Thursday, November 3, 2016

இராமாயணம் - பரதன் 9 - தோய்ந்தே கடந்தான்

இராமாயணம் - பரதன் 9 - தோய்ந்தே கடந்தான்


முந்தைய பிளாகில் தயரதன் கோபம், காமம் போன்ற குற்றங்களை தவிர்த்து வாழ்தவன் என்று பார்த்தோம்.

(முந்தைய பிளாகைப் படிக்க

http://interestingtamilpoems.blogspot.in/2016/11/blog-post.html


‘சினக் குறும்பு எறிந்து,
    எழு காமம் தீ அவித்து,
இனக் குறும்பு யாவையும்
    எற்றி, யாவர்க்கும்
மனக்கு உறும் நெறி செலும்
    வள்ளியோய்! மறந்து ‘
உனக்கு உறும் நெறி செலல்
    ஒழுக்கின் பாலதோ? ‘


)


தயரதனுக்கு பதினாயிரம் மனைவிகள் மற்றும் மூன்று பட்டத்து இராணிகள் என்று இருந்தார்கள். இவ்வளவு பெண்களோடு வாழ்ந்தவன் எப்படி காமத்தை வென்றவனாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுவது இயல்பு.


நாம் எதையும் முழு மனதோடு செய்வது இல்லை. ஒன்றைச் செய்யும் போதே இன்னொன்றின் மேல் மனம் செல்கிறது. மனம் ஒன்றிச் செய்வது இல்லை.

சாப்பிடும் போது டிவி பார்த்துக் கொண்டோ அல்லது பேப்பர் அல்லது புத்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடுவது. சாப்பாட்டில் எங்கே கவனம் இருக்கும். அலுவலத்தில் இருக்கும் போது வீட்டு எண்ணம். வீட்டில் இருக்கும் போது அலுவலகத்தின் எண்ணம். இறைவனை வணங்கும் போதும் ஆயிரம் சிந்தனைகள்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
        உத்தமர்தம் உறவு வேண்டும்  என்பார் வள்ளலார். 


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
        உத்தமர்தம் உறவு வேண்டும் 
        உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் 
        உறவு கலவாமை வேண்டும் 
    பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை 
        பேசா திருக்க வேண்டும் 
        பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் 
        பிடியா திருக்க வேண்டும் 
    மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை 
        மறவா திருக்க வேண்டும் 
        மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற 
        வாழ்வுனான் வாழ வேண்டும் 
    தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் 
        தலமோங்கு கந்த வேளே 
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி 
        சண்முகத் தெய்வ மணியே. 

என்பது திருவருட்பா.

மனம் எங்கே ஒருமைப் படுகிறது ? எப்போதும் ஏதோ ஒரு பதற்றமான சூழ்நிலையிலேயே வாழ்கிறோம். ஒரே நேரத்தில் பல காரியங்களை செய்ய நினைக்கிறோம். ஒன்றிலும் மனம் இலயிப்பது கிடையாது.

மனம் ஒன்றாததனால் , அனுபவம் முழுமை பெறுவது இல்லை. ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறது. அரைகுறையாக விட்டதை மீண்டும் அனுபவிக்க மனம் விரும்புகிறது.

ஒரு ஆசையில் இருந்தும் மீண்டு வர முடியவில்லை.

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்

பெண் என்பவள் என்ன மோசமானவளா . ஏன் ஞானிகள் , அறிஞர்கள் எல்லோரும் பெண்ணைக் கண்டால் இப்படி பயப்படுகிறார்கள் ? பெண்ணைப் பற்றி , அவளின் உடலைப் பற்றி கேவலமாக பேசுகிறார்கள். பெண் இல்லை என்றால் அவர்களே தோன்றியிருக்க முடியாதே. அப்படி இருக்க பெண்ணைப் பற்றி ஏன் அப்படி எழுதுகிறார்கள் ?

வள்ளலார் சொல்கிறார் "அணைக்கும் பெண்ணின் ஆசையை மறக்க வேண்டும்" என்கிறார்.  பெண் ஆசை வேண்டும். அந்த ஆசை இல்லை என்றால்  உலகம்  நின்று போகும். ஆனால், அதையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு கால கட்டத்தில் , பெண் என்பவள் ஒரு நண்பியாக, தோழியாக, தாயாக, சகோதரியாக நினைக்க வேண்டும். மருவுதலையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. பெண்ணை மறக்கச் சொல்லவில்லை. பெண் மேல் உள்ள ஆசையை மறக்க வேண்டும் என்கிறார்.

எப்படி அதை மறப்பது ? பெண் ஆசை எனபது மறக்கக் கூடியதா ?

மனதை வேறொன்றின் மேல் செலுத்தினால் பெண் ஆசை மறக்கும். "உன்னை மறவாது இருக்க வேண்டும்" என்கிறார் வள்ளலார். மனம் தெய்வ சிந்தனையில் போனால்  பெண் ஆசை போகும்.

எதையோ எழுத வந்து எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன்....மன்னிக்கவும்.ஆனால், தயரதன் அப்படி அல்ல. எதைச் செய்தாலும் அதை முழுமையாக, அதன் இறுதி வரை சென்று முழுமையாக அனுபவித்து பின் அதை விட்டு மீண்டு வருகிறான். போதும் என்ற திருப்தி வந்து விடுகிறது.

அரசியல் சிறப்பு பற்றி சொல்ல வந்த கம்பன், தயரதனின் பெருமையைப் பற்றிக் கூறுகிறான்.

"இல்லை என்று கடல் போல வருபவர்களை தர்மம் என்ற படகில் ஏறிக் கடந்தான். உலகில் உள்ள எண்ணற்ற நூல்கள் என்ற கடலை ஆராய்ச்சி என்ற படகில் சென்று கடந்தான்.  பகைவர்கள் என்ற கடலை தன்னுடைய வீரம் என்ற படகால் கடந்தான். செல்வம் தரும் அனைத்து சுகங்களையும் அனுபவம் என்ற படகால் கடந்தான் "

பாடல்

ஈய்ந்தே கடந்தான் இரப்போர் கடல்;எண்
    இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும்
    அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான் பகை வேலை;
    கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான் திருவின்
    தொடர் போக பௌவம்.

பொருள் 


ஈய்ந்தே = தர்மம் செய்தே

கடந்தான் = கடந்தான், தாண்டினான்

இரப்போர் கடல் = கடல் போன்ற இரப்போர்களை.  கடல் போன்ற வறியவர்களை.

எண் இல் = எண்ணிக்கையில் அடங்காத

நுண் நூல் = நுண்மையான நூல்களை , புத்தகங்களை

ஆய்ந்தே கடந்தான் = ஆராய்ச்சி செய்தே கடந்தான்


அறிவு என்னும்  அளக்கர் = அறிவு என்ற கடலை

வாளால் = தன்னுடைய வாளால் , வீரத்தால்

காய்ந்தே கடந்தான் = சண்டையிட்டே கடந்தான்

பகை = பகைவர்கள் என்ற

வேலை = கடலை

கருத்து முற்றத் = மனம் நிறைய , திருப்தி படும்படி

தோய்ந்தே கடந்தான் = அனுபவித்தே கடந்தான்

திருவின் = செல்வத்தின்

தொடர் = தொடர்ந்து வரும்

போக = சுகம் என்ற

பௌவம் = கடலை

மிக ஆழமான பாடல்.

இன்பங்களை அனுபவித்து கடக்க முடியுமா ? நெய்யை விட்டு நெருப்பை அணைக்க முடியுமா ? அனுபவிக்க அனுபவிக்க இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்றல்லவா  மனம் கேட்கும்.

தயரதனுக்கும் அப்படி நிகழ்ந்து இருக்கலாம். மேலும் வேண்டும், மேலும் வேண்டும் என்று  அனுபவித்து ,  சரி,இதில் இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று  அவன் அதை கடந்திருக்கலாம். அல்லது, அனுபவத்தை  முழுமையாக்கி  , அதை கடந்திருக்கலாம். எப்படி இருப்பினும், உலக சுகங்களை எல்லாம்  அனுபவித்தே கடந்துவிட்டான். இனி , அந்த சசுகங்களின் மேல் பற்று இல்லை. நான் பார்க்காததா என்ற நிமிர்வு வந்து விடும்.

இரண்டாவது, சரி நாங்களும் அப்படி அனுபவித்து கடக்கிறோம். அவன் சக்திக்கு  பதினாயிரம் மனைவிகள் என்றால் எங்கள் சக்திக்கு ஒரு பத்தாவது முடியாதா  என்று குதர்க்கமாக யாரும் கேட்கலாம். இங்குதான் ஒரு முக்கியமான  கருத்தை நான் கவனிக்க வேண்டும்.

ஒரு அரசன், இந்த சுக போகங்களை அனுபவித்து கடந்து விட்டால், அவன் மனம் அதில் செல்லாது. வருகின்ற வரிப் பணத்தைக் கொண்டு எப்படி மக்களுக்கு நல்லது  செய்யலாம் என்று தோன்றும். இல்லை என்றால், எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும் அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும். சேர்க்கிறார்கள்.  ஆசை சலித்துப் போனால் , மனம் மக்களை பற்றி, அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்கத் தொடங்கும்.

குற்றங்கடிதல் பற்றி சொல்ல வந்த வள்ளுவர் , காமத்தை எதிரிகள் அறியாமல் அனுபவித்துக் கொள் என்கிறார். இல்லை என்றால் பகைவர்கள் அந்த பலவீனத்தை அறிந்து கொண்டு அதன் மூலம் உன்னை வீழ்த்தி விடுவார்கள் என்று மன்னனுக்கு அறிவுரை கூறுகிறார். வள்ளுவருக்குத் தெரியும் , காமம் என்பதை அடக்க முடியாது. இரகசியமாக அனுபவித்துக் கொள் என்று சொல்லித் தருகிறார்.

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.

என்பது வள்ளுவம். 

எண்  இல் நுண் நூல் ஆய்ந்தே கடந்தான்

கம்பர் காலத்திலேயே புத்தகங்கள் இருந்து இருக்கிறது. அதுவும் எப்படி, எண்ணில் அடங்காத  நூல்கள். அது மட்டும் அல்ல, எண்ணில் அடங்காத நுண்மையான நூல்கள். அறிவுப் பூர்வமான, ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட நூல்கள்  மட்டுமே எண்ணிக்கையில் அடங்காத அளவு இருந்ததாம். அது அல்லாமல் மற்ற  புத்தகங்களும் இருந்திருக்கும் போல. நுண் நூல் என்று சொல்லும்போது  நுண்மை இல்லாத நூல்களும் , பொழுது போக்கு நூல்களும்  இருந்திருக்கும்.

படித்தவர்களும், படித்ததை எழுதி வைத்தவர்களும், எழுதியதை படித்து பயன்  பெறுபவர்களும் நிறைந்த ஞான பூமி இது.

படிக்கும் போது , நல்ல விஷயங்கள் உள்ள, ஆழ்ந்த கருத்துகளை கொண்ட புத்தகங்களை வாசிக்க வேண்டும்.

வார, மாத நாவல்களை விட்டு அறிவு பூர்வமான நூல்களை வாசிப்போம்.


1 comment:

  1. அதே போலத்தான், இளம் வயது இருக்கும்போது நாங்கள் அனுபவித்து விடுகிறோம் என்பதில் தவறு என்ன?

    இரண்டாவது, ஆண்கள் இப்படி அனுபவிக்கலாம் என்றால், பெண்கள் ஏன் அனுபவிக்கக் கூடாது?

    ReplyDelete