Wednesday, August 31, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - இன்றிக் கெடும்

 திருக்குறள் - அழுக்காறாமை -  இன்றிக் கெடும்


பொறாமை கொள்வதே தவறு. அதனினும் பெரிய தவறு ஒன்று இருக்கிறது என்றால் ஒருவன் மற்றவனுக்கு செய்யும் உதவி கண்டு பொறாமை படுவது. 



ஒரு பணக்காரன் ஏழைகளுக்கு உதவி செய்கிறான். உணவு தருகிறான். அந்த ஏழைகளின் பிள்ளைகள் படிக்க பண உதவி செய்கிறான், அந்த வீட்டுப் பெண்கள் திருமணம் செய்து கொள்ள தங்கம், பணம் என்று உதவி செய்கிறான். அதைக் கண்டு பொறாமை கொள்பவர்கள் இருக்கிறார்கள். இப்படி எல்லாம் உதவி பெற்று அந்த ஏழை மக்கள் உயர்ந்து விடுவார்களோ என்று பொறாமை. எவ்வளவு கேவலமான ஒன்று. 



ரொம்ப தூரம் போவானேன்? காரில் வெளியில் போகும் போது, போக்கு வரத்து நெரிசலில் நிற்கும் போது, ஒரு ஏழை அல்லது வயதானவர், அல்லது ஒரு சின்னப் பிள்ளை பிச்சை கேட்டு கார் கண்ணாடியை தட்டும். கணவனோ மனைவியோ, கண்ணாடியை இறக்கி பணம் தருவார். நூறு ரூபாய் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். மற்றவர் சொல்லுவார் ..."பிச்சைகாரனுக்கு நூறு ரூபாய் போடனுமாக்கும்...ஏதோ அஞ்சு பத்து கொடுத்தால் போதாதா...பெரிய கர்ண பரம்பரை..." என்று வசனம் பிறக்கும். 


கொடுத்தது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், சொல்லுவது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். 


இது நிகழும் சாத்தியம் இருக்கிறது அல்லவா? 


ஒருவர் கொடுப்பதை மற்றவர் தடுக்க நினைப்பது, அதைக் கண்டு பொறாமை படுவது. 


இப்படிப் பட்டவர்களுக்கு ஒரு தண்டனை தர வேண்டும் என்று நினைக்கிறார் வள்ளுவர். 


வள்ளுவர் போல் மிகக் கடுமையான தண்டனை தர யாராலும் முடியாது. எவ்வளவு கோபம் வந்தால் அப்படி ஒரு தண்டனையை தந்திருப்பார் என்று நாம் யோசிக்க முடிகிறது. 


"உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு" என்றார். 


அதைவிட கொடுமையான தண்டனையை இங்கே சொல்கிறார். 


நாம் ஓரிரு வேளை உணவு உண்ணாமல் இருந்து விடலாம். சில நாட்கள் கூட உணவு உண்ணாமல் இருந்து விட முடியும். சாப்பிடாமல் போனால் யாருக்கும் தெரியாது. நாம பாட்டுக்கு போய் வரலாம். 


கையில் காசு இல்லை. உணவுக்கு வழி இல்லை. பசி உயிர் போகிறது. கஷடம்தான். பொறுத்துக் கொள்ள முடியும். சகித்து விடலாம். 


ஆனால், ,கையில் காசு இல்லை, உடை வாங்க வழி இல்லை என்று உடை இல்லாமல் தெருவில் போக முடியுமா? 


எவ்வளவு கேவலம் ? அதை விட உயரை விட்டு விடலாம் அல்லவா? 


தான் உடை இல்லாமல் போனால் பரவாயில்லை, ஒருவனின் தாய், தந்தை, உடன் பிறப்பு, மனைவி, ,கணவன், பிள்ளைகள் என்று எல்லோரும் உடை வாங்க வழி இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்? சகிக்க முடியுமா? 


நாம் உடை இல்லாமல் இருப்பதே சகிக்க முடியாது. மற்றவர்களும் அப்படி என்றால் பொறுக்க முடியுமா? 


"கொடுப்பது கண்டு பொறாமை படுபவனது சுற்றம் உடுக்க உடை இல்லாமலும், உண்ண உணவு இல்லாமலும் கெடும்"  என்கிறார். 


மிகக் கடுமையான தண்டனை. 


பாடல் 


கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_31.html

(Pl click the above link to continue reading)



கொடுப்பது = ஒருவன் மற்றவனுக்கு கொடுப்பதைக் கண்டு 


அழுக்கறுப்பான் = பொறாமை படுபவனது 


சுற்றம் = உறவினர்கள் 


உடுப்பதூஉம் = உடுக்க உடையும் 


உண்பதூஉம் = உண்ண உணவும் 


இன்றிக் = இல்லாமல் 


கெடும் = கேட்டினை அடைவார்கள் 


உறவினர்கள் தானே உணவும், உடையும் இல்லாமல் துன்பப் படுவார்கள், நமக்கு இல்லையே என்று யாராவது நினைத்து விடக் கூடாது என்று பரிமேலழகர் கூறுவார் "உறவு கெடும் என்றால் தான் கெடுவது சொல்லாமலேயே பெறப் படும்" என்று. 


ஒருவனிடம் உணவும், உடையும் இல்லை என்றால் வேறு என்னதான் இருக்க முடியும்?


எனவே, யாரோ யாருக்கோ நல்லது செய்து விட்டுப் போகிறார்கள். இருவரும் நல்லா இருக்கட்டும் என்று வாழ்த்திவிட்டு நம் வேலையை பார்க்க போய்விட வேண்டும். 


யோசித்துப் பார்த்தால், அரசாங்கம் நலிவடைந்த பிரிவினருக்கு சில உதவிகள் செய்கிறது. இட ஒதுக்கீடு, வேலையில் முன்னுரிமை, நிலப் பட்டா, ஓய்வூதியம், என்று எத்தனையோ நல திட்டங்களை அறிவிக்கிறது. 


அது கண்டு பலர் பொறுப்பது இல்லை.  எதற்கு அவர்களுக்கு இந்தச் சலுகைகள் எல்லாம், எத்தனை நாளுக்குத்தான் இப்படி தந்து கொண்டே இருப்பது, அவர்களுக்கு என்ன குறை, படித்து, உழைத்து வர வேண்டியதுதானே...என்று அவர்களுக்கு அரசாங்கம் செய்யும் சலுகைகளைக் கண்டு பொறாமை கொள்கிறார்கள். 


அதுவும் இதில் வருமோ? 











(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


குறள்  எண் 163: அல்லவை செய்யார்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து


)


No comments:

Post a Comment