Saturday, September 14, 2019

இராமானுஜர் நூற்றந்தாதி - திரித்தன் றெரித்த திருவிளக்கை

இராமானுஜர் நூற்றந்தாதி - திரித்தன் றெரித்த திருவிளக்கை


வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றுவார்கள். அதற்கு திரி திரித்து போடுவார்கள். பஞ்சில் இரண்டு அல்லது மூன்று துண்டுகளை எடுத்து அதை திரியாக திரித்து , எண்ணெயில் நனைத்து விளக்கு ஏற்றுவார்கள்.

ஒரே பஞ்சை போட்டால் என்ன? எரியாதா ?

எரியும். ஆனால் சீக்கிரம் கரிந்து விடும்.

இரண்டு அல்லது மூன்று பஞ்சை சேர்த்து திரிக்கும் போது, அந்த திரிகளுக்கு நடுவில் ஒரு மெல்லிய குழாய் போன்ற அமைப்பு உருவாகும். அதன் மூலம் எண்ணெய் வேகமாக மேலேறும். தமிழில் தந்துகி கவர்ச்சி என்பார்கள். ஆங்கிலத்தில் capillary effect என்று சொல்லுவார்கள்.

எப்படி திரி திரிப்பதால் எண்ணெய் நன்றாக மேலேறி வருகிறதோ, அது போல உண்மை என்ற எண்ணெய் மேலேறி வந்து உலகுக்கு எல்லாம் வெளிச்சம் காட்ட வேதத்தையும், தமிழையும் திரித்து உலகுக்கு  அளித்த பொய்கை ஆழ்வாரின் பாசுரங்களை மனதில் எப்போதும் வைத்திருக்கும் இராமானுஜன் , அவரே என் தலைவன், இறையவன் என்று அமுதனார் பாடுகிறார்.


பாடல்


வருத்தும் புறவிருள் மாற்ற, எம் பொய்கைப்பி ரான்மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்தன் றெரித்த திருவிளக் கைத்தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமா னுசனெம் இறையவனே.

பொருள்

வருத்தும்  = வருத்தம் தருகின்ற

புறவிருள் = புற இருள்

மாற்ற = மாற்ற, போக்க

எம் பொய்கைப்பி ரான் = பொய்கை பிரானான பொய்கை ஆழ்வார்

மறையின் = வேதத்தின் 

குருத்தின் = வெளிப்படும் உண்மை

பொருளையும் = அதன் பொருளையும்

செந்தமிழ் = தமிழ்

தன்னையும் = அதையும்

கூட்டி = சேர்த்து

ஒன்றத் = ஒன்றாக

திரித்தன் றெரித்த = திரித்து எரித்த, ஏற்றிய

திருவிளக் கைத் = திருவிளக்கை

தன் = தன்னுடைய

திருவுள்ளத்தே = மனதில்

இருத்தும் = எப்போதும் வைத்திருக்கும்

பரமன் = தலைவன்

இராமா னுசனெம் இறையவனே. = இராமானுசன் எம் இறையவனே

புற இருள் என்றால் என்ன ?

வெளியே ஏதோ இருக்கிறது என்று நாம் தேடி அலைகிறோம். இன்பம், செல்வம், புகழ், செல்வாக்கு, நட்பு, உறவு, என்று எதை எதையோ தேடி அலைகிறோம். கடைசியில் கையில் மிஞ்சுவது ஒன்றும் இல்லை. என்ன வேண்டும் என்றே தெரியாமல் தேடுகிறோம்.  எதைத் தொலைத்தோம் என்று தெரியாமலே தேடுகிறோம்.

எனவே, அதை இருட்டில் தேடுவது போல என்று புற இருள் என்றார்.

விளக்கை ஏற்றின்னால், இருள் அகன்று விடும்.

இங்கே இருள், வெளிச்சம் என்பது அறியாமை, ஞானம் என்பதைக் குறிக்கும்.

இராமானுஜர் நூற்றந்தாதியில் இப்படி பல அருமையான பாடல்கள் இருக்கின்றன.

படித்துப் பாருங்கள்.

நல்ல விஷயங்களுக்கு கொஞ்ச நேரம் ஒதுக்கினால்தான் என்ன?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_72.html

1 comment:

  1. அருமையான பதிவு. உங்கள் பதிவுகளை படித்த பின் வாழ்க்கையை வீணாக்கி விட்டோமே என ஏக்கம் தான் மிஞ்சுகிறது.

    ReplyDelete