Saturday, September 3, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஒலிகள்

 

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஒலிகள் 


(வெற்றிப் பாசுரத்தின் முந்தைய பாசுரங்கள் பற்றிய பதிவுகள் இந்த பதிவின் முடிவில் இருக்கிறது. அதை வாசிக்க விரும்புபவர்கள் அந்த வலை தலங்களுக்கு சென்று அவற்றை வாசிக்கலாம்). 


தமிழிலே ஓதம் என்று ஒரு சொல் இருக்கிறது. கடற்கரை ஓரம் உள்ளவர்கள் இந்த வார்த்தையை அடிக்கடி கேட்டு இருப்பார்கள். 


மழை நீர் ஆற்றின் வழியாக ஓடி கடலில் சேரும். அம்மாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் கடல் நீர் பொங்கும். நீர் மட்டம் உயரும். அப்போது, கடல் நீர் ஆற்று நீரை எதிர்த்துச் செல்லும். அதாவது கடல் நீர் மலை நோக்கிச் செல்லும். 


ஒரு பக்கம் மலையில் இருந்து வரும் நீர் கடல் நோக்கி வரும். இன்னொரு புறம் அதை எதிர்த்து கடல் நீர் மலை நோக்கிச் செல்லும். இரண்டு நீரும் ஆற்றில் கலந்து, சுழித்துக் கொண்டு பெரும் ஓசை எழும். 


இதை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். 


இப்போதஅடுத்த பாசுரதுக்குள் போவோம். 


அமுதம் வேண்டி அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மேரு மலையை நட்டு, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு, ஒரு புறம் தேவர்கள், மறு புறம் அசுரர்கள். 


கடல் நீர் கலங்கும் அல்லவா? கடலைக் கடைந்தால் எவ்வளவு சத்தம் வரும். நம் வீட்டில் ஒரு சிறு பாத்திரத்தில் தயிரைக் கடைந்தாலே எத்தனை சப்தம் வருகிறது. ஒரு mixie , grinder போட்டால் எவ்வளவு சத்தம் வருகிறது. கடலைக் கடைந்தால் எவ்வளவு சத்தம் வரும்.  அது ஒரு சத்தம். 


அந்த கடல் நீர் சுழித்துக் கொண்டு ஆறுகளில் எதிர்த்து ஓடி மலை நோக்கிச் செல்லும் அல்லவா. இரண்டு நீரும் ஒன்றோடு ஒன்று மோதி அதனால் உண்டாகும் ஒலி. அது இரண்டாவது ஒலி. 


மலையை கடலுக்குள் நிறுத்தி கடைந்தால், அந்த மலையும் நீரும் உரசும் ஒலி. அது மூன்றாவது ஒலி. 


அப்படி கடையும் போது கடல் நீர் வலம் இடமாக சுழலும் போது உண்டாகும் ஒலி. இது நான்காவது ஒலி. 


இத்தனை ஒலியும் ஒரு சேர எழுந்ததாம்....எப்போது தெரியுமா?


"என் அப்பன் தேவர்கள் மகிழ அமுதத்தை அவர்களுக்கு வழங்கிய போது" என்கிறார் நம்மாழ்வார். 



பாடல் 


ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர


வூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல்


மாறு சுழன்றழைக் கின்ற வொலி, அப்பன்


சாறு படவமு தங்கொண்ட நான்றே.



கொஞ்சம் சீர் பிரிப்போம் 


ஆறு மலைக்கு எதிர்த்து ஓடும் ஒலி 


அர ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி 


கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி 


அப்பன் சாறுபட அமுதம் கொண்ட நான்றே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html

(pl click the above link to continue reading)



ஆறு = ஆற்று நீர் 


மலைக்கு = மலையை நோக்கி 


எதிர்த்து ஓடும் ஒலி  = எதிர்த்து ஓடும் ஒலி 


அர = அரவு என்றால் பாம்பு. வாசுகி என்ற பாம்பு 


ஊறு = துன்பம், வலியால் 


சுலாய் = சுழன்று 


மலை தேய்க்கும் ஒலி = மலை (மேரு மலை) தேயும் ஒலி 


கடல் மாறு சுழன்று  = கடல் (பாற்கடல்) மாறி மாறி சுழன்று 


அழைக்கின்ற ஒலி  = எழுப்புகின்ற ஒலி 


அப்பன் = எனது தந்தை (திருமால்) 


சாறுபட = (தேவர்கள்) மகிழும்படி


 அமுதம் கொண்ட நான்றே. = அமுதத்தை வழங்கிய நாளில் 


பாற்கடல் என்று ஒன்று உள்ளதா? வாசுகி, மேரு மலை இதெல்லாம் உண்மையா? கடலை கடைய முடியுமா ? அமுதம் என்பது உண்மையா ?


என்ற கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும். 


கற்பனை செய்து பார்க்கலாமே?


எவ்வளவு பிரமாண்டம்.  இத்தனையையும் ஒருவன் மேற் பார்வை செய்து, அமுதத்தை எடுத்து கொடுப்பது என்றால் எவ்வளவு பெரிய வேலை? அதை வெற்றிகரமாக ஒருவன் செய்து முடித்தான் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். 


இப்போது உங்கள் வாழ்வில் உள்ள சவால்களை, பிரச்சனகைளை, சிக்கல்களை பாருங்கள். "ஹா...இதெல்லாம் ஒரு பெரிய வேலையா..." என்று தோன்றும். செய்து முடித்து விடலாம் என்று தோன்றும். நம் பிரச்னை ஒன்று பெரிது அல்ல என்று தோன்றும். 


இல்லை என்றால் நாம் ஒரு சின்ன பிரச்சனையை எடுத்து வைத்துக் கொண்டு, "ஐயோ, எனக்கு இப்படி ஒரு பிரச்னை வந்து விட்டதே, என்ன செய்வேன்" என்று களைத்துப் போவோம். கற்பனை விரிய விரிய, மனம் விரியும். மனம் விரியும் போது, அறிவு விரியும். 


பிரச்சனைகளின் பெரிது, சிறிது தன்மை புரியும். அவற்றைக் கையாளும் மனப் பக்குவம் வரும். தெம்பும் உற்சாகமும் வரும்.  வெற்றி தானே வரும். 


இது போன்ற பாசுரங்களை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். ஒரு முறை படித்துவிட்டு, "நல்லா இருக்கு" என்று சொல்லிவிட்டு "அடுத்த பாசுரம் எப்போது வரும்" என்று கேட்க்கக் கூடாது. 


சரியா?








(முந்தைய பதிவுகள்

பாசுரம் 1 - ஆழி எழ 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


)


No comments:

Post a Comment