Sunday, June 30, 2019

கம்ப இராமாயணம் - நில் அடீஇ

கம்ப இராமாயணம் - நில் அடீஇ 


இராமனை விட்டு வந்த சூர்ப்பனகை காமத்தில் தவிக்கிறாள். கம்பன் அவள் நிலையை விரித்துக் காட்டுகிறான். விருப்பம் உள்ளவர்கள் , தேடுங்கள், கண்டடைவீர்கள்.

பின், சூர்ப்பனகை நினைக்கிறாள்..."இந்த சீதை இருப்பதனால் தானே இராமன் என்னை ஏற்க மறுக்கிறான், அவளை தூக்கி  வந்து விட்டால், இராமனின் எண்ணம் என் பால் வரும்தானே " என்று நினைத்து அவளை தூக்கிச் செல்ல நினைக்கிறாள்.

இராமன் சந்தியா வந்தனம் செய்யப் போய் விட்டான். கம்பன் சொல்கிறான்.  சீதை தனித்து இருக்கிறாள். அவளுக்கு காவலாக இருந்த இலக்குவனை, சூர்ப்பனகை காணவில்லை. தனித்து இருக்கும் சீதையை பிடித்துக் கொண்டு போய் விடலாம் என்று நினைத்து அவள் இருக்கும் இடத்துக்கு இரகசியமாக போகிறாள்.

இவள் வருவதை இலக்குவன் பார்த்து விட்டான்.


"நில்லடி" கத்திக் கொண்டே  என்று அவளை நோக்கி விரைந்து சென்றான். அருகில் வந்த போது அவள் (சூர்ப்பனகை) பெண் என்று  அறிந்து கொண்டான். எனவே வில்லை எடுக்காது, சூர்ப்பனகையின் கூந்தலை பற்றி , கையில் அப்படியே சுற்றி, அவளை உதைத்து கீழே தள்ளி, தன் வாளை உருவுகிறான்

நமக்கு படபட என்று மனம் அடித்துக் கொள்கிறது.


பாடல்

நில் அடீஇ' என, கடுகினன், 
     பெண் என நினைத்தான்; 
வில் எடாது அவள் வயங்கு எரி 
     ஆம் என விரிந்த 
        சில் வல் ஓதியைச் செங் கையில் 
     திருகுறப் பற்றி, 
ஒல்லை ஈர்த்து, உதைத்து, ஒளி 
     கிளர் சுற்று-வாள் உருவி,


பொருள்

நில் அடீஇ'  = நில்லடி

என = என்று கூறிக் கொண்டே

கடுகினன் = விரைந்து சென்றான்

பெண் என நினைத்தான்; = பெண் என்று நினைத்தான்

வில் எடாது = வில்லை எடுக்காமல்

அவள்  = அவளுடைய

வயங்கு = ஒளி வீசும்

எரி ஆம் என  = தீ போன்ற சிவந்த

விரிந்த  =  பரந்த

சில் = சில, கொஞ்சம்

வல் =வலிய

ஓதியைச் = கூந்தலை

செங் கையில்  =சிவந்த கைகளால்

திருகுறப் = திருக்கி

பற்றி,  = வளைத்துப் பிடித்து

ஒல்லை = வேகமாக, வெடுக்கென

ஈர்த்து = இழுத்து

உதைத்து = காலால் உதைத்து

ஒளி = ஒளி வீசும்

கிளர் சுற்று-வாள் உருவி = கிளர்ந்து எழும் வாளை உருவி



என்ன ஏது என்று கேட்கவில்லை. பின்னால் போனான், அவள் முடியை பிடித்து வெடுக்கென இழுத்தான்,  அவள் நிலை தடுமாறி விழப் போன நேரத்தில், அவளை காலால் எட்டி உதைத்தான். அது மட்டும் அல்ல, தன் உடை வாளை  உருவினான்.

பெண் என்று நினைத்து வில்லை எடுக்காதவன் , பெண் என்று நினைத்து  வாளை எடுக்கிறான்.

இந்தப் பாட்டில் வரும் "ஒல்லை" என்ற சொல் ஒரு அருமையான சொல்.

ஒல்லை என்ற சொல்லுக்கு சீக்கிரம் என்று பொருள்.

தமிழுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், தமிழில் உள்ள  அழகான, அர்த்தம் பொதிந்த சொற்களை நடை முறையில் பயன்படுத்துங்கள்.  அந்த சொற்களுக்கு உயிர் கொடுங்கள்.

அதனால் இரண்டு விதமான  பலன் உண்டு.

ஒன்று, தமிழுக்கு மீண்டும் அந்த சொற்கள் கிடைக்கும். நம்மால் புது சொற்களை  உருவாக்க முடியாது. இருக்கின்ற சொற்களை பயன் படுத்தலாம்தானே.

இரண்டு, இந்த சொற்கள் பயன்பாட்டில் வந்தால், நமக்கும் , இலக்கியத்துக்கும்  உள்ள இடைவெளி குறையும். பல பாடல்கள் எளிதாகப் புரியும்.  அவற்றை இரசிக்க முடியும்.

மூன்றாவது, நாம் நம் இலக்கியத்தை எளிதாக அறிந்து  கொள்ளும் போது, நம் பண்பாடு, கலாச்சாரம் என்ன என்று அறிந்து கொள்ள முடியும். நாம் எப்படி இருந்தவர்கள்  என்று அறிந்து கொண்டால், அதில் ஒரு நிமிர்வு வரும்.

நான்காவது, அடுத்த தலைமுறைக்கு தமிழ் செல்லும். இல்லை என்றால், ஆங்கில வார்த்தை கலப்பு இல்லாமல்   பேச முடியாத ஒரு தலைமுறையில் நாம்  இருக்கிறோம். அடுத்த தலைமுறை, தமிழ் என்பதே என்ன என்று தெரியாத ஒரு  தலைமுறையாக மாறி விடும் அபாயம் உண்டு.

ஐந்தாவது, தமிழில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கின்றன. நம்மால் அவற்றை அணுக முடியவில்லை. நம் தாய் மொழி நமக்குப் புரியவில்லை. அதை விட்டு ரொம்ப தூரம் விலகி வந்து விட்டோம். இந்த வார்த்தைகள் நம்மை மீண்டும் மொழிக்கு பக்கத்தில் கொண்டு சேர்க்கும். மொழியில் புதைந்து கிடக்கும் நல்லவற்றை நாம் அறிந்து பயன் பெற முடியும்.

ஆறாவது, நீங்கள் ஒரு புது வார்த்தையை பழக்கத்தில் கொண்டு வந்து விட்டீர்கள் என்றால், அதில் இருந்து பல புதிய சொற் சேர்க்கைகள் வரலாம்.

உதாரணமாக, இந்த ஓலை

சரி, இந்த ஒல்லை என்ற வார்த்தையை வேறு எங்காவது பயன்படுத்தி இருக்கிறார்களா?

இராமன் மிதிலை நோக்கி வருகிறான். அப்போது அந்த கோட்டை சுவற்றில் இருந்த  கொடிகள் எல்லாம் இராமனைப் பார்த்து, "திருமகள், தாமரையை விட்டு, நான் செய்த பெரிய தவத்தினால் இங்குதான் இருக்கிறாள், இராமா "ஒல்லை  வா" என்று கூறுவது போல அசைந்தது என்கிறார் கம்பர்.


"மையறு மலரின் நீங்கி  யான்செய்மா தவத்தின் வந்து
 செய்யவள் இருந்தாள் என்று  செழுமணிக் கொடிகள் என்னும்
 கைகளை நீட்டி அந்தக்  கடிநகர் கமலச் செங்கண்
 ஐயனை "ஒல்லை வா" என்று  அழைப்பது போன்ற தம்மா"

சீக்கிரம் வா என்று அந்த  கொடிகளை பட பட என அடித்துக் கொண்டதாம்.

சொல்லிப் பாருங்கள்....

"கல்யாண வேலை நிறைய இருக்கு. நீ கொஞ்சம் ஒல்லை வந்தால், உதவியா இருக்கும்"

"ஒல்லை வந்துரு என்ன...நீ வந்த உடனே நாம் கிளம்பிரலாம்"

" எவ்வளவு தான் ஒல்லை வந்தாலும், இந்த போக்குவரத்து நெரிசலில் மாட்டி கொண்டு நேரம் ஆகி விடுகிறது "

சொல்லிப் பழகுங்கள்.

உயிரினங்கள் அழிவது போல , சொற்களும் அழிந்து கொண்டிருக்கின்றன (extinct ).  அவற்றிற்கு உயிர் கொடுக்க முனைவோம். ஒரு சில சொற்களாவது மீண்டும் உயிர் பெற்றால், நல்லது தானே. ஏதோ நம்மால் முடிந்தது.

இலக்கியம் படிப்பதில் இப்படியும் ஒரு பலன் இருக்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_30.html

1 comment:

  1. அழகாக சொன்னீர்கள்..கம்பனின் பாடல் புரிவதற்கு வார்த்தைக்கு வார்த்தை உங்களின் பதவுரையைத்தான் நம்பி இருக்கிறேன்.நீங்கள் உரையை கூற தவறி விட்டால் ஊகிப்பதோடு சரி. அர்த்தத்தை எங்கு தேடுவது என்று சொன்னால் பயனடைவேன்.

    ReplyDelete