Thursday, December 2, 2021

திருக்குறள் - சாவா மருந்தெனினும் வேண்டாம்

திருக்குறள் - சாவா மருந்தெனினும் வேண்டாம் 


உலகில் மூன்று வகையான மருந்துகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். 


நோவா மருந்து 

மூவா மருந்து 

சாவா மருந்து 


என்று மூன்று வகை மருந்துகள் இருக்கிறதாம். நமக்கு நோவா மருந்து மட்டும் தான் தெரியும். எப்போதும் இளமையாக இருபதற்கு ஒரு மருந்து இருந்தால் எப்படி இருக்கும். இளமையாகவும் இருந்து சாகாமலும் இருந்தால் அது எப்படி இருக்கும்? 


ஆசை தான். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சாவா மருந்து என்பதை பொதுவாக அமுதம் என்று சொல்வார்கள். அமுதம் உண்டால் சாவு கிடையாது. 


நமக்கு கொஞ்சம் அமுதம் கிடைத்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் உண்ண தொடங்கும் அந்த நேரத்தில் ஒரு விருந்தினர் வந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். நாம் என்ன செய்வோம்? 


ஒரே வாயில் அந்த அமுதத்தை உண்டு விட்டு, விருந்தினரை "வாங்க வாங்க " என்று உபசரிப்போம். அப்படிதான் பெரும்பாலானோர் செய்வார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், அமுதமே என்றால் கூட, விருந்து வீட்டில் காத்து இருக்க தனித்து உண்பது என்பது கூடாது என்று. 


பாடல் 


விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_2.html


(Please click the above link to continue reading)



விருந்து = விருந்தினர் 


புறத்ததாத் = புறத்தில் இருக்க 


தானுண்டல் = தான் மட்டும் உண்பது 


சாவா மருந்தெனினும்  = சாக மருந்து என்று சொல்லப்படும் அமுதம் என்றாலும் 


வேண்டற்பாற் றன்று. = அது வேண்டுவது/விரும்புவது முறை அன்று 


இதில் சில தர்க்க ரீதியான சிக்கலும், நயமும் இருக்கிறது. 


சரி, விருந்து வந்து விட்டால் என்ன?  உள்ளே தூக்கி வைத்து விட்டு, விருந்தினர் போன பின் உண்ணலாமே என்றால், தனித்து உண்டல் கூடாது என்கிறார். 


சரி, விருந்தினருக்கு கொஞ்சம் கொடுத்து, நாமும் கொஞ்சம் உண்டால் என்ன என்றால், அமுதம் என்பது பெரிய அண்டாவில் கிடைக்கும் பொருள் அல்ல. ஏதோ கொஞ்சம் கிடைத்து இருக்கும். அதை முழுமையாக உண்டால்தான் பலன் கிடைக்கும். விருந்தினர்க்கு கொஞ்சம் கொடுத்து, நாம் கொஞ்சம்உண்டால் இரண்டு பேருக்கும் பலன் இருக்காது. 


அப்படி என்றால் என்ன செய்வது?


வள்ளுவர் சொல்கிறார், "அப்படிப் பட்ட அமுதம் வேண்டாம்" என்று. வேண்டற் பாற்று. 


அமுதத்தை உண்ணா விட்டால் உயிர் போய் விடும். இப்ப இல்லாவிட்டாலும் பின் ஒரு நாள் உயிர் கட்டாயம் போகும். 


உயிரே போனாலும் பரவாயில்லை, விருந்தினர் புறத்து இருக்க நான் மட்டும் தனியாக உண்ண மாட்டேன் என்று இருக்க வேண்டும் என்கிறார். 


அமுதம் என்று ஒன்று இல்லை தான். இது ஒரு இல் பொருள் உவமை தான். 


இருந்தும், எவ்வளவு உயர்ந்த பொருளாக இருந்தாலும், விருந்தினரை வெளியே இருக்க வைத்து விட்டு தான் மட்டும் உண்பது என்பது அறம் அல்ல என்கிறார்.


அமுதமே உண்ணக் கூடாது என்றால் மற்றவற்றைப் பற்றி என்ன சொல்லுவது.


விருந்தோம்பலின் உச்சம் தொட்டுக் காட்டுகிறார் வள்ளுவர். 


விருந்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது நம் பாரம்பரியம். 


முடிந்தவரை எட்டிப் பிடிப்போம். 






Wednesday, December 1, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எண்ணாத பொழுது

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - எண்ணாத பொழுது 


நாம் யாரையெல்லாம் அடிக்கடி நினைக்கிறோம்?


கணவன்/மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உடன் பிறப்பு, சில பல நண்பர்கள் என்று ஒரு கூட்டம் வைத்து இருக்கிறோம்.


அது போக 


பள்ளியில், கல்லூரியில், அலுவலகக்தில், உடன் வேலை செய்பவர்கள், அரசாங்க அதிகாரிகள் என்று கொஞ்சம் பேரை நினைக்கிறோம். 


மேலும் 


தொலைக்காட்சி, செய்தித்தாள் என்று எடுத்தால் அரசியல் தலைவர்கள்,  விளையாட்டு வீரர்கள், கொலை கொள்ளை செய்த நபர்கள் என்று பலரை நினைவில் கொண்டு வருகிறது. 


நல்லவர்களை நினைக்கிறோமா? 


நல்லவர்கள் என்றால் யார்?


படித்தவர்கள், நாலு பேருக்கு நல்லது செய்பவர்கள், சுய நலம் இல்லாதவர்கள் என்று கொஞ்ச பேரையாவது நினைக்கிறோமா?


திருமங்கை ஆழ்வார் சொல்கிறார், "இறைவனை நினைக்காதவர்களை பற்றி நினைக்காமல் இருப்பதே சுகம்" என்று. 


இறைவன் நமக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறான். அந்த நன்றியை மறந்து அவனை நினைக்காதவர்களை நான் ஏன் நினைக்க வேண்டும். அப்படி நன்றி மறந்தவர்களை நினைக்காமல் இருப்பதே இனிமையான அனுபவம் என்கிறார். 


பாடல் 


மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம்


உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட,


கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி, அவனை உள்ளத்து


எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே.




பொருள் 





(Please click the above link to continue reading)


மண்ணாடும் = பூ உலகும் 


விண்ணாடும் = வானுலகமும் 


வானவரும் = தேவர்களும் 


தானவரும் = அசுரர்களும் 


மற்றுமெல்லாம் = மற்றும் உள்ள அனைத்தும் 


உண்ணாத பெருவெள்ளம் = அடங்காத பெரு வெள்ளம் (பிரளயம்) 


உண்ணாமல் = அவர்களை எல்லாம் உண்டு விடாமல் 


தான் விழுங்கி = தானே விழுங்கி, வயிற்றில் வைத்து இருந்து 


உய்யக் கொண்ட, = பின் உமிழ்ந்து அவை பிழைத்து இருக்கும் படி செய்த 


கண்ணாளன் = கண்ணாளன் (என்ன ஒரு அழகான சொல்) 


கண்ணமங்கை நகராளன் = திருக் கண்ணபுரம் என்ற தலத்தில் இருப்பவன் 


கழல் சூடி = திருவடிகளைப் போற்றி 


அவனை உள்ளத்து = அவனை தங்கள் உள்ளத்தில் 


எண்ணாத மானிடத்தை  = நினைக்காத மனிதர்களை 


எண்ணாத போதெல்லாம் = நான் நினைக்காமல் இருக்கும் பொழுது எல்லாம் 


இனியவாறே. = இனிய பொழுதே 


யோசித்துப் பாருங்கள். 


நமக்கு மனதுக்கு பிடித்தவர்களை நினைக்கும் போது நமக்கு ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது அல்லவா? 


சில பேரை நினைத்தாலே ஒரு கோபமும், எரிச்சலும், வெறுப்பும் வருகிறது அல்லவா?


இறைவனை நினைக்கும் அடியார்களை விடுத்து மற்றவர்களை நினைக்காமல் இருப்பதே சுகமான அனுபவம் என்கிறார். 


என்ன ஒரு அழகான சிந்தனை. 


கண்டவர்களையும் ஏன் நினைக்க வேண்டும்? 


திருக்குறள் - விருந்தோம்பல் - இல்லறத்தின் நோக்கம்

 திருக்குறள் - விருந்தோம்பல் - இல்லறத்தின் நோக்கம் 


நாம் படித்துக் கொண்டு இருப்பது இல்லறம். 


எதற்காக கல்யாணம், மனைவி, பிள்ளைகள், பொருள் சேர்ப்பது, அதற்காக துன்பப் படுவது என்று இப்படி அல்லாட வேண்டும்? 


பெண் இன்பம் எப்படியோ கிடைத்து விடலாம். 


குழந்தைகள் இல்லாவிட்டால் என்ன? குழந்தைகள் இருந்தாலும், அவர்கள் கொஞ்ச நாள் தான் குழந்தைகளாக இருப்பார்கள். பின் அவர்கள் வளர்ந்த பின், "சிறு கை அளாவிய கூழ்" என்று சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா? சிறிது காலத்தில் திருமணம் ஆகி போய் விடுவார்கள். 


பின் நாம் தனித்து விடப் படுவோம். 


எதற்கு இதனை பொறுப்புகள், சிக்கல்கள், துன்பங்கள். இவற்றின் பலன்தான் என்ன என்ற கேள்விக்கு வள்ளுவர் விடை தருகிறார். 


இல்வாழ்கை என்பது கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவன் தரும் சுகத்தை பெற்றுக் கொள்ளவோ, அல்லது குழந்தைகளை கொஞ்சி விளையாடவோ அல்ல. 


இல்வாழ்க்கையின் நோக்கம், விருந்தினர்களை போற்றி பேணுவது என்கிறார். 


பாடல் 


இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post.html


(please click the above link to continue reading)


இருந்தோம்பி = இருந்து பொருள்களைப் போற்றி 


இல்வாழ்வ தெல்லாம்  = இல்லத்தில் வாழ்வது எல்லாம் 


விருந்தோம்பி = விருந்தினர்களைப் போற்றி 


வேளாண்மை = அவர்களுக்கு உபசாரம் 


செய்தற் பொருட்டு = செய்வதற்காக 


பொருள் சேர்த்து, வீட்டில் மனைவி பிள்ளைகளோடு இருக்கிறாயா? நீ இருப்பதற்கு காரணமே விருந்தினர்களை உபசரிக்கதான். 


இதற்கு பரிமேலழகர் உரையில், 


"மனைவி, பிள்ளை, பொருள் இவ்வளவுதானே...இவற்றை வைத்துக் கொண்டு பேசாமல் காட்டில் போய் இருக்கலாமே? எதற்கு வீடு, ஊரு என்று இருக்க வேண்டும்?" 


இல்லறம் என்றால் அது விருந்தை உபசரிக்கத் தான். இல்லை என்றால் துறவியாகப் போய் விடலாம் என்கிறார். 


என் பொருள், என் மனைவி, என் பிள்ளை எல்லாம் எனக்கு என்று இருப்பதா இல்லறம்? 


மனைவி, பிள்ளைகள் இவர்களைத் தாண்டி, இல்லறம் விரிய வேண்டும். வீடென்றால் நாலு பேர் வந்து போக வேண்டும். சுற்றமும் நட்பும் சூழ இருக்க வேண்டும். 


இல்லறத்தில் இருந்து வீடு பேற்றை பிடிக்க பாலம் போடுகிறார் வள்ளுவர். 


அடுத்த கேள்வி வரும், எதற்காக விருந்தை உபசரிக்க வேண்டும் என்று. அதனால் என்ன பயன் என்று? 


பொறுமை. வள்ளுவர் எதையும் விட்டு வைக்கவில்லை. 


நம்மை கொண்டு போய் பத்திரமாய் கொண்டு போய் சேர்க்கும் வழி அமைத்துத் தருகிறார். 




Friday, November 26, 2021

திருவாசகம் - யாத்திரைப் பத்து

 திருவாசகம் - யாத்திரைப் பத்து 


எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? 


ஏதாவது இலக்கு இருக்கிறதா? இந்த நேரத்தில், இந்த இடத்துக்குப் போக வேண்டும் என்று ஏதேனும் குறிக்கோள் இருக்கிறதா? 


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் பயணிக்கிறோம். 


எங்கு போவது என்றும் தெரியாது. எப்படி போவது என்றும் தெரியாது. 


சரி, போகலாம், போகிற வழியில் யாரையாவது விசாரித்துக் கொள்ளலாம் என்றால் கிளம்ப வேண்டுமே. 


எல்லாம் போட்டது போட்டபடி இருக்கிறது. எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கு பண்ணி வைத்துவிட்டு தானே கிளம்ப முடியும். 


இருக்கிற வீட்டை விட்டு கிளம்புவது என்றாலே gas ஐ மூடினோமா, மின்சாரத்தை ஆப் செய்தோமா, குழாய் எல்லாம் சரியாக அடைத்தோமா, ஜன்னல் எல்லாம் சரியாக சாத்தினோமா என்று ஆயிரம் யோசனை இருக்கிறது. 


இந்த உலகை விட்டு இறைவனை நோக்கிய பயணம் என்றால் எவ்வளவு செய்ய வேண்டும். 


மனைவி/கணவன், பெற்றோர், பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், மகன்/மகள், மருமகன், மருமகள், இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள், அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் என்று எவ்வளவு இருக்கிறது. 


இதை எல்லாம் முடித்துவிட்டு கிளம்புவது என்றால், எப்போது கிளம்புவது? 


அலை எப்ப ஓய , தலை எப்ப முழுக?


மணிவாசகர் சொல்கிறார், "இப்ப...இப்பவே கிளம்புங்கள்" என்று. 


ஆன்ம தேடல் வந்து விட்டால், சித்தார்த்தன் மாதிரி, பட்டினத்தார் மாதிரி துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு கிளம்பி விடவேண்டும். 


எல்லாம் முடித்துவிட்டு கிளம்புகிறேன் என்றால் அது ஒரு காலத்திலும் நடக்காது. 


பாடல் 


பூ ஆர் சென்னி மன்னன், எம் புயங்கப் பெருமான், சிறியோமை

ஓவாது உள்ளம் கலந்து, உணர்வு ஆய் உருக்கும் வெள்ளக் கருணையினால்,

`ஆ! ஆ!' என்னப் பட்டு, அன்பு ஆய் ஆட்பட்டீர், வந்து ஒருப்படுமின்;

போவோம்; காலம் வந்தது காண்; பொய் விட்டு, உடையான் கழல் புகவே.



பொருள் 



(Please click the above link to continue reading)


பூ ஆர் சென்னி  = பூக்கள் நிறைந்த தலை 


மன்னன் =எங்கள் மன்னன் 


எம் புயங்கப் பெருமான் = பாம்பை அணிந்த எங்கள் பெருமான் 


சிறியோமை = சிறியவர்களான எங்களை 


ஓவாது உள்ளம் கலந்து  = ஓவுதல் என்றால் நீக்குதல். ஓவாது என்றால் நீங்காமல் எம் உள்ளத்தில் கலந்து 


உணர்வு ஆய் = உணர்வாகி 


உருக்கும் வெள்ளக் கருணையினால், = வெள்ளம் போல் வரும் கருணையினால் நம்மை உருக்கி 


`ஆ! ஆ!' என்னப் பட்டு = அடா என்று ஆச்சரியப் பட்டு 


அன்பு ஆய் ஆட்பட்டீர் = அன்பு உருவமாய் ஆட் கொள்ளப் பட்டீர் 


வந்து ஒருப்படுமின்; = வந்து ஒன்றாகக் கூடுங்கள் 


போவோம் = போகலாம் 


காலம் வந்தது காண் = போக இதுதான் சரியான காலம் 


பொய் விட்டு = பொய்யான இந்த உலகை விட்டு 


உடையான் கழல் புகவே. = அனைத்தும் உடையவன் திருவடிகளை அடைய 


Travel Agent மாதிரி மணிவாசகர் எல்லோரையும் அழைக்கிறார். 


வண்டி எடுக்கப் போறோம். சீக்கிரம் வாங்க என்று அறை கூவி அழைக்கிறார். 


"போவோம், காலம் வந்தது காண்" என்கிறார். 


இதுதான் காலம். 


இந்த உலகில் எதையும் நாம் சரி செய்து வைத்துவிட்டுப் போக முடியாது. 


நமக்கு முன் இந்த உலகம் இருந்தது. 


நமக்கு பின்னும் இருக்கும். 


நாம் ஒழுங்கு படுத்தாவிட்டால் ஒன்றும் கெட்டுப் போய் விடாது. 


யாத்திரைக்கு அழைக்கிறார் மணிவாசகர். 




Thursday, November 25, 2021

திருவிளையாடற் புராணம் - பண்டை பழவினை மாற்றுவார் யார் ?

 திருவிளையாடற் புராணம் - பண்டை பழவினை மாற்றுவார் யார் ?


பாண்டிய மன்னன் குதிரை வாங்கி வரும்படி சொல்லி மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து அனுப்பினான். மணிவாசகரோ, குதிரை வாங்காமல் அந்தப் பணத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார்.


என்னதான் பக்திமானாக இருந்தாலும், மற்றவர் பணத்தை எடுத்து இறை காரியம் செய்யலாமா? நாளை மற்றவர்களும் அப்படிச் செய்யலாம் அல்லவா? மாணிக்கவாசகரே செய்தார், நான் செய்தால் தப்பா என்று ஆளாளுக்கு ஆரம்பித்து விட்டால்? 


அப்படி செய்ததற்கு மணிவாசகர் தண்டனை பெற்றார். அது வேறு விடயம்.


அது ஒரு புறம் இருக்கட்டும். 


மணிவாசகரின் நண்பர்கள் அவரிடம் "இப்படி மன்னன் கொடுத்த பணத்தில்திருப்பணி செய்து விட்டீரே, மன்னன் குதிரை எங்கே கேட்டு, உண்மை அறிந்து உம்மை தண்டித்தால் என்ன செய்யப் போகிறீர்" என்று கேட்டார்கள். 


அதற்கு அவர் 


"இன்றே இறந்தாலும், சரி. அல்லது நீண்ட நாள் இருக்க வேண்டி இருந்தாலும் சரி. அரசன் கோபித்தாலும் சரி. அல்லது பாராட்டினாலும் சரி. சுவர்க்கம் போனாலும் சரி. அல்லது நரகமே ஆனாலும் சரி. என்ன ஆனாலும் சரி, சிவனை மறக்க மாட்டேன். நடப்பது எல்லாம் விதிப் பயன். அதை யாராலும் மாற்ற முடியாது"


என்று கூறினார். 


பாடல் 


இறக்கினு மின்றே யிறக்குக வென்று மிருக்கினு மிருக்குக வேந்தன்

ஒறுக்கினு மொறுக்க வுவகையு முடனே யூட்டினு மூட்டுக வானிற்

சிறக்கினுஞ் சிறக்க கொடியதீ நரகிற் சேரினுஞ் சேருக சிவனை

மறக்கிலம் பண்டைப் பழவினை விளைந்தான் மாற்றுவார் யாரென

                                            மறுத்தார்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_25.html



(pl click the above link to continue reading)



இறக்கினு மின்றே யிறக்குக = இறக்கினும் இன்றே இறக்குக 


வென்று மிருக்கினு மிருக்குக = என்றும் இருக்க வேண்டும் என்றாலும் இருப்போம் 


 வேந்தன் = அரசன் 


ஒறுக்கினு மொறுக்க = கோபித்தால் கோபித்து கொள்ளட்டும் 


வுவகையு முடனே யூட்டினு மூட்டுக = அல்லது உவகையுடன் உபசரித்தாலும் உபசரிகட்டும் 


வானிற் = மேலுலகில் 


சிறக்கினுஞ் சிறக்க = சிறப்பாக சொர்க்கத்தில் இருந்தால் சந்தோஷமாக இருப்போம் 


கொடியதீ நரகிற் சேரினுஞ் சேருக = அல்லது கொடிய தீ நரகத்தில் கிடந்து துன்பப் பட வேண்டி இருந்தால் துன்பப் படுவோம் 


 சிவனை மறக்கிலம் = என்ன ஆனாலும் சரி, சிவனை மறக்க மாட்டோம் 


 பண்டைப்  = முந்தைய 


பழவினை = பழுத்த வினைகள் 


விளைந்தான் = வந்து விளைந்தால் 


 மாற்றுவார் யாரென மறுத்தார். = அதை மறுத்து யாரால் மாற்ற முடியும் 


அதெல்லாம் சரி, மாணிக்கவாசகர் அப்படி இருந்தார். அதுக்கு என்ன இப்ப? நாம அவர் போல இருக்க முடியுமா? அப்படி இருந்தால் நாமும் மணிவாசகராகி விடமாட்டோமா? இதெல்லாம் நடக்கிற காரியமா?


அப்படி அல்ல.


வாழ்வில், நாம் நினைக்கிறோம் எல்லாம் நம் சாமர்த்தியத்தில், நம் அறிவுத் திறனில், நம் உழைப்பில் நிகழ்கிறது என்று. நம்மால் எதையும் செய்ய முடியும் என்று நினைக்கிறோம். 


அப்படி நடந்தால் "பார்த்தாயா என் சமத்தை" என்று மார் தட்டுகிறோம். 


அப்படி நடக்கவில்லை என்றால்  மனமொடிந்து போகிறோம். 


இது போன்ற இலக்கியங்கள் நமக்கு ஒரு சமநிலையைத் தருகின்றன.


வெற்றியில் ஆடாதே. தோல்வியில் துவண்டு விடாதே.


எல்லாம் முன் செய்த வினை என்று இரு. இனி வரும் நாட்கள் நல்லவையாக இருக்க வேண்டும் என்றால்,இப்போது நல்லது செய்து கொண்டிரு என்று சொல்கின்றன. 


வாழ்க்கை என்றால் இன்ப துன்பம் இரண்டும் இருக்கும். 


ரொம்ப அல்லாட வேண்டாம். நிதானமாக இருப்போம் என்று நமக்கு அறிவுறுத்துகின்றன. 





Wednesday, November 24, 2021

திருக்குறள் - அன்புடைமைக்குப் பின்

 திருக்குறள் - அன்புடைமைக்குப் பின் 


திருக்குறளின் அதிகார முறைமையே நம்மை பிரமிக்க வைக்கும். 


முதலில் இந்த உலகைப் படைத்த கடவுளுக்கு கடவுள் வாழ்த்துச் சொன்னார். 


அடுத்தது, 


படைத்த உலகத்தை காக்க வேண்டி இறைவன் அளிக்கும் கொடையான மழையைப் போற்றி வான் சிறப்பு பற்றி கூறினார். 


உலகம் வந்தாகி விட்டது, மழையால் அது நிலை பெற்று விட்டது, இந்த உலகில், அதில் உள்ள இயற்கையின் இரகசியங்களை அறிந்து சொல்லும் நீத்தார் பெருமை பற்றி கூறினார். 


அடுத்தது, 


அவர் சொல்லும் அறங்களின் பெருமை பற்றி அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்தை வைத்தார்.


அடுத்தது, அறம் என்பது இல்லறம், துறவறம் என்று இரண்டாகப் பிரியும். எனவே இல்லறம் பற்றி சொல்ல மேற்கொண்டு இல்வாழ்க்கை என்ற அதிகாரம் செய்தார். 


அடுத்தது, அந்த இல்லறம் சிறக்க வேண்டும் என்றால், ஒரு பெண்ணின் துணை வேண்டும். எனவே, "வாழ்க்கை துணை நலம்" பற்றி கூறினார். 


அடுத்தது, திருமணம் செய்து கொண்டு, மனைவியோடு இல்லறம் நடத்தும் போது அன்பின் விரிவாக்கம் நிகழும். அதன் அடுத்த கட்டமாக "புதல்வர்களைப் பெறுதல்" பற்றி கூறினார். 


அடுத்தது, மனைவி, பிள்ளைகள் என்று ஆகி விட்டது. அந்த இல்லறம் சிறக்க வேண்டும் என்றால் அங்கு அன்பு பெருக வேண்டும். எனவே, "அன்புடைமை" பற்றி கூறினார். 


அடுத்து என்னவாக இருக்கும் ?


கணவன், மனைவி, பிள்ளைகள், அன்பு செய்யும் இல்லறம் என்று ஆகி விட்டது. 


அடுத்து என்ன? 


இல்லறம் விரிய வேண்டும். தன் வீட்டை கடந்தும் அன்பு பெருக வேண்டும், அதற்காக 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_24.html


Please click the above link to continue reading



"விருந்தோம்பல்" 


பற்றி கூறப் போகிறார். 


வீடு என்று ஒன்று இருந்தால்,  நாலு பேர் வந்து போக வேண்டும். 


நான், என் மனைவி, என் பிள்ளை என்று இருக்க முடியுமா?  சுற்றம் சூழ இருக்க வேண்டாமா?


எப்படி விருந்தை போற்றுவது என்று கூற இருக்கிறார். 


விருந்தை போற்றுவதை ஒரு அறமாகச் சொன்னது நம் மொழியாகத்தான் மட்டும் இருக்கும். 


விருந்தை எல்லோரும் உபசரிப்பார்கள்.  ஆனால், அதை தர்மமாக, அறமாகச் சொன்னது நம் நாட்டுக்கே உரிய பண்பாடு, கலாசாரம். 


விருந்தினர்களை தெய்வத்துக்கு இணையாக வைத்து போற்றியது நம் நாடு. 


அதிதி தேவோ பவா 


என்று போற்றியது நம் நாடு. 


விருந்தோம்பலில் உச்சம் தொட்டு காட்டுவார் வள்ளுவர். 


விருந்தோம்பல் பற்றி இனி வரும் நாட்களில் சிந்திப்போம். 




Tuesday, November 23, 2021

அபிராமி அந்தாதி - எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே

 அபிராமி அந்தாதி - எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே


பயமாக இருந்தால் இன்னொருத்தர் கையை பிடித்துக் கொண்டால் பயம் போய்விடுகிறது, அல்லது குறைந்து விடுகிறது. அக்கம் பக்கம் யாரும் இல்லாவிட்டாலும், இருக்கும் இருக்கையின் கைப் பிடியை இறுகப் பற்றிக் கொள்கிறோம் அல்லவா? 


அன்பை வெளிப்படுத்த கை குலுக்குகிறோம்.


மனைவி/கணவன் மேல் அன்பு மேலீட்டால் அவர்கள் கையைப் பற்றிக் கொள்கிறோம். 


சில சமயம், காலையும் பற்றிக் கொள்ளலாம். பாதத்தை பற்றிக் கொல்வதும் ஒரு சுகம் தான். 


சிவனுக்கு குறை வந்தால், அபிராமியின் பாதங்களைப் பற்றி தன் தலை மேல் வைத்துக் கொள்வாராம். 


இதில் யார் பெரியவர், சிறியவர் என்பதல்ல கேள்வி. 


அளவு கடந்த பாசம். காதல். 


தலை மேல் வைத்துக் கொல்வதற்கு முன், அந்த சிவந்த பாதங்களை தொட்டு தன் மடி மேல் வைத்து இருப்பார். அதை மென்மையாக வருடி கொடுத்து இருப்பார். (பாகு கனி மொழி, மாது குற மகள் பாதம் வருடிய மணவாளா என்று முருகனைப் பற்றிச் சொல்வார் அருணகிரி), அந்தப் பாதங்களுக்கு முத்தம் தந்திருப்பார். இன்னும் இன்னும் காதல் ஏற, அந்தப் பாதங்களை தன் தலை மேல் வைத்து இருப்பார். 


இதை என்னவென்று சொல்லுவது? 


பக்தியை கடந்த, அன்யோன்யம். நெருக்கம். உருக்கம். 


அவள் பாதத்தை தூக்கி தலை மேல் வைத்தவுடன் அவருக்கு அவருடைய குறை எல்லாம் தீர்ந்த மாதிரி இருந்ததாம். 


பாடல் 


என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்

நின்குறையே அன்றி யார் குறை காண்; இரு நீள்விசும்பின்

மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?

தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_23.html


Please click the above link to continue reading




என்குறை தீர = என்னுடைய குறைகள் தீர வேண்டி 


நின்று =உன் முன் நின்று 


ஏத்துகின்றேன் = உன்னைப் போற்றுகின்றேன் 


இனி யான் பிறக்கின் = இனிமேல் நான் பிறவி எடுத்தால் 


நின்குறையே அன்றி = அது உன் குறை.  உன் பக்தனுக்கு நீ முக்தி தராவிட்டால் அது உன் தப்புத்தான் 


யார் குறை காண் = வேற யாருடைய குறை? 


இரு நீள்விசும்பின் = இருண்ட நீண்ட வானத்தில் 


மின்குறை காட்டி = பளிச்சென்று குறைந்த நேரம் காட்டி மறைந்து விடும் மின்னலைப் போல 


மெலிகின்ற நேரிடை = மெலிந்த நேர்த்தியான இடையை உடையவளே 


மெல்லியலாய் = மென்மையானவளே 


தன்குறை தீர = தன்னுடைய குறைகள் தீர 


எங்கோன் = எங்கள் தலைவர் சிவ பெருமான் 


சடைமேல்வைத்த = தன்னுடைய தலைமேல் வைத்துக்கொண்ட 


தாமரையே.  = தாமரை போன்ற சிவந்த பாதங்களை உடையவளே 


அனுபவம் இருந்தால் அன்றிப்  புரியாது. 


"நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆட்கொண்ட நேசத்தை என் சொல்வேன்" 


என்பார் பட்டர்.


அபிராமி அந்தாதி படித்தால் பாட்டை விட்டுவிடவேண்டும்.  அவர் காட்டும் அந்த நிகழ்வுக்குப் போய் விட வேண்டும். அந்த மன நிலையைப் பற்றிக் கொள்ள வேண்டும். 


மற்ற பாடல்கள் போல் சொல்லுக்கு பொருள் சொல்லி புரிந்து கொள்ளும் பாடல்கள் அல்ல அவை. 


கற்கண்டு எப்படி இருக்கும் என்று எப்படி சொல்லி விளங்க வைப்பது. 


ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். எல்லாம் புரிந்து விடும். 


அபிராமி அந்தாதி கற்கண்டு போல. சொன்னால் புரியாது. மனதுக்குள் போட்டுக் கொண்டால் தித்திக்கும். 


வேறு என்ன சொல்ல?