Saturday, September 17, 2022

கம்ப இராமாயணம் - பெண்களும் ஜொள்ளு விடுவார்களா ?

கம்ப இராமாயணம் - பெண்களும் ஜொள்ளு விடுவார்களா ?


எப்பப் பார்த்தாலும் திருக்குறள், பிரபந்தம், தேவாரம், திருவாசகம் என்று இல்லாமல், இடை இடையே கொஞ்சம் வேறு விடயங்களையும் பார்ப்போம். 


எவ்வளவுதான் மனதில் காதலும், காமமும் இருந்தாலும் பெண்கள் அதை வெளியே சொல்லுவது இல்லை. தமிழ் இலக்கியம் முழுவதையும் அலசி ஆராய்ந்தாலும், பெண்கள் தங்கள் உணர்சிகளை வெளிப்படுத்திய இடங்கள் மிகக் குறைவு. பெண்களின் எழுத்துக்களில், ,பெண் உணர்வுகள் வெளிப்படும் இடங்கள் மிகக் குறைவு. 


தற்காலத்தில், புதுக் கவிதைகள் எழுதுகிறார்கள். 


கம்ப இராமாயணத்தில், கம்பன் பெண்களின் மன உணர்வுகளை பல இடங்களில் மிக அழகாக படம் பிடிக்கிறான். 


அதில் ஒரு இடம், சூர்பனகை இராம இலக்குவனர்களை கண்டு காமம் கொண்டு தன் உள்ளத்தை வெளிபடுத்தும் இடம். 


இராமன் கானகத்தில் இருக்கிறான். அவன் இருக்கும் வனப் பகுதி சூர்பனகைக்கு சொந்தமான இடம். அங்கு வந்த சூர்பனகை இராமனைப் பார்க்கிறாள். 


இராமனின் அழகில் மயங்குகிறாள். சொக்கிப் போகிறாள். மனதில் காதலும், காமமும் எழுகிறது. 


அவளுக்குத் தோன்றுகிறது....


"அந்தக் காலத்தில் சிவ பெருமான் தவம் செய்து கொண்டிருந்த போது அவரின் தவத்தைக் கலைக்க தேவர்கள் மன்மதனை அனுப்பினார்கள். அவனும் சிவன் மீது மலர்க் கணைகளை தொடுத்தான். தவம் கலைந்த சிவன் சினம் கொண்டு மன்மதனை தன் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கி விட்டார். பின், இரதிதேவி வேண்ட, யார் கண்ணுக்கும் தெரிய மாட்டான், உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிவான் என்ற வரத்தைத் தந்தார்.அந்த மன்மதன், நீண்ட காலம் தவம் செய்து எல்லோரு கண்ணிலும் படும்படி வரம் வாங்கி வந்துவிட்டானோ....இவனைப் பார்த்தால் மன்மதன் போல இருக்கிறதே " என்று ஜொள்ளுகிறாள் .



பாடல் 


 'கற்றை அம் சடையவன் கண்ணின் காய்தலால்

இற்றவன், அன்று தொட்டு  இன்றுகாறும், தான்

நல் தவம் இயற்றி, அவ்  அனங்கன், நல் உருப்

பெற்றன னாம்' எனப்  பெயர்த்தும் எண்ணுவாள்


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_17.html


(please click the above link to continue reading)




 'கற்றை அம் சடையவன் = சடை முடி உடைய அந்த சிவன் 


கண்ணின் காய்தலால் = நெற்றிக் கண்ணால் எரித்ததால் 


இற்றவன் = அழிந்தவன் 


அன்று தொட்டு = அன்று முதல் 


இன்றுகாறும் = இன்று வரை 


தான் = அவன் 


நல் தவம் இயற்றி = பெரிய தவங்களைச் செய்து 


அவ் அனங்கன் = அந்த அங்கம் இல்லாதவன், அதாவது உருவம் இல்லாதவன் 


நல் உருப் பெற்றன னாம்' எனப் = நல்ல வடிவைப் பெற்றான் போலும் 


பெயர்த்தும் எண்ணுவாள் =  மீண்டும் நினைப்பாள் 


எந்தக் கதை எப்படி வந்து நிற்கிறது..


எங்காவது வாய்ப்புக் கிடைத்தால் போதும், கம்பன் இராமனை இரசிக்கத் தவறுவது இல்லை. 


சூர்பனகை மூலம் கம்பன் இராமனை அனுபவிக்கிறான்.


கம்பன் மூலம் நாமும் அந்த இரசனையில் பங்கு கொள்வோம். 




No comments:

Post a Comment