Tuesday, October 31, 2023

திருக்குறள் - ஈயும் இன்பம்

 திருக்குறள் - ஈயும் இன்பம் 


நீங்கள் ஏதோ ஒரு அயல்நாட்டுக்கு சென்று திரும்பி வந்திருகிறீர்கள். உங்கள் நண்பரைப் பார்த்து, அந்த நாட்டில் உண்ட ஒரு புது மாதிரியான, மிகச் சுவையான ஒரு உணவைப் பற்றி விலாவாரியாக விவரிகிரீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் நண்பருக்கு ஏதாவது புரியுமா? 


நீங்கள் எவ்வளவுதான் விளக்கிச் சொன்னாலும் அந்த உணவின் சுவை அவருக்கு புரியவே புரியாது. 


அதற்கு ஒரே வழி அவரும் அதை சுவைத்துப் பார்பதுதான். 


கற்கண்டு எப்படி இருக்கும் என்று எத்தனை ஆயிரம் பக்கம் விளக்கினாலும் விளங்காது. ஒரு துண்டு அதை எடுத்து வாயில் போட்டால் உடனே தெரிந்து விடும். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


நாம் நமக்கு விருப்பம் இல்லாத செயலை செய்வோமா? மாட்டோம் அல்லவா?  


பிறருக்கு நம் பொருளை கொடுப்பது இன்பமான செயலா?  மிக முயன்று சேர்த்த பொருளை மற்றவர்களுக்கு கொடுப்பதில் என்ன இன்பம் இருக்க முடியும்? வள்ளுவர் சொல்கிறார் என்பதற்காக இருக்கின்ற பொருளை எல்லாம் தானம் செய்ய முடியுமா?  


நமக்கு துன்பம் தரும் செயலை நாம் ஒருபோதும் செய்ய மாட்டோம். 


பொருளை இழப்பது இன்பமா? துன்பமா? துன்பம்தான். சதேகம் இல்லை. 


யாருக்கும் கொடுக்காமல் நம் பொருளை நாம் ஏதோ ஒரு விதத்தில் முதலீடு செய்கிறோம். அதில் இருந்து வட்டி வரும், வருவாய் வரும், நாளை அதன் விலை உயரும், இலாபம் வரும் என்று. 


ஒரு வேளை முதலீடு செய்த ஒன்று நட்டம் ஆகிவிட்டால்? முதலீடு செய்த நிறுவனம் மூடப் பட்டு விட்டால்?


இன்று ஏதேதோ நாடுகளில் யுத்தம் நடக்கிறது. அங்கெல்லாம் உள்ள மக்கள் எவ்வளவோ முயன்று, சேமித்து, வீடு வாங்கி இருப்பார்கள், நிலம் வாங்கி இருப்பார்கள். இன்று யுத்தம் என்று குண்டு போட்டு அவற்றை அழிக்கிறார்கள். என்ன செய்வது. 


சில சமயம் வெள்ளம் வருகிறது. 


பண வீக்கம் வந்து சேமித்து வைத்த செல்வம் செல்லா காசாகி விடுகிறது. 


திருடு போய் விடலாம். 


இப்படி பல விதங்களில் நம் செல்வம் நமக்கு பயன்படாமல் போய் விடலாம். 


பசி என்று ஒருவன் வந்து நிற்கிறான். அவன் பசியை போக்க உதவி செய்கிறோம். அவன் வயிறார உண்கிறான். அதை பார்க்கும் போதும் நம் மனம் நெகிழாதா. என்னால் அவன் பசியை போக்க முடிந்தது என்று மனதுக்குள் ஒரு சின்ன மகிழ்ச்சி, பெருமிதம் வரும் அல்லவா?


இனி இதை எல்லாம் ஒன்றாக சேர்த்து சிந்தித்து ஒரு குறள் எழுதுகிறார் வள்ளுவ ஆசான். 


பாடல் 

 

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை

வைத்துஇழக்கும் வன்க ணவர்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_31.html

(pl click the above link to continue reading)


ஈத்துவக்கும் இன்பம் = ஈந்து உவக்கும். ஈவதனால் வரும் இன்பத்தை அனுபவித்தல் 


 அறியார்கொல் = தெரியாதவர்கள் போலும் 


 தாம்உடைமை = தங்களுடைய பொருளை 


வைத்துஇழக்கும் = சேர்த்து வைத்து, பின் இழக்கும் 


வன்க ணவர் = கல் நெஞ்சக் காரார்கள் 


வன்கணவர் என்பதை அருள் இல்லாதவர்கள் என்கிறார் பரிமேலழகர். 


அன்பு என்பது நம்மைச் சார்ந்தவர்களிடம் காட்டும் பரிவு. 


அருள் என்பது நம்மைச் சார்தவர்களிடமும் காட்டும் பரிவு. 


தெருவில் போகும் பிச்சைகாரனுகும் நமக்கும் என்ன உறவு? அவனுக்கு செய்யும் உதவி, அருள்.


அந்த அருள் நெஞ்சம் இல்லாதவர்கள், கொடுப்பதனால் வரும் இன்பத்தை அனுபவிக்கத் தெரியாதவர்கள்.. அது தெரிந்து இருந்தால், அனாவசியமாக பொருளை சேர்த்து வைத்து, பின் இழப்பார்களா? 


கொடுப்பது இன்பம் என்று தெரியாவிட்டால் கொடுக்க முடியாது. 


கொடுப்பதற்கு நெஞ்சில் அருள் வேண்டும். 


முதலில் அன்பு வேண்டும். அன்பில் இருந்து அருள் பிறக்க வேண்டும்.


சில பேர் பெற்ற பிள்ளைகளுக்கும், கட்டிய மனைவிக்குமே கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். உடன் பிறந்த உறவுகளுக்கு உதவ மாட்டேன் என்கிறார்கள். அவர்கள் எப்படி மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்?


இல்லறம், அன்பை பெருக்க வேண்டும். அது பெருகி அருளாக மாற வேண்டும்.


ஒருவன் நல்ல இல்லறம் செய்கிறானா இல்லையா என்பது அவன் செய்யும் தான தர்மத்தில் இருந்து தெரியும். 


முதலில் அன்பு, பின் அது முதிர வேண்டும், முதிர்ந்து அருளாக வேண்டும். 



 


Monday, October 30, 2023

நான் மணிக்கடிகை - செய்யக் கூடாத நான்கு

 நான் மணிக்கடிகை - செய்யக் கூடாத நான்கு 


நான் மணிக்கடிகை என்ற நூல் நான்கு மணி போன்ற விடயங்களை எடுத்துக் கொண்டு, அவற்றைக் கோர்த்து மாலை போல் தருகிறது. 


மிகவும் பயனுள்ள, வாழ்க்கைக்குத் தேவையான, சில சமயம் நாம் மறந்தோ அல்லது தெரியாமலோ செய்துவிடும் விடயங்கள். 


ஒரு முறை நினைவு படுத்திக் கொள்வது பயன் தரும். 


நம்மைவிட செல்வத்தில், படிப்பில், பதவியில், அறிவில் குறைந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களை நாம் தினமும் சந்திப்போம். 


நம்மைவிட எளியவர்கள் தானே என்று ஒரு போதும் அவர்களை ஏளனம் செய்து விடக் கூடாது. காரணம், காலம் யாரை எப்போது எங்கே கொண்டு வைக்கும் என்று தெரியாது. 


கூனி தானே, வயதானவள், பெண், கூன் விழுந்தவள், பணிப்பெண் நானோ சக்கரவர்த்தி திருமகன் என்று இராமன் நினைத்து அவள் மேல் விளையாட்டாக மண் உருண்டையை அடித்தான். 


அவள் நேரம் பார்த்து தாக்கினாள். இராமன் அரசை இழந்து, காட்டில் பதினாலு வருடம் துன்பப் பட்டான். அதை அவனே சுக்ரீவனிடம் சொல்கிறான். 


இரண்டாவது, எவ்வளவு நல்ல பொருள் என்றாலும், தீயவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடாது. காரணம், இன்று உயர்ந்த பொருளை கொடுத்தவன் பதிலுக்கு நாளை ஏதாவது தீய செயலில் நம்மை இழுத்து விட்டுவிடுவான். எவ்வளவு அவசரமாக இருந்தாலும்,  தீயவர்களிடம் இருந்து  ஒரு பொருளை பெற்றுக் கொள்ளக் கூடாது. 


மூன்றாவது,  தாழ்ந்தவர்கள் நம் உள்ளம் சுடும்படி பேசினாலும் பதிலுக்கு பேசக் கூடாது. காரணம், அவன் நிலைக்கு அவன் பேசுகிறான். நாம் ஏன் நம் நிலையை தாழ்த்திக் கொள்ள வேண்டும். நாய் குரைக்கிறது என்றால் பதிலுக்கு குரைக்க வேண்டுமா?  


நான்காவது,  கூறக் கூடாத சொற்களை ஒரு போதும் கூறிவிடக் கூடாது. கோபத்தில் வார்த்தை விழுந்து விட்டால் பின் அதை மீட்க முடியாது. மிகப் பெரிய துன்பத்தில், உறவில் பெரிய குழப்பத்தை அது ஏற்படுத்தி விடும். வார்த்தைகளை பேசும் போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தீய சொற்கள், சுடு சொற்கள், உண்மை அல்லாத சொற்கள், புறம் சொல்லும் சொற்கள் போன்றவற்றை ஒரு காலும் பேசக் கூடாது. 


பாடல் 


எள்ளற்க என்றும் எளியாரென் றென்பெறினும்

கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்

சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க

கூறல் லவற்றை விரைந்து.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_30.html


(pl click the above link to continue reading)



எள்ளற்க = ஏளனம் செய்யாமல் இருக்க 


என்றும் = எப்போதும் 


எளியாரென் = எளியவர் என்று எண்ணி, நினைத்து 


என் பெறினும் = எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் 


கொள்ளற்க = பெற்றுக் கொள்ளக் க் கூடாது 


கொள்ளார்கைம் மேலவா = பெற்றுக் கொடுக்கும் தகுதி இல்லாதவர் கை மேலே இருக்கும் படி 


உள்சுடினும் = உள்ளம் சுட்டாலும் 


சீறற்க = கோபிக்கக் கூடாது 


சிற்றிற் பிறந்தாரைக் = சின்ன + இல்லத்தில் + பிறந்தவரை = அதாவது தாழ்ந்தவர்களை, ஏழைகளை, வசதி இல்லாதவர்களை 


கூறற்க = சொல்லக் கூடாது 


கூறல் லவற்றை = கூறக் கூடாதவற்றை 


விரைந்து = விரைவாக 


சில சமயம் மற்றவர்கள ஏதாவது பேசும் போது, அது நம்மை சுட்டு விடலாம். கோபித்து, உடனே பதிலுக்கு நாம் ஏதாவது சொல்லிவிடுவோம்.  பொறு. கொஞ்சம் பொறுமையாக இரு. அவசரப்படாதே. 


"விரைந்து" சொல்லாதே.  ஆறப் போடு என்கிறது செய்யுள். 


யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வில் இந்தத் தவறுகளை எவ்வளவு செய்து இருக்கிறோம் என்று தெரியும். 


கிண்டல் செய்கிறேன், சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் என்று எதையாவது சொல்லி சிக்கலில் மாட்டி இருப்போம்.


கோபத்தில் வார்த்தையை விட்டு, பின்னால் வருந்தி இருப்போம். ச்சே, அப்படி சொல்லி இருக்கக் கூடாது என்று நாமே நம்மை கண்டித்து இருப்போம். 


அலுவலகத்தில் நமக்கு கீழே இருக்கும் ஒருவரை பற்றி நாம் ஏதோ சொல்லப் போக, அதை அவர் மனதில் வைத்துக் கொண்டு, நம்மை பற்றி மேலிடத்தில் இல்லாததும் பொல்லாததும் சொல்லி நமக்கு ஒரு சங்கடத்தை உண்டாக்கி இருப்பார். 


இது எல்லாம் ஏதோ நமக்கு மட்டும் நிகழ்வது என்று நினைக்கக் கூடாது. எல்லோருக்கும் எப்போதும் நிகழும் ஒன்று.  எனவேதான் அதை ஒரு நீதியாக போதிக்கிறது இந்த நூல். 


மொத்தம் நூற்றி நான்கு பாடல்கள் இருக்கின்றன. 


எல்லாவற்றையும் ஒரு முறை வாசித்து விடுங்கள். நல்ல விடயம்தானே. 



Sunday, October 29, 2023

திருக்குறள் - பசிப்பிணி தீண்டாது

 திருக்குறள் - பசிப்பிணி தீண்டாது 


ஒரு பல்வலி மருத்துவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் பல் வலியால் துன்பப் படுவாரா? அவருக்குத் தெரியும் பல் வலி எதனால் வருகிறது, அதை எப்படி போக்குவது என்று. உடனே அந்த வலிக்கு தகுந்த சிகிச்சையை மேற் கொள்வார் அல்லவா?


இன்னும் ஒரு படி மேலே போய், அப்படி பல் வலி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். அந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பல் வலி வராமல் தடுத்து விடுவார் அல்லவா?


அதை ஏன் சொல்கிறேன் என்றால்....


தான தர்மம் செய்வதால் எழையாகிப் போய் நாமும் பிறர் கையை எதிர்பார்க்க வேண்டி வருமோ என்று சிலர் பயப்படலாம். ஊரில் உள்ளவருகெல்லாம் உணவு கொடுத்து ஒரு நாள் தனக்கு உணவு இல்லாமல் ஆகி விடுமோ என்ற பயம் வரலாம் அல்லவா?


வள்ளுவர் சொல்கிறார் 


"பகுத்து உண்பதை பழக்கமாக கொண்டவனை பசி என்ற பிணி ஒரு போதும் தீண்டாது" என்கிறார். 


பாடல் 


பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்

தீப்பிணி தீண்டல் அரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_29.html


(please click the above link to continue reading)



பாத்தூண் = பகுத்து + ஊன் = உணவை பகுத்து 


மரீஇ யவனைப் = அணைத்துக் கொண்டவனை, பழக்கமாக கொண்டவனை 


பசிஎன்னும் = பசி என்ற 


தீப்பிணி = தீமையான பிணி (நோய்) 


தீண்டல் அரிது = தீண்டாது 


அது எப்படி ? மற்றவர்களுக்கு உணவு அளித்தால் நாம் பசியால் வாட மாட்டோம்?


வீட்டில் மனைவி சமையல் செய்வாள் (சில பல வீடுகளில்). சில சமயம் உணவு பத்தாமல் போய் விடும். கணவனோ, பிள்ளைகளோ கொஞ்சம் அதிகம் உண்டால், மனைவிக்கோ, அம்மாவுக்கோ உணவு இல்லாமல் போய் விடும். அதற்காக அவர்கள் பட்டினியாக இருப்பது இல்லை. அவர்களுக்குத் தெரியும் எப்படி உணவு சமைப்பது என்று. இருக்கின்ற பொருட்களை வைத்து ஏதாவது செய்து ஒரு உணவு செய்து விடுவார்கள். சில சமயம் அது மற்ற உணவை விட சுவையாகக் கூட இருக்கும். 


உணவு செய்யத் தெரிந்தவன் ஏன் பசியாக இருக்கப் போகிறான். 


பல் வைத்தியம் தெரிந்தவன் ஏன் பல் வலியால் துன்பப் படப் போகிறான். 


அது போல மற்றவர்களுக்கு உணவு தரத் தெரிந்தவன் தான் ஏன் பசியோடு இருக்கப் போகிறான்?


மேலும், எல்லோருக்கும் உணவு அளித்தவன் ஒரு நாள் உணவு இல்லாமல் இருந்தால், அவனால் உதவி பெற்றவர்கள் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா?


எனவே, அவனுக்கு எப்படியும் உணவு கிடைத்து விடும். பசியால் வருந்தமாட்டான். 


இந்தக் குறளை நாம் சற்று விரித்து நோக்க வேண்டும். 


இது ஏதோ உணவு, பசி, பட்டினி என்று இருக்காமல், மற்றவர்களுக்கு உதவி செய்தால் நாம் ஏழையாகி விடுவோமா என்ற பயம் இருந்தால், அது தேவையில்லாத பயம் என்கிறார் வள்ளுவர். 


மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் யாரும் கெட்டு போவதில்லை என்பது அவர் தரும் உறுதி. 








Friday, October 27, 2023

திரிகடுகம் - அறியாமையால் வரும் கேடு

 திரிகடுகம் - அறியாமையால் வரும் கேடு 


திரிகடுகம் என்பது மூன்று மூலிகைகளின் தொகுதி. 


திரிகடுகம் என்ற நூலில், ஒவ்வொரு செய்யுளும் மூன்று செய்திகளை எடுத்துக் கொண்டு அவை நல்லதா, கெட்டதா என்று கூறும். 


அதன் மூலம், எதை நாம் செய்யலாம், செய்யக் கூடாது என்று அறிந்து கொள்ளலாம். 


வாழ்க்கைக்கு, நடைமுறைக்கு மிகத் தேவையான, உபயோகப் படும் நூல். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


"கல்வி அறிவில்லாதவர்களோடு பழகுவதும், கற்புடைய மனைவியை அடிப்பதும், வீட்டுக்குள் ஒழுக்கம் இல்லாதவர்களை அனுமதிப்பதும், இந்த மூன்றும் அறியாமையால் வரும் கேடுகளாகும்."


பாடல் 


கல்லார்க் கினனாய் ஒழுகலும் காழ்கொண்ட

இல்லாளைக் கோலாற் புடைத்தலும் - இல்லம்

சிறியாரைக் கொண்டு புகழுமிம் மூன்றும்

அறியாமை யான்வருங் கேடு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_27.html


(please click the above link to continue reading)



கல்லார்க் கினனாய் = கல்லார்க்கு + இனனாய் = கல்லாதவர்களோடு  சேர்ந்து நட்பாய்  


ஒழுகலும்  = இருப்பதும் 


காழ்கொண்ட = உறுதி கொண்ட, கற்புள்ள 


இல்லாளைக்  = மனைவியை 


கோலாற்  = கம்பால் 


புடைத்தலும் = அடிப்பதும் 


இல்லம் = வீட்டில் 


சிறியாரைக் = ஒழுக்கமில்லா சிறியாரை 


கொண்டு  = கொண்டு வருவதும் 


புகழுமிம் மூன்றும் = முக்கியமான இந்த மூன்றும்  


அறியாமை யான்வருங் கேடு. = அறியாமையால் வரும் கேடு 


அதாவது, அறிவு இருந்தால் இந்த தவறுகளை செய்ய மாட்டோம். 


ஒருவேளை ஒருவன் மற்றவற்றை படிக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை, இது போன்ற நூல்களைப் படித்தால், சரி எது, தவறு எது என்று அறிந்து கொள்ள முடியும். 


இப்படி நூறு பாடல்கள் இருக்கின்றன.


ஒரு நாளைக்கு ஒன்று என்று வைத்துக் கொண்டால் கூட, மூன்று மாதத்தில் படித்து முடித்து விடலாம். 




Thursday, October 26, 2023

திருக்குறள் - பணத்தை எங்கே முதலீடு செய்வது ?

 திருக்குறள் - பணத்தை எங்கே முதலீடு செய்வது ?


சேமித்த பணத்தை எங்கே முதலீடு செய்வது? 


வங்கிக் கணக்கில் போடலாம், பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம், நகை, நட்டு வாங்கிப் போடலாம், நிலத்தில் போடலாம், அல்லது நல்ல வீடு வாங்கலாம்....இப்படி பல வழிகளில் முதலீடு செய்யலாம். 


ஆனால் இதெல்லாம் சிறந்த முதலீடு அல்ல என்கிறார் வள்ளுவர். 


பின் எதுதான் நல்ல முதலீடு என்று பார்ப்பதற்கு முன்னால், சற்று யோசிப்போம். ஈகை என்ற அதிகாரத்துக்கும் முதலீடுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?  ஒரு வேளை பொருட்பாலில் வர வேண்டியது மாறி இங்கு வந்து விட்டதோ என்ற சந்தேகம் வரலாம். 


வள்ளுவர் சொல்கிறார், 


"மிகுந்த பசி உள்ளவன் வயிற்றிக்கு உணவு இடுவதுதான் ஆகச் சிறந்த முதலீடு"


என்று. 


சேமித்த பணத்தை உணவாக மாற்றி, பசி உள்ளவனுக்கு அதை கொடுப்பதுதான் சரியான முதலீடு 


பாடல் 


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_26.html



(pl click the above link to continue reading)


அற்றார் = பொருள் அற்றவர், உணவு அற்றவர் 


அழிபசி = அழிக்கின்ற பசியை 


தீர்த்தல் = தீர்ப்பது 


அஃதொருவன் = அது ஒருவன் 


பெற்றான் = பெற்ற 


பொருள்வைப் புழி = பொருள் + வைப்புழி = பொருளை சேமித்து வைக்கும் இடம் 


அழிபசி = அழிக்கின்ற பசி. பசி பலவற்றை அழித்து விடும். கல்வி, புகழ், மானம், காமம், என்ற பலவற்றை அழித்து விடும். பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். 


அப்படிப்பட்ட பசியை தீர்க்க உதவும் பொருள் தான் சிறந்த வழியில் சேமிக்கப்பட்ட பொருள் என்கிறார். 


அதிலும், பரிமேலழகர் சில நுண்மையான விடயங்களைச் சொல்கிறார்.


"அறன் நோக்கி அழி பசி தீர்த்தல்" என்பார். கொடுப்பது அறம் என்று நினைத்து கொடுக்க வேண்டும். பதிலுக்கு ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து கொடுக்கக் கூடாது. 


அதெல்லாம் சரி, அப்படி செலவழித்த பணம், செல்வில்தானே சேரும். எப்படி, அது சேமிப்பாக மாறும்?  வள்ளுவர் சொன்னா கேட்டுக்க வேண்டியதுதானா?


இல்லை, அதற்கு காரணம் இருக்கிறது என்று பரிமேலழகர் விளக்கம் செய்கிறார். 


சேமிப்பு என்றால் பிற்காலத்தில் வட்டியோடு முதலும் பத்திரமாக திரும்பி வர வேண்டும் அல்லவா?  


பசித்தவனுக்கு செலவழித்த பணம் புண்ணியமாக மாறி, ஒன்றுக்கு பல மடங்கு செய்தவனுக்கே திரும்பி வரும் என்கிறார். 


எப்படி நம்புவது?  


வள்ளுவர் போன்ற அறிஞர்கள் உலகை நன்கு உற்று கவனித்து அங்கு நடப்பவற்றை நமக்குச் சொல்கிறார்கள். 


ஒன்று ஏற்றுக் கொள்ளலாம். அல்லது, சோதனை செய்து பார்க்கலாம். 


எனது குறுகிய அனுபவத்தில் இது உண்மை நான் பல முறை உணர்ந்து இருக்கிறேன். 


நீங்களும் சோதனை செய்து பாருங்கள். 




Wednesday, October 25, 2023

கம்ப இராமாயணம் - என் மகளைக் காப்பாற்று

 கம்ப இராமாயணம் - என் மகளைக் காப்பாற்று 


பெண்ணை கட்டிக் கொடுத்தாகி விட்டது. 


பின், அந்தப் பெண்ணுக்கு ஒரு துன்பம் என்றால் அந்தப் பெண்ணின் தாயின் மனம் என்ன பாடுபடும். என் மகள் இப்படி கிடந்து துன்பப் படுகிராளே என்று தவிக்கும் அல்லவா?  என்ன செய்வது என்று அறியாமல் தவிப்பாள். 


மருமகனைப் பார்த்து "நீங்க ஏதாவது செய்யக் கூடாதா...அவ இவ்வளவு கஷ்டப் படுகிராளே" என்று மாப்பிளையிடம் புலம்புவாளா மாட்டாளா?


என் வயிற்றில் வந்து பிறந்ததனால்தானே, அவளுக்கு இவ்வளவு கஷ்டம்.வேறு எங்காவது பிறந்திருந்தால் நல்லபடியாக வாழ்ந்திருப்பாள். பாழாய்ப்போன எனக்கு மகளாக வந்து வாய்த்து இப்படி துன்பப்படுகிறாளே என்று தாயின் மனம் தவிக்கும்தானே. 


பாற்கடலில் தோன்றியவள் திருமகள். திருமகளின் அம்சம் சீதை. கடல், சீதைக்கு தாய். 


அந்த கடல்தாய் புலம்புகிறாள் 


" சந்திரனின் பிறை போன்ற நெற்றியை உடைய சீதை, ஒரு நாளும் தொலையாத துன்பத்தைக் கொண்ட நான் பெற்ற பெண், தவம் இருந்து பெற்ற பெண், இப்படி தனிமையில் (அசோகவனத்தில்) கிடந்து தவிப்பது சரிதானா?" 


என்று புலம்பி, தளர்ந்து,  கண்ணீர் சிந்தி, தன் அலை என்ற கரத்தை நீட்டி இராமனின் காலில் விழுந்து புலம்பினாள். 


பாடல்  


இந்து அன்ன நுதல்பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன்

தந்த பாவை தவப் பாவை தனிமை தகவோ எனத் தளர்ந்து

சிந்துகின்ற நறுந்தரளக் கண்ணீர் ததும்பி திரைத்து எழுந்து

வந்து வள்ளல் மலர்த் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறிகடலே


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_25.html

(pl click the above link to continue reading)


இந்து அன்ன = பிறைச் சந்திரனைப் போன்ற 

 

நுதல் = நெற்றியைக் கொண்ட 


பேதை இருந்தாள் = சீதை இருந்தாள் 


நீங்கா = ஒரு நாளும் தீராத 


இடர் = துன்பங்களைக் கொண்ட 


கொடியேன் = கொடியவளாகிய நான் (கடல்) 


தந்த பாவை = பெற்ற பெண் (சீதை)  


தவப் பாவை = தவம் இருந்து பெற்ற பெண் (சீதை) 


தனிமை தகவோ = தனிமையில் கிடந்து இப்படி தவிப்பது சரிதானா 


எனத் = என்று 


தளர்ந்து = தளர்ந்து, 


சிந்துகின்ற = சிந்தும், வழியும் 


நறுந்தரளக் = தரளம் என்றால் முத்து. நல்ல முத்துப் போன்ற 


கண்ணீர் ததும்பி = கண்ணீர் ததும்பி 


திரைத்து = அலையானது 


எழுந்து = மேலே எழுந்து 


வந்து = வந்து 


வள்ளல் = இராமனின் 


மலர்த் தாளின் = மலர் போன்ற பாதங்களில் 


வீழ்வது = வீழ்ந்து 


ஏய்க்கும் = முறையிடும் 


மறிகடலே = அலைபாயும் கடலே 


மகளின் துன்பம் கண்டு இரங்கும் தாயின் சோகத்தை கம்பன் படம் பிடித்து காட்டுகிறான். 



 

Tuesday, October 24, 2023

திருக்குறள் - எது பெரிது?

 திருக்குறள் - எது பெரிது?


உலகில் பெரிய செயல், சிறப்பான செயல் எது என்று கேட்டால் நாம் என்ன சொல்லுவோம்?


படிப்பது, செல்வம் சேர்ப்பது, பெரிய பதவிகளைப் பெறுவது, புகழ் பெறுவது என்றெல்லாம் சொல்லுவோம். 


தவம் செய்து, ஞானம் பெற்று, இறைவனை அடைவது இதில் எல்லாம் பெரியது என்று கூட சொல்லலாம். 


ஆனால், வள்ளுவர் இதுக்கு எல்லாம் மேலான ஒன்று இருக்கிறது என்கிறார்.


எவ்வளவு தவம் செய்து, என்ன வரங்களைப் பெற்றாலும், அதுக்கு எல்லாம் மேலான ஒன்று இருக்கிறது.


அது என்ன என்றால், பசித்தவனின் பசியைப் போக்கும் செயல் என்கிறார். 


பாடல் 


ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_24.html


(please click the above link to continue reading)


ஆற்றுவார் = செய்யகூடியவற்றுள் 


ஆற்றல் = பெரிய ஆற்றல் 


பசியாற்றல் = பசியை பொறுத்துக் கொள்வது. அதாவது, தவம் செய்வது 


அப்பசியை = அந்தப் பசியை 


மாற்றுவார் = போக்குபவர்களின் 


ஆற்றலின் பின் = ஆற்றலுக்கு அடுத்து பின்னே வருவது அந்த மேலே சொன்ன பசியைப் பொறுத்து கொண்டு தவம் செய்வது. 


என்னதான் முள்ளு முனையில், தீக்கு நடுவில், பசி தாகம் மறந்து தவம் செய்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றாலும், அது மற்றவர் பசியைத் தீர்பவரின் ஆற்றலுக்கு முன் பெரிய விடயம் ஒன்றும் இல்லை. பசி தீர்பவரின் ஆற்றலுகுப் பின் தான் அந்த தவ வலிமை எல்லாம் என்கிறார். 


சரி, அப்படின்னு வள்ளுவர் சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா. அதுக்கு ஒரு காரணம் சொல்ல வேண்டாமா?


பரிமேலழகர் சொல்கிறார் 


தவம் செய்பவர்கள், தங்கள் பசியையும் போக்கிக் கொள்ள முடியவில்லை, மற்றவர் பசியையும் போக்குவது இல்லை. 


மாறாக, இல்லறத்தில் இருந்து தானும் நன்றாக உண்டு பசியாறி, பசிக்கிறது என்று வந்தவனின் பசியையும் போக்குகிறானே அந்த இல்லறத்தான் அவன் தவம் செய்தவனை விட உயர்ந்தவன் என்கிறார். 


தானும் பசி இல்லாமல், மற்றவர் பசியையும் போக்குபவன் தன் பசியையும் தீர்க்காமல், மற்றவர் பசியையும் போக்காதவனை விட உயர்ந்தவன் தானே?


இதில் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக பார்த்தால் மேலும் சில விடயங்கள் புலப்படும். 


முதலாவது, துறவறத்தை விட இல்லறம் சிறந்தது என்று இங்கு கூறுகிறார். 


இரண்டாவது, கஷ்டப்பட்டு தவம் செய்வதை விட, வீட்டில் இருந்து கொண்டே அதைவிட பெரிய பலன்களைப் பெறலாம்.


மூன்றாவது, நாம் எப்போதும் நினைப்போம். கடினமான செயல் உயர்ந்தது என்றும் எளிதாகச் செய்யும் செயல்கள் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது அல்ல என்றும். இங்கே வள்ளுவர் அதை மறுக்கிறார். வீட்டில், மனைவி மக்களோடு இருந்து, விருந்து உண்டு, பசி என்று வந்தவனுக்கு அவன் பசியாற உணவு கொடு. அது எல்லாவற்றையும் விட சிறந்தது என்கிறார். எதுக்கு வேலை மெனக்கெட்டு காட்டில் போய் தவம் செய்து கொண்டு கஷ்டப்பட வேண்டும்?


நான்காவது, பசித்தவனுக்கு பணம் கொடு என்று சொல்லவில்லை. அவன் பசியை மாற்று என்கிறார். உணவு கொடு. அவன் பசி மாறினால் அதுவே சிறந்த புண்ணியம் என்கிறார். 


நமக்கெல்லாம் பசி என்றால் என்ன என்று தெரியாது. சில சமயம் சாப்பிடுவதற்கு எதாவது கொஞ்சம் நேரம் ஆகலாம். பசி இருக்கும். அதெல்லாம் ஒரு பசி இல்லை. வீட்டில் வேண்டும் அளவுக்கு உணவு இருக்கிறது. குளிர் சாதன பெட்டியைத் திறந்தால் மூணு நாளைக்கு வேண்டிய உணவு இருக்கும்.  அதெல்லாம் ஒரு பசி இல்லை. இல்லையா, on-line ல் ஆர்டர் பண்ணி சாப்பிடலாம். இல்லை என்றால் வண்டியை எடுத்துக் கொண்டு போய், அருகில் உள்ள உணவு விடுதியில் உண்டுவிட்டு வரலாம். ஒரு கவலையும் இல்லை. அதெல்லாம் பசியில் சேர்ந்தது அல்ல. 




பசி இருக்கும். உணவு இருக்காது. எப்போது கிடைக்கும் என்றும் தெரியாது. அதுதான் பசி. அந்தப் பசியை மாற்றுவது இருக்கிறதே, அதுதான் பெரிய செயல் என்கிறார். 


இந்தக் குறளின் முழு அத்தமும் புரிய வேண்டும் என்றால், இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்தால் தெரியும்.