Monday, April 29, 2013

இராமாயணம் - அந்தரங்கத்தை வெளியே சொல்லக் கூடாது


இராமாயணம் - அந்தரங்கத்தை வெளியே சொல்லக் கூடாது 


மந்தரை கொஞ்சம் கொஞ்சமாக கைகேயின் மனத்தை மாற்றி விட்டாள் . 

"சரி, நான் என்ன செய்ய வேண்டும் " என்று கேட்கிறாள் கைகேயி. 

"அப்படி கேள் சொல்கிறேன்...சம்பாசுர யுத்தத்தில் வென்ற போது உனக்கு இரண்டு வரம் தருகிறேன் என்று தசரதன் சொன்னான் அல்லவா...அவற்றை இப்போது கேள்" என்றாள் உள்ளமும் வளைந்த கூனி 

பாடல் 


நாடி ஒன்று உனக்கு உரைசெய்வென்;
     நளிர் மணி நகையாய்!
தோடு இவர்ந்த தார்ச் சம்பரன்
     தொலைவுற்ற வேலை
ஆடல் வென்றியான் அருளிய வரம்
     அவை இரண்டும்
கோடி’ என்றனள், உள்ளமும்
     கோடிய கொடியாள்.


பொருள் 



நாடி = உனக்கு நல்லதை நாடி, விரும்பி 

ஒன்று உனக்கு உரைசெய்வென் = உனக்கு ஒன்று சொல்வேன் 

நளிர் மணி நகையாய் = குளிர்ந்த மணிகளை போன்ற புன்னகை கொண்டவளே 

தோடு = மொட்டு 

இவர்ந்த = மலர்ந்த 

தார்ச் = மாலை அணிந்த 

சம்பரன் = சம்பரன் 

தொலைவுற்ற வேலை = தோற்ற வேளை 

ஆடல் வென்றியான் = விளையாட்டாக வெற்றி பெற்ற தசரதன் 

அருளிய வரம் = அருளிய வரம். ஏதோ வேண்டா வெறுப்பாக கொடுத்த வரம் அல்ல....அன்போடு, கருணையோடு அருளிய வரம் 

அவை இரண்டும் = அவை இரண்டும் 

கோடி’ என்றனள் = கேள் என்றனள் 

உள்ளமும் கோடிய கொடியாள் = உள்ளமும் வளைந்த கொடியவளான கூனி 

சரி. இதில் அந்தரங்கம் எங்கிருந்து வந்தது ?

தசரதன் கைகேயிக்கு வரம் தந்தது போர் முனையில். கூனி அங்கு இருக்கவில்லை.
அதை கூனியிடம் யார் சொல்லி இருப்பார்கள் ?

தசரதன் சொல்லி இருக்க மாட்டான்.

கைகேயி தான் சொல்லி இருக்க வேண்டும்.

ஒரு உணர்ச்சி மயமான நேரத்தில் கணவன், அவன் மனைவியிடம் சொன்னதை, அந்த அந்தரங்கமான விஷயத்தை வெளியே சொல்லலாமா ? 

கணவன் மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்கத்தை வெளியே சொன்னதால் வந்த வினை.

என்னவெல்லாம் நிகழ்ந்தது ?

கணவன் உயிர் இழந்தான்.

கைகேயி அவன் மனைவி என்ற தகுதியை இழந்தான். 

யாருக்காக அந்த வரங்களை பெற்றாளோ, அந்த பரதன், தசரதனின் மகன் என்ற தகுதியை இழந்தான். 

தசரதன் முறை தப்பினான். 

இராமன் கானகம் போனான்.

சீதை கானகம் போனாள்.

இலக்குவன் கானகம் போனான். 

பரதன் பாதுகையை வைத்து நாடாண்டான்...

பதினாலு வருடம் ஒரு குடும்பம் சின்னா பின்னாவானது....

இத்தனையும் காக்க வேண்டிய இரகசியத்தை காக்காததால் வந்த வினை.

வீட்டில் நடக்கும் விஷயங்களை, குறிப்பாக குடும்ப இரகசியங்களை வேலைக்காரியிடம், அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் சொல்லித் திரியக்  கூடாது. 

என்ன, நான் சொல்லுவது சரிதானே ?

 

1 comment:

  1. போர்க்களத்தில் நடப்பது, பல்லாயிரம் பேர் கொண்ட சேனை முன்னால் நடந்து இருக்க வேண்டும், அல்லவா?

    ஒருவேளை தசரதன் வீடு திரும்பியபின், ஒரு நன்றி உணர்வில், இருவரும் தனித்து இருக்கும்போது வரம் தந்திருப்பானோ?!

    ReplyDelete