Friday, February 10, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - தூற்றும் மரபினார்

       

 திருக்குறள் - புறங்கூறாமை -  தூற்றும் மரபினார்


(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


நமது சுற்றத்திலோ, உறவிலோ சிலர் புறம் சொல்லுவதையே ஒரு பொழுது போக்காக கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு யாரையாவது பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. 


அப்படிப் பட்டவர்களிடம் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். 


"உறவுகளுக்குள் புறம் சொல்லுபவன் மற்றவர்களிடம் வேறு என்ன செய்ய மாட்டான் " என்கிறார். 


பாடல் 



துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

என்னைகொல் ஏதிலார் மாட்டு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_10.html


(pl click the above link to continue reading)


துன்னியார் = நெருங்கிய சுற்றத்தார் 


குற்றமும் = செய்த குற்றங்களை 


 தூற்றும்  = அவர் இல்லாதபோது அதை மற்றவர்களிடம் சொல்லும் 


மரபினார் = பழக்கம் உள்ளவர்கள் 


என்னைகொல் = வேறு என்ன செய்ய மாட்டார்கள் 


ஏதிலார்  மாட்டு = மற்றவர்களிடம் 


மிக எளிமையான குறள். 


இதில் நாம் ஆழ்ந்து சிந்திக்க சில கருத்துக்கள் இருக்கின்றன. 


முதலாவது, சொந்ததுக்குள் புறம் சொல்லுபவன், நம்மைப் பற்றியும் பிறரிடம் இப்படித்தான் கூறுவான். அவனுக்கு அதுதான் பழக்கம் . அவன் மற்றவர்களைப் பற்றி சொல்லும் போது நாம் அதை கேட்க்கக் கூடாது. காரணம், அவன் நம்மைப் பற்றி பிறரிடம புறம் சொல்லுவான் என்பது மட்டும் அல்ல, நாம் சொல்லாததையும் சொன்னதாக பிறரிடம் சொல்லி விடுவான். ஏதோ அவன் சொல்வது எல்லாம் நமக்கு உடன்பாடு போலச் சொல்லி விடுவான். அனாவசியமாக நம் பேர் கெடும். 


இரண்டாவது, உடன் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பற்றி இப்படி இல்லாததையும் பொல்லாததையும் சொல்பவன், பெரிய கல் நெஞ்சக் காரனாக இருப்பான். இரக்கம் இல்லாத அவன், உறவு இல்லாத மற்றவர்களிடம் என்னென்ன செய்ய மாட்டான்.  செய்வான். பெரிய குற்றங்களைச் செய்பவன் தொடர்பு நமக்கு இருந்தால் அது ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் நம்மை ஏதாவது ஒற்று சிக்கலில் கொண்டு சேர்த்து விடும். எனவே, அவனை விட்டு விலகி நிற்பது நல்லது. 


மூன்றாவது,  புறம் சொல்லுவது என்பது பெரிய தீய செயல் என்று அறியாமலேயே சிலர் ஏதோ அது ஒரு பொழுது போக்கு என்று நினைத்துச் செய்வார்கள். அது தவறு என்றே அவர்களுக்குத் தெரியாது .அப்படி தவறு செய்வதே இயல்பாகப் போய்விடுகிறது. அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். 


நான்காவது,  இதை ஏன் அவன் செய்வான் என்று சொல்ல வேண்டும்? நாமே கூட செய்து கொண்டிருக்கலாம். நம்மையும் அறியாமால் நாமே கூட புறம் சொல்லித் திரியலாம். அது மிகப் பெரிய தவறு. அந்தத் தவறு நம்மை பிற பெரிய தவறுகளுக்கு இட்டுச் செல்லும். எனவே, இந்தத் தவறு நம்மிடம் இருந்தால், அதை விட்டு விட வேண்டும். 




(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


முன்இன்று பின்நோக்காச் சொல்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html


புன்மையால் காணப் படும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_21.html


பிறன்பழி கூறுவான் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_25.html


பகச் சொல்லி 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_31.html




1 comment:

  1. மிக விளக்கமான உரை

    ReplyDelete