Friday, April 16, 2021

திருக்குறள் - தாளை வணங்காத் தலை

திருக்குறள் -  தாளை வணங்காத் தலை


நம் வீட்டில் grinder, mixie என்று பல பொருள்கள் இருக்கும். அவை நன்றாக வேலை செய்தால் சுகம்தான். வேலை செய்யாவிட்டால்? முடிந்த வரை பழுது பார்ப்போம். இல்லை என்றால் அதை கழித்துக்கட்ட வேண்டியது தான். இல்லையா? வேலை செய்யாத ஒன்றை வைத்துக் கொண்டு என்ன செய்வது?  அதனால் ஒரு பலனும் இல்லை.


அது போல, நம் உடலிலும் சில கருவிகள் இருக்கின்றன. அவை வேலை செய்யாவிட்டால், அவற்றால் ஒரு பலனும் இல்லை அல்லவா? முடிந்தவரை மருத்துவரிடம் காட்டி சரி செய்ய முயற்சி செய்வோம். இல்லை என்றால் அது பாட்டுக்கு ஒரு மூலையில் இருக்கும். அவற்றால் ஒரு பயனும் இல்லை.


நம் கண், காது, மூக்கு போன்றவற்றின் பலன் இறைவனை வணங்குவதே. அது செய்ய முடியாவிட்டால், அந்த பொறிகளால் ஒரு பயனும் இல்லை என்கிறார். 

கேட்காத காது, பார்க்காத கண் போல இறைவனை வணங்காத தலையால் ஒரு பயனும் இல்லை என்கிறார். 


பாடல் 


கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_16.html


(click the above link to continue reading)


கோளில் = கோள் + இலாத = குறிக்கோள் இல்லாத 

பொறியிற் = பொறிகளால் (கண், காது மூக்கு போன்றவை) 

குணமிலவே  = பயன் இல்லாததைப் போல 

எண்குணத்தான் = எட்டு வகையான குணங்களை கொண்டவனின் 

தாளை = திருவடிகளை 

வணங்காத் தலை = வணங்காத தலை 

இறைவனை வணங்காத தலையால் ஒரு பலனும் இல்லை. 


 இனி பரிமேலழகர் உரையைப் பார்ப்போம். 



எண் குணங்கள், அதாவது எட்டு குணங்கள் இறைவனுக்கு என்று கூறுகிறார்கள். அவை என்ன ?

1.     தன்வயத்தன் ஆதல், 

2.    தூய உடம்பினன் ஆதல், 

3.    இயற்கை உணர்வினன் ஆதல், 

4.    முற்றும் உணர்தல், 

5.    இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், 

6.    பேரருள் உடைமை, 

7.    முடிவு இல் ஆற்றல் உடைமை, 

8.    வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.


அப்படி என்றால் இறைவனுக்கு எட்டு குணங்கள் மட்டும் தான் உண்டா என்றால் இல்லை. இந்த எட்டு குணங்களை கூர்ந்து நோக்கினால் தெரியும் அதன் அடிப்படை. 


தன்வயத்தன் ஆதல் என்றால் என்ன? தன் வசம் தானே எப்படி ஆக முடியும்? ஒருவன் தன் வசத்தில் இல்லை என்றால் பின் யாருடைய வசத்தில் இருக்கிறான்? தெரியாது.

தூய உடம்பினன் ஆதல். அப்படி என்றால் என்ன? எப்ப பார்த்தாலும் குளித்துக் கொண்டே இருப்பதா? உடம்பில் இருந்து வியர்வை போன்ற கழிப்பு பொருள்கள் வெளியேறாதா? உடம்பினுள் மலம், சலம் இருக்காதா? தெரியாது. 


இப்படி எல்லா குணத்துக்கும் ஒரே அடிப்படை - தெரியாது என்பது தான். இறையவனின் குணங்கள் நமக்குத் தெரியாது என்று சொல்லவே "எண் குணத்தான்" என்றார். 


எண்ணிலாத குணங்களை உடையவன்.


இப்படி சைவ ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது என்கிறார். மேலும் விவரம் வேண்டுபவர்கள் சைவ ஆகமங்களை படித்து தெளிந்து கொள்க. 



காணாத கண்ணும், பேசாத நாவும் போல இறைவனின் தாளை வணங்காத தலையும்.


தலை என்று சொன்னது ஒரு உதாரணத்துக்கு அதில் உள்ள கண், காது, மூக்கு, செவி, மூளை என்று எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் தலையில் தானே இருக்கிறது. ஒவ்வொன்றாக சொல்ல முடியாது என்பதால் தலை என்றார். 


வீட்டோடு வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டது என்றால், கதவு, ஜன்னல், அதில் இருந்த கட்டில், மெத்தை, சாமான்கள், துணிமணிகள் என்று எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போய் விட்டது என்று அர்த்தம். ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. 


தலை இருப்பதின் நோக்கமே வணங்கத்தான். 


நாக்கு இருப்பதின் நோக்கமே அவன் புகழ் பாடத்தான். 


கண் இருப்பதின் நோக்கமே அவனை காணத்தான்..


இப்படி விரித்து பொருள் கொள்க. 


ஒன்பது குறள் படித்து விட்டோம். இன்னும் ஒரு குறள் இருக்கிறது இந்த அதிகாரத்தில். அதை வரும் நாட்களில் சிந்திப்போம். 



3 comments: