Monday, March 24, 2014

சுந்தர காண்டம் - செயலின் தொடக்கம்

சுந்தர காண்டம் - செயலின் தொடக்கம்  


ஒரு ஆகாய விமானம் எப்போது அதிக பட்ச விசையை செலவிடும் ?

அது தரையில் ஓடி, பறக்கத் தொடங்கும் அந்த நேரத்தில், தரையை விட்டு வானை நோக்கித் தாவும் அந்த நேரத்தில் அதிகபட்ச விசை தேவைப்படும்.

அது போல, நாம் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்றால், தொடக்கத்தில் மிகுந்த உற்சாகத்துடன், மிகுந்த பலத்துடன் தொடங்க வேண்டும்.

ஆரம்பத்திலேயே, இது எங்க உருப்படப் போகுது என்று சோர்வோடு ஆரம்பித்தால், அந்த காரியம் சரியாக நடக்காது.

அனுமன், மகேந்தர மலையில் இருந்து கிளம்புகிறான்.

என்ன ஒரு உத்வேகம், செய்யத்  தொடங்கிய வேலையில் என்ன ஒரு உற்சாகம், ஒரு புத்துணர்வு....

அங்குள்ள குகைகள் எல்லாம் நசுங்கி, அவற்றில் உள்ள பாம்புகள் நெளிந்து நெளிந்து வெளியே வந்தன. அப்படி ஒரு அழுத்தம் கொடுத்து வேலைக்கு கிளம்புகிறான்.

பாடல்


வன்தந்தவரிகொள் நாகம்,
     வயங்குஅழல் உமிழும் வாய,
பொன்தந்தமுழைகள்தோறும்
     புறத்து உராய்ப் புரண்டு போவ - 
நின்று, அந்தம்இல்லான் ஊன்ற -
    நெரிந்துகீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன்வயிறு கீறிப்
     பிதுங்கினகுடர்கள் மான.

பொருள்

வன் தந்த = தந்தம் என்றால் பற்கள். வன்மையான பற்களை உடைய

வரி கொள் நாகம் = வரி வடிவம் போன்ற நாகப் பாம்புகள் அல்லது உடலில் வரிகளைக் கொண்ட பாம்புகள்

வயங்கு = விளங்கும்

அழல் = தீயை

உமிழும் வாய = வெளிவிடும் வாய்

பொன் தந்த = பொன் தரும்

முழைகள்தோறும் = குகைகள் தோறும்

புறத்து = வெளியே

உராய்ப் புரண்டு போவ = உராய்ந்து கொண்டு புரண்டு போயின

நின்று =  நின்று

அந்தம்இல்லான் = முடிவு இல்லாத (சிரஞ்சீவி ) அனுமன்

ஊன்ற  = ஊன்றி எழும்பி

நெரிந்து கீழ் = அமுக்கி , கீழ் நோக்கி

அழுந்தும் = அழுந்தும்

நீலக் குன்றம் = நீல நிறக் குன்றம்

தன்வயிறு கீறிப் = தன் வயிறு கீறி

பிதுங்கின குடர்கள் மான = குடல்கள் வெளியே வந்தன

.


Sunday, March 23, 2014

சுந்தர காண்டம் - இதுவா தேடியது ?

சுந்தர காண்டம் - இதுவா தேடியது ?


 நாம் எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம் ?

பணம், புகழ், அதிகாரம், ஆரோக்கியம், அன்பு, புலன் இன்பங்கள்,  மோட்சம்...இதில் எது வேண்டும் நமக்கு ? எல்லாம் வேண்டுமா ?

இந்த நிமிடத்தில், இன்று, இந்த வாரம் எதைத் தேடி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று நமக்குத் தெரியுமா ?

நாம் விரும்புவது ஒன்று, வேலை செய்வது மற்றொன்றுக்காக .

உடல் ஆரோக்கியம் பெற வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று நினைக்கிறோம்...ஆனால் உணவு விடுதிக்கு சென்று வேண்டாததை எல்லாம் உண்கிறோம்.

இது என்ன மதியீனம்.

அனுமன், சீதையைத் தேடி இலங்கை நோக்கிப் புறப்பட்டான்.

போகிற வழியில் வானவர் நாட்டை ( துறக்க நாடு) கண்டான்.  பொன்னும், பொருளும் நிறைந்த இடம், அழகான இளம் பெண்கள், இனிய இசை, கற்பக மரம் நிறைந்த சோலைகள்.

நாமாக இருந்தால், கொஞ்சம் தங்கி , அந்த ஊரையெல்லாம் சுற்றி பார்த்து விட்டு, நிதானமாக போய் இருப்போம்.

அனுமன்  அறிவாளி.

இது அல்ல நம் நோக்கம் என்று உடனே அறிந்து கொண்டு அங்கிருந்து விலகுகிறான்.


பாடல்

ஆண்தகை, ஆண்டு, அவ் வானோர் துறக்க நாடு அருகில் கண்டான்;
'ஈண்டு, இதுதான்கொல் வேலை இலங்கை?' என்று ஐயம் எய்தா,
வேண்டு அரு விண்ணாடு என்ணும் மெய்ம்மை கண்டு, உள்ளம் மீட்டான்;

'காண் தகு கொள்கை உம்பர் இல்' என, கருத்துள் கொண்டான்.

பொருள்

ஆண்தகை = ஆண்மையில் சிறந்த அனுமன்
ஆண்டு = அங்கு

அவ் வானோர்  = அந்த வானவர்கள் (தேவர்கள்)

துறக்க நாடு = விண்ணோர் உலகம் (சொர்க்கம்)

அருகில் கண்டான் = பக்கத்தில் பார்த்தான்

'ஈண்டு, = இங்கு

இதுதான்கொல் = இதுதான்

வேலை = கடல் சூழ்ந்த

இலங்கை? = இலங்கை

என்று ஐயம் எய்தா = என்று ஐயம் கொண்டான்

வேண்டு = எல்லோரும் விரும்பும்

அரு விண்ணாடு = அருமையான சுவர்க்கம்

என்ணும் மெய்ம்மை கண்டு = என்ற உண்மையை கண்டு கொண்டு

உள்ளம் மீட்டான் = அதன் பின் சென்ற தன் உள்ளத்தை மீட்டுக் கொண்டான்


'காண் தகு கொள்கை உம்பர் இல்' என = காண வேண்டிய கொள்கை, அதாவது சீதை, இந்த இடத்தில் இல்லை

கருத்துள் கொண்டான் = என்று கருத்தில் கொண்டான்.

நாம் ஒரு கொள்கை நோக்கி செல்லும் போது , நடுவில் இந்த மாதிரி சபலங்கள் , குறுக்கீடுகள் வரத்தான் செய்யும். அவற்றில் மயங்கி நாம் நின்று விடக் கூடாது. நாம் எங்கு செல்ல வேண்டுமோ அதில் குறியாக இருக்க வேண்டும்......

சுந்தர காண்டம் தரும் முதல் பாடம் இது....



Saturday, March 22, 2014

அற்புதத் திருவந்தாதி - அக்கோலத்தே அவ்வுருவேயாம்

அற்புதத் திருவந்தாதி - அக்கோலத்தே அவ்வுருவேயாம் 


படித்து அறிவது என்பது ஒன்று
அனுபவத்தில் உணர்ந்து அறிவது என்பது வேறு ஒன்று

அனுபவத்தில் கிடைப்பதை படித்து அறிய முடியாது.

இறை அனுபவம் என்பது படித்து அறிவது அல்ல. ஆயிரம் புத்தகம் படித்தாலும், காதலியின் கடைக் கண் சொல்லும் செய்தி புரியாது. அதற்கு அனுபவம் வேண்டும்.

காரைக் கால் அம்மையார், இறைவனைப் பற்றி  கூறுகிறார்.

பாடல்

நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக!
நீல மணிமிடற்றா னீர்மையே - மேலுலந்த
தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கு
மக்கோலத் தவ்வுருவே யாம்.

பொருள்

நூலறிவு பேசி = புத்தக அறிவு பற்றி பேசி, விவாதம் பண்ணி

நுழைவிலா தார் திரிக! = நுழைவு இல்லாதார் திரிக. அனுபவம் என்ற உணர்வு தன்னில் நுழையாதவர்கள் மனம் போன படி பேசித் திரியட்டும்


நீல மணிமிடற்றா = நீல மணி போன்ற கழுத்தை உடைய

நீர்மையே = கீழாக இருக்கும்
மேலுலந்த = மேல் உலந்த = அனைத்திற்கும் மேலாக இருப்பது

தெக்கோலத் = எந்த கோலத்தில்

தெவ்வுருவா = எந்த உருவத்தில்

யெத்தவங்கள் = எந்த தவங்கள்

செய்வார்க்கு = செய்பவர்களுக்கு

மக்கோலத் = அக் கோலம்

தவ்வுருவே யாம். = அவ் உருவேயாம்

யார் எப்படி, எந்த உருவத்தில், எப்படி நினைத்து தவம் செய்கிறார்களோ, அந்த உருவத்தில்  அவன் இருப்பான்.

மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் ஒரு பெண்ணால் எழுதப் பட்ட பாடல்.



பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார்

பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார் 


இவ்வம்மையார் காரைக்காலில் உதித்ததால் இப்பெயர் பெற்றார். இவருடைய இயற்பெயர்  புனிதவதி.

அற்பத்து மூன்று நாயன்மார்களில் 3 பெண்கள். அவர்களில் இவர்  ஒருவர்.

அவர், பரமதத்தன் என்பவரை மணந்து இல்லறம் நடத்தி  வந்தார்.

ஒரு நாள் பரம தத்தனின் கடைக்கு வந்த வணிகர்கள் அவரிடம் இரண்டு மாங்கனிகளை தந்தனர். அவரும், அதை தன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த கனிகளை பெற்றுக் கொண்ட புனிதவதியார், மதியம் கணவன் உணவு உண்ண வரும்போது தரலாம் என்று அதை வைத்து  இருந்தார்.

அப்போது பசியோடு ஒரு சிவனடியார் வந்தார்.

புனிதவதி அவருக்கு ஒரு மாங்கனியை உணவாக  கொடுத்தார்.

பின், பரமதத்தன் உணவு உண்ண அந்த போது , மீதி இருந்த ஒரு மாங்கனியை அவருக்கு கொடுத்தார். அதன் சுவை மிக நன்றாக இருக்கவே, அவர் இன்னொரு மாங்கனியும் வேண்டும் என்று கேட்டார்.

புனிதவதியார், இறைவனை வேண்ட, சிவன் அருளால் அவருக்கு ஒரு மாங்கனி கிடைத்தது.

அதை பரமதத்தனுக்கு கொடுத்தார்.

இரண்டாவது மாங்கனியின் சுவை மிக மிக இனிமையாக இருக்கவே, இது ஏது என்று கணவன் கேட்ட போது பொய் உரைக்காமல் இறை அருளால் மாங்கனி கிடைத்ததை  கூறினார்.

பரமதத்தன் நம்பவில்லை. அப்படியானால் இன்னொரு மாங்கனி இறைவனிடம் கேட்டு  பெற முடியுமா என்று கேட்டான்.

அம்மையாரும் அவ்வாறே இறைவனை வேண்டி இன்னொரு மாங்கனி பெற்றுத்  தந்தார்.

பரமதத்தன் மிரண்டு போனான்.

இந்தப் பெண் தெய்வாம்சம் நிறைந்த பெண் என்று எண்ணி, வேறு ஊருக்கு சென்று இன்னொரு பெண்ணை மணந்து  வாழ்ந்து வந்தான்.

இதை அறிந்த புனிதவதியார் அந்த ஊருக்கு உறவினர்களோடு  சென்றார்.

அப்போது, பரமதத்தன் புனிதவதியின் காலில் விழுந்து ஆசி வேண்டினான்.

கணவன் தன்னோடு வாழ மாட்டான் என்று அறிந்து, இனி இந்த இளமையும் அழகும் தேவை இல்லை என்று எண்ணி, இறைவனை வேண்டி, உடலில் உள்ள தசைகளை துறந்து பேய் வடிவம் பெற்றார்.

அதைச் சொல்ல வந்த தெய்வப் புலவர் சேக்கிழார்



ஈங்கிவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்காகத்
தாங்கிய வனப்புநின்ற தசைப்பொதி கழித்து இங்கு உன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடிவு அடியேனுக்குப்
பாங்குற வேண்டும் என்று பரமர்தாள் பரவி நின்றார். 

பொருள்

ஈங்கிவன் = இங்கு இவன் (கணவன்)

குறித்த கொள்கை = கொண்ட கொள்கை . அதாவது, புனிதவாதியான தன்னை ஒரு தெய்வப் பெண் என்று அவன் நினைத்த கொள்கை

இது = இந்த உடல்

இனி = இனிமேல்

இவனுக்காகத் = கணவனுக்காகத்

தாங்கிய = பெற்ற, கொண்ட

வனப்பு நின்ற= அழகு நின்ற

தசைப்பொதி = தசை என்ற சுமை

கழித்து = கழித்து, விடுத்து

இங்கு உன்பால் = இன்று உன்னிடம்

ஆங்குநின் தாள்கள் = அங்கு (கைலாய மலையில் ) உன் திருவடிகளை

போற்றும் = வணங்கும்

பேய்வடிவு = பேய் வடிவம் (பூத கணங்கள் )

அடியேனுக்குப் = அடியவனாகிய எனக்கு (புனிதவதியாருக்கு)

பாங்குற வேண்டும் = அழகுடன் வேண்டும்

என்று பரமர்தாள் பரவி நின்றார் = என்று இறைவனின் திருவடிகளை போற்றி  நின்றார்.

இவர்  இயற்றிய பாடல்கள் :

1. அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள்,
2. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (22 பாடல்கள்),
3. திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள் ஆகும்.

தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரம்,தேவாரப் பதிகங்கள் அமைந்தன.

தமிழ் பாடல்களை இசை வடிவில் பாடியதில் இவரே முதன்மை  பெறுகிறார்.

நேரம் இருப்பின், இந்த மூல நூல்களைப் படித்துப் பாருங்கள். 

அற்புதமான பாடல்கள். 


திருப்புகழ் - இளமை அழகு - பகுதி 2

திருப்புகழ் - இளமை அழகு   



இளமையும் அழகும் எவ்வளவு நாள் ? வெகு வேகமாக இளமை கரையும். முதுமை வந்து சேரும். அதைத் தொடர்ந்து மரணம் வரும்.

அது வருமுன்னே அவனை நினை என்று அறிவுறுத்துகிறார் அருணகிரி.

ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.

வாழ்வின் நிலையாமை புரியும்.


கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
        இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்
        கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள்         முறையோடே

 வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
        மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
        விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற            வுணர்வேனோ

 பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
        முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
        பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாயத்

தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
        நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
        சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை            பெருமாளே.


-----------------------------------------------------------------------------------------------------------

 வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
        மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
        விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற            வுணர்வேனோ
---------------------------------------------------------------------------------------------------------


பொருள்

 வெட்ட விட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென = வெட்ட விட வெட்ட , கிடஞ்சம் கிடஞ்சம் என்று பறைகள் எழுப்பும் ஒலி ஒரு புறம்.

மக்களொரு மிக்கத் = மக்கள் ஒரு மிக்க = மக்கள் ஒன்றாக 

தொடர்ந்தும் = தொடர்ந்து வந்து  

புரண்டும் = வழி எல்லாம் அழுது புரண்டு 

வழி  விட்டு = வழி விட்டு 

வரு மித்தைத் = வரும் இத்தை = வரும் துன்பத்தை  

தவிர்ந்து = விலக்கி 

உன் பதங்களுற வுணர்வேனோ = உன் திருவடிகளை உள்ளுக்குள் உணர்வேனோ?






(தொடரும்)

Thursday, March 20, 2014

திருப்புகழ் - இளமை அழகு - பாகம் 1

திருப்புகழ் - இளமை அழகு   



இளமையும் அழகும் எவ்வளவு நாள் ? வெகு வேகமாக இளமை கரையும். முதுமை வந்து சேரும். அதைத் தொடர்ந்து மரணம் வரும்.

அது வருமுன்னே அவனை நினை என்று அறிவுறுத்துகிறார் அருணகிரி.

ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.

வாழ்வின் நிலையாமை புரியும்.


கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
        இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்
        கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள்         முறையோடே

 வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
        மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
        விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற            வுணர்வேனோ

 பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
        முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
        பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாயத்

தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
        நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
        சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை            பெருமாளே.


பொருள்


கட்டழகு விட்டுத் = கட்டழகு விட்டு 

தளர்ந்தங் கிருந்து = தளர்ந்து அங்கு இருந்து.

முனம் = முன்பு

இட்டபொறி தப்பிப் = இருந்த புலன்கள் நம்மை விட்டு தப்பிப் போய்

 பிணங்கொண்ட தின் = பிணம் என்று ஆன பின்

சிலர்கள் = சிலர்

கட்டணமெ டுத்துச் = கட்டணம் எடுத்து. கூலிக்கு

சுமந்தும் = சுமந்து சென்று

பெரும்பறைகள் = பெரிய பறைகள்

முறையோடே = முறைப் படி



(தொடரும்)

சுந்தர காண்டம் - 2 - துன்பம் நேர்கையில்

சுந்தர   காண்டம் - துன்பம் நேர்கையில்  



நமக்கு  துன்பம் வந்தால் நாம் என்ன செய்வோம் ?

முதலில், எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று நொந்து கொள்வோம்.

 பின்,  துன்பத்திற்கு யார் யார் எல்லாம் காரணம் என்று மனதுக்கு தோன்றுகிறதோ அவர்களை எல்லாம் திட்டித் தீர்ப்போம்.

பின், இந்த துன்பத்தில் இருந்து விடுபட நமக்கு உதவி செய்யாதவர்கள் மீது கோபம் கொள்வோம்.

பின், எதிலும் எரிச்சல். எதிலும் ஒரு பிடிப்பின்மை. நாட்டமின்மை என்று உலகே அஸ்தமானம் ஆனது போல் இடிந்து போய் உட்கார்ந்து விடுவோம்.

இராமன் என்ன  செய்கிறான்,நமக்கு எப்படி  வழி காட்டுகிறான் என்று பார்ப்போம்:

1. முதலாவது, மனைவியிடம் அன்பாக  இருக்கிறான். அவள் அழகை இரசிக்கிறான். இராஜ்யமே போய் விட்டது என்று இடிந்து போய்  விடவில்லை.

2. இயற்கையை இரசிக்கிறான், மனைவியோடு சேர்ந்து. பணம் போனால் என்ன ? இராஜ்ஜியம் போனால் என்ன ? பதவி போனால் என்ன ? என் அன்பு மனைவி  என்னோடு இருக்கிறாள் என்று உலகை அவளோடு சேர்ந்து இரசிக்கிறான்.

3. மற்றவர்கள் மேல் அன்பாக இருக்கிறான். குகனிடம், சுக்ரீவனிடம், வீடணினிடம்  சகோதர அன்பு  பாராட்டுகிறான்.

4. விருந்தில் கலந்து கொள்கிறான்.

5. மற்றவர்களுக்கு உதவி செய்கிறான்.  நானே துன்பத்தில் இருக்கிறேன், இவர்கள் வேறு என்னிடம் வந்து நை நை என்று ஏதோ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று எரிந்து  விழவில்லை.முடிந்த உதவிகளை செய்கிறான்.

6. துன்பத்தை எதிர்த்து  போராடுகிறான். 

7. கடமைகளைச் செய்கிறான். ஜடாயுவுக்கு நீர் கடன்  செய்தான்.

8. நிதானம் தவறாமல் இருக்கிறான்.

9. பகைவனுக்கும்  அருள்கிறான்.இன்று போய் நாளை வா என்று நிதானமாக இருக்கிறான்.

10. எல்லாம் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறான்....

11. அநீதியை எதிர்த்து போராடுகிறான்.

12. மன்னிக்கிறான்.

துன்பம் வரும். எல்லோர் வாழ்விலும் துன்பம் வரும். துன்பம் வந்தால் எப்படி இருக்க  வேண்டும் என்று வாழ்ந்து காட்டுகிறான் இராமன்.

இத்தனையும் சுந்தர காண்டம் நமக்குச் சொல்லித் தருகிறது.

மிகப் பெரிய துன்பத்தை தாங்கி, போராடி எவ்வாறு இராமன் வாழ்ந்து காட்டினான் என்று   பாடம் நடத்துகிறது சுந்தர காண்டம்.

இனி வரும் பகுதியில் இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சுந்தர காண்டத்தை , நம் வாழ்க்கைக்கு அது எப்படி வழி காட்டும் என்ற கோணத்தில்   சிந்திப்போம்.