Friday, January 25, 2013

கலித்தொகை - எழுத இடமா இல்லை ?


கலித்தொகை - எழுத இடமா இல்லை ?


தோழி: என்னடி, ரொம்ப dull -ஆ இருக்க ? உடம்பு கிடம்பு சரியா இல்லையா ?

அவள்: இல்லையே, நான் நல்லாதானே இருக்கேன்...

தோழி: மூஞ்சி, உன்னை பார்த்தாலே தெரியுது..என்னமோ சரி இல்ல..சொல்லு என்ன விஷயம்...

அவள்: ஒண்ணும் நேத்து அவன் கோவிச்சிக்கிட்டு போய்ட்டான்....

தோழி: அதச் சொல்லு முதல்ல...என்ன ஆச்சு...நீ என்ன சொன்ன 

அவள்: பின்ன என்ன..எப்ப பார்த்தாலும் சின்ன பையன் மாதிரி...ஒரு வயசுக்குத் தகுந்த பேச்சு வேண்டாம்...

தோழி: என்ன சொல்லிட்டானு நீ இப்படி குதிக்கிற....

அவள்: நேத்து சாயங்காலம் ஒரு அஞ்சு அஞ்சரை இருக்கும்... பொழுது போகாம நம்ம friends  க கூட மண்ணு வீடு கட்டி விளையாடிகிட்டு இருந்தோம்...தொரை அப்படியே அந்த பக்கம் வந்து "...என்ன வீடு கட்டி விளையாடுறீங்களா ...நானும் வரட்டுமா வீடு கட்ட" அப்படினான்....

தோழி: அதுக்கு நீ என்ன சொன்ன ?

அவள்: இருக்க ஒரு சொந்த வீடு இல்ல...இங்க வீடு கட்ட வந்துடியாக்கும் ...அப்படின்னு சொன்னேன் 

தோழி: உனக்கு இது தேவையா ? அப்புறம் ?

அவள்: இந்தா பூ...உன் தலைல வச்சு விட்டா என்று ஆசையோடு கேட்டான்...

தோழி: சரின்னு சொல்ல வேண்டியது தானே...நீ என்ன சொன்ன ?

அவள்: யாரோ கொடுத்த பூவை கொண்டுவந்து என் தலைல ஒண்ணும் வைக்க வேண்டாம், அப்படின்னு சொன்னேன் 

தோழி: பாவம்டி அவன்...மூஞ்சியே வாடி போயிருக்குமே அவனுக்கு ...

அவள்: யாருக்கு அவனுக்கா ? ஒண்ணும் இல்ல...அதுக்கு அப்புறம் என்ன சொன்னான் தெரியுமா...வெட்கம் கேட்டவன்...இந்த ஆம்பிளைகளுக்கு வெட்கமே கிடையாதா...சீ சீ....

தோழி: என்ன தான் சொன்னான்...முத்தம் தரட்டுமானு கேட்டானா ?

அவள்: அப்படி கேட்டிருந்தால் கூட பரவாயில்ல...சொல்லவே என்னவோ போல இருக்கு...உன் மார்பின் மேல் என் பேரை எழுதட்டுமா ? அப்படின்னு கேக்குறான்...அவனுக்கு எழுதுறதுக்கு வேற இடமா இல்ல...சரியான ஜொள்ளு பார்ட்டி 

தோழி: உன்கிட்ட தான கேட்டான்...சரின்னு சொல்லிருக்க வேண்டியது தான....அப்புறம் நீ என்ன தான் சொன்ன ?

அவள்: எனக்கு வந்த கோவத்திற்கு....அது எல்லாம் முடியாது...கல்யாணத்திற்கு அப்புறம் தான் எல்லாம் அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டேன் 

தோழி: ஐயா உடனே கோவிச்சிக்கிட்டு போயிட்டாராக்கும் ? அம்மாவுக்கும் மூடு அவுட்டா ? 

அவள்: அவன் அப்படி கேட்டிருக்கக் கூடாது தானே ? நீ என்ன சொல்ற ?

தோழி: நான் என்ன சொல்ல...சொல்றது எல்லாம் சொல்லிட்டு இப்ப வந்து என் கிட்ட யோசனை கேக்குற...

அவள்: எனக்காக அவன் கிட்ட சொல்லி, முறைப்படி எங்க வீட்டுல வந்து பொண்ணு கேக்க சொல்லுவியா...ப்ளீஸ் டி...எனக்காக....

(சொன்னா  நம்பணும்...இது கலித்தொகையில் வரும் பாடல்....பாடல் கீழே...)
 
 
 
   

தீம் பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் தந்த
பூங் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்
முல்லையும் தாய பாட்டங்கால் தோழி! நம்
புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம்
ஒருங்கு விளையாட, அவ் வழி வந்த
குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன், மற்று என்னை,
'முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும்
சிற்றில் புனைகோ, சிறிது?' என்றான்; எல்லா! நீ,
"பெற்றேம் யாம்" என்று, பிறர் செய்த இல் இருப்பாய்;
கற்றது இலை மன்ற காண்' என்றேன். 'முற்றிழாய்!
தாது சூழ் கூந்தல் தகை பெறத் தைஇய
கோதை புனைகோ, நினக்கு?' என்றான்; 'எல்லா! நீ
ஏதிலார் தந்த பூக் கொள்வாய்; நனி மிகப்
பேதையை மன்ற பெரிது' என்றேன். 'மாதராய்!
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலைமேல்
தொய்யில் எழுதுகோ மற்று?' என்றான்; 'யாம் பிறர்
செய் புறம் நோக்கி இருத்துமோ? நீ பெரிது
மையலைமாதோ; விடுக!' என்றேன். தையலாய்!
சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப,
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான்; அவனை நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின், யான் உற்ற
நோயும் களைகுவைமன்

Wednesday, January 23, 2013

சிலப்பதிகாரம் - இது என்ன மாயம் ?


சிலப்பதிகாரம் - இது என்ன மாயம் ?


அன்று வடக்கில் உள்ள மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை நாணாக்கி, பாற்கடலை கலக்கினாய். ஆனால் இன்றோ யசோதையின் சின்ன கயிற்றால் கட்டப்பட்டு கிடக்கிறாய். இது என்ன மாயம் ?

பாடல் 

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை யசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே ;

பொருள் 

பிரபந்தம் - பழுதான கடந்த காலம்


பிரபந்தம் - பழுதான கடந்த காலம் 


நம் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் நமக்கு என்ன தோன்றும் ?

என்ன சாதித்தோம் ? பிறந்தோம், வளர்ந்தோம், ஏதோ கொஞ்சம் படித்தோம், வேலை, சம்பளம், கல்யாணம், குழந்தைகள்....வெளியே சொல்லிக் கொள்ளும்படி ஏதாவது இருக்கிறதா ? 

பணம் காசு சேர்க்க வேண்டும் என்று எண்ணி, என்னனமோ செய்கிறோம். பணத்தாசையை தாண்டி பெண்ணாசை. 

எழுதப் படிக்கத் தெரியாத ஒரு ஊமை கனவு கண்டால் அதை எப்படி மற்றவர்களுக்கு சொல்ல முடியாமல் தவிப்பானோ, அதை விட மோசமாக இருக்கும் நம் வாழ்க்கை. 

வாழ் நாட்கள் எப்படியோ ஓடி விட்டன. மீதி நாட்களை எப்படி உருப்படியாகச் செலவழிப்பது ? இந்த சுழலில் இருந்து நாம் விடுபட என்ன வழி ? உய்வதற்கு நாராயாணா என்ற நாமத்தை கண்டு கொண்டதாக நம்மாழ்வார் சொல்கிறார்.

பாடல்

சேமமேவேண்டித் தீவினைபெருக்கித் தெரிவைமாருருவமேமருவி,
ஊமனார் கண்டகனவிலும்பழுதாய் ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்,
காமனார் தாதைநம்முடையடிகள் தம்மடைந்தார்மனத்திருப்பார்,
நாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.


பொருள் 

தேவாரம் - தாமரையின் கீழ் ஒளிந்து கொள்ளும் மீன்


தேவாரம் - தாமரையின் கீழ் ஒளிந்து கொள்ளும் மீன் 


திரு ஞானசம்பந்தர் மிக இளம் வயதிலேயே இறைவன் அருள் பெற்று பாடத் தொடங்கினார் 

திருவெண்காடு !

ஒரு சிறிய கிராமம். அமைதியான ஊர். ஊரின் நடுவே ஒரு கோவில். கோவிலுக்கு அருகே குளம். சில்லென்ற நீர் நிறைந்த குளம். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தாமரை மலர்கள் இருக்கின்றன. தாமரையோடு சேர்ந்து தாழை மலர்களும் அந்த குளத்தின் பக்கத்தில் இருக்கின்றன.  சூரிய ஒளி பட்டு அந்த தாழை மலர்கள் மெல்ல விரிகின்றன. அவை அப்படியே காற்றில் அசைகின்றன.  அப்படி அசையும் போது, அவற்றின்  நிழல் குளத்தில் விழுகிறது. அந்த குளத்தில் உள்ள மீன்கள் அங்கும் இங்கும் அலைகின்றன. 

இவ்வளவு தாங்க இருக்கு. நீங்களும் நானும் பார்த்தால், ஆஹா என்ன ஒரு இனிமையான இடம் என்று இரசித்து விட்டும் வருவோம்.

ஞான சம்பந்தர், இளம் ஞானி. பார்க்கிறார். 

அவருக்கு என்ன தோன்றுகிறது பாருங்கள்.  

மடல் விரியும் தாழை மலரின் நிழலை அந்த குளத்தில் உள்ள மீன்கள் பார்க்கின்றன. அந்த மீன்களுக்கு அந்த நிழல் ஏதோ அவைகளைப் பிடிக்க வரும் குருகு (ஒரு வித பறவை) போல் இருக்கிறது. அந்த குருகுக்கு பயந்து, அந்த மீன்கள்  தாமரை மலரின் அடியில் ஒளிந்து கொள்கின்றன. இதைப் பார்த்து அங்குள்ள கடல் முத்துகள் சிரிக்கின்றன. அப்படிப் பட்ட ஊர் திருவெண்காடு. 
 

பாடல் 
  
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.

பொருள்

Tuesday, January 22, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - அடியார்க்கு அடியார்


இராமானுஜர் நூற்றந்தாதி - அடியார்க்கு அடியார் 


இந்த மனம் இருக்கிறதே, இது ஒரு விசித்தரமான ஒன்று. 

நம்முடைய மனம் தான். இருந்தும் நாம் சொல்வதை கேட்பது இல்லை. 

பார்க்காதே என்றால் பார்க்கும். தொடாதே என்றால் தொடும். இருப்பதை விட்டு விட்டு இல்லாததற்குப் பறக்கும். 

மனதை அடக்க வேண்டும் என்று நினைத்தால், அது நம்மை அடக்க முயற்சி செய்கிறது. 

மனம் நம்மை நல்ல வழியிலும் இழுத்துச் செல்லும், கெட்ட வழியிலும் இழுத்துச் செல்லலாம்.

மனதை வலு கட்டாயாமாக ஒரு வழியில் செலுத்தினால், நிச்சயம் அது நம் கட்டுபாட்டை மீறி எதிர் திசையில் ஓடும். 

அதை, அதன் வழியில் போய், கொஞ்சம் கொஞ்சமாக நம் வழிக்கு கொண்டு வர வேண்டும். 
 
அமுதனார் சொல்கிறார், 

என் மனமே, உன்னை நான் அடி பணிகிறேன். கெட்ட பசங்க சவகாசத்தை விடுத்து, இராமானுஜரின் மேல் அன்பு செய்யும் நல்லவர்களின் திருவடிக்கீழ் என்னை கொண்டு சேர்த்ததற்கு 

பாடல் 

பேரியல் நெஞ்சே ! அடிபணிந்தேனுன்னைப், பேய்ப்பிறவிப்
பூரியரோடுள்ள சுற்றம் புலர்த்திப், பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமானுச முனிக்கன்பு செய்யும்
சீரியபேறுடையார், அடிக்கீழென்னைச் சேர்த்ததற்கே.

பொருள் 

Monday, January 21, 2013

அபிராமி அந்தாதி - மெல் அடியார், அடியார்


அபிராமி அந்தாதி - மெல் அடியார், அடியார்


பெற்ற பிள்ளைகள் நாம் சொல்வதை கேட்கா விட்டால் நாம் அவர்களை வெறுத்து ஒதுக்கி விடுவது இல்லை. எப்படியாவது அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று தான் நாம் முயற்சி செய்வோம். மானிடர்களான நமக்கே நம் குழந்தைகள் மேல் இவ்வளவு பாசம் இருந்தால், அபிராமிக்கு அவளுடைய பிள்ளைகளான நம் மீது எவ்வளவு பாசம் இருக்கும் ?

அவள் தான் எல்லாம் என்று தெரியும், அவளைத்தான் அடைய வேண்டும் என்று தெரிந்து இருந்தாலும், அவள் மேல் அன்பு செலுத்துவதை விட்டு விட்டு வேறு எதை எல்லாமோ செய்து கொண்டு இருக்கிறோம். இருந்தாலும், அவள் நம் மேல் கோபப்படாமல், நம் மேல் அன்பு செலுத்துகிறாள். அவளின் கருணைக்கு எல்லை ஏது ?


பாடல் 

தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே 
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும் 
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும் 
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.

பொருள் 

வில்லி பாரதம் - கங்கா தேவியின் அழகு


வில்லி பாரதம் - கங்கா தேவியின் அழகு


தன்னை மணந்து கொள்ளும்படி கங்கையிடம் சந்துனு மகாராஜா வேண்டினான். அதற்க்கு கங்கை என்ன சொன்னாள்?

முதலில் அவளுக்கு வெட்கம் வந்தது. வெட்கத்தால் அவன் முகம் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள். தலை கவிழ்ந்தாள் என்றால் என்னமோ லேசாக தலையயை சாய்த்தாள் என்று பொருள் அல்ல. அவள் நாடி வளைந்து உடலை தொடுகிறது.  ஆபரணங்கள்  பூண்ட அவளது மார்பகத்தை அவளே பார்க்கும் அளவுக்கு  தலை கவிழ்ந்தாள். அப்படி அவள் வெட்கப் பட்ட போது, அவளின் அழகு இன்னும் கூடியது.. வெட்கப் படும் போது பெண்கள் மேலும் அழகாகத் தோன்றுவது இயற்கை. அவள் உடல் மின்னியது. அவள் உடல் மேலும் மெருகேறியது.  அந்த நிலவே அவள் மேனியின் ஒளியைப் பெற்று பிரகாசித்ததை போல இருந்தது. 

வில்லி புத்துராரின் பாடல் 

நாணினளாமென நதிமடந்தையும்
பூணுறுமுலைமுகம் பொருந்தநோக்கினள்
சேணுறுதனதுமெய்த் தேசுபோனகை
வாணிலவெழச்சில வாய்மைகூறுவாள்.

பொருள் 

இராமாயணம் - உயிரின் ருசி


இராமாயணம் - உயிரின் ருசி 


இராவணன் ஆட்சிக்கு வந்தபின், அரக்கர்களின் உயிரை குடிக்க (அது என்ன திரவமா குடிக்க ?) எமன் அஞ்சினான். எங்கே அரக்கர்களின் உயிரை எடுத்தால், இராவணன் தன்  உயிரை எடுத்து விடுவானோ என்று அஞ்சி அரக்கர்களின் உயிரை எடுக்காமல் இருந்தான்.

விச்வாமித்ரனின் தூண்டுதலால், இராமன் தாடகை என்ற அரக்கியை கொன்றான். 

அன்று தான் கூற்றுவனும் நாக்கை சப்பு கொட்டிக் கொண்டு அரக்கர்களின் உயிரின் சுவையை சிறிது அறிந்தான்...பின்னால் பெரிய விருந்து அவனுக்கு வரக் காத்து இருக்கிறது....

பாடல்


வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத,
காசு உலாம் கனகப் பைம் பூண், காகுத்தன் கன்னிப் போரில்,
கூசி, வாள் அரக்கர்தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி,
ஆசையால் உழலும் கூற்றும், சுவை சிறிது அறிந்தது அன்றே.

பொருள்

Sunday, January 20, 2013

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில்


குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில் 


அது ஒரு சின்ன கிராமம். ஒரு காலத்தில் இங்கு நிறைய மக்கள் இருந்தார்கள். ஊரில் திருவிழாக்கள், கூத்து என்று அந்த ஊர் எப்போதும் கல கல என்று மகிழ்ச்சியாக இருக்கும். 

ஆனா, இப்ப அப்படி இல்ல. மழை தண்ணி இல்லாததால, வெவசாயம் இல்ல. ஊரு சனம் எல்லாம் ஒவ்வொன்னா ஊரைக் காலி பண்ணிட்டு போயிருச்சு. 

ஊரே வெறிச்சோடி கிடக்கிறது. எல்லா வீடும் காலியா கிடக்கு. வீடு முற்றத்தில் அணில்கள் இறங்கி வந்து விளையாடி கொண்டு இருக்கின்றன. 

அப்படி ஒரு தனிமை போல் இருக்கிறது அவன் இல்லாத தனிமை. 

அணில்லாடும் முன்றில் என்ற குறுந்தொகை பாடல்.....



காதல ருழைய ராகப் பெரிதுவந்து 
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற  
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்  
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்  
புலப்பில் போலப் புல்லென் 
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.  

கொஞ்சம் சீர் பிரிப்போம் 

காதலர் உழையராக பெரிது உவந்து 
சாறு கொள் ஊரிற் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அந்த குடி சீறூர் 
மக்கள் போகிய அணில் ஆடும்  முன்றில் 
புல்லப்பு இல் போல  புல்லென்று 
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே 

பொருள் 

Saturday, January 19, 2013

இராமாயணம் - சிவந்த பாதங்கள்


இராமாயணம் - சிவந்த பாதங்கள்


உங்கள் வீட்டில் இருந்து பேருந்து நிலையமோ, புகை வண்டி நிலையமோ ஒரு ஐந்து  கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.

சாதரணமாக நடந்து போனால் சுமார் ஒரு மணி நேரம் ஆகலாம். அவ்வளவா கால் வலிக்காது.

அதையே முக்கால் மணி நேரத்தில் போய் சேர வேண்டும் என்றால், கொஞ்சம் வேகமாக நடக்க வேண்டும். மூச்சு வாங்கும். கொஞ்சம் வியர்க்கும்.

அதையே அரை மணி நேரத்தில் போய் சேர வேண்டும் என்றால், ஓட்டமும் நடையுமாக போக வேண்டும். கால் வலிக்கும். ரொம்ப மூச்சு வாங்கும். வியர்த்து கொட்டும்.

இன்னும் குறைத்து கால் மணி நேரத்தில் போக வேண்டும் என்றால், தலை தெறிக்க ஓட வேண்டும். காலுக்கு இரத்த ஓட்டம் அதிகமாக வேண்டும். கால் எல்லாம் சிவந்து விடும். இல்லையா ?

யோசித்துப் பாருங்கள், இந்த பூலோகம் முழுவதையும், அந்த வானுலகையும் இரண்டே அடியில் நடந்து கடப்பதாய் இருந்தால் எவ்வளவு வேகமாக செய்ய வேண்டும். கால் வலிக்காது அந்த புவி அளந்த பெருமாளுக்கு ? வைகுண்ட வாசனுக்கு ?

கம்பரின் பாடலைப் பாருங்கள் ....


"உரியது இந்திரற்கு இது’’ என்று.
   உலகம் ஈந்து போய்.
விரி திரைப் பாற்கடல்
   பள்ளி மேவினான்;
கரியவன். உலகு எலாம்
   கடந்த தாள் இணை
திருமகள் கரம் தொடச்
   சிவந்து காட்டிற்றே!


பொருள்


Friday, January 18, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - அறியாமலே நிகழ்ந்தது


இராமானுஜர் நூற்றந்தாதி - அறியாமலே நிகழ்ந்தது 


வாழ்க்கையில் சில பேரை பார்த்து இருப்பீர்கள்...என்ன சொன்னாலும் அதற்க்கு எதிர் மறையான ஒன்றை சொல்லுவதில் அவர்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம் இருக்கும். 

நான் இன்று முதல் உணவில் கட்டுப் பாடோடு இருக்கப் போகிறேன் என்று சொன்னால், "அது எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான், மீண்டும் பழைய உணவு முறைக்கு மாறிருவ பாரு " என்று சொல்வார்கள். 

இப்படி எதைச்சொன்னாலும் ஒரு முட்டு கட்டை போடுவது அவர்கள் இயல்பு. 

கோவில், இறை வணக்கம் என்று சொன்னால் உடனே, சாமியாவாது, மண்ணாவது என்று சொல்லி விடுவார்கள். 

அவர்களை விட்டு விலகி இருப்பது நல்லது. அவர்கள் தாங்களும் செய்ய மாட்டார்கள், செய்பவர்களையும் செய்ய vidaamal, ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். 

யாரை விலக்க வேண்டும் என்று சொல்லியாகி விட்டது. 

யாரோடு சேர வேண்டும் ?  

நாம் எதைச் செய்ய முயல்கிறோமோ, அதில் நாட்டம் உள்ளவர்கள், அதில் சாதனை புரிந்தவர்கள்...அப்படி பட்டவர்களோடு நாம் இருக்க வேண்டும். அவர்கள் சொல்லுவது ஏதாவது காதில் விழும், அவர்கள் செய்வதைப் பார்த்து நாமும் ஏதாவது கற்றுக் கொள்ளலாம்...

பாடல்  

கள்ளார்பொழில் தென்னரங்கன்  கமலப்பதங்கள் நெஞ்சில்
கொள்ளாமனிசரை நீங்கி  குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாதவன்ப னிராமாநுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென்னெஞ்சு  ஒன்றறியேனெனக்குற்ற பேரியல்வே.

சீர் பிரித்த பின் 

கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமலப் பாதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிராண்டிக் கீழ் 
விள்ளாத அன்பன் இராமானுஜன் மிக்க சீலம் அல்லால் 
உள்ளாத என் நெஞ்சு ஒன்றறியேன் எனக்கு உற்ற பெரிய இயல்பே 

பொருள் 

Thursday, January 17, 2013

கந்தர் அநுபூதி - அறிவும் அறியாமையும் அற்று


கந்தர் அநுபூதி - அறிவும் அறியாமையும் அற்று 


குறியைக் குறியா துகுறித் தறியும்
நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலும்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையும்அற் றதுவே.


அருணகிரி நாதர் பாடல் என்றால் பதம் பிரிக்காமல் படித்து அறிய முடியாது. 

சீர் பிரித்த பின் 

குறியை குறியாது குறித்து அறியும் 
நெறியையை தனி வேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று உலகோடு உரை சிந்தையும் அற்று 
அறிவு அற்று அறியாமையும் அற்றதுவே 

பொருள் 

Tuesday, January 15, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - நாமம் நாவில் அமரும்படி


இராமானுஜர் நூற்றந்தாதி - நாமம் நாவில் அமரும்படி 


என் நாவில் ஏதேதோ தேவை இல்லாத விஷயங்கள் எல்லாம் வந்து கொண்டு இருக்கிறது. பொய், புறம் சொல்லுவது, முகஸ்துதி சொல்லுவது, பயனற்ற விஷயங்களைப் பேசுவது என்று தேவை இல்லாமால் பல விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறது என் நாக்கு. 

இராமானுசரே, எனக்க ஒரே ஒரு வேண்டுகோள் தான் உண்டு. இரவும் பகலும் உன் நாமம் மட்டும் என் நாவில் தங்கி இருக்கும்படி செய்து விடும்...வேறு எதுவும் வேண்டாம்....

எங்கே நாவில் நாமம் நின்றால், ஒரு வேலை நடந்து எங்காவது போய் விடுமோ என்று அஞ்சி, நாமம் அமரும் படி வேண்டுகிறார். 

பாடல்

சொல்லின் தொகைகொண் டுனதடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்
நல்லன்பரேத்து முன்நாமமெல்லா மென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலு மமரும்படிநல் கறுசமயம்
வெல்லும்பரம விராமாநுச விதென் விண்ணப்பமே.

சீர் பிரித்த பின் 

சொல்லின் தொகை கொண்டு உனது அடிப் போதுக்கு தொண்டு செய்யும் 
நல்ல அன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் எந்தன் நாவினுள்ளே 
அல்லும் பகலும் அமரும்படி நல்க அறு சமயம்
வெல்லும் பரம ராமானுஜ இது என் விண்ணபமே

பொருள்

புற நானூறு - இன்றும் வரும் கொல் ?


புற நானூறு - இன்றும் வரும் கொல் ?

இன்னைக்கும் வருவார்களா ?

அவன் பெரிய கொடையாளி. எல்லோருக்கும் இல்லாருக்கும் உதவி செய்பவன். நல்ல வீரனும் கூட. ஒரு நாள், அவன் ஊரில் உள்ள பசுக்களை பக்கத்து நாட்டு அரசனின் படைகள் கவர்ந்து சென்று விட்டன. அதை கேள்விப் பட்டு, இவன் சண்டைக்குப் போனான். சண்டையில் இவன் பக்கம் வெற்றி பெற்றாலும், அவன் சண்டையில் இறந்தான். அவனை அடக்கம் பண்ணி, அடக்கம் பண்ணிய இடத்தில் ஒரு கல்லை நட்டு வைத்தனர். அந்த கல்லை பூவாலும், மயில் சிறகாலும் தடவிக் கொடுத்தனர். அப்போது அங்கே வந்த புலவர் ஒருவர் நினைக்கிறார், இவன் இப்படி இறந்து போனது ஊருக்குள் தெரியுமோ தெரியாதோ...இவனிடம் உதவி பெற இன்னைக்கும் வருவார்களா என்று துக்கம் இதயத்தை நிறைக்க நினைத்துப் பார்க்கிறார்.....

பாடல்


பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும்; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே.

பொருள்


Monday, January 14, 2013

திருமந்திரம் - புலன்களை அடக்காதீர்கள்


திரு மந்திரம் - புலன்களை அடக்காதீர்கள் 


மெய், வாய், விழி, நாசி, செவி என்ற ஐந்து புலன்களும் நம்மை படாத பாடு படுத்துகின்றன. 

பார்ப்பது எல்லாம் வேண்டும் என்கிறது மனம்.

ருசியானவற்றை கண்டால் ஜொள்ளு விடுகிறது நாக்கு,  

சினிமா பார்க்க வேண்டும், புதுப் புது இடங்களை பார்க்க வேண்டும் என்று கண் அலை பாய்கிறது

பாடலை, இசையையை கேட்க வேண்டும் என்று காது ஆசைப் படுகிறது....

ஐம்புலன்களை அடக்க வேண்டும் என்று எல்லா மதங்களும் போதிக்கின்றன. 

ஆனால், ஐம்புலன்களை அடக்க முடியுமா ? அடக்கியபின் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் ?

திருமூலர் ரொம்ப ப்ராக்டிகலான ஆளு. 

பாடல் 

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்,
அஞ்சும் அடக்கும் அறிவறி வார்இல்லை,
அஞ்சும் அடக்கின் அசேதனமாம் என்றிட்(டு)
அஞ்சும் அடக்காத அறிவறிந்தேனே

பொருள்

Sunday, January 13, 2013

இராமானுஜர் அந்தாதி - பழுதான பேரின்பம்


இராமானுஜர் அந்தாதி - பழுதான பேரின்பம் 


நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!



நயம் தரும் பேரின்பம் எல்லாம் பழுது என்று - பேரின்பம் எப்படி பழுது ஆகும் ?

நிறைய வியாக்கியானங்கள் எழுதப்பட்டு உள்ளன. சிலவற்றைப் பார்ப்போம். 

1. பெரியவர்கள் தீயவை, தீமை, சிற்றின்பம் போன்றவற்றை நேரடியாகச் சொல்வது இல்லை. தீய நெறியை 

நெறி அல்லாத நெறி தன்னை 
நெறியாகக் கொள்வேனே 
சிறு நெறிகள் சேராமே 
பெறு நெறியே சேரும் வண்ணம் 
குறி ஒன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு 
அறியும் வண்ணம் அருளியவாறு யார் தருவார் அச்சோவே என்று பாடுகிறார் மணிவாசகர்.

தீ நெறி என்று சொல்லவில்லை....நெறி அல்லாத நெறி என்று குறிப்பிடுகிறார். 

கொடிய நஞ்சு உள்ள பாம்பை நல்ல பாம்பு என்று கூறுகிறோம் அல்லவா "? அது போல் இங்கே மங்கலமாக புலன் இன்பத்தை பேரின்பம் என்று குறிப்பிட்டார்.

2. பேரின்பம் என்றால் முக்தி, வீடு பேறு, சொர்க்கம் என்று சொல்லலாம். இறைவன் அடியாருக்கு அது எல்லாம் பழுது தான். அவர்களுக்கு மிகுந்த விருப்பம் உள்ளது அவன் அழகில் தோய்வதுதான்

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே 

என்று சொர்கமும், முக்தியும், இந்திர லோகமும் வேண்டாம் என்று அவனை கண்டு கழிப்பதிலேயே அவர்களுக்கு ஆனந்தம் கிடைத்து விடுகிறது. 

3. பேரின்பம் அடைய வேதங்களும் சாஸ்திரங்களும் ஞான, கர்ம, பக்தி மார்கங்களை காட்டுகின்றன. வைணவ அடியார்கள் அதை எல்லாம் பழுது என்று விட்டுட்டு ஆச்சாரியன் திருவடிகளே சரணம் என்று இருந்து விடுவார்கள். 

நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!

ஆச்சாரியனின் நாமங்களை சொல்வதும், அவன் திருவடிகளை பற்றிக் கொள்வதும் தவிர அவர்களுக்கு பெரிய இன்பம் ஒன்றும் இல்லை....

Saturday, January 12, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - மனமே ஒத்துக் கொள்


இராமானுஜர் நூற்றந்தாதி - மனமே ஒத்துக் கொள் 

நல்லது என்று தெரிந்தாலும் இந்த மனம் அதை விட்டு விட்டு மற்றவற்றின் பின் செல்கிறது. சொன்னால் எங்கே கேட்கிறது. கேட்டாலும் ஒரு கணம் கேட்க்கும் அடுத்த கணம் குரங்கு போல் வேறொன்றுக்குத்  தாவி விடும். எனவே, ஏ மனமே, நான் சொல்வதை கேளு, திருவரங்கத்து அமூதனார் பாடிய இராமானுஜர் நூற்றந்தாதியை ஒழுங்காகப் படி என்று வேண்டுகிறார் வேதப் பிரகாசர். 


பாடல்  

நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!

பொருள்..... 

இராமனுஜ நூற்றந்தாதி - அவன் அருளாலே அவன் தாள் வணங்கி


இராமனுஜ நூற்றந்தாதி - அவன் அருளாலே அவன் தாள் வணங்கி


பெண்களுக்கு பிறந்த வீட்டை வருவது கடினமான செயல். என்னதான் புகுந்த வீட்டுக்குப் போக ஆசை இருந்தாலும், பிறந்த வீட்டை சந்தோஷமாக விட்டு விட்டு போக மாட்டார்கள். ஆனால் திருமகள் கதை வேறு. அவள் தன் பிறந்த இடமான தாமரை மலரை விட்டு, திருமாலின் மார்பில் வந்து வாழ சந்தோஷமாக வந்தாளாம். நிறைய பெண்கள் கணவன் வீட்டில் இருப்பார்கள். மனம் எல்லாம் பிறந்த வீட்டிலேயே இருக்கும். புகுந்த வீட்டில் பொருந்தாது. திருமகள் வந்து பொருந்திய மார்பன் திருமால்.

புகழ் கிடைப்பதற்கு அரிதான ஒன்று. கிடைப்பது அரிது. கிடைத்த பின் அதை தக்க வைத்துக் கொள்வது அதனினும் அரிது. அப்படிப்பட்ட புகழ் நம்மாழ்வார்க்கும் அவர் பாடல்களிலும் மலிந்து கிடந்தது. அவ்வளவு புகழ்.

அப்படி பட்ட நம்மாழ்வாரின் பாதம் பணிந்து  வாழ்தவர் பல கலைகளை கற்று தேர்ந்த இராமானுஜர்.

அப்படிப் பட்ட இராமனுஜரின் பாதரா விந்தங்களில் நாம் வாழ அவன் நாமங்களையே சொல்லுவோம். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் சொன்னது போல, அவன் நாமங்களைக் ஜெபித்து, அவன் திருவடிகளை அடைவோம்.

 
பாடல்



பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.



பொருள்



பூமன்னு = (தாமரை) பூவில் நிரந்தரமாக வசிக்கும்

மாது = திருமகள்

பொருந்திய மார்பன் = எல்லாவிதத்திலும் பொருந்திய மார்பன் (made for each other)

புகழ்மலிந்த = புகழ் நிறைந்த

பாமன்னு = நீண்டு நிலைக்கும் பாசுரங்களை தந்த

மாற னடிபணிந் து = மாறன் (நம்மாழ்வார்) அடி பணிந்து

உய்ந்தவன் = வாழ்ந்து வந்தவன்

பல்கலையோர் = பல கலைகளும்

தாம்மன்ன வந்த = அவைகளே அவனிடம் வந்து நிலை பெற்று இருக்க

ராமாநுசன் = இராமானுஜன்

சரணாரவிந்தம் = பாதார விந்தங்களை

நாம்மன்னிவாழ = நாம் அடைந்து வாழ

நெஞ்சே = என் மனமே

சொல்லுவோமவன் நாமங்களே = சொல்லுவோம் அவன் நாமங்களே

பெயரில் என்ன இருக்கிறது ? பெயரில் எல்லாம் இருக்கிறது. தனிமையில் இருக்கும் போது நீங்கள் நேசிப்பவரின் பெயரை மெல்ல உச்சரித்துப் பாருங்கள்...பெயர் இனிக்கும்.

இராமா உன் நாமம் எவ்வளவு ருசியாக இருக்கிறது என்கிறார் தியாகராஜர்

(
ஓ ராம நீநாம ஏமி ருசிரா
ஓ ராம நீநாம ஏமி ருசிரா
ஸ்ரீராம நீநாம எந்த ருசிரா || )


முதலில் அவன் பெயரைக் கேட்டாள், பின் அவன் குணங்களை கேட்டாள், பின் அவன் இருக்கும் ஊரைக் கேட்டாள்..பின் அவன் மேல் பைத்தியமாய் ஆனாள் என்று உருகுகிறார் நாவுக்கரசர்....

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

Friday, January 11, 2013

இராமாயணம் - அருளின் வாழ்வே


இராமாயணம் - அருளின் வாழ்வே


அருள் என்றால் மற்ற உயிர்களின் மேல் அன்பு கொள்வது, அவற்றின் துன்பத்தை துடைத்தல், அவற்றின் மேல் கருணை கொள்ளுதல். சீதை, அனுமனை அருளின் வாழ்வே என்று அழைத்தாள். அருளை வாழ்விப்பவன், அருளே அவன் வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று பொருள் கொள்ளலாம். 

அவள், அனுமனை நீ என் தாய், என் தந்தை, என் தெய்வம் என்று கூப்பிடுகிறாள். சீதையால் தாய், தந்தை மற்றும் கடவுள் என்று அழைக்கப் பட்டவன் அனுமன். 

நீ செய்த உதவிக்கு நான் என்ன கை மாறு செய்ய முடியும் என்று பிராட்டி கரைகிறாள். 

பாடல் 



மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன்
                            தூது ஆய்,
செம்மையால்உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால்
                            எளியது உண்டே ?
அம்மை ஆய்,அப்பன் ஆய அத்தனே ! அருளின்
                            வாழ்வே !
இம்மையேமறுமைதானும் நல்கினை, இசையோடு’
                            என்றாள்.

பொருள்

Thursday, January 10, 2013

இராமனுஜ நூற்றந்தாதி - என்ன செய்தால் மரண பயம் வராது


இராமனுஜ நூற்றந்தாதி - தனியன் 1 

என்ன செய்தால் மரண பயம் வராது ?


தனியன் என்பது வைணவ இலக்கியங்களில் ஒரு ஆழ்வாரையோ அல்லது ஒரு சமயப் பெரியவரை பற்றியோ கூறும் முன்னர் அவரைப் பற்றி போற்றி துதிக்கும் பாடல்கள். 

தனியன் என்றே ஏன் பேர் வந்தது ?

தனித்து நிற்பதால் தனியன் என்று வந்து இருக்கலாம். 

இறைவனைப் பாடாமல் தனி மனிதனைப் பாடியதால் அதற்க்கு தனியன் என்று பெயர் வந்து இருக்கலாம். 

இராமனுஜ நூற்றந்தாதியில் மூன்று தனியன்கள் உள்ளன. 

முதல் தனியனை இயற்றியது வேதப் பிரான் பட்டர் என்பவர்.  

நல்லா படிச்சிருக்கேன், நான் ஏன் fail  ஆகப் போகிறேன் ? நல்லா வேலை செஞ்சிருக்கேன், எனக்கு ஏன் இந்த வருடம் பதவி உயர்வு கிடைக்காது ? என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறோம். 

என்ன செய்தால் மரண பயம் வராது ? 

மரண பயம் இல்லாதவர் யார் ? மரணம் தவிர்க்க முடியாது தான் என்றாலும், தொடர்ந்து வரும் பாவ புண்ணியம் இவற்றின் பலன்களை எப்படி தவிர்ப்பது ?

வேதப் பிரான் கூறுகிறார் 

பாடல் 

Wednesday, January 9, 2013

திருக்குறள் - தீயதை கூடச் சொல்லலாம்


திருக்குறள் - தீயதை கூடச் சொல்லலாம் 


நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் 
பயனில சொல்லாமை நன்று.

தீயதை சொல்லக் கூடாது என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள். 

ஆனால் வள்ளுவர், தீயதை சொன்னால் கூடப் பரவாயில்லை ஆனால் பயனிலாத சொற்களை சொல்லமால் இருப்பது நல்லது என்கிறார். 

கொஞ்சம் பொறுங்கள். தீயவை என்று வள்ளுவர் நேரடியாக சொல்லவில்லை. நலம் பயக்காத சொற்கள் என்று கூறுகிறார். நல்லது இல்லாததை சொன்னாலும் சொல்லுங்கள், பயனில்லாததை சொல்லாதீர்கள் என்கிறார்.

இல்லையே...எங்கேயோ இடிக்குதே. அது எப்படி வள்ளுவர் நல்லது இல்லாத சொல்லலி சொல்லச் சொல்லுவார் ? சரியா இல்லையே என்று நினைத்தால்...பரிமேல் அழகர் இந்த குறளுக்கு சற்று வேறு விதமாக விளக்கம் தருகிறார். 


நயம் என்ற சொல்லுக்கு நிறைய பொருள் உண்டு. ஈரம், இன்பம் என்று எல்லாம் கூட பொருள் உண்டு. 

கமாவை, சான்றோருக்கு அப்புறம் போடுங்கள் 

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்,  
பயனில சொல்லாமை நன்று.

அதாவது, சான்றோர் எப்போதும் நமக்கு இனிமையான சொற்களையே கூறிக் கொண்டு இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சில சமயம் நம் மனதிற்கு கசப்பான விஷயத்தை கூட சொல்லலாம் ஆனால் அவர்கள் பயனில்லாத விஷயங்களை கூறக் கூடாது என்று அர்த்தம் கொள்ளலாம். 

இன்னும் சற்று ஆழமாக சிந்தித்தால், சான்றோர் எனப்படுபவர் எப்போதும் நமக்கு பயனுள்ள சொற்களையே சொல்வார்கள். அவர்கள் சொல்வது நமக்கு பிடிக்கா விட்டாலும், அந்த சொற்கள் நமக்கு பயனுள்ளவை  என்று நாம்  அறிந்து  கொள்ள  வேண்டும்.

அவர்கள் சொல்வதில்  உள்ள  விஷயங்களை நாம்  எடுத்துக் கொண்டு, அவற்றை  நல்ல  வழியில்  பயன்  படுத்த  வேண்டும். 

 வள்ளுவர் மட்டும் அல்ல, நமக்கு பரிமேல் அழகர் போன்ற உரை ஆசிரியர்களும் வேண்டும்...இவற்றைப் புரிந்து கொள்ள.

Tuesday, January 8, 2013

இராமாயணம் - சிரஞ்சீவி அனுமன்


இராமாயணம் - சிரஞ்சீவி அனுமன் 


சீதை அனுமனுக்கு சிரஞ்சீவி பட்டம் கொடுத்தாள். இந்த ஏழேழு உலகம் வீழ்ந்த போதும் நீ இருப்பாய் என்று அவனை வாழ்த்தினாள். அதாவது சிரஞ்சீவியாக இரு என்ற வரம் தந்தாள். 

வீரம் நிறைந்த பனை மரம் போன்ற உறுதியான தோள்களை உடையவனே, நான் எந்த துணையும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த போது வந்து என் துயர் தீர்த்த வள்ளலே, நான் குற்றமற்ற மனம் உள்ளவள் என்பது உண்மையானால், ஓர் ஊழிக் காலம் ஒரு பகலாய் மாறி , இந்த உலகம் அத்தனையும் அழிந்த போதிலும் இன்று போல் நீ இருப்பாய் என வாழ்த்தினாள் 

பாடல் 

திருக்குறள் - அறத்தின் பயன்


திருக்குறள் - அறத்தின் பயன் 



அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைப்
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

அறத்தின் பயன் இது என்று சொல்ல வேண்டாம். பல்லக்கில் செல்பவனையும் அதை தூக்குபவனையும் பாத்தாலே புரியும். 

இந்த குறள் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. 

அது என்ன பல்லக்கு தூக்குவது பாவமா ? பல்லக்கில் செல்பவர்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்களா (அறத்தின் வழி நிர்ப்பவர்களா ?). பல்லக்கில் போவது என்பது எப்போதும் நிரந்தரமாய் இருக்குமா ? அது எப்படி வள்ளுவர் அப்படி சொல்லலாம் என்று ஒரு கோஷ்டி. 

இல்லை இல்லை அவர் அப்படி சொல்லி இருக்க மாட்டார். 

அறத்தாறு என்றால் அறத்து + ஆறு அதாவது அறத்தின் வழி என்று தான் பொருள் வருமே தவிர அறத்தின் பயன் என்று பொருள் வராது. 

அப்படி பார்த்தால் மீதி உள்ள பாடல் பொருள் சரியாக வரவில்லையே என்றால் அதற்க்கு குரலை சற்றே மாற்றி சொல்கிறார்கள்:

அறத்தாறு இதுவென வேண்டா  செவிகைப்ப 
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

செவி கைப்ப என்றால் காது போருக்க முடியாத படி பேசுவது. அர்த்தம் இல்லாமல் கத்தும் ஒருவனுக்கும் அதை பொறுத்து போகும் மற்றோருவனுக்கும் இடையில் போய் எது சரி எது தவறு என்று சொல்ல வேண்டாம் என்று அர்த்தம் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். 

சத்தம் போடுபவன் ஒன்று periya அதிகாரியாய் இருக்க வேண்டும், அல்லது பணம் படைத்தவனாய் இருக்க வேண்டும். அந்த சுடு சொற்களை பொறுத்து கொள்பவன்  ஒன்று உண்மையிலேயே தவறு செய்திருக்க வேண்டும் அல்லது பதில் பேச முடியாத பலவீனனாய் இருக்க வேண்டும். எப்படி இருப்பினும் அவர்கள் இடையே சென்று அறம் இது என்று சொல்வது எந்த பயனையும் தரப் போவது இல்லை என்று வாதிடுகிறார்கள்.

செவிகைப்ப என்ற சொல்லை வள்ளுவர் இன்னொரு குறளிலும் பயன் படுத்தி இருக்கிறார். 

சிவிகை என்ற சொல்லை எங்குமே பயன் படுத்தவில்லை 

முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன். எது சரி என்று படுகிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் .

பிரபந்தம் - எவன் அவன் ?


பிரபந்தம் - எவன் அவன் ?


நம்மாழ்வார் இறைவனை பற்றி சொல்ல வருகிறார். 

அவன் உயர்ந்த குணங்களை உடையவன் என்று சொல்லலாம். ஆனால் உயர்ந்த என்று சொன்னால் எதை விட உயர்ந்த என்ற கேள்வி வரும். ஏதோ ஒன்றை அல்லது யாரோ உருவரை காட்டி அதை விட அல்லது அவரை விட உயர்ந்த குணங்கள் உள்ளவன் இறைவன் என்று சொல்லலாம். அது சரியாக இருக்குமா ? மனிதர்களோடு வைத்து இறைவனின் குணங்களை எடை போட முடியுமா ? எனவே,  இறைவன் உயர்வு என்று எதை எல்லாம் சொல்கிறோமோ அதையும் விட உயர்ந்த குணங்களை உடையவன். உயர்வு + அற , உயர்வு என்ற ஒன்றே அற்றுப் போகும் படி உயர்ந்த குணங்களை உடையவன். உயர்வு என்று சொல்லே அவனுக்கு பொருந்தாது. அவ்வளவு உயர்ந்தவன். உயர்வு என்ற எந்த ஒன்றோடும் ஒப்பிட்டு கூற முடியாத அளவிற்கு உயர்ந்தவன் அவன்.  

நாம் பல சமயம் எது சரி, எது தவறு, எது நல்லது எது கெட்டது என்று அறியாமல் குழம்புகிறோம். அறிவு மயக்கம் கொள்கிறது. அந்த மயக்கம் அற்றுப் போகும் படி நமக்கு நல்ல புத்தியையை அருளுபவன் அவன்.

அயர்வு என்றால் மறதி. யார் இதற்க்கெல்லாம் மூல காரணம் என்பதை சில சமயம் மறந்து நாம் தான் எல்லாம் என்று நினைக்கத் தலைப் படுகிறோம். என்னால் தான் எல்லாம், என்னை விட்டால் யார் இருக்கிறார்கள் இங்கே என்று ஆணவம் சில சமயம் தலைக்கு ஏறலாம். நாம் எப்படி இருந்தோம், எங்கிருந்து வந்தோம், என்ன ஆவோம் என்று தெரிந்து இருந்தாலும் அவற்றை மறந்து விடுகிறோம். அந்த மறதியையை போக்குபவன் அவன்.    

வாழ்வில் எத்தனை துயர் வந்தாலும் அவற்றை அறுத்து நமக்கு ஆறுதல் தரும் அவனுடைய ஜோதிமயமான திருவடிகளை தொழு என் மனமே 

என்று தன் மனதிற்கு சொல்கிறார் நம்மாழ்வார். 

(யாரை தொழும்படி நம்மாழ்வார் தன் மனதிற்கு கட்டளை இடுகிறார் - +2 வினாத்தாள் - 5 மதிப்பெண்கள் ...:))

பாடல் 

Monday, January 7, 2013

திருக் குறள் - அறத்தின் பெருமை


திருக் குறள் - அறத்தின் பெருமை 


அறத்தின் பெருமை என்ன என்று அறிந்து கொள்ள வேண்டுமானால் எங்கும் போக வேண்டாம். பல்லக்கின் மேல் இருப்பவனையும், பல்லக்கு தூக்குபவனையும் பார்த்தாலே போதும்.

பாடல்

Sunday, January 6, 2013

பிரபந்தம் - அறிவின் பயன்


பிரபந்தம் - அறிவின் பயன்


எவ்வளவு படித்தாலும் அதன் பயன் என்ன ? பணம் சம்பாதிப்பது - சொத்து சேர்ப்பது - சேர்த்த சொத்தை அனுபவிப்பது அவ்வளவுதானா ? இதைத் தாண்டி எதுவும் இல்லையா ?

அறிவு பெற்றதின் பலன் மீண்டும் பிறவாமை என்ற நிலை அடைதல். 

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

என்பார் வள்ளுவர். மற்று ஈண்டு (இங்கு) வாரா நெறி...இங்கு வரதா முறையை காண்பது மெய்பொருள் கண்டவர்களின் கடமை.  

எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்பார் மணிவாசகர். 

இன்னுமோர் கருப்பையூர் வாராமற் கா என்று புலம்புகிறார் பட்டினத்தார் ....

இங்கு நம்மாழ்வார் இறைவன் தான் அறிவு பெற்றதின் பயன் என்கிறார். இறைவனை அறிதல், பிறவி என்னும் கடலை நீந்தி, அவனை அடைதல் இந்த அறிவு பெற்றதின் பலன்.

எனக்கு தொல்லை தரும் வினைகள் என்னை எப்போதும் என்னை சூழ்ந்து கொண்டே இருக்கின்றன. நீ என் அருகில் இருந்தால் அவற்றிற்கும் எனக்கும் உள்ள தொடர்பை அறுத்து, உன் அடி சேர அருள் புரிவாய். இந்த உடல் புலன்களின் ஆசையின் பின்னே சென்று கொண்டு இருக்கிறது. நெய் கொண்டு தீயை அவிப்பதைப் போல, இந்த புலன்கள் கேட்பதை எல்லாம் கொடுத்து அவற்றின் ஆசைகளை நிறைவேற்றப் பார்க்கிறேன். மேலும் மேலும் வேண்டும் என்று அவை கேட்டுக் கொண்டே இருக்கின்றன. அடியில்லாக் குழியில் எவ்வளவு போட்டாலும் அது நிறையாது. அது போல, எவ்வளவு தந்தாலும் இந்த புலன்கள் இவற்றின் ஆசைகளில் இருந்து திருப்தி அடைவதே இல்லை. இப்படி ஆசைகளின் பின்னே போய் இன்னும் எத்தனை நாள் உன்னை விட்டு விலகி இருப்பேன் ?

உன் திருவடியையை அடையும் பேரை எனக்கு அருள்வாயா என்று வேண்டுகிறார். 

பாடல் 

புற நானூறு - வராத குதிரை


புற நானூறு - வராத குதிரை 


இலக்கியங்கள் பொதுவாக அரசர்களையும், அவர்களின் வீர தீர பிரதாபங்களையும், அவர்களின் உறவுகளையும் பற்றியே பேசுகின்றன. அப்படி எழுதுவதால், அரசர்களிடம் இருந்து பரிசு கிடைக்கலாம். அரசியல் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாதாரண மக்களை பற்றி யார் கவலைப் படப் போகிறார்கள். சொல்லப் போனால், போர்களினால் அதிகம் பாதிக்கப் படுவது சாதாரண மக்கள் தான். குடும்பத் தலைவன் போரில் இறந்து போனால், அந்த குடும்பம் என்ன பாடு படும். இறந்தவனின் மனைவி, அவன் பிள்ளைகள் என்று அவர்களின் துக்கம் சொல்லி மாளாது. 

போரும், அதனால் எப்படி சாதாரண மக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பது பற்றியும் புற நானூறு பேசுகிறது. 

போர் முடிந்து விட்டது. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் அவர்கள் வீட்டு ஆண்கள் வீடு வந்து சேர்ந்து விட்டார்கள். என் கணவன் இன்னும் வரவில்லை. குட்டி பையன் வேறு அப்பா எங்கே , அப்பா எங்கே என்று கேட்கிறான். இரண்டு பெரிய ஆறுகள் ஒன்றோடு ஒன்று கலக்கும் இடத்தில் உள்ள பெரிய மரம் எப்படி விழுந்து விடுமோ அது போல் அவனும் விழுந்து விட்டானோ ?
 
பாடல் 

Friday, January 4, 2013

திருஅருட்பா - வாலிருந்தால் வனத்திருப்பேன்


திருஅருட்பா - வாலிருந்தால் வனத்திருப்பேன்


பிறர்க்காக வாழ்வது, மற்றவர்களின் இன்பத்தில் தான் இன்பம் காண்பது, தியாகம், போன்றவை மனிதர்களுக்கே உரித்தானது.இரத்த தானம் தரும் மான் இல்லை, காட்டின் விடுதலைக்காக சிறை சென்ற சிங்கம் இல்லை, நாள் எல்லாம் பறந்து களைத்து கொண்டு வந்த நெல் மணியை தானம் செய்யும் புறா இல்லை...பிற உயிர்களை சந்தோஷப் படுத்தி அதில் இன்பம் காணுவது மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு. 

அதை விடுத்து வால் ஒன்று தான் நமக்கும் அதற்க்கும் வித்தியாசம் என்று வாழக் கூடாது. 

பால் சோறாக இருந்தால் வயிறு முட்ட சாப்பிடுவேன். வாழை, பலா, மா என்று பழம் ஏதாவது கிடைத்தால் அதன் தோலைக் கூட கிள்ளி யாருக்கும் தர மாட்டேன். எனக்கு வால் மாட்டும் தான் இல்லை. இருந்திருந்தால், வனத்தில் வாழும் ஒரு மிருகமாக இருக்க எல்லா தகுதியும் உள்ளவன். நான் இருந்து என்ன செய்யப் போகிறேன் என்று தன்னை தானே நொந்து கொள்கிறார் வள்ளல் பெருமான்  

பாடல்   


பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய் 

பொருள் 

பாலிலே கலந்த சோறெனில் = பாலோடு கலந்த சோறு என்றால்

விரைந்தே = வேக வேகமாக

பத்தியால் = ஆர்வத்தோடு

ஒருபெரு வயிற்றுச் = என் பெரு வயிறு என்ற. பருத்த தொந்தி நம்மதென்று  நாம் இருக்க சுடுகாட்டு நாய் நரி பேய் கழுகும் தம்மதென்று  தாம் இருக்கும் தான் என்பார் பட்டினத்தார் 


சாலிலே = பெரிய பாத்திரத்தில் 

அடைக்கத் தடைபடேன் = அடைக்க தயக்கம் கொள்ள மாட்டேன்

வாழை தகுபலா மாமுதற் பழத்தின் = வாழை, பலா, மா முதலிய பழங்களின்

தோலிலே எனினும் = தோலில் கூட
 
கிள்ளி = நகத்தால் கிள்ளி  எடுத்து

ஓர் சிறிதும் = ஒரு சின்ன துண்டு கூட 

 சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் = என்னிடம் வந்தவர்களுக்கு தர துணிய மாட்டேன்

வாலிலேன் = எனக்கு வால் மட்டும் தான் இல்லை 

 இருக்கில் = இருந்திருந்தால் 

வனத்திலே இருக்க வாய்ப்புளேன் = நான் காட்டிலே மற்ற மிருகங்களோடு ஒன்றாக வாழ நல்ல வாய்ப்பு இருந்திருக்கும்

என்செய்வேன் எந்தாய்  =நான் என்ன செய்வேன், என் தந்தையே 

திரு மந்திரம் - கொடுத்துப் பாருங்கள்


திரு மந்திரம் - கொடுத்துப் பாருங்கள்


எத்தனை இருந்தாலும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று அலைகிறோம். பணம் இல்லாதவன் பணத்திற்கு அலைகிறான். பணம் இருப்பவன் அன்புக்கு அலைகிறான். நிம்மதிக்கு அலைகிறான். வேண்டாதார் யார் ?

மனித மனம் அடியற்ற பாத்திரம். எவ்வளவு இட்டாலும் நிறையாது. எப்போதும் குறையுடனேயே அலையும். பார்ப்பது எல்லாம் வேண்டும். கண்ணில் படுவது கையில் வேண்டும்.  

பெறுவதிலேயே கவனமாய் இருந்தோமே, கொடுப்பதை பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா ? கொடுக்கும் சுகம் அறிந்தால், பெறுவதில் உள்ள சுகம் மறையும். .அறம் செய்ய விரும்பு என்றால் அவ்வை. கொடுக்கும்போது திருப்தி வரும். நாம் ஒருவருக்கு உதவி செய்தோம் என்ற மன நிறைவு வரும். இன்னும் கூட செய்யலாமே என்ற எண்ணம் வரும். பிறருக்கு நன்மை செய்யும் இடத்தில் நம்மை வைத்த இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றும். அமைதியும், இன்பமும் பிறக்கும். 

கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லையே...தானம் செய்யும் அளவுக்கு நான் என்ன அவ்வளவு பெரிய பணக்காரான என்று கேட்பவர்களுக்கு திருமூலர் பதில் சொல்கிறார். 

நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரர் தெரியமா ? நீங்கள் கடவுளுக்கே கொடுக்கக் கூடிய அளவுக்கு பெரியவர். கடவுள் நம்மிடம் என்ன கேட்க்கிறார்...ஒரே ஒரு பச்சிலை...ஒரு துளசி தளம். அவ்வளவு தான் அவனுக்கு வேண்டும். அன்போடு ஒரே பச்சை இலை கொடுத்தால் போதும் அவனுக்கு. அது முடியாதா ? 

எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை. அப்படியே கடவுள் இருந்தாலும், அவருக்கு ஒரு பச்சிலை கொடுப்பதால் எனக்கு என்ன பிரயோஜனம் என்று வாதிப்பவர்களும் இருக்கலாம். 

வேண்டாம், நீங்கள் கோவிலுக்குப் போக வேண்டாம், சாமி கும்பிட வேண்டாம்...மற்ற உயிர்கள் மேல் அன்பு இருக்கிறதா உங்களுக்கு ? போகிற வழியில் நாலு புல்லை பிடுங்கி வழியில் நிற்கும் பசுவுக்கு வயிறார கொடுங்கள். செய்யலாம் தானே ?

எங்க அபார்ட்மெண்ட் பக்கம் புல்லும் இல்லை பசு மாடும் இல்லை. இதுக்கு எல்லாம் எங்க நேரம் இருக்கிறது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். தினம் சாபிடுவீர்கள் தானே ? அதுக்கு நேரம் கட்டாயம் இருக்குமே ? அப்படி சாப்பிடும் போது, ஒரு கை உணவை காக்கைகோ, குருவிக்கோ கொடுங்கள். 

என்னங்க நீங்க புரியாத ஆளா இருக்கீங்க...அலுவலகத்தில், குளிரூட்டப்பட்ட அறையில், பெரிய உணவகங்களில் சாப்பிடும் போது காக்காவையும் , குருவியையும் எங்க போய் தேடுவது என்று அலுத்துக் கொள்கிறீர்களா ?

ஒண்ணும் முடியாவிட்டால், மற்றவர்களுக்கு நாலு நல்ல வார்த்தை சொல்லுங்கள்..அதுவே பெரிய தர்மம்தான். பொய் இல்லாத, கபடம் இல்லாத, சுடு சொல் இல்லாத...இனிய வார்த்தை சொல்லுங்கள்...அது கூட ஒருவிதத்தில் தானம் தான்....

சொல்லித் தெரியாது காமம்
சொன்னாலும் புரியாது தர்மம்...

கொடுத்துப் பாருங்கள், அதன் சுகம் தெரியும்.....

வறிஞர்க்கு நொயிர் பிளவேனும் பகிர்மின்கள் என்பார் அருணகிரி....

பாடல் 

Wednesday, January 2, 2013

இராமாயணம் - சீதையின் அன்னை


இராமாயணம் - சீதையின் அன்னை


ஒவ்வொரு வார்த்தையும் மந்திரம் தான். 

சொல்லும் நமக்கு வேண்டுமானால் அது சாதரணமாக இருக்கலாம், 

கேட்பவர்களுக்கு அது சில சமயம் உயிர் காக்கும் மருந்தாகவும் அமையலாம். உயிர் கொள்ளும்/கொல்லும்  நஞ்சாகவும் அமையலாம்.

அரக்கியின் வார்த்தைகள் திருமகளான சீதையின் உயிரை காத்தது.  

அசோகவனத்தில் சீதை துயரமே உருவாக இருந்தாள். ஒரு கட்டத்தில் உயிரை விடவும் துணிந்தாள். இராவணன் தந்த துன்பம் சொல்லி மாளாது அவளுக்கு ஒரே ஒரு ஆறுதல் திரிசடை. 

திரிசடை ஆறுதலான வார்த்தைகளை சொல்லி சீதைக்கு துணையாக இருந்தாள். யுத்தம் முடிந்து சீதை அசோக வனம் விடும் போது, நன்றி மறவாமல் திரிசடையை பார்த்து கூறுகிறாள் 

தாயே, நீ பலமுறை எனக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி இருக்கிறாய்..இராம தூதுவன் வருவான், இராமன் வருவான் என்றெல்லாம் நீ கூறிய வார்த்தைகள் எதுவும் பொய்யாகப் போனது இல்லை. இப்படி நீ சொன்னது எல்லாம் நடந்ததால், உன்னையே தெய்வமாக நான் நினைத்து இத்தனை காலம் உயிர் வாழ்ந்தேன். நான் உயிரை விட என்றோ முடிவு செய்து விட்டேன். நீ சொன்ன ஆறுதல் வார்த்தைகளால் இன்று வரை உயிர் வாழ்ந்தேன் என்றாள். அப்படி சொன்னது யார் ? தாமரை மலரை விட்டு வந்த திருமகள். 

நன்றி மறக்காத சீதையின் தாயன்பு

சீதையையை மகளாக எண்ணி அவளுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லி அவள் உயிர் காத்த திரிசடையின் தாயன்பு...

கண்ணில் நீர் பனிக்கும் அந்தப் பாடல்...

பாடல்

Tuesday, January 1, 2013

தேவாரம் - ஆசைக்கோர் அளவில்லை.


தேவாரம் -  ஆசைக்கோர் அளவில்லை. 

 
மனிதனின் ஆசைக்கு அளவே இல்லை. பற்றை விட வேண்டும் என்று சொல்ல வந்த வள்ளுவர் கூட பற்றுக பற்றற்றான் பற்றினை என்று கூறுகிறார். எல்லாவற்றையும் விடுங்கள் என்று சொல்லவந்த வள்ளுவர் பற்றற்றான் பற்றினை பற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

விட முடியவில்லை. 

திருமூலர் ஒரு படி மேலே போகிறார். இறைவனை கூட அடைய ஆசைப் படாதீர்கள் என்கிறார். 

ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்

இறைவனை அடைய வேண்டும் என்பதும் ஆசை தானே. உள்ளதிற்குள் பெரிய ஆசை அது தான். பேராசை. இறைவனை அடைய வேண்டும் ஆசைப் படுபவன் எப்படி துறவி ஆக முடியும்....

ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள்
ஆசை விட விட ஆனந்தம் ஆமே.

எங்கே முடிகிறது ? உலகம் எல்லாம் ஆளக் கிடைத்தாலும் அந்த கடல் மேலும் ஆதிக்கம்  செலுத்த ஆசை வருகிறது. குபேரன் அளவு சொத்து இருந்தாலும் ரசவாத வித்தை கற்று உலகில் உள்ள இரும்பை எல்லாம் தங்கமாக ஆசை வருகிறது. எவ்வளவு நாள் வாழ்ந்தாலும் காயகல்பம் தேடி அலைகிறார்கள். கடைசியில் உண்பதுவும் உறங்குவதும் தவிர வேறு ஒன்றும் இங்கு நிகழ்வது இல்லை. 

குழந்தையாக இருக்கும் போது பொம்மை, விளையாட்டு சாமான் என்று ஆசைப் படுகிறோம், அப்புறம் புது புது ஆடைகள், பேனா, புத்தகம், என்று போகிறது ஆசை, வயது வரும் போது எதிர் பாலின் மேல் ஆசை, அப்புறம் வேலை, பணம், அதிகாரம், சொத்து, என்று ஆசைக் கொடி படர்கிறது, பின் நல்ல உடல் ஆரோக்கியம், படுத்தால் தூக்கம், என்று ஆசையின் அளவு குறைகிறது....   நாள் ஆக ஆக இறைவன், சொர்க்கம் என்று ஆசை தடம் மாறுகிறது...இப்படி கிளை விட்டு கிளை தாவும் மனக் குரங்கு. இதில் எந்த ஆசை உயர்ந்தது எந்த ஆசை தாழ்ந்தது ? எந்த ஆசையும் இல்லாமல் இருக்க ஆசைப் படுகிறார் தாயுமானவர் இங்கே...

பாடல்


ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
    ஆளினுங் கடல்மீதிலே
  ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
    அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
    நெடுநா ளிருந்தபேரும்
  நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
    நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
    உறங்குவது மாகமுடியும்
  உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
    ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற
    பரிசுத்த நிலையை அருள்வாய்
  பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகி்ன்ற
    பரிபூர ணானந்தமே.


பொருள் 

ஆசைக்கோ ரளவில்லை = ஆசைக்கு ஒரு அளவில்லை

அகிலமெல் லாங்கட்டி ஆளினுங் = அகிலம் எல்லாம் கட்டி  ஆட்சி செய்தாலும்

கடல்மீதிலே = கடல் மீதும்

ஆணைசெல வேநினைவர் = ஆட்சி செய்ய நினைப்பார்கள்

 அளகேசன் நிகராக = அளகேசன் என்றால் குபேரன். குபேரனுக்கு நிகராக

அம்பொன்மிக வைத்தபேரும் = செல்வம் நிறைய இருக்கும் ஆட்களும்

நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர் = இரசவாத வித்தை கற்றுக் கொள்ள அலைவார்கள்

நெடுநா ளிருந்தபேரும் = நெடு நாள் இருந்த ஆட்களும்

நிலையாக வேயினுங் = இன்னும் சாகாமல் இருக்க

காயகற் பந்தேடி = காய  கல்பம்  தேடி 

நெஞ்சுபுண் ணாவர் = மனம் வருந்துவர்

எல்லாம் யோசிக்கும் வேளையிற் = எல்லாம் யோசித்துப் பார்த்தால்

பசிதீர உண்பதும் = பசியாற உண்பதும்

உறங்குவது மாகமுடியும் = உறங்குவதும் ஆக முடியும்

உள்ளதே போதும் = உள்ளதே போதும்

நான் நான் = நான் நான், எனக்கு எனக்கு

எனக் குளறியே = என்று குளறி

ஒன்றைவிட் டொன்றுபற்றிப் = ஒன்றை விட்டு ஒன்று பற்றி

பாசக் கடற்குளே வீழாமல் = பாசக் கடலில் விழாமல்

மனதற்ற = மனதற்ற. மனம் இருந்தால் தானே ஆசை வரும். மனமே இல்லா விட்டால் ? 

எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபுபதியே என்பார் அருணகிரி. நமக்கு எல்லாம் கிடைத்தால் சுகம். அவருக்கு எல்லாம் இழந்தால் சுகம். 

வித்தாரமும் கடம்பும் வேண்டாவாம் மட நெஞ்சே செத்தாரைப் போலத் திரி என்றார் பட்டினத்தடிகள்

பரிசுத்த நிலையை அருள்வாய் = பரி சுத்தமான நிலையை அருள்வாய் 

பார்க்குமிட மெங்கு = பார்க்கும் இடம் எங்கும்

மொரு நீக்கமற நிறைகி்ன்ற = ஒரு நீக்கம் இல்லாமல் நிறைந்து இருக்கின்ற

பரிபூர ணானந்தமே = முற்றும்  நிறைந்த ஆனந்தமே