Saturday, June 29, 2019

கம்ப இராமாயணம் - ஆர் உயிர் வெந்து புழுங்குவாள்

கம்ப இராமாயணம் - ஆர் உயிர் வெந்து புழுங்குவாள் 


நமக்கு எப்போதாவது துன்பம் வந்தால், நாம் ஊரில் உள்ள அனைவரையும் திட்டித் தீர்ப்போம்.

கணவன்/மனைவி (எனக்குனு வந்து வாச்சிது பாரு), பிள்ளைகள், அக்கம் பக்கம், மேலதிகாரி, கீழே வேலை பார்ப்பவர்கள், அரசாங்கம், பொதுவாக எல்லோரும் நமக்கு எதிராக வேலை செய்கிறார்கள் என்றே நினைப்போம். சில சமயம் கடவுள் மீது கூட கோபம் வரும்.

நமது அனைத்து துன்பங்களுக்கும் நாம் தான் காரணம்.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பது கணியன் பூங்குன்றனார் வாக்கு.

நமக்கு வரும் நல்லதுக்கு கெட்டதுக்கும் நாம் தான் காரணம். வேறு ஒருவரும் காரணம் அல்ல.

சூர்ப்பனகை இராமனை விரும்பினாள். அவன் திருமணம் ஆனவன் என்று தெரிந்தும், அவனுக்கு அவள் மேல் விருப்பம் இல்லை என்று தெரிந்தும் அவனை விரும்பினாள் . அது அவள் குற்றம்.

காமம் அவளை வாட்டுகிறது.

அருகில் உள்ள சோலைக்குச் சென்றாள். இரவு நேரம். நிலவு வருகிறது.

அந்த குளிர் நிலவு அவளுக்கு கொதிக்கிறது.

"கிரஹனத்தன்று வரும் இராகு கேது என்ற அந்த பாம்புகளை பிடித்து வந்து இந்த  சந்திரனை தின்ன வைத்தால் அப்புறம் இந்த சந்திரன் என்னை இப்படி துன்பப் படுத்த மாட்டான் "

என்று நினைக்கிறாள்.

துன்பம் , நிலவினால் அல்ல. அவள் கொண்ட காமத்தினால். ஆனால், அவளோ  நிலவை தொலைத்து கட்டிவிட வேண்டும் என்று நினைக்கிறாள்.

தான் செய்த தவறை உணராமல், மற்றவர்கள் மேல் பழி போடுவதும்,  அரக்க குணம்தானோ?

பாடல்

‘அணைவு இல் திங்களை நுங்க அராவினைக்
கொணர்வென் ஓடி ‘எனக் கொதித்து உன்னுவாள்
பணை இன் மென் முலை மேல் பனி மாருதம்
புணர ஆர் உயிர் வெந்து புழுங்குவாள்.


பொருள்

‘அணைவு இல் = ஆதரவாக இல்லாத

திங்களை = நிலவை

நுங்க = உண்ண

அராவினைக் = பாம்பினை

கொணர்வென் ஓடி = ஓடிச் சென்று கொண்டு வருவேன்

‘எனக் = என்று

கொதித்து  = ஆத்திரப்பட்டு, கோபப் பட்டு

உன்னுவாள் = நினைப்பாள்

பணை = பெருத்த

இன் = இனிய

மென் = மென்மையான

முலை மேல் = மார்பின் மேல்

பனி = குளிர்ந்த

மாருதம் = காற்று

புணர = சேர

ஆர் உயிர் = அருமையான உயிர்

வெந்து புழுங்குவாள் = வெந்து புழுங்குவாள்

யாரையாவது திட்ட வேண்டும் என்று தோன்றுகிறதா, எவர் மேலாவது பழி போட வேண்டும்  என்று தோன்றுகிறதா, எதன் மீதாவது வெறுப்பு வருகிறதா ...ஒரு நிமிடம் சூர்பனகையை நினையுங்கள்.

தன் காமத்திற்கு நிலவை பழித்த அவளின் செயலை நினையுங்கள்.

ஒருவேளை உங்கள் தவறு உங்களுக்கு புரிபடலாம்.

அதனால், உறவுகளில் விழ இருந்த விரிசல்கள் தவிர்க்கப் படலாம்.

மனம் இருந்தால், சூர்பனகையின் வாழ்வில் இருந்தும் பாடம் படிக்கலாம்.


2 comments:

  1. சந்திரன் படுத்தும் பாட்டை, மாருதம் தணிக்கவில்லை!

    ReplyDelete
  2. ஒன்று நிச்சயமாக தெரிகிறது .சூர்ப்பனகையின் காலத்திலிருந்து தற்சமயம் வரை நம்முடைய தப்பை பிறர் மீது போட தயங்குவதே இல்லை என்று.நாம் ஒரு பாடமும் கற்பதில்லை. சுவை பட எழுதி உள்ளீர்கள்

    ReplyDelete