Thursday, November 30, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - கூரத்தாழ்வான் துதி

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - கூரத்தாழ்வான் துதி


108 திவ்ய தேசங்களை பற்றி பாடுவதற்கு முன்னால் , ஆச்சாரியர்களுக்கு வணக்கம் சொல்கிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார்.

முந்தைய பிளாகில் அவர் இராமானுஜருக்கு வணக்கம் செய்ததை பார்த்தோம்.

அடுத்த பாடலில் கூரத்தாழ்வானுக்கு வணக்கம் சொல்கிறார்.


நாம் ஒரு புது இடத்துக்குப் போகிறோம். அங்கே முன்னே பின்னே போனதில்லை. போகும் இடத்துக்கு ஒரு வரைபடமும் (map ) இல்லை. பின் எப்படி போய்ச் சேர்வது.

தமிழில் ஒரு பழ மொழி உண்டு.

"வழி வாயில " என்று.

கேட்டு கேட்டு போக வேண்டியதுதான்.

யாரிடம் கேட்பது ? அந்த இடம் பற்றி தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும்.

உள்ளூரிலேயே இந்தப் பாடு என்றால், வைகுந்தம் எப்படி போவது ? யாரிடம் கேட்பது ?

ஆச்சாரியர்களிடம் கேட்க வேண்டும்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார் சொல்கிறார், "கூரத்தாழ்வான் அடியை கூடுவதற்கு காத்திருக்கிறேன் " என்று. அவன் திருவடிகளை பற்றிக் கொண்டால், வைகுந்தம் போய் விடலாம் என்கிறார்.


பாடல்

முக்காலமில்லாமுகில்வண்ணன்வைகுந்தத்
தெக்காலஞ்செல்வானிருக்கின்றேன் - தக்காரெண்
கூரத்தாழ்வானடியைக்கூடுதற்கு நாயடியேன்
போரத்தாழ்வான சடம்போட்டு


கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

முக் காலமும் இல்லா முகில் வண்ணன் வைகுந்தத்துக்கு
எக் காலம் செல்வான் இருக்கின்றேன் - தக்கார் எண்
கூரத்தாழ்வான் அடியை கூடுதற்கு நாய் அடியேன்
போர தாழ்வான சடம் போட்டு

பொருள்

முக் காலமும் = மூன்று காலமும்

இல்லா = இல்லாத

முகில் = மேகம் போன்ற

வண்ணன் = நிறம் கொண்ட

வைகுந்தத்துக்கு = வைகுண்டத்துக்கு

எக் காலம் = எந்த காலத்தில்

செல்வான் = செல்லுவது என்று

இருக்கின்றேன் = இருக்கிறேன்

தக்கார் = தகுதி உடையவர்கள்

எண் = எண்ணும்

கூரத்தாழ்வான் = கூரத்தாழ்வான்

அடியை = திருவடிகளை

கூடுதற்கு = சேர்வதற்கு

நாய் அடியேன் = நாய் போன்ற கீழ்மையான அடியேன்

போர = மிகவும்

தாழ்வான = கீழான

சடம் = இந்த உடலை

போட்டு = போட்டு விட்டு

வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை.

வைகுண்டம் ....வைகுண்டம் என்றால் என்ன ?

குண்டம் என்றால் குழி. யாக குண்டம் என்றால் யாகத்தில் வேள்வி செய்ய தோண்டப்பட்ட குழி.

சாலை ஒரே குண்டும் குழியும் இருக்கிறது என்று சொல்வதில்லையா.

உள்ளத்திலே பெரிய குழி எது ? நரகக் குழி.

"வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்"

என்பார் அபிராமி பட்டர்.


விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே

பாவம் செய்பவர்கள் சென்று அடையும் இடம் நரகக் குழி.

சரி. அது ஒரு புறம் இருக்கட்டும்.

வி என்றால் இல்லை என்று அர்த்தம்.

நாயகன் என்றால் தலைவன்.

தனக்கு மேலே ஒரு தலைவன் இல்லாதவன் வி-நாயகன்.

பாவம் செய்பவர்கள் செல்லும் இடம் குண்டம்.

பாவம் செய்யாதவர்கள் செல்லும் இடம் வி-குண்டம். வைகுண்டம். வி-குண்டம் என்பது வைகுண்டம் என்று ஆனது.

புண்ணியம் செய்தவர்கள், பாவம் இல்லாதவர்கள் இருக்கும் இடம் வைகுண்டம். 

வைகுண்டம் எப்படி இருக்கும் தெரியுமா ?

பாற்கடல்,

அரம்பை, திலோத்தமை, ஊர்வசி போன்ற நடன மாந்தர்களின் நாட்டியம்,

பஜனை பாடல்கள்

என்று இதெல்லாம் இருக்குமா ?

பிள்ளை பெருமாள் ஐயங்கார் முக்கியமான ஒன்றை கூறுகிறார்.

அங்கே காலம் என்பது கிடையாது.

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்பது கிடையாது.

"முக்காலமில்லாமுகில்வண்ணன்வைகுந்தத்" என்கிறார்.

காலம் இல்லை என்றால் வினை கிடையாது. நேற்று செய்ததன் பலன் இன்று வந்தது என்ற பேச்சு கிடையாது.

கால தத்துவத்தை தாண்டி நிற்கும் இடம் அது.

வயது ஆகாது.

பிறப்பு இறப்பு மூப்பு என்பபது கிடையாது.

காலத்தை வென்று இருப்பார் என்பார் அருணகிரிநாதர்.

நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே

காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.

காலம் என்பது இல்லாத ஒன்றை நம்மால் சிந்திக்க முடியுமா ?

காலம் இல்லாத இடம் வைகுண்டம். சிந்தித்துப் பாருங்கள். காலம் இல்லாவிட்டால் எப்படி இருக்கும் என்று. 

ஆனால், இந்த பூமியில் காலம் என்ற சிறையில் நாம் அகப்பட்டு இருக்கிறோம். 

"எக் காலம் செல்வான் இருக்கின்றேன் "

இந்த காலச் சிறையை விட்டு எப்போது செல்வது என்று இருக்கின்றேன் என்கிறார்.

இந்த உலகை விட்டு விட்டு வைகுண்டம் போக வேண்டும் என்ற அவசரத்தில் இருக்கிறார்.

வைகுண்டம் போக வேண்டும் என்றால் கூரத்தாழ்வான் திருவடியை பற்ற வேண்டும்.

அப்படி என்று யார் சொன்னது ?

"தக்கார் எண் கூரத்தாழ்வான் அடியை கூடுதற்கு "

தக்கார் என்றால் தகுதியானவர், பெரியவர், சிறந்தவர் என்று பொருள்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

என்பது குறள்.

பெரியவர்கள் எல்லோரும் எண்ணும் கூரத்தாழ்வான்.

குரு வணக்கம் முடிந்தது. நூலுக்குள் போவோம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post_30.html

Wednesday, November 29, 2017

நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி - உடையவர்

நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி - உடையவர் 


108 திவ்ய தேசங்களை பற்றி பிள்ளை பெருமாள் ஐயங்கார் அந்தாதி முறையில் பாடி அருளி இருக்கிறார்.

இறைவனைப் பாடலாம், அவன் பெருமைகளை பாடலாம். அவன் அடியார்களைப்  பாடலாம்.  அவன் கோவில் கொண்ட இடங்களைப் பற்றி பாட என்ன இருக்கிறது என்று நினைக்கலாம் ? எல்லா இடமும் ஒன்றுதானே.

ஒரு ஊரு, ஒரு கோவில், பக்கத்தில் ஒரு திருக்குளம் ....இதில் பாடுவதற்கு என்ன இருக்கிறது என்று நினைப்போம் .

பிள்ளை பெருமாள் ஐயங்கார் உருகி உருகி பாடி இருக்கிறார்.

அவ்வளவு அழகான எளிமையான பாடல்கள்.

இவற்றை படித்து அறிவதால் நமக்கு என்ன பலன் என்று கேட்டால் எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை ?

இவற்றில் ஏதோ ஒரு அழகு, ஒரு வசீகரம், ஒரு ஊடாடும் இலயம் இருக்கிறது.

ரோஜா இதழின் மேல் இருக்கும் ஒரு பனித்துளியைப் போல, விரல் பிடிக்கும் குழந்தையின் ஸ்பரிசம் போல,  தனிமையில் நடக்கும் போது எங்கோ ஒலிக்கும் அந்த இனிய பழைய பாடல் போல...இந்த அந்தாதி மனதை வருடத்தான் செய்கிறது.

படித்துப் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.


அந்தாதியை தொடங்குமுன், ஆச்சாரியர்களுக்கு வணக்கம் சொல்லுகிறார்.

நான்கு ஆச்சாரியர்களுக்கு வணக்கம் சொல்லுகிறார்.

அதில் , உடையவர் என்று போற்றப் படும் இராமானுஜர் மேல் பாடிய பாடலைப் பார்ப்போம்.


தித்திக்கும் பாடல்




வீட்டில் , பையன் வேகமாக ஓடி வருவான். வந்த வேகத்தில் நிலை தடுக்கி கீழே விழுவான்.

அம்மா "ஏம்பா பாத்து வரக் கூடாதா ? போன வாரம் தான இந்த மாதிரி ஓடி வந்து தடுக்கி விழுந்த...சரி சரி கால உதறு ...இனிமேலாவது பாத்து வா " என்று அன்போடு கூறுவதை கேட்டிருக்கிறோம் அல்லவா ?


அந்த அன்போடு பிள்ளை பெருமாள் ஐயங்கார் நம்மிடம்  கூறுகிறார்.

இதற்கு முன் எத்தனை பிறவிகள் எடுத்து , பிறந்து இறந்து , பிறந்து இறந்து துன்பப் பட்டிருக்கிறீர்கள். அதெல்லாம் ஞாபகம் இல்லையா ? இனிமேலும் பிறவிகள் வேண்டாம் என்றால், ஒரு எளிய வழி இருக்கிறது.

எதிராஜன் என்ற இராமானுஜன் நாமத்தைச் சொல் என்கிறார்.



பாடல்

முன்னே பிறந்திறந்து மூதுலகிற் பட்டவெல்லாம்
என்னே மறந்தனையோ வென்னெஞ்சே!- சொன்னேன்
இனியெதிரா சன்மங்க ளின்றுமுதற் பூதூர்
முனியெதிரா சன்பேர் மொழி


பொருள் 


முன்னே = முன்பு

பிறந்திறந்து = பிறந்து இறந்து

மூதுலகிற் = மூதுலகில் , மூத்த இந்த உலகில், பழமையான இந்த உலகில்

பட்டவெல்லாம் = பட்ட துன்பமெல்லாம்

என்னே = எத்தனை எத்தனையோ

மறந்தனையோ = அவை அனைத்தையும் மறந்து விட்டாயா

வென்னெஞ்சே!- = என் நெஞ்சே. என் மனமே

சொன்னேன் = சொன்னேன்

இனி = இனிமேல் , இன்றிலிருந்து

எதிரா சன்மங்கள் = பிறவிகள் இனி மேல் வராது

ளின்றுமுதற் = இன்று முதல்

 பூதூர் = திருப்பூதுர்

முனியெதிரா சன் =முனி எதிராசன்

பேர் மொழி = பேரைச் சொல்


அதெப்படி, எதிராஜன் பேரைச் சொன்னால் பிறவி வராமல் போய் விடுமா ? என்று கேட்கலாம். 


கடலிலே போய் கொண்டிருக்கிறீர்கள். போகின்ற கப்பல் பாறையில் மோதி உடைந்து போகிறது. உங்களுக்கோ நீச்சல் தெரியாது. என்ன செய்வீர்கள் ?

அங்கே மிதக்கும் கட்டையை பிடித்துக் கொள்வீர்கள் அல்லவா ? அந்த கட்டை மிதந்து மிதந்து சென்று கரை சேரும் என்றால் , அதோடு சேர்ந்து நீங்களும் கரை சேர முடியும் அல்லவா ? நீச்சல் தெரியாவிட்டாலும், கட்டையை பிடித்துக் கொண்டால், கரை சேர்ந்து விடலாம். 

பிறவி என்ற பெருங்கடலை நம்மால் நீந்தி கடக்க முடியாது. 

பெரியவர்களின் வழி காட்டுதலாகிய தெப்பமே நம்மை கரை சேர்க்கும். 

எதிராஜன் பேரை மொழி என்றால், அவர் பெயரை மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தால் போதாது. அவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். அதுவே பிறவி பெருங்கடலை கடக்க வழி. 

அடடா, இது தெரியாமல் இத்தனை நாள் வீணே பொழுதை கழித்து விட்டேனே என்று  வருத்தப் படாதீர்கள். 

பிள்ளை பெருமாள் சொல்கிறார், "இன்று முதல் எதிராஜன் பெயரை மொழி".

இத்தனை நாள் எப்படியோ போய்விட்டுப் போகட்டும். இன்றிலிருந்து தொடங்கு  என்கிறார். 

இன்னைக்கு விட்டுட்டு நாளை முதல் தொடங்கலாமா என்றால். இல்லை. இன்றிலிருந்து  தொடங்கினால், "ஜன்மங்கள் இனி எதிரில் வராது"

பிறவி பெரிய பிணி. இதை மற்றவர்கள் சொல்ல வேண்டாம். "நீயே எத்தனை முறை பிறந்து இறந்து துன்பப் பட்டிருக்கிறாய் ...பட்ட பின்பும் அறிவு வரவில்லையா " என்று தன் மனதிடம் கேட்பதைப் போல நம்மிடம் சொல்கிறார். 


"சொன்னேன்
இனியெதிரா சன்மங்க ளின்றுமுதற் பூதூர்
முனியெதிரா சன்பேர் மொழி"

இப்போது தானே சொல்கிறார் , சொன்னேன் என்று இறந்த காலத்தை குறிக்கும் சொல்லால் கூறுகிறாரே என்றால், "நான் இப்போது மட்டும் சொல்லவில்லை, முன்பும் பல முறை கூறி இருக்கிறேன். நீ தான் கேட்காமல்  பல  பிறவிகள் எடுத்து துன்பப் படுகிறாய். இப்போதாவது கேள் " என்று கூறுவதைப் போல "சொன்னேன்" என்றார்.

இதை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்றால், முதலில் எதிராஜனின் பேரைச் சொல். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றி அறியும் ஆவல் வரும், பின் அவர் என்ன சொன்னார் என்று அறியும் ஆவல் வரும், பின் அவற்றை கடைபிடித்தால் என்ன என்று தோன்றும், கடை பிடிப்பாய் , உன் பிறவிப் பிணி போகும் ...எனவே எதிராஜன் பெயரைச் சொல்லி ஆரம்பி.

மற்றதெல்லாம் தானே நடக்கும்.


நமக்கு மறதி அதிகம். நடந்ததெல்லாம் மறந்து போய் விடுகிறது.  உள்ளுணர்வு கூர்மையாக இருந்தால் ஞாபகம் இருக்கும்.

"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் "

என்பார் மணிவாசகர்.

சடையவனே , தளர்ந்தேன் ,எம்பெருமான் என்னைத் தாங்கிக்கொள்ளே என்று கெஞ்சுவார் மணிவாசகர்.

கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.


பிடித்திருந்தால் சொல்லுங்கள், மேலும் எழுத ஆசை.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post_29.html


Thursday, November 9, 2017

திருப்பாவை - நாராயணனே நமக்கே பறை தருவான்

திருப்பாவை - நாராயணனே நமக்கே பறை தருவான்



மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

இது என்ன காலம் இல்லாத காலத்தில் திருப்பாவை ? இது என்ன மார்கழி மாதமா ?

இல்லையில்லை.

ஆண்டாள் பாசுரங்களில் பல இடங்களில் "பறை" என்ற சொல் வருகிறது.

மேலே உள்ள பாடலில்

"நாராயணனே நமக்கே பறை தருவான்"

என்று வருகிறது.

இப்படி பறை என்ற சொல்லை பல இடங்களில் ஆண்டாள் பயன் படுத்தி இருக்கிறாள்.

உரை எழுதிய பல பெரியவர்கள் பறை என்பதை ஒரு வாத்தியம் என்றே கொண்டு எழுதி இருக்கிறார்கள்.

"நாராயணன் பறை தருவான் "  என்றே குறிப்பிடுகிறார்கள்.

மேலும் சிலர்  எத்தனை வகையான பறைகள் உண்டு என்று ஆராய்ச்சியில்  இறங்குகிறார்கள்.

நாராயணன் ஏன் ஆயர் பாடி பெண்களுக்கு பறை என்ற வாத்தியத்தைத் தர வேண்டும் ?

பெண்கள் பறை அடிப்பார்களா ? அப்படி வேறு எங்கும் இல்லையே ...

இது கொஞ்சம் நெருடலாகவே இருந்து வந்தது எனக்கு.

தமிழில் பல சொற்கள் காலப் போக்கில் பொருள் மாறி விட்டன. ஒரு சொல்லுக்கு பல  பொருள் இருந்தால் ,  அவற்றில்  சில வழக்கத்தில் இருந்து  போய் விட்டன

அப்படி போனாலும், தமிழில் இருந்து மற்ற மொழிக்கு சென்ற சில சொற்கள் அப்படியே இருக்கின்றன.

நாம் அவற்றில் இருந்து சில வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை கண்டு கொள்ளலாம்.

உதாரணமாக மலையாளத்தில் பறை என்றால் "சொல்" என்று அர்த்தம்.

நீ பற என்றால் நீ சொல்லு என்று அர்த்தம்

நீ எந்து பறையுன்னது என்று சொன்னால் நீ என்ன சொல்கிறாய் என்று அர்த்தம்.

நிங்கள் பறையுன்னது மனசில ஆகில்லா என்றால் நீங்கள் சொல்வது மனதில்  புரியவில்லை என்று அர்த்தம்.

எனவே, பறை என்ற சொல்லுக்கு "சொல்", "வாக்கு", "பேச்சு" என்று அர்த்தம்.

இந்தச் சொல் தமிழில் இருந்து மலையாளத்துக்கு சென்று அங்கு நிலைத்து விட்டது. இங்கே மறைந்து விட்டது.

இப்போது, அந்த அர்த்தத்தில் இந்த வரியைப் பார்ப்போம்.

"நாராயணனே நமக்கே பறை தருவான்"

நாராயணன் நமக்கு வாக்கு தருவான். நமக்கு ஒரு உறுதியான , நம்பிக்கையான சொல்லைத்த தருவான்.

இறைவனோடு பேசுகிறாள் ஆண்டாள். நாராயணனோடு அவ்வளவு அன்யோன்யம். அவன் இவளிடம் ஏதோ சொல்கிறான். அவன் சொன்னதை தனக்கு மட்டும் என்று  வைத்துக் கொள்ளாமல் "நம் எல்லோருக்கும் அவன் வாக்கு தருவான் " என்று தனக்கு கிடைத்த அந்த இறை அருளை எல்லோருக்கும் கிடைக்கும் படி சொல்லுகிறாள் ஆண்டாள்.


கொஞ்சம் இலக்கணம் படிப்போம். இலக்கண அறிவு இலக்கியத்தை மேலும் சுவைக்க உதவும். சொற்களின் ஆழத்தை, அதன் வீரியத்தை அறிய உதவும்.

நாராயணனே நமக்கே பறை தருவான்


என்று சொல்லும் போது , ஆண்டாள் இரண்டு இடத்தில் ஏகாரத்தை பயன் படுத்துகிறாள். 

நாராயணனே
நமக்கே

ஏன் ?

இதற்கு உயர்வு சிறப்பு ஏகாரம் என்று  பெயர்.

நாராயணன்  நமக்கு  பறை தருவான்

என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ?

நாராயணன் நமக்கு பறை தருவான் என்று சொன்னால், நாராயணன் தந்தான், அவனுக்கு மேலும் வேறு யாரும் தர  .வாய்ப்பு இருக்கிறது. அது இதை விட  உயர்ந்த வாக்காக இருக்கலாம் என்ற சந்தேகம் வரும் அல்லவா.

சுப்ரீம் கோர்ட் சொன்னது என்றால், வேறு ஏதாவது கோர்ட் அதை விட உயர்வாக சொல்லலாம்.

சுப்ரீம் கோர்டே சொல்லியாச்சு என்றால் அதுக்கு மேல அப்பீல் கிடையாது.

நாராயணனே என்று சொல்லிவிட்டால் அதுக்கு மேல ஒன்றும் இல்லை. 

தலைவர் வந்து விட்டார். கூட்டத்தை ஆரம்பிக்கில்லாம் என்றும் சொல்லலாம்.

தலைவரே வந்து விட்டார்...என்று சொன்னால் , இனிமேல் வேறு யாருக்கும் காத்திருக்க  தேவையில்லை என்பது புலனாகும்.


நமக்கே தருவான் ....நமக்கு மட்டும் தான தருவான். எனக்கே எனக்கா என்று கூறுவது போல. நமக்கு கொஞ்சம் தந்து விட்டு மற்றவர்களுக்கு மீதியை தருவான் என்று  இல்லாமல், அனைத்தையும் நமக்கே தருவான்  என்கிறாள்.நமக்கே தருவான், வேறு யாருக்கும் தர மாட்டான். எனக்கே தருவான் என்று சொல்லவில்லை. நமக்கே தருவான் என்று தன்னோடு உள்ள அனைவரையும் சேர்த்துக் கொள்கிறாள்.

ஆண்டாளின் திருப்பாவையில் பத்து இடங்களில் இந்த பறை என்ற சொல் வருகிறது.

அது ஒரு வாத்தியம் என்று வைத்துப் பார்த்தால் சற்று நெருடத்தான்  செய்யும். அதை "சொல்" "வாக்கு " என்று வைத்துப்  பாருங்கள்.

மிக அழகான அர்த்தம் கிடைக்கும்.

பறை என்ற சொல் வரும் பாசுரத் தொகுப்பு கீழே உள்ளது.



 1. பறை தருவான்  (பாசுரம் – 1)
2. பாடிப்பறை கொண்டு  (பாசுரம்- 8 )
3. போற்றப் பறை தரும்  – (பாசுரம்- 10)
4. அறை பறை –  (பாசுரம் -16)
5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)
6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)
7. உன்றன்னை பாடிப்  பறைகொண்டு – (பாசுரம் -27)
8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)
9. இற்றைப்  பறை கொள்வான் –  (பாசுரம் -29)
10.அங்கப் பறை கொண்ட ஆற்றை  – (பாசுரம் -30)


மற்றவற்றையும் எழுத ஆசைதான்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post_9.html


Monday, November 6, 2017

இராமாயணம் - விராதன் வதை படலம் - அறிவு வந்து உதவ

இராமாயணம் - விராதன் வதை படலம் - அறிவு வந்து உதவ


இராமன், இலக்குவன், மற்றும் சீதை கானகத்தில் செல்லும் போது , விராதன் என்ற அரக்கன் சீதையை தூக்கிச் சென்று விடுகிறான். விராதனை தடுத்து இராமனும், இலக்குவனும் போர் புரிகிறார்கள். கடைசியில் இராமன் காலால் உதைக்க, விராதன் தோற்று கீழே விழுகிறான். விழுந்தவன், சாப விமோச்சனம் பெற்று மீண்டும் கந்தர்வனாகிறான்.


 வானுலகம் செல்வதன் முன் சிலச் சொல்லி விட்டு செல்லுகிறான்.

பாடல்

பொறியின் ஒன்றி, அயல்சென்று
     திரி புந்தி உணரா,
நெறியின் ஒன்றி நிலை நின்ற
     நினைவு உண்டதனினும்,
பிறிவு இல் அன்பு நனி பண்டு
     உடைய பெற்றிதனினும்,
அறிவு வந்து உதவ, நம்பனை
     அறிந்து, பகர்வான்.

பொருள்


பொறியின் ஒன்றி = பொறி என்றால் கருவி. பொறி வைத்து பிடிப்பது என்று சொல்லுவார்கள் அல்லவா. நாம் அறிவை இந்த பொறிகளால் பெறுகிறோம். பொறி என்றால் புலன்கள். கண், காது , மூக்கு போன்ற புலன்கள். இந்த புலன்களில் அறிவு ஒன்றி.


அயல்சென்று = வெளியில் சென்று

திரி = திரிந்து

புந்தி உணரா = புத்தி உணராமல்


நெறியின் ஒன்றி = நல்ல வழியில் ஒன்று பட்டு

நிலை நின்ற = நிலை பெற்ற

நினைவு உண்டதனினும் = நினைவு இருந்தாலும்

பிறிவு இல் அன்பு = பிரிதல் இல்லாத அன்பு , பக்தி

நனி  = மிகுந்த

பண்டு  = பழைய

உடைய பெற்றிதனினும் = உடமையாக பெற்றிருந்ததாலும்

அறிவு வந்து உதவ = அறிவும் வந்து உதவ

நம்பனை = தலைவனான இராமனை

அறிந்து = அறிந்து

பகர்வான் = சொல்லுவான்

அவனுக்கு முன்பு செய்த அன்பினாலும் (பக்தியாலும்), பழைய ஒழுக்கத்தாலும்  (நெறியின் ஒன்றி நிலை நின்ற ) அவனுக்கு அறிவு உதவி செய்தததால்  இராமனை அவன் அறிந்தான் என்கிறான் கம்பன்.

இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால் ....

முதலாவது, மிக மிக மோசமானவன் என்று நாம் நினைப்பவனுக்கு பின்னால் மிக உயர்ந்த  குணமுள்ளவன் ஒருவன் இருக்கிறான். சாப விமோசனம் அடைவதற்கு முன்னால் பெரிய கொடூர அரக்கனாக இருந்தவன் பின்னால் உயர்ந்த தேவனாக மாறுகிறான்.  யாருக்குத் தெரியும் , யாருக்கு பின்னால் யார் இருக்கிறார் என்று ? இது விராதனுக்கு மட்டும் அல்ல , எல்லா கொடியவனுக்கு பின்னாலும் ஏதோ நல்லவன் மறைந்து கிடக்கிறான்.


இரண்டாவது, கெட்டவர்கள், கொடியவர்கள் "இனி நமக்கு விதித்தது இதுதான் போலும் என்று எண்ணி மேலும் மேலும் தவறுகளை செய்து கொண்டே போகக் கூடாது. எந்த கொடியவனுக்கும் ஒரு சாப விமோச்சனம் இருக்கும். அந்த நம்பிக்கை வேண்டும். சாப விமோசனத்தை தேடி செல்ல வேண்டுமே அல்லால், மேலும் மேலும் தவறுகளை செய்து கொண்டே போகக் கூடாது. எந்த பாவிக்கும் ஒரு கடைந்தேற்றுதல் உண்டு .

மூன்றாவது, கெட்டவர்களுக்கும் சில சமயம் நல்லவர்கள் சாவகாசம் கிடைக்கும். அப்படி கிடைக்கும் போது அதை பெற்றுக் கொண்டு , பாவங்களில் இருந்து விடு பட முயற்சி செய்ய வேண்டும் . அதை விட்டு விட்டு அந்த  நல்லவர்களுக்கும் தீமை செய்ய முயற்சி செய்யக் கூடாது.

நான்காவது, மிக முக்கியமானது, இராமன் திருவடி பட்டதால் அவனுக்கு அறிவு உதவி  செய்ய அவன் சாப விமோச்சனம் பெற்றான். அதற்கு முக்கிய காரணம்  முன்பு செய்த இடையறாத அன்பும், நல்ல ஒழுக்கமும். யாருக்குத் தெரியும் பின்னாளில் நாம் என்னவாக ஆவோம் என்று. இப்போதே நல்ல ஒழுக்கத்தை கடை பிடித்தால் , பின்னாளில் ஏதோ ஒரு சமயத்தில் இது கை கொடுக்கும்.

ஐந்தாவது, அரக்கன் என்பவன் யார் ? புலன்கள் பின்னால் அறிவை செலுத்துபவன்.

பொறியின் ஒன்றி, அயல்சென்று
     திரி புந்தி உணரா,

அறிவின் பின்னால் புலன்கள் சென்றால் அவன் மனிதன், தேவன். புலன்கள் பின்னால் அறிவு சென்றால் அவன் அரக்கன். அவ்வளவுதான்.

பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது, சாப்பிட்டு விடுவது.

அழகான பெண்ணைக் கண்டால், உடனே தவறாக நினைப்பது, தவறான  செயல்களில் ஈடுபடுவது.

இதெல்லாம் அரக்க குணம்.

நாம் அரக்க குணங்களில் இருந்து மாறுபட வேண்டும்.

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்று ஆழ்வார் கூறிய மாதிரி, முடியும் போதெல்லாம் நல்லது செய்து வைப்போம் . என்றேனும் உதவும்.

விராதன் வதைப் படலத்தில் இப்படி பல ஆழ்ந்த கருத்துகள் உள்ள பாடல்கள் உள்ளன.

நேரம் இருப்பின், மூலத்தை படித்துப் பாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post.html

Tuesday, October 31, 2017

இராமாயணம் - விராதன் வதை - என்னையே நுகர்தி

இராமாயணம் - விராதன் வதை - என்னையே நுகர்தி 


இராமன், இலக்குவன் மற்றும் சீதை கானகத்தில் செல்லும் போது , விராதன் என்ற அரக்கன் சீதையை தூக்கிக் கொண்டு செல்கிறான். அவனைத் துரத்திக் கொண்டு இராமனும் இலக்குவனும் சென்று அவனோடு போர் புரிகிறார்கள்.

விராதனால் இராம இலக்குவனர்களுக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சுகிறாள்.

என்னால் தானே இந்த சண்டை என்று வருந்துகிறாள். தவிக்கிறாள். சொல்லி அழக்  கூட ஆள் யாரும் இல்லை. துணை இல்லை.

"தாயைப் போல கருணை உள்ள இராமனையும் இலக்குவனையும் விட்டு விடு, என்னை அனுபவித்துக் கொள் என்று அவன் காலில் விழுந்து கெஞ்சுகிறாள்"

பாடல்

பின்னை ஏதும் உதவும் துணை பெறாள்;
     உரை பெறாள்;
மின்னை ஏய் இடை நுடங்கிட
     விரைந்து தொடர்வாள்;
‘அன்னையே அனைய அன்பின்
     அறவோர்கள்தமை விட்டு
என்னையே நுகர்தி’ என்றனள்-
     எழுந்து விழுவாள்.

பொருள்


பின்னை = அப்புறம்

ஏதும் = வேறு எந்த

உதவும் = உதவி செய்யும்

துணை பெறாள் = துணை ஒன்றையும் பெறாதவள்

உரை பெறாள் = ஆறுதல் உரை சொல்லக் கூட யாரும் இல்லாதவள்

மின்னை ஏய் = மின்னல் போன்ற

இடை = இடுப்பு

நுடங்கிட = வாட

விரைந்து தொடர்வாள் = வேகமாக அரக்கன் பின்னால் சென்று

‘அன்னையே அனைய = தாயைப் போன்ற

அன்பின் = அன்பு கொண்ட

அறவோர்கள்தமை விட்டு = அறவழியில் நடக்கும் இராம இலக்குவர்களை விட்டு விட்டு

என்னையே நுகர்தி’  = என்னை நுகர்ந்து கொள் , அனுபவித்துக் கொள்

என்றனள் = என்றாள்

எழுந்து விழுவாள் = எழுந்து பின் விழுவாள்

கொடுமையில் பெரிய கொடுமை, தண்டனையில் பெரிய தண்டனை பேசக் கூட  ஆள் இல்லாமல், துன்பம் வந்த போது ஆறுதல் சொல்லக் கூட ஆள் இல்லாமல் தனித்துப்  போவதுதான். பெரிய தவறு செய்தவர்களை தனிமைச் சிறையில் ஏன் அடைக்கிறார்கள். யாருமில்லாத தனிமை பெரிய தண்டனை. துன்பம்.

சீதை அவ்வாறு ஆகிப் போனாள்.

நட்பும், உறவும் தேவை. நாம் நன்றாக இருக்கும் போது அதன் தேவை, முக்கியத்துவம் புரியாது. நாம் நன்றாக இருக்கும் போது நாம் நட்பையும், உறவையும் உதாசீனப் படுத்தி விடுகிறோம். நமக்குத் தேவையான போது அது  கிடைக்காது.

எனவே, நன்றாக இருக்கும் போது நட்புக்கும், உறவுக்கும் நேரம் செலவிட வேண்டும்.

அது மட்டும் அல்ல, நாம் சுகமாக இருக்கும் போது வேறு யாருக்காவது நமது உதவி தேவைப் படலாம். ஒரு ஆறுதல் வார்த்தை, ஒரு நம்பிக்கையான வார்த்தை தேவைப் படலாம். ஓடிச் சென்று உதவ வேண்டும். நேரம் இல்லை, எனக்கே ஆயிரம் பிரச்சனை இதில் ஊர் பிரச்சனையை நான் எங்கு போய் தீர்ப்பது  என்று ஒதுங்கி இருக்கக் கூடாது. ஆயிரம் பிரச்சனையில், ஆயிரத்து ஓராவது பிரச்சனையாக மற்றவர்களுக்கு உதவிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான், நமக்கு ஒரு தேவை வரும்போது யாராவது உதவுவார்கள்.

"நுகர்தி " என்ற சொல்லுக்கு அனுபவித்தல் என்பது நேரடியான பொருளாக இருக்கலாம். உரை எழுதிய பெரியவர்கள், "என்னை வேண்டுமானால் தின்று கொள் , அவர்களை விட்டு விடு " என்று கூறுவதாக உரை எழுதி இருக்கிறார்கள்.  உங்கள் மனதுக்குப் பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள்.


"‘அன்பின்அறவோர்கள் " என்கிறாள் இராம இலக்குவனர்களை.

ஏன் ?

அன்பிற்கும் இடத்தில் அறம் தானே இருக்கும்.


அறம் என்றால் என்ன என்று யாராலும் அறுதியிட்டு கூற முடியாது.

"ஈரில்  அறம்" என்பான் கம்பன். அறத்திற்கு இதுதான் எல்லை என்று யாரும் சொல்ல முடியாது.

"அறம் என்று ஒன்று உண்டு, அது அமரர்கும் அறிய ஒண்ணாதது "  என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார் , கந்த புராணத்தில்

தேவர்களாலும் அறிய முடியாதென்றால் நாம் எம் மாத்திரம் ? பின் அறியாத ஒன்றை எப்படி கடை பிடிப்பது ?

ரொம்ப சுலபம். அன்பிருந்தால் அறம் தானே வரும்.

"என்பிலதனை வெயில் போல் காயுமே அன்பிலதனை அறம் " என்பார் வள்ளுவர்.

எலும்பு இல்லாத புழுவை வெயில் எப்படி காய்ந்து கொல்கிறதோ அது போல அன்பில்லாதவனை அறம்  அழிக்கும் என்கிறார்.

அன்பிருந்தால் அறம் வரும்.


"அன்னையே அனைய அன்பின்"


அது என்ன அன்னை போன்ற அன்பு ?

நமக்கு தீமை செய்தவர்களுக்கு தீமை செய்ய வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு.

ஒரு பெண்ணுக்கு அவளின் அழகு மிகப் பெரிய சொத்து.

பிள்ளை பெறுவது என்றால் அழகு அழியும்.  உடலின் கட்டுக் கோப்பு தளரும். தூக்கம் போகும். எடை கூடும். உடல் பெருக்கும். அழகு கட்டாயம் குறையும். தன் அழகை குறைத்த தன் பிள்ளையின் மேல் அந்த தாய் கோபம் கொள்ள மாட்டாள். என் ராசா, என் ராசாத்தி என்று தன பிள்ளையை கொஞ்சுவாள். கொஞ்சுவது மட்டும் அல்ல, தன் உதிரத்தை பாலாக்கித் தருவாள்.

அது போல, தனக்கு துன்பம் செய்தவர்களையும் பொறுத்து அவர்களுக்கு நல்லது  செய்யும் அன்புள்ளம் கொண்டவர்கள் இராமனும் இலக்குவனும் என்று கூறுகிறார்கள்.

போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகும் பாடல் தான். இருந்தும் அதிலும் ஆயிரம்  அர்த்தங்கள் கம்பனில்.

நிறுத்தி நிதானமாக படிக்க வேண்டும்.

அத்தனையும் வாழ்க்கைக்கு நலம் செய்யும் பாடல்கள்.  பாடங்கள்.

Sunday, October 29, 2017

திருக்குறள் - நன்மையின் நீக்கும்

திருக்குறள் - நன்மையின் நீக்கும் 


நல்லது வேண்டாமென்று யார் தான் சொல்லுவார்கள். மேலும் மேலும் நல்லதே வேண்டும் என்றுதானே எல்லோரும் விரும்புவார்கள்.

அதற்காகத்தானே இத்தனை பாடு படுகிறார்கள்.

செல்வம் வேண்டும், புகழ் வேண்டும், அதிகாரம் வேண்டும், மகிழ்ச்சி வேண்டும் என்று எத்தனையோ நன்மைகளை வேண்டி பாடு படுகிறார்கள்.

இருந்தும், எல்லோருக்கும் நல்லவை கிடைத்து விடுவதில்லை. எவ்வளவு படித்திருந்தும், எவ்வளவு கடுமையாக உழைத்தும் நன்மை என்பது சிலருக்கு எட்டா கனியாகவே இருக்கிறது.

ஏன் ?

வள்ளுவர் சொல்கிறார், பயனற்ற பண்பில்லாத சொற்களை பேசுவதன் மூலம் ஒருவனை விட்டு நன்மைகள் நீங்கும் என்று.

பாடல்

நயன் சாரா நன்மையின் நீக்கும் - பயன்சாராப்
பண்பு இல் சொல் பல்லாரகத்து.


பொருள்

நயன் = நயமான, இனிமையான, அன்பான , அருளான

சாரா  = சார்பில்லாத

நன்மையின் = நன்மையில் இருந்து

நீக்கும்  = நீக்கிவிடும்

பயன்சாராப் = பயனொடு தொடர்பில்லாத

பண்பு இல் = பண்பில்லாத

சொல் =  சொற்களை

பல்லாரகத்து = பல்லார் + அகத்து = பலரிடத்தில்


விரிவாக பார்போம் .

"பயன் சாரா" என்றால் என்ன ?

நாம் ஒருவரிடம் பேசுகிறோம் என்றால் நம் பேச்சினால் அவருக்கு என்ன பயன்  விளையும் என்று யோசிக்க வேண்டும். பயன் என்பதை இரண்டு வகையாக பிரிக்கிறார் பரிமேலழகர். இம்மை பயன் , மறுமை பயன் என்று. இந்த வாழ்கைக்காகவாவது அல்லது இறந்த பின் கிடைக்கும் முக்தி, வீடு பேறு  போன்றவற்றுக்காக பயன் தர வேண்டும்.

இம்மைக்கும் மறுமைக்கும் பயன் இல்லாத சொற்களை பேசக் கூடாது.

பேசக் கூடாது என்று சொல்வதன் மூலம், அது போன்ற சொற்களை கேட்கவும் கூடாது என்று புரிகிறது அல்லவா ?

"பண்பு இல் " என்றால் என்ன ?

பயன் தரும் சொற்களைக் கூட பண்போடு சொல்ல வேண்டும்.

பிள்ளைகளிடம் "நல்லா படிச்சா நல்ல வேலை கிடைக்கும், நாலு பேருக்கு நல்லது  செய்யலாம் . எனவே நல்லா படி" னு சொல்லலாம். "படிக்கலேனா பன்னி மேய்க்கத் தான் போற " என்றும் சொல்லலாம். இரண்டுமே நல்லா படி என்ற பயனுள்ள சொற்கள்தான். இருந்தும், இரண்டாவது கொஞ்சம் பண்பற்ற சொல்லாக இருக்கிறது அல்லவா  ? நல்லதே சொன்னாலும் , இனிமையாக , மற்றவர் மனம் புண் படாதபடி சொல்ல வேண்டும்.

"பல்லார் அகத்து" ...பலரிடம். இதே தொழிலாக அலைவது. யாரைப் பார்த்தாலும் லொட லொட என்று தேவையில்லாத சொற்களை பேசிக் கொண்டிருத்தல் .


"நீக்கும்" ...வேறு யாரும் வந்து கெடுதல் செய்ய வேண்டாம். இப்படி நயன் இல்லாத, பண்பில்லாத சொற்களை பேசிக் கொண்டிருந்தால், அதுவே நமக்குச் சேர  வேண்டிய நன்மைகளில் இருந்து நீக்கிவிடும்.

என் மனைவி/கணவன் என்னிடம் அன்பாக இல்லை, மேலதிகாரி எனக்கு பதவி உயர்வு  தரவில்லை, பிள்ளைகள் நான் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறார்கள், மாமியார் / மருமகள் உறவு சரியாக இல்லை என்று வரும் பிரச்சனைகளுக்கு  மற்றவர் காரணம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் அல்ல காரணம். நமது பயன் இல்லாத பண்பற்ற  சொற்கள்தான் காரணம். நமக்கு வர வேண்டிய நன்மைகளை அவை நம்மிடம் இருந்து  நீக்கி விடுகின்றன.

நீக்குதல் என்றால் முதலில் இருக்க வேண்டும். அதை நீக்க வேண்டும். நம்மிடம்  ஏற்கனவே உள்ள நன்மைகளை, செல்வங்களை, செல்வாக்கை பயனற்ற  பண்பில்லாத சொற்கள் நீக்கி விடும். நம்மை விட்டுப் போகச் செய்து விடும்.

உழைத்து சம்பாதித்த பணம், பேர், புகழ், உறவுகள் என்று அனைத்தையும் நீக்கி விடும்.


எதை நீக்கும் ?

நயன் சாரா நன்மையின் நீக்கும்

இனிமையான, அன்பான, அருள் நிறைந்த நன்மைகளை நீக்கிவிடும்.

பொருட் செல்வம் மட்டும் அல்ல. மற்ற அனைத்து நன்மைகளையும் நீக்கி விடும்.

"பல்லாரகத்து"  பலரிடம்.  இன்று whatsapp  , e mail போன்றவை வந்து விட்டன. ஒரே சமயத்தில்  பலரிடம் chat செய்ய முடியும். வள வள என்று தேவையில்லாத  chat களால் நமது நேரத்தை வீணடிப்பது மட்டும் அல்ல, மற்றவர்கள்  நேரத்தையும் நாம் வீணடிக்கிறோம். தேவை இல்லாத சொற்களால் பகை  வளரலாம். மனத்தாங்கல் வளரலாம்.

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

எல்லோரிடமும் தேவையற்ற பேச்சினால் நன்மை நீங்கி கெடுதலே விளையும்.

பேசும் முன், எழுதும் முன் யோசியுங்கள்.

இதனால் மற்றவர்களுக்கு என்ன பயன்.

பயன் இருந்தாலும், அதை அன்பாக, இனிமையாக எப்படி சொல்வது என்று  சிந்தித்துச்  சொல்லுங்கள்.

அபப்டி ஒன்றும் இல்லை என்றால், மௌனம் சிறந்தது.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_29.html

Saturday, October 28, 2017

பழமொழி - தமக்கு மருத்துவர் தாம்

பழமொழி - தமக்கு மருத்துவர் தாம் 


நவீன மருத்துவத்தில் பல சிக்கல்கள் உள்ளன.

ஒரு நோய்க்கு ஒரு மருந்துதான். காய்ச்சல் உங்களுக்கு வந்தாலும் சரி, எனக்கு வந்தாலும் சரி, யாருக்கு வந்தாலும் ஒரே மருந்துதான். இன்ன நோய்க்கு இன்ன மருந்து என்று வைத்திருக்கிறார்கள்.  நீங்களும் நானும் ஒன்றா ? என் உடல், என் உணவு, என் சூழ்நிலை, என் வேலை,  என்று எல்லாமே உங்களில் இருந்து மாறுபட்டது. எப்படி இரண்டு பேருக்கும் ஒரே மருந்து சரி வரும்.

இரண்டாவது, நவீன மருத்துவம் , நோய்களுக்குக் காரணம் நுண் கிருமிகள் (germs ) என்று நம்புகிறது. Germ Theory.  பாக்டீரியா, வைரஸ் போன்றவை நோய்களை உண்டாக்குகின்றன என்பது நவீன மருத்துவத்தின் கோட்பாடு. அப்படி என்றால், அந்த கிருமிகள் தாக்கும் எல்லோருக்கும் அந்த நோய் வர வேண்டுமே ? வருவது இல்லை. நோய்க்குக் காரணம் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே.  இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நவீன மருத்துவத்தில் வழி இல்லை. அதாவது, நோய் எதிர்ப்பு இருந்தால் நோயே வராது. ஆரோக்கியமாக இருக்கலாம்.  நவீன மருத்துவம் என்பது நோயை சரிப் படுத்துமே தவிர, நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாது.

மூன்றாவது, நோய் தடுப்பூசி என்று போடுகிறார்கள். அவை முதலில் நோயை உண்டுபண்ணும். அந்த நோயை நமது உடல் போராடி வென்றெடுக்கும். அப்படி நோய் எதிர்ப்பு தன்மையை உண்டாக்குகிறார்கள். நோய் தடுப்பு என்பது , நோயை உண்டாக்குவது. இந்த தடுப்பூசிகளால் பல சிக்கல்கள் வருகின்றன  என்று மேல் நாடுகளில் சொல்கிறார்கள்.

நான்காவது, நவீன மருத்துவத்தில் , நோய்க்கு தரும் ஒவ்வொரு மருந்தும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். Side effects என்று சொல்வார்கள். அதாவது , ஒரு நோயை குணப்படுத்த வேண்டும் என்றால், வேறு பல உபாதைகளுக்கு, நோய்களுக்கு உள்ளாக வேண்டும். பக்க விளைவுகள் இல்லாத மருந்தே கிடையாது.  தலை வலி போய் திருகு வலி வருவதுதான் மிச்சம்.

ஐந்தாவது, ஒரு நோய்க்கு ஒரு மருந்து உண்டு. ஒருவருக்கு , ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் இருந்தால் , அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள் தருவார்கள். இந்த மருந்துகள் உள்ளே சென்று அவை ஒன்றோடு ஒன்று கலந்து என்னென்ன செய்யும் என்று எளிதாக அறிய முடியாது. நோய் சரியாகவில்லை என்றால், மருந்தை மாத்தி கொடுப்பார்கள். அல்லது மருந்தின் அளவை கூட்டி  குறைத்து கொடுப்பார்கள். ஒரு ஊகம் தான்.

ஆறாவது , இன்று எல்லாமே இலாப நோக்கில் செல்வதால், தேவை இல்லாத சோதனைகள் (test ), தேவை இல்லாத அறுவை சிகிச்சை என்று நிகழ்கிறது. இவற்றினால் பணமும், உடல் நலக் குறைவும் உண்டாகிறது.


இப்படி , நவீன மருத்துவத்தில் பல குறைபாடுகள் உண்டு. நிறைகளும் உண்டு. இல்லை என்று சொல்வதற்கு இல்லை.

இருப்பினும், பல சமயங்களில் நாம் மருத்துவர்களை முழுவதுமாக நம்பிக் கொண்டிருக்காமல், நம் உடல் ஆரோக்கியத்தை பற்றி நாம் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். எது சரி, எது தவறு என்று சிந்திக்க வேண்டும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது, எவ்வளவு சாப்பிடலாம், எப்போது சாப்பிடலாம்  என்று நம் உடல் நிலையை உன்னிப்பாக கவனித்து நமக்கு நாமே சரியான கட்டுப்பாடுகள், வரைமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.

நோய் வந்தால் இருக்கவே இருக்கிறார் டாக்டர், ஒரு ஊசி போட்டால் சரியாகி விடும் என்று இருக்கக் கூடாது.

நம் ஆரோக்கியத்திற்கு நாம் தான் பொறுப்பு.

சரியான உணவு, சரியான உடற் பயிற்சி, ஓய்வு, தூக்கம், நல்ல மன ஆரோக்கியம் என்று நம் உடலை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேறு யாரும் நமக்கு உதவி செய்வார்கள் என்று நினைக்கக் கூடாது.

பாடல்

‘எமக்குத் துணையாவார் யாவர்?’ என்று எண்ணி,
தமக்குத் துணையாவார்த் தாம் தெரிதல் வேண்டா;
பிறர்க்குப் பிறர் செய்வது ஒன்று உண்டோ? இல்லை;-
தமக்கு மருத்துவர் தாம்.

பொருள்

‘எமக்குத் = எனக்கு

துணையாவார் = துணை செய்பவர்

யாவர்?’  = யார்

என்று எண்ணி = என்று நினைத்துக் கொண்டு

தமக்குத்  = நமக்கு

துணையாவார்த் = துணை செய்பவர்களை

தாம் = நாம்

தெரிதல் வேண்டா = தேடிக் கொண்டிருக்கக் கூடாது

பிறர்க்குப் = மற்றவர்களுக்கு

பிறர் = ஒருவர்

செய்வது ஒன்று உண்டோ? = உதவி செய்வது என்று ஒன்று உண்டோ ?

இல்லை;- = இல்லை

தமக்கு மருத்துவர் தாம் = நமக்கு மருத்துவர் நாம் தான்

நீங்கள் மட்டுமே உங்களுக்கு உதவி செய்யக் கூடியவர். வேறு யாரையும் நம்பாதீர்கள் என்கிறது இந்தப் பாடல்.





Monday, October 23, 2017

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - சிறை அன்னம் அனையாள்

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - சிறை அன்னம் அனையாள் 


இராமனும், இலக்குவனும் , சீதையும் கானகத்தில் செல்கின்ற போது , விராதன் என்ற அரக்கன் சீதையை தூக்கிக் கொண்டு சென்று விட்டான். இராமனும் இலக்குவனும் , அந்த அரக்கனை மறித்து அவனோடு போர் புரியத் தொடங்கினர்.

விராதன் , மாயம் செய்து, அவர்களை தூக்கிக் கொண்டு வானத்தில் சென்றான்.

சீதை பரிதவிக்கிறாள். சீதையின் அவலத்தை கம்பன் காட்டுகிறான்.

ஒரு குளத்தில் ஆண் அன்னமும், பெண் அன்னமும் இணையாக இன்பமாக இருந்து வந்தன. ஒரு நாள் வேடர்கள் வந்து வலை வைத்து பிடித்ததில் ஆண் அன்னம் சிக்கிக் கொண்டது. ஆண் அன்னத்தை அந்த வேடர்கள் தூக்கிக் கொண்டு போகிறார்கள். அதைக் கண்டு அந்தப் பெண் அன்னம் எப்படி துடிக்குமோ, அப்படி துடித்தாள் சீதை.

பாடல்

மா தயா உடைய தன் கணவன்,
     வஞ்சன் வலியின்
போதலோடும் அலமந் தனள்;
     புலர்ந்து, பொடியில்,
கோதையோடும் ஓசி கொம்பு என,
     விழுந்தனள் குலச்
சீதை, சேவல் பிடியுண்ட சிறை
     அன்னம் அனையாள்.

பொருள்

மா = பெரிய

தயா = தயை, கருணை

உடைய = உடைய

தன் கணவன் = தன் கணவன், இராமன்

வஞ்சன் = வஞ்சகனான விராதன்

வலியின் = வலிமையால்

போதலோடும் = போனதால்

அலமந் தனள் = வருந்தினாள், கவலைப்பட்டாள்

புலர்ந்து = வாடிய

பொடியில் = புழுதியில்

கோதையோடும் =  மலர் மாலையோடும் அல்லது மலர் மாலை போன்ற

ஓசி கொம்பு என = ஒடிந்து விழுந்த கொம்பு போல

விழுந்தனள் = விழுந்தால்

குலச் சீதை = உயர் குலத்தில் பிறந்த சீதை

சேவல் பிடியுண்ட  = ஆண் அன்னம் பிடிபட்ட பின்

சிறை  = மென்மையான சிறகுகள் உடையாய்  (பெண் அன்னம்)

அன்னம் = அன்னம்

அனையாள் = போன்ற (சீதை)


ஜனகனின் மகள். தயரதனின் மருமகள், இராமனின் மனைவி - பட்ட துன்பம் இது.

கணவனையும், கணவனின் தம்பியையும் அரக்கன் தூக்கிக் கொண்டு போகிறான்.

நம்மை காக்க வந்ததால் தானே அவர்களுக்கு இந்த கதி என்று நினைத்து  வருந்துகிறாள்.

கணவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், மனைவிக்கு பயம் போகாது. அவனுக்கு  ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்று.


இராமனின் மனைவியின் நிலை இது என்றால்.....

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_23.html

Friday, October 20, 2017

திருவாசகம் - சிவமாக்கி என்னை ஆண்ட

திருவாசகம் - சிவமாக்கி என்னை ஆண்ட 


நாம் யார் ?

நம் உண்மை நிலையை பலப் பல போர்வைகள் போத்தி மூடி மறைத்து இருக்கின்றன.

பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள்,டிவி, செய்தித் தாள்கள், நாம் வாசிக்கும் புத்தகங்கள், என்று ஒன்றின் மேல் ஒன்றாக சேர்ந்து நமது உண்மையான நிலையை அறிய விடாமல் தடுக்கின்றன.

இதை புரிந்து கொள்வது சற்று கடினம்.

என்னை நான் அறிய மாட்டேனா ? என்னைப் பற்றி எனக்குத் தெரியாவிட்டால் வேறு யாருக்குத் தெரியும் என்று நாம் நினைப்போம்.

சிந்திப்போம்.

நாம் சிலவற்றை சரி என்று , மற்றவற்றை தவறென்றும் நினைக்கிறோம். இந்த நினைப்பை எங்கிருந்து வந்தது ? யாரோ சொன்னது, எங்கேயோ படித்தது....

நாம் சிலவற்றை நம்புகிறோம், சிலவற்றை நம்புவதில்லை. ஏன் ?

சில விஷயங்கள் நமக்கு பிடிக்கிறது. சில பிடிப்பதில்லை. ஏன் ?

நாம் சிலவற்றை நியாயம் என்று நினைக்கிறோம். சிலவற்றை அநியாயம்  என்று  நினைக்கிறோம். ஏன் ?

எப்போதோ யாரோ சொன்னது. எங்கேயோ படித்தது. அது தான் உண்மை என்று நினைக்கிறோம்.

அது தான் உண்மையா ?

நாம் பின்பற்றும் மதம் மட்டும்தான் சரியா ? மற்ற மதங்கள் சொல்வதெல்லாம் தவறா ?

சரி, அதுவும் சரியான மதம் என்று ஒத்துக்கொண்டாலும் , இரண்டு மதங்களுக்கும் இடையில் வேறுபாடு இருந்தால் என்ன செய்வது ? இரண்டும் எப்படி  சரியாக இருக்க முடியும் ?

அதையெல்லாம் விட்டு விடுவோம்....

இறைவன் இருக்கிறானா ? இருந்தால் எப்படி இருப்பான் ?

இறைவனைப் பற்றி நமக்கு ஒரு அபிப்பிராயம் இருக்கிறது அல்லவா ? அந்த அபிப்ராயம்  எங்கிருந்து வந்தது ?

படித்தது, கேட்டது ...அவ்வளவுதானே ? வேறு விதமாக படித்து இருந்தால், வேறு விதமாக கேட்டிருந்தால் நம் அபிப்ராயம் மாறி இருக்கும் அல்லவா ? அப்படி என்றால் எதுதான் இறைவன் ?

நம் மனதை பல மாசுகள், குற்றங்கள், குழப்பங்கள் சூழ்ந்து நிற்கின்றன. அவற்றை நீக்கினால் உண்மை தெரியும்.

சிவன் என்பது வேறு எங்கோ இல்லை. ஏதோ இமய மலையில், பனியில் , உட்கார்ந்து இருக்கும் ஆள்  இல்லை. நீங்கள்தான் சிவன்.

"ஹா..நான் எப்படி சிவனாக முடியும் " என்று கேட்பீர்கள்.

நான் சொல்லவில்லை, மணிவாசகர் சொல்கிறார்.

"சித்த மலம் தெளிவித்து சிவமாக்கி" என்கிறார்.

என்னுடைய சித்தத்தில் உள்ள குழப்பங்களை எல்லாம் தெளியவைத்து என்னை சிவமாக்கி விட்டாய் என்கிறார்.

சித்தத்தில் உள்ள குழப்பங்கள் தெளிந்து விட்டால் சீவன் சிவமாகிவிடும்.

சீவன் வேறு சிவன் வேறு அல்ல. ஆனால் இந்த சீவன் தான் வேறு சீவன் வேறு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறது. காரணம், குப்பைகளை தனது சித்தத்தில் அது அடைத்து வைத்துக் கொண்டு இருக்கிறது.

அந்த குப்பைகளுக்கு உள்ளே எங்கோ ஒரு மாணிக்கம் இருக்கிறது. அந்த மாணிக்கம் , தான் ஒரு குப்பை என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. குப்பையை விலக்கினால் ,ஒளி விடும் மாணிக்கம் வெளிப்படும்.

பாடல்

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


பாடல்

முத்தி நெறி = முக்தி அடையும் வழியை

 அறியாத = அறியாத

மூர்க்கரொடு = மூர்க்கர்களோடு

முயல்வேனைப் = சேர்ந்து இருப்பேனை

பத்திநெறி = பக்தி வழியை

அறிவித்துப் = அறியும்படி செய்து

பழவினைகள் = பழைய வினைகள்

பாறும்வண்ணஞ் = அற்றுப் போகும் படி செய்து

சித்தமலம் = சித்தத்தில் உள்ள குற்றங்களை, மாசுகளை, குறைகளை

அறுவித்துச் = விலக்கி

சிவமாக்கி  = என்னையும் சிவமாகச் செய்து

எனையாண்ட = என்னை ஆண்டு கொண்ட

அத்தனெனக் = அத்தனாகிய நீ எனக்கு

அருளியவாறு = அருள் செய்தவாறு

யார்  பெறுவார் = யாரால் அடைய முடியும்

அச்சோவே = அச்சோ (வியப்பு குறி )


சித்தமலம் தெளிவித்து சிவமாகச் செய்ய என்ன செய்ய வேண்டும் ?

இறைவன் நமக்கு ஏன் அந்த மாதிரி செய்ய மாட்டேன் என்கிறார் ? மணிவாசகருக்கு  மட்டும் அருள் செய்தாரே ?

மணிவாசகரே சொல்கிறார் - "யார் பெறுவார் ". யாரால் பெற முடியும் என்று கேட்கிறார். 

பெறுவதற்கு வழியும் சொல்கிறார். 

"முத்தி நெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனை "

முக்தி நெறி அறியாத மூர்கள் நட்பை விட வேண்டும். மூர்க்கர்கள் என்றால் யார் ?

பிடிவாதம் பிடிப்பவர்கள். அடம் பிடிப்பவர்கள். தான் சொல்வதே சரி என்று சாதிப்பவர்கள். அவர்களை மூர்க்கர்கள் என்று சொல்லுவார்கள். 

எதிலும் திறந்த மனம் வேண்டும். உண்மையை தேடுகின்ற தாகம் வேண்டும். ஆராய்கின்ற மன பக்குவம் வேண்டும். எனக்கு எல்லாம் தெரியும், நான் சொல்வதே உண்மை, நான் அறிந்ததே சத்யம் என்ற அடம் பிடிக்கக் கூடாது. 

"நெஞ்சக் கல்லு நெகிழ வேண்டும்"

"பக்தி நெறி அறிவித்து"

மூர்க்கர்களை விட்டு விலகிய பின், பக்தி நெறியில் செல்ல வேண்டும். 

மூர்க்கர்களை விட்டு விட்டு, நல்லவர்களை பின் பற்ற வேண்டும். 

அப்படி செய்தால் , பழைய வினைகள் நம்மை விட்டு விலகும். 

அது விலகும் போது சித்த மலம் விலகும். 

சித்த மலம் விலகினால், சிவமாவோம். 

திருத் தொண்டர் தொகை பாடிய சுந்தரர் , அந்த பட்டியலில் மணி வாசகரை சேர்க்கவில்லை. 

ஏன் ? மணிவாசகர் திருத்தொண்டர் இல்லையா ?

இல்லை. 

அவர் சிவமாகவே மாறி விட்டார். அவர் தொண்டர் இல்லை. 

"சிவமாக்கி எனை ஆண்ட" என்கிறார் மணிவாசகர்.

உரையை விட்டு விடுங்கள். பாடலை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். 

நேரே உங்கள் மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும். 




Wednesday, October 18, 2017

திருக்குறள் - பயனில சொல்லாமை

திருக்குறள் - பயனில சொல்லாமை 


நல்ல பேர் வாங்குவது, செல்வம் சேர்ப்பது என்பதெல்லாம் மிக கடினமான செயல்.

ரொம்ப உழைக்க  வேண்டும்.  கடுமையாக உழைத்தால்தான் நல்ல பெயரும், புகழும், செல்வமும் கிடைக்கும். அதுவும் ஏதோ ஒரு சில நாளிலோ அல்லது மாதத்திலோ வந்து விடாது. ஆண்டு பல ஆகும்.

அப்படி சேர்த்த  பெயரையும்,புகழையும் கட்டி  காப்பது அதை விட கடினம்.

ஒரு நொடியில் புகழ் போய்விடும், ஒரு தவறான முடிவில் செல்வம் போய் விடும்.

நல்லவர்கள், பண்புள்ளவர்கள், இனியவர்கள் தாங்கள் சிரமப் பட்டு சேர்த்த பேரையும் , செல்வத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஒன்றே ஒன்று நிச்சயமாக செய்யக் கூடாது

அது என்ன ?

பயன் இல்லாத சொற்களை ஒரு போதும் பேசக் கூடாது

பயனில்லாத சொற்களை பேசினால் சீர்மையும் சிறப்பும் போய் விடும் என்கிறார்  வள்ளுவர் ...

பாடல்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்


பொருள்

சீர்மை = புகழ், நல்ல பெயர்

சிறப்பொடு = பெற்ற சிறப்புகள் (பட்டம், பதவி, செல்வம், )

நீங்கும் = ஒருவனை விட்டு நீங்கும்

பயன்இல = பயன் இல்லாத

நீர்மை = நீர் போல

உடையார் = உயர்ந்த குணம் உடையவர்கள்

சொலின் = சொன்னால்

எனவே, நீங்க சேர்த்து வைத்த நல்ல பெயர், புகழ், செல்வம் , பட்டம் , பதவி , செல்வாக்கு இவற்றை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால், பயன் இல்லாத சொற்களை சொல்லாமல் இருங்கள்.

பயன் இல்லாத சொல் என்றால் என்ன ?

மற்றவர்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பயன் இல்லாத சொல் என்று உரை எழுதுகிறார்  பரிமேலழகர்.


நாம் எதையாவது சொல்ல வேண்டும் என்றால், அது கேட்பவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில்   பயன் உள்ளதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பேசாமல் இருப்பது நல்லது.

யோசித்துப் பார்ப்போம்.

நாம் பேசுவதில் எத்தனை மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது என்று ?

அரட்டை, chat , "சும்மா தான் கூப்பிட்டேன்", whatsapp , facebook comments இதெல்லாம் மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் நன்மை பயக்கிறது என்று சிந்திப்போம்.

அதே போல, மற்றவர்கள் நம்மிடம் பேசும் போது , இந்த பேச்சை கேட்பதால் நமக்கு என்ன பலன் என்று யோசிக்க வேண்டும்.

டிவி சீரியல்கள், விவாத மேடைகள், பட்டி மன்றங்கள், போன்றவற்றை கேட்கும் போது , சிந்திக்க வேண்டும்  இதனால் பயன் உண்டா என்று.

பயனுள்ளவற்றை பேச வேண்டும் என்றால் அப்படிப்பட்ட விஷயங்களை நாம் முதலில்  அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா ? அதற்கு நிறைய படிக்க வேண்டும், படித்தவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவற்றை நம் அனுபவத்தோடு சேர்த்து பார்க்க வேண்டும்.

அப்போது நமது அறிவின் எல்லை விரியும். விரிந்த அறிவு பயன் உள்ள சொற்களை தரும்.

பேச்சை குறைப்போம்.

தேவை இல்லாதவற்றை கேட்பதை தவிர்ப்போம்.

நல்லதை படிப்போம், கேட்போம்.

நல்லவற்றை பேசுவோம்.

இது நண்பர்கள் மத்தியில் மட்டும் அல்ல. வீட்டில், மற்ற உறவுகளின் மத்தியில், அலுவலகத்தில், எல்லா இடத்திலும் கடை பிடிக்க வேண்டிய ஒன்று.

ஏழு வார்த்தையில் எவ்வளவு  விஷயம்.

சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_18.html

Monday, October 16, 2017

திருக்குறள் - கூடா நட்பு

திருக்குறள் - கூடா நட்பு 


உலகிலேயே சிறந்த உறவு நட்புதான்.

அது எவ்வளவு சிறந்ததோ அவ்வளவு ஆபாத்தானதும் கூட.

சரியான நண்பர்கள் நமது வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டு செல்ல உதவுவார்கள்.

நண்பர்களை தவறாக தேர்ந்தெடுத்து விட்டால், அது போன்ற ஆபத்தும் இல்லை.

அதை வள்ளுவர் கூடா நட்பு என்கிறார். அதற்கு 10 பாடல் எழுதி இருக்கிறார் என்றால் அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள  முடியும்.

தவறான நண்பர்கள், நம்மை தீய வழியில் கொண்டு சென்று தாங்க முடியாத துன்பத்தில் அழுத்தி விடுவார்கள்.

"நீங்க பணத்தை மட்டும் போடுங்கள், உழைப்பு என்னது. உங்களுக்கு இலாபத்தில் பங்கு " என்று ஆசை காட்டி நம் பணத்தை கவர்ந்து கொள்வார்கள்.

"இதுல போடுங்க, உங்க பணம் ஒண்ணுக்கு இரண்டாகும் " என்று தேவையில்லாத இடங்களில் நமது பணத்தை முதலீடு செய்ய வைத்து நம்மை நட்டத்தில் கொண்டு செலுத்தி விடுவார்கள்.

இவர்கள் எல்லாம் பார்க்க நல்லவர்கள் போலவும், நண்பர்கள் போலவும்  இருப்பார்கள்.

நம்ம நல்லதுக்குத்தானே சொல்கிறார்கள் என்று நாம் நினைப்போம்.

அந்த மாதிரி ஆள்களை "பட்டடை" போன்றவர்கள் என்கிறார் வள்ளுவர்.

பட்டடை என்றால் என்ன தெரியுமா ?

இரும்பை சூடாக்கி அடிக்க அந்த சூடான இரும்பின் கீழ் ஒரு இரும்பு பலகையை வைத்து இருப்பார்கள். அதன் மேல் வைத்துதான் இரும்பை அடிப்பார்கள். அந்த அடிப் பலகைக்கு பெயர் பட்டடை.

அந்த பட்டடை இருக்கிறதே, வெளியே இருந்து பார்க்க அது ஏதோ அந்த சூடான இரும்பை தங்குவது போல இருக்கும். ஆனால், உண்மையில், அந்த இரும்புப் பலகையால் தான் , அந்த சூடான இரும்புக்கு எல்லா அடியும்  விழுகிறது. அந்த பட்டடை இல்லாவிட்டால், சூடான இரும்பு துண்டுக்கு ஒரு அடியும் விழுந்திருக்காது.

அது போல சில பேர் நம் வாழ்வில் நமக்கு நல்லது செய்பவர்கள் போல இருப்பார்கள். ஆனால், அவர்களால்தான் நமக்கு அனைத்து துன்பங்களும்  வரும்.

பாடல்

சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை 
நேரா நிரந்தவர் நட்பு.

பொருள்

சீரிடங் காணின் = சரியான இடம் வரும்போது.

எறிதற்குப் = விலக்குவதற்கு

பட்டடை = பட்டடை  போல

நேரா = மனதோடு ஒன்றாதவர்

நிரந்தவர் நட்பு = கூடியவர்கள் நட்பு.


அந்த மாதிரி ஆட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதவி செய்கிறேன் பேர்வழி  இல்லாத துன்பத்தில் எல்லாம் நம்மை ஆழ்த்தி விடுவார்கள். 

சிந்தித்துப் பாருங்கள். உங்கள் துன்பங்கள் எங்கிருந்து வந்தன என்று. 

உங்கள் வாழ்வில் யாரேனும் அது போன்ற நண்பர்கள் இருந்தால், அவர்களை  விட்டு விலகிச் செல்லுங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_16.html


Wednesday, October 11, 2017

ஒளவையார் பாடல் - மரம் போல் பொறுமை

ஒளவையார் பாடல் - மரம் போல் பொறுமை 


ஒரு வீட்டில் , சில சமயம் ஒரு நபர் ஏதோ ஒரு வழியில் தவறாகப் போய் விடலாம்.

வீட்டுக்கு அடங்காத பிள்ளை.

எடுத்தெறிந்து பேசும் மருமகள்.

மரியாதை இல்லாத மருமகன்.

ஒட்டாத சம்பந்தி.

கொடுமைக்கார மாமியார்.

பொறுப்பிலாத கணவன்.

ஊதாரி மனைவி

என்று யாரோ , எங்கேயோ தடம் பிரண்டு போய் விடலாம்.

அவர்களை என்ன செய்வது ? முடிந்தால் திருத்தலாம்.

இல்லை என்றால் ?

கை கழுவி விடலாமா ?

கூடாது என்கிறார் ஒளவையார்.

சகித்துத் தான் போக வேண்டும்.

எத்தனை காலம் என்று கேட்டால், ஆயுள் காலம் முழுவதும் சகிக்கக்தான் வேண்டும்.

வீட்டில் ஒருவர் சரியில்லை என்றால், வெளியில் சொல்லக் கூடாது. தாங்கிக் கொள்ளத்தான்  வேண்டும்.

விடாது தீமை செய்தாலும், அப்படி தீமை செய்பவர்களை கடைசிவரை வெறுக்காமல் காப்பார்கள் ஆன்றோர். தன்னை வெட்டுபவனுக்கும் கடைசிவரை நிழல் தரும் மரத்தைப் போல.

பாடல்

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்


பொருள்

சாந்தனையும் = சாகும் வரை

தீயனவே  = தீமைகளையே

செய்திடினும் = செய்தாலும்

தாம் = பெரியவர்கள்

அவரை = அந்த தீமை செய்பவர்களை

ஆந்தனையும் = ஆகும் வரை, அதாவது முடிந்தவரை ,

காப்பர்  = காவல் செய்வார்கள்

அறிவுடையோர் = அறிவுடையவர்கள்

மாந்தர் = மக்கள்

குறைக்கும் = தன்னை குறை செய்யும் (வெட்டும்)

தனையும் = செய்தாலும்

குளிர் = குளிர்ச்சியான

நிழலைத் தந்து = நிழலை தந்து

மறைக்குமாம் = வெயிலில் இருந்து மறைக்கும்

கண்டீர் = கண்டு கொள்ளுங்கள்

மரம் = மரம்

துன்பம் செய்தாலும், தவறு செய்தாலும்,  சொன்ன பேச்சு கேட்கா விட்டாலும், ஒத்துப் போக வில்லை என்றாலும்....சகித்து, அவர்களுக்கும் நல்லதே செய்யுங்கள்.

குடும்பம் நன்றாக இருக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_56.html



Tuesday, October 10, 2017

சிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்து

சிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்து 


எப்போதுமே நல்லதையே பேச வேண்டும். மங்களகரமான சொற்களையே பயன் படுத்த வேண்டும் என்று நம் முன்னவர்கள் ஒரு விதியாகவே செய்து வைத்து இருந்தார்கள்.

அமங்கல சொற்களை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்கள்.

சொற்களுக்கு வலிமை உண்டு. அவை சொன்னது போல பலித்து விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

இந்த நம்பிக்கை நமது இலக்கியங்களில் பரவிக் கிடக்கிறது.

சிலப்பதிகாரத்தில், கோவலனுக்கும், கண்ணகிக்கும் திருமணம் நடக்கிறது. ஊரே திரண்டு வந்திருக்கிறது. எல்லோரும் மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

பாடல்


விரையினர், மலரினர், விளங்கு மேனியர், 
உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர்,
சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர்,
ஏந்துஇள முலையினர், இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை
முளைக் குடம் நிரையினர், முகிழ்த்த மூரலர்,
போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடி அன்னார், 
‘காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்,
தீது அறுக!’ என ஏத்தி, சில் மலர் கொடு தூவி,
அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்-’


பொருள்

விரையினர் = மணம் பொருந்திய பெண்கள். பெண்ணுக்கு ஒரு மணம் உண்டு.

இறைவன் திருவடிக்கு மணம் உண்டு என்கிறார் மணிவாசகர்

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங்
கைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே.


மலரினர் = மலரினை கையில் கொண்டவர்கள்

விளங்கு மேனியர் = விளக்கு போல ஒளி விடும் மேனி உடைய பெண்கள்

உரையினர் = நன்கு தெளிவாக பேசுபவர்கள்

பாட்டினர் = இனிமையாக பாடுபவர்கள்

ஒசிந்த நோக்கினர் = சாய்ந்த கண்ணால் பார்ப்பவர்கள்

(சைட் அடிப்பவர்கள் என்று நாசூக்காக சொல்கிறார் இளங்கோ அடிகள்)

சாந்தினர் = சந்தனம் போன்ற சாந்தினை பூசியவர்கள்

புகையினர் = சாம்பிராணி போன்ற நறுமண புகை போட்டு கூந்தலையும், உடலையும்  மணமாக வைத்து இருப்பவர்கள்

தயங்கு கோதையர் = தயங்கி தயங்கி மென்மையாக நடக்கும் பெண்கள்

ஏந்துஇள முலையினர் = உயர்ந்து நிற்கும் இளமையான மார்பகங்களை உடையவர்கள்

இடித்த சுண்ணத்தர் = பௌடர் பூசி இருப்பவர்கள். சுண்ணம் என்றால் பொடி. வாசனைப் பொடி போட்டு இருப்பார்கள். அதைத்தான் நான் பௌடர் என்று சொன்னேன்.

திருப்பொற்சுண்ணம் என்று பத்து பாதல் எழுதி இருக்கிறார் மணிவாசகர்.

பொடி இடிக்கும் போது இறைவன் நாமத்தை சொல்லிக் கொண்டே பெண்கள் இடிப்பார்களாம்.

முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமக ளோடுபல் லாண்டி சைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.

என்பது திருவாசகம்


சுண்ணம் இடிப்பார் தம் சுவை மிகுந்த பண்களிலும் மனதை பறி கொடுத்தேன் பாவியேன் என்பார் பாரதியார்


ஏற்றநீர் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்
பொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒளியினிலும்
சுண்ணம் இடிப்பார்தம் சுவை மிகுந்த பண்களிலும்
பண்ணை மடலார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்’’

என்பது  பாரதி பாடிய குயில் பாட்டு


விளக்கினர் = மங்கள விளக்கை கையில் ஏந்திய பெண்கள்

கலத்தினர் = பால், நெய் , அரிசி போன்ற மங்கள பொருள்களை குடத்தில் ஏந்தி வரும் பெண்கள்

விரிந்த பாலிகை முளைக் குடம் நிரையினர் = முளை குடம் கையில் ஏந்திய பெண்கள்

முகிழ்த்த மூரலர் = புன்முறுவல் பூத்த பெண்கள்

போதொடு = மலரோடு

விரி கூந்தல் = விரித்த கூந்தலை உடைய பெண்கள்

 பொலன் நறுங் கொடி அன்னார் = அழகிய பொன்னால் செய்த கொடியை போன்ற பெண்கள் வாழ்த்துகிறார்கள். எப்படி ?

‘காதலற் பிரியாமல் = காதலர்கள் பிரியாமல்

கவவுக் கை ஞெகிழாமல் = பிடித்த கை விட்டு விடாமல்

தீது அறுக!’ = தீமை ஏதும் இன்றி

என ஏத்தி = என புகழ்ந்து, வாழ்த்தி

சில் மலர் கொடு தூவி = சிறந்த மலர்களைத் தூவி

அம் கண் உலகின் = அந்த உலகில் (வானுலகில்)

அருந்ததி அன்னாளை = அருந்ததி போன்று

மங்கல நல் அமளி ஏற்றினார்- = மங்கலமான ஆரவாரமான திருமணச் சடங்கை செய்து முடித்தனர்.

திருமண வீட்டை கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் இளங்கோ அடிகள்.

ஆனால், கூர்ந்து கவனித்தால் தெரியும், எவ்வளவு அமங்கலமான வாழ்த்து இது என்று.  நினைத்து எழுதவில்லை. வந்து விழுகிறது வார்த்தை.

என்ன அமங்கலம் ?

‘காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்’ 

இது என்ன வாழ்த்து ?

நீங்கள் ஒன்றாக இருங்கள் என்று சொல்லலாம். "பிரியாமல் இருங்கள்" என்று வாழ்த்தினார்கள். பிரிவு என்ற சொல் வந்து விழுகிறது.

"பிடித்த கை நெகிழ்ந்து விடாமல்" ...பின்னால் கோவலன் கண்ணகியை விட்டு விட்டு மாதவியிடம் போகப் போகிறான் என்று கட்டியம் கூறுவதைப் போல , ஒரு எச்சரிக்கை போல அமைகிறது இந்த வாழ்த்து.

", தீது அறுக!"


தீமை இல்லாமல்  இருங்கள் என்று வாழ்த்தினார்கள். நல்லா இருங்கள் என்று சொல்வது  ஒரு வழி. தீமை இல்லாமல் இருங்கள் என்று சொல்வது இன்னொரு வழி.

இது எப்படி இருக்கிறது என்றால்

"மண மக்களாகிய நீங்கள் வண்டியில் அடி படாமல், கை கால் உடைத்துக் கொள்ளாமல்,  எய்ட்ஸ் போன்ற நோய் வராமல்,  கடன் வாங்கி அல்லல் படாமல் , அற்ப ஆயுளில் மண்டையைப் போடாமல் " வாழுங்கள் என்று வாழ்த்துவது போல இருக்கிறது.

அர்த்தம் என்னவோ நல்லதுதான். இருந்தும் வார்த்தைகள் மங்கல வார்த்தைகள் இல்லை.

கோவலன் கண்ணகி வாழ்க்கை எப்படி இருந்தது என்று தெரியும் தானே.

எனவே எப்போதும் நல்ல, உயர்ந்த சொற்களையே பேசி பழக வேண்டும். பிள்ளைகளுக்கும்  சொல்லித் தாருங்கள்.

கோபத்தில் திட்டினாலும் அமங்கல சொற்களை சொல்லவே கூடாது.

பல திருமண அழைப்பிதழ்களில் , தேவாரத்தில் இருந்து ஒரு பாடல் எடுத்து போடுவார்கள். அதை கூட தவறு என்று சொல்லும் பெரியவர்களும் இருக்கிறார்கள்.  அதில் ஒரு அமங்கல சொல் இருக்கிறது என்று அதை தவிர்க்கும் படி கூறுவார்கள்.

அது என்ன பாடல் தெரியுமா ?


http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_10.html

Monday, October 9, 2017

கம்ப இராமாயணம் - பூனை வாயில் கிளி போல்

கம்ப இராமாயணம் - பூனை வாயில் கிளி போல் 


விராதன் என்ற அரக்கன் சீதையை தூக்கிக் கொண்டு செல்கிறான். அவனை துரத்திக் கொண்டு இராமனும் இலக்குவனும் செல்கிறார்கள். "என்னை யாராலும் கொல்ல முடியாது. இந்த பெண்ணை விட்டு விட்டு ஓடி விடுங்கள் " என்று அவன் சொல்கிறான்.

இராமனும், இலக்குவனும் வில்லை கையில் எடுக்கிறார்கள்.

விராதன், சண்டைக்கு தயாராகிறான். அவன் கையில் அகப்பட்ட சீதை , பூனை கையில் சிக்கிய கிளி போல தவிக்கிறாள்.

பாடல்

வஞ்சகக் கொடிய பூசை நெடு
     வாயில் மறுகும்
பஞ்சரக் கிளி எனக் கதறு
     பாவையை விடா,
நெஞ்சு உளுக்கினன் என, சிறிது
     நின்று நினையா,
அஞ்சனக் கிரி அனான் எதிர்
     அரக்கன் அழலா

பொருள்

வஞ்சகக் = வஞ்சகமான

கொடிய =கொடுமையான

பூசை = பூனை

நெடு வாயில் = பெரிய வாயில்

மறுகும் = சிக்கித் தவிக்கும்

பஞ்சரக் கிளி = கூண்டுக் கிளி

எனக் = போல

கதறு = கதறுகின்ற

பாவையை விடா = பெண்ணாகிய சீதையை விடாமல்

நெஞ்சு உளுக்கினன் என = நெஞ்சம் துணுக்குறவன் போல

சிறிது = கொஞ்ச நேரம்

நின்று =நின்று

நினையா = சிந்தித்தான்

அஞ்சனக் = கரிய

கிரி = மலை

அனான் = போன்ற

எதிர் = எதிரில் நிற்கும் இராமனை

அரக்கன் = அரக்கன்

அழலா = தீப்போல நோக்கினான்


இங்கே "நின்று நினையா " என்ற தொடரில் , நினையா என்றால் நினைக்க மாட்டாமல், அல்லது நினைக்காமல் என்று தான் பொருள் வர வேண்டும் அல்லவா ? எதிர்மறை பொருள் வர வேண்டும். ஓடாத சினிமா படம் என்று கூறுவது போல. 

ஆனால், "நின்று நினைத்து " என்ற பொருளில் வருகிறது. 

என்ன ஒரே குழப்பாக இருக்கிறதே ? நினையா என்றால் நினைத்து என்று எப்படி  பொருள் கொள்வது ?

கொஞ்சம் இலக்கணம் படிப்போம். 

பொதுவாக சொற்களை இரண்டு பெரும் பிரிவாக பிரிக்கலாம். 

பெயர் சொல் 
வினைச் சொல் 

(இடைச் சொல், உரிச் சொல் என்று இருக்கின்றன. அவற்றை பின்னால் பார்ப்போம்).

இதில் வினைச் சொல் என்பது செயலை குறிக்கும் சொல். 

ஓடு, பாடு, நட , தூங்கு போன்றவை வினைச் சொல். வினையை குறிக்கும் சொல் வினைச் சொல். 

சரி தானே ? இதுவரை சிக்கல் இல்லையே ?

அடுத்த படிக்கு போவோம். 

இந்த வினைச் சொல் சில சமயம் முழுமையாக வராமல் , கொஞ்சம் குறைபட்டு நிற்கும். அதற்கு எச்சம் என்று பெயர். வினையில் குறைபட்டு இருப்பதால் அதை வினையெச்சம் என்போம். (பெயரில் குறைபட்டு நின்றால் அதற்கு பெயரெச்சம் என்று பெயர்).


அதற்கு என்ன உதாரணம் ?

நடந்து 

என்று சொன்னால் , அது முடியவில்லை. 

நடந்து சென்றான் 
வந்து நின்றான் 

நடந்து , வந்து என்பன வினையெச்சம். 

புரிகிறது அல்லவா ?

அது வினையெச்சமாகத்தான் இருக்க வேண்டுமா ? வேறு விதமாக இருக்கக் கூடாதா என்று கேட்கலாம். முயன்று பாப்போம். 

நடந்து முருகன்.
வந்து மயில் 


சரியாக இல்லை அல்லவா ? ஏதோ நெருடுகிறது அல்லவா ? 

நடந்து என்பது ஒரு பெயரைக் கொண்டு முடியாது. ஒரு வினையைக் கொண்டுதான் முடியும்.  

எனவே வினையெச்சம்தான் என்று நாம் உறுதியாக ஏற்றுக் கொள்ளலாம். 

சரி, இந்த வினையச்ச சொற்களை எப்படி உருவாக்குவது ?  எப்படி இனம் கண்டு கொள்வது ? இந்த நடந்து, வந்து போல இன்னும் எவ்வளவோ சொற்கள் இருக்கும் அல்லவா ? இன்னமும் புது புது சொற்களை உண்டாக்க வேண்டி இருக்கலாம் . அதற்கு ஏதாவது விதி இருக்கிறதா ? 

இருக்கிறது. 

அதற்க்கு வாய்பாடுகள் என்று  பெயர். ஆங்கிலத்தில் சொல்வது என்றால் template என்று சொல்லலாம். என்ன செய்ய, தமிழை ஆங்கிலம் மூலம் கற்க வேண்டி இருக்கிறது. 

ஒரு சொல் இந்த மாதிரி இருந்தால் அது வினையெச்சம் என்று கூறலாம். அந்த  "இந்த மாதிரி" என்று சொல்கிறோம் அல்லவா அதற்கு வாய்பாடு என்று பெயர். 

அதற்கு முன்னால் , வினை என்றாலே அதற்கு ஒரு காலம் இருக்க வேண்டும் அல்லவா ? வினை எப்போது செய்யப்பட்டது என்று தெரிய வேண்டும் அல்லவா ?

எனவே, நமக்கு இரண்டு தேவைகள் இருக்கிறது.

ஒன்று , வினையெச்சம் எப்படி இருக்கும் என்று தெரிய வேண்டும். 

இரண்டாவது, வினையெச்சத்தில் காலத்தை எப்படி அறிந்து கொள்வது ?

இதை எல்லாம் சிந்தித்து விடை எழுதி வைத்திருக்கிறார்கள். 

வினையெச்ச வாய்பாடுகள் மொத்தம் பன்னிரண்டு.  

செய்து செய்பு செய்யாச் செய்யூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
வான்பான் பாக்குஇன வினையெச் சம்பிற
ஐந்து ஒன்று ஆறும்முக் காலமும் முறைதரும் 

என்பது நன்னூல் சூத்திரம். 

ரொம்ப சலிப்பாக இருக்கிறதோ ? என்னடா இராமாயணம் சொல்லச் சொன்னால் இவன் நன்னூல் சொல்லி சலிப்பூட்டுகிறானே என்று தோன்றுகிறதா ?


Sunday, October 8, 2017

கம்ப இராமாயணம் - சாகா வரம் பெற்றவன்

கம்ப இராமாயணம் - சாகா வரம் பெற்றவன் 


பொதுவாகவே அரக்கர்கள் கடுமையாக தவம் செய்வார்கள். இறைவன் நேரில் வந்து "பக்தா, உன் பக்திக்கு மெச்சினோம். என்ன வரம் வேண்டும் " என்று கேட்பார்கள். உடனே, அந்த அரக்கர்கள் , "சாகா வரம் வேண்டும் " என்று கேட்பார்கள். "பிறந்தது எல்லாம் இறக்க வேண்டும் என்பது விதி. அதை யாராலும் மாற்ற முடியாது. வேறு ஏதாவது கேள்" என்று இறைவன் சொல்வான். அரக்கர்களும் எப்படியெல்லாம் சாவை வெல்ல முடியும் என்று சிந்தித்து வரம் கேட்பார்கள். இறைவனும் கொடுத்து விடுவான்.

என்ன வரம் கேட்டாலும், கடைசியில் அவர்களுக்கு மரணம் வந்தே தீருகிறது.

ஆனால், இதற்கு விதி விலக்காக , விராதன் இருக்கிறான்.

"நான் முகன் தந்த வரத்தினால் என் உயிர் என்னை விட்டு போகவே போகாது. இந்த  உலகங்கள் அனைத்தும் எதிர்த்து வந்தாலும், ஒரு ஆயுதம் கூட இல்லாமல் அவற்றை வெல்லுவேன். உங்களுக்கு (இராம இலக்குவனர்களுக்கு) உயிர் பிச்சை தருகிறேன். இந்த பெண்ணை (சீதையை) என்னிடம் விட்டு விட்டு ஓடி விடுங்கள் "

என்கிறான்.

பாடல்

‘ஆதி நான்முகன் வரத்தின் எனது
     ஆவி அகலேன்;
ஏதி யாவதும் இன்றி, உலகு
     யாவும் இகலின்,
சாதியாதனவும் இல்லை; உயிர்
     தந்தனென்; அடா!
போதிர், மாது இவளை உந்தி, இனிது’
     என்று புகல


பொருள்

‘ஆதி நான்முகன் = உயிர்களுக்கு எல்லாம் மூலமான  பிரமன்

வரத்தின் = வரத்தினால்

எனது ஆவி அகலேன் = என் உயிர் என்னை விட்டு போகாது. என்னை கொல்ல முடியாது

ஏதி யாவதும் இன்றி = காரணம் எதுவும் இன்றி. இங்கு படை அல்லது துணை எதுவும் இன்றி என்று கொள்ளலாம்.

உலகு யாவும் = உலகங்கள் யாவும்

இகலின் = சண்டைக்கு வந்தால்

சாதியாதனவும் இல்லை = அவற்றை வென்று முடிக்காமல் இருக்க மாட்டேன்

உயிர் தந்தனென் = உங்களுக்கு உயிர் பிச்சை தருகிறேன்

அடா! = அடேய்

போதிர் = போய் விடுங்கள்

மாது இவளை உந்தி = மாது இவளை விட்டு விட்டு

இனிது = சந்தோஷமாக

என்று புகல = என்று கூறினான்

உயிர் பிழைத்தோம் என்று சந்தோஷமாக ஓடி விடுங்கள் என்கிறான்.

உங்களுக்கு சகுனம், விதி இவற்றில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ. தமிழில் எப்போதும் , எதையும் மங்களமாகவே சொல்ல வேண்டும் என்று ஒரு விதியே வைத்து இருக்கிறார்கள்.  அமங்கலமான சொற்களை விலக்க வேண்டும்  என்பது விதி.

ஏன் என்றால், வார்த்தைகளுக்கு வலிமை உண்டு என்று நம்பினார்கள். நாம் என்ன சொல்கிறோமோ, அது நமது மனத்தில் பதிந்து அப்படியே நடக்கும் என்று உறுதியாக நம்பினார்கள்.

எனவே, எப்போதும் நல்லதையே சொல்ல வேண்டும், மங்களமான சொற்களையே பேச வேண்டும் விதித்து வைத்திருந்தார்கள்.

இதை தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் காணலாம். 

(யாருக்கேனும் படிக்க விருப்பம் இருந்தால் தெரிவியுங்கள். சமயம் கிடைக்கும் போது எழுதுகிறேன்)


இங்கே விராதன் சொல்வதை வேறு விதமாக பார்க்கலாம்.

"உயிர் போகாது என்று பிரமன் வரம் தந்திருக்கிறான். ஆனால், இப்போது இந்த பெண்ணை கடத்திக் கொண்டு போவதன் மூலம் என் உயிரை விடப் போகிறேன். நீங்கள் இந்த பெண்ணை அழைத்துக் கொண்டு போய் இனிதாக வாழுங்கள் "

என்று அர்த்தம் சொல்லலாம்.



‘ஆதி நான்முகன் வரத்தின் எனது
     ஆவி அகலேன்"

பிரமன் வரத்தினால் , என்னை கொல்ல முடியாது

 உயிர்  தந்தனென் = என் உயிரை தரப் போகிறேன்


போதிர், மாது இவளை உந்தி, இனிது = இந்த பெண்ணை அழைத்துக் கொண்டு போய் இனிமையாக வாழுங்கள்

என்று புகல = என்று கூறினான்.

அவன் எதை நினைத்துச் சொன்னானோ தெரியாது. அவன், தெரியாமல் சொன்ன வார்த்தை கூட பலித்தது. உயிரை விட்டான்.


எனவே, மறந்தும், அமங்களமான சொற்களை பேசக் கூடாது. 

கோபம் வரும்போது, எரிச்சல் வரும்போது, வருத்தத்தில் அமங்களமான சொற்களை சொல்லாமல் இருப்பது நலம். 

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_8.html

Saturday, October 7, 2017

கம்ப இராமாயணம் - அடா, மீள்தி, எங்கு அகல்தி

கம்ப இராமாயணம் - அடா, மீள்தி, எங்கு அகல்தி


விராதன் என்ற அரக்கன் வந்து சீதையை தூக்கிக் கொண்டு செல்கிறான். அவன் பின்னே, அவனை துரத்திக் கொண்டு இராமனும் இலக்குவனும் செல்கிறார்கள்.

"டேய், அவளை எங்கே தூக்கிக் கொண்டு போகிறாய். நில் " என்று அவனை அதட்டிக் கொண்டு கையில் வில்லோடு அவனை துரத்துகிறார்கள்.

பாடல்

காளை மைந்தர் அது கண்டு,
    கதம் வந்து கதுவத்
தோளில் வெம் சிலை இடம் கொடு
    தொடர்ந்து, சுடர் வாய்
வாளி தங்கிய வலங்கையவர்,
    வஞ்சனை, “அடா!
மீள்தி; எங்கு அகல்தி? ‘‘ என்பது
    விளம்ப, அவனும்.

பொருள்


காளை மைந்தர் = காளை போன்ற வீரம் கொண்ட மைந்தர்களான இராமனும், இலக்குவனும்

அது கண்டு = சீதையை விராதன் தூக்கிச் செல்வதைக் கண்டு

கதம் வந்து கதுவத் = கோபம் வந்து பற்றிக் கொள்ள

தோளில் = தோளில்

வெம் சிலை = கொடுமையான வில்லை

இடம் கொடு = இடக் கையில் பிடித்துக் கொண்டு

தொடர்ந்து, = விராதனை தொடர்ந்து துரத்திக் கொண்டு போய்

சுடர் வாய் = சுடர் விட்டு பிரகாசிக்கும்

வாளி தங்கிய = அம்பை தங்கிய

வலங்கையவர் = வலக்கையில்

வஞ்சனை, = வஞ்சனையாக

“அடா! = அடேய்

மீள்தி; = திரும்பி வா

எங்கு அகல்தி?  - எங்கு அகன்று போகிறாய்

என்பது = என்று

விளம்ப, = கேட்க

அவனும் = அந்த விராதனும்

விதி.  வேறென்ன சொல்ல. சக்கரவர்த்தி திருமகனும், அவன் தம்பியும் காட்டில்  ஏதோ ஒரு அரக்கனை விரட்டிக் கொண்டு செல்ல வைத்தது. கட்டிய மனைவியை எவனோ ஒருவன் தூக்கிக் கொண்டு போகிறான் . அவன் பின்னால் விரட்டிக் கொண்டு செல்ல விதி.

நமக்கு துன்பம் வரும்போது இவற்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.


இவர்கள் இப்படி அவனை விரட்டிக் கொண்டு போனபோது அவன் என்ன சொன்னான் தெரியுமா ?


http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_7.html

Friday, October 6, 2017

கம்ப இராமாயணம் - சீதையை தூக்கிச் செல்லுதல்

கம்ப இராமாயணம் - சீதையை தூக்கிச் செல்லுதல் 


இராவணன் சீதையை தூக்கிச் சென்றான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், சீதையை தூக்கிச் செல்வதில் இராவணன் முதல் ஆள் அல்ல. அவனுக்கு முன்னே இன்னொரு அரக்கன் சீதையை தூக்கிச் சென்றான்.

அவன் பெயர் விராதன்.

காட்டில் , சூர்பனகையை எல்லாம் பார்ப்பதற்கு முன் நிகழ்ந்தது இது.

என்ன நடந்தது என்று பார்ப்போம்.

இராமன், இலக்குவன் , மற்றும் சீதை கானகத்தில் நடந்து போகிறார்கள். அப்போது அவர்களை துரத்திக் கொண்டு விராதன் என்ற அந்த அரக்கன் வருகிறான்.

பாடல்


நில்லும், நில்லும் என வந்து, நிணம்
     உண்ட நெடு வெண்
பல்லும், வல் எயிறும், மின்னு பகு
     வாய் முழை திறந்து,
அல்லி புல்லும்அலர் அன்னம்
     அனையாளை, ஒரு கை, 
சொல்லும் எல்லையில், முகந்து உயர்
     விசும்பு தொடர

பொருள்

நில்லும், நில்லும் என வந்து "நில்லுங்கள், நில்லுங்கள் " என்று சொல்லிக் கொண்டே வந்து

நிணம் உண்ட = மாமிசம் உண்ட

நெடு = நீண்ட

வெண் பல்லும் = வெள்ளையான பற்களும்

வல் எயிறும் = வலிமையான கோரை பற்களும்

மின்னு = மின்னும் படி

பகு வாய் = பிளந்த வாயை

முழை திறந்து = குகை போல திறந்து வைத்துக் கொண்டு

அல்லி புல்லும்  = மலர் இதழ்கள் ஒன்றோடு ஒன்று கட்டி பிடித்த வண்ணம் நெருங்கி இருக்கும்

அலர் = தாமரை மலரில் இருக்கும்

அன்னம் அனையாளை = அன்னம் போன்றவளை

ஒரு கை = ஒரு கை

சொல்லும் எல்லையில் = செல்லும் எல்லையில், கையின் முடிவில், உள்ளங் கை

முகந்து = நீரை முகப்பது போல முகந்து கொண்டு

உயர் = உயரமான

விசும்பு = வானம்

தொடர = தொடும்படி சென்றான்

விராதன் வந்தான், சீதையை உள்ளங் கையில் தண்ணீரை முகர்வதைப் போல எளிதாக  எடுத்துக் கொண்டு வானில் பறந்து விட்டான்.

அப்புறம் என்ன நடந்தது ?


http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_6.html

Thursday, October 5, 2017

திருக்குறள் - பிரிவைச் சொல்லும் வளையல்கள்

திருக்குறள் - பிரிவைச் சொல்லும் வளையல்கள் 




அவள் அவனை காதலிப்பது ஊருக்குள் அரசல் புரசலாகத் தெரியும். யார் கேட்டாலும், "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ..." என்று சொல்லி மழுப்பி விடுவாள்.

ஆனால், இப்போது , அவளை விட்டு அவன் அயல் நாடு போய் இருக்கிறான்......

"போறதுக்கு முன்னால அவன்  என்ன சொன்னான்" ?

"நீ கவலைப் படாதே, சிறிது நாளில் வந்து விடுவேன்...தைரியமா இரு " என்று தான் சொல்லிவிட்டுச் சென்றான்...

சொல்லி எத்தனை நாள் இருக்கும் ? இரண்டு நாள் ? நாலு நாள் ? பத்து நாள் ?

இல்லை, அவ்வளவு எல்லாம் இருக்காது...நேத்தோ , முந்தா நாளோதான் சொன்னான்.

அப்படியா, அப்படினா இப்பதான் போனானா ? அப்ப திரும்பி வர ரொம்ப நாள் ஆகும்னு சொல்லு...

இல்ல இல்ல , நேத்து சொன்ன மாதிரி இருக்கு , ஆனால் சொல்லி ஒரு பத்து நாள் இருக்கும்.


பத்து நாளா ? இல்லையே அதுக்கு முன்னாடியே சொன்ன மாதிரி இருக்கே....

இப்படி அவன் பிரிவில் , அவள் தவிக்கிறாள். நாள் கணக்கெல்லாம் மறந்து விட்டாள்.

இருந்தும் அவனைக் காணாமல் மனம் ஒன்றிலும் ஒட்டவில்லை. சரியாக சாப்பிடுவது இல்லை,  தூங்குவது இல்லை.

மெலிந்து போனாள். கை மெலிந்து, கையில் உள்ள வளையல் தானே நழுவி கீழே விழுகிறது.

அவள் சொல்லா விட்டாலும், அவள் கையில் இருந்து நெகிழ்ந்து விழும் வளையல் ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறது, அவளுக்கு அவன் மேல் உள்ள காதலை.

அவள் என்ன செய்வாள் பாவம்.

ஒரு பக்கம், பிரிவு. அதில் வரும் துயரம்.

இன்னொரு பக்கம், அவன் வருவான் நம்பிக்கை.

இன்னொரு புறம், எப்போ வருவானோ என்ற ஏக்கம்.

இதற்கிடையில், இந்த வளையல் வேற , ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டு இருக்கிறது. வெட்கம் வேறு பிடுங்கி தின்கிறது அவளை.

ஒரு பெண் படும் அவஸ்தை , சொல்லி மாளாது.

இத்தனை உணர்ச்சி குவியலையும் வார்த்தையில் வடிக்க முடியுமா ?

வள்ளுவர் அதையும் செய்திருக்கிறார்...

படித்துப் பாருங்கள், உதட்டோரம் ஒரு சோகம் கலந்த இன்பப் புன்னகை படர்வதை உணர்வீர்கள்....


பாடல்


துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை


பொருள்

துறைவன் = தலைவன்

துறந்தமை = என்னை விட்டு சென்றமை

தூற்றாகொல் = சொல்லாதோ (தூற்றுதல் = அவதூறாக சொல்லுதல்)

முன்கை = முன் கையில் உள்ள

இறை = மணிக்கட்டு

இறவா = நெகிழாமல்

நின்ற வளை = நின்ற வளையல்

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_5.html




Wednesday, October 4, 2017

திருக்குறள் - விதியை வெல்ல முடியுமா ?

திருக்குறள் - விதியை வெல்ல முடியுமா ?


என்ன பண்ணி என்ன பலன். எல்லாம் விதி என்று பலர் நொந்து கொல்வதைப் பார்த்து இருக்கிறோம்.

விதி என்று ஒன்று இருக்கிறதா ? இருக்கிறது என்றால் அதை யார் நிர்ணயம் செய்கிறார்கள் ? கடவுளா ? எல்லாம் விதிப்படிதான் என்றால் மனிதன் ஏன் எந்த முயற்சியும் செய்ய வேண்டும் ? மனிதனுக்கு ஏதாவது சுதந்திரம் இருக்கிறதா ?  விதிக்கு நாம் எல்லாம் அடிமைகளா என்ற பல கேள்விகள் வரும்.

விதி என்பதை நமது சூழ்நிலை என்று வைத்துக் கொள்வோம். நாம் பிறந்த குடும்பம், வீடு, பெற்றோர், உடன் பிறப்பு , நாடு, நாம் படித்த பள்ளிகள் இவை எல்லாம் நாம் தேர்ந்தெடுக்க வில்லை. நமக்கு அமைந்தது. நம் விதி அது. நாம் விரும்பி பெற்றது அல்ல. நாம் விரும்பினாலும் மாற்ற முடியாது.

நமக்கு வரும் போட்டிகள், இடர்பாடுகள், எதிரிகள், சிக்கல்கள் இவையும் நமது விதிதான்.

பரிட்சைக்குப் போகிறோம். அதில் வரும் கேள்விகள் நம் விதி. நாம் அதை மாற்ற முடியாது.

வேலைக்கு மனு போடுகிறோம். நம்மோடு எத்தனை பேர் அந்த வேலைக்கு போட்டி போடுவார்கள். அதில் நம்மை விட சிறந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் ? அதுவும் விதி.

பொதுவாகவே , இந்த விதி , அதாவது நமது சூழ்நிலை , நமக்கு எதிராகவே இருக்கிறது  ?

ஏன் ?

இருக்கும் வாய்ப்புகள் குறைவு ? அதை அடைய நினைப்போர் அதிகம். எனவே  ,போட்டி, பொறாமை,  போன்றவை இருப்பது இயற்கை.

காரில் போகிறோம், விபத்து ஏற்பட்டு விடுகிறது. விதி.

அலுவலகத்தில் , செய்யாத தவறு நம் மீது வந்து விழுகிறது. அதுவும் விதி.

சரி, இப்படி எல்லாமே விதி என்றால், மனிதன் என்னதான் செய்வது ? எப்படித்தான் வாழ்வது ?

இந்த விதியை நம்மால் வெல்ல முடியாதா ?


முடியும் என்கிறார் ?

எப்படி என்றால் அதற்கு இரண்டே இரண்டு செயல்பாடுகள் அவசியம்.

விதிக்கு எதிராக நாம் போராட வேண்டும். அந்த போராட்டத்தில் நமக்கு வேண்டியது இரண்டு அம்சங்கள்.

முதலாவது, விடாமல் போராட வேண்டும்.

இரண்டாவது, வெற்றி கிடைக்கும் வரை வலிமையை ஏற்றிக் கொண்டே போக வேண்டும் நமது போராட்டத்தில்.

பாடல்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்


பொருள்


ஊழையும்  = விதியையும்

உப்பக்கம் = புறமுதுகு

காண்பர்  = காண்பர்

உலைவின்றித் = தளர்வின்றி

தாழாது = முயற்சியில் குறைவு இன்றி

உஞற்று பவர் = முயல்பவர்

எத்தனை நாள் ஆனாலும் விடாமல் போராட வேண்டும்.

முயற்சியை விட்டு விடக் கூடாது.

அது மட்டும் அல்ல, முயற்சி குறையக் கூடாது.

முதல் முறை முயன்றோம். முடியவில்லை என்றால், இரண்டாம் முறை முன்பைவிட   அதிக முயற்சி செலுத்த வேண்டும். அதை விட குறைவாக அல்ல.

இரண்டாம் முறையும் தோல்வி என்றால், மூன்றாம் முறை முயற்சியை இன்னும் அதிகரிக்க  வேண்டும்.

நிறைய பேர் கொஞ்சம் முயற்சி செய்வார்கள். தோல்வி வந்ததும் தளர்ந்து விடுவார்கள்.  "என்னால் அவ்வளவுதான் முடியும் ...முடிந்த எல்லா வழியும் முயற்சி செய்து  விட்டேன். இனி மேல் என்ன செய்வது "  என்று விரக்தி அடைந்து அமர்ந்து விடுவார்கள்.


தோல்வி வரும். முயற்சியை தளர விடக் கூடாது. அது மட்டும் அல்ல, அதை அதிகரிக்கவும் வேண்டும்.


பரீட்ச்சையில் தேற வேண்டுமா ? நல்ல வேலை கிடைக்க வேண்டுமா ? கிடைத்த வேலையில் மேலும் மேலும் முன்னேற வேண்டுமா ? போட்டிகளில் முதலில் வர வேண்டுமா ?  பணம் திரட்ட வேண்டுமா ?


மனம் தளராமல், முயற்சி குறையாமல் முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

அவ்வளவுதான் என்னால் முடியும் என்று ஒரு காலத்திலும் சொல்லக் கூடாது.

மேலும் மேலும் முயற்சியின் வலுவை அதிகரிக்க வேண்டும்.

அப்படி செய்தால், விதி என்ற அந்த பெரிய எதிரியை புறம் காட்டி ஓட விடலாம்.


உலகிலேயே பெரிய எதிரி விதி தான்.

வள்ளுவர் சொல்கிறார் "ஊழையும்" என்று . அதில் ஒரு "ம்" சேர்க்கிறார்.


ஊழை (விதியை) மட்டும் அல்ல, அதை விட பெரிய சிக்கல் எது வந்தாலும், அதையும் வெற்றி காண முடியும் என்கிறார்.

ஊழை வெற்றி காண்பது மட்டும் அல்ல, அதை ஓட ஓட விரட்டி அதன் புற முதுகை  காண முடியும் என்கிறார்.

ஊக்கம் தரும் குறள் . வாழ்வில் தளர்ச்சி வரும் போது , சோகம் துக்கம் வரும் போது இதை ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.

ஒரு புத்துணர்ச்சி தோன்றும். உலகையே வென்று விடலாம் என்று தோன்றும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_4.html

Monday, October 2, 2017

திருக்குறள் - அறிவின் பயன்

திருக்குறள் - அறிவின் பயன் 




அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை.

இந்த குறள் பற்றி முன்பு ஒரு தரம் பார்த்தோம். நவில் தொரும் நூல் நயம் போல படிக்க படிக்க , சிந்திக்க சிந்திக்க மேலும் மேலும் அர்த்தங்களை தருவது குறள்.


குறளின் எளிய விளக்கம் , மற்ற உயிர்களின் துன்பத்தை நம் துன்பம் போல நினைத்து அதை நீக்கா விட்டால், நாம் பெற்ற அறிவின் பயன் என்ன ? (ஒன்றும் இல்லை )

பொருள்

அறிவினான் = அறிவினால்

ஆகுவ துண்டோ = ஆகுவது உண்டோ ?

பிறிதின்நோய் = மற்றவற்றின் நோய் (துன்பம்)


தந்நோய்போல் = தன்னுடைய துன்பம் போல

போற்றாக் கடை = நீக்காவிட்டால்

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_2.html

சரி, இதில் என்ன ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா ?

சிந்திப்போம்.

ஏன் "தன் நோய் போல்" என்று கூறினார் ?

அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் போற்றாக் கடை என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ?

அது என்ன "தன் நோய் "


சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ளவர்கள், உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் , பல துன்பங்களை அறிய மாட்டார்கள்.

உதாரணமாக, ஒரு பெரிய பணக்காரன் , பசி என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியாது. வேளா வேளைக்கு உணவு அவனுக்கு கிடைத்து விடும்.  குளிர், வெயில் இவற்றின் கொடுமை அவனுக்குத் தெரியாது.

தனக்கு அந்த துன்பம் இல்லை என்பதால் வேறு யாருக்கும் அந்த துன்பம் இருக்காது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

நமக்கு உணவு இல்லாமல் , பசியால் வாடினால் எப்படி இருக்கும், என்ன செய்வோம் என்று நினைத்து பார்த்து மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.


ஒரு பிச்சைக்காரன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு பசியின் கொடுமை தெரியும் . தனக்கு பசி வந்தால் அவன் என்ன செய்வான் ? பிச்சை எடுப்பான்.  ஆனால் ஒரு செல்வந்தன் , தனக்கு பசி வந்தால் என்ன செய்வான் ?  "யப்பா, இந்த பசி ரொம்ப பொல்லாதது. ஒரு தரம் துன்பப் பட்டு விட்டோம்.  இனிமேல் இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு மட்டும் அல்ல. என் பெண்டாட்டி பிள்ளைகளும் இந்த பசியால் துன்பப் படக் கூடாது " என்று நினைத்து அதற்கு வேண்டியவற்றை செய்வான் அல்லவா.

அது போல,  மற்றவர்களுக்கு வரும் துன்பத்தையும் ஒருவன் துடைக்க வேண்டும்.  ஏதோ, ஒரு வேளைக்கு உணவு போட்டால் போதாது. எப்படி தன்னுடைய பசி கொடுமையை நிரந்தரமாக போக்க முயல்வானோ, அப்படி மற்றவர்கள்  துன்பத்தையும் போக்க வேண்டும்.

மற்றொன்று, பெண்களின் உடல் ரீதியான பிரச்னைகளை ஆண்கள் அறிந்து கொள்ளவே முடியாது. யோசிக்கலாம். கற்பனை பண்ணி பார்க்கலாம். அப்படி ஒரு பிரசவ வலி தனக்கு வந்தால் என்னவெல்லாம் வேண்டியிருக்கும் என்று  யோசிக்கும் ஒவ்வொரு ஆணும், அதை அந்த பெண்களுக்கும் அளிக்க முயல வேண்டும்.

மற்றொன்று, வீட்டிலோ, அல்லது உறவினருக்கோ, நண்பருக்கோ ஆரோக்கிய குறைவு ஏற்பட்டால், நமக்கு என்னென்ன வேண்டியிருக்கும் என்று  நினைத்து அவர்களுக்கு செய்ய வேண்டும்.

"பிறிதின்" என்றால் என்ன அர்த்தம். பிற மனிதர்கள் மட்டும் அல்ல, பிராணிகள், செடி கொடிகள்,  ஊர்வன, பறப்பன என்று எல்லாமே அந்த "பிறிதின்" என்பதில் அடங்கும். தன்னைத் தவிர மற்ற எல்லாம். நீர் நிலைகள்,  ஆகாயம், ஆறு, குளம், என்று அனைத்தும் அதில் அடங்கும்.

"போற்றா கடை".  போற்றுதல் என்றால் விலக்குதல் , காத்தல் , நீக்குதல், மதித்தல் என்று பல பொருள் உண்டு.


மற்றவர்கள் துன்பத்தை நீக்கினால் மட்டும் போதாது, அது மீண்டும் வராமல் காக்க வேண்டும். வருவதற்கு முன்பே அந்த துன்பங்களை மாற்றி வைக்க உதவி செய்ய வேண்டும்.

சில சமயம், நம்மால் மற்றவர்களின் துன்பத்தை மாற்றவோ குறைக்கவோ முடியாது. அவர்கள் நமக்காக படும் துன்பத்தை கண்டு தலை வணங்குவதைத் தவிர ஒன்றும் செய்து விட முடியாது. ஒரு பெற்றோர் படும் பாட்டுக்கு , ஒரு பிள்ளை என்ன செய்து விட முடியும் ? ஒரு தாயின் பிரசவ வேதனையை , அவள் பெறும் பிள்ளை ஒன்றும் செய்து விட முடியாது. அந்த வலியை பொறுத்துக் கொண்டு தன்னை ஈன்றெடுத்த தாயின் வலியை போற்றலாம். அவ்வளவுதான் செய்ய முடியும்.

"அறிவினான் ஆகுவது உண்டோ "...மற்ற உயிர்களின் துன்பத்தை தன் துன்பமாக நினைக்க அறிவு உள்ளவர்களால் தான் முடியும் .


எவ்வளவுதான் படித்தாலும் மற்றவர்களின் துன்பத்தை தன் துன்பமாக நினைக்க முடியாவிட்டால் அந்த அறிவினால் ஒரு பயனும் இல்லை.

அறிவு என்பது எத்தனை புத்தகங்கள் படித்திருக்கிறோம் என்பதல்ல, எத்தனை பட்டங்கள் பெற்றோம் என்பதல்ல, மற்றவர்களின் துன்பத்தை நம் துன்பமாக  எப்போது நினைக்கிறோமோ அதைப் பொறுத்தது.

"ஆகுவது உண்டோ "  ....சும்மா ஐயோ பாவம், எவ்வளவு துன்பப் படுகிறார்கள் என்று வருத்தப்படுவதோடு நின்று விடக் கூடாது. அது எல்லோராலும் முடியும்.  "ஆகுவது" என்றால் ஆக்க பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும். ஆக்குதல்  என்பதில் இருந்து வந்தது "ஆகுவது". உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும்.

திருக்குறள் என்ற நூலில், ஒரு குறளுக்காவது  முழு அர்த்தமும் கண்டு விட முடியுமா என்று தெரியவில்லை.

கடல் போல் விரிந்து கிடக்கிறது.  அத்தனை பெரிய அறிவுக் கருவூலம்.







Sunday, October 1, 2017

திருக்குறள் - கல்லாதவனின் அறிவு

திருக்குறள் - கல்லாதவனின் அறிவு 


என்னடா இது , தலைப்பே ஒரு மாதிரி இருக்கே என்று பார்க்கிறீர்களா ? கல்லாதவனிடம் அறிவு எப்படி இருக்கும் ?

அது தான் சிக்கலே.

கல்வி அறிவு இல்லாத பலர்,  அறிவுள்ளவர்களைப் போல பேசுவார்கள்.  பல அரசியல்வாதிகள், போலி சாமியார்கள், என்று இன்று நாட்டில் எவ்வளவோ பேர் தங்கள் பேச்சு சாமர்த்தியத்தால் பெரிய அறிவுள்ளவர்களைப் போல காட்டிக் கொள்வார்கள்.

அப்பாவி மக்களும், அவர்களை நம்பி ஏமாந்து அவர்களுக்கு வோட்டுப் போட்டு விடுகிறார்கள், அவர்களை நம்பி பணம் காசை பறி கொடுக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் பேசுவதைக் கேட்டால் படித்த பண்டிதர் மாதிரி இருக்கிறதே. அவ்வளவு உறுதியாக, தெளிவாக பேசுகிறார்களே. எப்படி நம்பாமல் இருப்பது ? அறிவில்லாமலா அப்படி பேசுவார்கள் ?

சரியான கேள்வி தான்.

நீங்கள் கடற்கரைக்கு போய் இருக்கிறீர்களா ? அங்கே , மணலில் நண்டு அங்கும் இங்கும் ஓடும். சில சமயம், அந்த நண்டு ஓடிய மணல் கோடுகள் எழுத்து வடிவில் இருக்கலாம். ஒரு 'ட' போல, ஒரு 'ப' போல , ஒரு 'ர' போல இருக்கலாம். அதற்காக , அந்த நண்டுக்கு தமிழ் தெரியும் என்று நாம் நினைப்போமா ?

அது போல, அறிவில்லாத மடையர்கள் கூட சில சமயம் நன்றாக பேசி விடலாம். அதற்காக , அவர்கள் பெரிய அறிவாளிகள் என்று நினைத்து அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - அறிவுள்ளவர்கள்.


பாடல்

கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் 
கொள்ளார் அறிவுடை யார். 

பொருள்

கல்லாதான்  = கற்காதவன்

ஒட்பம் = அறிவுடைமை

கழியநன்று ஆயினும் = மிக நன்றாக இருந்தாலும்

கொள்ளார் = அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

அறிவுடை யார் = அறிவுள்ளவர்கள்

எனவே, ஒருவர் பேசுவதை மட்டும் வைத்து அவரை எடை போட்டு விடக் கூடாது. அதற்கு, நாம் அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அது ஒன்றுதான் , ஏமாறாமல் இருக்க வழி. ***

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post.html

Tuesday, September 26, 2017

திருக்குறள் - வேலை செய்யும் வழி

திருக்குறள் - வேலை செய்யும் வழி 


எந்த ஒரு வேலையையும் எப்படிச்  செய்ய வேண்டும் என்று வள்ளுவர் சொல்லுகிறார்.

என்னிடம் கேட்டால் எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பேன். ஒழுங்காக செய்ய வேண்டும் என்பேன். விடா முயற்சியோடு செய்ய வேண்டும் என்பேன்.

வள்ளுவர் ஆயிற்றே. மிக மிக ஆழமாக சிந்தித்து சொல்கிறார்.

திட்டமிடுதல் என்றால் என்ன ? எதை திட்டமிட வேண்டும் ? எப்படி திட்டமிட வேண்டும் என்றெல்லாம் கேள்வி வரும் அல்லவா ?

அதை எல்லாம் விளக்க ஒண்ணே முக்கால் அடி குறள் போதுமா ? சுருக்கமாகவும் சொல்ல வேண்டும். அதே சமயம் தெளிவாகவும் சொல்ல வேண்டும், அது ஆழமானதாகவும் இருக்க வேண்டும்.

இதோ அந்தக் குறள்

பாடல்

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
           

பொருள்

ஊறொரால் = ஊறு + ஒரால் = ஊறு என்றால் தடை. துன்பம். ஒரால்  என்றால்
நீக்குதல், விலக்குதல்

உற்றபின் = வந்த பின்

ஒல்காமை = தளராமை , நடுங்காமை, சுருங்காமை

இவ்விரண்டின் = இந்த இரண்டின்

ஆறென்பர் = வழி என்பார்

ஆய்ந்தவர் கோள் = படித்து அறிந்தவர்களின் கோட்பாடு


முதலாவது, ஒரு வேலையை தொடங்குமுன் அதில் என்ன எல்லாம் சிக்கல் வரும், தடைகள் வரும்னு சிந்திக்கணும். நமக்கு ஆசையாக இருக்கிறது என்று யோசிக்காமல் கொள்ளாமல் காரியத்தில் இறங்கக் கூடாது.  அது வீடு வாங்குவதாக இருக்கட்டும், திருமணம், வேலை, தொழில் தொடங்குவது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆசை ஒரு புறம், ஆர்வம் ஒரு புறம் இருக்கட்டும். அவற்றை எல்லாம் தள்ளி வைத்து விட்டு , அந்த காரியத்தில் என்ன எல்லாம் தடை வரும், என்ன எல்லாம் சிக்கல் வரும், யார் தடை சொல்வார்கள், யார் இதை தடுக்க அல்லது கெடுக்க நினைப்பார்கள் என்று பட்டியல் போட்டுக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது, அந்த தடைகளை எப்படி வென்றெடுப்பது என்று வழி காண வேண்டும். எந்த காரியத்திலும் சில சிக்கல் இருக்கத்தான் செய்யும். அவற்றை எப்படி சமாளிப்பது என்று சிந்திக்க வேண்டும். அந்த வழி முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது, சரி நாம் எவ்வளவுதான் சிந்தித்து, காரியத்தில் இறங்கினாலும் நாம் எதிர்பாராத சிக்கல்கள், சவால்கள், தடைகள் வராமல் இருக்குமா ? வரும் என்கிறார் வள்ளுவர். நாம் எவ்வளவுதான் முன் கூட்டியே திட்டமிட்டாலும், எதிர்பாராத சிக்கல்கள் வரத்தான் செய்யும்.  நம்மை அதற்கு தயார் படுத்துகிறார். காதலிக்கும் போது உள்ள சுகம் திருமண வாழ்வில் இல்லாமல் போகலாம். இல்லாமல் போகும் என்று நினைக்கச் சொல்கிறார் வள்ளுவர்.

நான்காவது, சரி அப்படி வந்து விட்டால் என்ன செய்வது ? "ஒல்காமை " வேண்டும் என்கிறார். மனம் தளரக் கூடாது. பிரச்சனைகள் வரும். சிக்கல்கள் வரும். மனம் தளராமல் இருக்க வேண்டும். போராட வேண்டும்.

ஐந்தாவது, இதுதானா வழி. வேற வழி இல்லையா என்றால் , ஆராய்ந்து அறிந்த அறிஞர்கள் கண்ட வழி இது. உங்களுக்கு வேறு வழி தெரிந்தால் அதிலும் போகலாம். எதுக்கு சிரமப் படவேண்டும். நமக்காக சிரமப்பட்டு கண்டு பிடித்து வைத்திருக்கிறார்கள். அந்த வழியிலேயே போவது எளிதுதானே.

வாழ்க்கை என்பதே சிக்கல்களை, துன்பங்களை , சவால்களை , பிரச்சனைகளை எதிர்பார்த்து இருப்பதும், அவற்றை நீக்க போராடுவதும்தான். வேறு அல்ல.

ஒண்ணே முக்கால் அடியில் வாழ்க்கைத் தத்துவத்தை தருகிறார் வள்ளுவர்.

படிப்போம். நடக்க முயற்சிப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/09/blog-post_26.html

Monday, September 25, 2017

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில்

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில் 


வான் பொய்ப்பதும், பஞ்சம் வருவதும் என்றும்  உள்ளது தான்.

அது ஒரு வானம் பார்த்த பூமி. மழை வந்தால் , வாழ்க்கை.

ஏனோ தெரியவில்லை இரண்டு மூன்று ஆண்டுகளாய் கோபம் கொண்ட காதலியாய் வானம் முகம் திருப்பிக் கொண்டு போய் விட்டது. ஒரு புல் பூண்டு கூட இல்லை. பூமி கட்டாந்தரையாக போய் விட்டது. பஞ்சம் பிழைக்க ஊர் மக்கள் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக ஊரை காலி செய்து விட்டு போய் விட்டார்கள். செத்தாலும் இந்த மண்ணிலேலேயே சாவோம் என்று ஒரு சில வயதானவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அந்த ஊரில் இருக்கிறார்கள். மரங்களில் விளையாடும் அணில் சுதந்திரமாக வீடுகளுக்குள் சென்று வருகிறது. வீட்டை காலி பண்ணி விட்டு சென்றவர்கள் விட்டுச் சென்ற நெல் மணிகள், தானியங்கள், என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் இப்படி தின்கின்றன. வீடு திறந்து கிடக்கிறது. உள்ளே என்ன இருக்கிறது பூட்டி வைக்க ? அணில் தொட்டி முத்தத்தில் விளையாடுகிறது.  மற்றபடி ஊரில் உயிர் இல்லை.

இன்றுதான் அப்படி.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் , இந்த கிராமம் எப்படி இருக்கும் தெரியுமா ? தேரும் திருவிழாவும், ஆட்டமும் பாட்டமும், குதூகலமாய் இருந்தது. மாடு கன்னு ஒரு புறம், வண்டிகள் அசைத்து செல்வது ஒருபுறம், தெருவோரக் கடைகளும், பாடும் கூத்துமாய் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

இன்று, எல்லாம் கனவாய் பழங்கதையாய் போய் விட்டது.

அவளுக்கு அந்த ஊர் சொந்த ஊர் அல்ல. ஆனால் அந்த ஊருக்கு வந்து போனவள். சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்ததையும் பார்த்து இருக்கிறாள். இப்போது வெறிச்சோடிப் போன ஊரையும் பார்க்கிறாள்.

அவள் காதலன் அவளை விட்டு விட்டு வெளியூர் போயிருக்கிறான் - பொருள் தேட.

அவனில்லாத வெறுமை அவளை வாட்டுகிறது.

ஒரு விதத்தில் இந்த ஊர் போலத்தான் தன் வாழ்வும் என்று நினைக்கிறாள்.

அவன் இருந்த போது சந்தோஷமும், மகிழ்ச்சியாக இருந்தாள்.

அவன் இல்லாத போது வெறுமை சூழ்ந்து , சோகத்தில் இருக்கிறாள்.

அந்த கிராமம் போல.

பாடல்


காதலர் உழையராகப் பெரிதுவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற;
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே.


பொருள் 

காதலர் = காதலர்

உழையராகப் = உடன் இருந்த போது

பெரிதுவந்து = பெரிது உவந்து

சாறுகொள் = சாரம் நிறைந்த

ஊரின்  = ஊரில்

புகல்வேன்  = புகுந்தது போல இருந்தது

மன்ற = ஆனால்

அத்தம் நண்ணிய = பாலை நில வழி சென்ற

அங்குடிச் = அந்த குடிமக்கள் நிறைந்த

சீறூர் = சிறந்த ஊர்

மக்கள் போகிய = மக்கள் எல்லாம் போன பின்

அணிலாடு முன்றில் = அணில் ஆடும் முன் இல். இல்லத்தின் முன்னே, திண்ணையில் அணில் விளையாடும்

புலப்பில் = புலப்பு + இல் = தனிமையான இல்லம்

 போலப் = போல

 புல்லென்று = பொலிவு இழந்து

அலப்பென் தோழி = வருத்தம் கொள்வேன் தோழி

 அவர் அகன்ற ஞான்றே = அவர் என்னை விட்டு பிரிந்த பொழுது .

யாருக்காக வருந்துவது ? பிறந்து வளர்ந்த ஊரை விட்டு பஞ்சம் பிழைக்க எங்கோ சென்ற  அந்த மக்களை நினைத்தா ? சொந்த வீட்டை திறந்து போட்டு விட்டு, இனிமேல் திரும்பி வரும் எண்ணமே இல்லாமல் , இறுதியாக  விலகிப் போன  அந்த மக்களை நினைத்தா அல்லது

காதலனைப் பிரிந்து வாடும் அந்த இளம் பெண்ணை நினைத்தா ?

எத்தனையோ நூற்றாண்டுகள் கழித்தும் அந்த ஊரின் சோகம், அதன் தனிமை, அந்த மக்களின் சோகம் மனதுக்குள் என்னவோ செய்கிறது என்பது உண்மை.

http://interestingtamilpoems.blogspot.in/2017/09/blog-post_47.html




Saturday, September 23, 2017

திருக்குறள் - உருவு கண்டு எள்ளாமை வேண்டும்

திருக்குறள் - உருவு கண்டு எள்ளாமை வேண்டும் 


உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.

உருவத்தைப் பார்த்து ஒருவரை கேலி செய்யக் கூடாது. உருண்டு வரும் பெரிய தேருக்கு அச்சாணி போல உள்ளவர்களை உடையது உலகு

அவ்வளவுதானே. எளிமையான குறள் தானே . கடினமான சொல் எதுவும் இல்லையே. இதுக்கு எதுக்கு விளக்கம் என்று நினைப்போம்.

ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க குறளின் ஆழம் புரியும்.

வாருங்கள், சிந்திப்போம்.

அச்சாணி = அச்சாணி என்ன செய்கிறது ? தேரின் சக்கரம் கழண்டு விழாமல் தடுத்து நிறுத்துகிறது. அதை , எப்படி செய்கிறது ? பெரிய புத்திசாலித்தனம் கிடையாது, சிக்கலான வடிவம் கிடையாது. பின் எப்படி செய்கிறது என்றால், உறுதியாக , என்ன வந்தாலும் சரி, எவ்வளவு பாரம் வந்தாலும் சரி, எவ்வளவு அழுத்தம் வந்தாலும் சரி , இந்த சக்கரம் கழண்டு விழ விடுவதில்லை என்று உறுதியோடு இருக்கிறது.  அத்தனை பாரத்தையும் தாங்கிக் கொண்டு, தேரை நல்லபடி கொண்டு செல்ல உதவுகிறது. அது போல, ஒரு வீட்டை, நாட்டை, நிறுவனத்தை நல்லபடி கொண்டு செல்ல வேண்டும் என்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை, கடமை இருக்கும். அதை, விடாப் பிடியாக , உறுதியாக செய்ய வேண்டும். அப்போதத்தான், அந்த வீடோ, நிறுவனமோ, நாடோ தடுமாறி விழாமல் செல்லும்.

இரண்டாவது,  "உருள் பெரும் தேர்".   தேர் என்றால் வெறும் தேர் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.  வீடு, நாடு, நிறுவனம், அனைத்துக்கும் அது ஒரு உவமை.


மூன்றாவது,  தேரில் சப்பரம் தெரியும், வடம் தெரியும், அதில் உள்ள சாமி சிலை தெரியும், கும்பம் தெரியும், பூ வேலைப்பாடு தெரியும், சக்கரம் கூட தெரியும். ஆனால், இந்த அச்சாணி தெரியாது.  "இந்த தேர் விழாமல் இருக்க நான் தான் காரணம்.  என்னை யாரும் கண்டு கொள்வதில்லை" என்று அச்சாணி நினைத்து , கழண்டு முன்னால் வந்து நின்றால் , என்ன ஆகும் ?  அச்சாணி  அங்கு தான் இருக்க வேண்டும். அது போல, வீட்டை, நாட்டை கொண்டு செல்லும் சிலர்   இருப்பார்கள். அவர்கள் வெளியே தெரிவது இல்லை. அதற்காக  அவர்களை உதாசீனப் படுத்தக் கூடாது.

நான்காவது,  அச்சாணி எவ்வளவு பெரிய வேலை செய்கிறது. அதற்காக அதை  தங்கத்தால் செய்து போட முடியுமா  ?  அது இரும்பில் தான் செய்யப் பட வேண்டும். சாதாரண இரும்புதானே, இது என்ன பெரிய மதிப்பு உள்ளதா என்று  கேலி செய்யக் கூடாது.

ஐந்தாவது, "நான் இந்த வீட்டுக்கு எவ்வளவு செய்து இருக்கிறேன். ஒரு நன்றி இல்லை. அவனுக்கு எவ்வளவு உதவி செய்து இருக்கிறேன், கடைசியில் இப்படி செய்து விட்டானே..." என்றெல்லாம் பேசக் கேட்டு இருக்கிறோம். ஒரு அச்சாணி  தேய்து போய் விட்டால் என்ன செய்வார்கள். ? அடடா , எவ்வளவு உதவி செய்தது இத்தனை நாள் என்று அதை யாரும் தூக்கி தேரில் வைப்பது இல்லை. தேய்ந்து போய் விட்டால் , வேறு அச்சாணி போடுவார்கள். பழையதை தூக்கி போட்டு விடுவார்கள்.  அதற்காக அந்த அச்சாணி நொந்து பயனில்லை. அது போல, நாம் நமது வீட்டுக்கோ, நாட்டுக்கோ, நிறுவனத்துக்கோ எவ்வளவு செய்து இருப்போம். நமது தேவை தீர்ந்து போனால், அடுத்தவரை நாடுவார்கள்.  நாம் அதை நினைத்து நொந்து கொள்வதில் அர்த்தம் இல்லை. உலகம் அப்படித்தான் இருக்கும்.

ஆறாவது, "அன்னார் உடைத்து" : இந்த நன்றி கெட்ட உலகில், நான் எதுக்கு அச்சாணி போல கிடந்து  உழல வேண்டும் ? ஒரு மதிப்பும் இல்லை, காரியம் முடிந்தவுடன் தூக்கி எறிந்து விடுகிறார்கள். எனக்கு அச்சாணியாக இருக்க விருப்பமில்லை என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள். அப்படி சொல்கிறவர் மத்தியில் , அச்சாணியாக  இருந்து, சுயநலம் இன்றி நாட்டையும், வீட்டையும், நிறுவனத்தையும் கொண்டு செல்லும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை உடையது உலகம் என்கிறார்.  சில பேர் அப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். அவரக்ளை இந்த உலகம்  "பிழைக்கத் தெரியாதவன்", "அப்பாவி", " பாவம் " என்றெல்லலாம் கேலி பேசும். கேலி பேசக் கூடாது என்கிறார்.  அவர்களால் தான் இந்த உலகம் என்ற தேர் உருண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

ஏழாவது, "எள்ளாமை வேண்டும் "  தேரின் அளவைப் பார்த்தால் , அச்சாணியின் அளவு மிக மிக சிறியதுதான். தேரின் மதிப்பைப் பார்த்தால், அச்சாணியின் மதிப்பு ஒன்றும் இல்லைதான்.  அதற்காக அதை கேலி பேசக் கூடாது.


எட்டாவது, நாம் வாழ்க்கையில் எவ்வளவோ பெரிய சாதனைகளை புரிந்து இருப்போம்.  பெரிய பதவி, அதிகாரம், செல்வம், செல்வாக்கு என்று எல்லாம் வந்திருக்கும். நாம் இந்த இடத்தை அடைய நமக்கு பலர் உதவி செய்து இருப்பார்கள். குறிப்பாக நமது ஆசிரியர்கள், நண்பர்கள், உடன் பிறப்புகள் என்று பலர் பலவித சோதனைகளை தாங்கிக்  கொண்டு நம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்து  சேர்த்திருப்பார்கள். இப்போது திரும்பிப் பார்த்தால், அவர்கள் அற்பமாக தெரியலாம்.  "ஹா, அவர் இல்லாவிட்டால் நான் உயர்ந்திருக்க மாட்டேனா " என்று எள்ளாமை வேண்டும்.

சிந்தித்துப் பாருங்கள்.

எவ்வளவு அர்த்தம் விரியும் என்று.

புதையல். தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/09/blog-post_23.html