Saturday, June 15, 2019

திருக்குறள் - எது வலிமை, எது இல்லாமை?

திருக்குறள் - எது வலிமை, எது இல்லாமை? 


மிகவும் கடினமான செயல் என்றால் எதைச் சொல்வோம் ?

பளு தூக்குவது, மலை ஏறுவது, கடினமான பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது, பிள்ளை பெறுவது, என்று நமக்குத் தெரிந்த கடினமான வேலைகளை சொல்லுவோம்.

இதெல்லாம் பெரிய கடினமான வேலை இல்லை என்று வள்ளுவர் சொல்கிறார்.

உலகிலேயே மிகவும் கடினமான வேலை, முட்டாள்களின் செயலை பொறுத்துக் கொல்வதுதான் என்கிறார்.

யோசித்துப் பாருங்கள்....

அரைகுறையாக படித்து விட்டு, எல்லாம் படித்த மேதாவி போல் உளறும் முட்டாள்கள் சொல்வதை கேட்பது எவ்வளவு கடினமான செயல் என்று.

அரசியல்வாதிகளின் பிதற்றல், டிவி யில் நிபுணர்கள் போல வந்து எல்லா சப்ஜெக்ட்க்கும் ஒரு ஒப்பீனியன் தருவது, அரை வேக்காட்டு நண்பர்களின் மேதாவிலாசம், என்று இவற்றை பொறுத்துக் கொள்வது எவ்வளவு கடினமான செயல்.

அது போல, உள்ளத்துக்குள்ளேயே பெரிய இல்லாமை எது தெரியுமா ?

அறிவு இல்லாமை, புகழ் இல்லாமை,  பிள்ளை இல்லாமை, உறவுகள் இல்லாமை ..என்று நாம் நினைப்போம்.

அது எல்லாம் இல்லாமை தான். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.

ஆனால் அது எல்லாவற்றையும் விட பெரிய இல்லாமை, எது தெரியுமா ?


ஐயோ, கையில் காசு இல்லையே. இப்போ ஏதாவது விருந்தினர் வந்து விட்டால் என்ன செய்வது என்று  ஒருவன் பதறுவானேயானால், அது தான் பெரிய இல்லாமை என்கிறார்.

விருந்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது நம் தமிழ் பாரம்பரியம்.

பாடல்

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

பொருள்

இன்மையுள் இன்மை = இல்லாமையை பெரிய இல்லாமை

விருந்தொரால் = விருந்தை உபசரிக்க முடியாமல் போதல்

வன்மையுள் = கடினமானவற்றுள்

வன்மை = கடினமானது

மடவார்ப் பொறை = மடையர்களை பொறுத்துக் கொள்வது


எத்தனை மடையர்கள், எவ்வளவு பொறுமை வேண்டி இருக்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_22.html

2 comments:

  1. உண்மை தான். "மடவார்ப் பொறை" இல்லாததால் தான் எனக்கு இரு ஆண்டுகளுக்கு முன் இதய நோய் வந்து செத்துப் பிழைத்தவன் நான். உடனேயே எல்லா சமூக வலைத்தளங்களில் இருந்தும் என்னை விடுவித்துக் கொண்டதுடன் என் வீட்டு idiot box ஐ வேறொருவருக்கு கொடுத்து விட்டேன்.

    எப்போதுமே அறியாமையின் உச்சம் தன்"அறியாமையை அறியாமை தான்". Ignorant of your ignorance என்று சொல்வார்கள்!

    ReplyDelete
  2. தனக்கு எல்லாம் தெரிந்தது போல் பேசும் மேதாவிகள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

    ReplyDelete