Monday, June 24, 2024

திருக்குறள் - நம் கடமை என்ன ?

 திருக்குறள் - நம் கடமை என்ன ?


நம் வாழ்வின் கடமை என்ன? எதற்காக பிறந்தோம்? என்ன செய்ய பிறந்தோம்? வாழ்வின் நோக்கம், குறிக்கோள் என்ன?


அது தெரியாவிட்டால் எதையாவது செய்து கொண்டு இருப்போம். செய்வது சரியா தவறா என்று கூடத் தெரியாது. நல்லது என்று நினைத்து தீயதை செய்து கொண்டு இருப்போம். 


பெரும்பாலோனோர் வாழ்க்கை எப்படிப் போகிறது?


பிறந்தோம், வளர்ந்தோம், படித்தோம், மணந்தோம், பிள்ளைகளைப் பெற்றோம், அவர்களை வளர்த்தோம், அவர்களை கட்டிக் கொடுத்தோம், பேரப் பிள்ளைகளை கொஞ்சினோம், வயதாகி இறந்தோம். 


இதுதானே உலக வழக்காக இருக்கிறது. "நல்ல படியா பிள்ளைகளை படிக்க வைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டேன். என் கடமை முடிந்தது" என்று பலர் சொல்லக் கேட்டு இருக்கிறோம். நீங்கள் பிறந்த போது, வளர்ந்த போது, உங்கள் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்றா வளர்ந்தீர்கள்? அதெல்லாம் அப்புறம் வந்தது. பிள்ளைகள் வந்தார்கள், திருமணம் செய்து கொண்டு போய் விடுவார்கள். உங்கள் வாழ்க்கை என்ன? 



வள்ளுவர் சொல்கிறார், 


தவம் செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. தவம் அல்லாத மற்றவை அனைத்தையும் செய்வது வெட்டி வேலை. தேவை இல்லாத வேலை என்கிறார். 


பாடல் 


தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றல்லார்

அவம்செய்வார் ஆசையுள் பட்டு


பொருள் 


தவஞ்செய்வார் = தவத்தினை செய்பவர்கள் 


தம் = தங்களுடைய 


கருமம் = கடமையை 


செய்வார் = செய்பவர்கள் 


மற் றல்லார் = மற்று + அல்லார் = மற்றவர்கள் 


அவம் = வீண் வேலை, வெட்டி வேலை 


செய்வார் = செய்பவர்கள் 


ஆசையுள் பட்டு = ஆசையினால் 


தவம் செய்வது என்பது எப்படி கடமை ஆகும். யாருமே தவம் செய்வதாகத் தெரியவில்லையே. 


வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கடமை. அதுதான் குறிக்கோள். அதுதான் நோக்கம் என்று சொன்னால் அது சரியாகத்தானே படுகிறது. அதை விட்டு விட்டு தவம் செய்வது கடமை என்று வள்ளுவர் சொல்லுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டால், அதை பரிமேலழகர் விளக்கம் செய்கிறார். 


பிறந்தாகி விட்டது. இன்பம், மகிழ்ச்சி என்று வாழ்க்கை போகிறது. அப்படி போகின்ற வாழ்வில், நோய் வருமா?  வரும். 


மூப்பு வருமா? வரும். 


இறப்பு வருமா ? வரும். 


இது துன்பம் இல்லையா?  இதுவா வாழ்வின் நோக்கம்?


சரி, இருந்த வரை மகிழ்ச்சியாக இருந்தோமே. அது போதாதா? என்றால், போதாது. 


ஏன்? இறந்த பின் என்ன ஆகும்?  இந்தப் பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இன்னொரு பிறவி வரும். அந்தப் பிறவியில் என்னவாக பிறப்போமோ யாருக்குத் தெரியும்?  அங்கு மேலும் பாவம் செய்து மேலும் பல பல பிறவிகள் எடுக்க வேண்டி வரும். 


அது பரவாயில்லையா?


அதை தவிர்ப்பது நல்லதுதானே. 


இந்தப் பிறவியோடு அனைத்தையும் முடித்து விட்டு, வீடு பேறு பெறுவது சிறப்பா அல்லது மீண்டும் மீண்டும் பிறப்பது நல்லதா?


வீடு பேறு பெறுவதுதான் சிறப்பு. அதுதான் வாழ்வின் நோக்கம். அதை அடைய தவம் செய்ய வேண்டும். 


அதை விட்டு விட்டு, whatsapp, facebook, youtube, swiggy, tv என்று பொழுதை அவமே கழிப்பது வெட்டி வேலை தானே. 


இருக்கின்ற நாட்களை நல்ல முறையில் பயன் படுத்தி பிறவியின் நோக்கத்தை அடைய வேண்டும். 


தவம் செய்து வீடு பேறு அடைவதுதான் நம் கடமை. 


இல்லை, வீடு பேறு என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. மறு பிறவி என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று நீங்கள் சொன்னால், சிந்தித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வின் குறிக்கோள், செய்ய வேண்டிய கடமை என்று நீங்கள் எதை வைத்து இருக்கிறீர்கள்? அது உண்மையிலேயே சிறந்த குறிக்கோள்தானா? அதை விட உயர்ந்த ஒன்று இருக்க முடியுமா என்று சிந்தியுங்கள். 




Sunday, June 23, 2024

கம்ப இராமாயணம் - மண்டோதரி - பாகம் 1

கம்ப இராமாயணம் - மண்டோதரி - பாகம் 1 


கம்ப இராமாயணத்தில் மண்டோதரியின் பாத்திரம் மிகவும் சிந்திக்க வைக்கும் பாத்திரம். 


ஒரு புறம் மிக பலம் வாய்ந்த கணவன். அவனுக்கு சளைக்காத பிள்ளைகள். வீடணன், கும்பகர்ணன் போன்ற மைத்துனர்கள். 


வீரம், பக்தி, அறிவு என்று அனைத்தும் இருந்தாலும், மாற்றான் மனைவி மேல் காமம் கொண்ட கணவன். அவனைத் தட்டிக் கேட்க முடியாது. கணவனின் காமத்துக்கு பிள்ளையை பறி கொடுக்கிறாள் மண்டோதரி. அவள் என்னதான் செய்தாள்? செய்திருக்க வேண்டும் ?


அரக்க குலத்தில் வாழ்க்கைப் பட்டதால், இதெல்லாம் சாதாரணம் என்று எடுத்துக் கொண்டாளா? அல்லது அவளுக்கு இவற்றில் எல்லாம் உடன்பாடு இல்லாமல் இருந்தாளா?  


ஆயிரம் தான் கணவன் நல்லவனாக இருந்தாலும், பெண்களுக்கு தங்கள் பிள்ளைகள் மேல் ஒரு படி பாசம் கூடத்தான் இருக்கும். தாய்மையின் இயல்பு அப்படி. அப்படி இருக்க, இராவணனின் காமத்தால் மகனை இழந்த மண்டோதரி இராவணனிடம் சண்டையிட்டாளா ?


இவற்றை சிந்திக்க இருக்கிறோம். 


சீதையைத் தேடி அனுமன் இலங்கையில் அலைகிறான். இறுதியில் இராவணன் மாளிகை இருக்கும் தெருவுக்கு வந்து விடுகிறான். அங்கே மண்டோதரியை அனுமன் காணப் போகிறான். 


இராவணன் வாழும் அரண்மனை என்று சொல்லவில்லை கம்பன். மண்டோதரி வாழும் இடம் என்று சொல்லுகிறான். 


"தேவ லோகப் பெண்கள் வாழும் அந்தத் தெருவில் அமைந்த தூய்மையான மூன்று உலகையும் ஆளும் இராவணின் வாழும் இடத்தை அடைந்த அனுமன்,  

சந்திரனும் ஒளி மழுங்கும் படி குளிர்ந்த, பிரகாசமான முகத்தை கொண்ட மண்டோதரியைக் கண்டான்"


பாடல் 


ஆயவிஞ்சையர் மடந்தையர் உறைவிடம்

     ஆறு -இரண்டு அமைகோடித்

தூய மாளிகைநெடுந்தெருந் துருவிப் போய்,

     தொலைவில்மூன்று உலகிற்கும்

நாயகன்பெருங்கோயிலை நண்ணுவான்

     கண்டனன்,நளிர் திங்கள்

மாய நந்தியவாள்முகத் தொருதனி

     மயன்மகள்உறைமாடம்.


பொருள் 


ஆய = அப்படிப்பட்ட 


விஞ்சையர் = தேவ லோகப்  


 மடந்தையர் = பெண்கள் 


உறைவிடம் = வாழும் இடம் 


ஆறு -இரண்டு = பன்னிரண்டு  


அமை கோடி  = கோடி (பெண்கள்)  வாழும் 


தூய மாளிகை = பெரிய மாளிகை 


நெடுந்தெருந் = நீண்ட தெரு, வீதி 


துருவிப் போய் = தேடித் தேடி 


தொலைவில் = தொலை தூரத்தில் 


மூன்று உலகிற்கும் = மூன்று உலகத்துக்கும் 


நாயகன்= தலைவன் (இராவணன்) 


பெருங்கோயிலை = பெரிய மாளிகை 


நண்ணுவான் = சென்று அடைவான் (அனுமன்) 


கண்டனன் = கண்டான் 


நளிர் திங்கள் = குளிர்ந்த திங்கள் 


மாய = ஒளி மழுங்க 


நந்திய = விளங்கும் 


வாள்முகத் = ஒளி பொருந்திய முகத்தை 


தொருதனி = மிக சிறப்பு வாய்ந்த 


மயன் =மயன் என்ற தேவ சிற்பியின் 


மகள் = மகளான மண்டோதரி 


உறைமாடம் = வாழும் மாளிகை 


பன்னிரண்டு கோடிப் பெண்கள், அதுவும் தேவ லோகப் பெண்கள் இருந்தும், இராவணனுக்கு சீதை மேல் ஆசை. 


எது கிடைக்காதோ அதன் மேல் ஆசை கொள்வது அரக்க குணம். இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழத் தெரியாத குணம். 


நம்மிடம் இருக்கும் அனைத்தையும் வைத்துக் கொண்டு எவ்வளவு இன்பமாக வாழலாம்?  ஒருத்தர் கூட இன்பமாக வாழ்வதாகத் தெரியவில்லை. அடுத்தவன் மனைவி அழகாகத் தெரிகிறாள். 


அரக்க குணம். 



Thursday, June 20, 2024

திருக்குறள் - ஏன் தவம் செய்ய வேண்டும்

 திருக்குறள் -  ஏன் தவம் செய்ய வேண்டும் 


தவம் செய்வதால் என்ன பலன்?


முந்தைய குறளில் வேண்டியவர்களுக்கு நல்லதும், வேண்டாதவர்களுக்கு தீமையும் தவத்தால் முடியும் என்று பார்த்தோம். 


இது எல்லாம் பெரிய விடயமா?  இதற்காக தவம் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழலாம். 


மற்றவர்களுக்கு நல்லது செய்வது அல்லது அல்லது செய்வது என்பது ஒரு புறம் இருக்கட்டும். நமக்கு தவத்தால் ஒரு பலன் உண்டா?


உண்டு. 


எல்லோரும் விரும்புவது ஒன்று உண்டு. 


மறுபடி பிறக்கக் கூடாது. அப்படியே பிறந்தாலும், நல்லபடியாக இருக்க வேண்டும். 


அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. 


சரி, அடுத்து வரும் பிறவியில் அல்லது முக்தி அடைய என்ன செய்ய வேண்டும் என்றால், தவம் செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்


பொருள் 


வேண்டிய = தேவையானவற்றை 


வேண்டியாங்கு = வேண்டியபடியே, விரும்பிய படியே 


எய்தலால் = அடைய முடியும் என்பதால் 


செய்தவம் = செய்கின்ற தவத்தை 


ஈண்டு = இங்கு 


முயலப் படும் = முயன்று செய்ய வேண்டும் 


வேண்டியவை  வேண்டியபடியே கிடைக்கும் என்பதால் தவம் செய்ய வேண்டும் என்றுதானே இருக்கிறது. இதில் எங்கிருந்து மறு பிறவி, சொர்க்கம் எல்லாம் வந்தது என்ற கேள்விக்கு பரிமேலழகர் விடை தருகிறார். 


"ஈண்டு முயலப்படும்" என்ற தொடரில் ஈண்டு என்பது "இங்கு" என்று அர்த்தம். 


தவம் இங்கு செய்வதால், பலன் அங்கு கிடைக்கும் என்று அர்த்தம் கொண்டு, மறுபிறவியில் இப்போது எண்ணியபடி வாழ்க்கை கிடைக்கும் என்பதால், இப்போது, இங்கு தவம் செய்ய வேண்டும் என்கிறார். 


யோசித்துப் பார்ப்போம். 


மறு பிறவியில் பன்றியாக, தெரு நாயாக, புழுவாக, பூச்சியாக யாருக்காவது பிறக்க எண்ணம் வருமா? அப்படி நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், இப்போதே தவம் செய்ய வேண்டும். 


மனிதராகவே பிறந்தாலும், உடல் குறையுடன், எழமையான ஒரு நாட்டில், சண்டை சச்சரவுகள் நிறைந்த நாட்டில் யாராவது பிறக்க விரும்புவார்களா?


இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் தவம் செய்வது ஒன்றுதான் வழி. 


 


Thursday, June 6, 2024

திருக்குறள் - தவத்தின் வலிமை

 திருக்குறள் - தவத்தின் வலிமை 

https://interestingtamilpoems.blogspot.com/2024/06/blog-post_6.html



நமக்கு ரொம்ப வேண்டிய ஒருவர் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார். அது கணவன்/மனைவி/பிள்ளைகள்/உடன் பிறப்பு/நண்பர்கள் என்று யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்கள் உடல் நலம் தேற வேண்டும் என்று நாம் விரும்புவோம் அல்லவா?  


அதே போல் பிள்ளைகளுக்கு நல்ல வேலை, நல்ல துணை, என்று நாம் விரும்புவோம். 


அப்படி ஒரு சக்தி நம்மிடம் இருந்தால் எப்படி இருக்கும்?  


அது ஒரு புறம் இருக்க, நமக்கு வேண்டாதவர்கள் நலத்தை நாம் விரும்ப மாட்டோம். 


இந்த இரண்டையும் செய்யும் வல்லமை கொண்டது தவம்.


வேண்டியவர்களுக்கு நல்லது, வேண்டாதவர்களுக்கு துன்பம் என்ற இரண்டையும் தர வல்லது தவம். 


பாடல் 


ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்


பொருள் 


ஒன்னார்த் = நமக்கு வேண்டாதவர்கள் 


தெறலும் = கெடுதலும் 


உவந்தாரை = நமக்கு வேண்டியவர்களுக்கு 


ஆக்கலும் = நன்மையையும் 


எண்ணின் = எண்ணினால் 


தவத்தான் வரும் = தவ வலிமையால் வரும். 


இது மேலோட்டமான பொருள். 


இதில் பரிமிலழகர் சில நுணுக்கமான விடயங்களை சொல்கிறார். 


அவை என்ன என்று பார்ப்போம். 


தவம் செய்பவர்களுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று இருக்குமா?  அவர்களோ முற்றும் துறந்த முனிவர்கள். அவர்களுக்கு எது வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பேதம்?  அப்படி இருக்க வள்ளுவர் அப்படி சொல்வாரா ?  


இரண்டாவது, அப்படியே வேண்டியவர், வேண்டாதவர் என்று இருந்தாலும், வேண்டாதவர்கள் நாசமாக போக வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்களா? அப்படி நினைத்தால் அவர்கள் தவம் என்ன தவம்?


இந்த இரண்டு கேள்விகளை எழுப்பி, அதற்கு விடை சொல்கிறார். 


வேண்டியவர்களுக்கு நல்லதும், வேண்டாதவர்களுக்கு தீயதும் தவத்தால் ஆகும் என்கிறது குறள். தவம் செய்பவர்களால் அல்ல. 


"தவத்தான் வரும்" என்பது குறள். தவ வலிமையை தவத்தின் மேல் ஏற்றிச் சொல்கிறார். தவம் செய்பவர்கள் மேல் அல்ல. 


"எண்ணின்" - எண்ணினால் வரும். அவர்கள் அப்படி எண்ண மாட்டார்கள். ஒரு வேளை அப்படி நினைத்தால், அவர்கள் செய்த தவம் அவர்கள் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றது என்கிறார். 


தவ வலிமை உள்ளவர்கள் மனம் கோணும் படி நடக்கக் கூடாது. ஏன் என்றால், அவர்கள் மனதில் தோன்றினால், அவர்கள் செய்த தவம் அந்த எண்ணத்தை உண்மையாக்கிவிடும்.


தவம் செய்யுங்கள். எல்லோருக்கும் நல்லது நினையுங்கள். உங்கள் தவத்தால் அவர்களுக்கு, நீங்கள் நினைத்தது போல நடக்கும் என்பது குறள்.



Wednesday, June 5, 2024

பழமொழி - தோள் மேல் தலை வைத்து

 பழமொழி - தோள் மேல் தலை வைத்து 


ஆணின் காதலை படம் பிடிப்பது கடினமான செயல். ஆணின் காதல் என்பது அவனின் உணர்சிகளை விட அவனை சார்ந்தவர்களின் உணர்ச்சி பற்றியே இருக்கிறது. 


மனைவி, மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம், உடன் பிறப்புகளின் நலம் என்று போகும் அவன் காதல். நாலு காசு சம்பாதித்து தந்துவிட்டால் அது அவன் காதலை சொல்லும் என்பது அவன் எண்ணம். 


பழமொழி காட்டும் காதலன். 


காதலியை பிரிந்து ஏதோ ஒரு ஊரில் இருக்கிறான். வேலை நிமித்தம் அவளைப் பிரிந்து இருக்கிறான். 


அவளைப் பிரிந்த ஏக்கம் அவனுக்கு இல்லை. அவனைப் பிரிந்ததால் அவள் வருந்துவாளே என்று அவன் வருந்துகிறான். அவளின் வருத்தம் அவனுக்குப் பெரிதாகப் படுகிறது. என்னால் அல்லவா அவள் வருந்துகிறாள். அவள் வருந்தும்படி செய்து விட்டேனே என்று இவன் வருந்துகிறான். 


"மாலைப் பொழுதில், சிவந்த கண்களில் வழிகின்ற நீரை, தன்னுடைய மெலிந்த விரல்களால் தொட்டு, அதை சுண்டி விட்டு, அந்த நீர் பதிந்த விரலால் சுவற்றில் ஒன்று இரண்டு என்று கோடு போட்டு நான் அவளை விட்டுப் பிரிந்து எத்தனை நாள் இருக்கும் என்று நான் செய்த குற்றத்தை கணக்குப் போட்டுக் கொண்டு இருப்பாளோ"


என்று அவன் மனம் நினைக்கிறது. 


பாடல் 


செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்

மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்

நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்

தோள்வைத் தணைமேற் கிடந்து.


பொருள் 


செல்சுடர் = செல்கின்ற சுடர். மறைகின்ற சூரியன்.. மாலை வேளை. 


நோக்கிச் = பார்த்து 


சிதரரிக்கண் = சிதறிய, பரந்த, சிவந்த கண்கள் 


கொண்டநீர் = வழிந்த கண்ணீர் 


மெல்விரல் = மெலிந்த விரல்களால் 


ஊழ்தெறியா  = எடுத்து எறிந்து 


விம்மித் = விம்மல் கொண்டு 


தன் = தன்னுடைய 


மெல்விரலின் = மென்மையான விரலினால் 


நாள் வைத்து = எத்தனை நாள் ஆயிற்று என்று கணக்குப் போட்டு 


நங்குற்றம் = நான் அவளைப் பிரிந்து வந்த குற்றத்தை 


எண்ணுங்கொல் = நினைத்துப் பார்பாளோ 


அந்தோ = ஐயோ 


தன் = தன்னுடைய 


தோள் = தோளின் மேல் 


வைத் தணை = தலையை, தலையணை போல் வைத்து 


மேற் கிடந்து = அந்தக் கையின் மேல் கிடந்து 


கையை மடக்கி தலைக்கு வைத்து, சோகத்தில் கண்ணீர் விட்டு மெலிந்து கிடக்கிறாள். 


அவளின் சோகம் அவனை அப்படியே உருக வைக்கிறது. 


யாருக்காக நாம் வருந்துவது? அவளுக்காகவா? அவனுக்காகவா? 



Saturday, June 1, 2024

திருக்குறள் - தவம் - தானமா? தவமா?

திருக்குறள் - தவம் - தானமா? தவமா?


தவம் செய்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்றால் எல்லோரும் தவம் செய்ய வேண்டியதுதானே? ஏன் சிலர் மட்டும் செய்கிறார்கள், பலர் செய்வது இல்லை?  


வள்ளுவர் யோசிக்கிறார். இல்லறத்தில் இருந்து எவ்வளவோ கஷ்டப்படுவதை விட, கொஞ்ச நாள் தவம் செய்தால் பெரிய பலன்கள் கிடைக்கும் என்றால் எல்லோரும் தவம் செய்யலாமே ? ஏன் செய்வது இல்லை என்று. 


தவம் செய்யும் துறவிகளுக்கு உதவி செய்யும் ஆர்வத்தில் இல்லறத்தில் உள்ளவர்கள் தவம் செய்வதை மறந்து விட்டார்கள் போல் இருக்கிறது என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம்


பொருள் 


துறந்தார்க்குத் = முற்றும் துறந்த முனிவர்களுக்கு 


துப்புரவு வேண்டி  = அவர்களுக்கு வேண்டிய உணவு, உடை, மருந்து இவற்றை தருவதற்காக 


மறந்தார்கொல் =  தாங்கள் தவம் செய்வதை மறந்து விட்டார்கள் போல 


மற்றை யவர்கள் = இல்லறத்தில் இருக்கும் மற்றவர்கள் 


தவம் = தவம் (மறந்தார் கொல் தவம் என்று படிக்க வேண்டும்) 


இல்லறத்தில் இருப்பவர்களுக்கு தவம் செய்து அதில் வரும் இன்பத்தை விட தவம் செய்யும் முனிவர்களுக்கு உதவி செய்வதில் பெரிய இன்பம். அந்த இன்பத்திலேயே தாங்கள் தவம் செய்ய வேண்டும் என்பதை மறந்து விட்டார்கள் போல இருக்கிறது என்கிறார் வள்ளுவர். 


ஒரு வேளை மறக்காமல் இருந்திருந்திருந்தால் அவர்களும் தவம் செய்யப் போய் இருப்பார்களோ என்னவோ என்பது தொக்கி நிற்கும் செய்தி. 


எனவே, ஒன்று தவம் செய்ய வேண்டும், இல்லை என்றால் தவம் செய்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். 


தானும் தவம் செய்யாமல், தவம் செய்பவர்களுக்கும் உதவாமல் இருப்பது சிறந்த குணம் அல்ல.