழந்தை இல்லை என்றால் எவ்வளவு தவிக்கிறார்கள். எத்தனை கோவில், எத்தனை மருத்துவம் ? 


செல்வம் இருக்கலாம். அதை மற்றவருக்கு கொடுக்கும் குணம் எத்தனை பேருக்கு இருக்கும். படிப்பார்கள். இரசிப்பார்கள். அதை மற்றவர்களோடு அவர்களுக்கு புரியும்படி சொல்லும் திறம் எத்தனை பேருக்கு இருக்கும். 


கல்வி கற்றால் மட்டும் போதாது, அதை கவிதை/கட்டுரை போன்றவற்றின் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும்  ஆற்றலும் வேண்டும். அப்போதுதான் கல்வி பூரணப்படும் என்கிறார். 


மனைவியும் வேண்டும், பிள்ளைகளும் வேண்டும், செல்வமும் வேண்டும், அந்த செல்வம் எல்லோருக்கும் பயன்படவும் வேண்டும். 


கல்வியும் வேண்டும், அது கவிதை, கட்டுரையாக வெளிப்படவும் வேண்டும், அதுவும் மற்றவர்களுக்கு பயன்படவும் வேண்டும். 




Tuesday, October 17, 2023

திருக்குறள் - ஈகை - கொடுக்கல் வாங்கல்

 திருக்குறள் - ஈகை - கொடுக்கல் வாங்கல் 


ஈகை, அதாவது மற்றவர்களுக்கு கொடுப்பது, நல்லது. 


சரி. ஏற்றுக் கொள்ளலாம். 


வாங்குவது நல்லதா? ஒருவர் நமக்கு ஏதோ ஒன்றைத் தருகிறார் என்றால், அதை வாங்கிக் கொள்வது நல்லதா? ஈகை என்றால் கொடுப்பதும், வாங்குவதும் இருக்கும் தானே. வாங்க யாரும் இல்லை என்றால் எப்படி ஈகை ஒன்று இருக்க முடியும்?


என்ன ஒரு சிக்கல். 


வள்ளுவர் சொல்கிறார், 


"வாங்குவது நல்லது என்று யாரவது சொன்னாலும், அதை வாங்காமல் இருப்பது நல்லது. கொடுப்பது தீமை என்று யாராவது சொன்னாலும், கொடுக்காமல் இருக்கக் கூடாது" 


பாடல்  


நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்

இல்லெனினும் ஈதலே நன்று


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_17.html

(pl click the above link to continue reading)



நல்லாறு = ஆறு என்றால் வழி. நல் + ஆறு = நல்ல வழி 


எனினும் = என்றாலும் 


கொளல்தீது = மற்றவர் கொடுத்து அதைப் பெற்றுக் கொள்வது தீது 


மேல்உலகம் = சொர்கமே 


இல்லெனினும் = இல்லை என்றாலும் 


ஈதலே நன்று = கொடுப்பதே சிறந்தது 


எனினும் என்ற சொல்லுக்கு "என்று சொல்பவர்கள் இருந்தாலும்" என்று பொருள் கொள்கிறார் பரிமேலழகர். 


வாங்குவது நல்லது, கொடுப்பது தீது என்று யாராவது சொன்னாலும், அதை நம்பக் கூடாது. வாங்குவது தீது, கொடுப்பது நல்லது என்கிறார். 


"எனினும்" என்பதில், யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள், ஒருவேளை "சொன்னாலும்" என்று பொருள் கொள்ள வேண்டும். 


சில மதங்களில், அல்லது சில மத உட் பிரிவுகளில் பிச்சை பெற்று வாழ்வது சிறந்தது என்று ஒரு சமய கோட்பாடாகவே சொல்லப் படுகிறது. இந்த குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் யாசகம் பெற்றுத்தான் வாழ வேண்டும் என்று விதி செய்கிறது. 


வள்ளுவர் அதை மறுக்கிறார். நல்லது என்று சமயம் கூறினாலும், அதனால் சொர்க்கம் கிடைக்கும் என்று கூறினாலும், "கொள்வது தீது" என்கிறார். 


உழைக்காமல், பிறர் கையை எதிர்பார்த்து வாழ்வது ஏற்புடையது அல்ல என்பது அவர் கருத்து. 


மேலும், 


எதற்காக ஈகை செய்ய வேண்டும்? அப்படிச் செய்வது புண்ணியம், அப்படி புண்ணியம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று நினைத்து செய்தால் அது ஈகையா? ஒன்றை எதிர்பார்த்து செய்வது ஈகை அல்ல. வியாபாரம். 


"மேல்உலகம் இல்லெனினும் ஈதலே நன்று". சொர்க்கம் இல்லை என்றால், ஈகை செய்யக் கூடாதா? ஈகை செய்வதை நிறுத்தி விடவேண்டுமா?


இல்லை, ஈகை செய்வது சமுதாயக் கடமை. அதற்கு ஒரு பலன் இல்லை என்றாலும் செய்யத்தான் வேண்டும் என்பது வள்ளுவர் கருத்து. 


பிற்காலத்தில் அறிவியல் வளரலாம். சொர்க்கம் என்பதெல்லாம் ஒன்று இல்லை என்று நிரூபணம் செய்யப் படலாம். அப்போது என்ன செய்வது? சொர்க்கம் இல்லை என்றால் ஈகை நின்று விடுமே. 


அதை யோசித்து வள்ளுவர் சொல்கிறார், "மேல் உலகம் இல்லை என்றாலும் ஈதல் செய்வது நல்லது" என்று. 


எனவே, யார் என்ன சொன்னாலும், எது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், ஏற்பது இகழ்ச்சி, ஈகை செய்வது கடமை.