Friday, August 12, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - அஃதொப்பது இல்லை - பாகம் 2

   

 திருக்குறள் - அழுக்காறாமை -  அஃதொப்பது இல்லை - பாகம் 2


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


)


பாடல் 


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்


யாரிடத்தும் பொறாமை கொள்ளாமல் இருப்பது போன்ற உயர்ந்த செல்வம் இல்லை என்று முன் சிந்தித்தோம்.


இனி தொடர்வோம். 


பொறாமை யார் மேல் வரும்?


நம்மை விட ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்தவர்கள் மேல் தானே பொறாமை வரும். 


நம்மை விட கீழே இருப்பவர்கள் மேல் ஏன் பொறாமை வரப் போகிறது?


அந்த உயர்ந்தவர்கள் யார் ?


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2.html


(Pl click the above link to continue reading)


அவர்கள் நமக்கு நெருங்கியவர்களாக இருக்கலாம்.  அல்லது, நமக்கு வேண்டாதவர்களாக இருக்கல்லாம். எதிரியோ, பகைவனோ, வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 


நமக்கு வேண்டியவர்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன் பிறப்புகள் அவர்கள் நன்றாக இருந்தாலே பலருக்கு அவர்கள் மேல் பொறாமை வருகிறது. 


உடன் பிறந்த சகோதரன்தான். நன்றாக படித்து, பெரிய வேலை, பெரிய வீடு என்று இருந்தால் மற்ற சகோதரனுக்கு பொறாமை வருமா இல்லையா?


வெளியில் சொல்ல மாட்டான். உள்ளுக்குள் இருக்கும். 


எத்தனை அண்ணன் தம்பி சண்டைகள் நீதிமன்றக் கதவை தட்டுகின்றன. 


தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் மனைவி மேல் பொறாமை சிலருக்கு வருகிறது தானே.


தன்னைவிட அழகாக இருக்கும் மகள் மேல் சில தாய்மார்களுக்கு பொறாமை இருக்கத்தான் செய்கிறது. மகளுக்குச் சமமாக ஆடை உடுத்துகிறார்கள், நகை அணிகிறார்கள், அழகு நிலையத்தில் சென்று அழகு படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். உண்டா இல்லையா? 


தன்னை விட படித்து பெரிய ஆள் ஆன மகன் மேல், தன்னை விட அழகாக இருக்கும் மகள் மேல் எல்லாம் பொறாமை வருகிறது. 


அண்ணன் மனைவி, தம்பி மனைவி என் மனைவியை விட அழகாக இருக்கிறாள் என்றெல்லாம் பொறாமை கொள்கிறார்கள். 


சரி இதாவது எப்படியோ சாக்கு போக்கு சொல்லி மனதை திருத்தி விடலாம். நம் தம்பிதானே, நம் அண்ணன்தானே போனால் போகுது என்று ஒரு சமாதானம் அடைய முடியும். 


நம் எதிரி உயர்ந்தால் பொறாமை வருமே. அதை எப்படி மாற்றுவது? நமக்கு வேண்டாதவன் உயர்ந்து கொண்டே போகிறான். நம்மால் சகிக்க முடியுமா? பெரிய வீடு வாங்குகிறான், பெரிய கார் வாங்குகிறான், பத்திரிகைகளில் அவன் பேர் வருகிறது, எல்லோரும் அவனைப் புகழ்கிறார்கள். எப்படி பொறாமை கொள்ளாமல் இருப்பது?


யார்மேலும் பொறாமை கொள்ளக் கூடாது என்பதற்காக 


"யார் மாட்டும்" என்று கூறுகிறார். 


அந்த யார் மாட்டும் என்ற சொல்லுக்குள் எவ்வளவு இருக்கிறது பாருங்கள். 


நமக்கு வேண்டாதவன் உயர்ந்தால் கூட பொறாமை கொள்ளாமல் இருக்க வேண்டும் என்கிறார். 


அது எப்படி என்று பின்னால் சொல்ல இருக்கிறார். 


இப்போதைக்கு சிந்தியுங்கள். யார் மேல் எல்லாம் உங்களுக்கு பொறாமை இருக்கிறது என்று. 


கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை விலக்க முயலுங்கள். கடினம்தான். ஆனால் முடியும். பொறாமை குறைய குறைய மன பாரம் குறையும். மன அழுத்தம் குறையும். நிம்மதி பிறக்கும். அமைதி தோன்றும். 


யார் எப்படி போனால் நமக்கு என்ன.


"வட கோடு உயர்ந்தென்ன தென் கோடு தாழ்ந்தென்ன" என்று இருக்க முயல்வோம்.





No comments:

Post a Comment