Wednesday, August 17, 2022

கந்தரனுபூதி - எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 2

    

 கந்தரனுபூதி -  எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 2


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html




)


எது நிரந்தரமானது, எது அடிப்படையானது எதில் இருந்து இந்த உலகம் தோன்றியது என்ற கேள்விகளுக்கு இங்கு விடை சொல்கிறார் அருணகிரிநாதர். 


இது தான் என்று விடை சொல்லிவிடலாம். இதைத் தவிர வேறு விடைகளும் இருக்கிறதா? இது பற்றி மற்றவர்கள் சிந்தித்து இருக்கிறார்களா? அவர்கள் சொன்ன முடிவு என்ன? என்பதையும் இங்கே கூறுகிறார்.


சமயவாதிகள் பலரைக் ஏதாவது கேட்டால் "அது எல்லாம் ஒரு நம்பிக்கைதான்...அதை எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது...அதெல்லாம் உனக்குப் புரியாது" என்று சொல்லிவிடுவார்கள். 


ஆனால், இந்து சமயத்தை உற்று நோக்கினால் புரியும். இந்த சமயம் முழுவதுமே கேள்வி கேட்பதுதான். தேடல்தான். 


கீதையை கண்ணனே சொல்கிறான். இருந்தும் விடாமல் அர்ஜுனன் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு இடத்தில் கூட கண்ணன் "நான் சொல்கிறேன்...வாயைக் மூடிக் கொண்டு கேள்" என்று சொல்லவில்லை. கடைசி அத்யாயம் வரை கேள்வி தொடர்கிறது. 


உபநிடதங்களும் அப்படியே. குருவின் அருகில் இருந்து கேள்வி கேட்டு தெளிவு பெறுவது. கேள்வி கேட்காமல், கண் மூடித்தனமாக நம்ப வேண்டும் என்று இந்து சமயம் ஒரு இடத்திலும் கூறவில்லை.


இந்தப் பாடலில் எத்தனை கேள்விகள் என்று பார்ப்போம். 


பாடல் 


வானோ? புனல் பார் கனல் மாருதமோ?

ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?

யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்

தானோ? பொருளாவது சண்முகனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


(Pl click the above link to continue reading) 


ஏழு கேள்விகள் கேட்கிறார் அருணகிரியார். 


நாலு வரிக்குள் ஏழு கேள்விகள். கேள்வி கேட்காமல் "நம்பிக்கை நம்பிக்கை" என்று சொல்பவர்கள் கேள்வி கேட்கப் பழக வேண்டும். கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பழக வேண்டும். 


எது பொருள் அதாவது நிரந்தரமான பொருள் எது என்ற கேள்வியை எழுப்புகிறார் அவர்.


இதுவா, அதுவா என்று அவரே சந்தேகத்தை எழுப்புகிறார். 


வானோ?  = வானமா? இந்த ஆகயமா? 


புனல் = நீரா ?


பார் = நிலமா? 


கனல் = நெருப்பா? 


மாருதமோ? = காற்றா? 


ஞானோ தயமோ? = ஞானம் உதயம் ஆன இடமா? 


நவில் நான் மறையோ? = பேசப்படும் நான்கு வேதங்களா? 


யானோ? = நானா? 


மனமோ? = என் மனமா ?


எனை ஆண்ட இடம் தானோ?  = எனை ஆண்ட இடம் தானோ? 


பொருளாவது சண்முகனே = ((நிரந்தர) பொருளாவது சண்முகனே. 


முருகா, நீயே சொல்.


இந்த பஞ்ச பூதங்களா?  வேதங்களா? ஞானமா? நானா? என் மனமா? என்னை ஆட்கொண்ட இடமா? எது பொருள் ? சொல் முருகா என்று முருகனை கேள்வி கேட்கிறார். 


சரி, அவர் கேள்வி கேட்டார். முருகன் பதில் சொன்னானா? என்ன பதில் என்று கேட்டால், இந்தப் பாட்டிலேயே அதையும் சொல்லி விட்டார் அருணகிரியார். 


இதில் எத்தனை தத்துவங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம். 


"வானோ" - வானமா? என்று கேட்கிறார்.  சூனியத்துவம் என்று ஒரு தத்துவம் உண்டு. அந்தத் தத்துவத்தின் படி இந்த உலகிற்கு ஆதாரம் இந்த வெளிதான். எல்லாம் அதில் தோன்றி அதிலே முடிவடைத்து விடும் என்பது இந்த தத்துவத்தின் கொள்கை. இந்த பிரபஞ்சம் முழுவதும், எண்ணில் அடங்கா சூரியன்கள், சந்திரன்கள், கோள்கள், விண்மீன்கள், பால்வெளி, எல்லாம் இந்த சூன்யத்தில் இருந்து தோன்றி, அதில் ஒடுங்கும், எனவே அதுதான் நிரந்தரமானது என்று கூறும் தத்துவம். அப்படியானால் அதுதான் உண்மையா?   அல்லது...


"புனல் பார் கனல் மாருதமோ?


ஏனைய பஞ்ச பூதங்கள்தான் அடிப்படையா? சில சமய தத்துவங்கள் இந்த பிரபஞ்சம் நீரில் தொடங்கி நீரில் முடியும் என்று கூறும். ஊழிக் காலத்தில் இந்த உலகம் முழுவதும் நீரால் சூழப்படும், எங்கள் இறைவன் ஆல் இலை மேல் மிதந்து வருவான் என்று சில சமய பிரிவுகள் கூறும். 


வேறு சில பிரிவுகள், இந்த உலகம் நெருப்பில் தோன்றி , நெருப்பில் மறையும். ஊழிப் பெரு நெருப்பு இந்த உலகம் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கி விடும். அந்த சாம்பலை எங்கள் இறைவர் உடல் முழுவதும் பூசிக் கொள்வார். அந்த நெருப்பு வடிவானவர் எங்கள் கடவுள் என்று சில பிரிவுகள் கூறும். ஜோதி வடிவானவன் என்று பேசும். 


இப்படி ஐம்பெரும் பூதங்களும்தான் உலகின் தொடக்கம், நடு, முடிவு என்று வெவ்வேறு தத்துவங்கள் கூறுகின்றன. 


இதில் எது உண்மை? 


அருணகிரியார் மேலும் தொடர்கிறார் 



ஞானோ தயமோ?  =  இந்த உலகமே ஒரு மாயை. இது உண்மை அல்ல. ஆணவம், கன்மம், மதம், மாச்சரியம் போன்ற மலங்கள் நம்மை உண்மையான உலகை அறிய விடாமல் தடுக்கின்றன. மாயை விலகி ஞானம் பிறந்தால் உண்மை விளங்கும். எனவே, இந்த ஞானமா நிரந்தரமான பொருள்? 


நவில் நான் மறையோ? = அதெல்லாம் இல்லை. என்றும் நிரந்தரமானது உண்மை ஒன்றுதான். அந்த உண்மை வேதங்களில் பொதிந்து கிடக்கிறது. வேதம் என்று தோன்றியது என்று தெரியாது. உண்மையை உள்ளடக்கிய அந்த வேதமா நிரந்தரமான பொருள்?



யானோ?  = பொருள் என்று ஒன்று தனியே கிடையாது. பார்பவரின் புலன்களைப் பொறுத்துத் தான் உலகம். கண் பார்வை இல்லாதவருக்கு நிறம் என்ற ஒன்று இல்லை. அவரைப் பொறுத்தவரை இந்த உலகம் நிறம் என்ற ஒன்று இல்லாதது. அவருக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். எனக்கு நிறம் தெரிகிறதே என்று நாம் கூறலாம். நமக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன. அவருக்கு நான்கு புலன்கள் மட்டும்தான் இருக்கிறது. ஒரு வேளை ஆறாவது அல்லது ஏழாவது புலன் என்று ஒன்று இருந்தால்? நம்மிடம் இல்லை. நமக்கு அது புரியவே புரியாது. கண் இல்லாதவர்க்கு நிறம் புரியாதது போல ஐந்துக்கு மேல் உள்ள புலன்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதற்காக அவை இல்லை என்று நாம் எப்படி கூற முடியும் ? அப்படி என்றால் இங்கே நிரந்தரமான ஒன்று என்பது "நான்" என்று சொல்லப் படும் பொருளா?


மனமோ?  = நான் இருந்தால் மட்டும் போதாது. என் மனம் வேலை செய்ய வேண்டும். சிந்தனை ஓட வேண்டும். ஞாபகம் வேண்டும். புலன்கள் சொல்லும் செய்தியை நாம் அறிய வேண்டும். எனவே, இந்த மனமா நிரந்தரமானது? 


 எனை ஆண்ட இடம் தானோ?  = இதெல்லாம் இல்லை. நீ என்னை ஆட்கொண்டாய் அல்லவா அந்த நிகழ்வுதான் நிரந்தரமான ஒன்று என்கிறார். 


நம் நண்பர் நம்மிடம் கேட்கிறார் "நான் நேற்று ஒரு விழாவுக்குப் போயிருந்தேன். அங்க யாரைப் பார்த்தேன் சொல்லு பார்க்கலாம்" என்று நம்மைக் கேட்கிறார். 


நாமும் 


"இராமனா?"  என்கிறோம். 


"இல்லை" என்கிறான். 


"கிருஷ்ணனா" என்று கேட்கிறோம்.


"ம்ஹும்ம்" என்று தலையாட்டி மறுக்கிறான். 


இப்படி ஒவ்வொரு பேராக சொல்லிக் கொண்டே போகிறோம். இல்லை, இல்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். 


கடைசியில் 


"கண்டு பிடிச்சுட்டேன்...நம்ம பழைய நண்பன் முருகன் தான " என்கிறோம். 


ஆம் என்று தலை அசைக்கிறான். 


அதற்குப் பிறகு நாம் மேலும் பேர் சொல்லிக் கொண்டே இருப்போமா? எப்போது சரியான விடை வந்து விட்டதோ, அதற்குப் பிறகு பேச்சு இல்லை. 


வானோ, புனலோ என்று கேட்டுக் கொண்டே வந்த அருணகிரியார் 


"எனை ஆண்ட இடம் தானோ/" என்று இறுதியாக கேட்டு நிறுத்துகிறார். 


அதற்கு பின்  ஒன்றும் கேட்கவில்லை. அப்படி என்றால் என்ன அர்த்தம்? அதுதான் விடை என்று அர்த்தம். 


இந்த உயிர் இறைவனோடு கலப்பது ஒன்றுதான் நிரந்தரமான ஒன்று. 


பசு, பாசம் என்ற கயிறை அறுத்துக் கொண்டுபதியோடு இணைவதுதான் இறுதியான ஒன்று. 


இந்த ஆன்மா உலகில் பிறந்து, பல அனுபவங்களைப் பெற்று, மீண்டும் இறைவனோடு இணைவது ...இதுதான் எப்போதும் விடாமல் நிகழ்ந்து கொண்டிருப்பது. 


அலை, கடலோடு சேர்வது போல. 


மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பாடலின் ஆழம் விளங்கும். 


இப்படி ஐம்பது பாடல்கள் இருக்கின்றன.  என்று அனைத்தையும் படித்து தெளிவது? 


பொருளாவது சண்முகனே.


1 comment:

  1. அற்புதமான விளக்கம்....வணக்கம்.

    ReplyDelete