Wednesday, August 10, 2022

கந்தரனுபூதி - எல்லாமற என்னை இழந்த நலம்

  

 கந்தரனுபூதி -  எல்லாமற என்னை இழந்த நலம் 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html



)


காய்ச்சல், கொரோனா போன்ற உடல் வருத்தங்களை தவிர்த்துப் பார்த்தால், நமது துன்பங்களுக்கு எல்லாம் காரணம் மனம் தான். 


படியில் இறங்கும் போது கால் தடுக்கி விழுந்து விடுகிறோம். கால் சுளுக்கிக் கொள்கிறது. அல்லது எலும்பு முறிந்து போய் விடுகிறது. அதனால் வரும் துன்பம் ஒரு புறம். 


ஆனால், அது போன்ற உடல் சார்ந்த துன்பங்கள் மிக மிக குறைவானவையே. மேலும், அந்தத் துன்பங்கள் பெரும்பாலும் மருந்து மற்றும் சிகிச்சையில் சரியாய்விடும். இல்லை என்றால் உடல் பழகிக் கொள்ளும். 


ஆனால் இந்த மனக் கவலை இருக்கிறதே..ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டே இருக்கும். ஒன்று முடிவதற்குள் இன்னொன்று வந்து வரிசையில் நிற்கும். 


அதை சரி செய்ய மருந்தோ, சிகிச்சையோ கிடையாது. 


கோபம், காமம், பயம், கவலை, பொறாமை இதற்கெல்லாம் எங்கே மருந்து இருக்கிறது?


இந்தக் கவலைகளுக்கு என்ன அடிப்படை காரணம். 


பற்று. 


உடல் மேல் உள்ள பற்று.


செல்வத்தின் மேல் உள்ள பற்று. 


உறவுகள் மேல் உள்ள பற்று


அடுக்கிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு பற்றும் கொஞ்சம் இன்பத்தையும்,அதைப் போல் பல மடங்கு துன்பத்தையும் கொண்டு வரும். இன்பம் இல்லாமல் இல்லை. 


காப்பி குடித்தால், அந்த நேரத்துக்கு கொஞ்சம் இன்பம் இருக்கத்தானே செய்கிறது. 


புகை பிடிப்பது.  காதலிப்பது. கல்யாணம். பிள்ளைகள். பணம். செல்வாக்கு என்று எதை எடுத்துக் கொண்டாலும், கொஞ்சம் இன்பம், நிறைய துன்பம். இதுதான் இயற்கை. 


ரொம்ப ஏன் போக வேண்டும். 


நம் உடம்பு நமக்குப் பிடிக்கும் தானே? அதற்கு ஒரு துன்பம் வராமல் பார்த்துக் கொள்கிறோம். கொஞ்சம் முடியவில்லை என்றாலும் மருத்துவரிடம் ஓடுகிறோம். சோப்பு, எண்ணெய் , வாசனை பொருட்கள், ஆடை, அணிகலன், என்று எவ்வளவு மெனக்கிடுகிறோம்.


அதே உடம்பு கொஞ்சம் காலத்துக்குப் பின், முடி நரைத்தால் கவலை,கண் பார்வை மங்கினால் கவலை, காது சரியாக கேட்கவில்லை என்றால் கவலை, ஞாபக சக்தி குறைந்தால் கவலை, பல் வலி வந்தால் கவலை என்று எவ்வளவு கவலைகளை கொண்டு வருகிறது?


இந்தக் கவலைகளில் இருந்து விடுபட அருணகிரிநாதர் வழி சொல்கிறார் 


பாடல் 


உல்லாச நிராகுல யோகவிதச் 

சல்லாப வினோதனு நீயலையோ 

எல்லாமற என்னை இழந்த நலம் 

சொல்லாய் முருகா சுரபூபதியே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


(Pl click the above link to continue reading) 



உல்லாச = மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் 


நிராகுல = நிர் + ஆகுலம். ஆகுலம் என்றால் கவலை, துன்பம். நிர் என்றால் எதிர் மறை. துன்பமே இல்லாத 


யோகவிதச்  = யோகத்தின் மூலம் 

+  

சல்லாப = பக்தர்களோடு நெருங்கி பழகி 


வினோதனு  = வினோதன், லீலைகள் புரிபவன் 


நீயலையோ = நீ தானே, உன்னைத் தவிர வேறு யார் 


எல்லாமற = எல்லாம் + அற = அனைத்தும் அற்றுப் போகும் படி 


என்னை இழந்த நலம்  = என்னையும் இழந்த நன்மையை 


சொல்லாய் = நீயே சொல்வாய் 


முருகா  = முருகா 


சுரபூபதியே  = தேவர்களின் பதியே 


என்ன சொல்ல வருகிறார் அருணகிரியார்?


"எல்லாம் அற" இதுதான் இந்தப் பாடலின் இதயம். எல்லாம் அற்றுப் போன பின் என்ன இருக்கும்? 


நம்மிடம் இரண்டு விதமான பற்றுகள் இருக்கின்றன. 


நான் என்ற அகப் பற்று. நான் பெரிய ஆள், நான் நல்லவன், வல்லவன். உலகிலேயே பெரிய பற்று அதுதான். 


அடுத்தது "எனது" என்ற புறப் பற்று. என் மனைவி, என் பிள்ளைகள், என் வீடு, என் படிப்பு, என் வேலை, என் அதிகாரம் என்ற புறப் பொருள்கள் மேல் உள்ளப் பற்று. 


இதனை அகங்காரம், மமகாரம் என்று சொல்லுவார்கள் 



வரும் போது முதலில்அகப் பற்று வரும், பின் புறப் பற்று வரும். 


விடும் போது முதலில் புறப்பற்று விடும், பின் அகப் பற்று. 


அருணகிரியார் சொல்கிறார் - எல்லாம் அற - வெளியில் உள்ள பற்றுகள எல்லாம் விட்டாச்சு.  அதன் பின் 


"என்னை இழந்த" என்று நான் என்ற அகப் பற்றும் விட்டு விட்டது. 


இரண்டு பற்றும் விட்டு விட்டால் பேரின்பம் வந்தது என்கிறார். யாருக்கு? "நான்" என்ற ஒரு பொருளே இல்லையே. பின் "நலம்" எப்படி வரும்? அதை அனுபவிப்பது யார்?


அதை எப்படிச் சொல்லுவது என்று தெரியவில்லை, முருகா! நீயே சொல் என்று முருகனிடம் விட்டு விடுகிறார். 


"சொல்லாய் முருகா"  என்று முருகனைச் சொல்லச் சொல்கிறார். 


அது மனித அறிவுக்குள் அகப்படாது. 


மற்ற மதக் கடவுள்களுக்கும், இந்து மதக் கடவுளுக்கும் ஒரு வேறுபாடு உண்டு.


மற்ற மதங்களில் கடவுளர்கள் ரொம்பவும் சீரியஸ் ஆக இருப்பார்கள். 


இந்து மதக் கடவுள்கள் எப்போதும் சிரித்து, பேசி, விளையாடி, மிக இன்பமாக இருப்பவர்கள். 


"உல்லாச" - உல்லாசமாக இருப்பவன்

"சல்லாப" - பேசி, கூடி மகிழ்பவன் 

"வினோத" - லீலைகள் புரிபவன். விளையாட்டு. 


கம்பர் சொல்லுவார் 


"அலகிலா விளையாட்டு உடையார் அவர், தலைவர், அன்னவர்க்கே சரணாங்களே" என்று. 


இந்த அளவு என்று கிடையாது. ஒரே விளையாட்டு. 


"அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்" என்பார் சேக்கிழார்.  ஒரே ஆட்டம் தான். 


வாழ்கையை ரொம்பவும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக் கூடாது. 


வந்தால் இன்பம்.


போனால் இன்பம்.


வராவிட்டால் இன்பம்.


ஐயோ வரவில்லையே, ஐயோ போய் விட்டதே என்று வருந்தக் கூடாது. 


வாழ்க்கை என்பது ஆனந்தமாக கழிக்க வேண்டிய ஒன்று. 


சத் + சித் = ஆனந்தம் = சச்சிதானந்தம்


"ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்" என்பார் பட்டர். 


"பரமானந்த சாகரத்தே " என்பார் அருணகிரி. 


எல்லாவற்றையும் பிடித்துக் கொண்டு, அது விட மாட்டேன் என்கிறது, இது விட மாட்டேன் என்கிறது என்று கவலைப் படாதே. 


பற்றுகளை விட்டு ஆனந்தமாய் இரு என்கிறார். 




No comments:

Post a Comment