Sunday, February 19, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - மன்னும் உயிர்க்கு

         

 திருக்குறள் - புறங்கூறாமை -  மன்னும் உயிர்க்கு



(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


இந்த அத்யாயத்தின் இறுதிக் குறள். 


புறம் கூறுவது தவறு, பெரிய பாவம், அதை தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் கூறினார். 


சரி, அதை எப்படி விடுவது என்ற கேள்விக்கு இறுதியில் பதில் தருகிறார். 


ஒருவன் புறம் கூறுகிறான் என்றால், எதைப் பற்றி புறம் கூறுவான்?  மற்றவர்கள் செய்யும் தவறுகளை, குற்றங்களைத்தானே புறம் சொல்லுவான். மற்றவர்கள் செய்யும் நல்லவற்றை புறம் கூற மாட்டான் அல்லவா?


அப்படி புறம் கூறுபவன், தான் செய்யும் குற்றத்தை நினைத்தால் புறம் கூறுவானா?


தான் புறம் கூறுதலாகிய குற்றத்தை செய்கிறோம், மற்றவர்கள் நம்மைப் பற்றி இழிவாகப் பேசுவார்கள் என்ற எண்ணம் வந்தால், புறம் கூறுதலாகிய தவற்றினைச் செய்ய மாட்டான் என்கிறார். 



"அய்யோ..அவனா..வாய் தொறந்தா யாரையாவது பத்தி எதாவது இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவான் ..."  என்று தன்னைப் பற்றி மற்றவர்கள் பேசுவார்கள் என்ற அறிவு இருந்தால் அவன் புறம் பேச மாட்டான் என்கிறார். 


பாடல் 



ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_19.html


(pl click the above link to continue reading)


ஏதிலார் = மற்றவர்கள் 


குற்றம்போல் = (செய்யும்) குற்றங்களைப் போல 


தம்குற்றம் = தான் செய்யும் குற்றதையும் 


காண்கிற்பின் = கண்ட பின்னால் 


தீதுண்டோ = தீமை உண்டா ?


மன்னும் உயிர்க்கு = நிலை பெற்ற உயிர்க்கு 



இந்தக் குறள் நமக்குத் தெரிந்த குறள்தான். அர்த்தமும் தெரியும். 


இருந்தும், பரிமேலழகர் கூறும் நுண்ணிய உரையை காண்போம். 


"காண்கிற்பின்" - கண்டால். மற்றவர்கள் குற்றத்தைக் காண்பது எளிது. நம் குற்றத்தை நாமே காண்பது மிகக் கடினம். எனவே "கண்டால்' என்று கூறினார். அதாவது, காண முடிந்தால் என்ற பொருளில். 


வாரத்துக்கு நூறு மணி நேரம் உழைத்தால் வெற்றி காணலாம் என்றால் என்ன அர்த்தம்? அப்படி உழைப்பது மிகக் கடினம் என்று அர்த்தம். 


"மன்னும் உயிர்க்கு". மன்னுதல் என்றால் நிலைத்து நிற்றல். மன்னும் உடலுக்கு என்று சொல்லி இருக்கலாம். உயிர்க்கு என்று ஏன் கூறினார்?  புறம் கூறுதல் என்ற பாவம் பின் வரும் பிறவிகளிலும் தொடரும். அங்கே தொடர்வது உயிர்தானே அன்றி உடல் அல்ல. எனவே, புறம் கூறுதலை விட்டால் இனி வரும் பிறவிகளில் ஒரு துன்பமும் வராது என்ற பொருள் பட "மன்னும் உயிர்க்கு" என்றார். 


புறம் கூறுபவன், சொல்லும் போது இன்பமாக இருக்கும். ஆனால், அந்தக் தீய செயல், பாவமாக மாறி, பின் வரும் பிறவிகளில் துன்பத்தைத் தரும் என்கிறார். 


இந்தப் பிறவியில் மட்டும் அல்ல. இனி வரும் பிறவிகளிலும் நாம் துன்பப்படாமல் இருக்க வழி சொல்லித் தருகிறார். 


துன்பப்படும் யாரையாவது பார்த்தால்,  முற்பிறவிகளில் என்னென்ன புறம் சொன்னானோ, இந்தப் பிறவியில் இப்படி துன்பப்படுகிறான் என்ற எண்ணம் வர வேண்டும். 


நாமும் புறம் சொன்னால், இப்படித்தான் வரும் பிறவிகளில் துன்பப்படுவோம் என்ற பயம் வர வேண்டும். 



அந்தப் பயம், புறம் செய்யும் குற்றத்தில் இருந்து நம்மைக் காக்கும். 


அரசாங்கம் போடும் சட்டங்களில் இருந்து நாம் தப்பிவிடலாம். இது அறம் போட்ட சட்டம். தப்பவே முடியாது. யாரும் விதிவிலக்கல்ல. 


போகிற போக்கில் ஒரு மிரட்டு மிரட்டி விட்டுப் போகிறார்.  


இனி புறம் சொல்லத் தோன்றுமா?





(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


முன்இன்று பின்நோக்காச் சொல்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html


புன்மையால் காணப் படும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_21.html


பிறன்பழி கூறுவான் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_25.html


பகச் சொல்லி 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_31.html


தூற்றும் மரபினார்



No comments:

Post a Comment