Sunday, September 25, 2022

திருக்குறள் - வெஃகாமை - நடுவின்றி நன்பொருள் வெஃகின்

 

 திருக்குறள் - வெஃகாமை - நடுவின்றி நன்பொருள் வெஃகின்


ஒருவன் பொருளை அவன் அறியாமல் எடுத்துக் கொள்ள "நினைத்தால்" என்ன ஆகும்? எடுத்தால் அல்ல, எடுக்க நினைத்தால் என்ன ஆகும் என்று வள்ளுவர் சொல்கிறார். 


"அறம் இன்றி இன்னொருவன் பொருளை எடுத்தால், எடுத்தவனின் குடி கெடுவது மாத்திரம் அல்ல அவனுக்கும் பல குற்றங்கள் வந்து சேரும்" 


பாடல் 


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


(Please click the above link to continue reading)



நடுவின்றி = நடுநிலைமை இல்லாமல் 


நன்பொருள் = நல்ல பொருளை 


வெஃகின் = எடுத்துக் கொள்ளக் கருதினால் 


குடிபொன்றிக் = குடியை கெடச் செய்து 


குற்றமும் = குற்றத்தையும் 


ஆங்கே தரும் = ஆங்கே தரும் 


"நன் பொருளை வெஃகின்" என்று போட்டு இருக்கலாம். ஆனால் "நடுவு இன்றி நன் பொருளை வெஃகின்" என்று சொல்லி இருக்கிறார். 


வெஃகுதல் = விரும்புதல், தீய வழியில் கொள்ள நினைத்தல். 


ஒருவனிடம் ஒரு நல்ல கார் இருக்கிறது. அது போல நமக்கும் ஒன்று வேண்டும் என்று நினைப்பது குற்றம் அல்ல. நல்ல பொருளை விரும்புவதே குற்றம் அல்ல. நடுவு இன்றி, நல்ல பொருளை விரும்புவது குற்றம். 


சரி, தவறு ; ஞாயம், அநியாயம், தர்மம், அதர்மம் பார்த்து நடு நிலையில் நில்லாமல் தவறான ஒன்றின் பால் சார்ந்து அதை விரும்புவது தவறு என்கிறார். 


""பொருளை விரும்பின்"  என்று ஏன் சொன்னார்?


"நன் பொருளை" என்று ஏன் சொன்னார்? வெறுமனே "பொருளை" என்று சொல்லி இருக்கலாமே? பொருள் நல்லது செய்யும். இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை செய்யும். எனவே நன் பொருள் என்றார். இல்லறத்தில் இருப்பவனுக்கு பொருள் அவசியம். 


இரண்டுவிதமான சிக்கல்கள் வரும் என்கிறார். .


ஒன்று, குடி பொன்றும். 


மற்றது, குற்றமும் ஆங்கே தரும். 


குடியை கெடச் செய்து என்று உரை செய்வார் பரிமேலழகர். .ஒருவன் மற்றவன் பொருளை தவறான வழியில் அடைய நினைத்தால் அது அவனை மட்டும் கெடச் செய்யாது. அவன் குடியையே நாசம் செய்யும். 


தவறாக நினைப்பவன், அதை ஒரு நாள் செய்யவும் செய்வான். அப்படிச் செய்தால் உலகம் அவனை மட்டும் அல்ல, அவன் குடும்பத்தையே தூற்றும். 


குற்றமும் ஆங்கே தரும் என்றார். ஆங்கே என்றால் அங்கேயே, உடனேயே தரும். கொஞ்ச நாள் எல்லாம் ஆகாது. உடனுக்கு உடனேயே தரும். 


குற்றமும் என்பதில் உள்ள உம்மை முற்றும்மை. அதாவது அதற்கு மேல் வேறு எதுவும் இல்லை. எல்லா தீயவரையும் தரும் என்பது பொருள். 


ஒரு விரலில் மோதிரம் போட்டேன், இரண்டு விரலில் போட்டேன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். பத்து விரலிலும் போட்டேன் என்றால் மொத்தம் அவ்வளவுதான். பதினோராவது விரல் இல்லை என்று பொருள். 


குற்றமும் தரும் என்றால், எல்லாம் தந்தாச்சு, இனி இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று அர்த்தம். 


முதல் குறளிலேயே பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார் வள்ளுவர். 


மேலும் சிந்திப்போம். 


[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html

]


No comments:

Post a Comment