Wednesday, October 9, 2019

கந்தர் அலங்காரம் - நீரில் பொறி என்று அறியாத நெஞ்சே

கந்தர் அலங்காரம் - நீரில் பொறி என்று அறியாத நெஞ்சே 


எவ்வளவு செல்வம் இருந்தால் போதும் நமக்கு? அதற்கு ஒரு அளவு இல்லை. எத்தனை ஆயிரம் கோடி சேர்த்தாலும் போதாது போல் இருக்கிறது.

எதற்கு இவ்வளவு செல்வம்?

நிறைய செல்வம் இருந்தால் மரணத்தை வென்று விட முடியுமா? நோயில் இருந்து தப்ப முடியுமா ? முதுமை வராது போய் விடுமா?

அப்படித்தான் நினைத்தார்கள் பல அரசர்கள். பல அரக்கர்கள். உலகம் அனைத்தையும் தங்கள் அதிகாரத்தில் கொண்டு வந்து விட்டால், பகை என்பதே இல்லாமல் ஒழித்து விட்டால், பெரிய பெரிய தவம் செய்து, வலிமையான வரங்களைப் பெற்று, சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் பெற்று விட்டால், பின் நம்மை யாரும் அசைக்க முடியாது என்று நினைத்தார்கள்.

என்ன ஆயிற்று?

ஒருவரும் தப்ப முடியவில்லை.

அதை எல்லாம் பார்த்த பின்னும், இன்னும் மனிதர்கள் பொருளை தேடி குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏதோ பொருள் இருந்தால் எல்லாம் கிடைத்து விடும் என்ற எண்ணத்தில்.....

பாடல்


சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்குழாஞ்
சாரிற் கதியன்றி வேறிலை காண் தண்டு தாவடிபோய்த்
தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்
நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே.

சீர் பிரித்த பின் 

சூரில் கிரியில் கதிர் வேல் எறிந்தவன் தொண்டர் குழாம் 
சாரில் கதியின்றி வேறு இல்லை காண் தண்டு தாவடி போய் 
தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம் 
நீரில் பொறி என்று அறியாத பாவி நெடு நெஞ்சமே 


பொருள் 


சூரில் = சூர பத்மன் என்ற அரக்கன் 

கிரியில் = கிரௌஞ்ச மலை 

கதிர் வேல் = ஒளி வீசும் வேலை 

எறிந்தவன் = எறிந்தவன் 

தொண்டர் குழாம் = அவனுடைய அடியார்கள் கூட்டத்தை 
சாரில் = சார்ந்து இருப்பதைத் தவிர 

கதியின்றி = வழி இன்றி 

வேறு இல்லை = வேறு வழி இல்லை 

காண் = கண்டு கொள்  (மனமே) 

தண்டு = தண்டாயுதம் 

தாவடி = தாவுகின்ற அடி (காலாட் படை) 

போய் = அவற்றோடு போய் 

தேரில் = தேர் படை 

கரியில் =  யானைப் படை 

பரியில் = குதிரைப் படை 

திரிபவர் = இவற்றில் எல்லாம் திரிபவர் 

செல்வம் எல்லாம்  = செல்வம் எல்லாம் 

நீரில் = நீர் மேல் எழுதிய 

பொறி என்று = எழுத்து என்று 

அறியாத பாவி நெடு நெஞ்சமே  = அறியாத பாவி நெடு நெஞ்சமே 

எவ்வளவு பெரிய படை, ஆள், அம்பு, சேனை, எல்லாம் வைத்துக் கொண்டு திரிந்தவர்களின் செல்வம் எல்லாம் ஒரு நொடியில் காணாமல் போய் விட்டது. 

அப்படி என்றால் நம் செல்வம் எந்த மூலைக்கு ?

இதை சேர்க்கவா வாழ் நாள் எல்லாம் செலவழித்தோம் என்று எண்ண வேண்டும்.

செல்வம் என்ற சொல்லை தமிழர்கள் தெரிந்து எடுத்து இருக்கிறார்கள். 

செல்வோம் என்றதால் அது செல்வம் என்று ஆயிற்று. ஒரு இடத்தில் நிலைத்து நிற்காது. சென்று கொண்டே இருக்கும். எனவே, அது செல்வம். 

ஒரு பக்கம், அளவுக்கு அதிகமான செல்வம், படை, பதவி, அதிகாரம். 

இன்னொரு பக்கம் ஒன்றும் இல்லாத பக்தர்கள் கூட்டம். 

பக்தர்கள் கூட்டத்தை அடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார். 

நினைத்துப் பார்க்க முடியுமா நம்மால்?  

பெரிய ஆட்கள் நட்பு இருந்தால் நாமும் நாலு காசு பார்க்கலாம், சில காரியங்களை எளிதாக சாதித்துக் கொள்ளலாம். அப்படித்தானே நாம் நினைப்போம். அருணகிரிநாதர் சொல்கிறார், அடியார்களை சென்று சேருங்கள் என்று. 

அதற்கு ஆழமான காரணம் இருக்கிறது. 

அதை நான் சொல்வதை விட நீங்கள் சிந்தித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

சிந்தித்துப் பாருங்கள். விடை கிடைக்கும். 

தேடுதல் தானே வாழ்க்கை.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_58.html


Tuesday, October 8, 2019

அபிராமி அந்தாதி - சிந்தையுள்ளே மன்னியது

அபிராமி அந்தாதி - சிந்தையுள்ளே மன்னியது 


பக்தி இலக்கியமாக இருக்கட்டும், அற நூல் இலக்கியமாக இருக்கட்டும், அடியவர்கள் பற்றி மிக மிக உயர்வாக பேசுகின்றன.

அப்படி என்ன அடியவர்களிடம் சிறப்பு இருக்கும்? அவர் ஒரு அடியவர் என்றால், நாம் இன்னொரு அடியவராக இருந்து விட்டுப் போகிறோம். அவர் என்ன பெரிய சிறப்பு?

ஒரு பெரிய மைதானத்தில் ஒரு ஓரம் நின்று ஒரு பந்தை உதைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். மிக வேகமாக உதைக்கிறோம். நாம் உதைக்கும் கோணம் சற்றே மாறினால், அந்த பந்து சேர வேண்டிய இடத்தை விட்டு எவ்வளவு தூரம் விலகிச் சென்று விடும் தெரியுமா? தூரம் செல்ல செல்ல அது செல்ல வேண்டிய இடத்தை விட்டு விலகிச் சென்று கொண்டே இருக்கும்.

பூமியில் இருந்து இராக்கெட்டை ஏவுகிறோம். அது ஒரு டிகிரி கொஞ்சம் சாய்ந்தாலும், பல இலட்சம் கிலோ மீட்டர் செல்லும் போது, அந்த ஒரு டிகிரி மாற்றம் விரிந்து விரிந்து இராக்கெட் எங்கோ சென்று விடும் அல்லவா? அவ்வளவு பணம், நேரம், உழைப்பும் வீணாகிப் போய் விடும் அல்லவா?

அது போல, நல்லவர்கள், சான்றோர்கர்கள், அடியவர்கள் அல்லாதாவரிடம் நாம் தொடர்பு கொண்டால், சிறிது காலம் கூட போதும், அவர்களின் தாக்கத்தால், நாம் செல்ல வேண்டிய இடத்தை விட்டு எங்கோ போய் விடுவோம். எங்கே எப்போது தடம் மாறினோம் என்று தெரியாது. ஒரு சின்ன மாற்றம் தான்.  நமக்கு தெரியக் கூட தெரியாது. ஆனால், பல வருடங்கள் கழித்து, அடடா, இவ்வளவு நாள் வீணாகி விட்டதே...இனி இருக்கும் நாட்கள் கொஞ்சம் தானே....என்ன செய்வது என்று தவிப்போம்.

எனவே தான், எப்போதும் நல்லவர்கள், சான்றோர்கள், அடியவர்கள் கூட்டத்தோடு இருக்க வேண்டும்   என்பது.

பட்டர் சொல்கிறார்,

"உன்னுடைய திருவடிகள் எப்போதும் என் தலை மேல் இருக்கின்றன. நான் எப்போதும் சொல்லுவது உன் நாமமே. உன் அடியார்களுடன் கூடி  எப்போதும் உன்னைப் பற்றிய  வேதாகமங்களையே வாசிக்கிறேன்" என்கிறார்.

பாடல்

சென்னியது உன் பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே


பொருள்

சென்னியது = சென்னி என்றால் தலை. தலையில்

உன் = உன்னுடைய

பொன் = பொன் போன்ற

திருவடித் = திருவடி

தாமரை  = தாமரை மலர்கள்

சிந்தையுள்ளே = என்னுடைய சிந்தையில்

மன்னியது = மன்னுதல் என்றால் நிலைத்து இருத்தல்.

உன் திருமந்திரம் = உன்னுடைய திரு மந்திரம்

 சிந்துர வண்ணப் பெண்ணே! = சிவந்த அழகிய பெண்ணே

முன்னிய = முன் வரும்

நின் அடியாருடன் = உன்னுடைய அடியவர்களுடன்

கூடி = கூடி

முறை முறையே = முறைப்படி

பன்னியது = திரும்ப திரும்ப சொல்லுவது

உந்தன் = உன்னுடைய

பரமாகமப் பத்ததியே!* = உயர்ந்த ஆகம நூல்களையே

ஏன் அடியவர்களுடன் சேர்ந்து படிக்க வேண்டும் ? நாம் தனியே படித்துக் கொள்ளலாமே ? என்றால் கூடாது.

நம் மரபில், உயர்ந்த நூல்களை ஒரு ஆசிரியர் மூலம்தான் கற்க வேண்டும்.

நாமே படித்து கற்றுக் கொள்ளலாம் என்றால், நாம் கற்றது சரியா தவறா என்று கூட  நமக்குத் தெரியாது.

மேலும், நாமே படிப்பது என்றால், ஒவ்வொரு சொல்லாக படித்து, அதன் பொருள் என்ன  என்று விளங்கத் தலைப்படுவோம்.

முன்பே படித்த அறிஞர்கள் இருந்தால், அவர்களுக்கு பொருள் தெரியும். பொருளில் இருந்து நமக்கு  சொல்லை சொல்லித் தருவார்கள்.

பட்டர் சொல்கிறார், அபிராமியின் அடியவர்களோடு சேர்ந்து படிப்பாராம். அவருக்கு அப்படி என்றால், நமக்கு ?

கம்ப இராமாயணத்துக்கு வை மு கோவின் உரையை படிக்கும் போதுதான் தெரியும், அடடா, என்ன ஒரு உரை என்று. நாமே படித்து தெரிந்து கொள்ளலாம் என்றால்  ஒரு காலும் அந்த நுண்ணிய பொருள் நமக்கு புலப்படாது.

திருக்குறளுக்கு, பரிமேலழகர் உரை போல. நம்மால் அந்த உயரத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

சேர்ந்து படியுங்கள். படித்ததை பகிருங்கள். அனுபவம் ஆழமாகும். பொருள் விரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_8.html

Monday, October 7, 2019

அபிராமி அந்தாதி - அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை

அபிராமி அந்தாதி - அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை


ஒரு குழந்தை இந்த உலகத்தில் வந்தபின் பெறும் முதல் சுகம், தாயின் மார்பில் இருந்து பாலை சுவைப்பதுதான். அது பசியை தணிப்பது மட்டும் அல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை தருவது மட்டும் அல்ல, அன்பை, காதலை , பாசத்தையும் தருகிறது. தாயின் பாலை ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொடுத்தால் பிள்ளை அவ்வளவு நன்றாக வளராது. பால் தரும் போது அந்தத் தாயின் அரவணைப்பு வேண்டும். அவள் உடல் சூடு வேண்டும்.

ஆண்கள் கொஞ்சம் வேகம் கொண்டவர்கள். உணர்ச்சி வேகம், உடல் தரும் வேகம் இவற்றால் எதையாவது செய்து விடுவார்கள். பின்னால், அப்படி செய்து இருக்கக் கூடாதோ, அப்படி சொல்லி இருக்கக் கூடாதோ  என்று யோசிப்பார்கள். என்ன செய்வது. செய்தாகி விட்டது. சொல்லியாகி விட்டது. அதன் வேண்டாத விளைவுகளை சரிப்படுத்த வேண்டும். அங்குதான் பெண் வருகிறாள். தன்னுடைய சாமர்த்தியத்தால் ஆணுக்கு வரும் துன்பங்களை நீக்குகிறாள்.

ஆணின் வேகமும் வேண்டும். பெண்ணின் நிதானமும் வேண்டும்.

பாடல்


பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.


பொருள்

பொருந்திய = பொருத்தமான

முப்புரை = மூன்று சொல்லப்படக் கூடிய உரை. படைத்தல், காத்தல், மறைத்தல் என்ற செயல்கள்

செப்பு  = செப்பு கலசம் போல

உரை  செய்யும்  = சொல்லக் கூடிய

புணர் முலையாள் = ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்கும் தனங்களை உடையவள்

வருந்திய = அதனால், அந்த பாரத்தால் வருந்தும்

வஞ்சி = வஞ்சிக் கொடி போன்ற

மருங்குல் = இடை, இடுப்பு

மனோன்மணி = மனோன்மணியைப் போன்ற சிறந்தவள்

வார் சடையோன் = சடை முடி நிறைந்த சிவன்

அருந்திய = குடித்த

நஞ்சு = ஆலகால விஷத்தை

அமுது ஆக்கிய = அமுது ஆக்கிய

அம்பிகை = அம்பிகை, அபிராமி

அம்புயமேல் = தாமரை மலரின் மேல்

திருந்திய சுந்தரி = அமர்ந்து இருக்கும் சுந்தரி

அந்தரி = அந்தரத்தில் இருப்பவள்

பாதம் = பாதம்

என் சென்னியதே. = எங்கு இருக்கிறது என்றால் என் தலை மேல்

நஞ்சை அமுதம் ஆக்கியவள்.

நமக்கு வரும் பெரிய பெரிய துன்பங்களை நீக்குவது மட்டும் அல்ல, அவற்றையே இன்பமாக  மாற்றித் தருபவள்.

நாம் செய்த வினை காரணமாக துன்பம் வந்து சேரும். அதில் இருந்து தப்ப முடியாது.  ஆனால், அபிராமி அந்த துன்பங்களை இன்பங்களாக மாற்றி விடுவாள்.

ஆலகால விஷத்தை அமுதமாக மாற்றியவளுக்கு நம் துன்பங்கள் எம்மாத்திரம்.

என்னடா இது ஒரு பக்தனாக இருந்து கொண்டு, கடவுளின் மார்பகங்களை இப்படி கொஞ்சம் கூட  கூச்சம் இல்லமால் பேசுகிறாரே என்று சிலர் நினைக்கலாம்.

ஒரு தாயின் மார்பகத்தை ஒரு குழந்தை பார்க்கும் பார்வை வேறு, கணவனோ மற்றவர்களோ  பார்க்கும் பார்வை வேறு.

பட்டர் குழந்தையாகி விடுகிறார். கொஞ்சம் கூட  விகல்பம் இல்லை. கூச்சம் இல்லை.

அபிராமி அந்தாதி புரிய வேண்டும் என்றால், பட்டரின் மனநிலைக்கு போய் விட வேண்டும். ஒரு குழந்தையின் மன நிலையில் இருந்தால்தான் அது புரியும்.

சொல்லுக்கு பொருள் தேடும் கவிதை விளையாட்டு அல்ல இது.

சொல்லைக் கடந்து, காதலில் கரையும் இரசவாதம் இது.

அந்த சித்தி உங்களுக்கும் வாய்க்கட்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_9.html

பெரிய புராணம் - நீளு மாநிதி

பெரிய புராணம் - நீளு மாநிதி 


வீட்டுக்கு வர்றவங்களுக்கு எல்லாம் நாலு வித உணவை, ஆறுவித சுவையில் தினமும் விருந்து கொடுத்தால், கட்டுப்படியாகுமா? எவ்வளவு செலவு ஆகும்? ஏதோ நாள் கிழமை னா பரவாயில்லை. எப்போதும் செய்வது என்பது நடைமுறை சாத்தியமா என்ற கேள்வி எழும் அல்லவா?

சேக்கிழார் சொல்கிறார்...

"சிவ பெருமானின் அன்பர்கள் உள்ளம் மகிழ நாளும் நாளும் விருந்து அளித்ததால், அவருடைய செல்வம் மேலும் மேலும் பெருகி குபேரனின் தோழன் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்தார் "

என்கிறார்.

பாடல்


ஆளு நாயகர் அன்பர் ஆனவர் அளவி லார்உளம் மகிழவே
நாளு நாளும்நி றைந்து வந்துநுகர்ந்த தன்மையின் நன்மையால்
நீளு மாநிதி யின்ப ரப்புநெருங்கு செல்வநி லாவியெண்
தோளி னார்அள கைக்கி ருத்திய தோழ னாரென வாழுநாள்.

பொருள்

ஆளு நாயகர் = அடியவர்களை ஆளும் நாயகர் (சிவன்)

அன்பர் ஆனவர் = அவரிடத்தில் அன்பு கொண்டவர்கள்

அளவி லார் = எண்ணிக்கையில் அடங்காத

உளம் மகிழவே = உள்ளம் மகிழவே

நாளு நாளும் = ஒவ்வொரு நாளும்

நி றைந்து வந்து = நிறைந்து வந்து

நுகர்ந்த = விருந்தை உண்ட

தன்மையின் = தன்மையின்

நன்மையால் = அதனால் விளைந்த நன்மையால்

நீளு மாநிதி யின் = நீண்டு கொண்டே, அல்லது பெருகிக் கொண்டே சென்ற பெரிய நிதியின்

பரப்பு = அளவு

நெருங்கு செல்வ = குவிந்த செல்வத்தின்

நிலாவி = பொருந்தி

யெண்தோளி னார் = எட்டு தோள்களை உடைய  (சிவன்)

அளகைக்கி ருத்திய =  அழகாபுரி என்ற இடத்தில் இருக்கப் பண்ணிய (குபேரன்)

 தோழனாரென = தோழனார் என

வாழுநாள். = வாழும் நாளில்

அடியவர்களுக்கு அமுது படைத்ததால், இளையான் குடி நாயனாரின் செல்வம் குபேரனுக்கு இணையாக  வளர்ந்ததாம்.

இதெல்லாம் நம்புகிற படியா இருக்கு?

செலவு செய்தால், செல்வம் வளருமா ?

நான் சொல்வது தவறாக இருக்கலாம்.

தெய்வப் புலவர் சேக்கிழார் பொய் சொல்லுவாரா ? தவறான ஒன்றை செய்யச் சொல்லுவாரா ?

அவர் மட்டும் அல்ல, வள்ளுவரும் சொல்லுகிறார்.

"நீ மற்றவர்களுக்கு உதவி செய். உன் வீட்டுக்கு செல்வம் தானே வரும் " என்று.

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்

விருந்தினர் உண்ட பின் மிச்சம் இருப்பதை உண்பவன் நிலத்தில் விதை விதைக்காமலே  பயிர் விளையும் என்கிறார்.  அதவாது, அவன் வேறு ஒன்றும் செய்யாவிட்டாலும், செல்வம் அவனைத் தேடி வரும் என்கிறார்.

விவேகானந்தர் , தன்னுடைய குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரில் ஒரு மடம்  நிறுவி, ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

அப்படி அவர் அந்த மடத்தை நிறுவியபோது அவரிடம் கையில் காலணா காசில்லை.

இன்று அந்த நிறுவனம் உலகெங்கும் கிளை பரப்பி தொண்டாற்றி வருகிறது.  செல்வம்  தானே வருகிறது.

என்னுடைய சிற்றறிவிற்கும், தர்க ரீதியான சிந்தனைகளுக்கும் அப்பால் சில விஷயங்கள் நடக்கின்றன என்பதை நான் அனுபவ பூர்வமாக  உணர்ந்து இருக்கிறேன்.  அது எப்படி நிகழ்கிறது என்று தெரியாது.  ஆனால் நிகழ்கிறது.

அப்படிப்பட்ட  விஷயங்களில் இதுவும் ஒன்று.

பலன் எதிர் பாராமல் உதவி செய்து பாருங்கள், ஒன்றுக்கு பத்தாக அது உங்களுக்கு திரும்பி வரும்.

வந்தே தீரும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_7.html

Saturday, October 5, 2019

திருவாசகம் - இமைப்பொழுதும்

திருவாசகம் - இமைப்பொழுதும் 


திருவாசகத்தை மற்றவர்களும் எளிதில் புரிந்து கொண்டு, அவர்கள் திருவாசகத்தின் மேல் ஆர்வம் கொண்டு மேலும் படிக்க வழி கோல முன்பு திருவாசகம் பற்றி சில பிளாகுகள் எழுதி இருந்தேன்.

மீண்டும் மீண்டும் படிக்கும் போது, முன்பு எழுதியது எவ்வளவு ஒரு புரிதல் இல்லாமல் எழுதி இருக்கிறேன் என்று கூச்சம் வருகிறது. அவற்றை எல்லாம் நீக்கி விடலாமா என்றும் தோன்றுகிறது.

திருவாசகத்தின் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு சொல்லும் அவ்வளவு பொருள் ஆழம் நிறைந்ததாக இருக்கிறது. வாசிக்க வாசிக்க அதன் எல்லைகள் விரிந்து கொண்டே போகிறது.

நீங்களே அதை படித்து நேரடியாக உணர்வதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

திருவாசகத்தில், முதலில் வருவது சிவபுராணம்.

அதில் முதல் பத்தி, கீழே உள்ள ஐந்து வரிகள்.


நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க


அதில் இரண்டாவது வரி

"இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க"

இமைப் பொழுது கூட என் மனதை விட்டு நீங்காதான் திருவடிகள் வாழ்க என்பது  நேரடிப் பொருள்.

இதில் என்ன பெரிய ஆழம் இருந்து விடப் போகிறது என்று தான் நினைத்தேன்.

அது எப்படி ஒரு இமைப் பொழுது கூட நீங்காமல் இருக்க முடியும்?  மற்ற வேலைகள்  இருக்காதா? சாப்பிடுவது, தூங்குவது, குளிப்பது, வேலைக்குப் போவது,  மனைவி/கணவன் உறவு, பிள்ளைகளோடு நேரம் செலவிட வேண்டும்....இது எல்லாம் இருக்கும் போது எப்படி இமைப் பொழுதும் என் நெஞ்சில்  நீங்காதான் என்று மணிவாசகர் சொல்ல முடியும்.

மணி வாசகருக்கே கூட இது சாத்தியமா? அவரும் மனிதர் தானே. அவருக்கும் பசி, தாகம், தூக்கம் என்பதெல்லாம் இருக்கும் தானே?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நீங்கள் கார் ஓட்டும் பழக்கம் உண்டா? கார் இல்லாவிட்டால், ஸ்கூட்டர், மிதிவண்டி  என்று ஏதாவது ஓட்டிய அனுபவம் இருக்கும் தானே?

முதலில் எந்த வண்டியை ஓட்ட ஆரம்பித்தாலும், மனம் , மூளை, உடல் அனைத்தும்  அந்த ஓட்டுகின்ற செயலிலேயே ஒரு புள்ளியில் நிற்கும். கவண் அங்கு இங்கு சிதறாது.

Accelerator ஐ  அமுக்க வேண்டும், steering ஐ சரியாக பிடிக்க வேண்டும், கிளட்ச் போட வேண்டும்,  கியர் ஐ மாற்ற வேண்டும், இண்டிகேட்டர் போட வேண்டும், ஹார்ன் அடிக்க வேண்டும், தேவையான சமயத்தில் பிரேக் போட வேண்டும்...இப்படி  அத்தனை வேலையும் செய்ய வேண்டி இருக்கிறது.

அதுவே நாளடைவில், நம்மை அறியாமலேயே இவற்றை நாம் செய்வோம்.

வண்டி ஓட்டிக் கொண்டே, செல் போனில் பேசுவோம், CD மாத்துவோம், நீர் குடிப்போம், பாட்டு நல்லா இல்லை என்றால் அடுத்த பாட்டுக்கு செல்லுவோம், கூட வரும் நபர்களோடு பேசிச் சிரிப்போம். இதற்கு இடையில் யாராவது  நெருங்கி வந்தால் ஹார்ன் அடிப்போம். சிக்னல் மாறினால் வண்டியை நிறுத்துவோம்.

எப்படி முடிகிறது.  ஒரு நொடி கூட வண்டியை செலுத்துகிறோம் என்று அறியாமலேயே  வண்டியை செலுத்துகிறோம்.

எந்த வண்டியையும் ஓட்டாதவர்கள் கூட  வேறு விடயத்தில் இது பற்றி சிந்திக்கலாம்.

சமையல் செய்து கொண்டே போனில் பேசுவார்கள் சிலர். டிவி பார்த்துக் கொண்டே  காய் நறுக்குவார்கள்.

எப்படி முடிகிறது?

முன்ன பின்ன பழக்கம் இல்லாதவர்கள் கையில் கொடுத்தால், டிவி பார்த்துக் கொண்டே கையை நறுக்கிக் கொள்வார்கள். இரத்தம் வரும்.

இது எப்படி சாத்தியமாகிறது?

பழக்கம்.

மீண்டும் மீண்டும் செய்தால் பழகி விடும். அப்புறம், நம்மை அறியாமலேயே நாம் அவற்றை  செய்ய முடியும்.

இறைவன் மேல் அன்பு, பக்தி, காதல் என்பதை பழக்கப் படுத்தி விட்டால், மற்ற  வேலைகள் செய்து கொண்டே இருந்தாலும், அந்த பக்தி பாட்டுக்கு  நடந்து கொண்டே இருக்கும்.

மனைவியுடன் இருக்கும் போதும், பிள்ளைகளோடு விளையாடும் போதும், சமையல் செய்யும் போதும், அலுவலகத்தில் வேலை செய்யும் போதும் பக்தி பாட்டுக்கு நடந்து கொண்டே இருக்கும்.

பேசிக் கொண்டே வண்டி ஓட்டுவது போல.

ஒளவையார் ஒரு படி மேலே போகிறார்....

கனவிலும் அந்த பழக்கம் தொடரும் என்கிறார். அது எந்தப் பாடல் என்று தேடி கண்டு பிடியுங்கள்.


"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க "

புரிகிறதா?

இப்படி ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும், வாழ்கை அனுபவத்தின் தொகுப்பு இருக்கும் என்றால், என்று நாம் இதை எல்லாம் அறிந்து கொள்வது?

மலைப்பாக இருக்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_5.html




Thursday, October 3, 2019

பெரிய புராணம் - ஆறு சுவை, நாலு விதம்

பெரிய புராணம் - ஆறு சுவை, நாலு விதம் 


விருந்தாளி தூரத்தில் வரும்போதே அவருக்கு இன்முகம் காட்டி, அவர் அருகில் வரும்போது இனிய சொல் கூறி வரவேற்க வேண்டும் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

சேக்கிழார் சொல்லுகிறார்

"அவர்களை அன்போது வீட்டுக்குள் அழைத்துச்  சென்று, அவர்களுக்கு ஆசனம் அளித்து, அவர்கள் கால்களை சுத்தம் செய்து, அவர்களுக்கு அர்ச்சனை செய்து, நாலு விதமான உணவும், ஆறு வித சுவையில் அவர்கள் விரும்பும்படி விருந்தளிக்க வேண்டும்"

பாடல்

கொண்டு வந்து மனைப்பு குந்து குலாவு பாதம்  விளக்கியே
மண்டு காதலி னாத னத்திடை வைத்த ருச்சனை செய்தபின்
உண்டி நாலு விதத்தி லாறு சுவைத்தி றத்தினிலொப்பிலா
வண்டர் நாயகர் தொண்டரிச்சையி லமுது செய்யவளித்துளார்.

பொருள்


கொண்டு வந்து = விருந்தினர்களை கொண்டு வந்து

மனைப்பு குந்து = வீட்டிற்குள் அழைத்து வந்து

குலாவு = விளங்கும்

பாதம் = பாதம்

விளக்கியே = சுத்தம் செய்து , கழுவி

மண்டு காதலினா (ல்) = மிகுந்து வரும் காதலினால்

தனத்திடை வைத்த  ருச்சனை  = ஆசனத்தில் இருத்தி அர்ச்சனை

செய்தபின் =  செய்த பின்

உண்டி = சாப்பாடு

நாலு விதத்தி லாறு சுவைத் = நாலு விதத்தில் ஆறு சுவையில்

திறத்தினில் = திறமையாக செய்து

ஒப்பிலா = ஒப்புவமை இல்லாத

வண்டர் நாயகர் =  வலிமை மிக்க சிவ பெருமானின்

தொண்டர் = தொண்டர்கள்

இச்சையி ல் = விருப்பப்படி

அமுது = உணவு

செய்யவளித்துளார். = செய்யும் படி அளித்து உள்ளார்



அது என்ன நாலு விதம், ஆறு சுவை ?

நாம் உண்ணும் உணவை நான்கு விதமாக பிரிக்கலாம்.

உண்ணுபவை, தின்னுபவை , நக்குபவை, பருகுபவை என்று நான்காக பிரிக்கலாம்.

உண்ணுதல் என்றால் சோறு, காய் கறி போன்ற மென்மையான உணவுகளை சாப்பிடுவது.

தின்னுதல் என்றால் முறுக்கு, சீடை, தட்டை போன்ற கடினமான பொருட்களை சாப்பிடுவது. முறுக்கு தின்றான் என்று சொல்ல வேண்டும். முறுக்கு உண்டான் என்று சொல்லக் கூடாது.

நக்குதல் என்றால் பாயசம், தேன், பஞ்சாமிருதம் போன்றவற்றை சாப்பிடுவது. இவற்றை நக்கித்தான் சாப்பிட வேண்டும்.

பருகுபவை என்றால் மோர், பால், பழ இரசம், காப்பி, டீ போன்றவற்றை உட்கொள்வது.

காப்பி சாப்பிட்டுவிட்டு போங்கள் என்று சொல்லக் கூடாது.

இது நாலுவிதமான உணவு.

ஆறு சுவை?

தமிழிலே ஒரு பழ மொழி உண்டு.

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று.

அதற்காக அல்வாவில் உப்பு போட முடியுமா? உப்பு இல்லை என்பதால் லட்டை குப்பையில் கொட்ட முடியுமா?

உப்பு என்று சொன்னாலே சுவை என்று அர்த்தம்.

சுவை இல்லாத பண்டம் குப்பையிலே என்று பொருள்.

ஆறு சுவைகளை பாருங்கள்.



புளிப்பு, இனிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு

புளி + உப்பு
இனி+ உப்பு
கை + உப்பு
கார்(அம்) + உப்பு
துவர் +  உப்பு
உவர் + உப்பு

என்று எல்லா சுவையும் உப்பிலேயே முடியும்.  உப்பு என்றால் சுவை.

நான்கு விதமான உணவு, ஆறு விதமான சுவையில்...மொத்தம் 24 வகையான உணவு. (6 x 4)

"மண்டு காதலினால்  "

ஏதோ சாத்திரத்தில் சொல்லி இருக்கிறது என்று கடனே என்று செய்யவில்லையாம். மனதில் எழும் காதலினால் செய்தாராம். எதையும் மனம் ஒப்பி, அன்போடு செய்ய வேண்டும். .


"தொண்டரிச்சையி லமுது செய்யவளித்துளார்."

விருந்தினருக்கு, அவர்கள் விரும்பும்படி உணவு அளிக்க வேண்டும். சில பேர்  சாப்பிட உட்கார்ந்த உடன்   "கை கழுவி விட்டு வாருங்கள்" என்று சொல்லுவார்கள். அப்படி சொல்லக் கூடாது. விருந்தினர் விரும்பினால் கழுவட்டும். இல்லை என்றால் விட்டு விட வேண்டும்.  விருந்தினரை சங்கடப் படுத்தக் கூடாது.

சில பேர் விருந்து உபசரிக்கிறேன் பேர்வழி என்று அளவுக்கு அதிகமாக உணவை பரிமாறி விடுவார்கள்.  அப்படிச் செய்யக் கூடாது. அவர்கள் எவ்வளவு விரும்புகிறார்களோ , அவ்வளவு சாப்பிட அவர்களை அனுமதிக்க வேண்டும்.

இதெல்லாம் விருந்து உபசரிக்கும் முறை.

இப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள்.

பெரிய புராணம் படிப்பது, ஏதோ சில பக்திமான்கள் கதை படிக்க அல்ல. நம் கலாச்சாரம்,  பக்தி, இலக்கியம், பண்பாடு, சமயம் , தமிழ் எல்லாம் படிக்கலாம் அதில்.

முழுவதையும் இந்த பிளாகில் கொண்டுவருவது என்பது முடியாத காரியம்.

மூலத்தை தேடிப் படியுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_3.html

Tuesday, October 1, 2019

இராமானுஜர் நூற்றந்தாதி - காரிய வன்மை

இராமானுஜர் நூற்றந்தாதி  - காரிய வன்மை 


திருவரங்கத்து அமுதனார், இராமானுஜர் மேல் உள்ள பக்தியால் அந்தாதி பாடினார். நாம் ஏன் அதைப் படிக்க வேண்டும்? படித்து என்ன ஆகப் போகிறது. சரி, அவருக்கு அவர் மேல் பக்தி இருத்தது என்று வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாம். அதற்கு எதற்கு 100 பாடலைப் படிக்க வேண்டும். ஒரு வரியில் சொன்னால் போதாதா?

அது ஒரு கேள்வி.

அது ஒரு புறம் இருக்கட்டும். நாம் ஒருவருடைய வழியைப் பின் பற்றுகிறோம் என்றால், நாம் எப்படி இருக்க வேண்டும்? யாருடைய வழியைப் பின் பற்றுகிறோமோ அவர் சொன்ன மாதிரி, செய்த மாதிரி நாமும் இருக்க வேண்டும் அல்லவா?

காந்தியை நான் பின்  பற்றுகிறேன் என்றால், நானும் அகிம்ஸையை கடைபிடிக்க வேண்டும் அல்லவா. மூன்று வேளையும் மாமிசம் தின்று கொண்டு, அடி தடியில் இறங்கிக் கொண்டு, காந்தியவாதி என்று சொன்னால் எப்படி இருக்கும் ?

இராமனுஜரை பின்பற்றுகிறேன் என்றால் என்ன அர்த்தம்?  சும்மா அவர் பெயரை சொல்லிக்கொண்டு திரிவது, எந்த பிரச்சனை வந்தாலும் அவர் பார்த்துக் கொள்வார் என்று அவர் மேல் எல்லாவற்றையும் போட்டு விடுவது, அவரை வணங்குவது என்பதெலாம் அல்ல.

பின் என்னதான் செய்ய வேண்டும்?

இராமனுஜரின் அடியார்கள் காரியங்களை செய்து முடிப்பதில் வல்லவர்களாய் இருப்பார்கள். சும்மா பேசிக் கொண்டு இருக்க மாட்டார்கள் என்கிறார்.

பாடல்


சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமி ழாலளித்த
பாரிய லும்புகழ்ப் பாண்பெரு மாள்,சர ணாம்பதுமத்
தாரியல் சென்னி இராமா னுசன்றனைச் சார்ந்தவர்தம்
காரிய வண்மை, என் னால்சொல்லொ ணாதிக் கடலிடத்தே.

பொருள்


சீரிய = சிறந்த

நான்மறைச் = நான்கு வேதங்கள்

செம்பொருள் = அவற்றில் உள்ள உயர்ந்த கருத்துகளை

செந்தமி ழாலளித்த = செந்தமிழால் அளித்த

பாரிய லும் = இந்த உலகில்

புகழ்ப் = புகழ் பெற்ற

பாண்பெரு மாள் = திருப்பாணாழ்வார்

சர ணாம் = பாதங்கள் என்ற

பதுமத் = தாமரை

தாரியல் = மலர்களை

சென்னி = தலையில்

இராமா னுசன்றனைச் = இராமானுஜரை

சார்ந்தவர்தம் = சேர்ந்தவர்கள்

காரிய வண்மை = காரியம் செய்து முடிப்பதில் உள்ள வல்லமையை

என்னால் = என்னால்

சொல்லொ ணா = சொல்ல முடியாது

இக்  கடலிடத்தே = இந்த கடல் போல பெரிய உலகத்திலே


நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், பக்தி என்பது சும்மா ஏதோ பூஜை செய்வது, தூப தீபம் காட்டுவது, விரதம் இருப்பது என்று.

சும்மா பொழுது போக்குவது அல்ல. எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்று சோம்பேறியாக இருப்பது அல்ல பக்தி.


பக்தி என்பது செயல் சார்ந்தது.

காரிய வண்மை வேண்டும்.

செயல் ஊக்கம் வேண்டும். நல்லது செய்ய வேண்டும்.

இராமானுஜர் என்ன செய்தார்? எல்லோரும் வைகுண்டம் போக வேண்டும் பாடுபட்டார். அது காரிய வன்மை.

சும்மா மடத்தை கட்டிவைத்துக் கொண்டு பாடம் நடத்திக் கொண்டு இருக்கவில்லை.

இராமானுஜரின் பக்தர்கள் என்றால், காரிய வண்மை இருக்க வேண்டும்.

அந்த கரிய வண்மை எல்லாம் இல்லை என்றால் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post.html