Showing posts with label பெரிய புராணம். Show all posts
Showing posts with label பெரிய புராணம். Show all posts

Wednesday, November 11, 2015

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - காமத்தை வெல்ல முடியுமா - பாகம் 2

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - காமத்தை வெல்ல முடியுமா  - பாகம் 2


திருநீலகண்டரைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். பெரிய புராண பாடல்களை படிக்கும் போது மீண்டும் மீண்டும் ஏதேதோ புதிய அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

முன்பெல்லாம், பெரிய புராணம் என்றால் ஏதோ ஒரு சில பக்திமான்களின் கதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், மற்றும் ஞானசம்பாந்தரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. இந்த நால்வரைப் பற்றியும் நிறைய படித்தும் கேட்டும் இருப்பதால் புதிதாக என்ன அறிந்து கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பில் பெரிய புராணத்தை படிக்காமலேயே விட்டு விட்டேன்.

அது எவ்வளவு பெரிய பிழை என்று இப்போது புரிகிறது.

கொட்டிக் கிடக்கிறது சைவ சித்தாந்தமும், பக்தியும், வாழ்க்கையும்.

அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னி  பிணைந்து கிடக்கிறது.

அள்ள அள்ள குறையாத பொக்கிஷம். ஆனந்த தேன் ஊற்று பெரிய புராணம்.

அப்படி என்ன பெரிய புராணத்தில் சிறப்பு இருக்கிறது என்று கேட்டால், அதை கடைசியில் பார்ப்போம்.

இப்போது சில பாடல்கள்.

திருநீலகண்டர், மண் பானை செய்து அதை விற்பனை செய்து வாழ்ந்து வருபவர். அவருக்கு சிவன் மேல் பக்தி. அவரைப் பற்றிய கதை.

சிவன் மேல் பக்தி என்றாலும் , காமம் விடவில்லை. அது யாரை விட்டது ?

மனைவி இருக்கும் போது, ஒரு விலை மகளிடம் தொடர்பு கொண்டார்.

பாடல்

அளவு இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி.
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும்
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்.

பொருள்

அளவு இலா = இவ்வளவு என்று கணிக்க முடியாத

மரபின் வாழ்க்கை = அவ்வளவு காலம் வாழ்ந்த வாழ்கை. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வாழ்கை

மண் கலம் = மண் பாண்டங்களை

அமுதுக்கு ஆக்கி = உண்பதற்காக ஆக்கி

வளர் இளம் திங்கள் = வளரும் இளமையான நிலாவை

கண்ணி = சூடிய

மன்று உளார் = மன்றத்தில் உள்ளார்

அடியார்க்கு என்றும் = அடியவர்களுக்கு என்றும் (சிவனடியார்களுக்கு என்றும்)

உளம் மகிழ் சிறப்பின் மல்க = உள்ளம் மகிழும் படி  சிறப்பாக

ஓடு அளித்து = திருவோடுகளை செய்து கொடுத்து

ஒழுகும் நாளில் = வாழும் நாளில்

இளமை மீது ஊர = இளமை மிகுந்து வர

இன்பத் துறையினில்= இன்பம் என்ற துறையில்

எளியர் ஆனார்.= வலிமை இழந்து எளியவர் ஆனார்

இதில் என்ன இருக்கிறது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது ?

பரம்பரை பரம்பரையாக குயவனாராக இருந்து வருபவர். இன்று நேற்று அல்ல, அளவு இல்லாத காலமாய் குயவனார் பரம்பரை.

எனவே பெரிய படிப்பு ஒன்றும் படித்திருக்க வழி இல்லை.

பெரிய சொத்து பத்து ஒன்றும் இருக்க வழி இல்லை.

அதற்கும் மேலே, விலை மகளிரிடம் சென்று வருகிறார்.

நாளும் வெயிலில் , சகதியில் கிடந்து உழலும் அவர் ஒன்றும் பெரிய சிவப்பாக அழகாகவும் இருக்க வழி இல்லை.

இப்படிப்பட்ட, படிக்காத, காலணா சொத்து இல்லாத, கண்ட பெண்களிடம் சென்று வரும் ஒருவரை  நாயன்மார் என்று சிவன் கோவிலில் வைத்து வழிபடும்  துணிவு வேறு எந்த மதத்துக்காவது உண்டா ?

அவரைப் பற்றி சோழ நாட்டின் முதலைமைச்சர் சேக்கிழார் பாடுகிறார்.

நீ படிக்காதவனாக இருந்து விட்டுப் போ.

பணம் காசு இல்லாதவனாக இருந்து விட்டுப் போ.

பரத்தைகளிடம் செல்லும் ஒழுக்க குறைவுள்ளவனாக இருந்துவிட்டுப் போ.

பக்திக்கு இது ஒன்றும் தடை இல்லை என்று பறை சாற்றியது நம் மதம்.

அது மட்டும் அல்ல.


=============== பாகம் 2 ================================================

காமம் !

வாழ்வின் மிகப் பெரிய சந்தோஷம் இது. மிகப் பெரிய துக்கமும் இதுவே.

காமத்தில் கிடந்து தவிக்காத ஆள் யார் உண்டு.

மோகத்தை கொன்று விடு; அல்லால் என் மூச்சை நிறுத்தி விடு என்று மோகத் தீயில் தவித்தார் பாரதியார்.

சாதாரண தீ சுட்டால் நீரில் குளித்தால் அந்த சூடு தணிந்து விடும்.

காமத் தீ அப்படி அல்ல.

நீரில் குளித்தாலும் சரி, மலையின் மேல் ஏறி நின்றாலும் சரி, எங்கு போனாலும்  விடாது.

ஊரு ளெழுந்த வுருகெழு செந்தீக்கு
நீருட் குளித்து முயலாகும்-நீருள்
குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினுங் காமஞ் சுடும்.          

 நீரில் குளித்தாலும் காமம் சுடும்.  குன்றேறி, யாருக்கும் தெரியாமல் குகைக்குள்  ஒளிந்து நின்றாலும் காமம் சுடும் என்கிறது நாலடியார்.

சாதாரண தீ , தொட்டால் தான் சுடும். காமமோ தொடாமல் விலகி நின்றாலும் சுடும்  என்கிறது குறள் .

தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ,  

சாதாரண தீயால் அதை விட்டு விலகி நின்றபின் காமத்தைப் போல சுட முடியுமா  என்று வினவுகிறார் வள்ளுவர்.

மணிவாசகர், அப்பர் முதல் அனைத்து சித்தர்களும் காமத்தீயால் வெந்து நொந்தார்கள்.

அருணகிரி நாதர் சிற்றின்பத்தில் மூழ்கி பட்ட பாடும் நாம் அறிந்ததே.

கம்பராமாயணம் முழுவதும் காதலும் காமமும் கலந்ததே.

சீதை மேல் இராமன் கொண்ட காதல், இராமன் மேல் சீதை கொண்ட காதல், இராமன் மேல்   சூர்பனகை கொண்ட காமம், இலக்குவன் மேல் சூர்பனகை கொண்ட  காமம், சீதை மேல் இராவணன் கொண்ட காமம், என்று காப்பியம் முழுவதுமே  இந்த காதலும் காமமுமே நிறைந்து நிற்கிறது.

காமத்தை வெல்ல முடியுமா ? வென்றவர்கள் யாராவது இருக்கிறார்களா ? காமத்தை வெல்ல முடியும் என்றால் எப்படி வெல்வது ? அதற்கு என்ன வழி ?

எல்லா புலவர்களும் காமத்தால் வரும் கஷ்டம் பற்றி புலம்புகிறார்கள். இறைவா என்னை இந்த காமச் சுழலில் இருந்து காப்பாற்று என்று கதறி இருக்கிறார்கள்.

தெய்வப் புலவர் சேக்கிழார் ஒருவர் தான் , அந்த காமத்தில் இருந்து விடுபட வழி சொல்லித் தருகிறார்.

எப்படி என்று பார்ப்போம்....





Wednesday, November 4, 2015

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - இளமை மீது ஊர - பாகம் 1

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - இளமை மீது ஊர - பாகம் 1


திருநீலகண்டரைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். பெரிய புராண பாடல்களை படிக்கும் போது மீண்டும் மீண்டும் ஏதேதோ புதிய அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

முன்பெல்லாம், பெரிய புராணம் என்றால் ஏதோ ஒரு சில பக்திமான்களின் கதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், மற்றும் ஞானசம்பாந்தரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. இந்த நால்வரைப் பற்றியும் நிறைய படித்தும் கேட்டும் இருப்பதால் புதிதாக என்ன அறிந்து கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பில் பெரிய புராணத்தை படிக்காமலேயே விட்டு விட்டேன்.

அது எவ்வளவு பெரிய பிழை என்று இப்போது புரிகிறது.

கொட்டிக் கிடக்கிறது சைவ சித்தாந்தமும், பக்தியும், வாழ்க்கையும்.

அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னி  பிணைந்து கிடக்கிறது.

அள்ள அள்ள குறையாத பொக்கிஷம். ஆனந்த தேன் ஊற்று பெரிய புராணம்.

அப்படி என்ன பெரிய புராணத்தில் சிறப்பு இருக்கிறது என்று கேட்டால், அதை கடைசியில் பார்ப்போம்.

இப்போது சில பாடல்கள்.

திருநீலகண்டர், மண் பானை செய்து அதை விற்பனை செய்து வாழ்ந்து வருபவர். அவருக்கு சிவன் மேல் பக்தி. அவரைப் பற்றிய கதை.

சிவன் மேல் பக்தி என்றாலும் , காமம் விடவில்லை. அது யாரை விட்டது ?

மனைவி இருக்கும் போது, ஒரு விலை மகளிடம் தொடர்பு கொண்டார்.

பாடல்

அளவு இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி.
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும்
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்.

பொருள்

அளவு இலா = இவ்வளவு என்று கணிக்க முடியாத

மரபின் வாழ்க்கை = அவ்வளவு காலம் வாழ்ந்த வாழ்கை. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வாழ்கை

மண் கலம் = மண் பாண்டங்களை

அமுதுக்கு ஆக்கி = உண்பதற்காக ஆக்கி

வளர் இளம் திங்கள் = வளரும் இளமையான நிலாவை

கண்ணி = சூடிய

மன்று உளார் = மன்றத்தில் உள்ளார்

அடியார்க்கு என்றும் = அடியவர்களுக்கு என்றும் (சிவனடியார்களுக்கு என்றும்)

உளம் மகிழ் சிறப்பின் மல்க = உள்ளம் மகிழும் படி  சிறப்பாக

ஓடு அளித்து = திருவோடுகளை செய்து கொடுத்து

ஒழுகும் நாளில் = வாழும் நாளில்

இளமை மீது ஊர = இளமை மிகுந்து வர

இன்பத் துறையினில்= இன்பம் என்ற துறையில்

எளியர் ஆனார்.= வலிமை இழந்து எளியவர் ஆனார்

இதில் என்ன இருக்கிறது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது ?

பரம்பரை பரம்பரையாக குயவனாராக இருந்து வருபவர். இன்று நேற்று அல்ல, அளவு இல்லாத காலமாய் குயவனார் பரம்பரை.

எனவே பெரிய படிப்பு ஒன்றும் படித்திருக்க வழி இல்லை.

பெரிய சொத்து பத்து ஒன்றும் இருக்க வழி இல்லை.

அதற்கும் மேலே, விலை மகளிரிடம் சென்று வருகிறார்.

நாளும் வெயிலில் , சகதியில் கிடந்து உழலும் அவர் ஒன்றும் பெரிய சிவப்பாக அழகாகவும் இருக்க வழி இல்லை.

இப்படிப்பட்ட, படிக்காத, காலணா சொத்து இல்லாத, கண்ட பெண்களிடம் சென்று வரும் ஒருவரை  நாயன்மார் என்று சிவன் கோவிலில் வைத்து வழிபடும்  துணிவு வேறு எந்த மதத்துக்காவது உண்டா ?

அவரைப் பற்றி சோழ நாட்டின் முதலைமைச்சர் சேக்கிழார் பாடுகிறார்.

நீ படிக்காதவனாக இருந்து விட்டுப் போ.

பணம் காசு இல்லாதவனாக இருந்து விட்டுப் போ.

பரத்தைகளிடம் செல்லும் ஒழுக்க குறைவுள்ளவனாக இருந்துவிட்டுப் போ.

பக்திக்கு இது ஒன்றும் தடை இல்லை என்று பறை சாற்றியது நம் மதம்.

அது மட்டும் அல்ல.




Monday, October 19, 2015

பெரிய புராணம் - பேசக் கற்றுக் கொள்வோம்

பெரிய புராணம் - பேசக் கற்றுக் கொள்வோம் 


பெரிய புராணம் போன்ற நூல்களை எதற்குப் படிக்க வேண்டும் ? ஏதோ கொஞ்சம் நாயன்மார்கள் இருந்தார்கள், பக்தி செய்தார்கள், சொர்க்கம் சென்றார்கள். இதைப் படிப்பதால் நமக்கு என்ன நன்மை என்று படிக்காமல் விட்டு விடுகிறோம். நாம் படிக்காமல் விட்டது மட்டும் அல்ல, அடுத்த தலைமுறைக்கும் அதன் சிறப்புகளை சொல்லாமல் விட்டு விடுகிறோம். அப்படி , நம் மொழியில் உள்ள பலப் பல அருமையான நூல்களின் சிறப்புகள் ஒரு தலைமுறைக்கே போய் சேராமல் நின்று விடுகிறது.

பரிட்சையில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?

நேர்முகத் தேர்வில் (interview ) தேர்ச்சி பெறுவது எப்படி ?

ஒரு நல்ல presentation தருவது எப்படி ?

இவை எல்லாம் நமக்கு மிக இன்றி அமையாதது, வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமானது.

இவற்றை நமக்குச் சொல்லித் தருகிறது பெரிய புராணம்.

ஒரு கேள்வி கேட்டால், அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் ? அந்த பதில் முழுமையாக இருக்க வேண்டும் . கேள்வி கேட்டவருக்கு அந்த பதிலால் ஒரு பயன்  இருக்க வேண்டும். அந்த பதிலை கேள்வி கேட்டவர் உபயோகப் படுத்த முடிய வேண்டும்....இதை எல்லாம் ஆராய்ந்து, தெளிவாக பதில் சொன்னால் பரீட்சையில்  நல்ல மதிப்பெண் வரும், நேர்முகத் தேர்வில் சிறப்பாக பதில் சொல்ல முடியும்,  presentation சிறப்பாக அமையும்.

எப்படி என்று பார்ப்போம்.

அப்பூதி அடிகள் என்று ஒரு நல்லவர் இருந்தார். அவருக்கு திருநாவுக்கரசர் மேல் அளவு கடந்த பக்தி. அவர் செய்யும் எல்லா திருதொன்டிற்கும் திருநாவுகரசர் பெயரையே சூட்டுவார்.

திருநாவுகரசர் தண்ணீர் பந்தல்.

திருநாவுக் ரசர் மருத்துவ மனை

திருநாவுக்கரசர் அன்ன தான சத்திரம் என்று எல்லாம் அவர் பெயரில் செய்வார்.

இத்தனைக்கும் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரை ஒரு முறை கூட நேரில் சந்தித்தது கிடையாது.

ஒரு நாள் , திருநாவுக்கரசர் அப்பூதி அடிகள் இருக்கும் ஊருக்கு வந்தார். அங்கு வந்து , அடிகள் வைத்திருந்த தண்ணீர் பந்தலை கண்டு, இப்படி தன் பெயரில் தண்ணீர் பந்தல்  வைத்திருக்கும் அவர் யார் என்று அங்கு வேலை செய்பவர்களை கேட்டார்.

இங்கு சற்று நிறுத்துவோம்.

நீங்கள் அங்கு வேலை செய்து, உங்களை யாராவது கேட்டால் என்ன சொல்வீர்கள்.

"யாராய் இருந்தால் உனக்கு என்ன ...உனக்கு என்ன தண்ணி தான வேண்டும்...குடிச்சிட்டு போவியா "

என்று எடுத்து எரிந்து பேசலாம்.

அல்லது,

"அப்பூதி அடிகள் னு ஒருத்தர்...அவர் தான் இந்த தண்ணீர் பந்தலை வைத்து நடத்துகிறார் " என்று பவ்யமாகச் சொல்லலாம்.

அதற்கு மேலே என்ன இருக்கிறது சொல்ல ?

அங்கு வேலை செய்த ஆள் கூறுகிறார்...


கேட்ட ஒரு கேள்விக்கு 6 பதில் தருகிறார். இந்தத் தண்ணீர் பந்தலை நடத்துபவர்

1. அவர் பொருந்திய நூலை மார்பில் அணிதிருப்பவர் (பூணுல்)
2. இந்த பழைய ஊரில் தான் இருக்கிறார்
3. வீட்டுக்குப் போனார் (நீங்க அங்க போனால் அவரைப் பார்க்கலாம் என்பது உள்ளுறை)
4. இப்பதான் போனார் (அதுனால நீங்க அவர் வீட்டுக்குப் போனால், அங்க தான் இருப்பார்)
5. அவர் வீடு பக்கத்தில் தான் இருக்கு,
6. தூரம் இல்லை

பாடல்


என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று
நின்ற வரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவத்
துன்றிய நூல் மார்பரும் இத் தொல் பதியார் மனையின் கண்

சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார்.


பொருள்

என்று உரைக்க = இந்த தண்ணீர் பந்தல் முதலிய அறங்களை செய்வது கேட்டு

அரசு  கேட்டு = திருநாவுக்கரசர் கேட்டு

இதற்கு என்னோ கருத்து என்று = இதற்கு காரணம் என்ன ? தன் பெயரில் செய்யாமல் திருநாவுக்கரசர் பெயரில் செய்யக் காரணம் என்ன என்று

நின்ற வரை நோக்கி = அங்கு நின்றவரை பார்த்து

அவர் எவ்விடத்தார் என வினவத் = இதையெல்லாம் செய்யும் அந்த அப்பூதி அடிகள் எந்த ஊர் காரர் என்று கேட்க

துன்றிய நூல் மார்பரும் = பொருந்திய நூலை மார்பில் அணிந்தவரும்

இத் தொல் பதியார் = இந்த ஊரில் ரொம்ப நாள் இருப்பவர்

மனையின் கண் சென்றனர் = அவருடைய வீட்டுக்குப் போனார்

இப்பொழுது = இப்போதுதான் போனார்

அதுவும் சேய்த்து அன்று  = அவர் வீடு ரொம்ப தூரம் இல்லை

நணித்து என்றார்.= பக்கத்தில் தான் இருக்கிறது என்றார்.

இப்போதுதான் போனார் என்றால், அது வரை அங்கு இருந்து அவர் தண்ணீர் பந்தல் வேலை எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று பார்த்துக் கொண்டார் என்று அர்த்தம்.

எப்படி ஒரு கேள்வியை புரிந்து கொண்டு , அதற்கு முழுமையான ஒரு பதிலை ஒரு வேலையாள் தருகிறான் பாருங்கள்.

இப்படி பேசிப் பழக வேண்டும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும். தெளிவாகச் சொல்ல வேண்டும். முழுமையாகச்  சொல்ல வேண்டும்.

அப்படி சொல்ல வேண்டும் என்றால், கேள்வியை புரிந்து கொண்டு, ஆழமாக சிந்தித்து  பின் பதில் சொல்ல வேண்டும்.

அதற்கு நிறைய பயிற்சி வேண்டும்.

பழகுங்கள். வரும்.






Tuesday, March 24, 2015

பெரிய புராணம் - சார்ந்து நின்ற பொங்கிய இருள்

பெரிய புராணம் - சார்ந்து நின்ற பொங்கிய இருள் 


இறைவனை யார் அடையலாம் ? அவனை அடைவதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா ? இந்த குலத்தில் பிறந்திருக்க வேண்டும், இந்த புத்தகங்களைப் படித்திருக்க வேண்டும், இந்த இந்த சாஸ்திர சம்பிரதாயங்களை கடை பிடித்திருக்க வேண்டும் என்று பட்டியல் இருக்கிறதா ?

அப்படி இருப்பதாய் பல பேர் சொல்லித் திரிகிறார்கள்.

அது போகட்டும், இறைவனை வழிபடும் முறை என்று ஒன்று இருக்கிறதா ? குளித்து, முழுகி, சமய சின்னங்களை உடல் எங்கும் தரித்து, பக்திப் பாடல்களை பாடிக் கொண்டு பூஜை செய்ய வேண்டும் என்று ஏதாவது முறை இருக்கிறதா ?

இல்லை.

இல்லை என்று யார் சொன்னது ?

பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள்...வேடன், மந்திரி, சின்னப் பிள்ளை, அரசன், வயதான பெரியவர், குயவன், இரண்டு பெண்டாட்டி கட்டியவன்  என்று யார் யாரோ இறைவனை

அடைந்திருக்கிறார்கள்...அவர்களின் வாழ்கை  தொகுதிதான் பெரிய புராணம். நம் தமிழ் உலகம் அதை பெரிய புராணம் என்று கொண்டாடுகிறது.

யார் வேண்டுமானாலும் இறைவனை அடையலாம்.

எப்படி வேண்டுமானாலும் இறைவனை அடையலாம் என்று எடுத்துச் சொன்ன நூல் பெரிய புராணம்.

பாடியவர் தெய்வப் புலவர் சேக்கிழார்.

பாயிரத்தில் தான் செய்யும் நூலின் பெயரை கூறுகிறார் சேக்கிழார்.

இந்த உலகில் இரண்டு இருள் உண்டு. ஒன்று இரவு நேரத்தில் வரும் இருள். இன்னொன்று மக்கள் மனதில் உள்ள அறியாமை என்ற இருள். புற இருளை போக்குவது சூரியன். அக இருளை போக்க வந்த இந்த நூலின் பெயர் திருத் தொண்டர் புராணம்

என்று அவர் கூறுகிறார்.


பாடல்

இங்கு இதன் நாமம் கூறின், இவ் உலகத்து முன்னாள்
தங்கு இருள் இரண்டில், மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை, ஏனைப் புற இருள் போக்கு கின்ற
செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.

பொருள்

இங்கு = இங்கு

இதன் = இந்த நூலின்

நாமம் கூறின் = பெயரைச் சொல்வது என்றால்

இவ் உலகத்து = இந்த உலகத்தில்

முன்னாள் = முன்னாளில்

தங்கு இருள் = தங்கிய இருள்

இரண்டில் = இரண்டில்

மாக்கள் = விலங்குகள்

சிந்தையுள் = மனதில் , புத்தியில்

சார்ந்து நின்ற பொங்கிய இருளை = சார்ந்து நின்ற பொங்கிய இருளை

ஏனைப் = மற்ற

புற இருள் போக்கு கின்ற = புற இருளை போக்குகின்ற

செங் கதிரவன் போல் = சிவந்த சூரியனைப் போல

நீக்கும் = அக இருளை நீக்கும்

திருத் தொண்டர் புராணம் என்பாம் = திரு தொண்டர் புராணம் என்று சொல்லுவோம்

அக இருளின் தன்மை சொல்கிறார் சேக்கிழார்....

சார்ந்து + நின்று + பொங்கிய இருள்.

இந்த அக இருள் , அறியாமை, ஆணவம் என்பது முதலில் நம்மைச் சார்ந்து நிற்கிறது.  நாம் இல்லாமல் அது இல்லை.

பின்னால், அது நிலைத்து நிற்கிறது. நாளடைவில் இந்த அக இருள் நம்மில் ஒரு பகுதியாகவே மாறி  விடுகிறது.

பின், அது பொங்குகிறது. அறியாமை நாளும் வளர்கிறது. முட்டாள் தனத்திற்கு எல்லை ஏது.

இப்படி சார்ந்து, நின்று பொங்கும் அக இருளை நீக்க வந்த நூல் பெரிய புராணம்.

அக இருள் போக வேண்டும் என்றால், இந்த நூலைப் படியுங்கள் என்கிறார் தெய்வப் புலவர்.

அது வெறும் அடியவர்களின் வரலாற்று நூல் அல்ல. நமக்கு வேண்டிய அறிவை அள்ளி அள்ளி   தரும் நூல்.

நேரமிருப்பின், படித்துப் பாருங்கள்.

அக இருள் நீங்கும். அறிவு ஒளி வீசும்.



Thursday, January 8, 2015

பெரிய புராணம் - அலகில் சோதியன்

பெரிய புராணம் - அலகில் சோதியன் 


இறைவன் இருக்கிறானா என்ற சர்ச்சை இருந்து கொண்டே  இருக்கிறது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இறைவன் இருக்கிறான் என்று நம்பிய பெரியவர்கள் அவனை சொல்லுவதற்கு படாத பாடு படுகிறார்கள்.

நாம் அறிவியல் படிக்கும் போது எதை ஒன்றை அறிந்து கொள்ள வேண்டுமென்றாலும் அதற்கு ஒரு அளவு வேண்டும். அளவை கண்டு கொள்ள ஒரு அலகு (unit ) வேண்டும்.

நேரம் என்றால் நொடி, வினாடி,  நிமிடம்,மணி
தூரம் என்றால் மில்லி மீட்டர், மீட்டர், கிலோ மீட்டர்
எடை என்றால் கிராம், கிலோ கிராம்

இப்படி எதை எடுத்தாலும் அதற்கு என்று ஒரு அலகு உண்டு.

இறைவனை எப்படி அளந்து சொல்லுவது ?

இவ்வளவு உயரம், இவ்வளவு எடை, இன்ன நிறம், என்று ஒன்று இருந்தால் சொல்லி விடலாம்.

மனிதனின் அளவுக்குள் அடங்குபவனா அவன் ?

எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை...

தெய்வப் புலவர் சேக்கிழார் சொல்லுகிறார்

"அலகில் சோதியன்" அலகு என்று ஒன்று இல்லாதவன். அவனை எந்த விதத்திலும் அளந்து சொல்ல முடியாது.


பாடல்

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

அலகில்லாத ஒன்றை உங்களால் சிந்திக்க முடியுமா ?

எதை அளக்க முடியுமோ  அது இறை அல்ல.

சிலை, படம், இவை எல்லாம் அளந்து செய்தது.

அவன் அலகில் சோதியன்


Thursday, December 11, 2014

பெரிய புராணம் - ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன்

பெரிய புராணம் - ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் 


நமக்கு வாய்த்தது மாதிரி குருமார்கள் யாருக்கு வாய்த்து இருக்கிறார்கள் ?

சம்பவாமி யுகே யுகே என்றான் கண்ணன்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் நமக்கு நிறைய குருமார்கள் கிடைத்திருக்கிறார்கள்.

ஏனோ நாம் தான் அவர்கள் சொல்வதை எல்லாம் அறியாமலேயே, அறிந்தாலும் சரியாக புரிந்து கொள்ளாமலும், வாதம், எதிர்வாதம், குதர்க்கம் பேசியும் அவர்கள் சொன்ன நல்லதையெல்லாம் இழந்து நிற்கிறோம்.

அவர்கள் திருவருள் பெற்றார்கள். பெற்றவரை நல்லது என்று சுயநலத்தோடு இல்லாமல், பின் வரும் சந்ததியினரும் வாழ வேண்டும் என்று அவற்றை சொல்லி வைத்து விட்டுப் போனார்கள்.

நம் துர்பாக்கியம், அவற்றை எல்லாம் நாம் அறியாமலேயே போனது.

புதையலின் மேல் அமர்ந்து பிச்சை எடுக்கும் பிச்சைகாரானைப் போல இருக்கிறோம்.

திருநாவுக்கரசர் !

இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது நமக்கு பிரமிப்பு ஏற்படுகிறது.

வழி தவறிப் போய் இருக்கிறார்.

இளைய தலைமுறையினர் பல வழி தெரியாமல் செல்வதைப் போல அவரும் இளமையில் வழி தவறி சென்றிருக்கிறார்.

இறைவன் இல்லை, என்று நாத்திகம் பேசி இருக்கிறார். சிவ நிந்தனை செய்திருக்கிறார்.  தான் பிறந்த சைவ சமயத்தை விடுத்து சமண சமயத்தில் சேர்ந்து , சமண மத பிரச்சாரம் செய்து இருக்கிறார்.

ஏதோ கொஞ்ச காலம் இல்லை...நீண்ட காலம்.

பின் உண்மை உணர்ந்து, மீண்டும் சைவ சமயம் வந்து சேர்கிறார்.

சிவ நிந்தனை செய்த அவருக்கு "திருநாவுக்கரசர்" என்ற பட்டத்தை சிவனே

கொடுத்தான்.

அவர் பாடிய பாடல்களை தேவாரம் என்று சைவ சமயம் கொண்டாடுகிறது.

இன்று அகிம்சை என்பது ஏதோ காந்தி கண்டு பிடித்தது என்று நாம்  நினைக்கிறோம்.

அன்பால், பக்தியால் அரசனை எதிர்த்து வென்றவர் அப்பர் என்ற திருநாவுக்கரசர்.

அகிம்சை என்றால் கோழைத்தனம் இல்லை. "யாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் " என்று வீர முழக்கம் செய்தவர் அவர்.

இறைவன் நேரில் வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது " எதுவும் வேண்டி  பக்தி செய்யவில்லை..." என்று இறைவனிடமே சொன்னவர் அவர்.

காதலையும், ஏன் காமத்தையும்  போற்றினார். ஆண் பெண் இன்பத்தின் உயர்வை சிறப்பித்துப் பாடினார்.

வாருங்கள், அவரின் வாழ்க்கையை அறிவோம்.

அவர் சொன்னவற்றை கேட்போம்.

கொட்டிக் கிடக்கிறது செல்வம். அள்ளிக் கொண்டு போங்கள். அள்ள அள்ள குறையாத செல்வம் இது.

திருநாவுகரசைப் பற்றிப் சொல்ல வந்த சேக்கிழார் இப்படி ஆரம்பிக்கிறார்.

உலகில் ஒரு நாவாலும் (ஒருவராலும்) சொல்ல முடியாத புகழ் உடைய அவரைப் பற்றி நான் சொல்ல நினைக்கிறேன் என்று அடக்கத்தோடு ஆரம்பிக்கிறார்.

பாடல்

திருநாவுக் கரசு, வளர் திருத்தொண்டி னெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர், வாய்மைதிகழ்
பெரு நாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகி
லொருநாவுக் குரைசெய்ய வொண்ணாமை யுணராதேன்.

சீர் பிரித்த பின்

திரு நாவுக்கரசு, வளர் திருத் தொண்டின் நெறி வாழ 
வரு ஞானத் தவ முனிவர் வாகீசர், வாய்மை திகழ்
பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன்  பேருலகில் 
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் 

பொருள்

திரு நாவுக்கரசு, = திரு நாவுக்கரசு

வளர் = வளர்ந்த, வளர்கின்ற, வளரும். இந்த உலகம் அறியாமை, ஆணவம், என்ற சேற்றில் அமிழ்ந்து கிடைக்கிறது. அதில் இருந்து முளைத்து வளர என்பது பொருள். துன்பத்தில், அறியாமையில் கிடந்து மக்கிப் போய் விடாமல், வளரும் படி என்று கொள்க.

திருத் தொண்டின் = சிறந்த திருத் தொண்டின்

நெறி வாழ = வழி முறைகள் வாழ

வரு = வந்த . நெறிகள் வாழ என்று பொருள். இன்னொரு பொருள், அந்த நெறியில் வாழ்ந்து வழி காட்டிய ஞான தவ முனிவர் என்பது இன்னொரு பொருள். சொல்லுவது எளிது. செய்வது கடினம். அப்பர் அந்த நெறியில் வாழ்ந்து வழி காட்டினார்.

ஞானத் = ஞானமும்

தவ  = தவமும்

முனிவர் = கொண்ட முனிவர்

வாகீசர், = வாகீசர் (வாகீசர் என்பது திருநாவுக்கரசரின் முந்திய பிறப்புப்  பெயர்)

வாய்மை திகழ் = வாய்மை திகழ

பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன்  = அவருடைய பெருமையை எல்லோரிடமும் பரப்ப நினைக்கின்றேன்

பேருலகில் = பெரிய உலகில்

ஒரு நாவுக்கு உரை செய்ய = ஒரு நாவாலும் உரை செய்ய

ஒண்ணாமை உணராதேன் = முடியாமையை உணராத நான்





Saturday, March 22, 2014

பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார்

பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார் 


இவ்வம்மையார் காரைக்காலில் உதித்ததால் இப்பெயர் பெற்றார். இவருடைய இயற்பெயர்  புனிதவதி.

அற்பத்து மூன்று நாயன்மார்களில் 3 பெண்கள். அவர்களில் இவர்  ஒருவர்.

அவர், பரமதத்தன் என்பவரை மணந்து இல்லறம் நடத்தி  வந்தார்.

ஒரு நாள் பரம தத்தனின் கடைக்கு வந்த வணிகர்கள் அவரிடம் இரண்டு மாங்கனிகளை தந்தனர். அவரும், அதை தன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த கனிகளை பெற்றுக் கொண்ட புனிதவதியார், மதியம் கணவன் உணவு உண்ண வரும்போது தரலாம் என்று அதை வைத்து  இருந்தார்.

அப்போது பசியோடு ஒரு சிவனடியார் வந்தார்.

புனிதவதி அவருக்கு ஒரு மாங்கனியை உணவாக  கொடுத்தார்.

பின், பரமதத்தன் உணவு உண்ண அந்த போது , மீதி இருந்த ஒரு மாங்கனியை அவருக்கு கொடுத்தார். அதன் சுவை மிக நன்றாக இருக்கவே, அவர் இன்னொரு மாங்கனியும் வேண்டும் என்று கேட்டார்.

புனிதவதியார், இறைவனை வேண்ட, சிவன் அருளால் அவருக்கு ஒரு மாங்கனி கிடைத்தது.

அதை பரமதத்தனுக்கு கொடுத்தார்.

இரண்டாவது மாங்கனியின் சுவை மிக மிக இனிமையாக இருக்கவே, இது ஏது என்று கணவன் கேட்ட போது பொய் உரைக்காமல் இறை அருளால் மாங்கனி கிடைத்ததை  கூறினார்.

பரமதத்தன் நம்பவில்லை. அப்படியானால் இன்னொரு மாங்கனி இறைவனிடம் கேட்டு  பெற முடியுமா என்று கேட்டான்.

அம்மையாரும் அவ்வாறே இறைவனை வேண்டி இன்னொரு மாங்கனி பெற்றுத்  தந்தார்.

பரமதத்தன் மிரண்டு போனான்.

இந்தப் பெண் தெய்வாம்சம் நிறைந்த பெண் என்று எண்ணி, வேறு ஊருக்கு சென்று இன்னொரு பெண்ணை மணந்து  வாழ்ந்து வந்தான்.

இதை அறிந்த புனிதவதியார் அந்த ஊருக்கு உறவினர்களோடு  சென்றார்.

அப்போது, பரமதத்தன் புனிதவதியின் காலில் விழுந்து ஆசி வேண்டினான்.

கணவன் தன்னோடு வாழ மாட்டான் என்று அறிந்து, இனி இந்த இளமையும் அழகும் தேவை இல்லை என்று எண்ணி, இறைவனை வேண்டி, உடலில் உள்ள தசைகளை துறந்து பேய் வடிவம் பெற்றார்.

அதைச் சொல்ல வந்த தெய்வப் புலவர் சேக்கிழார்



ஈங்கிவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்காகத்
தாங்கிய வனப்புநின்ற தசைப்பொதி கழித்து இங்கு உன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடிவு அடியேனுக்குப்
பாங்குற வேண்டும் என்று பரமர்தாள் பரவி நின்றார். 

பொருள்

ஈங்கிவன் = இங்கு இவன் (கணவன்)

குறித்த கொள்கை = கொண்ட கொள்கை . அதாவது, புனிதவாதியான தன்னை ஒரு தெய்வப் பெண் என்று அவன் நினைத்த கொள்கை

இது = இந்த உடல்

இனி = இனிமேல்

இவனுக்காகத் = கணவனுக்காகத்

தாங்கிய = பெற்ற, கொண்ட

வனப்பு நின்ற= அழகு நின்ற

தசைப்பொதி = தசை என்ற சுமை

கழித்து = கழித்து, விடுத்து

இங்கு உன்பால் = இன்று உன்னிடம்

ஆங்குநின் தாள்கள் = அங்கு (கைலாய மலையில் ) உன் திருவடிகளை

போற்றும் = வணங்கும்

பேய்வடிவு = பேய் வடிவம் (பூத கணங்கள் )

அடியேனுக்குப் = அடியவனாகிய எனக்கு (புனிதவதியாருக்கு)

பாங்குற வேண்டும் = அழகுடன் வேண்டும்

என்று பரமர்தாள் பரவி நின்றார் = என்று இறைவனின் திருவடிகளை போற்றி  நின்றார்.

இவர்  இயற்றிய பாடல்கள் :

1. அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள்,
2. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (22 பாடல்கள்),
3. திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள் ஆகும்.

தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரம்,தேவாரப் பதிகங்கள் அமைந்தன.

தமிழ் பாடல்களை இசை வடிவில் பாடியதில் இவரே முதன்மை  பெறுகிறார்.

நேரம் இருப்பின், இந்த மூல நூல்களைப் படித்துப் பாருங்கள். 

அற்புதமான பாடல்கள். 


Monday, March 17, 2014

பெரிய புராணம் - வாய் மலர்ந்து அழுத

 பெரிய புராணம் - வாய் மலர்ந்து அழுத 


அழுவது ஒரு அழகா ?

அழகுதான் என்கிறார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

திரு ஞான சம்பந்த நாயனாரை அறிமுகப் படுத்தும் முதல் பாடல்.

ஞான சம்பந்தர் என்ற குழந்தை அழுததாம்.

எதற்கு அழுதது ?

பசித்து பாலுக்கு அழவில்லை....பின் எதற்கு அழுதது ?

வேத நெறி தழைத்து ஓங்கவும்,
சைவத் துறை விளங்கவும்,
பூதப் பரமபரை பொலியவும்

ஞான சம்பந்தர் என்ற குழந்தை வாய் மலர்ந்து அழுதது.

பாடல்

வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் 
 பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
 சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
 பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம் 

பொருள்

வேத நெறி = வேதங்களில் சொல்லப் பட்ட நெறிகள்

தழைத்து ஓங்க = தழைத்து ஓங்க

மிகு = மிகுந்த

சைவத் துறை விளங்கப் = சைவத் துறை விளங்க

பூத பரம்பரை = பூதப் பரம்பரை என்றால் இந்த அனைத்து உயிர்களும்

பொலியப் = சிறப்புடன் வாழ

புனித வாய் = புனிதம் நிறைந்த வாய்

மலர்ந்து அழுத = மலர்ந்து அழுத

சீத = குளிர்ந்த

வள = வளமையுள்ள

வயல்= வயல்கள்

புகலித் = சீர்காழி என்ற ஊரில்

திருஞான சம்பந்தர் = திருஞான சம்பந்தர்

பாத மலர் = பாதம் என்ற மலரை

தலைக் கொண்டு = தலையில் சூடிக் கொண்டு

திருத் தொண்டு பரவுவாம் = உயர்ந்த தொண்டை பரப்புவோம்

 
வேத நெறி தழைத்து ஓங்க .....மனிதன் பொல்லாதவன். நல்லது எதைத் தந்தாலும்  அதை குழப்பி, தானும் குழம்பி, அதை தன் சுயநலத்துக்கு பயன் படுத்திக்  கொள்வான். இதனால், மற்றவர்கள் எது சரி எது தவறு என்று குழம்புவார்கள்.  குரங்கு கை பூமாலை போல, எதை தந்தாலும் தன் குற்றங்களை அதில்  ஏற்றி, தன் சாமர்த்தியத்தை காட்டுகிறேன் என்று பாலில் நஞ்சைக் கலக்கும்  வேலையில் அவன் தேர்ந்தவன். இதனால் , உயர்ந்த  கோட்பாடுகளில்  களைகள் சேர்ந்து விடுகின்றன. உண்மை எது பொய் எது என்று தெரியாத குழப்பம்  வருகிறது. களைகளை நீக்கி , வேத நெறிகள் தழைத்து ஓங்கவும். 



சைவத் துறை விளங்கவும்: சமயம் என்ற ஆறு இறைவன் என்ற கடலை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறது. அந்த ஆற்றில் பல கிளைகள். ஒவ்வொரு  கிளைக்கும் பல துறைகள்  உள்ளன.அதில் சைவத் துறை விளங்க அவர்  மலர் வாய் திறந்து அழுதார். 

பூதப் பரம்பரை பொலிய : சைவத் துறை என்றால் அது சைவர்களுக்கு மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்கும் அது பொது. மனிதர்களுக்கு மட்டும் அல்ல, எல்லா உயிர்களுக்கும்  பொது அது. எனவே பூதப் பரம்பரை பொலிய என்றார். எல்லா உயிர்களும்  சிறந்து வாழ வேண்டும் என்ற அளவற்ற கருணை. 

புனித வாய்: பார்வதியிடம் ஞானப் பால் உண்பதற்கு முன்பே அது புனித வாய் என்றார். விட்ட குறை தொட்ட குறை என முன் பிறப்பில் கொண்ட இறை உணர்வு  கொண்டு  பிறந்தார்.

Monday, November 4, 2013

பெரிய புராணம் - இறைவனைக் காண எத்தனை காலம் ஆகும்

பெரிய புராணம்  - இறைவனைக் காண எத்தனை காலம் ஆகும் 


இறைவன் இருக்கிறானா இல்லையா என்று வாதித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு புறம் இருக்கட்டும்.

இறைவன் இருக்கிறான் என்று வைத்துக் கொண்டால் அவனை காண எத்தனை ஆகும் ?

ஒரு பிறவி ? பல பிறவி ?

அவனைக் காண என்ன என்ன செய்ய வேண்டும் ?

ஞானம் வளர்க்க வேண்டும் ? தான தருமங்கள் செய்ய வேண்டும் ? பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டும் ? தவம் செய்ய வேண்டும் ?


அவ்வளவு எல்லாம் வேண்டாம்...

ஆறே நாள்...தொடங்கிய ஆறே நாளில் இறைவனை கண்டார் கண்ணப்ப நாயனார்.

பெரிய ஞானி இல்லை. தானமும் தவமும் செய்யவில்லை. படிப்பறிவு கிடையாது.

புலால் உண்பார்.

உயர் குலப் பிறப்பு கிடையாது.

நாவுகரசருக்கும், மணிவாசகருக்கும் நாள் ஆனது.

கண்ணப்ப நாயனார் ஆறே நாளில் இறைவனை அடைந்தார்.

அவர் இறைவனை அடைந்தார் என்பதை விட இறைவன் அவரை வந்து அடைந்தார்.

கண்ணப்ப நாயனார் வாழ்க்கையைப் பற்றி தெய்வப் புலவர் சேக்கிழார் சொல்கிறார். அதில் இருந்து சில பாடல்கள்.

கண்ணப்ப நாயனாரின் பெட்ரோர் பற்றிய பாடல்

பாடல்


பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
 குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலை நின்றுள்ளான் 
 வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான்

 மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள்

பொருள் உரை

தவம் முற்பிறப்பில் செய்தவனாயினும் (கண்ணப்ப நாயனாரின் தந்தை நாகன்), இந்தப் பிறவியின் சார்பால் குற்றம் செய்வதையே குணமாகக் கொண்டு வாழ்ந்தான். சிங்கம் போல கோபம் உள்ளவன். விற் தொழிலில் வல்லவன். அவன் மனைவி தத்தை என்பவள்.

பொருள்


பெற்றியால் = தன்மையால்

தவமுன் செய்தான் ஆயினும் = முற் பிறப்பில் தவம் செய்தவனாயினும். ஏன் முற்பிறப்பில் தவம் செய்தான் என்று கூறுகிறார் ? இந்தப் பிறவியில் ஒன்றும் செய்ய வில்லை என்று தெரிகிறது. ஆனால், கண்ணப்ப நாயனார் போன்ற சிறந்த மகனை பெற்று எடுத்ததால் அவன் முற்பிறப்பில் தவம் செய்திருக்க வேண்டும் என்று கொள்கிறார் சேக்கிழார்.

பேற்றைத் தவம் சற்றும் செய்யாத என்னை, பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா  என்பார் அருணகிரி


பிறப்பின் சார்பால் = (வேடுவர் குலத்தில் வந்து பிறந்த ) பிறப்பின் சார்பால்


குற்றமே குணமா வாழ்வான் = குற்றங்கள் செய்வதையே குணமாகக் கொண்டு வாழ்வான். உயிர் கொலை புரிவது குற்றம்.

கொடுமையே தலை நின்றுள்ளான் = கொடுமை செய்வதில் சிறந்து விளங்கினான்

வில் தொழில் விறலின் மிக்கான் = வில் தொழில் சிறந்து வெற்றி பெற்று நின்றான்

வெஞ்சின = வெம்மையான சினம் கொண்ட 

மடங்கல் = சிங்கம்

போல்வான் = போன்றவன்


மற்றவன் = அவனுடைய

குறிச்சி = குறிஞ்சி

வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் = வாழ்க்கை மனைவியும் தத்தை என்று சொல்பவள்.





Saturday, November 2, 2013

பெரிய புராணம் - நா அடங்கா முன்னம்

பெரிய புராணம்  - நா அடங்கா முன்னம் 



தாத்தா படுக்கையில் படுத்திருக்கிறார்.  ரொம்ப முடியவில்லை. தாகமாக இருக்கிறது. பசிக்கிறது. வயதாகி விட்டது என்பதற்காக பசியும் தாகமும் போயா விடுகிறது.

கொஞ்சம் கஞ்சி கொடு, தவிக்கிறது கொஞ்சம் தண்ணி தா என்று கேட்க்க நினைக்கிறார்...நாக்கு நடுங்குகிறது. பேச்சு வரவில்லை. எப்படி சொல்லி, என்ன கேட்பார். கேட்டால் கிடைக்கும். கேட்க முடியவில்லை.

பேசிய நாக்குதான்...இன்று பேச்சு வரவில்லை....

அப்படி ஒரு நாள் வருவதற்கு முன், அவன் பெயரை சொல்லிக் கொண்டிரு. பின்னாளில் சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்தால் தண்ணி கேட்க்கக் கூட நாக்கு உதவாமல் போகலாம்...அவன் பெயரை எங்கே சொல்வது....

 அப்போதைக்கு இப்போதே சொல்லி வையுங்கள்

பாடல்

கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்றுநடுநடுத்து நாவடங்கா முன்னம் - பொடியடுத்தபாழ்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.

பொருள்

கடுவடுத்த நீர்கொடுவா = கடுக்காய் என்று ஒரு காய் உண்டு. அதை தண்ணீரில் போட்டு வைப்பார்கள். அதற்க்கு சில மருத்துவ குணங்கள் உண்டு. அந்தத் தண்ணீரை கொண்டு வா

 காடி தா = காடி என்றால் புளித்த கஞ்சி. அதை கொண்டு வா 

என்று = என்று

நடுநடுத்து நாவடங்கா முன்னம் = சொல்லுவதற்குள், நாக்கு நடுங்கி சொல்ல முடியாமல் போவதற்கு முன்


பொடியடுத்த = பொடி என்றால் சாம்பல். சாம்பல் நிறைந்த

பாழ் கோட்டஞ் = பாழடைந்த கோட்டை (இடு காடு )

சேரா முன் = சேர்வதற்கு முன்னால்

பன் மாடத் = பல மாடங்கள் கொண்ட

 தென் குடந்தைக் = குடந்தைக்கு தென் புறம் உள்ள

கீழ்க்கோட்டஞ் = கீழ் கோட்டம் என்ற ஊரில் உள்ள அவன் பெயரை 

செப்பிக் கிட = சொல்லிக் கொண்டிரு

என்னடா இவன், நாளும் கிழமையுமாய் இந்த மாதிரி பாடலை எழுதுகிறானே என்று நினைப்பவர்களுக்கு ....

பயத்தில் பெரிய பயம் மரண பயம்.

அந்த பயத்தை வென்று விட்டால் வாழ்வில் வேறு எந்த பயமும் வராது.

பயப்படும் விஷயத்தை கண்டு ஓடினால் பயம் மேலும் அதிகம் ஆகும்.

இந்த நன் நாளில், எல்லா பயன்களும் உங்களை விட்டு ஓட, இந்த பாடல் அடிகோலட்டும்

"நாமங்கள் நவின்றேலோர் எம்பாவாய்"



Sunday, August 18, 2013

பெரிய புராணம் - தொழுது வென்றார்

பெரிய புராணம் - தொழுது வென்றார்


http://interestingtamilpoems.blogspot.in/2013/08/blog-post_17.html

இதற்கு முந்தைய ப்ளாகின் தொடர்ச்சி.

முத்தநாதன், கையில் உள்ள ஓலைச் சுவடி கட்டுக்குள் கத்தியை மறைத்து வைத்து கொண்டு வந்தான்.

மெய் பொருள் நாயனார் அவருடைய அரண்மனை காவலர்களிடம் சிவனடியார் என்று யார் வந்தாலும் அவர்களை தடுக்காமல் உள்ளே விட வேண்டும்  என்று.

முத்தநாதன், மெய் பொருள் நாயானார் இருக்கும் படுக்கை அறைக்கே வந்துவிட்டான். நாகரீகம் இல்லாதவர்கள், ஒரு வசதி இருந்தால் அதை எப்படி எல்லாம் தவறாக பயன்படுத்துவார்கள் என்பதற்கு இது ஒரு  உதாரணம்.

வந்தவன், சிவாகம இரகசியங்கள் உள்ள நூல் ஒன்று எனக்கு கிடைத்து இருக்கிறது. அதை தங்களுக்கு உணர்த்த அதை கொண்டு வந்துள்ளேன் என்றான்.

அவரும்,கண் மூடி, வாய் பொத்தி , அடக்கமாக அதை கேட்க  அமர்ந்தார்.

அந்த சமயத்தில், ஓலைச் சுவடிகள் வைத்து இருந்த கத்தியை எடுத்து மெய் பொருள் நாயனாரை கொன்றான்.

தெய்வப் புலவர் சேக்கிழார், கொன்றான் என்று  சொல்லவில்லை.கத்தியால் குத்தினான் என்று சொல்லவில்லை.

தீய செயல்களை, தவறான செயல்களை விவரித்து சொல்லக்  கூடாது. அப்படி சொன்னால், அறியாதவர்கள் கூட அதை செய்ய அது ஒரு தூண்டுதலாய் இருக்க முடியும்.

இன்றைய உலகில்  பார்க்கிறோம்,  தீமைகளும்,தவறுகளும் மிக மிக  தெளிவாக, விரிவாக செய்தித்  தாள்களிலும்,  நாவல்களிலும், சினிமாவிலும்  காட்டப்   படுகிறது.

இவற்றைப்  படிப்பவர்கள்,பார்பவர்கள் நாளடைவில் குற்றங்கள் மற்றும் தீய செயல்களைப் பற்றி அதிர்ச்சி கொள்வது  குறையும். அவை சாதாரணமான விஷயங்களாக  மாறும். செய்தால் ஒன்றும் தவறு இல்லை என்ற எண்ணம் தோன்றும்.

சேக்கிழார் சொல்கிறார் "தான் முன் நினைத்தபடி செய்தான்" . அவ்வளவு தான்.
சதக் சதக் என்று குத்தினான், குபுக் குபுக் என்று இரத்தம் வந்தது என்று அந்த குற்றத்தை விவரிக்காமல் நாசூக்காக சொல்லி  விடுகிறார்.


மெய் பொருள்

கைத்தலத்து இருந்த வஞ்சக்
     கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று    
     புரிந்துஅவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
     நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
     பொருள்எனத் தொழுது வென்றார் 

பொருள்

கைத்தலத்து = கையில் இருந்த

இருந்த = இருந்த

வஞ்சக் கவளிகை =  வஞ்சகமான சுவடிக் கட்டை

மடிமேல் வைத்துப் = மடிமேல் வைத்து

புத்தகம் அவிழ்ப்பான் போன்று = புத்தகம் அவிழ்ப்பான் போன்று
   
புரிந்து = செயல் புரிந்து

அவர் வணங்கும் போதில்  = அவர் வணங்கி இருந்த போது

பத்திரம் =  கத்தி, உடை வாள்

வாங்கித் = எடுத்து

தான்முன்  நினைந்த = தான் முன்பு நினைத்த

அப் பரிசே செய்ய = அந்த எண்ணத்தை செய்ய

மெய்த்தவ வேட மே = மெய் தவ வேடமே

மெய்ப் பொருள்எனத் தொழுது = மெய் பொருள் என தொழுது

வென்றார்  = வென்றார்

அவர் கத்தியால் குத்துப் பட்டு  இறந்தார். ஆனால் சேக்கிழார் சொல்கிறார் - அவர் வென்றார் என்று. 

கொண்ட கொள்கையில்  நிற்பது, அதற்காக உயிரையும் கொடுப்பது தோல்வி  ஆகாது.

அதுதான்  வெற்றி.

நம்பிக்கை - ஒரு மிகப் பெரிய  சக்தி. 

இலக்கியங்கள், நம் மனதில் நல்ல விதைகளை நாளும் விதைக்கின்றன.   என்றைய விதை  நம்பிக்கை.



Saturday, August 17, 2013

பெரிய புராணம் - மை பொதி விளக்கு

பெரிய புராணம் - மை பொதி விளக்கு 


முடிவுகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறதா ?

கொள்கைக்காக உயிர் துறப்பது வெற்றியா, தோல்வியா ?

நாட்டுக்காக ஒருவன் போராடி உயிர் துறக்கிறான். அவன் வென்றவனா ? தோற்றவனா ?

ஒரு மாணவன் மிகுந்த கவனத்தோடு, இரவும் பகலும் கண் விழித்து படிக்கிறான்.  ஏதோ ஒரு காரணத்தால் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற முடியவில்லை.ஓரிரு மதிப்பெண்கள் குறைந்து  போகிறது. அவன் வெற்றி பெற்றவனா ? தோல்வி அடைந்தவனா ?

I I t , cut off mark  கிடைக்கவில்லை என்று பிள்ளைகளை நாம்  கோபித்து கொள்கிறோம். பிள்ளைகள் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து இருந்தாலும் மதிப்பெண்கள் வராவிட்டால் எல்லாம் போய் விட்டது என்று கவலைப்  படுகிறோம்.பிள்ளகைளை திட்டுகிறோம்.

 படிப்பு, விளையாட்டு, உத்தியோக உயர்வு என்று  எங்கு பார்த்தாலும் வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று உலகம் மாறி விட்டது.

அது சரிதானா ?

புராணங்கள் நமக்கு வழி  காட்டுகின்றன.

பெரிய புராணத்தில் ஒரு  கதை. மெய் பொருள் நாயனார் என்பவரின் கதை.

மெய் பொருள் நாயனார் என்று  அரசன்  இருந்தார். சிறந்த சிவ பக்தர்.

அடியார்கள் சேவையே தன் சேவை என்று வாழுந்து வந்தவர்

சிவனடியார்களை காண்பதுதான் மெய் பொருள் என்று எண்ணி வாழ்ந்த உத்தமர்.

அவருக்கு ஒரு எதிரி இருந்தான். முத்தநாதன் என்பது அவன்  பெயர். அவன் மெய்பொருள் நாயனாரோடு பல முறை சண்டையிட்டு தோற்றவன்.

அவரை, நேரடி சண்டையில் வெல்ல முடியாது என்று எண்ணி, ஒரு சூழ்ச்சி  செய்தான்.

சிவனடியார் போல் வேடமிட்டு அவருடைய அரண்மனையை அடைந்தான்.

பாடல்

மெய்எலாம் நீறு பூசி
     வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படைக ரந்த
     புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே என்ன
     மனத்தின்உள் கறுப்பு வைத்துப் 
பொய்த்தவ வேடம் கொண்டு
     புகுந்தனன் முத்த நாதன்


பொருள்


Saturday, June 15, 2013

பெரிய புராணம் - திரு ஞான சம்பந்தர்

பெரிய புராணம் - திரு ஞான சம்பந்தர் 


ஞானம் இரு வகைப் படும்.

ஒன்று கற்று அறிவது. இன்னொன்று அனுபவத்தில் வருவது.

இதை பர ஞானம், அபர ஞானம்  சொல்லுவார்கள்.

சில பேருக்கு நன்றாகப் பாட வரும்....குரல் இனிமை இருக்கும், தாள லயம் இருக்கும் ஆனால் இசை பற்றிய ஞானம் இருக்காது.

சில பேருக்கு பாடலை நன்றாக விமர்சிக்கத் தெரியும், ஆனால் பாட வராது.

இரண்டும் சேர்ந்து இருப்பது மிக சிறப்பானது.

சில புத்தகங்களை படித்து விட்டு எல்லாம் அறிந்த மாதிரி பேசுவார்கள். அனுபவ அறிவு இருக்காது.

இந்த இரண்டும் வரப் பெற்றவர் திரு ஞான சம்பந்தர்.

இரண்டு ஞானங்களின் சம்பந்தம், ஒரு பிணைப்பு அவருக்கு இருந்தது.

அதை சொல்ல வந்த தெய்வப் புலவர் சேக்கிழார்....

பாடல்

சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாற்றும் பாங்கினிலோங் கியஞானம்
உவமையிலாக் கலைஞான முணர்வரிய மெய்ஞ்ஞானந்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தர ரந்நிலையில்.


கொஞ்சம் சீர் பிரிப்போம். 

சிவன் அடியே  சிந்திக்கும் திரு பெருகும் சிவ ஞானம் 
பவம் அதனை அற  மாற்றும்  பாங்கில் ஓங்கிய ஞானம் 
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய  மெய்ஞ்ஞானந்
தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தர் அந்த நிலையில் 

பொருள்


Monday, May 13, 2013

பெரிய புராணம் - கடல் வயறு நிறையாத


பெரிய புராணம் - கடல் வயறு நிறையாத 



காவிரி ஆறு கிளை கிளையாக பிரிந்து வரும் வழியில் உள்ள வயல்களை எல்லாம் வளம் செய்து , தன்னிடம் உள்ள நீரை எல்லாம் வாரி வழங்கி கடைசியில் கடலுக்கு வரும் போது ஒன்றும் இல்லாமல் வந்து சேர்கிறது ....ஏன் தெரியுமா ?

எருதின் மேல் வரும் சிவனுக்கு அமுது அளிக்காமல் விஷம் தந்ததால், எவ்வளவு போட்டாலும் வயறு நிறையாத கடலுக்கு ஒன்றும் தர வேண்டாம் என்று நினைத்து காவிரி தன் இடம் உள்ளது எல்லாம் உலக்குக்கு வழங்கி விட்டது...

பாடல்

தட நிலை மாளிகைப் புலியூர் தன்னில் உறைந்து இறைஞ்சிப் போய்
'அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே
விடம் அளித்தது' எனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே
கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார்.

பொருள்




Saturday, March 23, 2013

பெரிய புராணம் - ஏங்குவதும் இரங்குவதும்


பெரிய புராணம் - ஏங்குவதும் இரங்குவதும் 


திருநாவுகரசர் பிறந்த ஊர் திருவாமூர். 

அந்த ஊரில் சில வருத்ததோடு இருந்தன. சில பரிதாபமாக இருந்தன. இன்னும் சில ஊரை விட்டே ஓடி விட்டன. 

என்ன ஊரு இது இல்ல ? இப்படி ஊரா ?

கொஞ்சம் பொறுங்கள்...அதெல்லாம் எது எதுன்னு பார்த்துரலாம்....

அந்த ஊரில் வருந்துவன பெண்களின் இடைகள். அந்த ஊரில் உள்ள பெண்களின் மார்புகளின் பாரம் தாங்காமல்  அவர்களின் சின்ன இடைகள் ரொம்ப வருத்தப் பட்டனவாம்....இவ்வளவு பெரிய பாரத்தை எப்படி சுமப்பது என்று....

அவர்கள் இடையில் புனையும் மேகலைகள் பாவமாய் இருந்தனவாம்....நாளும் மெலியும் இடையில் தொங்கிக் கொண்டு இருப்பதால்.....

அந்த ஊரை விட்டு தீமை விலகி ஓடி விட்டதாம்...

பாடல் 

 ஆங்குவன முலைகள்சுமந் 
   தணங்குவன மகளிரிடை
ஏங்குவன நூபுரங்கள் 
   இரங்குவன மணிக்காஞ்சி 
ஓங்குவன மாடநிரை 
   யொழுகுவன வழுவிலறம்
நீங்குவன தீங்குநெறி 
   நெருங்குவன பெருங்குடிகள். 


பொருள் 

ஆங்கு = அங்கு 

வன = வனப்பான 

முலைகள் = மார்பகங்களை 

சுமந்தணங்குவன = சுமந்து + அணங்குவன = அணங்குதல் என்றால் வருந்துதல். 

மகளிரிடை = பெண்களின் இடை 

ஏங்குவன = சப்த்தம் போடுவன 

நூபுரங்கள் = அவர்கள் அணிந்த காலில் உள்ள கொலுசுகள் 
 
இரங்குவன = பரிதாபத்திற்கு உரியன 

 மணிக்காஞ்சி  = அவர்கள் இடையில் அணியும் மேகலை போன்ற ஆபரணம். 

ஓங்குவன = உயர்ந்து இருப்பன 

மாட = மாடங்கள் 

நிரை  யொழுகுவன = சிறந்தபடி செல்வது 

வழுவிலறம் = வழு இல்லாத அறம் 

நீங்குவன = அந்த ஊரை விட்டு செல்பவை 

தீங்குநெறி = தீய நெறிகள் 
 
நெருங்குவன = நெருங்கி இருப்பவை 

பெருங்குடிகள். = உறவினர்கள் 

பெண்களின் இடையைத் தவிர யாருக்கும் கவலை இல்லை. 

அவர்களின் மணிமேகலை தவிர யாரும் பரிதாபப் படும் நிலையில் இல்லை. 

அது ஊரு . அங்க போவோமா ? அந்த ஊரில் தீ சைட்டுகள் இருக்கும் போல இருக்கே...ஒரு ரவுண்டு போயிட்டு வருவோமா ?


Thursday, March 21, 2013

பெரிய புராணம் - திருநீலகண்டர் - 5


பெரிய புராணம் - திருநீலகண்டர் - 5


வாழ்க்கை எப்படியோ ஓடி விடுகிறது. சரியா தவறா என்று அறிந்து கொள்வதற்குள் வாழ்க்கை வேகமாக ஓடி விடுகிறது. இப்படி செய்திருக்கலாமோ, அப்படி செய்யாமல் இருந்திருக்கலாமோ என்று நினைத்து வருத்தப்படத்தான் முடிகிறது. மீண்டும் வாழ ஒரு வாய்ப்பு கிடைப்பதில்லை.

நினைத்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையை ஒரு 30 வருடம் பின்னோக்கி சென்று அங்கிருந்து மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் என்று ? 

ஒரு வேளை நீங்கள் இதே வாழ்க்கையை மீண்டும் கூட வாழலாம்....இருந்தாலும் 30 வருட இளமை கிடைக்குமே...எவ்வளவு  நன்றாக இருக்கும் ?


திருநீலகண்டருக்கும் , அவர் மனைவிக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. 

திருநீலகண்டரும் அவர் மனைவியும் ஒருவரை ஒருவர் தொடாமல் வாழ்ந்து ஆண்டு பல ஆகி விட்டது....வடிவுறு மூப்பும் வந்து சேர்ந்தது. உடல் தளர்ந்து விட்டது.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். மனதிற்குள் தாங்கள் செய்தது சரியா தவறா என்ற கேள்வி  எழுந்திருக்கும். 

என்ன செய்வது. வாழ்க்கை ஓடி விட்டது. இளமை போய் விட்டது. வா என்றால் வருமா ?


அப்படி இருக்கும் போது ஒருநாள், சிவன் ஒரு அடியார் போல் அவர்கள் வீட்டுக்கு வந்தார். திருநீலகண்டரும் அவர் மனைவியும் அவருக்கு   வேண்டிய உபசாரங்கள் செய்தார்கள். அந்த அடியார்  போகும் போது , ஒரு பாத்திரத்தை கொடுத்து அதை பத்திரமாக வைத்திருக்கும்படி சொல்லிவிட்டு போனார்.

சிறிது நாள் கழித்து அவர் மீண்டு வந்து கேட்டபோது, அந்த பாத்திரம் காணவில்லை. 

திருநீலகண்டர், தொலைந்துபோன அந்த பாத்திரத்திற்கு பதிலாக வேறு ஒரு பாத்திரம்  தருவதாக சொன்னார். அடியவர் (சிவன்) கேட்கவில்லை.

"நீர் அந்த பாத்திரத்தை வேண்டும் என்றே எடுத்துக் கொண்டீர் " அப்படி இல்லையென்றால், உன் மகன் மீது சத்தியம் செய்   என்றார். 

எனக்கு மகனே இல்லை என்று கூறினார் திருநீலகண்டர். அப்படி என்றால், உன் மனைவியின் கையை  பிடித்துகொண்டு இந்த குளத்தில் மூழ்கி சத்தியம் செய் என்றார்.

அப்போதும், அவர் தங்களுக்குள் நடந்ததை சொல்லவில்லை. ஒரு குச்சியை எடுத்து, அதில் இருவரும் ஆளுக்கு ஒரு  முனையை பற்றிக்கொண்டு குளத்தில் மூழ்கி எழுந்தார்கள். 

எழும்போது பழைய இளமையோடு வந்தார்கள். 

நடுவில் உள்ள நிறைய பாடல்களை தவிர்த்து, அவர்கள் இளமை பெற்று வந்த பாடல் மட்டும் தருகிறேன். 

பாடல் 

 வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவி யாரும் 
 மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்றுத் 
 தேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு பொழியுந் தெய்வப்
 பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற 

பொருள் 

Tuesday, March 19, 2013

பெரிய புராணம் - திருநீலகண்டர் - 4


பெரிய புராணம் - திருநீலகண்டர் - 4


இளமை அழகா ? முதுமை அழகா ?

இளைய பெண் அழகாய் இருப்பாளா ? வயதான கிழவி அழகாய் இருப்பாளா ?

இளமை தானே அழகு ? அதில் ஒன்றும் சந்தேகம் இல்லையே ?

சேக்கிழார் அப்படி சொல்லவில்லை. அழகான, வடிவான மூப்பு என்கிறார்.

திருநீலகண்டரும் அவர் மனைவியும் அப்படி ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமல் பல காலம் வாழ்ந்தனர்.

இளமை போய் விட்டது.

தலை சாய்ந்து விட்டது ? ஏன் ? உடல் சாய்ந்ததால்....கூன் விழுந்ததால். உடலில் ஒரு தளர்வு வந்துவிட்டது.  வலிமை போய் விட்டது.

வயது முதிர்ந்து மூப்பு வந்து விட்டது. ஆனால் அழகாக இருக்கிறார்கள். எப்படி ?

வாழும்போது நிறைவாக வாழ்ந்தால், வயோதிகம் அழகாக இருக்கும். வாழ் நாள் பூராவும் ஏக்கத்திலும், கோபத்திலும், பொறாமையிலும், எரிச்சலிலும், பேராசையிலும் சென்றால்  முதுமை வெம்பி போன பழம் மாதிரி அழகு இல்லாமல் , சுவை இல்லாமல் போகும்.

திருநீலகண்டரும், அவர் மனைவியும் மெய் இன்பம் பெறவில்லை.  அவர்களுக்கு குழந்தை இல்லை.

ஒருவர் மேல் ஒருவர் அன்புடன், இறை பக்தியுடன் வாழ்ந்து வந்ததால், "வடிவுறு மூப்பு " அடைந்தார்கள்.

உடல் வலிமை போனாலும் இறைவன் மேல் கொண்ட அன்பு கொஞ்சம் கூட தளரவில்லை.

 பாடல்


இளமையின் மிக்குளார்கள் இருவரும் அறிய நின்ற
அளவில் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல 
வள மலி இளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து 
தளர்வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்துச் சாயார் 



பொருள் 


Monday, March 18, 2013

பெரிய புராணம் - திருநீலகண்டர் - 3


பெரிய புராணம் - திருநீலகண்டர் - 3


கணவன் மனைவிக்கு நடுவில் ஊடல் வருவது இயற்கை. அதுவே கொஞ்சம் சண்டையாகவும் மாறலாம். என்கூட பேசாதிங்க, என்னை ஒண்ணும் தொட வேண்டாம் என்று மனைவி கோபித்துக் கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எல்லார் வீட்டிலும் நடப்பதுதான்.

கோபத்தில் அந்த அம்மா எம்மை தீண்டாதீர் என்றார். 

அதை தெய்வ வாக்காக கொண்டு, மனைவி "திரு நீல கண்டத்தின் மேல் ஆணை, எம்மை தீண்டாதீர் " என்று சொன்னதால் மனைவியை மட்டும் அல்ல, வேறு எந்த பெண்ணையும் மனதால் கூட தொடுவது இல்லை என்று விரதம் பூண்டார் திருநீல கண்டர்.  

மனைவியும் அப்படி சொல்லிவிட்டாரே தவிர, கணவன் மேல் உள்ள அன்பு துளியும் குறைவில்லை. அவர் இன்னொரு பெண்ணின் வீடு சென்றது குற்றம்தான். கோவித்தது சரிதான். அதுக்காக, அவரிடம் பேசாமல் இல்லை, அவர்க்கு வேண்டியது செய்யாமல் இல்லை....தொடுவதும், தொட்டுக்கொள்வதும் மட்டும் இல்லை. 

கணவன் மனைவிக்கு நடுவில் இந்தத் திரை. வெளியே சொல்ல முடியுமா ? 

ரொம்ப அந்தரங்கமான விஷயம். சேக்கிழாருக்கு சொல்லவும் வேண்டும். விரசத்தை தொட்டு விடவும் கூடாது. 

பாடல் 

கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம் 
பொற்புற மெய் உறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய 
இல் புறம்பு ஒழியாது அங் கண் இருவரும் வேறு வைகி 
அன்புறு புணர்ச்சி இன்மை அயலறியாமை வாழ்ந்தார் 

பொருள் 


Sunday, March 17, 2013

பெரிய புராணம் - திருநீலகண்டர் - 2


பெரிய புராணம் - திருநீலகண்டர் - 2 


காமம் ஆண்களின் மிகப் பெரிய பலவீனம். இது பற்றி புலம்பாத சித்தர்கள் இல்லை. அவர்களின் பலவீனத்தை பெண்கள் மேல் ஏற்றி, பெண்களை வசைபாடி எழுதித் தள்ளி இருக்கிறார்கள். 


பெண்ணாகி வந்தொரு மாயப்பிசாசம் பிடித்திட் டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப் பொருள் பறிக்க
எண்ணா துனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!

என்று பெண்களை மாயப் பிசாசு என்று கூறுகிறார் பட்டினத்தடிகள். 

பெண்ணாசையால் அழிந்தான் இராவணன். இந்திரன் கதையும் , சந்திரன் கதையும் அதுதான். 

ஒருவனுக்கு ஒருத்தி என்பதை ஒழுக்க நெறியாக கொண்ட தமிழர் சமுதாயத்திலும் பொது மகளிர், வரைவின் மகளிர் என்ற அங்கம் திருவள்ளுவர் காலம் தொட்டு இருந்திருக்கிறது. தொல்காப்பியர் இந்த பெண்களைப் பற்றி கூறுகிறார், அருணகிரிநாதர் கூறுகிறார், கம்பர் பாடி இருக்கிறார்....

தவறுவது மனித இயல்பு. தவறை உணர்ந்த பின் மனிதன் திருந்த வேண்டும் திருத்திக் கொள்ள வேண்டும். அற   நூல்களும் பெரியவர்களும் இதைத்தான் கூறி கொண்டே இருக்கிறார்கள். தவறு செய்து, பின் திருந்தியவர்களை இந்த சமுதாயம் என்றுமே வெறுத்து ஒதுக்கியது இல்லை. பட்டினத்தாரையும் அருணகிரியையும் இன்று கோவிலில் வைத்து வழிபடுகிறோம் 

இராவணன் திருந்த வில்லை. துரியோதனன் திருந்தவில்லை. பீஷ்மர் சொன்னார், துரோணர் சொன்னார், கிருஷ்ணன் சொன்னான்...எங்கே கேட்டான் ? திருந்தாத தவறால் அழிந்தான் அவன். 

நேற்று எங்கே விட்டோம்...

திருநீலகண்டர் மனைவியை ஆசையுடன் நெருங்கினார். அந்த அம்மையார் "தீண்டுவீராகில் எம்மை திருநீலகண்டம்" என்று அவரை விலக்கினார். 

பெண்களின் மேல் எவ்வளவு ஆசை இருந்ததோ அதை விட ஒரு படி மேலே இறைவன் மேல் பக்தி இருந்தது. 

கீழே உள்ள பாடலைப் படியுங்கள்...ஒரு மனிதன் தலைகீழாக ஒரு கணத்தில் மாறியது தெரியும், பக்தி காமத்தை வென்ற கதை தெரியும், சேக்கிழாரின் தமிழ் புலமை தெரியும்...


ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம் 
 பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி 
 ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை 
 மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார் 
 
பொருள் 

ஆதியார் = எல்லாவற்றிற்கும் ஆதியான, மூலமான அவர். ஆதியார் 

 நீல கண்டத்து = நீல கண்டமான சிவன் மேல் 

 அளவு தாம் கொண்ட ஆர்வம் = தான் கொண்ட அளவு கடந்த ஆர்வம் 

 பேதியா = பேதலிக்காமல். ஒரு புறம் மாணவி மேல் கொண்ட காதல், ஆசை...மறு புறம் எம்மை தொட்டால் திருநீலகண்டம் என்று அவர் சொன்னதால், அதை மீறி தொட்டால் தன் பக்திக்கு வரும் இழுக்கு...இந்த இரண்டுக்கும் நடுவில் நின்றாலும், ஒரு குழப்பமும் இல்லாமல், 

ஆணை கேட்ட = மனைவியின் ஆணை கேட்ட 

பெரியவர் = பெரியவர். யார் பெரியவர், எதில் பெரியவர் ...படிப்பில்லா, அறிவிலா, செல்வத்திலா, சமூக அந்தஸ்திலா, பதவியிலா...எதிலும் அவர் பெரியவர் அல்ல. சேக்கிழார் அவரை பெரியவர் என்கிறார். பெரியது என்பது பணத்திலும், புகழிலும், பதவியிலும் வருவது அல்ல. மிகச் சாதாரண மனிதன்,மண்பாண்டம் செய்து விற்கும் ஒரு குயவன் , பொது மகளிடம் சென்று வரும் ஒரு ஆணை, பெரியவர் என்கிறார் சேக்கிழார். காரணம் இல்லாமல்  இதை பெரிய புராணம் என்று சொல்லுவார்களா? இவர் வாழக்கை முழுவதையும் படித்த பின் உங்களுக்குத் தெரியும் ஏன் அவர் பெரியவர் என்று. 

 பெயர்ந்து நீங்கி = பெயர்ந்து என்றாலும் நீங்கி என்றாலும் ஒரே பொருள் தான். பின் எதற்கு பெயர்ந்து நீங்கி ? 

எழுதியவர் தெய்வப் புலவர் சேக்கிழார். காரணம் இல்லாமல் எழுதுவாரா ? 

அந்த அம்மையார் சொன்னவுடன் முதலில் மனம் நீங்கியது, பின் உடல் நீங்கியது.

 மனம் நீங்காமல் உடல் மட்டும் நீங்கி என்ன பயன்?

 குற்றங்கள் எல்லாம் முதலில் மனதில் செய்யப்படுகின்றன.

பின்தான் உடல் செய்கிறது." உங்களில் மனதால் கெட்டுப் போகாதவர்கள் இவள் மேல் முதல் கல்லை எரியட்டும்" என்றார் இயேசு பிரான்.

மனத்திர்க்கன் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீற பிற என்பார் வள்ளுவர்

மனம் பெயர்ந்தது, உடல் நீங்கியது.

அது எல்லாம் இல்லை, ஏதோ ஒரு வார்த்தையை பாடலின் இலக்கணம் கருதி போட்டிருக்கலாம், அதுக்கு இவ்வளவு பெரிய விளக்கமா என்று நீங்கள் கேட்கலாம்.  மேலே படியுங்கள். 


ஏதிலார் போல நோக்கி = ஏதிலார் என்றால் அயலார். மற்றவர்கள். ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு என்பார் வள்ளுவர். தன் சொந்த மனைவியை அயலார் போல் நோக்கினார். பொது மகளிர் வீட்டுக்கு சென்று வந்த அவர், சொந்த மனைவியை அயலார் போல் நோக்கினார். அது மட்டும் அல்ல... 

 எம்மை என்றதனால் = அந்த அம்மையார் என்னை என்று சொல்லவில்லை, எம்மை என்று கூறினார். எம்மை என்பது பன்மை. 

மற்றை  மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார் = மற்ற எந்த பெண்ணையும் மனத்தாலும் தீண்டேன் என்றார். உன்னை மட்டும் அல்ல, மற்ற பெண்களையும் மனதாலும் தொடேன் என்றார்.

முடிகிற காரியமா ? குயவனார் வீடு எவ்வளவு பெரிசு இருக்கும் ? அருகில் அழகே உருவான மனைவி.   உடல் தள்ளி இருந்தாலும், உள்ளம் சும்மா இருக்குமா ? தொடச் சொல்லி தூண்டுமா இல்லையா ?

எப்படி வாழ்ந்தார்...

Saturday, March 16, 2013

பெரிய புராணம் - தீண்டுவிராகில், திருநீலகண்டம்

பெரிய புராணம் - தீண்டுவிராகில், திருநீலகண்டம் 


திருநீலகண்டர் , திருநீலகண்டர் என்று ஒருவர் இருந்தார். பிறப்பால் அவர் குயவர். மண்பாண்டம் செய்து விற்பவர்.சிறந்த சிவ பக்தர்


ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக் கூத்து ஆடும்
 நாதனார் கழல்கள் வாழ்தி வழிபடும் நலத்தின் மிக்கார்

மண்பாண்டம் செய்து விற்று வரும் வருமானம் எவ்வளவு இருந்து விடும் ?
வறுமைதான். ஏழ்மைதான். ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தார் ....அவர் வாழ்ந்த வாழ்கையை சொல்ல வந்த சேக்கிழார்

 பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனற் சடை முடியார்க்கு அன்பர்
 மெய் அடியார் கட்கு ஆன செயும் விருப்பில் நின்றார் 

பொய் சொல்ல மாட்டார். அற வழியில் வாழ்ந்து வந்தார். சிவனின் அன்பர். மெய் அடியார்க்கு வேண்டியதை விருப்புடன் செய்து வந்தார்.


அப்படி வாழ்ந்து வந்த அவர், பருவத்தில் திருமணம் செய்து கொண்டார். 
அவருடைய மனைவியும் அவரைப் போலவே சிறந்த சிவ பக்தி உள்ளவர்

அப்படி இருக்கும்போது, ஒரு நாள் திருநீலகண்டர் ஒரு பொது மகளின் வீட்டிற்கு சென்று வந்தார். கணவன் இன்னொரு பெண்ணின் வீட்டிற்கு சென்று வருவது எந்த மனைவிக்குத்தான் பிடிக்கும் ? பயங்கர கோவம் அந்த அம்மாவுக்கு. அவருக்கு வேண்டிய எல்லாம் செய்வார், ஆனால், நெருங்கிய உறவு மட்டும் கிடையாது


ஆன தம் கேள்வர் அங்கோர் பரத்தை பால் அணைந்து நண்ண 
 மானமுன் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை 
 ஏனைய எல்லாஞ் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார் 
 தேனலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்



அவருக்கோ அவருடைய மனைவின் மேல் அளவு கடந்த பாசம். தேன் சிந்தும் தாமரைப் பூவில் வாழும் இலக்குமியை விட அழகானவர் அந்த அம்மையார்.

அவளின் ஊடலை தீர்க்க வேண்டி, அவளிடம் சென்று கெஞ்சுகிறார். கணவனை கெஞ்ச வைப்பதில் மனைவிக்கு ஒரு சுகம். கெஞ்சுவதாகவே சேக்கிழார் சொல்கிறார்


மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று 
 பூண்டயங்கு இளமென் சாயல் பொன் கொடி  அனையார் தம்மை 
 வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில் 
 தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம் என்றார்


வேண்டுவது இரந்து கூறி - இரத்தல் என்றால் பிச்சை வேண்டுதல்.
மெய் உற அணையும் போதில் = கட்டி பிடிக்க போகும் போது

எம்மை தீண்டினால் , திருநீலகண்டத்தின் மேல் ஆணை என்றார் அந்த அம்மையார்.

அடுத்து என்ன நடந்தது என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம்