Wednesday, August 3, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 6 - என்னை நிகழ்ந்தது?

 

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 6   - என்னை நிகழ்ந்தது?



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


பாகம் 3 - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/3.html


பாகம் 4 - மானைத் தூக்கிய யானை போல 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/4.html



பாகம் 5 - மன்னன் ஆவி அன்னாள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/5.html


)


இராமனுக்கு முடி சூட்டப் போகும் செய்தியைச் சொல்ல தயரதன் கைகேயி அரண்மனைக்கு வருகிறான். அங்கே கைகேயி அலங்கோலமாக தரையில் கிடக்கிறாள். 


தயரதன், கைகேயி எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நம் வாழ்வில் இப்படி ஒரு சூழ்நிலை இருந்தால் என்ன நடந்திருக்கும்?


வேலைக்கு சென்ற கணவன் களைத்து வீடு திரும்புகிறான். வந்தால், மனைவி அலங்கோலமாக தரையில் கிடக்கிறாள். 


உடம்புக்கு ஒன்றும் இல்லை. 


பொதுவாக கணவனுக்கு என்ன தோன்றும்?


"இன்னைக்கு என்ன கூத்தோ? பேசாமல் இன்னும் கொஞ்ச நேரம் அலுவலகத்திலேயே இருந்திருக்கலாம். வேலையாவது முடிந்திருக்கும். ஏண்டா வீட்டுக்கு வர்றோம்னு இருக்கு" 


என்றுதான் பெரும்பாலான கணவர்கள் அலுத்துக் கொள்வார்கள். 


தயரதனும், மந்திர ஆலோசனை முடிந்து வருகிறான். நேரம் நள்ளிரவு. களைப்பு இருக்குமா ? இருக்காதா?  எடுத்த முடிவோ பெரிய முடிவு. அரசை இராமனிடம் கொடுப்பது என்ற முடிவு. எவ்வளவு வேலை இருக்கும். மனைவியிடம் சொல்ல ஓடோடி வந்தால், அவள் இப்படி இருக்கிறாள். 


ஆனால், அலுவலகத்தில் என்ன பெரிய வேலை செய்தாலும் ஒரு பொருட்டு இல்லை. மனைவி துயரத்தில் இருக்கிறாள் என்றால் மற்றதை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவளை கவனிக்க வேண்டும். 


நான் ஒரு ப் பெரிய ஒப்பந்தத்தை முடித்து விட்டேன், அதை சாதித்தேன், இதைச் சாதித்தேன் என்ற பெருமிதத்தில் கவலையாக இருக்கும் மனைவியை கவனிக்கமால் இருக்கக் கூடாது. 


"தயரதன் அவள் இருக்கும் நிலை கண்டு  என்ன ஆயிற்றோ என்று அஞ்சினான். அவளை அள்ளி எடுத்து அவளிடம் கேட்கிறான் 'என்னம்மா ஆச்சு? உன்னை யாரும் ஏதாவது உன் மனம் வருந்தும்படி சொன்னார்களா? என் கிட்ட சொல்லு. யாராக இருந்தாலும், அவங்களை உண்டு இல்லை என்று பண்ணி விட்டு வருகிறேன். என்னை நம்பு...என்னனு சொல்லு"


என்கிறான். 



பாடல் 


அன்னது கண்ட அலங்கல் மன்னன்,  அஞ்சி,

“என்னை நிகழ்ந்தது? இஞ் ஞாலம்  ஏழில் வாழ்வார்

உன்னை இகழ்ந்தவர் மாள்வர்!  உற்றது எல்லாம்

சொன்னபின் என் செயல் காண்டி!  சொல்லிடு!“ என்றான்.



பொருள்   


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/6.html


(please click the above link to continue reading) 


அன்னது கண்ட = அவள் இருக்கும் நிலை கண்ட 


அலங்கல் மன்னன் = மாலை அணிந்த மன்னன் (தயரதன்) 


அஞ்சி, = (என்ன ஆயிற்றோ) என்று அச்சப்பட்டு 


“என்னை நிகழ்ந்தது? = "என்ன நடந்தது"  


இஞ் ஞாலம்   ஏழில் = இந்த ஏழு உலகில் 


வாழ்வார் = வாழ்பவர்கள் 


உன்னை இகழ்ந்தவர்  மாள்வர்! = உனக்கு வருத்தம் வரும்படி பேசியவர்கள் உயிரை விடுவார்கள் 


 உற்றது எல்லாம் =  என்ன நடந்ததுனு சொல்லு 


சொன்னபின் = நீ சொன்ன பின் 


என் செயல் காண்டி! = நான் என்ன செய்யிறேன் பாரு 


சொல்லிடு!“ என்றான். = சொல் என்றான் 


கணவன் மனைவிக்கு நடுவில் சிக்கல் வந்தால், முதலில் செய்ய வேண்டியது - பேச வேண்டும். நிறைய பேச வேண்டும். மனம் விட்டுப் பேச வேண்டும். 


முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு பேசாமல் இருக்கக் கூடாது. 


தயரதன் தான் ஒரு பெரிய சக்கரவர்த்தி என்பதெல்லாம் தூக்கி ஒரு புறம் வைத்து விட்டு, அவன் மனைவியின் துன்பத்தைத் துடைக்க ஒரு கணவனாக அவளோடு பேசுகிறான். 


(தொடரும்) 



No comments:

Post a Comment