Friday, December 13, 2019

நன்னூல் - பாயிரம் - பாகம் 3

நன்னூல் - பாயிரம் - பாகம் 3


ஒரு நல்ல நூல் எப்படி இருக்க வேண்டும் என்று நன்னூல் சொல்கிறது. ஒரு நல்ல நூலின் கூறுகள், அல்லது பகுதிகள் என்ன என்ன என்று பட்டியல் தருகிறது. அவற்றின் மூலம், அந்த புத்தகம் நமக்குத் தேவையா இல்லையா, யார் இதைப் படிக்கலாம் என்றெல்லாம் புரிந்து கொள்ள முடியும்.

அந்த கூறுகள் அடங்கிய பாடலை முதலில் பார்த்தோம். அது கீழே உள்ளது.


பாடல்

நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே .

அதில் உள்ள முதல் வரி 

"நூலின் இயல்பே நுவலின் இரு பாயிரம் தோற்றி"

அது என்ன இரு பாயிரம் ?

பாயிரம் என்பது ஒரு நூலுக்கு முன்னுரை போல. அப்படிச் சொன்னால் போதுமா ? சரியான விளக்கம் வேண்டும் அல்லவா.

பாயிரம் என்றால் என்ன என்று சொல்லுகிறார் பவணந்தியார் 

முகவுரை, பதிகம், அணிந்துரை, நூல்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை என்பது பாயிரம். 

இது என்னடா, வார்த்தைக்கு அர்த்தம் கேட்டால், அதை விட கடினமான வார்த்தைகளில் அர்த்தம் சொன்னால் என்ன செய்வது என்று திகைக்க வேண்டாம். 

எளிமைப் படுத்துவோம்.

பாடல் 

முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்

புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் .

பொருள் 


முகவுரை = நூலின் முன் பகுதி. முதலில் நூலை நமக்கு அறிமுகப் படுத்தும் பகுதி. அதை நூல்முகம் என்றும் கூறுவார்கள். 

பதிக = ஒரு நூலில் பொதுவான மற்றும் சிறப்பான பகுதிகள்  என்னென்ன என்று எடுத்துக் கூறுவது 

மணிந்துரை = அணிந்துரை = நூலின் சிறப்பை பற்றிக் கூறுவது 

நூன்முகம் =அல்லது முகவுரை. இதை புனைந்துரை என்றும் கூறுவர்.


புறவுரை = நூல் எதைப் பற்றி சொல்லாது என்று சொல்வது. அதாவது, இந்த நூல் எந்த எல்லை வரை போகும் என்று கூறுவது. 

தந்துரை = நூலில் இல்லாத சிலவற்றை பொருள் விளங்க வேண்டி, அவற்றை விளக்கிக் கூறுவது. உதாரணமாக, ஒரு இயற்பியல் (physics ) புத்தகத்தில் சில வேதியல் (chemistry ) பற்றி கூறுவது. அது இயற்பியலுக்கு சம்பந்தம் இருப்பதால். 

புனைந்துரை = நூல் முகம் 

பாயிரம்  = இவையே பாயிரம் எனப்படும். 


அதாவது நூலின் நோக்கம், அதன் சிறப்பு, அதன் எல்லை, அது எதை பற்றி எழுதப் பட்டது, என்று முதலில் கூறுவது பாயிரம்.

பாயிரத்தைப் படித்தாலே, அந்த நூலைப் பற்றி நமக்கு ஒரு எண்ணம் தோன்றும்.

இது நமக்கு ஏற்ற நூல் தானா, இதை நாம் படிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளலாம்.

முழு நூலையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. எளிதாக தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

எவ்வ்ளவு நேரம் மிச்சமாகும் என்று நினைத்துப் பாருங்கள்?

ஒரு நூலின், அறிமுகம் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்து தந்து இருக்கிறார்கள்.

அடுத்த முறை ஏதாவது ஒரு புத்தகம் வாங்க வேண்டும் நினைத்தால், அதன் முன்பகுதியைப் படியுங்கள்.  இதில் சொன்ன எல்லாம் அதில் இல்லாமல் போகலாம். ஆனால், நமக்கு ஒரு பிடி கிடைக்கும்.

ஆங்கிலத்தில் Foreward கூறுவார்களே அது.

சரி, பாயிரம் என்றால் என்ன என்று புரிகிறது. அது என்ன "இரு பாயிரம்" ?

மேலும் சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_13.html

Thursday, December 12, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ளம்மனம் விள்ளும்வகை - 108

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ளம்மனம் விள்ளும்வகை - 108 



கோவிலுக்குப் போவது, இறைவனை தொழுவது, அப்படி தொழுதால் நமக்கு வேண்டியது கிடைக்கும் என்பதெல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாத ஒன்று.

யாரோ ஒருவர் எங்கோ இருந்து கொண்டு, நான் எழுதிய பரீட்சையில் எனக்கு நிறைய மதிப்பெண் பெற்றுத் தருவார், எனக்கு வேலை வாய்ப்பை கொண்டு தருவார், என் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமைய ஏற்பாடு செய்வார் என்று நினைப்பதெல்லாம் ஒரு நம்பிக்கை, ஒரு மன அமைதிக்காக இருக்கலாமே அன்றி அது முழுக்க முழுக்க உண்மை என்று அதை நம்புபவர்களே கூட ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

அப்படியே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று ஏற்றுக் கொண்டாலும், அவனுக்குத்தான் எல்லாம் தெரியுமே. நமக்கு என்ன வேண்டும் என்று அவனுக்குத் தெரியாதா? எதுக்கு அனாவசியமா போய் வேண்ட வேண்டும். பிள்ளைக்கு என்ன வேண்டும் என்று தாய்க்குத் தெரியாதா? அம்மா என் பசிக்கு உணவு தா என்று எந்த பிள்ளையும் தாயிடம் சென்று வேண்டுவது இல்லையே.

பின் எதற்காக கோவில், இறை வணக்கம் எல்லாம்?

நம்  மனதில் சில பல அழுக்குகள் இருக்கின்றனதானே ? அழுக்கே இல்லாத மனம் யாருக்கு இருக்கிறது? கொஞ்சம் கோபம், கொஞ்சம் பொருந்தா காமம்,  அந்தப் பக்கம் பொறாமை, இந்தப் பக்கம் வஞ்சம், என்று ஆயிரம் மன அழுக்குகள் இருக்கின்றதானே?

அவற்றைப் போக்கும் படி இறைவனை வேண்ட வேண்டும் என்கிறார் திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழியில்.

இறைவனே இருக்கிறானா இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரியாத போது , நம் மன அழுக்கை நீக்க அவனை ஏன் நாட வேண்டும்?

வேண்டாம்தான். அவன் செய்கிறானோ இல்லையோ, என்னிடம் இந்த இனித்த அழுக்குகள்  இருக்கின்றன, அதை மாற்றித்தா என்று வேண்டும் போது, நமக்குள் ஒரு விழிப்புணர்வு (awareness ) ஏற்படுகிறது.

நம்மிடம் உள்ள குற்றத்தை , அழுக்கை நாம் அறிந்து கொள்ளும் போது, அதை வெளிப்படையாக  ஏற்றுக் கொள்ளும் போது,  அடுத்த கட்டம் அது தானே மாறி விடும்.

ஆங்கிலத்தில் "Awareness brings its own change" என்று சொல்லுவார்கள்.

எப்போது நமக்கு நம் குறைகள் தெரியத் தொடங்குகிறதோ, அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணம்  வருகிறதோ, அப்போதே நாம் அந்த குறைகளில் இருந்து மெல்ல மெல்ல  வெளியே வரத் தொடங்குவோம்.

அதற்காகவேணும் , இறைவனைத்  தொழலாம்.அது ஒரு குறியீடு. அவ்வளவுதான்.


பாடல்

கள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர்வெள்ளம்முது பரவைத்திரை விரிய,கரை யெங்கும்தெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத்துள்ளும்,என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே.



பொருள்

கள்ளம் மனம் = கள்ளம் நிறைந்த மனம். குற்றம், அழுக்குகள்  நிறைந்த மனம்.

விள்ளும் வகை  = அதில் இருந்து விடுபடும் வகை

கருதிக் = நினைத்து

கழல் தொழுவீர் = அவன் திருவடிகளைத் தொழுவீர்

வெள்ளம் = நீர், அதிகமான நீர் நிறைந்த

முது பரவைத் = பழைய கடல்

 திரை விரிய = அலை அடிக்க

கரை யெங்கும் = கரை எல்லாம்

தெள்ளும் மணி திகழும் = கொழித்துக் கிடக்கும் மணிகள் நிறைந்த

சிறு புலியூர்ச் = சிறு புலியூர்

சல சயனத் துள்ளும் = சல (நீர்) சயனத்திலும் (தூக்கத்தில்)

என துள்ளத்துளும்  = எனது உள்ளத்தின் உள்ளும்

முறைவாரை = உறைவாரை , இருப்பவரை

யுள் ளீரே. = நீங்கள் நினையுங்கள்

சிறுபுலியூர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்று. 11 - ஆவது தேசம்.

நாக பட்டினத்துக்கும், மாயவரத்துக்கும் நடுவில் உள்ளது. மாயவரம் (மயிலாடுதுறை)  போனால், அங்கிருந்து ஒரு வாடகை காரில் போய் விட்டு வந்து விடலாம். சின்ன கிராமம். அழகான கோவில்.

பெருமாள் பால சயனத்தில் இருக்கும் கோலம்.

தெற்கு நோக்கிய சயனம் (இது ஒன்று, ஸ்ரீ ரங்கம் மற்றது).

திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்த திவ்ய தேசம். பத்து பாடல்கள் பாடி இருக்கிறார். தேன் சொட்டும் பிரபந்தங்கள். மற்றவற்றைப் படித்துப் பாருங்கள்.

கள்ள மனம் மாறும்.

ஒரு முறை கருடனுக்கும், ஆதி சேஷனுக்கும் சண்டை வந்ததாம். பெருமாளுக்கு  சேவை செய்வதில் யார் சிறந்தவர் என்று. அந்த சண்டையை பெருமாள் இந்த த் திருத்தலத்தில் வைத்து சமரசம் செய்து வைத்தாராம்.

இங்கே ஆதி சேஷனுக்கு நில மட்டத்துக்கு அடியில் சன்னிதானம் இருக்கிறது.

ஒரு சனி ஞாயிற்றுக் கிழமை , ஒரு எட்டு போயிட்டு வரலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/108.html

Tuesday, December 10, 2019

நன்னூல் - நல்ல நூலின் இயல்பு - பாகம் 2

நன்னூல் - நல்ல நூலின் இயல்பு  - பாகம் 2


ஒரு நல்ல நூலுக்கு இலக்கணம் என்ன? ஒரு நூல் எப்படி அமைய வேண்டும் என்று ஆராய்ந்து அதற்கு ஒரு வழி வகுத்து இருக்கிறார்கள்.

ஒரு மனிதன் என்றால் எப்படி இருக்க வேண்டும் ?

இரண்டு கண், ஒரு மூக்கு, இரண்டு காது, ஒரு வாய், அதில் 32 பற்கள் என்று ஒரு வரை முறை இருக்கிறது அல்லவா?

அது போல ஒரு நூலின் வரை முறை என்ன என்று சொல்கிறார் பவணந்தியார்.

பாடல்

நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே .

பொருள்

நூலி னியல்பே = நூலின் இயல்பு, அதாவது தன்மை

நுவலின்= கூறுவது என்றால்

ஓரிரு = ஒன்று அல்லது இரண்டு

பாயிரந் தோற்றி = பாயிரம் கூறி

மும்மையி னொன்றாய் = மூன்று வகை நூல்களில் ஒன்றாக

நாற்பொருட் பயத்தோடு = நான்கு  பயன்களைத் தந்து

எழுமதந் தழுவி = ஏழு மதங்களை தழுவி

ஐயிரு குற்றமு மகற்றி = பத்து விதமான குற்றங்களை நீக்கி

அம் மாட்சியோடு  = அந்த பாங்கோடு

என் நான்கு உத்தியின் =  32 (8 x 4) உத்திகளோடு

ஓத்துப் படலம் = ஓத்துப் படலம்

என்னு முறுப்பினிற் = என்ற இரு உறுப்புகளைக் ஒண்டு

சூத்திரங் = சூத்திரம்

காண்டிகை = காண்டிகை

விருத்தி யாகும் = விருத்தியாகும்

விகற்ப = விகற்பம்

நடை பெறுமே . = பெற்று நடை தொடரும்

ஒரு நூல் என்றால் இத்தனையும் இருக்க வேண்டும்.

பாதிக்கு மேல் நமக்கு ஒன்றும் புரியவில்லை.

இதெல்லாம் கேள்விப் பட்டதே இல்லையே.

நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர், ஒவ்வொரு வரியையும் பின்னால் விளக்குகிறார்.

அனைத்தையும் படிக்க இருக்கிறோம்.

ஒவ்வொரு வரிக்கும் ஒரு சூத்திரம் எழுதி இருக்கிறார்.

எவ்வளவு நுட்பமாக சிந்தித்து இருக்கிறார்கள்.

தமிழ் படிப்பதை விடுங்கள், அதில் ஒரு நூலை படித்து முடிக்கவே ஒரு ஆயுள் காலம் போதாது.  இதில் மற்றவற்றை படிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/2.html


Sunday, December 8, 2019

நன்னூல் - ஒரு புத்தகம் எப்படி இருக்க வேண்டும் ? - பாகம் 1

நன்னூல்  -  ஒரு புத்தகம் எப்படி இருக்க வேண்டும் ? - பாகம் 1

இப்போதெல்லாம் கோடிக் கணக்கில் புத்தகங்கள் வருகின்றன. நாள் இதழ், வார இதழ், மாத இதழ், நாவல்கள்,கவிதைகள், கட்டுரைகள், இலக்கியங்கள், அறிவியல், வரலாறு, விளையாட்டு, கணிதம், சமையல் என்று எல்லா துறைகளிலும் நூல்கள் வருகின்றன. 

எதைப் படிப்பது, எதை விடுவது? 

இருக்கும் நாட்களோ கொஞ்சம். அதில் ஆயிரம் வேலை இருக்கிறது. இதில், படிப்பதற்கு என்று உள்ள நேரம் மிக மிகக் குறைவு. அந்த நேரத்தில் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், நாம் தேர்ந்து எடுக்கும் நூல்கள் சிறந்ததாக இருக்க வேண்டும் அல்லவா?

சிறந்த நூல் என்றால் என்ன? அதன் இலக்கணம் என்ன? எப்படி சிறந்த நூலை தேர்ந்து எடுப்பது?

ஒரு புத்தகத்தை எடுத்தால் இது நமக்கு உதவுமா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது? நாம் கண்டு பிடிக்க அந்த நூல் ஆசிரியர், அந்த நூலை பதிப்பித்தவர் எல்லாம் என்ன செய்ய வேண்டும்? 

இதை எல்லாம் யோசித்து அதற்கு முறை செய்து வைத்திருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இல்லையா?

அது பற்றி சிந்திக்க இருக்கிறோம். 

நன்னூல் என்ற இலக்கண நூலில் இருக்கிறது.

படிக்கும் ஆர்வம் உண்டு என்றால், இந்த blog இந்த comment பகுதியில் "yes" அல்லது  "ஆமாம்" என்று  type செய்து "post it " பட்டனை அழுத்தவும்.

உங்கள் பேரைச் சொல்ல விருப்பம் இல்லை என்றால், you can post as Annonymous.

எத்தனை பேருக்கு தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஒரு சின்ன  முயற்சி இது. அவ்வளவுதான். 

Friday, December 6, 2019

திருக்குறள் - மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்

திருக்குறள் - மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்


சமீப காலத்தில் திருவள்ளுவர் பெரிய சர்ச்சைக்குரிய பொருளாக மாறி இருக்கிறார். இன்றைய அரசியல் வள்ளுவரையும் விடவில்லை.

வள்ளுவர் இந்துவா, இல்லை நாத்திகரா அல்லது பிற மதத்தைத் சார்தவரா என்பது விவாதத்தின் பொருள்.

இந்து என்றால், எந்தப் பிரிவைச் சேர்த்தவர் என்று அடுத்த பிரச்சனை வரும்.

அவரவர் தங்கள் பக்கத்துக்கு ஞாயம் சேர்க்க, திருக்குறளில் இருந்து ஓரிரு குறள்களை எடுத்து உதாரணம் சொல்கிறார்கள்.

அப்படி சொல்லப்படும் உதாரணங்களில், கீழே உள்ள குறளும் ஒன்று.

"மறந்தால் கூட பின், படித்துக் கொள்ளலலாம். ஆனால், பார்ப்பனர் தங்கள் ஒழுக்கத்தில் இருந்து தவறி விட்டால் பின் அதை சரி செய்ய முடியாது "

என்கிறார்.

பாடல்

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

பொருள்

மறப்பினும் = மறந்தால் கூட

ஒத்துக் கொளல்ஆகும் = மீண்டும் படித்துக் கொள்ளலாம். ஓதுதல் என்றால் மீண்டும் மீண்டும் படித்து, ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல் என்று பொருள். "ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்".

பார்ப்பான் = அந்தணர்

பிறப்பு ஒழுக்கம் = பிறவியில் வந்த ஒழுக்கம்

குன்றக் கெடும் = குறைந்தால், அது கெட்டுப் போகும்.

எது கெட்டுப் போகும் ? பிறப்பினால் வந்த பெருமை, ஒழுக்கம் குறைந்தால்  அந்தப் பெருமை  குன்றி விடும் என்கிறார்.

படித்த வேதத்தை மறந்தால் கூட, மீண்டும் படித்துக் கொள்ளலாம். அதன் மூலம் இழந்த கௌரவத்தை மீண்டும் பெற்று விடலாம்.  ஆனால், ஒழுக்கம் குறைந்தால், பின் அதை மீண்டும் பெறவே முடியாது என்ற அர்த்தத்தில் கூறி இருக்கிறார்.

ஆஹா, வள்ளுவரே பார்ப்பனர்களின் குடி பெருமையை பற்றி கூறிவிட்டார். எனவே, அவரும் ஒரு பார்ப்பனர்தான், அல்லது இந்துதான் என்று சிலர் கூறத்  தலைப்பட்டு   இருக்கிறார்கள்.

திருக்குறள் போன்ற உயர்ந்த நூல்களை படிக்கும் போது நாம் முதலில் ஒன்றை மிக மிக  தெளிவாக மனதில் கொள்ள வேண்டும்.

நாம் அந்த நூல்களின் தரத்திற்கு நம்மை முன்னேற்றிக் கொள்ள வேண்டுமே அல்லாது, அந்த நூல்களை நம் நிலைக்கு கீழே கொண்டு வர முயலக் கூடாது. 

வள்ளுவருக்கு மத, சாதி வர்ணம் பூசுவது, அந்த நூலை நம் நிலைக்கு கீழே கொண்டு வரும் முயற்சி.

செய்யலாம். அதனால் அந்த நூலுக்கோ, வள்ளுவருக்கோ ஒரு துன்பமும் இல்லை. நாம் தான், முன்னேறும் ஒரு வாய்ப்பை இழந்து நிற்போம்.

இரண்டாவது, குறள் , கீதை போன்ற நூல்களை நாம் படிக்கும் முறையே தவறு. குறளைப் படித்து, அதில் உள்ள கடின சொற்களுக்கு அகராதியில் அர்த்தம் கண்டு பிடித்து பொருள் கொள்வது சிறந்த முறை அல்ல.

சொல்லில் இருந்து பொருளுக்கு போகும் முறை சரி அல்ல.

பரிமேலழகர் போன்ற அறிஞர்கள் பொருளில் இருந்து சொல்லுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு குறளின் பொருள் தெரியும். அந்த பொருளுக்கு குறளின் சொற்கள் எப்படி பொருந்துகின்றன   என்று சொல்லுவார்கள்.

இந்த குறளுக்கு பரிமேலழலகர் உரை எழுதி இருக்கிறார்.

நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

"சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்"

என்று கூறுகிறார்.

அதாவது, ஒரு வர்ணத்துக்கு கூறினால் அது மற்ற வர்ணத்துக்கும் பொருந்தும்  என்று கொள்ளவேண்டும் என்கிறார்.


ஒழுக்கம் என்பது எல்லா வர்ணத்துக்கும் பொது. அந்தந்த வர்ணத்துக்கு ஒரு சிறப்பு அம்சம் இருக்கிறது. அதை மறந்து விட்டால் கூட பரவாயில்லை. எவரும், தங்களுக்கு விதித்த ஒழுக்கத்தை மறந்து விடக் கூடாது என்கிறார்.


மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்  வைசியன்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்


மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் சத்ரியன்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்


என்று சொல்லிக் கொண்டே போக வேண்டும். ஒன்றைச் சொன்னால், மற்றவற்றை புரிந்து கொள்ள வேண்டும்  என்று பரிமேலழகர் உரை எழுதுகிறார்.

இதில், வள்ளுவர் அந்தணர்களை மட்டும்  கூறினார் என்று சொல்வதற்கு எங்கே இடம் இருக்கிறது?

நான் முன்பே கூறியது போல, பெரிய நூல்களை படித்து நாம் நம் தரத்தை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்.  அதை விடுத்து அந்த நூலை, அந்த நூலை எழுதிய  ஆசிரியரை நம் நிலைக்கு கீழே கொண்டு வர முயலக் கூடாது.

வள்ளுவர் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.

அவர் என்ன சொன்னார் என்பதுதான் முக்கியம்.

அரசியல் பேசி, வள்ளுவரை இழந்து விட்டால், நட்டம் அவருக்கு அல்ல.

திருக்குறளை அறிய வேண்டும் என்றால், படிக்க வேண்டியது பரிமேலழகரை. உள்ளூர் பேச்சாளர்களை அல்ல.


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_6.html


Wednesday, December 4, 2019

கவிதையின் இலக்கணம் - நன்னூல்

கவிதையின் இலக்கணம் - நன்னூல் 


கவிதை  என்றால் எப்படி இருக்க வேண்டும்? எது  கவிதை?

இன்று புதுக்கவிதை, மரபுக் கவிதை என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். வார்த்தைகளை மடக்கிப் போட்டு, இது தான் கவிதை என்கிறார்கள்.

யாப்பு இலக்கணத்தில் அமைந்து விட்டால் மட்டும் கவிதை என்று சொல்ல முடியுமா?

நன்னூல் சொல்கிறது கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று.

"சில சொற்களில், பலவிதமான பொருள்களை, சிறப்பான ஒரு கண்ணாடியில், துல்லியமாக காட்டுவது போல திடமாக, நுட்பமாக சிறப்பாக சொல்வது கவிதை"

பாடல்

சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்
செவ்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கித்
திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம்

பொருள்

சில்வகை எழுத்தில் = சில எழுத்துகளில் (சொல் கூட இல்லை, எழுத்தில்)

பல்வகைப் பொருளைச் = பல விதமான பொருளை

செவ்வன் = சிறப்பான

ஆடியிற் = கண்ணாடியில்

செறித்தினிது = நுணுக்கமாக அழகாக

விளக்கித் = விளக்கித்

திட்ப = திடமாக

நுட்பஞ் = நுட்பமாக

சிறந்தன = சிறந்த வழியில் சொல்வது

சூத்திரம் = சூத்திரம் அல்லது கவிதை


அது என்ன கண்ணாடி?

ஒரு பெரிய மரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை சற்று தூரத்தில் நின்று ஒரு சின்ன கண்ணாடியில் முழுவதும் பார்க்க முடியும். அந்தக் கண்ணாடி தெளிவாக இருந்தால், மரத்தின் அத்தனை நுணுக்கங்களையும் அதில் காண முடியும். கண்ணாடி என்னவோ சின்னதுதான். ஆனால், பெரிய மரத்தை அது தன்னுள் அடக்கிக் காட்டுகிறது.

சுருக்கி மட்டும் அல்ல, நுணுக்கங்களையும் தெளிவாக காட்டும்.

அது போல, கவிதை பெரிய விஷயங்களை சில சொற்களில் தெளிவாக சொல்ல வேண்டும்.

அது மட்டும் அல்ல, கவிதை எதைச் சொல்ல வருகிறதோ, அதை உறுதியாக சொல்ல வேண்டும் . குழப்பக் கூடாது.

நுட்பமாகச் சொல்ல வேண்டும். உணர்வுகளை, அறத்தை நுட்பமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

இவ்வளவும் இருந்தால் மட்டும் போதாது, கேட்கவும் இனிமையாக இருக்க வேண்டும்.

பொதுவாக, அது சிறப்பாக இருக்க வேண்டும்.

கவிதை என்றால் அப்படி இருக்க வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_4.html

Tuesday, December 3, 2019

திருக்குறள் - வாய்ச் சொல்

திருக்குறள் - வாய்ச் சொல்


எது சரி,  எது தவறு என்று நாம் குழம்பும் நேரம் வரும்.

"அவளுக்கு என்னதான் வேணும்னே தெரியல. என்ன செஞ்சாலும் ஏதாவது குத்தம் சொல்லிகிட்டே இருக்கா .."

"அவருக்கு என் மேல் அன்பே இல்ல...என்னமோ வாழ்க்கை ஓடுது...என்ன செய்றதுன்னே தெரியல ... "

"இந்த பிள்ளைகள் இப்படி நன்றி இல்லாமல், தவிக்க விட்டு விட்டு போய் விட்டார்களே "

இப்ப என்ன செய்வது என்ற குழப்பம் வரும் நேரங்கள் உண்டு. சிக்கலான சமயத்தில்  எப்படி முடிவு எடுப்பது? யாரைக் கேட்பது ? நமக்கு நாமே சிந்தித்துக் கொண்டிருந்தால் குழப்பம் மேலும் அதிகம் ஆகுமே அன்றி குறையாது.

சரி, யாரிடமாவது என்று யோசனை கேட்கலாம் என்றால், யாரைக் கேட்பது? யார் நமக்கு சரியான வழிக்காட்டுதலை தருவார்கள் என்று நினைப்போம்.

வாழ்வில் சிக்கல் வரும்போது யாரிடம் அறிவுரை கேட்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லித் தருகிறார்.

நடந்து செல்லும் நிலம் வழுக்கினால், கையில் உள்ள ஊன்று கோல் எப்படி நமக்கு உதவி செய்யுமோ, அது போல ஒழுக்கமுடையார் வாய் சொல் இருக்கும் என்கிறார்.


பாடல்

இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றேஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்



பொருள்


இழுக்கல் = வழுக்கும் தன்மையுடைய நிலத்தில்

உடையுழி = செல்லும் போது

ஊற்றுகோல் = ஊன்று கோல் போல்

அற்றே = உள்ளது போன்றது

ஒழுக்கம் உடையார் = ஒழுக்கம் உடையவர்

வாய்ச் சொல் = வாயில் இருந்து பிறக்கும் சொற்கள்

"அறிவுடையவர் வாய் சொல்", "படித்தவர் வாய்ச் சொல் " என்று சொல்லவில்லை. ஒழுக்கம் உடையார் என்று சொல்லை தேர்ந்து எடுத்துப் போடுகிறார்  வள்ளுவர்.  படிப்பறிவு சில சமயம் குறுக்கு வழியில் கூட போகும். அதனால்தான் ஒழுக்கம் உடையவர் வாய்ச் சொல்லை கேட்க்கச் சொன்னார்.

யாரும் வேண்டும் என்றே வழுக்கும் இடத்துக்குப் போக மாட்டார்கள். போகிற இடத்தில்  தரை வழுக்கினால் என்ன செய்வது? எப்படி விறைப்பாக நின்றாலும் வழுக்கும், கீழே விழ நேரிடும். என்ன செய்வது? ஊன்று கோல் இருந்தால் கீழே விழுந்து அடி படாமல் தப்பித்துக் கொள்ளலாம். ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல் அப்படிப்பட்டது. நாம் தவறி விழுவதில் இருந்து நம்மை காக்க உதவும்.

"வாய்ச் சொல்" என்று ஏன் கூறுகிறார்? அவர்களிடம் இருந்து நேரே கேட்க வேண்டும். அவர் சொல்லி, மற்றவர் கேட்டு, அவர் இன்னொருவரிடம் சொல்லி  , இப்படி பல பேரை தாண்டி வந்தால் ஒழுக்கம் உடையவர் சொன்னது  கடைசியில் மாறிப் போய் இருக்கும்.

இன்று உள்ள பல சமயங்களைப் பார்த்தால் தெரியும். யாரோ,எப்போதோ சொன்னதை, அவர்களுடைய சீடர்கள் கேட்டு, அந்த சீடர்கள் அடுத்த தலைமுறை சீடர்களுக்குச் சொல்லி, பின் அவர்கள் மற்றவர்களிடம் சொல்லி , பலப் பல தலை முறைகள் கடந்து அவர்கள் சொன்னது இன்றைய தலைமுறையை வந்து அடைகிறது. முதலில் சொன்னது அப்படியே வந்து சேர்ந்து இருக்குமா?

"ஒழுக்கம் உடையார்". சொல்பவன் எப்படி இருந்தால் என்ன? என்ன சொல்கிறான் என்பது தானே முக்கியம் என்று கேட்கலாம். இல்லை, சொல்பவன் ஒழுக்கமாக  இருந்தால் தான் அவன் சொல்வதை கேட்க வேண்டும் என்கிறார்.  ஒழுக்கம் இல்லாதவன் சொல்வதை கேட்பது பலன் தராது  என்பது பொருள்.

நீங்கள் யார் பேச்சை கேட்கிறீர்கள் என்று ஆராய்ச்சி செய்யுங்கள். நீங்கள்  யார் பேச்சை கேட்கிறீர்களோ , அவர்கள் ஒழுக்கம் உள்ளவர்கள்தானா என்று உங்களுக்குத் தெரியுமா ?

சிந்தியுங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post.html