Thursday, October 31, 2019

கந்த புராணம் - அவரை எலாம் வெறுக்கல் ஆமோ ?

கந்த புராணம் - அவரை எலாம் வெறுக்கல் ஆமோ ?


இறைவன் பெரியவன். எல்லாம் தெரிந்தவன். அவனால் முடியாதது எதுவும் இல்லை. இந்த உலகம், இந்த உயிர்கள் அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவன் அவன் என்று பலர் ஏற்றுக் கொள்கிறார்கள்.

பின் அவர்களே சொல்கிறார்கள், அந்தக் கடவுளுக்கு கண் இல்லை, எனக்கு ஏன் இந்த சோதனை என்று.

கடவுளுக்கு வேற வேலை இல்லையா ? நாம் எப்படி போனால் அவருக்கு என்ன? அவ்வளவு பெரிய ஆளுக்கு நாம் எம் மாத்திரம்.

நாம் பக்தி செய்தால் என்ன, பக்தி செய்யாவிட்டால் என்ன? நாம் வாழ்த்தினால் என்ன, வைத்தால் என்ன?

அது புரியாமல், இறைவா எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு, அதில் இருந்து காப்பாற்று, என்றெல்லாம் வேண்டுகிறார்கள். வேண்டியது கிடைக்கவில்லை என்றால் இறைவன் மேல் நொந்து கொள்கிறார்கள்.

நாம் செய்த வினை நமக்கு மீண்டு வருகிறது என்று நினைப்பது இல்லை.

குளிர்ந்த நீரை நிறையக் குடித்தால் தொண்டை காட்டும்.

ஐஸ் கட்டி போட்டு குளிர்ந்த நீரை குடித்து விட்டு, ஆண்டவா எனக்கு தொண்டை கட்டு வரக்கூடாது என்று வேண்டினால் என்ன பலன்?

சூரபத்மன், தேவர்களை எல்லாம் சிறைபிடித்து படாத பாடு படுத்துகிறான். முருகன் அவதாரம் செய்தால் தான் சூரன் அழிவான்.

சிவனோ நிட்டையில் இருக்கிறார். அம்பாள் சிவனை நினைத்து தவம் இருக்கிறாள். ஆளுக்கு ஒரு புறம் இருந்தால், குமார சம்பவம் நிகழ்வது எப்படி?

எல்லோருமாக சேர்ந்து மன்மதனை அனுப்பி, சிவன் மேல் மலர் அம்புகளை விட்டு, சிவனுக்கு காமம் ஏற்படச் செய்ய முயன்றார்கள்.

மன்மதனும் அம்பு போட்டான்.  சிவனின் தவம் கலைந்தது. வந்த கோபத்தில், நெற்றிக் கண்ணால்  மன்மதனை எரித்து விட்டார்.

மன்மதன் சாம்பலாகி விட்டான்.

அவன் மனைவி இரதி புலம்புகிறாள். அருமையான தமிழ் பாடல்கள்.

என்னவெல்லாமோ சொல்லி அழுகிறாள். பின் தெளிகிறாள்.

"உன் தலையில் வெந்து போ என்று விதி எழுதி இருந்தால் யார் என்ன செய்ய முடியும்? இதுக்கு யாரை நொந்து கொள்வது? " என்று தெளிகிறாள்.


பாடல்


போ என்று வரவிட்ட தேவர் எலாம் பொடி ஆகிப் போன உன்னை
வா என்று கடிது எழுப்ப மாட்டாரோ நின் தாதை வலியன் என்பார்
ஓ என்று நான் இங்கே அரற்றிடவும் வந்திலனால்  உறங்கினானோ
வே என்று நின் சிரத்தில் விதித்து இருந்தால் அவரை  லாம் வெறுக்கல் ஆமோ.


பொருள்


போ என்று = போ என்று

வரவிட்ட தேவர் எலாம் = உன்னை செலுத்திய தேவர் எல்லாம்

பொடி ஆகிப் போன உன்னை = எரிந்து பொடிப் பொடியான உன்னை

வா என்று = உயிரோடு திரும்பி வா என்று

 கடிது  = விரைந்து

எழுப்ப மாட்டாரோ  = எழுப்ப மாட்டாரோ?

நின் தாதை = உன் தந்தை (திருமால்)

வலியன் என்பார் = வலிமையானவர் என்று சொல்லுவார்கள்

ஓ என்று = ஓ என்று

நான் இங்கே அரற்றிடவும் = நான் இங்கே அழுது புலம்ப

வந்திலனால்  = வராமல்

உறங்கினானோ = எங்கே பள்ளி கொண்டு இருக்கிறானோ

வே என்று = வெந்து போ என்று

நின் சிரத்தில் = உன் தலையில்

விதித்து இருந்தால் =  விதித்து இருந்தால்

அவரை  எலாம் = அவர்களை எல்லாம்

வெறுக்கல் ஆமோ. = வெறுக்கலாமா ?

நாம் செய்த வினை நம்மை வந்து சேர்கிறது  என்றது நினைத்துக் கொள்ள வேண்டும்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா


கந்த புராணம் கிட்டத்தட்ட 1800 பாடல்களைக் கொண்டது

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிச் செய்தது.

மூல நூலை தேடி பிடித்துப் படித்துப் பாருங்கள்.

தேன் சொட்டும் பாடல்கள்.  படித்துப் பாருங்கள், நல்ல வேளை தமிழனாக பிறந்தேன்  என்று நினைத்துக் கொள்வீர்கள். அவ்வளவு இனிய பாடல்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_31.html



Wednesday, October 30, 2019

கம்ப இராமாயணம் - அவாவும் தோளினாய்

கம்ப இராமாயணம் - அவாவும் தோளினாய் 


இலக்கியம் என்றால் எப்பப் பார்த்தாலும் அறம் , நீதி, முறை, உபதேசம் என்று சொல்லிக் கொண்டு இருப்பதுதானா என்று ஒரு சலிப்பு வரலாம். எனவே இடை இடையே சொற்சுவை, பொருட்சுவை உள்ள பாடலைகளையும் அமைத்து இலக்கியம் அமைத்து இருக்கிறார்கள். நோக்கம் வார்த்தை விளையாட்டு, உவமை நயம் போன்றவை இல்லை. இருந்தாலும், நேரே தத்துவங்களை சொல்லிக் கொண்டு போனால் கொஞ்சம் அலுப்புத் தட்டத்தான் செய்யும்.

கம்பனில் உவமைகள் என்று ஒரு புத்தகமே எழுதலாம். அவ்வளவு நயமான உவமைகள். நினைத்துப் பார்த்தால் இதழோரம் ஒரு புன்னகை ஓடும்.

தாடகையைப் பற்றி விஸ்வாமித்ரனிடம் இராமன் கேட்கிறான்.

அவளைப் பற்றிச் சொல்ல வந்த முனிவன், இராமனுக்கு ஒரு அடை மொழி தருகிறான்.

அடடா...என்ன ஒரு கற்பனை என்று நாம் இரசிக்கும்படியான ஒரு கற்பனை.

"ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!"

இராமனின் தோள்களைப் பார்த்தால், ஆண்களுக்குக் கூட ஆசை வருமாம். அடடா நாம் ஒரு பெண்ணாய் பிறக்கவில்லையே...இந்தத் தோள்களை அணைத்து இன்பம் பெற என்று ஆண்கள் ஆசைப் படும் அளவுக்கு அழகான தோள்களாம்.

பாடல்


‘சூடக அரவு உறழ் சூலக் கையினள்;
காடு உறை வாழ்க்கையள்; கண்ணின் காண்பரேல்.
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
‘’தாடகை’’ என்பது அச் சழக்கி நாமமே


பொருள்

‘சூடக = கையில் அணியும் வளையல்

அரவு = பாம்பு. மலைப் பாம்பை கையில் வளையல் போல் அணிந்து இருப்பாள்.

உறழ்  = சுழலும்

சூலக் கையினள்; = சூலத்தைக் கையில் கொண்டவள்

காடு உறை வாழ்க்கையள்; = எப்போதும் காட்டிலேயே வாழ்பவள்

கண்ணின் காண்பரேல். = கண்ணால் கண்டால்

ஆடவர் = ஆண்கள்

பெண்மையை  = பெண்மையை

அவாவும் தோளினாய்!- = விரும்பும் தோள்களை கொண்டவனே

‘’தாடகை’’ என்பது = தாடகை என்பது

அச் சழக்கி நாமமே; = அந்தக் கொடியவளின் பெயர் ஆகும்

இராமனின் தோள்கள் மலை போல இருந்தன, விம்மி இருந்தன, வீரமாக இருந்தன, என்றெல்லாம் சொல்லலாம். அப்படிச் சொல்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

இராமனுக்கு அப்படி இருக்கிறது. வேறு யாராவது ஒருவருக்கும் அப்படி இருக்கலாமே, அல்லது அதை விட சிறப்பாக இருக்கலாமே என்ற கேள்வி வரும்.

"ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் "

என்று சொல்லிவிட்டால், எல்லா ஆடவர்களும் அதில் வந்து விடுவார்கள்.

இதற்கு மேல் ஒரு அழகான தோள் இல்லை என்று ஆகிவிடும்.

கம்பனின் சொல் ஆட்சி, கற்பனை நயம் எப்படி இருக்கிறது?

இவற்றை எல்லாம் படிக்கும் போது, நம்மை அறியாமலேயே நம் பேச்சும், எழுத்தும்  மேன்மை அடையும். புதுப் பொலிவு உண்டாகும்.

மனம் மென்மைப் படும்.

படுகிறதா இல்லையா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_30.html

Sunday, October 27, 2019

கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும்


கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும் 




குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

இந்தப்  பாடலை  சில நாட்களுக்கு முன்னால் பதிவிட்டிருந்தேன்.

அது என்ன அறிவு அற்று, அறியாமையும் அற்று என்று சில அன்பர்கள் கேள்வி கேட்டு இருந்தார்கள்.

அறியாமை அற்றது சரி. அறிவு ஏன் அற்றுப் போக வேண்டும். அறிவு போய் விட்டால் அறியாமை வந்து விடாதா என்பது அவர்கள் கேள்வி.

சிந்திப்போம்.


நிறைய வாசிக்கிறோம். சொற்பொழிவுகள் கேட்கிறோம். கோவில்களுக்குப் போகிறோம். பூஜை, விரதம் போன்றவற்றை மேற்கொள்கிறோம்.

எதற்கு ?

வாசிக்க வாசிக்க, வந்து கொண்டே இருக்கும்.  படிக்க வேண்டியது கடல் போல இருக்கிறது.  அனைத்தையும் வாசித்து விட முடியுமா ? அப்படியே வாசித்து விட்டாலும், எல்லாம் புரிந்து விடுமா? அப்படியே புரிந்தாலும், நமக்கு புரிந்துதான் சரி என்று நாம் எப்படி அறிந்து கொள்வது?

சிலர் கூறுவார்கள் , தினமும் காலையில் எழுந்தவுடன் அந்த ஒரு குறிப்பிட்ட பாடல்களை, முழுவதும் சொல்லிவிட்டுத் தான் காப்பியே குடிப்பேன் என்று.

மூன்று வேளை அதை செய்வேன், ஆறு வேளை இதைச் செய்வேன், மாதம் இருமுறை அதைச் செய்வேன் என்று.

இப்படி செய்து கொண்டே இருந்தால், நேரே சுவர்க்கம், இறைவன் திருவடி என்று எதையோ அடைந்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

அது சரி அல்ல.

மாடிக்கு செல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு படியாக எறிச் செல்ல வேண்டும். நான் தினமும் பத்து படி ஏறி இறங்குவேன், ஒரு நாளைக்கு இருப்பது முறை  ஏறி இறங்குவேன், இப்படி இருப்பது வருடம் செய்து கொண்டு இருக்கிறேன்.  வாழ் நாள் பூராவும் இப்படி செய்து கொண்டே இருந்தால், ஒரு நாள் முழு மாடியும் ஏறி விடுவேன் என்று யாராவது சொன்னால் இப்படி இருக்கும்.

ஒரு படியை அடைந்து விட்டால், அடுத்த படிக்கு செல்ல வேண்டும். ஏறிய படி எவ்வளவு  நன்றாக இருந்தாலும், அதை தாண்டி மேலே செல்ல வேண்டும்.

அந்த பாசுரம் எவ்வளவு நல்லா இருக்கு, இந்த பாடல் எவ்வளவு அர்த்தம் செறிந்ததாக இருக்கிறது   என்று அதிலேயே நின்று விடக் கூடாது.

பள்ளிக் கூடம் போனால்,  ஒவ்வொரு வகுப்பாக மேலே செல்ல வேண்டும்.

இரண்டாம் வகுப்பு பிடித்து இருக்கிறது என்று ஒரு 30 வருடம் இரண்டாம் வகுப்புக்கே போய் கொண்டு இருக்க முடியுமா ?

அவ்வளவு ஏன் ?

வீடு குப்பையாக இருக்கிறது. விளக்குமாறு கொண்டு சுத்தம் செய்கிறோம். குப்பை எல்லாம் ஒரு   ஓரத்தில் தள்ளி விட்டோம். வீடு சுத்தமாகி விட்டது.

வீடு சுத்தமானபின் விளக்குமாறை என்ன செய்வது?

"அடடா, என் அருமை விளக்குமாறே , நீ அல்லவா இந்த வீட்டை சுத்தம் செய்தாய். எனவே உன்னை நான் நடு வீட்டில் வைக்கிறேன் " என்று யாராவது சொல்வார்களா?

குப்பையை கூட்டியபின் பின் விளக்குமாறை குப்பையோடு சேர்த்து ஓரமாக  வைத்து விட வேண்டும்.

அறியாமை என்ற குப்பை நீங்கியபின், அறிவு என்ற விளக்குமாறு எதற்கு?

படித்துக் கொண்டே இருக்கக் கூடாது. படித்ததை வைத்து மேலே செல்ல வேண்டும்.  வாழ்நாள் எல்லாம் படித்துக் கொண்டே இருப்பேன் என்பது, விளக்குமாறை தலையில் வைத்துக் கொண்டு  அலைவது போலத்தான்.



பாடல்

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.


பொருள்

குறியைக் குறியாது = குறிப்புகளை மனதால் குறித்துக் கொள்ளாமல்

குறித்து அறியும் = அந்தக் குறிகள் எவற்றை குறிக்கின்றனவோ அவற்றை அறியும்

நெறியைத் = வழியை

தனிவேலை நிகழ்த்திடலும் = தனித்துவம் வாய்ந்த வேலை உடைய முருகன் நிகழ்த்திடவும்

செறிவு அற்று, உலகோடு =உலகோடு நெருங்கிய பந்தம் விட்டு

உரை = பேச்சு

சிந்தையும் = சிந்தனை

அற்று = விட்டு

அறிவு அற்று = அறிவு அற்று

அறியாமையும் அற்றதுவே = அறியாமையும் விட்டது

அறிவு என்பது இறைவனை அல்லது உண்மையை அறிய பெரிய தடை. 

சொல்வது, அருணகிரி நாதர் மட்டும் அல்ல. மணிவாசகரும் சொல்கிறார். 

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலம் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ.  

செல்வம் சேர்த்து வைத்து வைத்தால், அதை விட்டுப் போக மனம் வராது. இன்னும் அனுபவிக்க வேண்டும்  என்றே மனம் பற்றும். 

அன்பான மனைவி கிடைத்தால், அவளை விட்டு பிரிய மனம் வராது.  ஆசை மேலும் மேலும் வளரும். 

பிள்ளைகள், கேட்கவே வேண்டாம். பிள்ளைகளை விட்டு விட்டு எப்படி போவது. 

இதெல்லாம் நமக்குத் தெரிகிறது. 

அடுத்து ஒன்றைச் சொல்கிறார் மணிவாசகர் - "கல்வி" 

கல்வியும்  சித்தத்தைக் குழப்பும் என்கிறார். 

இறைவனை அடைய செல்வம், மனைவி, பிள்ளைகள் எப்படித் தடையோ அப்படி கல்வியும். 

காரணம், கல்வியில் இறங்கியவர்கள் அதில் போய் கொண்டே இருப்பார்கள். அதுவே குறிக்கோள் என்பது  போல .

"கற்பனவும் இனி அமையும்" என்பார் மணிவாசகர். 

படியுங்கள். பூஜை செய்யுங்கள். விரதம் இருங்கள். ஸ்லோகங்கள், பஜனைப் பாடல்கள்  எல்லாம்  சொல்லுங்கள்  

ஆனால், அதுவே முடிவானாது என்று எண்ணிக் கொள்ளாதீர்கள்.  

அதைத் தாண்டி போக வேண்டும். 

அறியாமை அற்று, அறிவும் அற்றுப் போக வேண்டும். 

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_27.html

Saturday, October 26, 2019

ஐங்குறு நூறு - இனிது மன்ற அவர் கிடக்கை

ஐங்குறு நூறு - இனிது மன்ற அவர் கிடக்கை 


என்ன எப்பப் பார்த்தாலும், தேவாரம், திருவாசகம், திருக்குறள் என்று ஒரு பக்தி, ஒழுக்கம், அறம் என்று தமிழ் இலக்கியம் என்றால் இவ்வளவுதானா என்று சிலர் நினைக்கலாம்.

இல்லை. தமிழ் இலக்கியம் மனித உறவின் நுணுக்கங்களை, அதன் சிக்கல்களை, அதன் நெளிவு சுளிவுகளை, யதார்த்தத்தை அப்படியே படம் பிடிக்கிறது.

அது ஒரு சிறிய வீடு. கணவன், மனைவி அவர்களின் சிறிய மகன் மூவர் மட்டும் இருக்கிறார்கள். ஒரே ஒரு படுக்கை அறை தான்.

ஒரு நாள் இரவு, கணவனும் மனைவியும் சற்று இன்பமாக இருக்கலாம் என்று நினைத்து ஆவலோடு படுக்கை அறையில் நுழைகிறார்கள். அவர்கள் படுத்ததுதான் தாமதம், எங்கிருந்தோ அந்த பையன் ஓடி வந்து அவர்கள் இருவருக்கும் நடுவில் படுத்துக் கொள்கிறான்.  அவள் , அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே பிள்ளையின் தலை கோதி இருப்பாள்.

அவர்கள் தவிப்பு அவனுக்கு எங்கே தெரிகிறது.


இருந்தும், அவர்களுக்கு பிள்ளை மேல் கோபம் இல்லை. சந்தோஷமாக அவனை கட்டி அணைத்துக் கொண்டு உறங்கிப் போனார்கள்.

அது எப்படி இருக்கிறது என்றால், மான் ஜோடிகளுக்கு நடுவில் படுத்துக் கிடக்கும் மான் குட்டியைப் போல இருக்கிறதாம்.

இல்லறத்தின் நுணுக்கமான உணர்வுகளை விளக்கும் பாடல்.

பாடல்

"மறி இடைப் படுத்த மான் பிணை போலப்
புதல்வன் நடுவணனாக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி
நீல் நிற வியல் அகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே"


பொருள்

"மறி  = மான் குட்டி

இடைப் படுத்த = இடையில் படுத்து இருந்த

மான் பிணை  = ஜோடி மான்களைப்

போலப் = போல

புதல்வன் = மகன்

நடுவணனாக = நடுவில் இருக்க

நன்றும் = நல்லது

இனிது  மன்ற =  இனிது என்று

அவர் கிடக்கை = அவர்கள் (கணவனும் மனைவியும்) படுத்துக் கிடந்தது

முனிவு இன்றி = கோபம் இன்றி

நீல் நிற வியல் = நீல நிறம் கொண்ட ஆகாயத்தின் கீழ்

அகம் = உள்ள உலகம்

கவைஇய = சூழ்ந்து உள்ள

ஈனும் = இன்றும் , இங்கும்

உம்பரும் = தேவர்களும் , மறு உலகிலும்

பெறலரும் = பெறுவதற்கு அரிதான

குரைத்தே" = உரைத்தல், சொல்லுதல்

அருகில், அன்பான மனைவி (/கணவன்) , பிள்ளை இவர்களை கட்டிக் கொண்டு கிடப்பது எவ்வளவு சுகம்  என்கிறது பாடல்.

இங்கு மட்டும் அல்ல, ஸ்வர்கத்திலும் இது போன்ற சுகம் கிடைக்காது என்கிறது பாடல்.

உண்மைதானே ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_26.html

Thursday, October 24, 2019

இராமானுசர் நூற்றந்தாதி - தவம் செய்யும் கொள்கை அற்றேன்

இராமானுசர் நூற்றந்தாதி - தவம் செய்யும் கொள்கை அற்றேன் 


தினமும் மூணு வேளை குளிக்கிறேன், நாலு வேளை பூஜை பண்ணுகிறேன், நாளும் கிழமையும் என்றால் உடலை வருத்தி தவம் செய்கிறேன், வருடம் தவறாமல் திருத்தல யாத்திரை செய்கிறேன், மொட்டை போட்டுக் கொள்கிறேன், வெளியே ஒரு காப்பி கூட குடிப்பதில்லை, ஆச்சாரம், அனுஷ்டானம் என்று அத்தனையும் கடைபிடிக்கிறேன் ....

என்று சிலர் பெருமையாகச் சொல்வார்கள். ஏதோ இதை எல்லாம் செய்தால் நேரே இறைவனடி சேர்ந்து விடலாம் என்ற நினைப்பில்.

அமுதனார் சொல்கிறார்

"உடலை வருத்தி செய்யும் தவங்களை விட்டு விட்டேன். குலசேகர பெருமாளின் பாசுரங்களை படிக்கும் பெரியவர்களின் பாதங்களை துதிக்கும் இராமானுஜரை நான் பற்றிக் கொண்டேன். அவர் என்னை விட்டு விட மாட்டார்"  என்கிறார்.

பாடல்


கதிக்குப் பதறிவெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம்
கொதிக்கத் தவம்செய்யும் கொள்கையற் றேன்,கொல்லி காவலன்சொல்
பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமா னுசனென்னைச் சோர்விலனே.


பொருள்


கதிக்குப் = நல்ல கதிக்கு செல்ல வேண்டுமே என்று

பதறி = பதட்டம் கொண்டு

வெங் கானமும் = கொடிய காடும்

கல்லும் = மலையும்

கடலுமெல்லாம் = கடலும் எல்லாம்

கொதிக்கத் = கொதிக்கும்படி

தவம் செய்யும் = தவம் செய்யும்


கொள்கையற் றேன் = கொள்கையை விட்டு விட்டேன்

கொல்லி காவலன் = குலசேகர ஆழ்வார்

சொல் = சொற்கள்

பதிக்கும் = பதிந்து கிடக்கும்

கலைக்கவி  = கலை நின்றாய்ந்த கவிதைகள்

பாடும் = பாடுகின்ற

பெரியவர் பாதங்களே = பெரியவர்களின் பாதங்களை

துதிக்கும் = வணங்கும்

பரமன் = பெரியவன்

இராமா னுசன் = இராமானுசன்

என்னை  = என்னை

சோர்விலனே. = சோர்வுடைய விட மாட்டார்

பக்தியிலே இரண்டு விதம் சொல்வார்கள்.

குரங்கு மாதிரி, பூனை மாதிரி என்று இரண்டு விதம்.

பூனை, தன் குட்டியை தானே தூக்கிக் கொண்டு திரியும்.

குரங்கு அப்படி அல்ல. குட்டி குரங்கு தாயை இறுக்க பற்றிக் கொள்ளும். தாய் குரங்கு அங்கும் இங்கும் தாவும்.  விடாமல் பிடித்துக் கொள்ள வேண்டியது குட்டியின் பாடு.

இராமானுசன் என்னை சோர்விலனே என்றால் பூனை மாதிரி பக்தி. அவர் கிட்ட போய்விட்டால் போதும்.  அவர் நம்மை தூக்கிக் கொண்டு சேர வேண்டிய இடத்தில் சேர்ப்பித்து விடுவார்.  அப்புறம் அவர் பாடு அது என்கிறார்  அமுதனார்.

தாய்தான் , தந்தையை அடையாளம் காட்டுகிறாள்.

தந்தைதான், குருவை அடையாளம் காட்டுகிறார்.

குரு , நமக்கு தெய்வத்தை அடையாளம் காட்டுவார் என்பது நமது நம்பிக்கை.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது முறை.

குருவிடம் போய் சேர்ந்து விட வேண்டும். அவர் கொண்டு போய் சரியான இடத்தில்  சேர்த்து விடுவார்.

இதற்கு நடுவில் இந்த  ஆச்சாரம், அனுஷ்டானம், பூஜை, புனஸ்காரம், விரதம், தவம்  எல்லாம் தேவையே இல்லை என்கிறார்.

நாமா கேட்போம்?

நமக்கு எவ்வளவு தெரியும். இத்தனை நாளாய் செய்து வந்த முறைகளை விட முடியுமா என்ன?

பாசுரம் ஒரு பக்கம் வாசித்து, 'அடடா என்னம்மா பாடியிருக்கிறார்" என்று சொல்லிக் கொண்டே நம்ம  வேலையை பார்க்க வேண்டியதுதான்.

நாளை மீண்டும் சந்திப்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_24.html

Monday, October 21, 2019

அபிராமி அந்தாதி - உள்ளத்தே விளைந்த கள்ளே

அபிராமி அந்தாதி - உள்ளத்தே விளைந்த கள்ளே 


உணர்ச்சி வருவதற்கு காரணம் சொல்லலாம். ஆனால், ஒரு உணர்ச்சி எப்படி இருக்கிறது என்று விளக்கிச் சொல்ல முடியாது.

காதல் வந்தால், அதற்கு காரணம் சொல்ல முடியும். காதல் என்ற அந்த உணர்வு எப்படி இருக்கிறது என்று எப்படி விளக்கிச் சொல்வது?

இறை அனுபவம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்று கேட்டால் எப்படி அதை விளக்கிச் சொல்வது என்று தவிக்கிறார் பட்டர்.

எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது. நான் அதை அனுபவிக்கிறேன். ஆனால், அது எப்படி இருக்கிறது என்று கேட்டால் எப்படிச் சொல்வது ?

ஒரு கள் குடித்து இருக்கிறான். போதையில் தடுமாறுகிறான். உளறுகிறான். ஆடுகிறான். தன்னை மறந்து நடந்து கொள்கிறான். அக்கம் பக்கம் இருப்பவர்களை பற்றி ஒரு கவலையும் இல்லை. தான் யார், சமுதாயத்தில் தன் நிலை என்ன, ஒரு தகப்பன், கணவன், பிள்ளை, சகோதரன், ஒரு அலுவலகத்தில் ஒரு பொறுப்புள்ள வேலையில் இருப்பவன் என்பதெல்லாம் மறந்து விடுகிறது. போதையில் இலயித்துக் கிடக்கிறான்.

அது போன்றது பக்தி என்கிறார் பட்டர்.

கள் தான். ஆனால் வெளியே வாங்கி வந்து அடித்த சரக்கு அல்ல. உள்ளுக்குள்ளேயே உருவான கள் என்கிறார். உள்ளத்தே விளைந்த கள்ளே என்கிறார்

வெளியில் வாங்கி வந்தால், ஏதோ ஒரு பாட்டில், இரண்டு பாட்டில் வாங்கி வரலாம். போதை தலைக்கு ஏறிவிட்டால் எப்போது வேண்டுமானாலும் குடிப்பதை நிறுத்தி விடலாம்.  இதுவோ உள்ளே விளைந்த கள். எப்படி நிறுத்துவது?  அது பாட்டுக்கு ஊற்று எடுத்துக் கொண்டே இருக்கிறது.

வேறு வழியில்லை. போதையில் தன் நிலை தடுமாற வேண்டியதுதான்.

அபிராமியைப் பார்க்கிறார்.

அவள் யார்? தாயா? தாரமா? சகோதரியா? நண்பியா? காதலியா ? ஒன்றும் புரியவில்லை.

என்னை காப்பாற்று என்று பக்தனாக வேண்டுகிறார்.

உன் மார்பகங்கள் அப்படி இருக்கிறது , இப்படி இருக்கிறது என்று குழந்தையாக  அவள் மடியில் கிடக்கிறார்.

உன்னுடைய மற்ற அவயங்கள் இப்படி இருக்கின்றன என்று வர்ணிக்கிறார்.  இப்படி  செய்யலாமா? இது சரியா ? இதுவா பக்தியா, பட்டர் போன்றவர்கள்   இப்படி  சொல்லலாமா ? ஒரு பெண்ணின் அந்தரங்க அவயங்களை பற்றி பேசுவது  நாகரீகமா என்று கேட்டால் கள் குடித்தவனுக்கு என்ன தெரியும்?

ஆண்டாளும் அப்படித்தான்.  பக்தி என்ற போதை. கள்.

பாடல்

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே


பொருள்


கொள்ளேன் மனத்தில் = என மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன்

நின் கோலம் அல்லாது  = உன் உருவத்தை அன்றி மற்ற எதையும்

அன்பர் கூட்டம் தன்னை = உன்னுடைய அன்பர்கள் கூட்டம்

விள்ளேன்  = விட மாட்டேன்

பரசமயம் விரும்பேன் = மற்ற சமயங்களை விரும்ப மாட்டேன்

வியன் = வியக்கத்தக்க

மூவுலகுக்கு = மூன்று உலகங்களுக்கு

உள்ளே =உள்ளே

அனைத்தினுக்கும் புறம்பே = எல்லாவற்றிற்கும் வெளியே

உள்ளத்தே = மனதினில்

விளைந்த = தோன்றிய

கள்ளே = கள்ளே

களிக்கும் களியே = அனுபவிக்கும் இன்பமே

அளிய என் கண்மணியே = அதைத் தரும் என் கண்ணின் மணி போன்றவளே



"அனைத்தினுக்கும் புறம்பே"...எல்லாவற்றிற்கும் வெளியே. ஏதோ ஒன்று இருக்கிறது என்றால்  அது ஏதோ ஒன்றினுக்கு உள்ளேதான் இருக்க வேண்டும். அனைத்துக்கும் வெளியே என்றால் அது எங்கே?

பக்தியின் உச்சம். அவருக்குத் தெரிகிறது. சொல்ல முடியவில்லை.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_21.html

Sunday, October 20, 2019

வில்லி பாரதம் - எது நல்லது ?

வில்லி பாரதம்  -  எது நல்லது ?


எது நல்லது?

எது உடனடி சுகம் தருகிறதோ, அதுவே நல்லது என்று நாம் நினைத்துக் கொள்கிறோம்.

படிப்பதைவிட டிவி பார்ப்பது சுகமாக இருக்கிறது.

வேலை செய்வதை விட, படுத்து தூங்குவது நல்லா இருக்கிற மாதிரி தெரிகிறது.

நல்ல விஷயங்களை படிப்பதைவிட whatsapp ல் அரட்டை அடிப்பது நல்லா இருக்கிற மாதிரி தோன்றுகிறது.

கருத்து வேற்றுமை வந்தால், விட்டுக் கொடுத்து, அதனால் வரும் தோல்வியை விட, சண்டை போட்டு வெற்றி பெறுவது சுகமாக இருக்கிறது.

அது சரியா ?

பாண்டவர்களிடம் கண்ணன் கேட்கிறான், வனவாசம் முடிந்து விட்டது, அஞ்ஞாத வாசம் முடிந்து விட்டது. இப்போது என்ன செய்ய உத்தேசம் என்று.

அதற்கு தர்மன் சொல்கிறான் (முந்தைய பிளாகின் தொடர்ச்சியாக)

"குலத்தில் உதித்த பெரியவர்களையும், உறவினர்களையும், துணைவர்களையும், கொன்று, போரில் வென்று, இந்த உலகம் முழுவதையும் ஆழ்வதை விட, திருதராஷ்டிரன் சொன்ன மாதிரி, நாங்கள் காட்டில் காய் கனிகளை உண்டு வாழ்வது எவ்வளவோ சிறந்தது "

என்று.

பாடல்

'குரவரையும், கிளைஞரையும், குலத்து உரிய துணைவரையும்,
                  கொன்று, போர் வென்று,
அரவ நெடுங் கடல் ஆடை அவனி எலாம் தனி
                  ஆளும் அரசுதன்னில்,
கரவு உறையும் மனத் தாதை முனிக்கு உரைத்த
                  மொழிப்படியே, கானம்தோறும்,
இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து, உயிர் வாழ்தல்
                  இனிது, நன்றே!

பொருள்


'குரவரையும் = தலைவர்களையும், முதியவர்களையும்

கிளைஞரையும் = உறவினர்களையும்

குலத்து உரிய துணைவரையும் = குலத்தில் கூட உதித்த துணைவர்களையும்

கொன்று = கொன்று

போர் வென்று, = போர் வென்று

அரவ = ஆதி சேஷன் என்ற பாம்பின் தலையில் இருக்கும்

நெடுங் கடல் = பெரிய கடலை

ஆடை = ஆடையாக உடுத்திய இந்த

அவனி எலாம் = உலகம் எல்லாம்

தனி = தனி ஆளாக

ஆளும் அரசுதன்னில், = ஆளுகின்ற அரசை விட

கரவு உறையும் = வஞ்சம் நிலவும்

மனத்  = மனத்தைக் கொண்ட

தாதை  = தந்தை (திருதராஷ்டிரன்)

முனிக்கு = சஞ்சய முனிவனுக்கு

உரைத்த = கூறிய

மொழிப்படியே, = சொற்படி

கானம்தோறும் = காடுகள் எல்லாம் சென்று

இரவு பகல் = இரவு பகல் எல்லா நேரமும்

பல = பலவிதமான

மூல சாகம் = பழங்களையும், காய்களையும்

நுகர்ந்து = உண்டு

உயிர் வாழ்தல் = உயிர் வாழ்தல்

இனிது, நன்றே! = இனிமையானது, நன்மை பயப்பது


எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு.

வெற்றி பெற வேண்டுமா, உலகை ஆள வேண்டுமா, அதற்கு ஒரு விலை உண்டு.

பெரும் செல்வம் சேர்க்க வேண்டுமா, அதற்கும் ஒரு விலை உண்டு.

அந்த விலை கொடுத்து அந்த செல்வத்தை பெறுவது நல்லதா என்று தீர்மானம் செய்து கொள்ள வேண்டியது நம் கடமை.

பணம் பணம் என்று சென்று, வாழ்கையை தொலைத்தவர்கள் பலர்.

மனைவி, மக்கள், அன்பு, பாசம், உறவு எல்லாம் விளையாகக் கொடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள்.

இங்கே தர்மன் சொல்கிறான்.

எல்லாரையும் பலி கொடுத்தால் பெரிய அரசு கிடைக்கும்.

அது தேவை இல்லை என்கிறான்.

தர்மன் செய்தது தவறா சரியா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

நீங்கள் எதை அடைய எதை இழக்கிறீர்கள் என்பதை அறிந்து  கொள்ளுங்கள்.

கணவனை (மனைவியை) விட நான் பெரிய ஆள், புத்திசாலி என்று நிலை நிறுத்த விரும்புகிறீர்களா? செய்யுங்கள். அதன் விலை, அவர்களின் அன்பை, காதலை இழக்க  வேண்டி வரும். அவ்வளவுதான்.

வில்லி பாரதத்தில் இது போல எவ்வளவோ கருத்துகள் கொட்டிக் கிடக்கிறது.

அள்ளிக் கொள்ளுங்கள். அத்தனையும் இலவசம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_20.html