Friday, January 18, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - அறியாமலே நிகழ்ந்தது


இராமானுஜர் நூற்றந்தாதி - அறியாமலே நிகழ்ந்தது 


வாழ்க்கையில் சில பேரை பார்த்து இருப்பீர்கள்...என்ன சொன்னாலும் அதற்க்கு எதிர் மறையான ஒன்றை சொல்லுவதில் அவர்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம் இருக்கும். 

நான் இன்று முதல் உணவில் கட்டுப் பாடோடு இருக்கப் போகிறேன் என்று சொன்னால், "அது எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான், மீண்டும் பழைய உணவு முறைக்கு மாறிருவ பாரு " என்று சொல்வார்கள். 

இப்படி எதைச்சொன்னாலும் ஒரு முட்டு கட்டை போடுவது அவர்கள் இயல்பு. 

கோவில், இறை வணக்கம் என்று சொன்னால் உடனே, சாமியாவாது, மண்ணாவது என்று சொல்லி விடுவார்கள். 

அவர்களை விட்டு விலகி இருப்பது நல்லது. அவர்கள் தாங்களும் செய்ய மாட்டார்கள், செய்பவர்களையும் செய்ய vidaamal, ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். 

யாரை விலக்க வேண்டும் என்று சொல்லியாகி விட்டது. 

யாரோடு சேர வேண்டும் ?  

நாம் எதைச் செய்ய முயல்கிறோமோ, அதில் நாட்டம் உள்ளவர்கள், அதில் சாதனை புரிந்தவர்கள்...அப்படி பட்டவர்களோடு நாம் இருக்க வேண்டும். அவர்கள் சொல்லுவது ஏதாவது காதில் விழும், அவர்கள் செய்வதைப் பார்த்து நாமும் ஏதாவது கற்றுக் கொள்ளலாம்...

பாடல்  

கள்ளார்பொழில் தென்னரங்கன்  கமலப்பதங்கள் நெஞ்சில்
கொள்ளாமனிசரை நீங்கி  குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாதவன்ப னிராமாநுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென்னெஞ்சு  ஒன்றறியேனெனக்குற்ற பேரியல்வே.

சீர் பிரித்த பின் 

கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமலப் பாதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிராண்டிக் கீழ் 
விள்ளாத அன்பன் இராமானுஜன் மிக்க சீலம் அல்லால் 
உள்ளாத என் நெஞ்சு ஒன்றறியேன் எனக்கு உற்ற பெரிய இயல்பே 

பொருள் 

கள் ஆர் = கள் என்றால் தேன். தேன் நிறைந்து வழியும் பூக்கள் நிரம்பிய 

பொழில் = பூங்கா, மலர்வனம், நந்தவனம் நிறைந்த

தென் அரங்கன் = திருவரங்கத்தில் உள்ள அரங்கன்

கமலப் பாதங்கள் = தாமரை போன்ற திருவடிகளை

நெஞ்சில் = மனதில்

கொள்ளா மனிசரை = வைக்காத மனிதர்களை 

நீங்கி = விட்டு நீங்கி 

குறையல் பிராண்டிக் கீழ் = திருமங்கை ஆழ்வாரின் திருவடிகளை விட்டு 

விள்ளாத = அகலாத 

அன்பன் இராமானுஜன் = அன்பனாகிய இராமானுஜனின் 

மிக்க சீலம் அல்லால் = மிகுந்த சிறப்புகள் அல்லால் 

 உள்ளாத என் நெஞ்சு = நினைக்காத என் நெஞ்சு. உள்ளா என்றால் நினைக்கும் என்ற அர்த்தத்தில் வந்தது. செய்யா எனும் வாய்பாடு.பெய்யாக் கொடுக்கும் மழை, ஓடாக் குதிரை, பாயா வேங்கை என்பது போல. 

ஒன்றறியேன் = எப்படி வந்தது என்று எனக்கு ஒன்றும் தெரியவில்லை

எனக்கு உற்ற பெரிய இயல்பே = அவனுடைய திருவடிகளை நினைத்துக் கொண்டு இருப்பது எனக்கு உண்டான இயல்பாகப் போய் விட்டது. இயல்பு என்றால் தானாக நிகழ்வது. பெரிய முயற்சி இல்லாமல், கஷ்டம் இல்லாமல் எளிதாகச் செய்வது. உண்பதும், உறங்குவதும் போல இராமானுஜனின் திருவடிகளை, அவன் கீர்த்திகளை  நினைப்பது நான் என் முயற்சி எதுவும் இன்றி இயல்பாகச் நிகழ்கின்றது. 

பக்தி என்பது செய்வது அல்ல, நிகழ்வது. 

செய்வது என்றால் ஒரு முயற்சி தேவைப்படும். பல வேலைகளுக்கு நடுவே, பக்திக்கும் நேரம் ஒதுக்கி, அதை செய்வது. 

நிகழ்வது என்பது மூச்சு விடுவது மாதிரி, இதயம் துடிப்பது மாதிரி...தானே நடக்கும் ஒரு சங்கதி. 

செய்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் தன்னிச்சையாக நிகழ்கிறது என்கிறார். 

அது உங்களுக்கும் நிகழட்டும். 


1 comment:

  1. எனக்கு உற்ற பெரிய இயல்பே-Wow!Very Different interpretation.Fantastic.

    ReplyDelete